நெஞ்சம் – 15

தமிழ் வெண்பா | 16 Jan 2026 | Share

மயிலிறகு கீழே விழுந்தால் கூட சத்தம் எழுப்ப கூடும். அத்தனை அமைதியை தாங்கி இருந்தது அந்த இடம். ஆளுக்கு ஒரு மூலையில் நின்றிருந்த மூன்று மகன்களையும் தொட்டு, இறுதியாய் கடைசி மகன் மாதவனிடம் வந்து நிலைத்தது அவரின் பார்வை.

எச்சிலைக் கூட்டி விழுங்கி தொண்டைக் குழியை ஈரப்படுத்திக் கொண்டவர், “கடைசியா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க…” என்றார் அடர்ந்த குரலில்.

சில நொடிகள் அங்கே சூழ்ந்திருந்த விரும்பத் தகாத மௌனத்தைக் கலைத்தபடியே, “இதுல இன்னும் யோசிக்க என்னப்பா இருக்கு… உங்களுக்கும் வயசாகுது… கடைசிக் காலத்துல புள்ளைங்க பேர பசங்கனு அக்கடானு நிம்மதியா இருக்கத விட்டுட்டு இன்னமும் வயலு வரப்புன்னு இங்க கிடந்து ஏன் அல்லாடணும்…” தேன் தடவிய குரலில் அக்கறையாய் ஒலித்தது சீனியின் வார்த்தைகள்.

“அண்ணன் சொல்லறதும் சரிதானேப்பா… இன்னும் எத்தன நாளைக்கு அம்மாவும் நீங்களும் தனியா இங்க இருப்பீங்க… அம்மாவுக்கும் முன்ன மாதிரி முடியறதில்லை…” என்றான் நயமாய் வெங்கி. அவரின் இரண்டாவது புத்திரன்.

“நீ என்னப்பா சொல்லற…” என்றார் மாதவனைப் பார்த்து அவர். அண்ணர்மார்கள் இருவரின் முகத்திலும் எள்ளும் கொள்ளும் வெடித்தது.

“அவனே சின்னப்பய… அவன்கிட்ட கேக்க என்னப்பா இருக்கு… நாம எது நல்லதுனு சொல்லறோமோ அத சரினு கேட்டுக்கப் போறான்…” என்றான் வெடுக்கென வெங்கி.

சோபையாய் ஒரு புன்னகை அவரின் முகத்தில். “நமக்கு என்னைக்கும் அவன் சின்னப் புள்ள தான்… ஆனா பொண்டாட்டி புள்ளைங்கனு குடும்பமா நிமிந்து நிக்கறவன்கிட்டையும் ஒரு வார்த்த கேட்டுக்கணும் இல்லையா…” என்றார் அவர்.

“எனக்கு இதுல இஷ்டமில்ல ப்பா…” தேங்காய் உடைத்தது போல் பட்டென்று போட்டுடைத்தான் மாதவன். மகன் இதைத் தான் சொல்வான் என ஏற்கனவே கணித்திருந்தவரின் புன்னகைக் கீற்றாய் விரிந்தது.

கந்தவேல் – வள்ளிக்கண்ணு தம்பதிகளுக்கு முறையே சீனிவாசன், வெங்கடேஷன், பத்மாவதி, மாதவப் பெருமாள் என நான்கு பிள்ளைகள். அனைத்து கடமைகளையும் முடித்து, நால்வரின் வழியில் பேரன் பேத்தியும் எடுத்தாயிற்று. சில வருடங்களுக்கு முன்பு தான் மிகச் சிறப்பாய் சதாபிஷேகம் கூட கொண்டாடினார்கள் அந்த முதிர்ந்த தம்பதிகள். பெயருக்கு மற்ற பிள்ளைகள் நின்றிருந்தாலும், அதை முழுக்க முழுக்கப் பொறுப்பேற்று நடத்தியது மாதவனும் நேசனும் தான்.

எப்பொழுதும் வாய் தவறிக்கூட தனக்கு நான்கு பிள்ளைகள் என்று சொல்லிவிட மாட்டார் கந்தன். நேசனையும் சேர்த்து ஐவர் என்று தான் சொல்வார். வேலை, குடும்பம் என்று பெற்ற பிள்ளைகள் எல்லாம் தள்ளி இருக்க அருகில் இருந்து அரவணைத்துக் கொள்பவன் நேசன் தானே. 

நேசனின் தந்தையும் கூட அவருக்கு நல்ல பழக்கம் தான். ஒரே ஊர்க்காரர்கள். அது போதாதா பழக்கத்திற்கு! தந்தையை இழந்த பின் வயதுக்கு மீறிய பொறுப்போடு நடந்து கொள்ளும் நேசனிடம் அவருக்கு எப்பொழுமே தனி வாஞ்சை உண்டு. அது நாளடைவில் வளர்ந்ததே அன்றிக் குறையவே இல்லை. 

மகளுக்கு மட்டும் முன்பே மண முடிக்காமல் இருந்திருந்தால், ஒரு வயது பெரியவள் என்றாலும் பரவாயில்லை என நேசனுக்குத் தான் மண முடித்துக் கொடுத்திருப்பார் கந்தன். அவர் கேட்டு அவன் மறுத்திருக்கவும் மாட்டான் என்பது திண்ணம். 

இதோ மூத்த பிள்ளைகள் இருவரும், சொத்தை விற்று தங்கள் பாகத்தைப் பிரித்துக் கொடுக்கச் சொல்லி அத்தனை பிடிவாதமாய் நிற்கிறார்கள். அதனால் தான் மாதவனையும் கூடக் கிளம்பி வர சொல்லி இருந்தார் கந்தன்.‌ நேசனையும் அருகமர்த்தி விவாதிக்கத் தான் பிரியப்பட்டது அவரின் அன்புக் கொண்ட நெஞ்சம். ஆனால், அது இன்னொரு விவாதத்திற்கும் சண்டைக்கும் தான் அடிகோலுமே தவிர, சுமூகத்திற்கு வழி வகுக்காது.

மாதவனும் அதே எண்ணத்தில் தான் நின்றிருந்தான். இத்தனை பெரிய விசயத்தைப் பற்றிப் பேசும் போது நேசன் இல்லாதது எதையோ இழந்ததைப் போல் இருந்தது. அவனிடம் எதையும் சொல்லிக் கொள்ளாது வந்தது வேறு மனதை உறுத்தியது.

“இஷ்டமில்லனா என்ன அர்த்தம்டா மாதவா…” என்றான் வெங்கி அதட்டலாய்.

“இப்போ ஊரு உலகத்துல நடக்காத எத நாங்க சொல்லிட்டோம்… எப்படியும் அப்பா காலத்துக்குப் பிறகு பிரிச்சுக் குடுக்கப் போற சொத்து தானே… அத எங்க தேவைக்குப் இப்பவே பிரிங்கனு சொல்லறோம்… இதுல தப்பு என்ன இருக்கு மாதவா… இன்னைக்கு அவசர தேவைக்கு பயன்படாத சொத்து நாளைக்கு எதுக்குங்கறேன்…” என்றான் தன்மையாக சீனி.

“அப்படி என்ன அவசர தேவைங்கறேன்… நீ வீடு கட்டணும்னா ஆபிஸ்ல லோன் போட்டு கட்டு… அதுக்குனு அப்பாம்மா இருக்கற வீட்ட விக்க சொல்லுவீயா நீ..?” பொறுமையாய் இருக்க நினைத்தாலும் வார்த்தைகளில் வீரியம் கூடித்தான் போனது.

அண்ணன்கள் இருவருக்குமே அரசு வேலை. நல்ல சம்பாத்தியம் தான். பெரியவன் சீனிக்கு மதுரையில் வேலை. அங்கேயே அவசரமாய் இடம் வாங்கி வீடும் கட்ட துவங்க, கையிருப்புத் தெரியாமல் அகல கால் வைத்ததில் பெரும் பணத் தட்டுப்பாடு. ஒரு வருடத்திற்கு முன்பு, மாதவனும் நேசனும் ஒன்றாய் புதுவீடு கட்டியிருக்க, அதைக் கண்டு வீம்புக்கென்று அவனாய் இழுத்து விட்டுக் கொண்டது அது.

அவனாவது ஒரு விதத்தில் பரவாயில்லை எனலாம். நடுவுள்ளவன் வெங்கி, வரவுக்கு மீறி தாம்தூம் என்று ஆடம்பர செலவுகளை செய்துவிட்டுக் கடனாளி ஆகி நிற்கிறான். இருப்பதை எல்லாம் விற்று அவன் பங்கை கொடுத்தாலும் கூட கடன் மொத்ததையும் முழுதாய் அடைக்க முடியாது.

“இங்காருங்க தம்பி… நீங்க தலையெடுத்தப்ப நாங்க எதுவும் தடுத்து பேசுனோமா..? இப்போ நாங்க கொஞ்சம் நிமிர நினைக்கறப்ப நீங்க இப்படி முட்டுக்கட்டையா நிக்கறீங்களே..?” என்றாள் அங்கலாய்ப்பாய் பெரிய அண்ணி மல்லிகா.

இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் போல, மாதச் சம்பளக்காரனான கணவனைவிட சொந்த தொழில்காரனான  கொழுந்தன் விரைந்து முன்னேறுவதாய் ஒரு எண்ணம் மல்லிகாவுக்கு. சிறு பொறாமையும் கூட. அது ஒரு விதத்தில் உண்மையும். ஆனால், அதன் பின்னால் இருக்கும் உழைப்பும் சங்கடங்களும் நஷ்டங்களும் அசௌகர்யங்களும் அவர்கள் அறியாதது.

“இங்க இருந்து போகாமையா அங்க நிறையுது… தொழில் தொடங்க அந்த வெறும் பயலுக்கு ஏது காசுங்கறேன்… இங்கயிருந்து யாரும் குடுக்கலனு சொல்லுங்க பாப்போம்…” என்றார் இளக்காரமாய் மல்லிகா.

“தேவையில்லாம எங்க அண்ணன எதுக்குக்கா இழுத்து பேசறீங்க… குடுக்கலைனு யாரும் சொல்ல போறதில்ல… அதே போல வருஷம் திரும்புறதுக்குள்ள அத வட்டியோட எங்கண்ணன் திருப்பிக் குடுத்துடுச்சுணும் உங்களுக்குத் தெரியும்ல… அப்பறம் எதுக்கு அதப்பத்தி பேசறீங்க…” இதுவரை அமைதியாய் வேடிக்கைப் பார்த்தபடி நின்றிருந்தவளுக்கு அண்ணனைப் பேசவும், அப்படி நிக்க முடியவில்லை.

அவளை அலட்சியமாய் பார்த்தபடியே, “வீசினக் கையும் வெறும் கையுமா வந்தவளுக்கு இம்புட்டு ஏத்தம் ஆகாதுடி ஆத்தா… உன் அண்ணன்காரன் பவுசு எங்களுக்குத் தெரியாதா..? வெறும் பயலுக்கு இம்புட்டு காசு எங்க இருந்து வருதாம்… இங்கயிருந்து தாட்டி விடாமையா அங்க நிறையுது… வெள்ளாம கணக்க எல்லாம் யாரு பாக்கறா… உன் அண்ணன்காரன் தான… நாங்க கூடுதுனு தான் கண்டோமா..? இல்ல குறையுதுனு தான் கண்டோமா..?” என்றார் விடாமல் மல்லிகா.

“வரும் போது ஒன்னுமில்லாம வந்தவ தான்… ஆனா உங்க எல்லாருக்கும் செஞ்சத விடவே எங்கண்ணன் எனக்கு நெறைக்க செஞ்சுருக்கு…” ஆத்திரத்தில் உதடு துடிக்க, அண்ணனை பேசிவிட்டதில் அவளின் இமைகளை நிறைத்தது கண்ணீர்.

“விழி அமைதியா இரு… நான் பேசிக்கிறேன்…” அதட்டலாய் மனைவியிடம் மாதவன் சொல்ல, அவனை முறைத்தபடியே என்றாலும் அடுத்த வார்த்தை பேசவில்லை அவள்.

“இப்ப பிரச்சனை சொத்து பிரிக்கறத பத்தி மட்டும் தானே… அத பேசுவோம்…” என்றான் அழுத்தமாய் அண்ணனிடம்.

“அதத்தானே பேசறோம் தம்பி… வெள்ளாமை கணக்கு மட்டும் என்ன காந்திக் கணக்கா..?” என்றார் நொடிப்பாய் மல்லிகா.

ஆளாளுக்கு ஒன்று பேச, வார்த்தை வளர்ந்ததே தவிர விசயம் ஒரு முடிவுக்கு வருவதாயில்லை. மாதவனைப் போலவே வெங்கடேஷனின் மனைவி சுந்தரிக்கும் சொத்தைப் பிரிப்பதில் அவ்வளவாய் உடன்பாடில்லை. நிச்சயம் இதையும் கணவன் கரைத்து விடுவான் என்று அவளுக்குப் புரிந்திருந்தது.

“சரிப்பா நீங்க சொல்லற மாதிரியே எல்லாத்தையும் வித்து உங்களுக்குப் பங்கு பிரிச்சு குடுத்துடறேனு வச்சுப்போம்… நானும் உங்க அம்மாவும் எங்க இருக்கதாம்…” என்றார் மூத்த மகனிடம் கந்தன்.

“உங்களுக்கு யார்கூட இருக்க விருப்பமோ அவங்க கூட இருங்கப்பா… உங்கள நாங்க பாக்காமலா போய்ட போறோம்…” என்றான் சீனி.

“நீ சொன்னா சரியா தான்ப்பா இருக்கும்…” என்றவர், “நீ என்ன கண்ணு சொல்லற…” என்றார் மனைவியிடம்.

“ம்ம்ம்… நல்லா பாத்துப்பானே உங்க மகன்… வேலைக்குப் போன இந்த பதினைஞ்சு வருஷத்துல பெத்தவங்களுக்குனு ஒத்த பைசா நகத்தல… பேசறான் பேச்சு… இங்கருந்து போயி வருஷம் பத்தாகுது… நாளு கிழமையினா வயசானவங்க ஒத்தையில இருப்பாங்களேனு எட்டி பாக்க துப்பில்ல… வந்துட்டான்… வக்கனையா பேசிகிட்டு.‌..

ஏன்டா இருக்கற எல்லாத்தையும் வித்துப் பணத்த உங்ககிட்ட குடுத்துட்டு ஐஞ்சுக்கும் பத்துக்கும் அந்த மனுஷன உங்ககிட்ட கை நீட்ட சொல்லறீங்களா..? 

இது அம்புட்டும் ஒத்த மனுஷனா அவரு சம்பாதிச்சது… அத யாருக்கு குடுக்கணும்னு அவரு தான் முடிவு பண்ணனும்… நாக்கு மேல பல்ல போட்டு நடுவீட்டுல உக்காந்துட்டு வெள்ளாமைக்கு கணக்கு கேட்க எந்தச் சிறுக்கிக்கும் துப்பு இல்ல… சொல்லிட்டேன்…

இந்தச் சொத்துல இருந்து ஒத்த பைசா உங்க நாலு பேருக்கும் வராது… அத்தனைக்கும் பாத்திய பட்டவங்க எங்க பேர பசங்க தான்… அதுவும் எங்க காலத்துக்குப் பிறகு தான்… இப்ப வந்த சோலி முடிஞ்சுதுனா வீட்ட பாக்க நடைய கட்டுங்க எல்லாரும்…” சொல்லி முடித்ததும் முந்தானையை உதறி இடுப்பில் சொருகியபடியே அடுக்களைப் பக்கம் நகர்ந்து விட்டார் வள்ளிக்கண்ணு. உதடுகளில் உறைந்த புன்னகையோடு மனைவியைப் பார்த்திருந்தார் கந்தன்.

“என்னப்பா அம்மா இப்படிப் பேசிட்டு போவுது…” என்றான் ஆதங்கமாய் சீனி.

“அம்மா சொல்லறதும் சரிதானேப்பா… எங்களுக்கு இங்க தான் தோது… வேற எந்த இடமும் சரிப்படாது… இந்தா மாதவனே வீடு கட்டினதுல இருந்து கூப்பிட்டு தான் இருக்கான்… எங்களுக்குத் தான் போவ ஆவல… 

பதினைஞ்சு வருஷமாவுது மூத்த புள்ளனு நீ தலையெடுத்து… இந்தா ஐஞ்ச குடு… பத்த குடுனு இதுவரைக்கும் கைநீட்டி உங்கிட்ட நின்னதில்ல நான்… இனிமேலும் எனக்கு அப்படி நிக்க ஆவாது… உன் சம்பாத்தியத்துக்கு எப்படி நான் கணக்கு கேக்கறதில்லையோ அதே மாதிரி வெள்ளாம கணக்க உன் பொண்டாட்டி கேக்கறதும் சரி கிடையாது…

பொண்டாட்டிய பேசவிட்டு அவங்களுக்குத் துணையா நம்ம பின்னாடி நிக்கறது எல்லாம் சரிதான்… ஆனா அவங்க பேசறது சரிதானானு பாக்கணும்… இல்ல, சங்கடம் மொத்த குடும்பத்துக்கும் தான்… பாத்துச் சூதானமா பொழைச்சுக்க…” என்ற கந்தனும் எழுந்து வெளியே சென்றிட, வெறுப்போடு தம்பியைத் தான் பார்த்தனர் அண்ணன்கள் இருவரும்.

பெரியவர்கள் இருவரும் எல்லாவற்றையும் எல்லாரையும் யோசித்துப் பேசி இருக்க, அவர்கள் மாதவனுக்கு சாதமாக பேசியதாகவே தோன்றியது மற்ற இருவருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக அத்தனையும் நேசனின் தூண்டுதலால் நடப்பதைப் போல அவர்களுக்குள் ஒரு பிரம்மை. மொத்த சொத்தையும் தங்கை ஒருத்தியே அனுபவிக்க வேண்டும் என அவன் காய் நகர்த்துவதாய் எண்ணம். அதனால் தான் யாருமில்லா பெரியவர்களிடம் அவன் அதீத அன்பாய் நடந்து கொள்கிறான் என்பது அவர்களின் கணக்கு. அந்த எண்ணமே அவர்களுக்கு, நேசனின் மீது தேவையில்லாத துவேஷத்தை வளர்த்தது.

                          

                         – நேசம் ஒளிரும்…

    No comments yet.