நெஞ்சம் – 14

தமிழ் வெண்பா | 27 Dec 2025 | Share

திரையரங்கத்தின் வாயிலில் தென்றல் தனது இருச்சக்கர வாகனத்தை நிறுத்த, அதன் பிரமாண்டத்தில் பெரிதாய் விரிந்தது வேந்தனின் குட்டிக் கண்கள். அவளும் பிள்ளையும் மட்டுமே கிளம்பி வந்திருந்தனர். காயம் பட்டதிலிருந்தே ஒரு சுணக்கம் வேந்தனிடம். அவளும் அவனை உற்சாகப்படுத்த என்னென்னவோ செய்து பார்த்துவிட்டாள், எதுவும் வேலைக்கு ஆகவில்லை.

குணவதி பேரனிடம் அதீத கண்டிப்பு காட்டினாலும், அடுத்தச் சில மணி‌ நேரங்களில் ‘பாட்டி…’ என்றபடி அவரிடம் தான் இழைவான் அவன். அதுதானே குழந்தையின் குணமும். ஆனால், நேற்றைய தினத்திலிருந்து அப்படியில்லை, அவரைக் கண்டாலே தென்றலிடம் போய் ஒன்றினான். அவளை விட்டு இம்மியும் அசையவில்லை. பிள்ளையின் கண்களில் தெரிந்த மிரட்சியில் குணவதிக்கு கூட என்னவோ போல் ஆகிவிட்டது.

“புள்ள தான் சுணங்கி கிடக்கான் இல்ல… அவனுக்குப் பிடிச்ச மாதிரி எங்கையாவது கூட்டிட்டு போயேன் தென்றலு…” என அவரே சொல்லவும் தான், அந்த யோசனையே வந்திருந்தது தென்றலுக்கு. அதே நேரம், இந்தக் காயத்தோடு வெளியே அழைத்துச் செல்ல வேண்டுமா என‌ சிறு தயக்கமும் இருந்தது தான். அப்படித் தான் ‘முஃபாசா – தி லைன் கிங்’ படத்திற்குக் கிளம்பி வந்திருந்தனர். அதன் முதற்பாகம் அத்தனை பிடித்தம் வேந்தனிற்கு. மாதத்தில் இரண்டு முறையாவது அவனுக்கு அதைப் பார்த்துவிட வேண்டும்.

வேந்தனின் கண்களில் தெரிந்த மிரட்சியே அவர்கள் இருவரும் தனித்து வர போதுமானதாய் இருந்தது. அது போக, குணவதிக்கு இப்படியான படங்களில் நாட்டமில்லை. வேறொரு நாள் அவருக்குப் பிடித்த மாதிரியான படத்திற்கு அழைத்து வர வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள் அவள்.

அரசியையும் அவளின் பிள்ளைகளையும் உடன் அழைத்துவர ஆசை தான். இன்று சனிக்கிழமையாய் இருக்க, அரைநாள் அவளுக்குப் பணி இருந்தது. பெயருக்கு அரை நாள் தான் என்றாலும், வேலையை அப்படியே போட்டுவிட்டு  நேரத்துக்கு வெளியே வர முடியாது எனத் தென்றலுக்குத் தெரியும்.

இதோ வாசலில் அந்தப் படத்திற்கான மிகப் பெரிய கட்அவுட்டை கண்டதுமே பல மடங்கு உற்சாகம் தொற்றிக் கொண்டது வேந்தனை. ‘ம்மா… சிம்பாமா…’ என்றபடியே இறங்கி ஓட முயன்றான் அவன். அவனைத் தடுத்துப் பிடித்தபடியே வண்டியை அதற்கான இடத்தில் நிறுத்துவதற்குள் ஒரு வழி ஆகிப் போனாள் தென்றல்.

“அது சிம்பா இல்ல… அவங்க அப்பா முஃபாசா…” பிள்ளைக்கு விளக்கம் சொன்னபடியே அவனை அள்ளிக் கொண்டவள், “உள்ளே போய்ச் சீட்ல உக்கார வரைக்கும் கீழ இறங்க கூடாது…” என்றபடியே அவர்களுக்கான அரங்கை நோக்கி நடக்கத் தொடங்கி இருந்தாள். தொடர்ந்த அவனின் அடுக்கடுக்கான சந்தேகங்களுக்குச் சலிக்காது விளக்கம் சொல்லியபடியே வந்தவளையும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

அந்தத் திரையரங்கம் மூன்றாய் பிரிக்கப்பட்டு, மூன்று வெவ்வேறான திரைப்படங்கள் அன்றைய தினம் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுக்கான நுழைவுச்சீட்டை அவள் ஏற்கனவே இணையத்தில் முன்பதிவு செய்திருந்தாள்.

கொறிப்பதற்காகப் பிள்ளைக்குப் பிடித்த வகையில் சில நொறுக்கு தீனிகளை வாங்கிக் கொண்டவள் மீது, வேகமாய் ஓடி வந்து மோதி தடுமாறி விழப் போனாள் பூக்குட்டி.

தோளில் பிள்ளை இருக்க, ஒரு கை நிறையத் திண்பண்டங்கள் இருக்க, நொடிக்கும் குறைவான நேரத்தில் திண்பண்டங்களைத் தவற விட்டு, கீழே விழுந்து விடாதபடிக்கு பிள்ளையைப் பிடித்து நிறுத்தி இருந்தாள் தென்றல்.

“ஏய் குட்டி… பப்ளிக் பிளேஸ்ல இப்படித் தான் ஓடி வருவீயா நீ..?” தென்றல் அதட்டல் தொனியில் கேட்டு பூக்குட்டியை முறைத்துப் பார்க்க, பதிலுக்கு அவளும் கண்களைப் பெரிதாக்கி அவளை முறைக்க முயன்றாள்.

அவளின் பாவனையில் கீற்றாய் ஒரு புன்னகை தென்றலின் முகத்தில். ‘அச்சோ… எவ்வளவு க்யூட் இந்தக் குட்டிப் பொண்ணு…’ எனக் கொஞ்சிக் கொண்டது அவளின் மனது.

“சாரி ஆன்டி… தெரியாம பாப்பா தட்டிவிட்டுட்டா… எல்லாமே வேஸ்ட் ஆகிடுச்சு… ரியலி சாரி ஆன்டி… நான் தான் பாப்பாவ துரத்தினேன்… அதான் வேகமா ஓடி வரேனு இப்படிப் பண்ணிட்டா…” அவளின் பின்னோடே ஓடி வந்த அகரன் அவசரமாய் அவளிடம் மன்னிப்பையும் கேட்டு, விளக்கமும் கொடுத்தான்.

“உங்க பேரண்ட்ஸ் எங்க..? இப்படித் தான் உங்கள தனியா விடுவாங்களா அவங்க..?” இப்பொழுதும் அதட்டல் தான் அவளிடம்.

“மாமா… அங்க டிக்கெட் எடுக்கறாங்க… எங்கள அங்கேயே தான் நிக்கச் சொன்னாங்க… நாங்க தான்… அப்பவும் மாமா ஓடக் கூடாதுனு சொன்னாங்க தான்…” அவசரமாய் நேசனுக்கு ஆதரவுக் கரம் நீட்டினான் அகரன். அவன் கைகாட்டிய திசையில் நகர்ந்தது தென்றலின் பார்வை.

சில அடிகள் தொலைவில் நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான வரிசையில் நின்றிருந்தான் நேசன். அவனுக்கு முன்னே இன்னும் இருவர் நின்றிருக்க, அவனின் பார்வையும் இவர்களைத் தான் மொய்த்தது.

சட்டென்று அவள் யாரென்று தெரிந்து போனது அவனுக்கு. சில நொடிகள் தான் என்றாலும் பெரிய மெனக்கெடுதல் எதுவுமின்றி, அவளின் கைபேசியில் ஒலித்த பாடலும், அவளின் பாதங்களும், அந்த நேரத்தில் அவளின் பக்கவாட்டு தோற்றமும் நேசனின் இதயத்தில் ஆழப் பதிந்திருந்தது. அவளின் முகத்தைக் கூடச் சரிவரப் பார்த்திராத போதும் ‘அவள்தான்…’ என நொடியில் கண்டு கொண்ட தன்னை நினைத்து அவனுக்கே வியப்பு தான். அவள் தோளில் சாய்ந்திருந்த பிள்ளையின் தலையில் கட்டைப் பார்த்துமே அவளின் நேற்றைய பதற்றமும் அவசரமும் எதற்காக இருக்குமென்று புரிந்து போனது.

அவசரமாய் அந்தப் பிள்ளையின் நலனைத் தான் ஆராய்ந்தது அவனின் விழிகள். தாயின் கழுத்தை கட்டிக் கொண்டிருந்தவன் விழி விரித்து ஆர்வமாய் மற்ற இரு சிறுவர்களையும் தான் பார்த்திருந்தான். கண்கள் இடுங்க நேசனையே பார்த்திருந்தவளுக்கும் அவனை எங்கேயோ பார்த்திருக்கிறோம் என்ற எண்ணம் தான். ஆனால், எங்கே என்று தான் சட்டெனப் பிடிபடவில்லை‌.

நுழைவுச்சீட்டை வாங்கிக் கொண்டு, அவர்களிடம் விரைந்தவனின் விழிகளிலேயே ஒரு இறைஞ்சுதல். “சாரிங்க… ரியலி சாரி… சொல்ல சொல்ல கேக்காம பசங்க ஓடி வந்துட்டாங்க…” அவர்களை நெருங்கும் முன்பே மன்னிப்பை யாசித்திருந்தான் நேசன். வேகமாய் அவனை நெருங்கி கைகளைப் பிடித்துக் கொண்டான் அகரன்.

“ஏன் மிஸ்டர்… பிள்ளைங்கள அழைச்சுட்டு வந்தா மட்டும் போதுமா… பத்திரமா பாத்துக்க வேண்டாமா..? விழுந்திருந்தா என்னாகறது…” படபடவெனப் பொரிந்தவளின் குரலில் உண்மையான அக்கறை இருந்தது.

கண்களைக் கவரும் வகையில் பளபளத்த அந்த டைல்ஸ் தரையைப் பார்த்தவனுக்கும் அதே எண்ணம் தான். பூக்குட்டி ஓடி வந்த வேகத்திற்குக் கீழே விழுந்திருந்தால், பெரிதாய் இல்லையென்றாலும் நிச்சயம் இரத்தம் வருமளவிற்குக் காயம் ஏற்பட்டிருக்கும்.

அவள் குரலுயர்த்தி நேசனை அதட்டுவது அந்தக் குட்டிக்கு பிடிக்கவில்லை போலும். முகத்தைச் சுழித்தபடியே, “நான் தானே ஓடி வந்தேன்… மாமாவ ஏன் திட்டறீங்க… திட்டாதீங்க… மாமாவ திட்டுனா எனக்குப் பிடிக்காது…” அதிகாரமாய்க் கட்டளையாய் சொன்னாள் பூக்குட்டி.

‘பாருடா… கோபத்தை… இவங்க மாமாவ திட்டக் கூடாதாமே… இத்துணோண்டு இருந்துட்டு இதுக்குக் கோபத்த பாரு…’ என மனதிற்குள் சடைத்துக் கொண்டவள், “நீ ஓடி வந்து என்னைத் தள்ளிவிடப் பாத்த இல்ல… அப்ப நான் உங்க மாமாவ தான் திட்டுவேன்…” என்றாள் அவளுடன் மல்லுக்கு நிற்பதைப் போல்.

“பூக்குட்டி அப்படியெல்லாம் பேசக்கூடாது… நீதானே தப்பு… ஆன்டிகிட்ட சாரி கேளு…” என்றபடியே அவளை அள்ளிக் கொண்டான் நேசன்.

“முடியாது… அந்த ஆன்டி பேட்… ஃபர்ஸ்ட் என்னைத் திட்டினாங்க… அப்பறம் மாமாவ திட்டினாங்க… நான் சாரி கேக்க மாட்டேன்…” அடமாய் அவன் கைகளில் இருந்தபடியே தென்றலை முறைத்துப் பார்த்து சொன்னாள் பூக்குட்டி.

பதிலுக்குத் தென்றலும் கண்களை உருட்டி அவளை முறைத்தபடியே ஏதோ சொல்ல வர, “ஏங்க அவ சின்னப் பிள்ளை தானே… நான் இனிமே பத்திரமா பாத்துக்கறேன்ங்க… ப்ளீஸ் விடுங்க…” என்று சமாதானக் கொடியை பறக்கவிட முயன்றான் நேசன்.

“எங்க அம்மா ஒன்னும் பேட் இல்ல… உங்க மாமா தான் பேட்…” அவனின் குரலுக்கு இடையே அழுத்தமாய் ஒலித்து மல்லுக்கு நின்றது வேந்தனின் குரல். அதைக் கேட்டதும் பூக்குட்டியின் பார்வை முறைப்பாய் வேந்தனிடம் பாய, சளைக்காது வேந்தனும் பதில் பார்வை பார்த்தான்.

“வேந்தா… இப்படி எல்லாம் பேசக்கூடாது…” அதட்டல் இல்லையென்றாலும் அழுத்தமாய்த் தென்றல் சொல்ல, வேகமாய் அவர்களிடம் இருந்து முகம் திருப்பிக் கொண்டான் அவன்.

‘அச்சோ… எவ்வளவு சமத்து… அம்மா சொன்னா அப்படியே கேட்டுக்கறானே… நமக்குத் தான் அதட்ட கூட வர மாட்டேங்குது…’ என நினைத்தவன், “பிள்ளைக்கு என்ன..?” என்றான் வேந்தனின் காயத்தைப் பார்வையால் வருடியபடியே.

அதற்குப் பதில் சொல்லாது, “பிள்ளைங்கள வெளிய அழைச்சுட்டு வந்தா மட்டும் பத்தாது… அவங்கள எப்படி நம்ம கன்ட்ரோல்ல வச்சுக்கணும்னும் தெரிஞ்சுக்கணும்…” அவள் அழுத்தமாய்ச் சிறு அதட்டலாய் சொல்ல, “இனிமே தெரிஞ்சுக்கறேங்க…” என்றான் நேசன் பவ்வியமாய்.

பதிலுக்குப் பதில் பேசி வார்த்தையாடுபவனாய் இருந்தால் பேசி சண்டையிடலாம். சட்டென்று பணிந்து போகிறவனிடம் என்னவென்று கோபத்தை இழுத்துப் பிடிப்பது?

“உங்க மேல எல்லாம் அழுக்காகிடுச்சே… நீங்க வேணா போய்க் கிளீன் பண்ணிட்டு வர்றீங்களா..? நான் பிள்ளைய வச்சுக்கறேன்…” என்று உதவிக் கரம் நீட்டினான் நேசன். முழங்காலுக்கு மேலே இருந்த கறையில் படிந்த அவனின் பார்வை, கீழிறங்கி அவளின் பாதங்களைத் தொட்டது. பெருவிரலில் மிகச் சிறியதாய் ஒரு பேண்டேஜ். அடுத்த விரலில் சிவப்பு கல் பதித்த மெட்டி மினுக்க, அனிச்சை செயலாய் நேசனின் விழிகள் சுற்றிலும் அவளின் கணவனைத் துளாவியது.

‘எங்கே அவன்..? ஒரு வேளை வரவில்லையோ..? எப்படிப் பிள்ளையையும் மனைவியையும் மட்டும் தனியே அனுப்புவான்..? கொஞ்சமும் பொறுப்பில்லாதவன்…’ நொடியில் அடுக்கடுக்காய் கேள்விகள் அவன் மனதில். அவளைப் பற்றி, தான் ஏன் இத்தனை யோசிக்கிறோம் என்ற எண்ணம் கூட அவனுக்கு இல்லை.

வேந்தனுக்காக அவள் வாங்கி இருந்த ஐஸ்கிரீம் அவளின் புடைவையைப் பாழ்படுத்தி இருந்தது. அவளின் விழிகளும் அதை ஆராய்ந்தபடியே, “இட்ஸ் ஓ.கே… நான் பாத்துப்பேன்…” என்றபடியே திரும்பி நடக்க முற்பட்டவளை தடுத்து நிறுத்தியது, “நான் பணம் தந்திடறேனே…” என்ற நேசனின் குரலில் குற்றவுணர்வும் சிறு மன்றாடலும்.

வேகமாய்த் திரும்பி அவனை வெட்டும் பார்வை பார்த்தாள் தென்றல். அவன் குரலில் திமிரோ அலட்சியமோ இல்லை. உண்மையான வருத்ததுடன் தான் சொல்கிறான் என்று அவளுக்கும் தெரிந்தது.

ஆனால் அந்த வார்த்தைகள் அவளின் ஆழ்மனதில் அமிழ்ந்து கிடந்த பல நினைவுகளை விசிறி அடித்திருந்தது. அவள் முகம் நொடியில் இறுகிப் போக, “பணத்தால எல்லாத்தையும் சரி பண்ணிட முடியாது மிஸ்டர்…” என்றவள் அவனின் பதிலை எதிர்பாராது அவர்களைக் கடந்து சென்றிருந்தாள்.

“பணத்தால எல்லாத்தையும்  சரி பண்ணிட முடியாதா… ஆனா இங்க பணத்துக்காக எதையும் செய்யத் தயங்காத மனுங்களுங்கும் எத்தனையோ பேர் இருக்காங்க…” கசப்பாய் அவளின் முதுகுக்குப் பின்னால் முணுமுணுத்தது நேசனின் உதடுகள். அதையும் தாண்டி அவளின் கடின முகமும் குரலின் காட்டமும் அவனை என்னவோ செய்தது. ‘என்ன கேட்டுட்டேன் இப்போ… எங்களால ஏற்பட்ட நஷ்டத்துக்குக் காசு தரேனு சொன்னேன்… அதுதானே நியாயமும்… அதுல என்ன தப்பு… அதுக்கு எதுக்கு இப்படி மூஞ்ச திருப்பிக்கிட்டு போகணும்…’ என்ற எண்ணமே அவனின் மனதில் திரும்பத் திரும்ப ரீங்காரமிட்டு அவனின் இயல்பை தொலைக்கச் செய்திருந்தது.

                                 நேசம் ஒளிரும்‌..‌.

    No comments yet.