‘உள்ளம் உருகுதய்யா முருகா…
உன்அடி காண்கையிலே…’
கடல் காற்றின் குளுமையோடு சேர்த்து உள்ளத்தை நெகிழ்த்தியது எங்கிருந்தோ கசிந்து வந்த இசை. இசை என்றில்லை அவனின் பெயரை நினைத்த மாத்திரத்திலேயே இந்த உள்ளம் உருகி நெகிழ்ந்திட தானே செய்கிறது.
பாடல் ஒலித்த திசையில் பார்வையை அலைய விட்டபடி மெய் மறந்து அப்படியே நின்றுவிட்டான் சிவநேசன்.
“என்னடா நின்னுட்ட… சீக்கிரம் வா… கூட்டம் அதிகமாகிட்டே இருக்கு பாரு…” நண்பனின் கரம் பற்றி விறுவிறுவென இழுத்துக் கொண்டு முன்னே நடந்தான் மாதவப் பெருமாள்.
“கொஞ்சம் மெதுவா போடா…” வாய் மொழிந்தாலும் மாதவனின் இழுப்பிற்கு இசைந்து கொடுத்தான் நேசன்.
சிவநேசனின் முழு நேசமும் அந்த சிவனின் மைந்தன் மீது தான். அவனின் நேசத்தை பக்தி என்ற ஒற்றை சொல்லிற்குள் அடக்கிவிட முடியாது. இன்றுமே கூட தன் வாழ்வின் அடுத்த கட்ட முன்னேற்றத்தை அந்த திருச்செந்தூர் முருகனிடம் சொல்லிவிட்டு செல்லலாம் என்றே இங்கு வந்திருந்தான்.
இன்று முகூர்த்த நாளாகவும் இருக்க, கூட்டம் அலை மோதியது. ஆங்காங்கே மணமாலையுடன் நின்ற ஜோடிகளும், ஒலித்த மேள சத்தமும் தன்னைப் போல் அவன் உடலில் ஒரு இறுக்கத்தை கொண்டு வந்திருந்தது.
அவர்களின் சில மணி நேரங்களை அநாயசமாக விழுங்கிக் கொண்டது அந்த மக்கள் திரள். முருகரின் திருவுருவைக் கண்ட நொடி அவனின் மனம் எதையுமே வேண்டிடவில்லை. வேண்டிட எதுவுமில்லையா என்றால் ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்க தான் செய்தது. ஆனால், எதையும் வேண்டி விரும்பி கேட்டிட தோன்றவில்லை. இமைக்காது இறைவனின் முகத்தையே பார்த்திருந்தவனின் மனதில் அப்படியொரு அமைதியும் நிறைவும்.
வாழ்வில் முக்கியமான நிகழ்வுகளோ, அடுத்த கட்ட நகர்வோ எதுவாயினும் முருகரின் முன்பு இப்படி அமைதியாய் வந்து நின்று விடுவது நேசனின் வழக்கம். அதை தாண்டி அந்த அழகனிடம் வேண்டி கேட்பதற்கு நேசனுக்கு ஒன்றுமே இருக்காது. அவனுக்கு தெரியாத எதை புதிதாய் இவன் கேட்டு பெற்றுவிட முடியும் என்ற எண்ணம்.
அதற்கு மாறாய் மாதவனோ மனமுருகி நண்பனுக்காய் வேண்டிக் கொண்டிருந்தான். கிட்டத்தட்ட மன்றாடினான் என்றும் கூட சொல்லலாம். அவன் நீண்ட கால வேண்டுதலுக்கு புன்னகையுடன் இன்று தான் செவி சாய்த்திருந்தார் அந்த முருகர். எதற்கும் காலம் கூடி வர வேண்டுமே!
இறைவனை தரிசித்து வெளியில் வந்த நண்பனின் முகத்தில் இருந்த நிறைவைக் கண்டதும், நெகிழ்ந்துப் போனது மாதவனின் உள்ளம். நண்பனின் மனதில் இந்த நிம்மதியும் நிறைவும் என்றென்றும் நிலைத்திருக்க வேண்டுமென்பது மட்டுமே அவனின் இப்போதைய, எப்போதைக்குமான பேரவா.
அமைதியாய் இருவரும் வெளி பிரகாரத்தில் வந்து அமர்ந்தனர். கண்மூடி அமர்ந்திருந்த நேசனின் மனதில் இன்னுமே குமரனின் திருவுருவம் தான். அவனின் முகத்தை பார்த்தபடியே யோசனையில் இருந்தான் மாதவன்.
அவனிடம் பேசியே ஆக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், பல முறை இதைப் பற்றி பேசிய அனுபவம் மாதவனுள் ஒரு தயக்கத்தை ஏற்படுத்தி இருந்தது.
“சிவா…” தயக்கமும் யோசனையுமாய் அவன் ஆரம்பித்த நேரம், “கிளம்பலாம்டா மாதவா… நேரமாச்சே…” என்றபடியே எழுந்து கொண்டான் நேசன்.
இப்போது விட்டால், மீண்டும் நண்பனை பிடிக்க முடியாது என்று மாதவனுக்கும் தெரியுமே! இத்தனைக்கும் இருவரும் தொழில் பங்குதாரர்கள் வேறு.
“ஒரு நிமிஷம் இருடா…” அவசரமாய் அவனின் கை பற்றியபடியே தானும் எழுந்து நின்றான் மாதவன்.
“சிவா… அது வந்து அத்தை…” என்றவனை இடைவெட்டியது நேசனின் குரல்.
“எனக்கு வேல இருக்கு மாதவா... கிளம்பலாம்…” அழுத்தமாய் இறுக்கத்துடன் ஒலித்த நேசனின் குரலில் அயர்ந்துப் போனான் மாதவன்.
“இப்படி பிடி குடுக்காம பேசுனா என்ன அர்த்தம்டா சிவா…” ஆதங்கமும் வருத்தமுமாய் கேட்டவனிடம், “நீ பேசப் போற விசயத்துல எனக்கு விருப்பமில்லைனு அர்த்தம்…” என்றவன் குரல் இப்போது அழுத்தம் கூடி கடினமாய் ஒலித்தது.
“இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குடா இருக்க போற…” என்றவனை, திரும்பி பார்த்தவனின் விழிகளில் கண்டனம்.
“ஏன்..? எப்படி இருக்கேன் நான்… நல்லா தானே இருக்கேன்…”
“அதில்லடா…”
“எதுவுமில்ல… நீ கிளம்பு… ஏன் ஷோரூம்ல இன்னைக்கு வேலை இல்லையா உனக்கு…”
பேச்சை தொடங்கும் முன்பே, அதற்கு தடை விதிப்பவனிடம் என்னவென்று பேசுவதாம்? ஆயாசமாய் அவனைப் பார்த்தவன், “அத்தை பாவம்டா… உன்ன நினைச்சு ரொம்ப வருத்தப்படறாங்க…” என்றான் சோகத்தை குரலில் குழைத்து பாவமாய்.
இப்போது சின்ன முறுவல் நேசனின் இதழோரம். “என்ன மச்சான்… அதட்டி உருட்டி மிரட்டி அழுது புலம்பி இப்படி எதுவும் வேலைக்கு ஆகலைனதும் உன்ன வந்து சென்டிமெண்ட் சீன் ஓட்ட சொன்னாங்களாக்கும் உன் மாமியார்…” என்றான் கேலியாய் நேசன்.
“ஏன்டா…” என்ற மாதவன் உண்மையில் நொந்து தான் போனான்.
“வீட்டுக்கு போனதும் விழி வேற கேள்வியா கேட்டு சாவடிப்பாடா… ஸ்கூல் டைம்ல இருந்து அண்ணனும் நீங்களும் ஃப்ரண்ட்ஸா இருக்கீங்க… இத கூட உங்களால அண்ணன்கிட்ட பேச முடியாதானு கேட்டு கேட்டு என்ன டேமேஜ் பண்ணுவாடா மச்சான்…” என்றான் அப்பாவியாய் மாதவன்.
தங்கையின் பெயரை கேட்ட மாத்திரத்தில், ஒரு கனிவும் மென்னகையும் அவனின் முகத்தை ஆக்கிரமித்தது. நண்பர்களாய் இருந்தவர்களை, உறவினர்களாகவும் மாற்றிய பெரும் பேறு விழியையே சேரும். நேசனின் தங்கை கயல்விழியைத் தான் மணம் முடித்திருந்தான் மாதவன். அகரமுதல்வன் என ஆறு வயதில் ஒரு மகனும், பூவிழி என இரண்டரை வயதில் ஒரு மகளும் அவர்களுக்கு.
“அப்படியே என் தங்கச்சிக்கு நீ பயந்தவன் தான்டா…” நக்கலாய் சொன்னான் நேசன்.
தன் கைப்பேசியின் திரையை உயிர்பித்து அவனின் முகத்துக்கு முன்னே நீட்டியவன், “இதோட பத்து தடவ கால் பண்ணிட்டா உன் தொங்கச்சி… பேசிட்டீங்களானு கேக்கறதுக்கு… வீட்டுக்கு போனா அண்ணன் என்ன சொன்னுச்சுனு தான் முதல கேட்பா… அவளுக்கு என்ன பதில் சொல்லட்டும்… நீயே சொல்லு…” என்றவனின் குரலில் இப்போது துளி கோபம் எட்டிப் பார்த்தது.
விடியலில் நண்பன் வீடு தேடி வரவுமே, சிறுபொறி தட்டியது தான் நேசனுக்கு. அதுவும் ‘நானும் உன்னுடன் வந்தே தீருவேன்…’ என ஒற்றை காலில் நிற்காத குறையாக பிடிவாதமாக மாதவனும் நேசனுடன் கோவிலுக்கும் கிளம்ப, நேசனின் எண்ணம் உறுதிப்பட்டும் போனது. எத்தனை நாளைக்கு தான் இந்த பேச்சை தவிர்க்க முடியும். அன்னையை எளிதாய் சமாளிக்க முடிந்தவனால், நண்பனையும் தங்கையையும் அப்படி சமாளிக்க முடியவில்லை.
“முப்பத்திரெண்டு வயசாகுது சிவா உனக்கு… நடந்ததையே நினைச்சுட்டு இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருந்துடலாம்னு இருக்க…” அமைதியாய் என்றாலும் அழுத்தமாய் கேட்டிருந்தான் மாதவன்.
“நான் சந்தோஷமா தான் இருக்கேன் மாதவா…” என்றான் இறங்கிவிட்ட குரலில் நேசன்.
“உன்ன சுத்தி இருக்கவங்க யாரும் சந்தோஷமா இல்ல சிவா…” என்றான் முன்னை காட்டிலும் அழுத்தமாய் மாதவன்.
“கல்யாணம் மட்டும் தான் வாழ்க்கையாடா மாதவா… இந்த வாஜ்பாய்… காமராஜர்… அப்துல்கலாம் எல்லாம்…” என ஆரம்பித்தவனை, வெட்டவா குத்தவா என்பதைப் போல முறைத்துப் பார்த்தான் மாதவன்.
“இந்த வாஜ்பாய்… கலாம் கதையெல்லாம் இங்க வேண்டாம்… அவங்க வாழ்க்கைக்கு எல்லாம் ஒரு லட்சியம் இருந்துச்சு… உன் வாழ்க்கையோட லட்சியம் என்னடா…” என்றான் கடுப்பாய் மாதவன்.
“எனக்கு என்னடா… அம்மா… நீ… பாப்பா… அகரன்… பூக்குட்டி எல்லாரும் இருக்கீங்களே… இன்னும் என்ன வேணும்…” என்றான் இலகுவாய் நேசன்.
“நீ வீம்புக்கு பேசறனு உனக்கே நல்லா தெரியும்… உன் தங்கச்சிய கொண்டு வந்து வீட்டுல விட்டுட்டு போறேன்… அவ ஓனு உக்காந்து ஒப்பாரி வைப்பா… சமாளி… இவன் வயசுல இருக்கவன் எல்லாம் கல்யாணம் பண்ணி நாலு புள்ள பெத்துட்டான்… இவன் என்னடானா கல்யாணம்னு பேச்ச எடுத்தாலே கப்சா விட்டுட்டு சுத்தறான்… இவன் குடும்பத்துக்கு வாக்கப்பட்டு நான் தான் சீரழியுறேன்… எல்லாம் என் நேரம்…” புலம்பியபடியே மாதவன் விறுவிறுவென முன்னே நடக்க, வேகமாய் அவனை நெருங்கி கரத்தை பிடித்துக் கொண்டவன் பார்வையில் இறைஞ்சுதல்.
தாயின் கண்ணீரையும் புலம்பலையும் கூட தாங்கிக் கொள்பவனுக்கு, தங்கையின் சிறு முகவாட்டம் கூட பொறுக்காது. விழிக்கு விவரம் தெரிவதற்கு முன்பே, விபத்து ஒன்று அவர்களின் தந்தையை பறித்துக் கொள்ள, அதன்பின் இயல்பாகவே தந்தைக்கான ஸ்தானம் நேசனை சேர்ந்திருந்தது.
“உனக்கு கூட என்னை புரியலையாடா மாதவா…” என்றவனின் குரலில் இருந்த வருத்தமும் இயலாமையும் பரிதவிப்பும் மாதவனின் நெஞ்சையும் சுட தான் செய்தது. நேசனின் எல்லா சூழ்நிலையிலும் மாதவன் உடன் இருந்திருக்கிறான்; துணை நின்றிருக்கிறான். அவனை விட வேறு யாருக்கு நேசனின் நிலை புரிந்துவிடப் போகிறது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதே! எத்தனை ஆழமான ரணம் என்றாலும், அதைக் கடந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி தானே ஆக வேண்டும்.
“புரிஞ்சதால தான் இத்தனை வருஷம் அமைதியா இருந்தேன்… ஆனா அது தான் தப்புனு இப்ப தோணுது… அப்பவே உன்ன கட்டாயப் படுத்தியாவது ஒரு கல்யாணத்த பண்ணி வச்சிருந்தா நீயும் இன்னைக்கு பொண்டாட்டி புள்ளைங்கனு சந்தோஷமா இருந்திருப்ப… நாங்களும் நிம்மதியா இருந்திருப்போம்…” என்றான் பெருமூச்சோடு.
பதிலில்லை நேசனிடம். என்றாவது இப்படியொரு நாள் வருமென்று தெரியும். ஆனால், அதற்காக திருமணம் என்ற பந்தத்திற்குள் அவனால் நுழைய முடியுமா என்றால், முடியாது என்று தான் அறுதியிட்டு கூறியது மனம். இதுநாள் வரை இத்தனை தூரம் கட்டாயப்படுத்தி மாதவனும் பேசியதில்லை. நேசன் பேச்சை மாற்ற முயற்சித்தாலே, புரிந்து கொண்டு திருமணப் பேச்சை அப்படியே விட்டுவிடுவான். ஆனால், சில மாதங்களாக அவனின் பேச்சிலுமே, ‘நீ சம்மதித்தே ஆக வேண்டும்…’ என்ற நேரடி வற்புறுத்தல் இருந்தது.
“இந்த தடவ நல்ல சம்பந்தம் வந்துருக்குடா சிவா… பொண்ண முதல பாத்து பேசு… புடிச்சுருந்தா அடுத்த ஸ்டெப் போகலாம்… பாக்கற அன்னைக்கே கையில தாலிய குடுத்து கட்டுனா சொல்ல போறோம்…” அழகாய் அவனுக்கு தூண்டில் விரித்தான் மாதவன்.
வேண்டாம் என்ற தீர்மானத்தில் இருக்கும் போது, எதற்காக இதெல்லாம் என்பது தான் நேசனின் எண்ணம்.
அவனின் அமைதியை சாதகமாக எடுத்துக் கொண்டவன், “நீ பொண்டாட்டி புள்ளைங்கனு கண்ணு நிறைக்க குடும்பமா இருந்தா தானேடா எங்களுக்கும் சந்தோஷம்…” அவனின் மூளையை கழுவும் வேலையை செவ்வனே தொடங்கி இருந்தான் மாதவன்.
இன்னும் தீவிர குரலில் அவன் உணர்ச்சி பெருக்கோடு பேசிக் கொண்டே நடக்க, “இடையில இடையில இந்த மானே… தேனே… பொன்மானே இதெல்லாம் சேத்துக்கோ மாப்பிள்ள… இன்னும் நல்லா இருக்கும்…” என கேலியாய் சொன்னவனை முறைத்துக் பார்த்தான் மாதவன்.
“அடங்குடா… என்னைக்கு நீ ஃப்ரீனு சொல்லு… நாம பொண்ணு பாக்க போகலாம்…” இவர்களாய் ஒரு நல்ல நாள் பார்த்து வைத்திருந்தால், அன்று பார்த்து வேலை இருக்கிறதென்று ஆயிரெத்தெட்டு காரணங்களை அடுக்குவான். அதனால் முன்னெச்செரிக்கையாய் அந்த பந்தை அவனிடமே நகர்த்தி இருந்தான் அவன்.
“சார் என்கிட்ட பேசிப் பேசியே ரொம்ப டயர்டாகி இருப்பீங்க… காபி குடிச்சுட்டே மீதிய பேசலாம் வாங்க…” நண்பனின் கை பற்றி இழுத்தபடியே உணவகம் ஒன்றிற்குள் நுழைந்தான் நேசன். அவனுக்குமே ஓயாது மூளை சலவை செய்பவனிடம் இருந்து சின்னதொரு இளைப்பாறல் வேண்டியிருந்தது.
இருவரும் ஓரிடத்தில் அமர்ந்து அவர்களுக்கான குழம்பியை சொல்லவும், “பொண்ணு பேரு…” என மீண்டும் தொடங்கி இருந்தான் மாதவன்.
அதே நேரம் அவர்களுக்கு முன்பிருந்த மேசையில் இருந்து, “உள்ளம் உருகுதய்யா…” என இசை கசிந்துருக தொடங்கி இருந்தது.
– நேசம் ஒளிரும்…
No comments yet.