நெஞ்சம் – 10

தமிழ் வெண்பா | 12 Dec 2025 | Share

தென்றல் வேந்தனோடு வீடு வர, அத்தனை நேரமும் அவர்களுக்காக வாசலிலேயே தான் காத்திருந்தார் குணவதி. அவர்களை முன்னால் ஆட்டோவில் அனுப்பிவிட்டுப் பின்னால் தனது இருச்சக்கர வாகனத்தில் வந்திருந்தாள் அரசி. என்னவோ வீட்டிற்குத் தானே போகிறாள் எனத் தென்றலை அப்படியே விட்டுவிட மனமில்லை.

முதலில் குணவதியின் பார்வை வேந்தனின் மீது தான் அழுத்தமாய் ஆராய்ச்சியாய் படிந்து படர்ந்தது. அவனுக்கு ஒன்றுமில்லை என்பதைப் பார்த்து தெரிந்து கொண்ட பின் தான் மனதிற்குள் ஒரு நிம்மதி, ஆசுவாசம். அதை அவரின் முகம் அப்படியே பிரதிபலிக்கவும் செய்தது. அதைத் தென்றலும் கவனிக்கத் தான் செய்தாள். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் அவரைப் பாம்பென்று நினைத்து விலகவும் முடியாது, பழுதென்று நினைத்து மிதிக்கவும் முடியாது.

மகனை தூக்கிக் கொண்டு அவரைக் கண்டு கொள்ளாததைப் போல் தென்றல் உள்ளே சென்றுவிட, இவருக்குத் தான் தவிப்பாய் இருந்தது. ‘வேந்தன் எதுவும் சொல்லி இருப்பானா..? சொல்லி இருந்தால் இத்தனை அமைதியாகக் கடந்து செல்பவள் தன் மகளில்லையே..!’ என்ற எண்ணம் தான்‌ மனமெங்கும் வியாபித்து அவரை அச்சுறுத்தியது.

“காபி போடவா தென்றலு… புள்ள எதுவும் சாப்பிட்டானா… பால் ஆத்தி எடுத்துட்டு வரவா..?” கேட்டபடியே அவளின் பின்னாலேயே வந்தவரின் குரலில் துளி அக்கறையும் கூட இருந்ததோ?

“அச்சோடா… பேரப் பிள்ளை மேல எம்புட்டு பாசம்…” முதுகுக்குப் பின்னால் கேட்ட நக்கல் குரலில் அவர் திரும்பி பார்க்க, அப்பட்டமான எரிச்சலை முகத்தில் காட்டியபடி நின்றிருந்தாள் அரசி.

“பச்… நீ எங்க இவ்வளவு தூரம்… வீட்டுல உன் புருஷன் புள்ளைங்க எல்லாம் உன்ன தேட மாட்டாங்களா..?”‌ ஏன் வந்தாய் எனக் கேட்காமல் கேட்டார் அவர்.

அவரின் கேள்விக்குப் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை அரசி. அமைதியாகக் கூடத்தில் கிடந்த மெத்திருக்கையில் சென்று விழுந்தவள், “ஓய் பையர்… சீக்கிரம் சூடா ஒரு காஃபி போட்டு எடுத்துட்டு வா… உன்கிட்ட கத்தி கத்தி என் தொண்டை தண்ணீயெல்லாம் வத்திப் போச்சு…” என்றபடியே சட்டமாய்‌ அமர்ந்து கொண்டாள்.

‘என் வீட்டுக்குள்ளயே வந்து என் பொண்ணையே அதிகாரம் பண்ணறத பாரு… ப்ரண்ட்டாம் ப்ரண்ட்டு… ஊரு உலகத்துல இல்லாத அதிசய ‌ப்ரண்டு… எல்லாம் இவ குடுக்கற இடம்… இத சொன்னா நான் தான் பொல்லாதவளா போவேன்…’ தனக்குள்ளையே முனங்கிக் கொள்ள மட்டும் தான் முடிந்தது குணவதியால். அவரின் முகம் போன போக்கை வைத்தே அவர் என்ன நினைப்பார் என்று அரசிக்கும் புரிந்திருந்தது தான்.

“அப்பறம் ஆன்டி… உங்க கிரைம் ரேட் கூடிட்டே போகுதே… என்ன விசயங்கறேன்…” என்றாள் அழுத்தமாய் அவரைப் பார்த்தபடி.

அவர் புரியாமல் பார்க்க, “கிள்ளறது… அடிக்கறது எல்லாம் தாண்டி இப்போ மாடியில இருந்து தள்ளி விடறது வர போய்டீங்க போல… அடுத்து என்ன..?” எனக் கேள்வியாய் நிறுத்தியவளுக்கு, அதை வார்த்தைகளாய் கோர்க்க கூடப் பிரியமில்லை. அத்தனையாய் கசந்து வலித்தது  அவளின் மனம். கேட்கக் கூடாது என்று நினைத்ததையும் மீறி வெளிவந்து விட்டது வார்த்தைகள். அவர் மீது அவளுக்கு அத்தனை ஆதங்கம்.

‘சொல்லிடுச்சா அந்தக் குட்டி பிசாசு… அதைக் கேட்டுமா இவ அமைதியா போறா… ஒரு வேளை புள்ளைய தூங்க வச்ச பின்னாடி பேசுவாளோ..?’ என்றவர் அரசியிடம் வாயையே திறக்கவில்லை. அது என்னவோ அவர்கள் பேச ஆரம்பித்தாலே முட்டிக் கொள்கிறது. அரசி வாயைத் திறந்தாலே ஏதாவது இடக்காகத் தான் கேட்டு வைப்பாள். இவர் தான் பதில் சொல்ல முடியாது திணறிப் போவார். ஒரு வகையில் அவள் கேள்வியில் இருக்கும் நியாயமே அவரின் மனதை குத்தும். அதற்காகவே எதற்கு வம்பென்று வாயை இறுக மூடிக் கொள்வார். அதற்குப் பயந்தே மதியமும் மருத்துவமனையில் இருந்து கிளம்பி வந்திருந்தார் அவர்.

“என்ன‌ ஆன்டி பதிலே சொல்ல காணும்… அமைதியின் திருவுருவமா, அன்னை தெரேசாவுக்கு மறுவுருவமா நிக்கறீங்க… எப்படிப் பேசணும்னு ‌மறந்து கிறந்து போச்சா… இல்லையே… நான் உள்ள நுழையும் போது கூடச் செந்தமிழ் உங்க நாக்குல நாட்டியமாடுச்சே…” என்றாள் யோசிப்பதை போன்ற பாவனையோடு அவள்.

“அப்பறம் ஆன்டி…” என நீட்டி முழக்கி அவரைப் பார்த்தவள், “எனக்கொரு சின்னச் சந்தேகம்… நிஜமாவே தென்றல நீங்க தான் பெத்தீங்களா..?” என்றாள் தீவிர குரலில்.

அவர் கடுப்போடு அவளைப் பார்க்க, “இல்ல… இப்படி ஒரு குணவதிக்கு… அப்படி ஒரு மகளானு நினைச்சாலே எனக்குத் துக்கம் தொண்டைய அடைக்குது…” என்றாள் நெஞ்சை நீவியபடி.

பேசாமல் வெளியே சென்றுவிடலாமா என்ற எண்ணம் அவருக்கும் ஒரு நொடி தோன்றியது தான். ஆனால் இவளுக்குப் பயந்து அவர் சென்றது போல் ஆகிவிடாதா? பிறகு அவர் கௌரவம் என்னவாவது?  என்ற எண்ணம் தோன்ற அவளுக்கு எதிரிலிருந்த மெத்திருக்கையில் சட்டமாய் அமர்ந்து தொலைகாட்சியின் இயக்கியை (Remote) கையில் எடுத்துக் கொண்டார். அதை உயிர்ப்பித்து ஒவ்வொரு அலைவரிசையாய் மாற்றிக் கொண்டே வர, அரசி விடுவதாய் இல்லை.

“தென்றலுக்கு மாப்பிள்ளை எதுவும் பாக்கறீங்களா ஆன்டி…” என்று ராகமிழுத்தாள் அவள்.

‘இப்ப என்ன..?’ என்பதைப் போல் வெடுக்கென அவளைத் திரும்பிப் பார்த்தவர், “அதுல எல்லாம் அவளுக்கு விருப்பமில்ல…” என்றார் கடின குரலில்.

“அவளுக்கா..? உங்களுக்கா..?” என்றவளின் குரலில் முன்பிருந்த கேலியோ, நக்கலோ இல்லை. அது அத்தனை தீவிரத்துடன் ஒலித்தது.

“உனக்கு என்ன பிரச்சனை இப்போ… நீ தென்றலோட ஃப்ரண்டுனா அதோட நின்னுக்கோ… தேவையில்லாம எங்க குடும்ப விசயத்துல மூக்க நுழைக்காத…” என்றார் அதட்டலாய்.

“எனக்கு எதுக்குப்பா உங்க குடும்ப விவகாரம்… இல்ல உன் வீட்டுல புருஷன் புள்ளைங்க எல்லாம் உனக்காகக் காத்துட்டு இருக்க மாட்டாங்களானு கேட்டீங்களே… அப்படி உங்க பொண்ணுக்காகவும் ஒரு புருஷன் காத்துட்டு இருக்கணும்னு உங்களுக்குத் தோணலையா..? அவளும் மத்த எல்லாரையும் மாதிரி புருஷன் குடும்பம்னு கண்ணு நிறைக்க வாழணும்னு உங்களுக்கு ஆசையில்லையா..?” இத்தனை நாளும் அவளின் மனதை அரித்துக் கொண்டிருந்த கேள்வியைத் தான் கேட்டாள் அவள்.

“ஆசை இல்லாமலா இருக்கும்… எனக்கும் என் பொண்ணு புருஷன் புள்ளைங்கனு வாழறத பாக்க ஆசை தான்… அதுக்கு அவ ஒத்துக்கணுமே… நானுமே போராடிப் பாத்துட்டு தான் முடியாம விட்டுட்டேன்…” என்றார் குணவதி அங்கலாய்ப்பாய்.

“ஓ… அப்படி… பச்… நான் ஒரு மட சிறுக்கி… இது தெரியாம… எங்க தென்றலுக்குக் கல்யாணம் ஆகிட்டா, நம்பள விட்டு போய்டுவாளோ… அவ சம்பாத்தியம் நம்ம கைய விட்டு போய்டுமோ..? நம்ம தனி‌ ஆளா ஆகிடுவோமோனு பயந்துட்டு தென்றல் கல்யாண பேச்ச எடுக்காம இருக்கீங்களோனு நினைச்சேன்…” அவள் சொல்லவும் பேயறைந்ததைப் போல வெளிறிப் போனது அவரின் முகம். ஒரு வகையில் அதுதான் உண்மையாகவும் இருக்க, சட்டென்று பதிலெதுவும் சொல்ல முடியவில்லை அவரால்.

“அட ஆன்டி… இதுக்கு எதுக்கு இவ்வளவு ஃபீல் பண்ணறீங்க… அவளுக்கு ஒரு நல்லது நடந்தா சந்தோஷப்படற முதல் ஆள் நீங்க தானே… என்ன உங்க வயசுக்கு எடுத்துச் செய்ய முடியலையா இருக்கும்… கவலைய விடுங்க… நான் எதுக்கு இருக்கேன்… சீக்கிரமே தென்றலுக்கு ஒரு நல்ல இடமா பாத்து பேசி கல்யாணம் பண்ணி வைக்க வேண்டியது என் பொறுப்பு…” என்றாள் அரசி.

சட்டென்று அவள் குரலில் ஒரு குழைவும் பரிவும் ஒட்டிக் கொள்ள, ‘என்னவாம் புதிதாய்..?’ என்பதைப் போல யோசனையாய் தான் பார்த்தார் குணவதி. ஆரம்பத்தில் தென்றலுக்குத் தான் பார்த்திருக்கும் வரன்களுடன் அவரிடம் தான் வந்து நின்றாள் அரசி. தென்றல் ஒப்புக் கொள்ள மாட்டாள் என்றதும், அமைதியாய் கேட்டுக் கொண்டு அப்படியே விட்டும் விட்டாள். இன்று இத்தனை குத்திப் பேசுவதோடு, அந்தக் குரலில் இருந்த தீவிரம் சரியாய் படவில்லை அவருக்கு.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தென்றலின் திருமணத்திற்குத் தடையாய் நிற்கும் அத்தனையையும் அவள் பாதையில் இருந்து அகற்றி வைத்துவிட நினைத்தாள் அரசி. அதில் முதல் தடையே குணவதி தான். அவரின் வாயை பிடுங்கி தென்றல் திருமணம் செய்து கொள்வதில் தனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லையெனச் சொல்ல வைத்துவிட நினைத்தாள் அரசி.

“தென்றல் ஒத்துக்கனுமே…” என்றார் குணவதி அப்போதும்.

“தென்றல சம்மதிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு… நீங்க என்ன சொல்லறீங்க…” என்றாள் விடாது அரசி.

“அது எப்படிம்மா..? எடுத்தோம் கவுத்தோம்னு செய்ற விசயமா..? ஒரு தடவ பட்ட காயமே இன்னும் என் பொண்ணுக்கு ஆறல… இதுல பாத்து எல்லாத்தையும் யோசிச்சுப் பொறுமையா தானே பண்ணணும்…” என்றார் அப்போதும் பிடி கொடுக்காது.

‘இப்பவே முப்பத தாண்டிடுச்சு… இன்னும் பாத்து பொறுமையா அறுபதாம் கல்யாணமா பண்ண போறீங்க..?’ தனக்குள் முனகிக் கொண்டவளுக்கு அத்தனை எரிச்சலாய் வந்தது.

அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே மகனை குளிக்க வைத்து வேறு உடை மாற்றி அழைத்து வந்துவிட்டாள் தென்றல்.

“வந்தவளுக்குக் காஃபி கூடக் குடுக்காம என்னம்மா வெட்டி அரட்டை…” அவள் கேட்டபடியே வர, அதற்கே காத்திருந்ததைப் போல எழுந்து கொண்டார் குணவதி.

அடுத்த அரை மணி நேரத்தில் மாலை நேர சிற்றுண்டியோடு சூடாய் ஆவி பறக்க தேநீரும் வந்துவிட்டது. அரசி குழம்பி கேட்டாள் என்பதற்காகவே தேநீரை தயாரித்து எடுத்து வந்திருந்தார் அவர். அவள் பேச்சுக்கு அவர் அளவிலான சின்னப் பழி வாங்கல்.

அதன் பின் கிளம்பி செல்லும் வரையிலும் கூட, அரசியால் அவரிடம் எதுவும் பேச முடியவில்லை. ‘இந்தம்மா என்ன பிடி குடுக்காமலே பேசுது… கல்யாணத்துல எந்தக் கலகத்தையும் பண்ணாம இருக்கணும் முருகா…’ என்ற நெருடல் தான் அவளின் மனமெங்கும். அவள் அத்தனை தீவிரமாய் முயன்றும், முடியாத ஒன்றை‌ மிகச் சாதாரணமாகச் செய்து முடித்துவிட்டாள் தென்றல்.

இரவு உணவுக்குப் பின் மகனை உறங்க வைத்துவிட்டு வந்தவள்‌ தொலைக்காட்சியில் மூழ்கி இருந்த அன்னைக்கு அருகில் வந்து அமர்ந்தாள்.

“நான் கல்யாணம் பண்ணிக்கலானு இருக்கேன்…”  மின்னாமல் முழங்காமல் அவர் தலையில் இடியை‌ இறக்கியவளை திகைத்து திரும்பிப் பார்த்தார் குணவதி.

‘இதற்குத் தான் அந்தக் குட்டி இத்தனை பீடிகை போட்டதா..?’ என எண்ணாமல் இருக்க முடியவில்லை அவரால்.

“என்ன திடீருனு..? என்கிட்ட கூட எதுவும் சொல்லாம… அப்படி என்ன அவசரம்…” என்றார் குணவதி.

“அவசரம் இல்ல அவசியம்… என் பையனுக்கு அப்பா வேணும்… அவன பாதுகாப்பா பாத்துக்கற ஒரு குடும்பம் வேணும்…” என்றவள் குரலில் என்ன இருந்ததென்றே அவரால் இனம் காண முடியவில்லை.

“அப்படி இங்க உன் புள்ள பாதுகாப்புக்கு என்ன குறைச்சல்னு கேக்கறேன்… ஆமா தப்புதான்… ஏதோ தெரியாம நடந்துடுச்சு… அதுக்குனு அவன நான்‌ என்ன கொன்னா புடுவேன்…” என்றார் அவர் அப்பட்டமான பிடித்தமின்மையை முகத்தில் காட்டியபடி.

“ஆமா… என் அப்பாவ கொன்ன மாதிரி எங்க என் மகனையும் கொன்னுடுவீயோனு பயமா தான் இருக்கு…” அமிலமாய் வார்த்தைகளை அவர் மீது வாரி இறைத்துவிட்டு, எழுந்து அறைக்குள் சென்றுவிட்டாள் தென்றல். வார்த்தையின்றி விக்கித்துப் போய்ச் செல்லும் மகளையே இமை கொட்டாது பார்த்திருந்தவரின் கண்கள் கலங்கி பார்வையை மறைத்தது.

‌                                                  நேசம் ஒளிரும்…

    No comments yet.