இமைகளை தட்டி தட்டி மெல்ல துயில் களைந்து எழுந்தாள் இதழ்கனி. எவ்வித பதட்டமும் பயமும் இன்றி தான் கடத்தி வைக்கப்பட்டிருக்கிற இடத்தில் இருந்து எழுந்து நிதானமாக பார்வையை சுழற்றினாள் இதழ்கனி.
“என்ன இப்பலாம் இவனுக நமக்கு மயக்க மருந்து தர்றத நிறுத்திட்டானுக.. மயக்க மருந்து தராமலே நமக்கு இப்பிடி தூக்கம் வருது…” என தனக்குள்ளே பேசியபடி எழுந்து சோம்பல் முறித்தாள் இதழ்கனி. அறையின் ஒரு மூலையில் இருந்த பாத்ரூம் போன்ற அமைப்பிற்குள் சென்று முகம் கழுவி வந்து அறையின் கதவை திறக்க முயற்சித்தாள் இதழ்கனி.
எவ்வளவு முயற்சித்தும் கதவு திறக்க முடியாமல் போக… கதவை ஓங்கி தட்டினாள். எவ்வளவு தட்டியும் திறக்காமல் போக… சோர்ந்து போய் மீண்டும் கட்டிலில் சென்று அமர்ந்தாள் இதழ்கனி.
“என்னய உள்ள வச்சு பூட்டிட்டு இவனுக எங்க போய்ட்டானுக? ஒருவேளை நம்ம ப்ளான கண்டுபுடிச்சு இருப்பானுகளோ… ச்சே ச்சே அந்த அளவுக்கு லாம் இந்த தொரைக்கு மூளை இல்ல.. அப்புறம் எதுக்கு நம்மள உள்ள வச்சு பூட்டி இருக்கானுக? என்னவா இருக்கும்?” என யோசித்தவாறே அறையின் குறுக்கும் நெடுக்குமாக யோசித்தவாறு நடந்தாள் இதழ்கனி.
சிறிது நேரம் கழித்து அறையின் வெளியே பூட்டு திறக்கும் சத்தம் கேட்டு வாயிலை பார்த்தவாறு நின்றாள். மனைவியை காண சென்ற பாலய்யா, இதழ்கனியை உள்ளே வைத்து பூட்டி விட்டு வந்த தைரியத்தில் சற்று தாமதமாகவே வந்து அவளது அறையை திறந்து விட்டான்.
கதவை திறந்து விட்டு நிற்கும் பாலய்யாவை இடுப்பில் கை வைத்து முறைத்தபடி, ” உன் பொண்டாட்டிய பாத்துட்டு வர இவ்ளோ நேரமா? நாளைக்கிலாம் இப்பிடி பண்ணுனா அந்த தொரைக்கிட்ட போட்டு குடுத்துருவேன் பாத்துக்க..” எனக் கத்தினாள்.
“கொஞ்சமாச்சும் கடத்தி வந்து வச்சு இருக்கானே ங்கிற பயம் இருக்கா? என்னமோ சொந்த வீட்ல இருக்கற மாதிரி அதட்டி பேசுற?” பாலய்யா.
“பயமா? எனக்கா? வாய்ப்பே இல்ல… இந்த உலகமே சிதறி போனாலும் பயப்படக் கூடாது னு என் தலைவர் சொல்லி இருக்காரு…” என அறையின் வாசலில் நின்ற பாலய்யாவை சற்று நகர்த்தி விட்டு வெளியே வந்து நேற்று அமர்ந்த இருக்கையில் கால் மேல் போட்டு அமர்ந்தாள் இதழ்கனி.
“உன் தலைவரா? எவன்? அந்த எதிர்கட்சியில இருக்குற பன்னாட தான? ” பாலய்யா.
“இங்க பாரு என் தலைவர பத்தி தப்பா பேசாத…” இதழ்கனி.
“ஆமா அவன் ஒரு மொள்ளமாறி… அவன பத்தி பேச என்ன இருக்கு? இங்க பாரு அவன பத்தி இனி ஒத்த வார்த்தை பேசுனாலும் உன் நாக்க அறுத்துருவேன் பாத்துக்க…” பாலய்யா.
“என்னது என் தலைவர பத்தி பேச தடை போடுறியா? இதுக்கெல்லாம் பயந்துற மாட்டா இந்த கனி… இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும்,
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே னு என் தலைவர் பாடி இருக்காரு… அவரு சிஷ்யை என்னய நீ பயமுறுத்துறியா? ” இதழ்கனி.
“என்னது பாடி இருக்காரா? ஆமா… இப்ப நீ பேசுனது என்ன பாஷை?” பாலய்யா.
“விளங்கிரும்… ஏன்டா பாலய்யா நீ பள்ளிக்கூடம் பக்கம் லாம் போய் இருக்கியா?” இதழ்கனி.
“பள்ளிகொடத்துக்கு போனா பேய் புடிச்சுரும் னு என் அம்மா சொல்லி இருக்கு…” பாலய்யா.
“இதென்னடா புது கதையா இருக்கு?” இதழ்கனி.
“கதை இல்ல… நெசம்…” பாலய்யா.
“ரைட்டு விடு… நீ நெசமுனே வச்சுக்க… பாரதியார தெரியுமா?” இதழ்கனி.
“எங்க ஊருல ஏசு கோவில்லாம் இல்ல…” பாலய்யா.
“அட நாசமா போறவனே… பாதிரியாருக்கும் பாரதியாருக்கும் வித்தியாசம் தெரியாத கூமுட்ட பயலா இருக்குறவன் லாம் என்னய கடத்தி வச்சு மிரட்டிட்டு இருக்கான்…” என தலையில் அடித்துக் கொண்டாள் இதழ்கனி.
“நா எங்க உன்னய மிரட்டுறேன்? நீ தான் ஜாலியா டூர் வந்த மாதிரி உக்காந்து என்னைய கெட்ட வார்த்தையில திட்டிட்டு இருக்க…” பாலய்யா.
“என்னது கெட்ட வார்த்தையில திட்டுனேனா? இது எப்போ?” இதழ்கனி.
“ஆஆ.. இப்ப தான்… பள்ளிக்கொடம் ங்கிறது லாம் கெட்ட வார்த்தை…” பாலய்யா.
“அப்ப சரி… பள்ளிக்கூடம் ங்கிறத லாம் கெட் வார்த்தை னு சொல்ற உன் கிட்ட லாம் என் தலைவர பத்தி பேசுனேன் பாத்தியா என்னய சொல்லனும்…” இதழ்கனி.
“இங்க பாரு என்னய நீ மொதல்ல பேசுன மாதிரி கெட்ட வார்த்தையில கூட திட்டிக்க… ஆனா என் காது கேக்க அந்த எதிர்கட்சி பன்னாடய பத்தி பேசாத… அப்புறம் நா மனுஷன இருக்க மாட்டேன்…” பாலய்யா.
“இப்ப மட்டும் நீ என்ன மனுஷனாவா இருக்க?” என வாய்க்குள் முனுமுனுத்துவிட்டு, “டேய் முட்டாள் முண்டம்… என்னோட தலைவர் நீ சொல்ற ஆள் இல்ல…. என்னோட தலைவர் நம்ம நாட்டு சுதந்திரத்துக்காக போராடுனவரு…” என்றாள் இதழ்கனி.
“சுதந்திரத்துக்காக போராடுனவரா? ஓஓஓ… காந்தி காலத்து ஆளா உன் தலைவரு? அவரு வேற பாஷை பேசுறவரா?” பாலய்யா.
“ஏதேய்… வேற பாஷை பேசுறவரா?” இதழ்கனி.
“ஆமா… இப்ப தான நீ அவரு சொன்னாரு னு என்னமோ வேற பாஷையில பேசுன?” பாலய்யா.
“கடவுளே…” எனக் கத்தியபடி, “ஆமா… உனக்கெப்பிடி காந்திய தெரியும்?” என்றாள் இதழ்கனி.
“அவரு பொறந்த நாளு னு சொல்லி தான அன்னக்கி ஒரு நாள் சாராயம் குடுக்க மாட்டேன்ங்குறாங்க… அன்னக்கி மட்டும் ப்ளாக் ல சரக்கு ரேட் எவ்ளோ அதிகமாக விப்பானுக தெரியுமா? அதுக்கு காரணமான ஆள மறக்க முடியுமா?” பாலய்யா.
“அய்யோ… காந்தி தாத்தா… எவ்ளோ பெரிய மகான் நீயி… உன்னய இப்பிடி போய் ஞாபகம் வச்சு இருக்கானே… இதுல என் தலைவரு தமிழ்ல எழுதுன பாட்டு வேற பாஷையாம்… கடவுளே…” என வெளிப்படையாகவே புலம்பினாள் இதழ்கனி.
அப்பொழுது, “என்ன பேச்சு சத்தம் லாம் பலமா இருக்கு?” எனக் கேட்டபடி அங்கு வந்தான் துரை.
“வா… வா… தொர… என்னடா உன்னய இன்னும் காணோம் னு பாத்தேன்…” என ஆரவாரத்துடன் துரையை வரவேற்றாள் இதழ்கனி.
“ஏய்.. உன்னய நா கடத்தி வச்சு இருக்கேன். அது நியாபகம் இருக்கா?” துரை.
“ப்ச்… இல்லயே துரை…” என உதட்டை பிதுக்கினாள் இதழ்கனி.
“ச்சை…உன் கிட்ட லாம் மனுஷன் பேசுவானா?” துரை.
“இவ்ளோ நேரம் பாலய்யா தான் என் கிட்ட பேசிட்டு இருந்தான்… அப்ப அவன் மனுஷன் இல்லயா?” என சிரித்தாள் இதழ்கனி.
“ஏய் வாய மூடுடி…” எனக் கத்தினான் துரை.
“ஹா ஹா ஹா… உன்னய கோப படுத்தி பாக்க ரொம்ப ஜாலியா இருக்கு துரை. நா கூட உன்னய ரொம்ப நேரமா காணோம்னதும் என் அண்ணே தான் உன்னய எதுவும் பண்ணிட்டானோ னு நினைச்சுட்டேன். பரவாயில்ல எனக்கு டைம் பாஸ் ஆக நீ வந்துட்ட…” இதழ்கனி.
“ஹா.. ஹா.. உன் அண்ண என்னய புடிக்கிறதாவது… அதெல்லாம் இந்த ஜென்மத்துல நடக்காது. உன் அண்ண, அவன் பொண்டாட்டி, அவ தம்பி, அவ ப்ரண்ட், உன் அண்ண ப்ரண்ட் னு எல்லாரும் க்ரவுண்ட்ல தான் விளையாடிட்டு இருக்கானுக. நா இப்ப நெனச்சாலும் உன் அண்ணன கொத்தா தூக்கிருவேன்… தங்கச்சிய காணோம் ங்கிற எண்ணமே இல்லாம கமிஷனர் ங்கிற பொறுப்பும் இல்லாம கிரிக்கெட் விளையாடிட்டு இருக்கான். அவன போய் நீ நம்பிட்டு இருக்க?” என நக்கலாக சிரித்தான் துரை.
“அட லூசு கூமுட்ட… என் அண்ண ஒரு விஷயம் பண்ணா அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். சரி… அதெல்லாம் உனக்கு புரியாது… இதெல்லாம் விடு… என் குடும்பம் இங்க உன் கண்ணு முன்னாடி தான் இருக்கு. ஆனா உன் குடும்பம்? ” இதழ்கனி.
“ஏய்… என் குடும்பத்துக்கு என்ன?” துரை.
“உனக்கு பத்து வயசுல ஒரு பொண்ணு இருக்குறதா கேள்விபட்டேன்…” என திமிராக பேசினாள் இதழ்கனி.
“ஏய்… நா யாருனு தெரியாம என் கிட்ட பேசிட்டு இருக்க… “என அவளை விரல் நீட்டி எச்சரித்தான் துரை.
“எனக்கு நீ யாருனு ரொம்ப நல்லா தெரியும். உன் பொண்ணுக்கு நீ யாருனு தெரியுமா?” இதழ்கனி.
“ஏய்…” என அவ்வறை அதிர கத்தினான் துரை.
“ஏன்? ஏன் கத்துற? காது கொய்யுனு இருக்கு. பக்கத்துல தான இருக்கேன்?” என காதை ஒரு விரலால் ஆட்டியபடி, ” பாத்து துரை… நீ என்னய கடத்துன மாதிரி உன் பொண்ண என் அண்ண தூக்கி இருக்க போறான். அவன் தங்கச்சி வந்துட்டா நியாய தர்மம் லாம் பாக்க மாட்டான். அவன் இவ்ளோ அசால்ட்டா கிரிக்கெட் விளையாடுறான் னு நீ சொல்லுறத பாத்தா எனக்குத் தெரிஞ்சு… உனக்கு பெருசா ஏதோ ஆப்பு வச்சுட்டான் னு நெனக்கிறேன்… இன்னும் அது உன் காதுக்கு வராம வச்சு இருக்கான் போல…” என நிதானமாக கூறினாள் இதழ்கனி.
“ஏய்…” என கோபத்தில் என்ன பேசுவது என அறியாமல் கத்தினான் துரை.
“உன் குடும்பம் ஸேப்பானு மொதல்ல கேளு டா வெண்ண… அத விட்டுட்டு சும்மா சும்மா என் காதுக்குள்ள வந்து ஏய் ஏய் னு கத்தாத…” இதழ்கனி.
அதைக் கேட்ட துரை எதுவும் கூறாமல் கோபத்துடன் வேகமாக அங்கிருந்து சென்றான் துரை. அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த பாலய்யா, “ஆத்தாடி… இவ என்ன தொரையையே இந்த மிரட்டு மிரட்டி ஆட்டி வைக்குறா…” என ஆச்சரியத்துடன் இதழ்கனியைப் பார்த்தான்.
அவள் துரையை மட்டுமல்ல அவன் தலைவர் பார்த்தசாரதியின் கண்ணிலும் விரலை விட்டு ஆட்டுவிப்பவள் என்பதை அறியாமல் போனான் பாலய்யா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.