நெஞ்சம் – 18

தமிழ் வெண்பா | 21 Jan 2026 | Share

இதழ்களில் உறைந்த புன்னகையோடு, சறுக்கு மரத்தில் விளையாடும் பிள்ளையிடம் பார்வையை பதித்திருந்தாள் தென்றல். அதன் உச்சியில் ஏறி நின்றவன், தாயின் புறம் திரும்பி வாய் கொள்ளா சிரிப்புடன் கையசைத்து அவளைப் பார்க்கும் படி சைகை காட்டிவிட்டு, சறுக்க தொடங்கி இருந்தான். தரையை தொட்ட நொடி பெருமிதமும் பூரிப்புமாய் அன்னையை தான் தொட்டது அவனின் பார்வை. அவளின் முகமும் பெருமிதத்தில் விகாசித்தது.

அவள் அரசியிடம் சொன்னது போலவே, அந்த அறுவரில் ஒருவரை இன்று பார்க்க ஏற்பாடு செய்திருந்தாள் தென்றல். அதற்காகவே இரண்டு மணி நேரம் வங்கியில் அனுமதி வாங்கிக் கொண்டு, அவளும் பிள்ளையும் இங்கே வந்து காத்து கிடக்க அவள் எதிர்பார்த்த நபர் தான் வருவதைப் போல் தெரியவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாய் மாலை மங்கி இருளும் கவிழ தொடங்கி இருந்தது. அவள் கைக்கடிகாரத்தைப் பார்க்க, நேரம் ஆறை நெருங்கிக் கொண்டிருந்தது. கைப்பேசியின் வசதிகள் பெருகிவிட்ட காலத்தில் அதன் உண்மையான உபயோகமென்பது அருகிவிட்டது. அப்படியே அணிந்திருந்தாலும், அலங்கார பொருளாகவும் தனது பொருளாதாரத்தை காட்டும் ஒரு குறியீடாகவுமே அது இருக்கிறது.

பிள்ளையின் மீது படிந்திருந்த பார்வை அதே வாஞ்சையுடன் அந்த கடிகாரத்தையும் தழுவியது. கருப்பு வார் வைத்த அந்த காலத்து டைட்டன் கைக்கடிகாரம். இந்த மாதிரியின் உற்பத்தியை அந்நிறுவனம் நிறுத்தியே பல ஆண்டுகள் ஆகிறது. அவள் பலமுறை கேட்ட பின்பு, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்றாள் என்பதற்காக அவளின் தந்தை வாங்கி கொடுத்தது. அப்போதைய அவரின் ஒரு வார சம்பளத்தை தின்றிருந்தது இந்த கடிகாரம். அதற்காக குணவதி அவரை என்னமாய் சாடினார் என்பது இன்னுமே தென்றலுக்கு நினைவிருக்கிறது.

அதன் அழுத்தத்தை மணிக்கட்டில் உணரும் போதெல்லாம், அவளின் கரத்தை கொட்டியாக பிடித்துக் கொண்டு பயத்தோடு தந்தை சாலையை கடந்த நாட்கள் தான் நினைவிலாடும். அந்த கடிகாரம் தந்தையின் பரிசத்தையும் அது தரும் பாதுகாப்பையும் நொடிக்கு நொடி அவளுள் உணர்த்திக் கொண்டே இருந்தது. அதே உணர்வை தன் பிள்ளைக்கு கடத்த முடிந்த ஒருவனையே, அவனுக்கு தகப்பனாக்க வேண்டுமென்று நினைத்தாள் தென்றல். அதே நேரம் அது அத்தனை சுலபமில்லை என்றும் அவளுக்கு தெரிந்திருந்தது.

“ம்மா…” வேந்தன் அவளின் கை பிடித்து இழுத்து கத்தி அழைக்கவும், சடசடவென்று பழைய நினைவுகள் எல்லாம் அறுந்துப் போனது.

“என்ன கண்ணா…”

“நா மேல இருந்து சறுகிட்டு வரேன்… கீழ வரத்துக்கு முன்னாடி என்ன புடிச்சுக்கறீயாம்மா… இந்த சந்தோஷ் அப்பா இல்ல… அவரு கூட அவன அப்படி தான் புடிச்சுப்பாரு… ரொம்ப ஜாலியா இருக்கும்…” என்றான் பிள்ளை ஆசையாய்.

“அவ்வளவு தானே… பிடிச்சுட்டா போச்சு…” என்றபடியே அவள் எழுந்த நேரம், “ஹாய்…” என்றபடியே வந்து நின்றான் அவன். புகைப்படத்தில் பார்த்திருந்தாள் தான். ஆனால், நினைத்ததைவிட நெடுநெடுவென அத்தனை உயராமாய் இருந்தான்.

ஒரு நொடி கையை பற்றி இழுக்கும் பிள்ளையுடன் செல்வதா இல்லை அவனுடன் பேச்சை வளர்ப்பதா என தடுமாறி, அவனிடம் சொல்லிக் கொண்டு பிள்ளையுடன் செல்வதென தீர்மாணித்து அவள் வாயை திறக்க போன நொடி, “உங்க பையனா..?” என்றிருந்தான் அவன். ஏனோ அந்த கேள்வி அத்தனை உவப்பாய் இல்லை அவளுக்கு.

பிள்ளை அவளின் கையை பிடித்து இழுத்துக் கொண்டு நிற்பதை பார்த்தவன், “குட்டி நீங்க போய் விளையாடுங்க… அம்மா அங்கிள் கூட பேசிட்டு வருவாங்க…” என்றபடியே பிள்ளையின் கரத்தை அவளிடமிருந்து விலக்க, அந்த செயலும் அத்தனை உவப்பானதாக இல்லை அவளுக்கு.

வேந்தன் ஏக்கமாய் அவளின் முகம் பார்க்க, “நீ போய் உன் ப்ரண்ட்ஸ் கூட விளையாடு வேந்தா… அம்மா வரேன்…” மனமே இல்லையென்றாலும் அந்த நொடி அப்படி சொல்ல தான் நிர்பந்திக்க பட்டாள் அவள்.

“ஐம் மனோகர்… என்ன பத்தி எல்லா டீடையிலும் உங்களுக்கு ஏற்கனவே தெரிஞ்சுருக்கும்… சொந்த தொழில் பாருங்க… நினைச்ச நேரத்துக்கு இஷ்டத்துக்கு அப்படியே விட்டுட்டு வர முடியல…” என்றபடியே இயல்பாய் அவள் அமர்ந்திருத்த பலகையில் அமர்ந்தவன், சற்றே நகரந்து அவளையும் அமரும்படி சைகை செய்தான்.

தாமதமாக வந்ததற்கான விளக்கமா? நிச்சயம் அப்படி தான் இருக்க வேண்டும் என்று நினைத்தாள் அவள். இன்னுமே இடைவெளியை அதிக படுத்தியபடி கொஞ்சம் தள்ளி அமர்ந்தாள் அவள்.

“ஆக்சுவலா பேமிலியா இல்லாம இப்படி நீங்க என்ன தனியா பாக்கணும்னு சொன்னதுல வீட்டுல பெருசா யாருக்கும் இன்ட்ரெஸ்ட் இல்ல… ஆனாலும் உங்கள ரொம்ப பிடிச்சு போனதால தான் இத யாருமே பெருசுப் படுத்தல…” என்றான் பெருந்தன்மையாய் மனோ.

“நம்ம ரெண்டு பேருக்கும் இது ஒத்து வரும்னு தோனுச்சுனா மேல ப்ரசீட் பண்ணலாமே… தேவையில்லாம பெரியவங்கள எதுக்கு அலைக்கழிக்கணும்…” என்றாள் அவள்.

“அதுவும் சரிதான்…” என தலையாட்டிக் கொண்டவனுக்கு அதில் உடன்பாடு இருந்ததைப் போல தெரியவில்லை.

“என்னோட முதல் கல்யாணம் லவ் மேரேஜ் தான்… ஏழு வருஷ லவ்… ஆரம்பத்துல எல்லாமே நல்லா தான் போச்சு… கொஞ்ச நாள்லையே அம்மாவுக்கும் அவளுக்கும் ஒத்து வரல… தொட்டதுக்கு எல்லாம் சண்டை… வீட்டுல இருந்த நிம்மதியே போச்சு… இரண்டு பேருமே மீச்சுவலா பேசி பிரிஞ்சுட்டோம்… ஏழு வயசுல பொண்ணு இருக்கா… அம்மா கூட தான் வளரா… சன் டே மட்டும் வீட்டுக்கு வருவா…” அவன் சொல்லிக் கொண்டே போக, தெரிந்த தகவல்கள் தான் என்றாலும் கவனமாய் அதை உள்வாங்கிக் கொண்டாள் தென்றல்.

“இடையில நீங்க குழந்தைய பாக்க போக மாட்டீங்களா..?” என்றவளை விநோத ஜந்துவைப் போல பார்த்து வைத்தான் அவன்.

“அதான் அவங்கம்மாவே சன்டே சன்டே கொண்டு வந்து விட்டுட்டு கூட்டிட்டு போறாளே… அதுவும் இல்லாம நீங்களே பாக்கறீங்களே… எனக்கு ப்ரீ டைம் கிடைக்கறது ரொம்ப கஷ்டம்…” என்றான் அமர்த்தலாய் மனோ.

“அதுவும் சரிதான்…” என தலையாட்டிக் கேட்டுக் கொண்டவளுக்கு அவன் வார்த்தைகளில் அத்தனையாய் உடன்பாடில்லை.

“வீக்லி குழந்தையோட எவ்வளவு நேரம் ஸ்பெண்ட் பண்ணுவீங்க..?”

அவளின் இந்த கேள்வியில் அப்பட்டமாய் விருப்பமின்மையை காட்டியது அவனின் முகம். “சன்டேவும் நான் கொஞ்சம் பிஸி தான்… ஈவினிங் ஒன்னுல இருந்து இரண்டு மணி நேரம் தான் எனக்கு குழந்தையோட ஸ்பெண்ட் பண்ண முடியும்… அம்மாவுக்கு தான் பேத்தினா கொள்ளை பிரியம்… கைக்குள்ளையே வச்சு வளக்க முடியலையேனு அவ்வளவு வருத்தம்… வீட்டுக்கு வந்த பேத்திய திருப்பி அனுப்பவே மனசு வராது…” மறைமுகமாக பெற்றோரின் பேரப்பிள்ளை ஆசையை அடிகோடிட்டு காட்டினான் அவன்.

“ஓ… இப்படி இருந்தா பிள்ளை அப்பாவுக்காக ஏங்கி போய்ட மாட்டாளா..?” அவனின் முகத்தில் தீவிரமாய் படிந்திருந்தது தென்றலின் பார்வை.

“தியா ரொம்ப மெச்சூர்… அதுவுமில்லாம என்னவிட அவங்க அம்மா கூட தான் தியாவுக்கு ஒட்டுதல் அதிகம்…” என்றான் மனோ.

‘ஏழு வயது குழைந்தைக்கு என்ன மெச்சூரிட்டி இருந்துவிட போகிறது…’ நுனி நாக்கு வரை வந்துவிட்ட கேள்வியை கேட்கும் எண்ணமில்லை அவளுக்கு. கேட்டாலும் அவன் சொல்ல போகும் விடை நிச்சயமாக அவளுக்கு ஏற்புடையதாய் இருக்க போவதில்லை.

சில நொடிகள் கணத்த மௌனத்தோடு கரைய, அதை அவனே களைத்தான். “மேரேஜ் லைப் இப்படி ஆகவும் லவ் மேலேயே ஒரு வெறுப்பு வந்துடுச்சு… அதான் இந்த தடவ எல்லாத்தையும் நீங்களே பாத்துக்கோங்கனு பொறுப்ப அம்மாகிட்ட ஒப்படைச்சுட்டேன்… எத்தனையோ இடத்துல ஃப்ர்ஸ்ட் மேரேஜ்கே அப்ரோச் பண்ணாங்க… நான் தான் ஒரு விடவரையோ இல்ல செகெண்ட் மேரேஜ்க்கு பாக்கறவங்களையோ பாருங்கனு சொன்னேன்… அம்மாவுக்கு அதுல கொஞ்சம் வருத்தம்… அதுக்கு அப்பறம் தான் ஜாதி சங்கத்துல எல்லாம் பதிஞ்சு வச்சாங்க… அப்படி தான் உங்க ப்ரபைலும் வந்துச்சு… இன்ஃபேக்ட் இப்போ என்னவிட அவங்களுக்கு தான் உங்கள ரொம்ப புடிச்சு போச்சு… பத்துக்கு ஒன்பது பொறுத்தம் இருக்காம்… நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தா ராஜ வாழ்க்கை வாழ்வோம்னு இருக்காம்… அம்மா ஜாதகம் பாத்துட்டு வந்ததுல இருந்து கையோட இந்த கல்யாணத்த முடிச்சுடறதுனு அத்தன உறுதியா இருக்காங்க…” அவன் சொல்லிக் கொண்டே போக, ‘ஓ…’ என்றாள் தென்றல் சுரத்தே இல்லாமல்.

“நீங்க வேலைக்கு போறீங்களாமே… கல்யாணத்துக்கு அப்பறம் அது சரிவரும்னு எனக்கு தோணல… அம்மாவுக்கு முன்ன மாதிரி இப்ப எல்லாம் எதுவும் முடியறது இல்ல… நீங்க வீட்டுலையே இருந்தாலும் சரி… இல்ல என்கூட பிஸ்னஸ் பாக்க வந்தாலும் சரி…” அவன் மேலும் சொல்லிக் கொண்டே போக, வார்த்தையின்றி அவனை வெறித்துப் பார்த்திருந்தாள் தென்றல்.

“என்னடா வேலைய விட சொல்லறானே… அப்போ உங்க அம்மாவுக்கும் பையனுக்கும் என்ன வழினு யோசிக்காதீங்க… கடைசி வரைக்கும் அவங்க என் பொறுப்பு… அவங்க செலவுக்கு தேவையான பணத்த நாம மாசமாசம் குடுத்துடலாம்… மத்தபடி உங்களுக்கு எப்ப அவங்கள பாக்கணும்னு தோணாலும் தாராளமா நீங்க போய் பாத்துட்டு வரலாம்… அதுக்கு எல்லாம் நானோ அம்மாவோ எதுவும் சொல்ல மாட்டோம்…” என்றான் பெருந்தன்மையாய் அவன்.

என்னவோ அவளுக்கும் வேந்தனுக்கும் வாழ்க்கை தரவே பிறப்பெடுத்த வள்ளல் போல் இருந்தது அவனின் உடல்மொழியும் வாய்மொழியும். இதை மட்டும் அரசி கேட்டிருக்க வேண்டும். வயிற்றை பிடித்துக் கொண்டு உருண்டு புரண்டு சிரித்திருப்பாள். அதை நினைத்த மாத்திரத்தில் தென்றலுக்கும் கூட சிரிப்பு வந்தது. அதன் கூடவே மங்களாய் மசமசப்பாய் திரையரங்களில் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் பூக்குட்டியை தோளில் சுமந்தபடியே எதிர்பார்ப்பாய் இவளை பார்த்து நின்ற நேசனின் முகமும் எழுந்ததை தான் ஏனென்னு அவளால் இனம் கண்டுக் கொள்ள முடியவில்லை.

அவள் முகத்தில் புன்னகையை கண்டவன், அவளுக்கு சம்மதம் என்றே முடிவு கட்டிக் கொண்டான். “அப்போ மத்த விசயமெல்லாம் பெரியவங்கள பேச சொல்லட்டுமா..?” என்றான் அமர்த்தலாய்.

“சாரி மனோ… என் மகன் என்னைக்கும் என்னோட தான் இருப்பான்…” என்றாள் இறுகிய குரலில் தென்றல்.

“ஓஓ… உங்க அம்மா இருக்காங்களே பாத்துப்பாங்கனு நினைச்சேன்… உங்களுக்கு அதான் விருப்பம்னா நான் அம்மாகிட்ட பேசறேன்…” என்றான் யோசனை தாங்கிய முகத்தோடு.

“இல்ல மனோ… நீங்க எங்களோட எங்க வீட்டுலையே வந்து தங்கறதுக்கு ஒத்துகிட்டா கூட இந்த கல்யாணம் நடக்காது…”

“ஏன்…” என்றவனின் குரலிலும் முகத்திலும் ஒருங்கே கடினம் கூடியது.

“நமக்குள்ள என்னைக்கும் ஒத்து வராது… நீங்க தப்பா நினைக்கலைனா ஒன்னே ஒன்னு மட்டும் சொல்லறேன்… ஏழு வருஷம் லவ் பண்ணவங்கள எப்படி இத்தன சுலபமா பிரிய முடிஞ்சுது உங்களால… நீங்க சொல்லறத வச்சு பார்த்தா… குழந்த பிறந்ததுல இருந்து உங்க கூட இல்லைனு தெரியுது… எப்படி அந்த குழந்தை முகத்தை பாக்காம உங்களால இருக்க முடியுது… பூனை கண்ண மூடிட்டா உலகம் இருண்டுடாது… அம்மாக்கற வட்டதுக்குள்ள இருந்து கொஞ்சம் வெளிய வந்து பாருங்க… உங்களுக்குள்ள அந்த பழைய காதல் இருந்தா… உங்க மனைவிக்கும் இன்னும் கல்யாணம் ஆகாம இருந்தா திரும்ப சேர முயற்சி பண்ணி பாருங்க… அம்மாவுக்கு மகனா இருந்தா மட்டும் போதாது… மகளுக்கு நல்ல தகப்பானாவும் இருக்கணும்… சீ நீட்ஸ் எ ஃபாதார்…” அவள் சொல்ல சொல்ல, அவனின் உடலில் கடினம் கூடி இறுக்கத்தை காட்டியது.

“நான் வந்தது பொண்ணு பாக்க தானே தவிர… உங்க பிரசங்கத்த கேட்க இல்ல… எனி வே தேங்க்ஸ் ஃபார் யுவர் கன்சர்ன்…” என்றவன் அவள் அடுத்து பேசும் முன் எழுந்துப் போயே விட்டான். செல்பவனையே பார்த்திருந்தவளின் முகமெங்கும் தீவிர சிந்தனையின் ரேகைகள்.

                                            நேசம் ஒளிரும்…

    No comments yet.