நெஞ்சம் 20:
“யாரு தென்றல் அது… இன்னைக்கு பாத்து பேச போறேனு சொன்னீயே அந்த தம்பியா..? இவ்வளவு தூரம் வீடு வரைக்கும் கொண்டு வந்து விட்ட பிள்ளைய வாசலோட அனுப்பிட்டீயே… உள்ள கூப்பிட்டு இருக்கலாம் இல்ல…” என்றபடியே மகளின் அருகில் வந்து நின்றவரின் குரலில் அத்தனை ஆதங்கம்.
திருமணம் செய்துக் கொள்ள போகிறேன் என்பதையே அவருக்கு அவள் தகவலாக தானே சொல்லி இருந்தாள். மற்ற விசயங்களையும் பெற்றவருக்கு தகவலாக மட்டுமே கடத்தி இருந்தாள் தென்றல். இப்படி சந்தித்து பேசப் போகிறேன் என்ற போதுக் கூட, ‘முறைப்படி வீட்டிற்கு பெரியவர்களோடு வர சொல்’ என்று தான் சொன்னார் குணவதி. அதை அவள் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. என்னவோ மகள் தன்னை பொருட்டாக கூட மதிக்கவில்லை என்ற எண்ணம் அவரின் மனதில் ஆழமாய் வேரூன்றிப் போனது. மூன்றாம் மனுஷியைப் போல் தள்ளி நிறுத்துவதாய் ஒரு எண்ணம். அதுதான் உண்மையும் கூட!
நேசனின் உருவம் கண்ணைவிட்டு மறையும் வரை தென்றலோடு வாசலிலேயே தான் நின்றிருந்தார் அவர். கண்களில் தவிப்பும் ஆர்வமும் சென்றவனின் முகம் பார்க்க முயல, அந்த அரை இருளில் கோட்டோவியமாய் அவனின் பின்பிற தோற்றம் தான் காண கிடைத்தது. அவசரமாய் அதோடு தன் மகளின் தோற்றத்தையும் ஒப்பிட்டு பார்த்தவருக்கு ஓரளவிற்கு திருப்திதான்.
“தூரமா பாக்கும் போது உனக்கு பொறுத்தமா இருக்க மாதிரி தான் தெரியுது… ஆனாலும் அந்த தம்பி முகத்த கூட சரியா பாக்க முடியல… பெத்தவனு மதிச்சு எதையாவது என்கிட்ட சொல்லறீயாடி நீ… ஒரு போட்டோ கூட என்கிட்ட காட்டல… ஏதோ மூணாவது மனுஷிய நடத்தற மாதிரி என்ன நடத்தற நீ…” என்றவரின் குரலில் ஆதங்கமும் துளி ஆவேசமும் அவளை குற்றம் சாற்றும் விதமாய்.
அதற்குள் உள்ளே நுழைந்து தொலைக்காட்சியில் முழ்கிவிட்ட மகனில் பார்வையை பதித்தபடியே, “பொருத்தம் இரண்டு பேரோட மனசுக்கும் தான் இருக்கணுமே தவிர… தோற்றத்துக்கு இல்ல… பொருந்தாத மனசோட இரண்டு பேர் பொருந்தி வாழ போராடுனா அவங்க வாழ்க்கையே நரகம் ஆகிடும்…” என்றவளின் பார்வை ஆழமாய் அவர் மீது படிந்து குற்றம் சுமத்தியது. அங்கேயே நின்று அவரோடு வார்த்தையாடிக் கொண்டிருக்க பிடிக்காது உள்ளே சென்று விட்டாள் தென்றல்.
சமையலறைக்குள் சென்று பார்க்க, இரவு உணவிற்கு தயாராய் சட்னி மட்டும் அரைத்து வைத்திருந்தார் குணவதி. வேந்தனுக்கு காரமே இல்லாமலும், இவர்கள் இருவருக்கு மட்டும் காரம் சேர்த்தும் ஒரே தக்காளி சட்னியை இரு விதமாய் செய்திருந்தார் அவர்.
இன்னும் பிள்ளைக்கு காரம் கொடுத்துப் பழக்கவில்லை அவள். அதே நேரம் காரம் கொஞ்சம் குறைந்தாலும் அவளுக்கு சாப்பாடு இறங்காது. மகளுக்கென்றே இப்படி இரண்டாய் சமைப்பதை வழக்கப் படுத்திக் கொண்டிருந்தார் குணவதி. அதைக் கண்டவள் இதழ்களில் விரக்தியாய் ஒரு புன்னகை. இதே பரிவை, அன்பை, வாஞ்சையை தந்தை உயிரோடு இருந்த காலங்களிலும் அவர் காட்டி இருக்கலாம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.
தோசைக் கல்லை அடுப்பில் ஏற்றியவள், மகனுக்கு குட்டி குட்டியாய் தோசை வார்க்க தொடங்கி இருந்தாள். மற்ற எண்ணங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி அவளின் சிந்தனையை மொத்தமாய் ஆக்கிரமித்திருந்தான் நேசன்.
நேசனை மறுப்பதற்கென்று அவளுக்கு பெரிதாய் காரணங்கள் ஒன்றும் இல்லை, அவனின் கடந்த காலத்தை தவிர. இன்னுமே நெருஞ்சி முள்ளாய் மனதின் ஓரத்தில் அது அவளை உறுத்த தான் செய்கிறது.
அரசி அவளுக்கு தெரிந்த வரை, மாதவன் அவளிடம் பகிர்ந்ததை மொத்தமாய் ஒப்பித்து இருந்தாள் தான். அதையும் தாண்டி இவளுமே துப்பறியும் நிறுவனத்திடம் அவனைப் பற்றிய தகவல்களை சேகரிக்க சொல்லி கேட்டிருந்தாள். விசாரித்த வரை நல்ல விதமாக தான் சொல்லி இருந்தார்கள். ஆனால், முழுமையாக அவனின் கடந்த காலத்தை அவர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அதற்கு கூடுதல் கால அவகாசமும் கேட்டிருந்தார்கள். விடுபட்ட தகவல்கள் அவளுள் பெரும் நெருடலை உண்டாக்கி இருந்தது. அவனே வேண்டாமென்று முடிவெடுத்து அதை அப்படியே விட்டுவிடவும் சொல்லி இருந்தாள் அவள். ஆனால், இப்பொழுது அப்படி விட முடியாது என்று தோன்றியது.
நினைவுகள் எங்கெங்கோ அலைந்தாலும் கரங்கள் இயல்பு போல் அதன் வேலையை செய்து முடிந்திருந்தது. தட்டில் மகனுக்கான சாப்பாடை இட்டு எடுத்துக் கொண்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தாள் தென்றல்.
“கல்யாணத்தையாவது எனக்கு முன்னாடியே சொல்லுவீயா..? இல்ல சொல்லாம கொள்ளாம கல்யாணத்த பண்ணிக்கிட்டு புள்ளையும் கூட்டிட்டு கிளம்பிடுவீயா..?” என்றார் அவள் தலையை வெளியே கண்ட மாத்திரத்தில் ஆதங்கமாய் குணவதி.
அவளின் பார்வை ஒரு நொடி பிள்ளையின் மீது படிந்து மீண்டது. “சொல்லணுங்கற அவசியம் வந்தா கண்டிப்பா சொல்லுவேன்…” என்றவள், தட்டோடு பிள்ளையின் பக்கம் நகர்ந்து விட்டாள்.
தானாகவே உண்பதற்கு வேந்தன் பழகி இருந்தாலும் கூட, அன்னை உடனிருக்கும் நேரங்களில் எல்லாம் அவள் தான் ஊட்ட வேண்டும் அவனிக்கு. இனி அது தாயுக்கும் மகனுக்குமான நேரம். பேசி சிரித்து விளையாடிய படியே மகன் உண்டு முடிக்கும் வரை குணவதி என்ற ஒருவர் அங்கிருப்பதையே கண்டுக் கொள்ள மாட்டாள் தென்றல்.
பிள்ளை உண்டு முடிப்பதற்குள் மகளுக்கும் தனக்குமாய் சேர்த்து தோசை வார்த்தவர், உணவை எடுத்து வந்து கூடத்தில் வைத்தார். ‘இன்னும் எத்தனை நாட்கள் இப்படி மகளோடு ஒன்றாய் அமர்ந்து சாப்பிட முடியுமோ..?’ என்ற எண்ணம் தோன்ற, மனதில் பாரமேறிக் கொண்டது. உண்டு முடிக்கும் வரை இருவருக்கும் இடையே விருப்பமின்றி ஆக்கிரமித்த மௌனத்தை குணவதி கூட களைக்க முனையவில்லை. என்ன பேசினாலும் மகள் வலிக்க வலிக்க திருப்பிக் கொடுப்பாள் என்பது அவருக்கும் தெரிந்திருந்தது. அப்படி இருந்தும் இப்படியான சில சயங்களில் அவரையும் மீறி ஆதங்கமாய் வார்த்தைகள் வெளிப்பட்டு விடுகிறது.
அனைவரும் உண்டு, வீட்டை ஒதுக்கி என அவளின் கரங்கள் வழமைப் போல தன் பணிகளை செய்தாலும் எண்ணங்கள் என்னவோ நேசனையே தொடர்ந்தது. படுக்கையில் விழுந்த பின்னும் கூட அந்த சிந்தனை அறுபடவில்லை.
“ம்மா… ம்மா… என்ன பாரும்மா...” தன் பிஞ்சு விரல்களால் ஏதோ தீவிர சிந்தனையில் இருந்த தாயின் தாடைப் பற்றி தன் பக்கம் திருப்ப முயன்றான் வேந்தன்.
“என்ன வேந்தா… பேசாம தூங்குடா…” மகனின் முதுகில் தட்டி உறங்க வைக்க முயன்றபடியே சொன்னாள் தென்றல்.
“நீ என் கூட டூ வாம்மா… அதான் என்ன பாக்க மாட்டற… பேச மாட்டற…” என்றான் கண்ணீர் முட்டிக் கொண்ட குரலில் தொண்டை அடைக்க பிள்ளை. அவளின் எண்ணங்களை நேசன் ஆக்கிரமித்திருக்க, பெரிதாய் பிள்ளையோடு அவள் பேசவோ, விளையாடவோ இல்லை தானே!
“அப்படினு என் தங்கத்துக்கு யாரு சொன்னா..? அம்மா போய் உன் கூட டூ விடுவேனா..?” பிள்ளையின் பக்கம் திரும்பி படுத்து, தலைமுடி கோதி நெற்றியில் அழுத்தமாய் முத்தம் பதித்து கொஞ்சலாய் கேட்டாள் தென்றல்.
“அப்பா சொன்னாரே… உனக்கும் அப்பாவுக்கும் பெரிய சண்டை… நீ அப்பா கூட டூ விட்டிருக்க… நான் அப்பா கூட பேசறது தெரிஞ்சா என்கூடவும் டூ விட்டுடுவனு அப்பா தான் ம்மா சொன்னாரு…” என்றான் கண்களை விரித்து கதை சொல்லும் பாவனையில் பிள்ளை.
“அதெல்லாம் சும்மா… அம்மா உன்கூட எப்பவுமே டூ விட மாட்டேன்…”
“அப்போ அப்பா மேல உனக்கு கோபமில்லையா..? அப்பா கூட பழம் விட்டுட்டீயா…” என்றான் கண்களில் ஆர்வம் மின்ன பிள்ளை.
ஏனோ அவனின் ‘அப்பா…’ என்ற அழைப்பை திருத்தும் எண்ணம் அவளுக்கு துளியும் இல்லை. அவளே நினைத்தாலும் பிள்ளையின் மனதில் நேசன் தான் தந்தையென ஆழ வேரூன்றி விட்ட எண்ணத்தை இனி மாற்றவும் முடியாது.
“அப்படியும் இல்ல…” என்றாள் இழுவையாய் தென்றல்.
“அப்போ அப்பா கூட பார்க்ல பேசிட்டு இருந்த… பேசிட்டா பழம் தானே…” என்றான் சந்தேகமாய் பிள்ளை.
“அது இனிமே உன்கூட பேசக் கூடாதுனு உங்க அப்பாக்கு வார்ன் பண்ணிட்டு இருந்தேன்…” என்றாள் இதழ்களில் நெளிந்த புன்னகையை மறைத்து கோபம் போல் அன்னை.
“அப்போ இனிமே அப்பா என்ன பாக்க வர மாட்டாரா… என்கூட பேச மாட்டாரா…” என்றவனிடம் அத்தனை தவிப்பும் ஏக்கமும். பதில் சொல்லவில்லை அவள்.
“ம்மா… அப்பா நிஜமாவே ரொம்ப நல்லப்பா ம்மா… ப்ளீஸ் ம்மா… அப்பாவோட பழம் விடேன்… நீ பழம் விட்டா அப்பாவோட நாம முருகர் சாமி பாக்க போகலாம்… பீச்சுக்கு போகலாம்… ஐஸ்க்ரீம் சாப்பிடலாம்… டெய்லி பார்க் போகலாம்… இன்னைக்கு மாதிரியே நீ நான் அப்பா மூணு பேரும் சேந்து விளையாடலாம்…” வரிசையாய் அடுக்கி தாய்க்கு ஆசைக் காட்ட முயன்றான் சின்னவன். அவனின் கொஞ்சலும் கெஞ்சலுமான பாவனையில் அவளின் புன்னகை இன்னுமே பெரிதாய் விரிந்தது.
அவன் சொன்ன மற்ற எல்லாவற்றையும் கிடப்பில் போட்டவள், “அப்போ நீயும் உங்க அப்பாவும் திருட்டு தனமா பீச்சுக்கு போய் ஐஸ்கீரிம் சாப்பிட்டு இருக்கீங்க..?” என்றாள் அத்தட்டலாய் கண்களை விரித்து.
“அப்பா ரொம்ப பாவம் ம்மா…” என்றான் பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு பிள்ளை.
“உங்கப்பா உன்ன பாவமாம் இப்போ…”
“அப்பா கூட விளையாட பாப்பாவே இல்லையாம்… ரொம்ப போரீங்காம்… நைட் கூட தனியா தான் தூங்கணுமான்… ரொம்ப பயமா இருக்கும் இல்ல… அதான் அப்பா பாவம்…”
“உங்கப்பா பிக் பாய் தானே… தனியா தூங்க எல்லாம் பயமா இருக்காது… நம்ம பாட்டியும் தனியா தானே தூங்கறாங்க…” என்றாள் தென்றல்.
“நிஜமாவா… ஆனா அப்பா பயமா இருக்குனு தானே சொன்னாரு… ஒரு நாள் நைட்டு பூச்சாண்டி புடிச்சுட்டு போக பாத்துச்சாம்…” என்றான் பயந்த குரலில் குழந்தை.
“உங்கப்பாவ… பூச்சாண்டி… சரிதான்… உங்கப்பா எந்த பூச்சாண்டியையும் புடிச்சுட்டு வராம இருந்தா சரிதான்…” என்றாள் இதழ் சுழித்து கேலியாய் அவள்.
இன்னும் எத்தனையோ சொன்னான் அவன். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக, உறக்கம் சொக்கிய விழிகளை சுழற்றி சுழற்றி அப்பாவின் புராணம் சொன்னான். “பேசாம தூங்கு வேந்தா…” என அவள் எத்தனை விதமாய் சொல்லியும் அது அவனிடம் எடுபடவே இல்லை.
“நிஜமாவே அப்பா நல்ல அப்பா தான்… நம்பும்மா… ப்ளீஸ் ம்மா… அப்பா பாவம் ம்மா…” என்றதையே அன்றைய இரவில் ஒரு நூறு முறைக்கு மேல் சொல்லி இருந்தான் வேந்தன்.
“சரிடா… நாளைக்கு நான் அப்பாகூட பழம் விடறேன்.. இப்ப நீ தூங்கு…” என்ற பிறகும் கூட, “நிஜமா… ப்ராமிஸா…” என ஆயிரம் உறுதி மொழிகளை வாங்கிக் கொண்டே, உறங்கினான் பிள்ளை.
‘மச்… கொஞ்ச நாள்லையே புள்ளைய எப்படி மயக்கி வச்சுருக்கான் பாரு… சரியான ஆள் மயக்கி…’ தனக்குள் முணுமுணுத்துக் கொண்டவளிடம், கீற்றாய் ஒரு புன்னகை.
முழுதாய் இல்லையென்றாலும் கிட்டதட்ட அவளின் மனம் அவன்பால் சாய்ந்திருந்தது. அவளின் கணவன் என்ற கோணத்தில் இன்னுமே அவனை நிறுத்திப் பார்க்க முடியவில்லை என்றாலும் வேந்தனின் அப்பாவாய் அவனை ஏற்க முடிந்தது. பிள்ளை வேண்டுமென்று கேட்டவுடன் தகப்பனையே வாங்கிக் கொடுத்துவிட நினைத்தவள், இவன்தான் தந்தையாக வேண்டும் என்று கேட்டால் மட்டும் மறுத்துவிடவா போகிறாள். ஆனாலும், அவளுக்கு அவனிடம் பேசி தெளிவுப் பெற வேண்டிய விசயங்கள் இன்னும் மிச்சமிருந்தது. அதையும் விட தன்னைப் பற்றி முழுமையாக தெளிவுபடுத்திவிட வேண்டிய அவசியமும் இருந்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.