நேசனின் முன்னே ஒரு மேசை தள்ளி அமர்ந்திருந்தது அந்த பெண்களின் கூட்டம். அறுவர் அமரும் மேசையில் கூடுதலாய் இரண்டு நாற்காலிகள் சேர்க்கப்பட்டு எட்டு பேராய் வட்டமாய் அமர்ந்திருந்தனர். கல்லூரி பெண்கள் என்று சொல்லிவிட முடியாதபடி முப்பதுகளின் முன்னும் பின்னும் இருந்தது அவர்களின் தோற்றமும் ஆடை அலங்காரமும். பெரும் ஆரவாரமும் கூச்சலும் இல்லையென்றாலும் சிரிப்புக்கும் கேலிக்கும் கிண்டலுக்கும் அங்கே பஞ்சமில்லை. அந்த இடத்தைக் கடக்கும் எவரும், ஒரு நொடி நின்று ஆசையாய் ஏக்கமாய் வாஞ்சையாய் ஆதுரமாய் என பல வகைப் பார்வையை அவர்களின் மீது வீசியே கடந்து சென்றனர். அது எதுவும் அந்த பெண்களின் கவனத்தில் பதிந்தது போலவும் தெரியவில்லை, அவர்களை பாதித்தது போலவும் தெரியவில்லை.
அங்கிருந்து தான் மெல்லிய சத்ததுடன் ஒலித்தது அந்த பாடல். அவர்களில் யாரோ ஒருவருடைய ரிங்டோனாக தான் அது இருக்க வேண்டும். அந்த பாடலில் நேசனின் மனம் லயித்து கொஞ்சம் கொஞ்சமாய் கரைந்து கொண்டிருந்தது. மாதவன் ஏதோ தீவிர குரலில் சொல்லிக் கொண்டிருந்தது கூட, அவன் சிந்தையை எட்டியதாக தெரியவில்லை.
அரை நிமிடத்தை முழுதாய் விழுங்கிக் கொண்ட பின் இந்தப் பக்கத்தில் அழைப்பு ஏற்கப்பட்டு பாடல் அந்தரத்தில் நின்று போனது. அவனின் மோனநிலையும் சட்டென்று அறுந்து, ஏதோ ஒன்றை இழந்துவிட்ட உணர்வு மனதை கவ்வியது. சில நொடிகள் தான் என்றாலுமே கூட அந்த குரலும் அதன் இனிமையும் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனது நேசனுக்கு. அந்த பாடலை முழுமையாய் கேட்டுவிட வேண்டுமென்று அப்படி ஒரு உந்துதல், ஆர்வம், ஆசை. முருகனின் மீது கொண்ட நேசமா, இல்லை அந்த குரல் அவன் மனதிற்குள் சேர்த்த இதமா, ஏன் அப்படி ஒரு ஆசையென்று அவனுள் துளிர்த்ததென்று அவனுக்கே தெரியவில்லை.
“டேய் சிவா… நான் சொல்லறத கவனிக்கறீயா இல்லையா நீ..?” நண்பனின் தோளில் தட்டி மாதவன் வினவவும், அதைக் அப்படியே கிடப்பில் போட்டுவிட்டு, “அதே பாட்டுடா..!” என கண்களில் ஆர்வம் மின்ன சொல்லி இருந்தான் நேசன்.
எந்தப் பாடல் என புரியாத பாவனையில் குழப்பமாய் அவனைப் பார்த்தான் மாதவன். நேசனின் கவனம் முழுவதும் முன்பக்க மேசையில் அமர்ந்திருந்த பெண்களின் கூட்டத்தில் தான். அதில் முதுகு காட்டி அமர்ந்திருந்த ஒரு பெண்ணின் காதிற்கு கைப்பேசி இடமாறி இருக்க, அந்த ரிங்டோனிற்கு சொந்தக்காரியை கண்டு கொண்டதில் ஒரு நொடி அவன் விழிகள் மின்னல் கீற்றாய் பிரகாசித்தது.
“எந்த பாட்டுடா..?” என்றான் மாதவன் நண்பனின் பார்வை சென்ற திக்கில் தானும் பார்வையை செலுத்தியபடி. உள்ளே நுழையும் போதே அவர்களை கடந்து தான் வந்திருந்தான். மனம் முழுவதும் பேச வேண்டிய விசயத்தின் தீவிரத்திலேயே ஒன்றி இருக்க, கண்ணில் பட்டது, கருத்தை கவரவில்லை.
“அதான்டா கோவில் உள்ள போகும் போது பிரகாரத்துல கேட்டுச்சுல… உள்ளம் உருகுதையா பாட்டு… அதான்…” என்றவன் முகமும் குரலும் குழைந்து கனிவைக் காட்டியது.
“சரிடா… பாட்டு தானே… அதுக்கென்ன இப்ப…” என்றவனுக்கு அதிலென்ன அதிசயம் என இப்பொழுதும் புரியவில்லை தான்.
“தெரியலையாடா உனக்கு…” என சிறு ஆதங்கத்தோடு கேட்ட நேசன், நண்பனை அதிருப்தியாய் பார்த்தான்.
தான் எத்தனை முக்கியமான விசயம் பேச நினைத்தால், வேண்டுமென்றே இவன் பேச்சை திசை திருப்புகிறானோ என்ற எண்ணம் தான் மாதவனுக்கு. அதை அவனின் கண்டன பார்வையும் காட்டிக் கொடுக்க, கீற்றாய் ஒரு புன்னகை நேசனிடம்.
“இந்த பாட்டுனாலே டி.எம்.எஸ் தான்… கேட்கறவங்க யாரா இருந்தாலும் அந்த குரல்ல அப்படியே உருகி கரைஞ்சு போய்டணும்… அதுல அப்படியொரு கம்பீரம் இருக்கும்… ஆனா அந்த ரிங்டோன் டி.எம்.எஸ் வாய்ஸ் இல்ல… வார்த்தைகள அத்தனை திருத்தமா உச்சரிச்சாலும் அதுல ஒரு குழந்தை தனம் இருக்கு… மழலையோட வாசம் இருக்கு… எப்படியும் நாலு இல்ல அஞ்சு வயசு குழந்தையா தான் இருக்கணும்… இத்தன சின்ன வயசுல இவ்வளவு திருத்தமா இனிமையா பாட முடியுமா என்ன..? எங்கையுமே இதுக்கு முன்ன கேட்ட குரலாவும் இல்ல… ஆனா கேட்டுக்கிட்டே இருக்கணும் போல இருக்கு…” என்றான் உள்ளார்ந்த அன்போடு உள்ளம் நெகிழ நேசன். அவனின் கண்களில் அந்த ஆர்வமும் அன்பும் அப்பட்டமாய் தெரிந்தது. முன்பின் தெரியாத ஒருவர் மீது இத்தனையான அன்பு சில நொடிகளில் சாத்தியமா என்றால், சாத்தியம் என்றது அவன் கண்களின் ஒளிர்வு.
“முப்பது செகண்ட் பாட்டுக்குள்ள இத்தனையும் கண்டு பிடிச்சுட்டியாக்கும் நீ…” என்றான் மாதவன் சிறு கேலியோடு. இப்பொழுது அவனின் பார்வையும் அந்த பெண்களிடம் தான்.
அதை காதில் வாங்கிக் கொள்ளாது, “அந்த பொண்ணோட ரிங்டோன் தான் போலடா... இங்கிருந்து கிளம்பறதுக்குள்ள எப்படியாவது கேட்டு வாங்கிடணும்… நீ கேட்டு வாங்கிக் குடேன்…” என்று நண்பனையும் தன்னோடு கூட்டு சேர்த்த நேசனை, விழிகள் விரிய அதிசயித்துப் பார்த்தான் மாதவன். இப்படி ஒரு விசயத்தின் மீது அவன் பிடித்தம் கொண்டு, அதை வெளிப்படுத்தி பல ஆண்டுகள் ஆகிறது.
நேசன் சொல்ல, மாதவனின் கவனமும் அந்த பெண்ணிடம் நிலைத்தது. அமர்ந்தபடி கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தவள், திடீரென தொற்றிக் கொண்ட பரபரப்புடன் சட்டென்று எழுந்து நின்றாள். மெல்லிய குரலில் கைப்பேசியில் பேசியபடியே, பக்கத்தில் அமர்ந்திருந்தவளை கை நீட்டி சைகையால் நகர சொன்னாள் அவள்.
மற்றவள் முழுதாய் எழுந்து வழி விடும் முன்னமே வேகமாய் அவளைத் தள்ளிக் கொண்டு அவள் வெளியே வர முயல, மற்றொரு கரம் மேசையின் கூர்முனையில் பட்டு அவள் அணிந்திருந்த கண்ணாடி வளையல்கள் சிறு சலசலப்புடன் கீழே விழுந்து நொறுங்கியது. அதை கவனிக்காது அவள் அதன் மீதே பாதத்தை அழுந்த ஊன்றி இருக்க, அது உண்டாக்கிய வலியில் வேகமாய் காலை நகர்த்துகிறேன் என மேசையின் காலில் பலமாக இடித்தும் கொண்டாள் அந்த பெண். உபயம், பெருவிரலில் சிறு புள்ளியாய் துளிர்த்து நின்றது ரத்தம். இமைக்கும் பொழுதிற்குள் நடந்திருந்தது இது அத்தனையும். அவளையும் மீறி, “ஸ்ஸ்… ம்மா…” என சத்தமின்றிய ஒரு முனகல். அவளின் வலி சுமந்த குரல் பக்கத்தில் இருப்பவரைக் கூட எட்டிவிடக் கூடாது என்பதில் அவளிடம் அப்படியொரு கவனம். மெல்லிய குரலில் பக்கத்தில் இருந்தவளிடம் ஏதோ பேசியபடியே குனிந்து பாதத்தைப் பார்த்தாள் அவள்.
“அப்படி என்னடி அவசரம் உனக்கு… செருப்ப போட்டுட்டு வெளிய வர வேண்டியது தானே…” எழுந்து நின்றவள் சத்தமாய் கடிந்து கொள்ள, இவர்களையும் அது எட்டி இருந்தது.
அனிச்சை செயலாய் நேசனின் பார்வையும் அவளின் பாதத்தில் தான் பதிந்தது. குவிந்த தாமரை மொட்டுகளைப் போல அத்தனை சிறிய பாதங்கள் அவை. இள மஞ்சள் நிற உள்ளங்கால்களும் நீண்ட விரல்களும் இன்னுமே அந்த பாதங்களை வடிவாய் காட்டியது. பெருவிரல் நுனியில் துளிர்த்து நின்றது அடர் சிவப்பாய் ஒரு துளி இரத்தம்.
அவனின் பார்வை அதற்கு அதற்கு அடுத்த விரலில் பதிய, கோர்த்திருந்த முத்து வைத்த மெட்டி அவளை மாற்றான் மனைவியென்று பறைசாற்றியது. வேகமாய் அவளின் பாதத்திலிருந்து பார்வையை விலக்கிக் கொண்டவனின் மனதில் இனம் புரியாத வெறுமை ஒன்று படர்வதை அவனாலேயே தடுக்க முடியவில்லை.
தோழியின் அதட்டலை காதில் வாங்கிக் கொள்ளாது, தான் அமர்ந்திருந்த இடத்திற்கு கீழே கழட்டி விட்டிருந்த காலணிக்குள் கால்களை அவசரமாய் நுழைத்துக் கொண்டாள் அவள். அவளின் அவசரத்தில், காலணியில் பெருவிரல் மோதி இன்னுமே இரத்தம் பெருகியது. இப்பொழுது மருதாணி பூசியதைப் போல் அடர்த்தியாய் அந்த விரலை ஆக்கிரமித்திருந்தது இரத்தம்.
“ஆழமா குத்திருச்சு போலடி… இரத்தம் நிறைய வருது பாரு…” பதறி பக்கத்தில் நின்றிருந்தவள் சொல்ல, அந்த வார்த்தைகள் அவனை எட்டவில்லை என்றாலும் அவசரமாய் அங்கிருந்தவர்களின் பார்வை அவளின் பாதத்தில் படிய, முயன்றும் தடுக்க முடியாது நேசனின் பார்வையும் அவளின் பாதங்களை தழுவியது. மனம் உருகி அவளுக்காய் பரிதவித்தது. ‘ஐய்யோ… எவ்வளவு இரத்தம்…’ என சத்தமின்றி அவளுக்காக முனகியது.
அவள் அது எதையும் காதில் வாங்கிக் கொள்ளாது, அவசர அவசரமாய் கைப்பேசியை தன் பையினுள் நுழைத்தபடியே, “சாரிப்பா… ஒரு சின்ன எமர்ஜென்சி… டோன்ட் மிஸ்டேக்கன் மீ… நீங்க சாப்பிடுங்க ப்ளீஸ்… என்ஜாய் யுவர் டே…” அங்கிருந்தவர்களிடம் பொதுவாய் ஒரு மன்னிப்பை பகிர்ந்தபடியே கிளம்ப எத்தனித்தாள். இத்தனை நேரம் குழந்தையின் குதூகலத்தோடு இருந்த அத்தனை பேரின் முகமும் நொடியில் வாடிப் போனது. சட்டென்று பரபரப்போடு அவளை சூழ்ந்து கொண்டு, என்னவென்று கேட்டு பதறியவர்களை சமாளித்து கிளம்புவதற்குள் திணறித் தான் போனாள் அவள். பார்த்திருந்த இவர்களுக்கே என்னவோ போலாகிவிட்டது.
“என்னடி பிரச்சனை… எதுவும் சொல்லாம இப்படி அவசர அவசரமா கிளம்புனா என்னனு நினைக்கறது நாங்க…” என்றவளின் குரலில் கண்டனமும் கவலையும் ஒருங்கே தெரிந்தது. மற்றவர்களின் முகங்களும் அதே கேள்வியைத் தான் தாங்கி நின்றது.
“பெருசா ஒன்னுமில்ல… நான் அப்பறமா உனக்கு போன்ல எல்லாத்தையும் சொல்லறேனே…” என்றவள் கிளம்புவதிலேயே குறியாய் இருந்தாள்.
“நானும் உன்கூட வரேன்… நில்லு…” என்று தனது கைப்பையையும் எடுத்துக் கொண்டு மற்றவளும் உடன் கிளம்பினாள்.
“இல்ல வேண்டாம்… நான் பாத்துக்கறேன்… பெருசா ஒன்னுமில்ல…” என்று மறுத்துச் சொல்லிக் கொண்டிருந்தாள் அவள்.
“உன்ன கிளம்புனு சொன்னேன்…” என்றபடியே அவள் முன்னே நடக்கத் தொடங்க, இவள் மறுத்து ஏதோ சொன்னபடியே அவளுடன் இணைந்து நடக்க, மற்றவள் அதை காதில் வாங்காது அவளின் கை பற்றி இழுத்துக் கொண்டு இன்னுமே வேகமாய் வாசல் நோக்கி நடப்பது தெரிந்தது. அந்த இரு பெண்கள் பார்வையை விட்டு மறையும் வரையுமே நேசனின் விழிகள் அவர்களைத் தான் தொடர்ந்தது. மாதவனும் செல்லும் அவர்களை தான் யோசனையுடன் கண்கள் இடுங்க பார்த்துக் கொண்டிருந்தான்.
பாடலில் இருந்த ஆர்வமும் ஆசையும் வடிந்து, அப்படியென்ன அந்தப் பெண்ணிற்கு திடீரென பிரச்சனை வந்திருக்க கூடும் என்ற சிந்தனை அவனை முழுதாய் ஆக்கிரமித்துக் கொண்டது. தன்னை சேர்ந்தவர்களை அன்றி பெரிதாய் மற்றவர்கள் விசயங்களில் மூக்கை நுழைப்பவனோ, அதை மனதில் ஏற்றிக் கொண்டு வருந்துபவனோ அவன் கிடையாது தான். ஆனால் என்னவோ அந்த பாடல், அவளை அவனுக்கு நெருக்கமானவளாக உணர வைத்திருந்தது. பெரிதாய் அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்க கூடாது என்று உருக வைத்திருந்தது.
காலின் காயத்தையும் பெருகும் இரத்தத்தையும் கூட அவள் கவனத்தில் பதிக்காதது மனதை என்னவோ செய்தது. மற்றவர்களிடம் சொல்லக் கூட முடியாத பிரச்சனை என்றால், விசயம் பெரிதோ என்று யோசிக்க வைத்தது. அப்படி எதுவும் இருக்கக் கூடாது என அவளுக்காய் மனதார முருகனிடம் வேண்டவும் வைத்தது.
மாதவனுக்கோ நண்பன் இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ஆசையாய்க் கேட்ட ஒன்றை உடனே கொடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கமும் வருத்தமும். அதற்காக அவசரமாய்ப் போகும் பெண்களை நிறுத்தி வைத்தா கேட்க முடியும்? ஆனால், எப்படியும் வாங்கி கொடுத்துவிட வேண்டும் என்ற உத்வேகமும் உறுதியும் இருந்தது.
வாங்கிய குழம்பியை அருந்தும் மனநிலையையே இருவரும் இழந்திருந்தனர். உணவை வீணாக்கும் பழக்கம் இல்லாததால், அவசரமாய் அதனை எடுத்து தொண்டைக் குழிக்குள் சரித்துக் கொண்ட நேசன், “சீக்கரம் குடிச்சுட்டு கிளம்புடா… நிறைய வேலை இருக்கு…” என்று பரபரக்க, மாதவன் பேச வந்த விசயம் அந்தரத்திலேயே நின்று போனது. என்னவோ, நேசனை இழுத்துப் பிடித்து நிறுத்தி வைத்து இப்போதே பேசிவிடும் வேகம் அவனுக்கு இல்லை. அதைவிட இப்போது அந்த மனநிலையில் அவனுமே இல்லை. நேசன் ஆசையாய்க் கேட்ட ஒன்று கிடைக்காது தட்டிக் கொண்டு போனது, ஏதோ சகுனத் தடை போல் மனதை உறுத்தியது. இரவு வீட்டில் பேசிக் கொள்ளலாம் என வேகமாய் அவனும் குழம்பியை அவசரமாய் தொண்டைக் குழிக்குள் சரித்துக் கொண்டு நேசனோடு கிளம்பி விட்டான்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.