நெஞ்சம் – 16

தமிழ் வெண்பா | 19 Jan 2026 | Share

பூ குட்டியை மார்பில் கிடத்தியபடியே மல்லாந்து படுத்திருந்தவனின் அகத்தை நிறைத்தான் வேந்தன். அவனின் சில வார்த்தைகளிலேயே அவள் கைபேசியில் ஒலித்த பாடலுக்கான குரல் அவனுடையது தான் என கண்டு கொண்டான் நேசன். அந்த முகத்திலும் குரலிலும் தான் என்ன ஒரு வசீகரம், தெய்வீகம் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை. அப்போதே அள்ளிக் கொஞ்சத் தூண்டிய  மனதை அடக்க பெரும் பாடாய்தான் போனது.

‘எப்படி பிள்ளைக்கு அடிபட்டிருக்கும் … விளையாடும்போது தடுமாறி விழுந்திருப்பானா‌..? இல்ல வேற எதுவுமா..? அதனால் தான் பூக்குட்டி தடுமாறி விழ போனப்பவும் அவளுக்கு அத்தன கோபம் வந்துச்சோ..?’ அவனின் எண்ணங்களை மொத்தமாய் அவர்கள் இருவரும் குத்தகைக்கு எடுத்திருக்க,
அந்த எண்ணங்களுக்கு கடிவாளமிட்டு மடைமாற்ற நினைக்கவில்லை அவன்.

அவளின் வெட்டும் பார்வையும் அழுத்த பேச்சும் திமிராய் தெரியவில்லை. மாறாய் அதையும் தாண்டி அந்த விழிகள் சதிராடும் வலியை சரியாய் மொழிபெயர்க்க தெரிந்திருந்தது அவனுக்கு.

திரைப்படம் முடிந்து வெளியேறும் போது கூட அவனின் விழிகள் அவளை தேடியதே! அவளின் பிம்பம் விழிகளில் விழவில்லை என்றதும் சட்டென்று ஒரு ஏமாற்றம் பனி மூட்டமாய் மனதில் படர்ந்ததை தவிர்க்கவே முடியவில்லை.

வாகனங்களுக்கான நிறுத்துமிடத்தில் அவளைக் கண்ட நொடி, தெய்வத்தை கண்ட பக்தனாய் என்னமாய் பூரித்து நிறைந்துப் போனது அவன் உள்ளம். அந்த இடத்திலேயே அவளும் பிள்ளையும் மட்டும் தான் வந்திருக்கிறார்கள் என உறுதியும் பட்டுப் போனது. அவர்கள் கண்ணைவிட்டு மறையும் வரை பார்வையை எப்புறமும் திருப்ப அவன் தயாரில்லை.

ஆனால், அவள் தான் அவனைக் கண்டுக் கொண்டதாக தெரியவில்லை. முழுதாய் அப்படியும் சொல்லிவிட முடியாதோ! அவளின் பார்வை அவன் மீது படிந்தது தான். இருந்தும் கருத்திலோ கவனத்திலோ பதித்ததைப் போல தெரியவில்லை. ஒரு ஸ்நேக புன்னகை, குறைந்த பட்சம் தெரிந்த நபருக்கான முகப் பாவத்தை எதிர்பார்த்து ஏமார்ந்துப் போனது நேசனின் உள்ளம்.

தீடிரென தறிகெட்டு ஓடும் மனதை அடக்க தெரியவில்லை. இத்தனை நாளும் இல்லாது இப்பொழுது புதிதாய் ஏன் இந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றம் என அவனின் ஆழ்மனதிற்கும் தெரிந்தே தான் இருந்தது. இருந்தும் முறையாய் அதற்கு பெயர் சூட்ட பிரியப்படவில்லை அவன். மற்றான் மனைவி என்ற இடத்திலேயே நின்று மறுகிக் கொண்டிருந்தது அவனுள்ளம்.

‘அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா!
என்னோடு சேர வா முருகா!’

தன்னுள்ளே உழன்றுக் கொண்டிருந்தவனை களைத்தது அந்த குரல். அந்த முருகனே மழலாய் மாறி பாடுவதைப் போலிருக்க, பிள்ளையின் குரலோடு இணைந்தும் தென்றலாய் அவனை வருடியது அவளின் குரல்.

நிச்சயம் அவள் இத்தனை நன்றாக பாடக்கூடும் என அவன் எதிர்பார்த்திருக்கவில்லை தான். தன்னை மறந்து அவன் வேகமாய் எழ முயல, பூக்குட்டி அவன் மார்பில் இருந்து நழுவி கீழே சரிய தொடங்கி இருந்தாள். சட்டென சுதாரித்து சுயத்திற்கு வந்தவன், அவளை விழுந்து விடாதபடி பற்றி, மென்மையாய் அருகில் கிடத்தினான்.

எழுந்து அமர்ந்தவன், பாடல் ஒலித்த திசையில் கண்களை கூர்மையாக்கி இருளை ஊடுருவ, அறையின் வாயிலில்
மார்பின் குறுக்கே கைகளை கட்டியபடி மாதவன் நின்றிருப்பது கோட்டோவியமாய் தெரிந்தது.

குனிந்து பூக்குட்டியின் நெற்றியில் மென்மையாய் இதழ் ஒற்றியவன், அமைதியாய் அறையை விட்டு வெளியேறிவிட்டான். வெளியில் வந்தவன், தொலைதூர நிலவை வெறித்தபடி நின்றுவிட, அவனிடம் ஆயிரம் கேள்விகளை எதிர்பார்த்து காத்திருந்த மாதவன் ஏமாந்து தான் போனான்.

“என்னடா சிவா…” என்றான் ஆதங்கமும் ஆற்றாமையும் ஏமாற்றமுமாய்.

பதில் சொல்லாது அவனை திரும்பி பார்த்தவனின் பார்வை ஆழமாய் அவனை துளைக்க, ஆதி முதல் அந்தம் வரை அத்தனையும் தன்னைப் போல் ஒப்பித்திருந்தான் மாதவன்.

“இங்க அவங்க வந்து மூணு வருஷம் தான் ஆகுதாம்… விசாரிச்சு பார்த்த வரைக்கும் நல்ல விதமா தான் சொல்லறாங்க… ஆனா அந்த பொண்ணு பாஸ்ட் பத்தி இங்க யாருக்கும் தெரியல… சொந்த ஊர் ஏதோ தஞ்சாவூர் பக்கம் வில்லேஜ் போல… அங்க போய் விசாரிச்சா அவங்கள பத்தி இன்னும் டீடைல்ஸ் தெரியலாம்டா சிவா…” என்றான் யோசனையாய் மாதவன்.

“வேண்டாம்…” அழுத்தமும் உறுதியுமாய் ஒலித்த குரலில், புரியாமல் என்னவென்பதைப் போல பார்த்தான் மாதவன்.

“வேண்டாம்னா என்ன வேண்டாம்…” என்றவனுக்குள் முணுக்கென சிறு கோபம். மீண்டும் திருமணத்தை தான் வேண்டாம் என்கிறானா என்ற எண்ணம்.

“இனிமே அவங்கள பத்தி விசாரிக்க வேண்டாம்…” என்றான் அத்தனை கடின குரலில். ஏனோ அவளை தப்பிதமாக என்ன தோன்றவில்லை. அவளின் கடந்த காலம் எதுவாய் இருந்தாலும் அதைப் பற்றிய கவலையும் அவனுக்கு இல்லை. அதை மற்றவர்கள் ஆராய்வதையோ, தங்களுக்குள் விவாதிப்பதையோ அவன் விரும்பவில்லை. அது அவன் உயிராய் நேசிக்கும் அவனின் குடும்பமாகவே இருந்தாலும் சரி.

‘நீயென்ன பைத்தியமா..?’ என்பதைப் போல தான் இருந்தது மாதவனின் பார்வை.

“விசாரிக்க வேண்டாம்னா என்ன அர்த்தம்… இது கல்யாணம் சிவா… ஒன்னும் விளையாட்டு இல்ல…” என தொடர்ந்து ஏதோ சொல்ல வந்தவனை இடைவெட்டியது நேசனின் குரல்.

“நீ கல்யாணம் பண்ணிக்கணும்னு சொன்ன… நானும் சரினு சொல்லிட்டேன் இல்ல… இப்ப சொல்லறேன்… என்ன நடந்தாலும் என் கல்யாணம் தென்றல் கூட மட்டும் தான்… அதனால தான் விசாரிக்க வேண்டானு சொல்லறேன்…” என்றவனை எந்த வகையில் சேர்ப்பதென்றே தெரியாமல் முழித்தான் மாதவன்.

“டேய் என்னடா நீ… வச்சா குடுமி… செரச்சா மொட்டனு நின்னா என்ன அர்த்தம்… இன்னும் நான் தென்றல் பத்தி வீட்டுல யார்கிட்டையும் சொல்லலை… ஏன் நீ கல்யாணத்துக்கு சம்மதம்னு சொன்னத கூட இன்னும் சொல்லல… அத்தை வேற சொந்தத்துல இரண்டு இடத்துல பாத்து வச்சுருக்காங்க போல… இதுல உன் உடன்பிறப்பு வேற… அவ பங்குக்கு ஒரு பக்கம் பாத்துட்டு இருக்கா… நீ ஏதோ அந்த புள்ளையோட குரல அவ்வளவு ஆசையா கேட்டீயேனு அரசிக்கிட்ட கேட்டு வாங்கிட்டு வந்தா கட்டுனா இவள தான் கட்டுவேனு நிக்கற…” என்றான் கடுப்பாய் மாதவன்.

“இந்த பொண்ண கல்யாணம் பண்ணா என் லைப் நல்லா இருக்கும்னு நினைச்சு தானே இவ்வளவு தூரம் விசாரிச்சு வச்சுருக்க… அப்பறம் என்ன..?”

“அதுக்குனு… எடுத்தோம் கவுத்தோம்னு செய்ய முடியுமாடா சிவா… ஏற்கனவே ஒரு தடவ வலிக்க வலிக்க பட்ட காயமே ஆறாம ரணமா எல்லார் மனசுலையும் அப்படியே இருக்கு…” நேசனே வேண்டாம் என்று விட்டாலும் கூட, தென்றலைப் பற்றி விசாரிக்காமல் அப்படியே விட்டுவிட முடியாதே அவனால்.

“அதனால தான் சொல்லறேன் கல்யாணமே வேண்டாம்னு… யாரு என் பேச்ச கேக்கறீங்க…” அது தான் சமயம் என ஆரம்ப புள்ளிக்கே வந்து நின்றான் நேசன்.

“இது அவ்வளவு ஈஸி இல்லடா… அந்த பொண்ணு நல்ல பொண்ணாவே இருந்தாலும் கூட அத்த நம்ம ஆளுங்களானு பாப்பாங்க… சரி அத கூட விடு… அந்த பொண்ணுக்கு நாலு வயசுல ஒரு பையன் இருக்கான்டா… இதுக்கு அத்தையும் உன் பாசமலரும் ஒத்துக்கறது கஷ்டம் தான்…” இந்த கல்யாணத்திற்கான தடைகளை அவனுக்கு விளக்க முற்பட்டான் மாதவன்.

“அப்ப என்ன கூந்தலுக்கு அந்த பொண்ண பத்தி விசாரிச்சீரு…” என்றான் நக்கலாய் நேசன்.

“என்னடா பொசுக்குனு மாப்பிள்ளைய மரியாதை இல்லாம பேசுபுட்ட…” என்றான் நெஞ்சில் கை வைத்து மாதவன்.

“இன்னும் இதே மாதிரி ஏதாவது பினாத்திட்டு இருந்த அசிங்க அசிங்கமா வாயில வரும் சொல்லிட்டேன்… நீ வீட்டுல உள்ளங்க கைய புடிப்பீயோ கால புடிப்பீயோ… அது உன் சமத்து… அவ தான் என் பொண்டாட்டி… அதுக்கு நீ தான் வீட்டுல எல்லார் கிட்டையும் சம்மதம் வாங்கற… டாட்…” என்றான் உல்லாச குரலில் நேசன்.

என்னவோ பழைய நேசனை பார்த்துவிட்ட பரவசம் மாதவனுக்கு. “சரிடா யப்பா… வீட்டுல எல்லாரையும் நான் ஒத்துக்க வைக்கறேனே வை… அந்த பொண்ணும் இந்த கல்யாணத்துக்கு ஒத்துக்கணும் இல்ல…” என்றான் மாதவன் இடக்காய்.

“ஒத்துக்காம… அவள ஒத்துக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு…”

“ஓவர் கான்பிடன்ஸ் உடம்புக்கு ஆகாது தம்பி… எக்கு தப்பா விழுந்து மூஞ்சு மோரைய பேத்துக்காதீங்க…” என்றான் நக்கல் குரலில் மாதவன்.

“அந்த ஈர வெங்காயம் எல்லாம் எங்களுக்கு தெரியும் மாப்பிள்ள சார்… நீ கல்யாண வேலைய மட்டும் பாருங்க…” என அவன் முதுகில் வலிக்க தட்டியவன், “இன்னைக்கு உங்க வீட்டுல தங்க போறேனு போன… மறுவீட்டுக்கு போன மருமவன் கணக்கா இரண்டு மணி நேரத்துல முறுக்கிட்டு வந்துட்டீயாமே… என்ன விசயம்…” என லாவகமாய் பேச்சை மாற்றி இருந்தான்.

தன் வீட்டில் நடந்த அத்தனையும் சொன்னவன், “இப்பவே சொத்த பிரிக்கணும்னு நிக்கறானுகடா…” என்றான் கடுப்பாய் மாதவன்.

அமைதியாய் கேட்டுக் கொண்டவன், அதைப் பற்றி எதுவும் சொல்ல முற்படவில்லை. அதில் அவன் கருத்து சொல்ல எதுவுமில்லை என்று தான் எண்ணினான். அவன் அவர்களுக்கு எவ்வளவு நெருக்கமானவானாக இருந்தாலும், குடும்ப விசயமென்று வரும் போது அந்நியன் தானே!

தொடர்ந்து அவர்களின் பேச்சு மற்றவற்றிற்கு நகர்ந்திருந்தாலும், மாதவனின் மனதிற்குள் ஒரு சஞ்சலம். இத்தனை சாந்தமாய் அமைதியாய் இருக்கும் நண்பன், எத்தனை பிடிவாதக்காரன் அழுத்தக்காரன் என்பதை அவன் மட்டுமே அறிவான். அத்தனை பிடிவாத குணம் இல்லையென்றால் இத்தனையும் தாங்கிக் கொண்டு, தாண்டி இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்க முடியாது. அவன் இத்தனை பிடிவாதமாய், ‘தென்றல் தான் அவளின் மனைவி…’ என்று கூறி இருக்க, நடக்கவில்லை என்றால் என்ற பயம் மனதை கவ்வ தான் செய்தது. ‘இந்த திருமணம் சுமூகமாய் நடக்க வேண்டும்…’ என அந்த திருச்செந்தூர் ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதை தவிர, வேறு வழி இருக்கவில்லை அவனுக்கு.

நேசன் எத்தனைக்கு எத்தனை பிடிவாதமாய் அவள் தான் வேண்டும் என்று நின்றானோ, அத்தனைக்கு அத்தனை பிடிவதாய் அவன் வேண்டவே வேண்டாம் என்று நின்றாள் தென்றல்.

                          – நேசம் ஒளிரும்…

    No comments yet.