ஆயிற்று, இன்றோடு தென்றல் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருபது நாட்களுக்கும் மேலாகி விட்டது. அன்று சிவநேசனின் தகவல்களை அரசி அனுப்பி வைத்ததோடு சரி. தென்றலை வற்புறுத்தி அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் எண்ணமில்லை அவளுக்கு. அப்படியே வற்புறுத்தினாலும், சரியென்று கேட்டுக் கொண்டு தலையாட்டுபவளா அவள். இதோ ‘இன்று பதில் சொல்வாள், நாளை சொல்வாள்…’ என ஒவ்வொரு நாளையும் நெட்டி தள்ளியது தான் மிச்சம். அவளோ கிணற்றில் போட்ட கல்லாய், அப்படியொரு சம்பவமே நடக்கவில்லை என்பதை போல் தான் நடமாடிக் கொண்டிருந்தாள். நேசனைப் பற்றியோ, திருமணத்தை பற்றியோ பெரிதாய் அலட்டிக் கொண்டதைப் போலவும் தெரியவில்லை. பொறுத்து பொறுத்துப் பார்த்து முடியாமல் அரசியே வலிய சென்று திருமணத்தைப் பற்றிய பேச்சை எடுத்த போதும், ‘டைம் கேட்டேனே…’ என்றதோடு முடித்துக் கொண்டாள் தென்றல்.
மதியம் உணவு இடைவெளிக்கான நேரத்தை நெருங்கி இருக்க, வங்கியிலும் சொற்ப ஆட்களே இருந்தனர். தென்றலின் இருக்கைக்கு எதிரே வந்து நின்ற அரசி, அவள் மேசையின் மீது கைகளை ஊன்றி முறைத்துப் பார்த்து, “ஓய் ஃபயரு…” என்றாள் கடுப்பாய்.
“என்னம்மா லாரி டயரு…” தலையை நிமிர்த்தாமல் வினவியவளின் கவனமெல்லாம் வேலையில் மட்டும் தான்.
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்ல…”
“வேற எதுக்கு குறைச்சலாம்…”
“என்ன தான் உன் நினைப்பு… கல்யாணம் கட்டறதா இருக்கீயா..? இல்ல காலத்துக்கும் இப்படியே சந்நியாசினியா இருக்கறேனு சத்திய பிரமாணம் எதுவும் பண்ணி தொலைச்சுட்டீயா..?” என்றாள் எரிச்சலும் கடுப்புமாய் அரசி.
“ஏன்..? பண்ணிக்க தான் போறேன்… அதுவும் சீக்கரமே… அதுல உனக்கென்ன சந்தேகம்…” என்றாள் அமர்த்தலான குரலில் தென்றல்.
தோழி அடுத்த கேள்வியை கேட்கும் முன், தன் முன்பிருந்த கணினியை அணைத்தவள், மற்ற பொருட்களையும் ஒழுங்குபடுத்தி விட்டு மதிய உணவிற்கான பையினை எடுத்தபடியே இருக்கையிலிருந்து எழுந்து கொண்டாள். சுற்றி இருந்தவர்களை பார்வையால் தொட்டு காட்டிவிட்டு அவள் முன்னே நடக்க, அரசியும் தனக்கான உணவை எடுத்துக் கொண்டு அவளுடன் இணைந்து நடந்த அரசிக்கு நுனி நாக்கு வரை உதித்துவிட்ட கேள்வியை அடக்குவது பெரும் சிரமமாய் தான் இருந்தது.
தென்றல் கை கழுவி வந்து உணவு மேசையில் அமர்ந்த நொடி அதற்காகவே காத்திருந்தவள் போல், “அப்போ சிவாவ மீட் பண்ணறதுக்கு அரேஞ்ச் பண்ணட்டுமா..? அவங்க வீட்டுக்கு போன் பண்ணி தகவல் சொல்லிடவா… வீட்டுக்கு வர சொல்லலாமா… இல்ல கோவில்… ரெஸ்டாரன்ட்னு பொதுவான இடத்துக்கு வர சொல்லலாமா…” என ஆர்வமும் அவசரமுமாய் பரபரக்க தொடங்கி இருந்தாள் அரசி.
“நான்தான் சொன்னேனே…” என தென்றல் ஆரம்பிக்கவும், “எது விசாரிக்க டைம் வேணும்னு சொன்னீயே அதுவா… இன்னும் எத்தனை நாளைக்குடி விசாரிப்ப… அவங்க சைட்ல இருந்து கேட்டுட்டே இருக்காங்க தென்றலு… நீ சொன்னா தானே நானும் அவங்ககிட்ட பேச முடியும்..? எத்தனை நாளைக்கு தான் அவங்க வெயிட் பண்ணுவாங்க…” இதமான வார்த்தைகளைக் கோர்த்து, தோழியின் மனதை கரைக்க முயன்றாள்.
“இந்தா… அவங்கள யாரு நான் பதில் சொல்வேனு வெயிட் பண்ண சொன்னது… அவ்வளவு அவசரம்னா வேற பொண்ண பாத்து கட்ட வேண்டியது தானே… கல்யாணம் என்ன, ஒரு தடவ பாத்து ஒரு மணி நேரத்துல முடிவு பண்ணற விசயமா..? கொஞ்சம் டைம் எடுக்க தான் செய்யும்… அதுவும் அறுபத்தி ஏழு வரன பத்தி விசாரிக்கறதுனா லேசு பட்ட காரீயமா..? அதுக்கு ஒரு இருபது நாள் கூட ஆகக் கூடாதா..?” என்றாள் சாதாரணமாய் தென்றல்.
“எது அறுபத்தி ஏழா..?” அரசி நெஞ்சை பிடித்தபடி வாயைப் பிளக்க,
“பின்ன… மேட்ரிமோனில செட் ஆனது பதினைஞ்சு… எனக்கு தெரிஞ்ச இடத்துல இருந்து வந்தது ஒரு ஆறு… நீ சொன்னது ஒன்னு… மீதி எல்லாம் ஜாதி சங்கத்துல இருந்து வந்த இரண்டாவது கல்யாணத்துக்கு பாக்கறவங்க லிஸ்ட்…” அவள் அடுக்கிக் கொண்டே போக, தலை சுற்றி மயக்கம் வரும் போலிருந்தது அரசிக்கு.
“என்னடி உளற…” என்றாள் அரை மயக்கத்தோடு பரிதாபமாய்.
“எது உளறுறனா… இது என் வாழ்க்கை மட்டும் இல்ல… என் பையனோட வாழ்க்கையும்… அப்போ நான் எவ்வளவு கவனமா இருக்கணும்… ஒரு பத்து சாய்ஸாவது இருந்தா தானே அதுல எது பெஸ்ட்னு சொல்ல முடியும்… சும்மா உன்ன மாதிரி ஒன்ன வச்சுட்டு இதுதான் உலகத்துலையே சிறந்ததுனு கொடி பிடிக்க சொல்லறீயா…” என்றாள் எகிறிக் கொண்டு தென்றல்.
“நீ இந்த அறுபத்து ஏழு பேர பத்தியும் விசாரிச்சு, பாத்து, பேசி, பழகி… அதுல ஒன்ன செலக்ட் பண்ணி இந்த ஜென்மத்துல கல்யாணம் நடந்த மாதிரி தான்…” என்றாள் அங்கலாய்ப்பாய் அரசி.
“யாரும் இங்க அவ்வளவு சலிச்சுக்க வேண்டாம்… முடிஞ்ச்… முடிஞ்ச்… அறுபத்தி ஏழுல பைனல் பண்ணது ஆறு… அந்த ஆறு பேரையும் இந்த வாரம் மீட் பண்ணி பேசி பாத்துட்டு தான் அடுத்து என்னனு முடிவு பண்ணனும்…” என்றாள் தென்றல்.
“எது ஆறா… எப்படி ஆறு பேரையும் ஒட்டுக்கா வர வச்சு ஒன்னவே பேசிட போறீயா..? இல்ல தனி தனியாவா..?” என்றாள் நக்கலாய் அரசி.
“ஒன்னா வர சொன்னா டைம் சேவ் ஆகும் தான்… ஆனா கல்யாண விசயத்துல அந்த மாதிரி ரிஸ்க் எல்லாம் எடுக்க முடியாது பாரு… தனி தனியா மீட் பண்ணா தான் அவங்களோட இன்டிஜுவல் கேரக்டர் என்னனு தெரியும்…” தென்றல் தீவிர குரலில் சொல்ல, இவள் விளையாடுகிறாளா இல்லை உண்மைக்குமே தான் சொல்கிறாளா என்று விளங்கவில்லை அரசிக்கு.
“சரிதான்… இந்த ஆறு பேர்ல சிவாவும் இருக்கான் தானே… அவன என்னைக்கு மீட் பண்ணலானு இருக்க…” என்றாள் அப்போதும் ஒட்டிக் கொண்டிருந்த நம்பிக்கையோடு அரசி.
“நானே இன்னைக்கு லஞ்ச் டைம்ல இத பத்தி உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்…” என பலமான பீடிகையோடு நிறுத்தி தோழியின் முகம் பார்த்தவள், “சாரி டூ சே திஸ்… நீ சொன்ன ஆளு பார்டர்ல கூட பாஸாகலம்மா…” என்றாள் கேலியாய்.
“எதே… அவனுக்கு என்ன குறை… அவன் வேண்டாங்கறதுக்கு ஒரு காரணம் சொல்லு பாப்போம்… அவன மாதிரி ஒரு நல்லவன கட்டிக்க கசக்குதா மேடத்துக்கு… பேசி கூட பாக்காம எப்படி நீ வேண்டானு சொல்லுவ…” படபடவென பொறிந்து தள்ளினாள் அரசி. சத்தியமாய் நேசனை மறுப்பாள் என்று அவள் கனவிலும் நினைக்கவே இல்லை. இந்த மறுப்பை ஏற்கவும் முடியவில்லை.
“ஒன்னுல்ல… ஒம்பது காரணம் சொல்ல முடியும் என்னால…” என்றாள் தென்றலும் வீம்பாய்.
“சொல்லேன்… அதையும் தான் கேட்போம்… நீ சொல்லற ஒன்னாவது உருப்படையான காரணமா இருக்கானு தான் பாப்போமே…” என்றாள் எள்ளலாய் அரசி.
“பீ பிராக்டிக்கல் அரசி… எனக்கு நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்… அதே மாதிரி குழந்தையோட இருக்கறவர நான் கல்யாணம் பண்ணிக்கறது தான் எனக்கு சேஃப்… நான் அவரு குழந்தைய நல்ல விதமா பாக்கணும் நினைச்சே அவரும் வேந்தன நல்லா பாக்க வாய்ப்பு அதிகம்… இது முதல் பாயிண்ட்… இரண்டாவது பாயிண்ட்… ஏற்கனவே இரண்டு குழந்தை இருக்கதால நான் குழந்த பெத்துக்கிட்டே ஆகணுங்கற எந்த அவசியம் இருக்காது…” என்றாள் தென்றல் நாடியில் கை வைத்து தீவிர குரலில்.
“பைத்தியக்காரி… பைத்தியக்காரி… இதெல்லாமாடி கல்யாணத்துக்கான க்வாலிப்பிகேஷன்… படுத்துறாளே என்ன..? ஏன்டி கட்டிகறவன் நல்லவனானு எல்லாம் பாக்க மாட்டீங்களாடி நீங்க..?”
“ஏன் நீ சொல்லற சிவா ஒருத்தர் தான் ஊரு உலகத்துல தேர்ந்தெடுத்த ஒரே உத்தமாரா..? இங்க நல்லவங்க கெட்டவங்கனு எல்லாம் யாரும் கிடையாது… சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி மாறிக்கறவங்க தான் மனுஷங்க…” என்றவள் குரலிலும் முகத்திலும் அப்படி ஒரு இறுக்கம்.
‘இந்த அர மெண்டலுக்கு பேசி புரிய வைக்க முடியாது… இப்ப என்ன பண்ணுவேன் நான்… இருந்து இருந்து இந்த சிவா இப்ப தான் கல்யாணத்துக்கு ஓ.கே சொல்லணுமா… அதுவும் கட்டுனா இவள தான் கட்டுவேணு நிக்கறானே… என்ன சொல்லி சமாளிப்பேன் அவன…’ மானசீகமாக புலம்பி தலையில் அடித்துக் கொண்டாள் அரசி. விசயம் தெரிந்த மறுநாளே அரசியை நேரில் சந்தித்து பேசி இருந்தான் நேசன். தினமும் அழைத்து, தென்றலின் பதிலையும் கேட்க தான் செய்கிறான். தென்றலுக்கான நேரத்தை கொடுக்க வேண்டுமென இருவருமே காத்திருக்க, அவளோ அவர்கள் தலையில் இடியை இறக்கினாள்.
“அவ்வளவு தானா… இன்னும் அதிசய காரணம் எதுவும் பாக்கி வச்சு இருக்கீயா..?” என்றாள் கடுப்பாய் அரசி.
“இல்லாம இருக்குமா… இதெல்லாம் விட ரொம்ப முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு…” என்று நிறுத்தி அரசியின் முகம் பார்த்தாள் அவள்.
“சொல்லும்… சொல்லி தொலையும்…”
“உன் அரும ப்ரெண்டு என்ன விட ஏழு மாசம் சின்னவரு… ஏன் நீயும் தான்… நியாயமா பாத்தா நீ என்ன அக்காங்கனு மரியாதையா கூப்பிடணுமாக்கும்…” என தென்றல் நீட்டி முழக்க,
“உன்ன… அப்படியே கழுத்த நெறிச்சு கொன்னா என்னனு வருது எனக்கு… இதெல்லாம் ஒரு காரணமாடி… அந்த தடிமாட பாத்தா உனக்கு ஏழு வயசு மூத்தவன் மாதிரி இருப்பான்டி… ஏழு மாசமெல்லாம் ஒரு கணக்காடி…” என்றாள் கடுப்பாய் அரசி.
“உண்மை தான்… அவர பாத்தா என் முன்னோர்களோட மூதாதையர் மாதிரி தான் இருக்காரு… அதுக்காக ஏழு மாசம் இல்லைனு ஆகிடுமா..?” என்று அநியாயமாய் நியாயம் பேசினாள் அவள்.
“உன்கிட்ட எல்லாம் மனுஷன் பேசுவானா… நீயெல்லாம் சரியான பைத்தியம் இல்ல… சரியாகாத பைத்தியம்… நீ செலக்ட் பண்ண இந்த ஆறு பேருமே ஒத்து வரலைனா அப்ப என்ன பண்ணுவ…” என்றாள் நப்பாசையோடு.
“வேற என்ன..? திரும்ப முதல இருந்து மாப்பிள்ளை தேடும் படலத்த தொடங்க வேண்டியது தான்… உனக்கு தெரிஞ்ச ஏதாவது நல்ல இடம் இருந்தா சொல்லுடி... வெயிட்டிங்ல வைப்போம்…” என்றவள் உண்டு முடித்து எழுந்துக் கொண்டாள்.
“வேண்டாம் தென்றல்… செம கடுப்புல இருக்கேன்… என்ன கொலைக்காரி ஆக்காம பேசாம போய்டு… சொல்லிட்டேன்…” என அரசி பல்லைக் கடிக்க, “ப்ரண்டோட லைப்ல கொஞ்சமாவது அக்கறை இருக்கா உனக்கு…” என தோளைக் குலுக்கிக் கொண்டு கிளம்பி விட்டாள் அவள்.
அத்தனை ஆசையும் எதிர்பார்ப்புமாய் தென்றலின் பதிலுக்காக. காத்திருப்பவனிடம் இதை எப்படி சொல்ல போகிறோம் என நினைத்த மாத்திரத்திலேயே மீண்டும் கண்களை இருட்டிக் கொண்டு மயக்கம் வந்தது அரசிக்கு.
– நேசம் ஒளிரும்…
No comments yet.