இரவு வானை வெறித்தபடி கயிற்றுக் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்தான் நேசன். வானமெங்கும் இறைந்து கிடந்தது நட்சத்திரங்கள். சட்டென்று எரிநட்சத்திரம் ஒன்று கிழக்கிலிருந்து தோன்றி பாதி வானில் மறைய, ‘எனக்கு மன நிம்மதிய குடு முருகா…’ என அவசரமாக வேண்டிக் கொண்டது அவனின் மனம். சிறு வயது பழக்கம். மாறவில்லை, மாற்றிக் கொள்ளவும் தோன்றவில்லை.
எதையும் வேண்டி நிற்காதவன் மனம் நிம்மதிக்காய்த் தவித்தது. மனைவி மக்களென்று வாழும் நிறைவான வாழ்க்கை தான் நிம்மதியை தருமென்று தெரியவில்லை அவனுக்கு. கடந்த காலக் கசடுகள் இன்னுமே ரணமாய் மனதின் ஆழத்தில் தேங்கிக் கிடந்தது. அத்தனையையும் கடந்து வந்து விட்டான் தான். ஆனால், எதையும் மறந்து விடவில்லை. இன்னுமே அதன் தாக்கம் மனதில் அடி ஆழத்தில் நிழலாடிக் கொண்டிருந்தது. இந்த ஜனனம் முழுமைக்கும் மறந்து கடந்து வர முடியாத நினைவுகள். நித்தம் நித்தம் அவனைக் கொன்று தின்று கொண்டிருக்கும் நினைவுகள். அந்த நினைவுகளின் கோரப் பசிக்கு தன்னையே கொஞ்சம் கொஞ்சமாய்ப் பிய்த்து தீனியாய் போட்டுக் கொண்டிருந்தான் அவன்.
ஏதோ ஒரு இடத்தில் அன்பாய் ஆதரவாய் ஆதங்கமாய் ஆக்ரோஷமாய் என வெளிப்படும் வார்த்தைகள் அனைத்தும் கிளறிப் போவது பழைய நினைவுகளைத் தானே!
காலம் காயமாற்றும் என்கிறார்களே! இவனுக்கு மட்டும் ஏன் அப்படியில்லை. நாட்கள் மாதங்களாகி வருடமும் எட்டு ஓடி விட்டது. இன்னமும் அவன் மனதின் ரணம் ஏன் அப்படியே இருக்கிறதே எப்படி?
‘கடந்து வா..! மறந்து வா..!’ என ஆயிரம் பேர் சுற்றி நின்று ஆறுதல் சொல்லலாம். ஆனால் ரணப்பட்டவன் அவனல்லவா! அதன் தீவிரத்தை, அதன் வலியை அவன் தானே கடந்து வர வேண்டும்.
எதிர்பாரா விபத்தொன்றில் இழந்தது நகமாயிருந்தால் கடந்து வந்து விடலாம். கரமாய் இருந்தால்? அதன் இழப்பை யார் ஈடு செய்வது, இல்லை எதனால் ஈடு செய்திட முடியும்? பறிப்போனது நகமா கரமா என்பதைப் பறி கொடுத்தவன் அல்லவா தீர்மானிக்க வேண்டும்.
என்ன அப்படி அவன் பெரிதாய் ஆசைப்பட்டு விட்டான். ஆயிரம் ஆயிரம் கோடிப் பேரைப் போலச் சாதாரண ஒரு வாழ்வு. மனைவி, மக்களெனத் தனக்கே தனக்கான மிகச்சிறிய கூடு. அதற்கு இத்தனை பெரும் தண்டனை?
எண்ணங்கள் அழுத்த, இதற்கு மேல் முடியாது என்று தோன்றியது. தனது கைபேசியில் முருகரின் பாடல்களை இசைக்கவிட்டு அமைதியாய் கண்களை மூடிக் கொண்டான் அவன். நான்கு பாடல்களுக்குப் பிறகு இசைத்தது ‘உள்ளம் உருகுதய்யா…’ பாடல். சட்டென்று அவனுக்கு அந்தப் பெண்ணின் நினைவு தான்.
சரியாய் சொல்ல வேண்டுமென்றால் அவள் கைபேசியில் ஒலித்த குரலின் தாக்கம். என்னவோ அந்தப் பிள்ளை குரலும் மழலை மொழியும் அவன் மனதிற்கு இதம் தருவதாய், நிம்மதி சேர்ப்பதாய்.
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அந்தப் பெண்ணைச் சரியாகக் கூடப் பார்த்து இருக்கவில்லை அவன். அத்தனை பெண்களுக்கு மத்தியில் முதுகு காட்டி நிற்பளின் முகத்தை எப்படிப் பார்ப்பதாம்? அவளின் பக்கவாட்டு தோற்றமும், அவளின் பாதமும், பெருவிரலில் துளிர்த்து நின்ற குருதியும், அவளின் பதற்றமும், கைபேசியின் வழி இசைத்த குரலின் இனிமையும் தான் அவனின் மனதின் ஆழத்தில் பதிந்தது.
ஒரு வேளை பார்த்திருக்க வேண்டுமோ? பார்த்திருந்தால் பின்னாளில் அவளைக் காண நேரிட்டால், அந்தப் பாடலைப் பற்றிக் கேட்கலாமே! அவளின் முகத்தைப் பார்த்திருந்தால் கூட, மீண்டும் சந்திப்போம் என்பதில் என்ன உறுதி! அவன் அப்பன் முருகனை சந்திக்கத் தான் எங்கெல்லாமோ இருந்து தேடிக் கொண்டு தினம் ஆயிரமாயிரம் பேர் திருச்செந்தூர் வருகிறார்களே! அப்படி அவர்களில் ஒருத்தியாய் அவளும் இருந்து விட்டால்?
இருக்காது! இருக்க வாய்ப்பில்லை! அவள் கிளம்பி சென்ற வேகத்தைப் பார்த்தால், உள்ளூர்க்காரியாகத் தான் இருக்க வேண்டுமென்று தோன்றியது. அப்படியே அவளைப் பார்த்தே விட்டாலும் கூட, என்னவென்று அந்தப் பாடலைப் பற்றிக் கேட்பது என்ற யோசனை தான் அவனுக்கு.
இத்தனை ஆண்டுகளில் மற்றதை எல்லாம் பின்னுக்குத் தள்ளி ஒரு பெண் அவனின் எண்ணங்களை ஆக்கிரமிக்கிறாள். அதை அவனே கூட உணரவில்லை.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கடந்துவிட்ட பின்பு தான் அவனைத் தேடிக் கொண்டு, மேலே வந்திருந்தான் மாதவன். நிச்சயம் உறங்கி இருக்க மாட்டான் என்று தெரியும். நேசனை அவனுக்குப் பள்ளிக் காலத்தில் இருந்தே தெரியும். எதற்காகவும் பெரிதாய் கவலைப்பட்டோ அலட்டிக் கொண்டோ பார்த்ததில்லை. படுத்ததும் உறங்கிக் போகும் அவனின் சுபாவத்தில், மாதவனுக்கு அத்தனை எரிச்சல் வரும். அவனை வைத்துக் கொண்டு, ஒரு படத்திற்குக் கூட இரவு காட்சிக்கு சென்று வர முடியாது. மீறி உடன் அழைத்துச் சென்றால், தூங்கி வழிபவனை எழுப்பி அழைத்து வருவதற்குள் நண்பர்கள் பாடாய்ப் பட்டுப் போவார்கள்.
இன்றானால் பதினாறு மணி நேரத்திற்கும் அதிகக் கடின உழைப்பு. அவன் நினைத்தால், அந்த வேலைக்கு ஆள்களை நியமித்துவிட்டு மேற்பார்வை மட்டும் பார்க்க முடியாதா? அப்படி இருந்தும் ஏன் அவனே அதைச் செய்கிறான். அப்படியாவது இந்த உடல் தளர்ந்து உறக்கம் வந்துவிடாதா என்ற நப்பாசை தானே! இருந்தும், அந்த நித்திராதேவி அவனை நாடியது போல் தெரியவில்லை. படுத்ததும் உறக்கம் என்பதெல்லாம் ஏதோ முன் ஜென்ம கனவு போல் இருந்தது. ‘எப்படி இருந்தவன்..!’ என்ற எண்ணத்தில் பெருமூச்செழுந்தது மாதவனுக்கு.
அமைதியாய் அவன் அருகில் சென்று கயிற்று கட்டிலின் விளிம்பில் அமர்ந்தவனின் கரங்கள் தன்னைப் போல் அவன் சிகை கோதியது. கண்களின் மீது இடக்கரத்தை வைத்தபடி மல்லாந்து படுத்திருந்தான் நேசன். நண்பனின் வருகையை உணர்ந்து விட்டாலும் கூட விழி திறந்து பார்க்கவில்லை, பார்க்க பிரியப்படவில்லை.
எதற்கு வந்திருப்பான் என்று தெரியும். இந்த நேரம் அதைப் பேச துளியும் விருப்பமில்லை அவனுக்கு. ‘இப்படியே என்னை விட்டு விடுங்களேன்…’ என உரக்க கத்த வேண்டும் போல் இருந்தது. யாருக்காக அவனின் இந்த ஓட்டம்? யாருக்காக அவனின் இந்த வாழ்வு? அவர்களுக்காகத் தானே! அவர்களே கூட அவனின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் பாடாய்ப் படுத்தினால் அவனும் தான் எங்கே போவானாம்?
“சிவா…” மெல்லிய குரலில் அழைத்துப் பார்த்தான் மாதவன். அவனிடம் எந்த அசைவுமில்லை.
அவனின் சிறுபிள்ளை பிடிவாதத்தில் கீற்றாய் ஒரு புன்னகை மாதவன் முகத்தில். இத்தனை வருடங்களில் எத்தனையோ மாறி விட்டது. ஆனால், இந்த அழுத்தமும் பிடிவாதமும் அடமும் மட்டும் இன்னமும் அப்படியே இருக்கிறது. அந்தப் பிடிவாத குணம் தானே என்றோ மக்கி மண்ணாகி போக வேண்டியவனை, இத்தனை உத்வேகமாக ஓட வைத்திருக்கிறது.
“சிவா… நீ தூங்கலனு எனக்குத் தெரியும்… ஒழுங்கா எழுந்து உக்காரு… உங்கிட்ட நான் பேசணும்…” என்றான் சிறு கண்டிப்போடு மாதவன்.
“அதெல்லாம் நான் தூங்கி அரைமணி நேரமாச்சு…” என முனங்கலாய் சொன்னபடியே, திரும்பி அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டான் நேசன். இன்னுமே பெரிதாய் விரிந்தது மாதவனின் புன்னகை. என்னவோ அந்த நேரம் அவனின் மகன் அகரனாய் தான் தெரிந்தான் நேசன்.
சுள்ளென்று அவனின் முதுகில் ஒன்று வைத்தவன், “இப்ப நீ எழுந்து உக்கார போறீயா..? இல்ல இன்னொன்னு வைக்கட்டும்மா…” என்றான் அதட்டலாய்.
ஏதோ கொசு கடித்ததைப் போல முதுகை தட்டி விட்டவன், மாதவன் அடிப்பதற்கு வாகாய் இன்னுமே திரும்பி படுத்தான்.
“அப்போ நீ எழுந்துக்க மாட்ட… சரி விடு… நானே பேசலானு நினைச்சேன்… நீ சரிவர மாட்ட போல இருக்கு… நான் போயி அத்தையையும் விழியையும் அனுப்பறேன்… நீ அவங்களையே சமாளி…” என்றவன் எழுந்து செல்ல முற்பட, “பச்… என்னடா வேணும் இப்ப உனக்கு…” என்றபடியே எழுந்து அமர்ந்து விட்டான் நேசன்.
“ரொம்பச் சிம்பிள்… கல்யாணம் பண்ணிக்க…” என்றான் அவனையே கண்களால் எடை போட்டபடி மாதவன்.
“முடியாது…” அழுத்தமாய் ஒலித்தது நேசனின் மறுப்பு.
எதிர்பார்த்தது தானே! “நான் உனக்கு ஆப்ஷன் குடுக்கலை… நீ பண்ணிக்கற… அவ்வளவு தான்…” என்றான் கடின குரலில் மாதவன்.
“என்னடா மிரட்டுறீயா..? பண்ணிக்க முடியாதுனா என்ன பண்ணுவ…” என்றான் இளக்காரமாக நேசன்.
“நான் என்ன பண்ணுவேன்… இல்ல என்னால என்ன பண்ண முடியும்… ஆனா நீ பண்ணிப்ப… நான் சொன்னா பண்ணிப்ப…” என்றவனை, கண்களைக் கூர்மையாக்கி ஒரு திடுக்கிடலுடன் பார்த்தான் நேசன். மறுக்க முடியாத நிலையில் நண்பன் தன்னை நிறுத்தப் போகிறான் என்று தோன்றியது.
“எட்டு வருஷத்துக்கு முன்னாடி நீ எனக்கொரு ப்ராமிஸ் பண்ணி குடுத்து இருக்கச் சிவா… மறந்து இருக்க மாட்டனு நினைக்கறேன்… நான் என்ன கேட்டாலும் செய்யறேன்… எனக்காக என்னவும் பண்ணுவேனு சத்தியம் பண்ணிருக்க… இப்ப அதைக் காப்பாத்து… எனக்காகக் கல்யாணம் பண்ணிக்க…” என்றான் அலட்டிக் கொள்ளாது மாதவன்.
அவனைத் திகைத்துப் பார்த்தான் நேசன். ஆம், அப்படி ஒரு சத்தியத்தை அவன் செய்து கொடுத்திருந்தான் தான். ஆனால், அதை இப்படியான நேரத்தில் பயன்படுத்துவான் எனத் துளியும் எதிர் பார்க்கவில்லை. ஏன், ஏற்கவும் முடியவில்லை.
சாதாரணச் சத்தியம் தானே என்று மற்றவர்கள் நினைக்கலாம். ஆனால், அன்றிருந்த அவனின் நிலை! அதை நேசன் மறந்தால், மறுத்தால் அவனின் மனசாட்சியே அவனுக்கு எதிராய் நிற்குமே!
நிமிடங்கள் கரைந்தும் வார்த்தையில்லை நேசனிடம். அவனின் அதிர்ந்த தோற்றமும் யோசனை படிந்த முகமும் மாதவனை என்னவோ செய்தது.
“என்னை நீ கார்னர் பண்ணற மாதவா… இது நியாயமில்லை…” என்றான் முற்றும் உடைந்த குரலில் நேசன். அந்தக் குரலே இதை நான் உன்னிடம் எதிர்பார்க்கவில்லை என்று குற்றம் சாட்டியது.
“எனக்கு வேற வழியில்ல சிவா…” என்றவனுக்குமே அத்தனை குற்றவணர்வு. அவனின் அன்பின் வெளிப்பாட்டில், நெகிழ்ச்சியில், நம்பிக்கையில் உதிர்த்த வார்த்தைகளை இப்படிப் பயன்படுத்த அவனுமே நினைக்கவில்லை தான்.
“இதுல என் லைஃப் மட்டும் இல்ல… இன்னொரு பொண்ணோட வாழ்க்கையும் இருக்கு… எல்லாரும் என்னை மட்டும் யோசிச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கைய கெடுக்கப் பாக்கறீங்க…” வேதனையோடு வந்தது நேசனின் வார்த்தைகள். அப்படியாவது நண்பனுக்குப் புரியுமா எனக் கண்களில் ஒரு எதிர்பார்ப்பு.
மௌனம் மட்டுமே மாதவனிடம். அவனுக்கு நேசனைத் தெரியும். திருமணம் என்ற ஒன்று முடிந்த பின், வாழ மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கவோ, தன்னை நம்பி வந்தவளை காயப்படுத்தவோ மாட்டான் என்பதில் மாதவனுக்குப் பெரும் நம்பிக்கை இருந்தது. தனக்குத் துரோகம் செய்தவர்களைக் கூடச் சபித்து ஒரு வார்த்தை சொல்லாதவன் அவன். அவனா நம்பி வருபவளை கொடுமைப்படுத்திவிடப் போகிறான்?
“என்னமோ பண்ணுங்க… ஆனா பின்னாடி வருத்தப்படப் போறதும் நீங்களா தான் இருப்பீங்க…” என்றவன், மீண்டும் பழையபடி படுத்து இடக்கரத்தால் கண்களை மூடிக் கொண்டான். உருண்டு திரண்ட விழிநீர் கோடாய் பக்கவாட்டில் இறங்கியது.
அவனைப் பார்த்துக் கொண்டே இருந்த மாதவனுக்கு அவன் சம்மதம் சொல்லி விட்டதில் முழுதாய் சந்தோஷப்பட முடியவில்லை. ஆனால், எல்லாம் சரியாகிவிடும் என்ற பெரும் நம்பிக்கை அவன் மனதில். நண்பனின் கண்ணீரையும் கண்டு கொண்டவனுக்கு முணுக்கென்று மனம் வலிக்க, அதற்கு மேல் அங்கிருக்க முடியாமல் எழுந்து சென்றுவிட்டான்.
– நேசம் ஒளிரும்…
No comments yet.