இலக்கில்லாது இருள் பிரியும் வானையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான் நேசன். எதிரே அவனைத் தொட்டுவிட முயன்று தோற்று கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன அலைகள்.
நேற்றைய இரவு மாதவன் பேசிச் சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் யாரிடமும் செல்லாமல் கிளம்பி வந்துவிட்டான். இலக்கில்லாமல் பயணித்த அவனின் வாகனம் இறுதியாய் வந்து நின்ற இடம் திருச்செந்தூர். மனம் வெதும்பி குழம்பி தவிக்கும் போதெல்லாம் அன்னையின் மடியென அவன் நாடி வருவது இங்கே தான்.
நேற்றைய தினமும் அவன் இங்கே வந்தான். அப்பொழுதெல்லாம் அவனின் மனதில் எந்த வேண்டுதலும் இல்லை. ஆனால், இப்பொழுது மனம் முழுக்க நிறைத்திருந்தது ஒரே ஒரு எண்ணம் மட்டும் தான். எப்படியாவது இந்த இக்கட்டில் இருந்து அவனைக் காப்பாற்ற சொல்லி அந்தக் கந்தனிடமே சரணடைந்தது அவனுள்ளம். வேண்டியதை (கேட்பதை) எல்லாம் கொடுப்பவனா அந்த அழகன். வேண்டியதை (தேவை) கேளாமலே கொடுப்பவன் அந்தக் கள்ளன்.
ஆங்காங்கே திரள் திரளான மக்கள் கூட்டம். அவன் மட்டும் தனித்து விடப்பட்டதைப் போன்ற பிரம்மை. என்னென்னவோ யோசனை. கடவுளை உள்ளே சென்று தரிசிக்கும் எண்ணம் கூட இல்லாதவனாய் அமர்ந்திருந்தான். உள்ளத்தில் இருப்பவனை உள்ளே சென்று என்ன தரிசிப்பது என நினைத்துவிட்டான் போல.
உதித்த சூரியன் உச்சியைத் தொட்டும் அவனிடம் எந்த மாற்றமும் இல்லை. தனிமை அமிழ்ந்து போன பழைய நினைவுகளை எல்லாம் அனல் கங்குகளாய் அவன் தலையில் அள்ளிக் கொட்டியது.
‘இதோ… இதே… இதே… இடத்தில் தான்…’ நினைத்த நொடி, பெரும் கேவல் ஒன்று தொண்டைக் குழிக்குள் சிக்கிக் கொண்டு, யாரோ இதயத்தை இறுக்கிப் பிடிப்பதைப் போலிருந்தது.
‘ஏன் என்னை யாருக்குமே புரியவில்லை..?’ என்று கத்தி கதறி வெடிக்க வேண்டும் போல் இருந்தது. முடியாதே!
எத்தனை ஆசைகள், எத்தனை கனவுகள் எல்லாம் எல்லாம் ஒரே நாளில் சிதைந்ததே! சிதைந்ததை மீண்டும் சீர்படுத்த முடியுமா என்ன? திரும்ப ஆசைப்படவே அவனுக்கு அத்தனை பயமாய் இருந்தது. இதில் எங்கே கல்யாணத்தைப் பற்றி யோசிக்க?
குடும்பம் குடும்பமாய், மனைவி மக்கள் என்று செல்பவர்களைக் காண அவனுக்கும் ஆசையாகத் தான் இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும், தனக்கு அது இல்லையென்று முடிவே செய்து விட்டான்.
அவனின் அறைக்குள் நுழையும் போது முகத்தில் அறையும் வெறுமை, அதற்குப் பயந்து தானே இருளடைந்த பின் வீடு போய் விடியும் முன் ஓடி வந்து விடுகிறான். யார் யாரோ பிள்ளை பிறந்திருக்கிறது என்று ஆசை ஆசையாய் இனிப்புகளைக் கொடுத்து கொண்டாடும் போது அவனுக்கும் ஏக்கமாகத் தானே இருக்கிறது. ஆனால் அதற்காக எல்லாம் திருமணம் செய்து கொண்டுவிட முடியுமா என்ன?
எல்லாவற்றுக்கும் மேலானது தாம்பத்தியம் அல்லவா. திருமணம் என்றான பின் அது இல்லாமல் எப்படி? அதை நினைத்த மாத்திரத்தில் உள்ளம் மெலிதாய் நடுங்கியது. அந்த நடுக்கம் உடலிலும் கூட விரவி பரவியது.
உயிர் நண்பனே ஆனாலும் அவனிடம் கூட என்னவென்று சொல்வது? அவரவருக்கான அந்தரங்கம் அழகானது மட்டுமல்ல ரகசியமானதும் கூட. அது ரகசியமாய் இருக்கின்ற வரையிலும் தான் அழகும் கூட. அடுத்தவருக்கு அதைக் கடை பரப்ப நினைத்த மாத்திரத்தில் அதன் அழகியல் அழிந்து போகும்.
விடாது இசைத்த கைப்பேசி அவனின் எண்ணங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது.
மாதவன் தான் அழைத்திருந்தான். ஒரு வித முகச் சுழிப்போடு அதைப் பார்த்தவனுக்கு எடுக்க மனம் வரவில்லை. ஒரு முறை முழுவதும் அடித்து ஓய்ந்து மீண்டும் அலறியது அந்தக் கைப்பேசி.
‘இவனை… இப்போ என்னவான் இவனுக்கு… இன்னும் என்ன தான் வேணுமான்… மனுஷன கொஞ்ச நேரம் கூட நிம்மதியா தனியா இருக்க விடாம…’ மனதிற்குள் அவனை வறுத்தபடியே, கைப்பேசியை இயக்கி “ஹலோ…” என்றவனின் குரலில் அப்பட்டமாய் அந்த எரிச்சலின் நெடி வீசியது.
“மாமா…” மறுபக்கம் கூவியது பூக்குட்டி. உசாராய் மகளின் கைகளில் போனை திணித்துவிட்டு நகர்ந்திருந்தான் மாதவன்.
‘பிள்ளையை எப்படி மறந்தேன்…’ நினைத்தபடியே தலையில் தட்டிக் கொண்டான் நேசன்.
தினம் தினம் ஷோரூமில் பூக்குட்டியை பார்த்து விடுவான் தான். ஆனால் இப்படி நாள் முழுவதும் அவளுடனே கழிக்கும் வாய்ப்பை அவன் தவற விட்டதே இல்லை. ஆனால், இன்று நினைவுகள் அவனை அழுத்த, பிள்ளை அங்கிருப்பதைக் கூட மறந்து கிளம்பிவிட்டான்.
காலையில் எழுந்து வீடெல்லாம் தேடி மாமனை காணவில்லை என்றதும் ஒப்பாரியை தொடங்கி விட்டது அந்தக் குட்டி. ஒரு வழியாய் சமாளித்துச் சரிக்கட்டி அலைப்பேசியை அவள் கைகளில் திணித்திருந்தான் மாதவன்.
“சொல்லுங்க தங்கம்…” குழைந்தது அவன் குரல்.
“நீ என்கிட்ட பேசாத மாமா… என்ன விட்டுட்டு எங்க போன… காலையிலையே நான் உன்ன தேடுனேன் தெரியுமா..? காணும்னு அழுதிட்டேன்… அம்மா திட்டறா…” வரிசையாய் புகார் படித்தது பூக்குட்டி.
“அச்சோ… பூக்குட்டி என்ன தேடனீங்களா..? மாமா உங்களுக்குப் பிடிக்குமேனு தான் சிக்கன் வாங்க வந்தேன்… வாங்கிட்டுச் சீக்கரம் வந்துடறேன் சரியா..?” அவசரமாய்ச் சமாதான கொடியைப் பறக்க விட்டவன், அவள் குரலை கேட்ட நொடியிலேயே எழுந்து வண்டியை நோக்கி நடக்கத் தொடங்கி விட்டான்.
“நான் இன்னும் சாப்பிடவே இல்ல தெரியுமா..? உன்னால தான்..!” என்றது மூக்கை உறிஞ்சிக் கொண்டு பிள்ளை. இப்படி அவள் ஆரம்பித்தாலே பெரிதாய் எதற்கோ அடி போடுகிறாள் என்று அர்த்தம்.
“அடடா… என் கண்ணுகுட்டி சாப்பிடலையா..? இப்ப சமத்தா அம்மா தரதச் சாப்பிடுவீங்களாம்… மாமா வந்ததும் நானே என் தங்கத்துக்குப் பிரியாணி செஞ்சு தருவேனாம்… சரியா..?”
“மாட்டேன்… சாப்பிட மாட்டேன்…” அடமாய் ஒலித்தது அவளின் குரல்.
“ஏனாம்..?” இங்கிருந்தே அவளைக் கொஞ்சிக் கொண்டது அவனின் மனது.
“அது அப்படித் தான்… படத்துக்குக் கூட்டிட்டு போறேனு சொன்னா தான் சாப்பிடுவேன்…”
“என் பட்டு தங்கத்துக்குப் படம் பாக்கணுமா… கூட்டிட்டுப் போய்ட்டா போச்சு…”
“பிராமிசா..?” நம்பாது கேட்டது அந்த வாண்டு.
அலைப்பேசியில் பேசினாலும் இந்நேரம் கண்கள் விரிய ஒரு கரத்தை நீட்டிய படிதான் அவள் கேட்டிருப்பாள் என்பதை அறிந்தவன் புன்னகை பெரிதாய் விரிந்தது.
“காட் பிராமிஸ்…” என்றவன் வலக்கரமும் தன்னைப் போல் தொண்டைக் குழியைத் தொட்டு மீண்டது.
“என்ன படத்துக்குப் போகணும் தங்கத்துக்கு…”
“சிம்பா படத்துக்குப் போகலாம்… அண்ணா ப்ரண்ட் எல்லாம் போய்ட்டு வந்தாங்களாம்… நாமளும் போகலாம்… குரங்கு பாட்டு எல்லாம் பாடுச்சாம் தெரியுமா..?” எனக் கதையளக்க தொடங்கி விட்டது அந்தக் குட்டி. ‘ம்ம்ம்’ கொட்டி கதை கேட்டவனின் மற்ற எண்ணங்கள் எல்லாம் பின்னுக்குச் சென்றிருந்தது.
அவன் வீட்டிற்குச் சென்ற போது பூக்குட்டிக்கு பிடித்ததை மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் பிடித்ததாய் பார்த்து பார்த்து வாங்கிச் சென்றிருந்தான். அவன் வீட்டிற்குள் நுழைந்த போது அன்னையைத் தவிர யாருமில்லை.
“எங்கம்மா பிள்ளைங்க…” கேட்டபடியே வாங்கி வந்தவற்றை அன்னையிடம் கொடுத்தான் நேசன்.
“நீயும் இல்லையா அதான் விழி பிள்ளைகள தூக்கிட்டு அவ மாமியா வீட்டுக்கு போயிருக்கா… அவங்களுக்கும் பேரப் புள்ளைங்க கூட இருக்க ஆசை இருக்கும்ல… மதியான சாப்பாட்டுக்கு வந்துடுவாக…” என்றபடியே அவன் வாங்கி வந்தவற்றைப் பிரித்துப் பார்த்தவர் மலைத்து தான் போனார்.
“நாலு பேருக்கு ஏன்டா இத்தனைய வாங்கிட்டு வந்திருக்க… இதெல்லாம் ஆக்கி இறக்கவே பொழுது சாஞ்சு போவுமே…” என்றார் விசாலம்.
“நமக்கு மட்டும் இல்லம்மா… அத்தைக்கும் போன் பண்ணி சமைக்க வேண்டாம்னு சொல்லிட்டேன்… இன்னைக்கு இங்கயிருந்தே சமைச்சு குடுத்து விட்டுடுடலாம்…” என்றான் நேசன்.
மாதவன் வீடும் இங்கிருந்து பக்கம் தான். பெண் ஒன்று ஆண் மூன்று என்று நான்கு பிள்ளைகளைப் பெற்றிருந்தாலும் அவர்களெல்லாம் திருமணம் முடிந்து வேலை, பிள்ளைகளின் கல்வி எனப் பெற்றோரை விட்டு ஓரடி விலகி தான் இருந்தனர்.
எப்போதும் அவர்களைத் தனித்து விட்டு சாப்பிடவே மனசு வராது நேசனுக்கு. இப்படியான நாட்களில் இங்கிருந்து தான் அவர்களுக்குச் சாப்பாடு செல்லும். அதுவும் அவர்களுக்குப் பிடித்ததாகச் சாப்பிடும் பக்குவத்தில் செய்து கொடுத்து விடுவான் நேசன். அந்த அன்பிலேயே அவன் மீதான வாஞ்சையும் நேசமும் கூடித் தான் போயிற்று அவர்களுக்கு.
“நீ ஒத்தையில எதுவும் செஞ்சுட்டு இருக்காதம்மா… கைலிய மாத்திட்டு வந்து நானே சமைக்கறேன்…” என்றபடியே மாடிக்கு படி ஏறி விட்டான் அவன்.
சொன்னது படியே அன்றைய சமையல் அத்தனையும் அவனுடையது தான். இடையில் மனைவியையும் பிள்ளைகளையும் தன் வீட்டில் விட்டுவிட்டு வந்த மாதவனும் அவனுக்கு உதவியாய் சமையலில் இணைத்துக் கொண்டான்.
அவனிடம் ஒரு வார்த்தை பேசவில்லை நேசன். ‘பேசவில்லை என்றால் போ…’ என மாதவனும் கண்டு கொள்ளவில்லை. இன்னமுமே அவன் சம்மதம் சொன்ன விசயத்தை வீட்டினருக்கு சொல்லவில்லை மாதவன். எல்லாமே கைகூடி வந்த பிறகு சொல்லிக் கொள்ளலாம் என்று இருந்துவிட்டான்.
கிட்டத்தட்ட ஒரு விருந்தையே தயார் செய்திருந்தனர் நேசனும் மாதவனும்.
“சாப்பாட குடுத்துட்டு விழியையும் பிள்ளைங்களையும் அழைச்சுட்டு வரேன்டா…” என்றவன் சாப்பாட்டோடு கிளம்பி விட்டான்.
சொன்னது போலவே அழைத்தும் வந்துவிட்டான். அனைவரும் உண்டு முடித்து ஓய்வாய் இருக்க, ‘படத்துக்கு…’ என்று இனிதாய் ஆரம்பித்து வைத்தாள் பூக்குட்டி.
“ஈவினிங் ஷோ ஓ.கே தான… எல்லாருக்கும் டிக்கெட் புக் பண்ணிடவா…” என நேசன் அனைவருக்கும் பொதுவாய் கேட்க, மாதவனின் முகம் யோசனைக்குச் சென்றது. இன்னமுமே நேரடியாய் பேசி இருக்கவில்லை அவன். கோபம் என்பதைவிட நண்பனின் மீது அத்தனை ஆதங்கம் அவனுக்கு.
“இல்லடா சிவா… பிள்ளைங்கள அழைச்சுட்டு நீ மட்டும் போய்ட்டு வா… எனக்கு வீடு வரைக்கும் கொஞ்சம் வேலை இருக்கு… இன்னைக்கு நானும் விழியும் அங்க தங்கறதா இருக்கோம்… நைட்டு பிள்ளைங்க இங்கையே இருக்கட்டும்… நாளைக்குக் காலையில நானே வந்து அழைச்சுக்கறேன்…” என்றான் மாதவன்.
யோசனை தாங்கிய அவனின் முகமும் குரலும் எதுவோ சரியாகப் படவில்லை நேசனுக்கு. “என்னடா எதுவும் பிரச்சினையா..?” என்றான் இத்தனை நேர பிடிவாதத்தை விட்டு நேரடியாக நண்பனிடம்.
“தெரியலடா சிவா… ஆனா அம்மா சொன்ன விதத்த வச்சு பாத்தா ஏதோ பஞ்சாயத்து மாதிரி தான் தெரியுது… பாப்போம்… எனக்கு எதுனாலும் உன்கிட்ட தானே வந்து நிக்கப் போறேன்…” என்றான் இலகுவாய் மாதவன்.
விசாலமும் மூட்டு வலியால் வரவில்லை என்று சொல்லிவிட, மனதின் ஓரம் உறுத்தல் இருந்தாலும் பூக்குட்டிக்காக ‘நாளைக்கே வேறொரு படத்திற்குக் குடும்பத்தோடு போனால் போயிற்று…’ என்ற எண்ணத்தோடு பிள்ளைகளை மட்டும் அழைத்துக் கொண்டு கிளம்பி விட்டான் நேசன்.
அதே தியேட்டரில் அதே படத்திற்கு வேந்தனோடு வந்திருந்தாள் தென்றல். அவனின் நேரமோ காலமோ கிரகாச் சாரமோ என்னவோ? எதிர்பாரா விதமாக அவனுக்கும் அவளுக்கும் முதல் சந்திப்பே முட்டிக் கொண்டது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.