நெஞ்சம் – 19

தமிழ் வெண்பா | 25 Jan 2026 | Share

தீவிர சிந்தனையின் பிடியில் சிக்குண்டு இருந்தவளை, “அப்பா… விட்டுட மாட்ட இல்லப்பா…” பயமும் அவநம்பிக்கையுமாய் சத்தமாய் ஒலித்த மகனின் குரல் தீண்டி சுயத்திற்குக் கொண்டு வந்தது. அவனின் ‘அப்பா…’ என்ற விளிப்பு அச்சர சுத்தமாய் அவளை அடைந்திருக்க, புருவங்கள் நெரிபட யோசனையாய் மகனின் பக்கம் பார்வையை கூர்மையாக்கினாள் தென்றல். இன்னுமே இருட்டி விட்டிருக்க, சற்றே தூரத்தில் நிழலோவியமாய் அவனின் உருவம்.

சரக்கு மரத்தின் உச்சில் எதிர்பார்ப்பும் சிறு பயமும் தயக்கமுமாய் நின்றிருந்தான் வேந்தன். அடுத்த நொடி அப்படியே அவளின் பார்வை கீழிறங்க, கைகள் இரண்டையும் விரித்து பிடித்தபடி, அவளுக்கு முகுது காட்டி நின்றவன் நேசன் என்பதை அடையாளம் கண்டுக் கொள்ள  அவளுக்கு எவ்வித மெனக்கெடல்களும் வேண்டியிருக்கவில்லை.

“அப்படியெல்லாம் அப்பா உங்கள விட்டுட மாட்டேன்டா குட்டி… நம்புடா என்ன…”  என உரக்க சொன்னவனின் வார்த்தைகள் சர்வ நிச்சயமாய் பிள்ளைக்கானது மட்டுமே என்று அவளால் எண்ண முடியவில்லை.

வேகமாய் எழுந்துக் கொண்டவள், விறுவிறுவென அவர்களை நோக்கி நடக்க தொடங்க, அதற்குள் சறுக்கிக் கொண்டு வந்த பிள்ளை தரையை தொடும் முன் அள்ளிக் கொண்டான் நேசன்.

“பாத்தீயா… அப்பா உங்கள விட்டுடல…” பிள்ளையின் கன்னத்தில் அழுத்தமாய் இதழ் பதித்தபடியே முகம் கனிய சொன்னான் நேசன். அதற்குள் அவர்களை நெருங்கி இருந்த தென்றல், அவனின் விழிகளில் தெரிந்த எல்லையில்லா நேசத்தில் ஒரு நொடி திகைத்து வாயடைத்து தான் போனாள்.

நேசனின் கழுத்தை கட்டிக் கொண்டபடியே தானும் எச்சில் படிய முத்தம் வைத்தவன், “ப்ளீஸ் ப்பா… இன்னொரு டைம்…” என்றான் கெஞ்சலும் கொஞ்சலுமாய் கண்களை சுருக்கி. அவன் சாதாரணமாய் கேட்டிருந்தாலே நேசனால் மறுத்திருக்க முடியாது. அப்படி இருக்க இப்போது முடியாது என்று சொல்லி விடுவானா என்ன?

“நீங்க இங்க என்ன பண்ணறீங்க..?” அவனை நெருங்கி வினவியவள் குரல் உயரவில்லை என்றாலும் அதில் கோபம் அப்பட்டமாய் தெரிந்தது.

அவளைக் கண்டுக் கொள்ளாதவன், “இன்னும் ஒரு தடவை தான்… சரியா..?” என தலை சாய்த்து மகனிடம் வினவ, “சரிப்பா…” என்றான் வேகமாய் வேந்தனும். 

மீண்டும் அவன் கன்னத்தில் முத்தம் வைத்து நேசன் இறக்கிவிட, குடுகுடுவென சறுக்கு மரத்தின் படிக்கட்டுகளை நோக்கி ஓடினான் பிள்ளை. சின்னவனும் அவளை கண்டுக் கொள்ளாததில் இன்னுமே சுறுசுறுவென அவளின் கோபம் தலைக்கேறியது.

“மிஸ்டர்… உங்களை தான் கேக்கறேன்…” என்றாள் அதட்டலாய் தென்றல்.

“பைவ் மினிட்ஸ்… விளையாடி முடிச்சதும் பேசலாம்…” என்றவன் கவனம் முழுவதும் சறுக்கு மரத்தின் மீதே! கைகளை விரித்து பிள்ளையை பிடிக்க தயாராய் நின்றிருந்தான் நேசன். இம்முறை எந்த கேள்வியும் கேட்கவில்லை பிள்ளை. எத்தனை வேகமாய் ஏறினானோ அதே வேகத்தில் சறுக்கிக் கொண்டு வர, லாவகமாய் அவனைப் பிடித்துக் கொண்டான் நேசன். பிள்ளையின் முகம் மகிழ்ச்சியில் விகாசிக்க கிளுங்கி சிரித்தான். கண்களை பெரிதாய் விரித்து, “ப்ளீஸ்ப்பா..‌. இன்னும் ஒரே ஒரு தடவை…” என்றான் ஆசையாய்.

“உங்க அம்மா வந்துட்டாங்க குட்டி… போதும்… நாம நாளைக்கு விளையாடலாம்…” என்றான் நேசன்.

இப்போது தான் அன்னையைக் கவனித்தவனின் முகம் சட்டென்று வாடிப் போனது. அன்னையும் அவனையும் மாறி மாறிப் பார்த்தான்.

“வேந்தா என்கிட்ட வா…” பிள்ளைக்காக அவள் கைநீட்ட, வேகமாய் அவளிடம் தாவினான் வேந்தன்.

‘சரியான அம்மா கோந்து… இவ்வளவு நேரம் அப்பே… அப்பேனுட்டு அம்மாவ பாத்ததும் தவ்வறத பாரு…’ சுகமாய் அலுத்துக் கொண்டது நேசனின் மனது. இம்மாதிரியான நினைப்பே அவனுக்குள் இனம் புரியாத ஒரு சுகத்தை தந்திருந்தது.

பிள்ளையோடு அவள் வாயிலை நோக்கி நடக்க தொடங்க, “நில்லுங்க தென்றல்… உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும்…” என்றான் அவளோடு இணைந்து நடந்தபடி.

பதில் சொல்லாமல் நடையின் வேகத்தை கூட்டினாள் பெண். சுற்றிலும் தனது பார்வையை ஒரு முறை சுழல விட்டான் நேசன். குழந்தைகளும் பெரியவர்களும் இளம் தாய்மார்களுமாய் அந்த பூங்காவை அநேகர் நிறைத்திருந்தனர். அதில் சிலரின் பார்வை குறுகுறுப்பாய் இவர்களின் மீது படியவும் செய்தது.

“தேவையில்லாத கான்ட்ரோவஸி வேண்டாம் தென்றல்… ஜெஸ்ட் ஐ நீட் டென் மினிட்ஸ்…” என்றான் சுற்றி இருந்தவர்களை பார்வையால் தொட்டுக் காட்டி.

ஊஞ்சலின் அருகே பிள்ளையை இறக்கி விட்டவள், “அம்மா பாத்துட்டே இருப்பேன்… இங்கேயே தான் விளையாடணும்… வேற எங்கையும் போக கூடாது…” மகனிடம் கண்டன குரலில் உரைந்துவிட்டு, சற்றே தள்ளி இருந்த இருக்கையில் அவனை பார்க்கும் வண்ணம் அமர்ந்தாள். அவளுக்கு சற்றே தள்ளி இடைவெளி விட்டு அமர்ந்தவனுக்கு எங்கே எதை எப்படி ஆரம்பிப்பது என்ற தடுமாற்றம். 

“சொல்லுங்க… என்ன பொய் சொல்லி என் பிள்ளையை நம்ப வச்சீங்க..?” நேராய் அவனைப் பார்த்து வினவியவளின் கண்களில் அத்தனை ரௌத்திரம். அப்படியெல்லாம் மகன் எளிதில் எதையும் நம்பி விடுபவன் இல்லை என்பது அவளுக்கும் தெரியுமே! அந்நியர்களிடம் அத்தனை சீக்கிரம் பேசக்கூட மாட்டான். அப்படி இருக்க, இத்தனை நெருக்கமும் அவனின் ‘அப்பா…’ என்ற விளிப்பும் அவளுள் சினத்தையும் கலக்கத்தையும் ஒருங்கே சிதற விட்டிருந்தது.

அவள் இல்லாத நேரங்களில் நடக்கும் சிறுசிறு விசயங்களை மனனம் செய்ததைப் போல ஒப்பிக்கும் பிள்ளை, இத்தனை நடத்தும் தன்னிடம் மூச்சே விடவில்லை என்றால் அப்படி என்ன சொல்லி வைத்திருப்பான் என சிறு ஆர்வமும் கூட அதில் இழைந்தோடியது.

“பொய் இல்லைங்க… இனிமேல் நடக்க போற நிஜத்தை தான் சொன்னேன்…” அழுத்தமாய் ஒலித்தவனின் குரலில், அப்படியொரு உறுதி தொனித்தது.

“அதுக்கு நான் சம்மதிக்கணும்…” என்றாள் காட்டமாய் தென்றல்.

இதுவரை பிள்ளையின் மீது ஒரு கண்ணும் அவளின் மீது ஒரு கண்ணுமாய் பேசிக் கொண்டிருத்தவன் திரும்பி கண்களை சுருக்கி அவளை ஊடுருவிப் பார்த்தான். அதுவரை அவனின் முகத்தை அழுத்தமாய் பார்த்துக் கொண்டிருந்த அவள் தான், சங்கடமாய் இப்போது பார்வையை வேறு பக்கம் திருப்பிக் கொள்ள வேண்டி இருந்தது.

“கண்டிப்பா சம்மதிப்பீங்க… நீங்க சொல்லற மாதிரி இந்த கல்யாணம் வேந்தனுக்காக மட்டும் தானா நிச்சயமா சம்மதிப்பீங்க…” என்றான் அழுத்தமாய்.

இப்பொழுது வேகமாய் திரும்பி அவனை வெட்டும் பார்வை பார்த்தவளின் விழிகள் குத்திட்டியாய் அவனைக் குத்தி கிழிக்கப் பார்த்தது.

“நீங்க அப்பானு சொல்லிகிட்டா அப்பா ஆகிட முடியாது… என் பிள்ளைக்கு எப்படி சொல்லி புரிய வைக்கணும்னு எனக்கு தெரியும்…” என்றாள் வெடுக்கென்று.

சில நொடிகள் கனத்த மௌனம் அவனிடம். அமைதியாய் பிள்ளையின் மீது மட்டுமே பார்வையை நிலைக்க விட்டவன், “என்ன தவிர வேற யாரையும் நான் வேந்தனுக்கு அப்பாவாக விட மாட்டேன்…” என்றவனின் குரல் இறுகி கடினமாய் ஒலித்தது.

“என்ன மிரட்டறீங்களா..? இதுக்கெல்லாம்…” என அவள் சூடாய் ஏதோ பதில் பேச முனைய, “எஸ் தப்பு தான்… அரசிய வச்சு தான் பிள்ளையோட நெருக்கமானேன்… அவ சொல்லவும் தான் நம்பி அவன் என்ன அப்பானு கூப்பிடறான்… உங்களுக்கும் எனக்கும் பெரிய சண்டை… அதனால தான் பிரிஞ்சு இருக்கோம்… உங்ககிட்ட அப்பாவ பாத்தேனு சொன்னா… இனிமே பாக்க விட மாட்டீங்கனு சொன்னோம்… அதனால தான் குட்டி உங்கிட்ட சொல்லைல… தப்பு தான்… எல்லாமே தப்பு தான்… ஆனா இதை எந்த தப்பான எண்ணத்துலையும் நான் பண்ணல… என்னனு தெரியல… வேந்தனோட குரலை கேட்ட நொடியில இருந்து வேந்தனை வேறயா நினைக்க முடியல… அவன் குரலைக் கேட்காம, அவன பாக்காம… சத்தியமா என்னால முடியல…  எப்படியும் நீங்க கல்யாணத்துக்கு சம்மதிச்சுடுவீங்கனு நினைச்சேன்… பட்… நீங்க வேற இடம் பாக்கறீங்கனு தெரியவும்… அதுவும் இன்னைக்கு நேர்லையே பாக்க வர சொல்லி இருக்கீங்கனு தெரியவும் இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியல… அதான் நானே கிளம்பி வந்துட்டேன்…” என்றான் விளக்கமாய் நேசன்.

அவன் சொல்லி முடிக்கும் வரை அமைதியாய் கேட்டுக் கொண்டவள், இதழ்கள் கேலியாய் சுழிந்தது. “நான் ஒன்னும் வேந்தனில்ல…” என்றாள் கேலியாய். 

“நான் பொய் சொல்லலை தென்றல்…” என்றான் உண்மையான நேசத்தை கண்களில் தேக்கி, வேதனைக் குரலில்.

அந்த குரலில் இருந்த வேதனையும் கலக்கமும் அவளையும் என்னவோ செய்தது உண்மை. “நான் எப்படி உங்கள நம்பறதாம்..?” என கண்களை சுருக்கி வினவியவளின் கேலியில் முன்பிருந்த தீவிரம் இல்லை. 

“டிடெக்டிவ் ஏஜென்சி எல்லாம் வச்சு விசாரிச்சு இருக்கீங்க… இன்னுமா நம்பிக்கை வரலை…” என்றான் இலகுவாய் அவளை ஒத்த கேலிக் குரலில்.

“பச் அது மட்டும் போதுமா..?”

“போதாதுனா… இப்ப ஒருத்தர வர சொல்லி பேசனீங்களே… அவர கல்யாணம் பண்ணறதுனு முடிவெடுத்து இருந்தா எந்த நம்பிக்கையில பண்ணிப்பீங்களோ அதே நம்பிக்கையில பண்ணிக்கோங்க..‌.” என்றான் அசராமல்.

“என்ன விட நீங்க ஏழு மாசம் சின்னவரு…” என்றாள் சற்றே இறங்கிவிட்ட குரலில்.

“அரசி என்னோட பயோ டேட்டா அனுப்பும் போதே உங்களுக்கு அது தெரிஞ்சு இருக்கும்… இருந்தும் டிடெக்டிவ் ஏஜென்சி வச்சு விசாரிச்சு இருக்கீங்கனா அது காரணமில்ல…” என்றவன் கேள்வியாய் அவளைப் பார்க்க, அவன் கண்டுக் கொண்டதில் அவளிடம் சிறு தடுமாற்றம்.

“எக்ஸாம் எழுத விடாமலே ஒருத்தவங்கள பெயிலாக்கறது ரொம்ப தப்புங்க… நீங்க வேண்டாம்னு சொல்லற காரணத்தையாவது நான் தெரிஞ்சுக்கலாம் இல்லையா..? அந்த உரிமை எனக்கு இருக்கு இல்லையா..?” என்றான் இலகுவாய்.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், ஒரு நொடி அவனை தவிப்பாய் தயங்கிப் பார்த்தாள். அவளின் காரணம், அவனை மொத்தமாய் உடைத்துப் போட கூடிய ஒன்றாக கூட இருக்கலாம்.

அவளின் ஒவ்வொரு அசைவையும் ஆழமாய் உள்வாங்கிக் கொண்டவனுக்கு பெரிதாய் ஏதோ ஒன்று என உணர முடிந்தது. இருந்தும் அவளே சொல்ல காத்திருந்தான்.

“ப்ளீஸ்… இது சரி வராது விட்டுடுங்களேன்…” என்றவள் குரலில் முன்பிருந்த கோபமோ எரிச்சலோ இல்லை.

“இன்னும் நீங்க காரணத்தை சொல்லவே இல்லைங்க…” என்றவனின் பார்வை வாஞ்சையாய் வேந்தனின் மீது தான் படிந்திருந்தது. அவள் என்ன சொன்னாலும் அதை எப்படி சரிகட்டுவது என்று தான் தீவிரமாய் அவனின் மனம் ஆராய்ந்துக் கொண்டிருந்தது. எதறக்காவும் அவர்களை விட்டுவிடும் எண்ணம் இல்லை அவனுக்கு.

எச்சிலைக் கூட்டி விழுங்கியவள், “அது வந்து..‌. உங்க பாஸ்ட் எக்காரணம் கொண்டும் வேந்தனோட ப்யூச்சர டிஸ்டர்ப் பண்ணிட கூடாதுனு நினைக்கறேன்…” என்றாள் அவனின் ஒவ்வொரு அசைவையும் அவாதானிக்க முயன்றபடியே.

“புரியல…” கண்கள் இடுங்க கேட்டவனின் குரலும் உடலிலும் வெகுவாய் இறுகிக் கொண்டிருந்தது.

“அவங்க உங்க வாழ்கையில இருந்து இன்னும் முழுசா போகலையே… திரும்ப அவங்க வந்தா… உங்க மனசு தடுமாறுச்சுனா…” அவள் மேலே சொல்லாமல் நிறுத்தி அவன் முகம் பார்க்க, அவனின் கண்கள் வேதனையாய் பிள்ளையின் மீது தான் நிலைத்திருந்தது. அவன் கைகளால் இருக்கையை அழுந்த பற்றி இருந்த விதமே, அவனின் கோபத்தையும் தவிப்பையும் சொன்னது.

யுகங்களாய் நீண்ட நொடிகளை களைத்தது அவனின் வார்த்தைகள். “நம்பணும் தென்றல்… ஏதாவது ஒரு கட்டத்துல யாரையாவது ஒருத்தர நம்பி தான் ஆகணும்…” என்றான் அழுத்தமாய்.

சற்றே இடைவெளிவிட்டு ஆழ்ந்த மூச்செடுத்து, “என்னோட கடந்த காலம் எல்லாமே உங்களுக்கு தெரியும் இல்லையா..?” என்றான் அவளை நேராய் பார்த்து. ஆம் என்னும் விதமாய் அசைந்தாடியது அவளின் சிரம்.

“அதை நான் கடந்து வந்தாச்சு… இனிமே எந்த விதத்துலையும் அது என்ன சலனப்படுத்தவோ பாதிக்கவோ செய்யாது… என்னோட எதிர்காலம் மொத்தமும் நீங்களும் வேந்தனும் தான் இருப்பீங்க… ஒரு வேளை நமக்கு இன்னொரு குழந்தையும் வரலாம்… நிச்சயமா வேண்டானு எல்லாம் சொல்ல மாட்டேன்… அப்படி வந்தா அவங்களும் இருப்பாங்க…” என்றவன் இதழ்களில் இப்போது கோடாய் சிறு புன்னகை.

“நீ சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னா என்னோட நேசம் உனக்கு மட்டுமே சொந்தமானதா இருக்கும்… நான் வேந்தனுக்காக மட்டுமே இந்த கல்யாணம் நடக்கணும்னு நினைக்கல… உனக்காகவும் தான்… எனக்கு நீயும் வேணும் தென்றல்… நீ மட்டும் தான் வேணும்… இது காதலானு கேட்டா… என்கிட்ட பதிலில்லை… ஆனா உன்ன பார்த்த அன்னைக்கு நீ இன்னொருத்தரோட மனைவியா இருப்பீயோனு நினைச்சு என் மனசு தவிச்ச தவிப்புக்கு ஏன்னு எனக்கு தெரியல… நீயும் வேந்தனும் எனக்கு சொந்தமாக ஒரு வாய்ப்பு இருக்குனு தெரிஞ்சப்போ என் மனசு அடைஞ்ச நிம்மதிக்கு ஏன்னு எனக்கு தெரியல… உங்களோட வாழணும்னு அத்தனை ஆசை இருக்கு… மனசார வாழவும் ஆரம்பிச்சுட்டேன்… நீ சம்மதிக்கவே இல்லைனாலும் என்னோட நேசம் உங்களுக்கானது மட்டுமா தான்… நீ பொறுமையா யோசிச்சு இரண்டு நாள்குள்ள பதில் சொன்னா போதும்… ஆனா வேற யாரையும் வேந்தனுக்கு அப்பானு கைக்காட்டலாம்னு நினைக்காத நான் விட மாட்டேன்…” என்றவன் எழுந்துக் கொள்ள, அவனைத்தான் இமைக்காது பார்த்திருந்தாள் அவள். இத்தனை நேரம் பன்மையில் பேசிக் கொண்டிருந்தவன், ஒருமைக்கு தாவியதையும் குறித்துக் கொண்டது அவளின் மனது.

சென்று பிள்ளையை தூக்கிக் கொண்டு அவளிடம் வந்தவன், “கிளம்புங்க தென்றல்… இருட்டிடுச்சு… உங்கள வீட்டுல விட்டுட்டு நானும் அப்படியே கிளம்பறேன்…” என்று நின்றான்.

“இல்ல பக்கம் தான்… நாங்களே…” என்றாள் தயங்கி அவள்.

“தெரியுமே..! ஆனாலும் என்னால உங்கள அப்படியே விட்டுட்டு போக முடியாது…” என்றவன்  நொடி நேரம் அவளின் முகத்தை ஆழ்ந்துப் பார்த்தபடியே, “இன்னும் பத்து நிமிஷம் உங்க இரண்டு பேர் கூடவும் இருக்கலாமே..!” என்றான் ஏக்கமாய்.

எதுவும் சொல்லாது அவள் முன்னே நடக்க, பிள்ளையை தூக்கிக் கொண்டு அவளோடு இணைந்து நடந்தான் நேசன். வழியெங்கும் அவர்கள் இருவர் மட்டுமே சலசலத்தபடி பேசிக் கொண்ட வந்தார்களே தவிர, இவள் ஒரு வார்த்தை பேசவில்லை. எங்கே மேலே பேசினால், முழுவதுமாய் தன்னை கரைத்து விடுவானோ என்ற பயம் அவள் மனதை அப்பிக் கொண்டது.

அவளின் வீட்டு வாசலோடு நின்று விட்டவன், பிள்ளையை இறக்கிவிட்டு அவன் உயரத்துக்கு மண்டியிட்டு அமர்ந்து அள்ளி அணைத்து கொஞ்சி தீர்த்த பின்னும் மனமே இல்லாமல் தான் விடைப்பெற்றான். அவளும் அவனை உள்ளே அழைக்கவில்லை, அவனும் செல்ல முனையவில்லை.

“வரேன் தென்றல்… பாத்துக்கோங்க…” என்றவன் அவர்களை விட்டுச் செல்ல மனமே இல்லாது அங்கிருந்து கிளம்பியும் இருந்தான். 

                          – நேசம் ஒளிரும்…

    No comments yet.