கிழக்கு வெளுத்து நேரம் ஏழை தொட்டு விட்டது. இன்னும் அம்மாவும் பிள்ளையும் எழுந்த பாடில்லை. மருந்தின் வீரியத்தில் பிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, ஆதுரமாய் மகனின் தலை கோதியபடியே படுத்திருந்தாள் தென்றல். ஒரு விரல் நீண்டு மென்மையாய் அவனின் காயம் வருடியது. இரவெல்லாம் பொட்டு உறக்கமில்லை. இப்படி அவளின் உறங்காத இரவுகள் எண்ணில் அடங்காதவை.
சின்ன வயதிலிருந்தே அவள் அப்படித் தான். அவள் உறங்க வேண்டுமென்றால் நிசப்தமும் இருளும் அவளைச் சூழ்ந்திருக்க வேண்டும். சின்னச் சத்தமும் துளி வெளிச்சமும் கூடச் சட்டென்று அவளின் உறக்கத்தைக் கலைத்துவிடும் வல்லமை பெற்றவை.
பருவமெய்தும் காலம் வரை தந்தையின் கையணைப்பிற்குள் உறங்கி எழுந்து பழக்கப்பட்டவள் அவள். ஒரே நாளில் சட்டென்று எல்லாம் மாறிப் போனது. அவளின் படுக்கை தனியானது. மீறி ‘அப்பாவின் பக்கத்தில் தான் படுப்பேன்…’ என்று அடம் பிடித்த போது, தாயிடமிருந்து முதுகு கன்றி சிவக்கும் அளவிற்கு நன்றாய் வாங்கிக் கட்டிக் கொண்டாள். அடித்த தாயை விட, தடுக்காத தந்தை தான் அவளுக்குப் பேரதிர்ச்சியைத் தந்தார். அன்று கண்கலங்க கையறு நிலையில் அவர் வெளியேறிய காட்சி இன்றும் அவள் மனதை அறுக்கும்.
இரவில் தனிமையை வலிய பழக்கப் படுத்திக் கொண்டாள். இருந்தும், சிறு சத்தமும் அவளை எழுப்பி விடும். இதோ பக்கத்து அறையில் தான் பெற்றவர்கள் உறங்குகிறார்கள் தெரியும். ஆனால், தந்தையின் கைக்குள் கிடைக்கும் பாதுகாப்பு உணர்வு, இப்போது இல்லை. அதுவே அவளின் ஆழ்ந்த உறக்கத்தைக் கெடுத்தது. நாட்கள் கரைய அதுவே அவளின் பழக்கமாகவும் மாறிப் போனது.
வேந்தனுக்காக என்று முடிவெடுத்து விட்டாள் தான். இனி அதில் மாற்றமில்லை. ஆனால், திருமண வாழ்வில் தன்னால் ஒன்றிப் போக முடியுமா எனப் பயமாய் இருந்தது. அவள் மறக்க நினைத்த, மறந்து விட்டதாய் நினைத்த கடந்த காலத்தின் எச்சத்தை இனி தினம் தினம் எதிர் கொள்ளும் சூழல் வரலாம். இந்த எண்ணமே இரவெல்லாம் அவளை உறங்க விடாது அலைக்கழித்தது. இன்னுமே மனம் ஒருநிலைப் படவில்லை. சரி வருமா என்ற எண்ணமெல்லாம் இல்லை. சரி வந்தே ஆக வேண்டும். அதைச் சரியாய் அமைத்துக் கொள்ள என்ன செய்யலாம் என்ற எண்ணம் மட்டும் தான்.
ஒருக்களித்துச் சாற்றி இருந்த அறையின் கதவை பார்த்தபடியே, காலை சமையலுக்கான வேலையைக் கவனித்துக் கொண்டிருந்தார் குணவதி. இத்தனை நாளில் மகளும் பேரனும் இத்தனை நேரம் உறங்கியதாய் அவருக்கு நினைவில்லை. இனம் புரியாத சஞ்சலம் ஒன்று மனதை அறுத்தது.
தென்றல் எழும் போதே வேந்தனையும் எழுப்பி அழைத்து வந்துவிடுவாள். இருவரும் ஒன்றாய் குளித்து, பூஜையில் அமர்ந்து திருப்புகழ் பாடி முடித்துத் தான் வெளியே வருவார்கள். வேந்தனின் குரலில் வீடே தெய்வீக களை பெற்றிருக்கும்.
அதன்பின் குணவதி தயாரித்த காஃபியோடு அவர்களின் காலை தொடங்கும். அன்னையும் மகளும் வளவளத்த படிதான் அன்றைக்கான சமையலை செய்வார்கள்.
இன்று என்னவோ இன்னமுமே அவர்கள் இருவரும் எழுந்து வராதது, குணவதிக்கு எதையோ இழந்ததைப் போல் இருந்தது. மனதார சொல்ல வேண்டுமென்றால், வேந்தனின் குரல் ஒலிக்காது அவரின் மனதை வெறுமை சூழ்ந்தது. அதை அவருமே உணர்ந்தார் தான். ஆனால், என்ன செய்துவிட முடியும்?
மற்ற சாதாரண நாட்களைப் போல் என்றால், அதட்டி உருட்டி மகளை எழுப்பி விடலாம். ஆனால் நேற்றைய அவளின் வார்த்தைகளுக்குப் பிறகு? மகளுக்கும் அவருக்கும் பெரிய இடைவெளி விழுந்து விட்டதைப் போல் தோன்றியது.
இதைச் செய்யட்டுமா என மகள் அனுமதி கேட்கவில்லை. யாரோ மூன்றாம் மனிதரைப் போல இதைச் செய்யப் போகிறேன் என அறிவிக்கிறாள். அவரும் இதைச் சொல்லி தானே தலை தலையாய் அடித்துக் கொண்டார். அப்பொழுதெல்லாம் அவரின் வார்த்தைக்குச் சின்னதாகவாவது செவி சாய்த்திருப்பாளா? போராடிப் பார்த்து ஓய்ந்து போன பின், இன்று யாரோ சொல்ல தலையாட்டி பொம்மை போல் கேட்டுக் கொள்வாளா என்று ஆதங்கமாகக் கூட இருந்தது.
மகள் மணமுடித்துக் கணவன் குழந்தை என வாழ்வதில் அவருக்குமே பெரும் மகிழ்வு தான். ஆனால், ஆரம்பத்தில் அவர் பார்த்த பாதி வரனுக்கும் மேல் பிள்ளையைப் பார்க்க தயாராய் இல்லை. வேந்தனை அவரே வளர்ப்பதில் அவருக்கு எந்தச் சங்கடமும் இல்லை. ஆனால், தென்றல் அல்லவா முடியவே முடியாது என்று ஒரே பிடியில் நின்றுவிட்டாள்.
அதெல்லாம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பான கதை. ஆனால் மகள் பேரனின் நடமாட்டம் இல்லாத வீட்டை இப்பொழுது அவரால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. மகள் தன்னை நிர்க்கதியாய் விட்டுவிட மாட்டாள் என்று அவருக்கும் தெரியும். ஆனால், இந்தத் தனிமை. அவரால் அந்த எண்ணம் தந்த அழுத்ததைத் தாளவே முடியவில்லை.
ஒரு கட்டத்திற்கு மேல் இது தான் தனது வாழ்க்கை. மகளும் பேரனும் இனி என்றும் தன்னோடு தான் என்று ஆழமாய் நம்பி இருந்தது அவரின் மனது. திடீரென்று அப்படி இல்லையென்றால், சட்டென்று ஏற்க முடியவில்லை.
மணி எட்டை தொட்டும் அவர்கள் இன்னும் எழுந்தபாடில்லை. மகள் வேலைக்குச் செல்ல வேண்டுமே என்ற எண்ணம் தோன்ற, “தென்றல்… இன்னும் எழுந்துக்கலையா நீ…” என்று வெளியில் இருந்தே குரல் கொடுத்தார் குணவதி.
அவளிடம் இருந்து எந்தப் பதிலும் இல்லை என்றதும் மீண்டும் ஒரு முறை சத்தமாய், “வேலைக்கு லேட் ஆகுதுடி… மதியத்துக்குச் சாப்பாடு கட்டணுமா வேண்டாமா..?” என்றார் அவர்.
கதவை முழுதாய் சாற்றிய படியே வெளியே வந்தவள், “ஏன் ம்மா இப்படிக் கத்தற… பிள்ள தூங்கிட்டு தான இருக்கான்… இரண்டு நாளைக்கு வேலைக்கு லீவு சொல்லி இருக்கேன்…” வெகு சாதாரணமாகச் சொல்லியபடியே வீட்டின் பின் பக்கம் நகர்ந்துவிட்டாள் தென்றல்.
வாடகை வீடு என்றாலும் தனி வீடு அது. கிராமமும் நகரமும் இல்லாத இடமாய்ப் பார்த்து தான் வீடு பிடித்திருந்தாள் தென்றல். நகரம் தான் வசதி என்றாலும், வாகனங்களின் இரைச்சலும் புழுதியும் குணவதிக்கு சேராது என்று அலைந்து தேடி இந்த வீட்டைப் பிடித்திருந்தாள் அவள்.
சுற்று சுவரோடு சேர்ந்த வாகனங்கள் நிறுத்துவதற்கான சின்ன வராண்டா, இரண்டு படுக்கையறை, சின்னதான வரவேற்பறை, இரண்டு ஆட்கள் நின்று புழங்கும் அளவிற்கான சமையலறை என்று அளவான வீடு. பொதுக் கழிப்பறையோடு பின்கட்டு, மிகச் சிறிய அளவிலான தோட்டம் என அவர்களுக்கு அது தாராளம்.
ஒரு அறையில் மட்டுமே கழிப்பறை வசதி இருக்க அதை அன்னைக்காக ஒதுக்கிக் கொடுத்துவிட்டு, வெளியில் இருக்கும் கழிப்பறையைத் தான் அவளும் பிள்ளையும் பயன்படுத்தினார்கள்.
இரவில் அடிக்கடி எழுந்து கொள்வார் குணவதி. வயது ஏற ஏற இந்த உபாதையும் சேர்ந்து கொண்டது. அப்படியான நேரங்களில் இரவில் அடிக்கடி அவர் பின்கட்டுக்கு எழுந்து செல்ல முடியாது என்று தான் அப்படி ஏற்பாடு செய்திருந்தாள் தென்றல்.
அவளின் வார்த்தைகளில் அன்பிருக்காது, குழைவிருக்காது. ஏன் சில சமயங்களில் அது தீயாய் கூடத் தகிக்கும். நேற்றைய இரவு போல. ஆனால், அவளின் சின்னச் சின்னச் செயல்களிலும் அவருக்கான அக்கறை இருக்கும். அவருக்கு எது சௌகரியம் என்பதில் கவனமிருக்கும்.
தென்றல் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு வர, குழம்பியோடு காத்திருந்தார் குணவதி. அமைதியாய் அதை வாங்கிக் கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தவளும் எதுவும் பேசவில்லை. அவரும் எதுவும் கேட்கவில்லை. நேற்றைய வார்த்தைகள் அதிகப்படி என அவளுக்கே தெரியும். அது சிறு வருத்தைக் கூட அவளுக்குத் தந்தது. ஆனால், சிலருக்கு இப்படிச் சுடும்படி சொன்னால் தானே உறைக்கிறது.
மகளுக்கு எதிரிலிருந்த மெத்திருக்கையில் வந்து அமர்ந்தவர், “என்னைக்குக் கல்யாணம்..?” ஒரு மாதிரி குரலில் ஆதங்கமாய்க் கேட்டிருந்தார்.
“இன்னும் முடிவு பண்ணல… இனிமேல் தான் தேடணும்… ஆனா எப்படியும் ஒரு மாசத்துக்குள்ள கல்யாணத்த முடிக்கற மாதிரி பாக்கணும்…” என்றாள் வெறுமை தாங்கிய குரலில் சாதாரணமாகத் தென்றல்.
நேற்றைய அவளின் பேச்சில், யாரையோ பிடித்து மணக்க போகிறாள் போல என்று தான் நினைத்திருந்தார் குணவதி.
“கல்யாணம் என்ன கத்திரிக்கா வியாபாரமா..? ஒரு மாசத்துல முடிக்கணுங்கற… பாக்கணும் விசாரிக்கணும்… எவ்வளவு இருக்கு…” என்றவரின் குரலில் உண்மையான அக்கறை இருந்தது.
“அதெல்லாம் உனக்கெதுக்கு… கல்யாணம் என்னைக்குனு சொல்லறேன்… என் அம்மாவா வந்து நில்லு… போதும்…” அவ்வளவு தான் பேச்சு முடிந்தது என்பதைப் போல, வெற்று டம்ளரை எதிரிலிருந்த மேசையில் வைத்துவிட்டு எழுந்து கொண்டாள் அவள்.
என்னவோ சரியில்லை என்று தான் பட்டது அவருக்கு. ஏற்கனவே வலிக்க வலிக்கக் காயம் கண்டவள் மகள். அந்த வலியின் சுவடு வடுவாய் இன்னமுமே மனதில் இருக்கிறது. அதன் தாக்கம், இழப்பு அவளுக்கு மட்டுமில்லை, இன்றளவும் அவருக்கும் தான். அப்படி இருக்க, இதென்ன எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதைப் போலப் பட்டும் படாமல் ஒரு பேச்சு.
இந்தத் திருமணம் அவளுக்காக இல்லை என்று புரிந்தது. யாருக்காக இருக்க வேண்டும் என்பதும் சொல்லாமலே புரிந்தது. ஆனால், தனக்கென்று இல்லாது அவள் ஒரு திருமண வாழ்விற்குள் நுழைந்தால், மேலே யோசிக்க முடியவில்லை. இந்த முறை இழப்பென்றால் அது அவருக்கும் மகளுக்குமானதாய் மட்டும் இருக்காது. அது அதிகத்திற்கும் அதிகமாய் வேந்தனை தான் பாதிக்கும்.
“என்னடி பைத்தியக்கார பேச்சு இது… உனக்குப் புடிச்சுக் கல்யாணம் கட்டறதா இருந்தா சரி… ஆனா வேற ஏதாவது காரணம் வச்சுட்டு எடுத்தோம் கவுத்தோம்னு எதுவும் கோட்டித் தனம் பண்ணிட்டு இருக்காத… சொல்லிட்டேன்…” என்றார் குணவதி கண்டிக்கும் குரலில்.
அறைக்குள் நுழையப் போனவள், அவரின் வார்த்தைகளில் நின்று திரும்பிப் பார்த்தாள். அவளின் முகத்திலிருந்து எதையும் கண்டு கொள்ள முடியவில்லை அவரால்.
“அப்பவும் இப்பவும் என்னோட கல்யாணம் மத்தவங்க சந்தோஷத்துக்காகத் தான்… ஆனா இந்தத் தடவ அத எப்படிச் சரியா அமைச்சுக்கணும்னு எனக்குத் தெரியும்… எதுக்காகவும் என் பிள்ளைய கலங்க விட மாட்டேன்…” இறுதி வார்த்தைகள் அவருக்கான குத்தல் பேச்சோ என்று எண்ணும்படி தான் இருந்தது அவளின் குரல்.
“எல்லாருமே அவங்க பிள்ளைங்க நல்லா இருக்கணும்னு தான் நினைக்கறாங்க… அதையும் மீறி எதுவும் நடந்தா அதுக்குப் பெத்தவங்க எப்படிப் பொறுப்பாக முடியும்… நாம என்ன பண்ணாலும் ஒட்டற மண்ணு தான் ஒட்டும்… அவங்கவங்க தலையில போட்ட எழுத்துப்படி தான் வாழ்க்க அமையும்…” என்றார் ஆற்றாமையோடு குணவதி.
கசந்த முறுவல் ஒன்று அவளிடம். “என் பிள்ளைக்காக அந்த விதிய கூட நான் எதிர்த்து போராடுவேன்… அப்படியே என்னையும் மீறி ஏதாவது நடந்துடுச்சுனா கடமை முடிஞ்சதுனு தட்டி கழிக்கப் பாக்க மாட்டேன்…” என்றாள் அழுத்த குரலில். இதை அவள் பேசவே விரும்பவில்லை. இப்படியான பேச்சுகளைத் தவிர்க்கவே, அனைத்தில் இருந்தும் அவள் தப்பித்து ஓடினாள். ஆனால், இனி முடியாது. இதை எதிர்கொண்டு தான் ஆக வேண்டும்.
“இங்க பாருடி… நான் ஒன்னும் வேணும்னு…” அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டாள் தென்றல்.
‘நாக்கா… இல்ல இது தேள் கொடுக்கா… எப்ப பாரு வார்த்தையில கொட்டிட்டே இருக்கா…’ நினைத்த மாத்திரத்தில் முணுக்கெனக் கண்ணீர் அவரின் இமைகளை நிறைத்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.