நாளைய நிகழ்வை எண்ணி மகிழ்ந்த நிலாவின் மனதில் சற்று முன் வீட்டில் நடந்த எந்த ஒரு பேச்சும் பாதிக்காமல் சிரிப்புடனே சமையலறையில் நுழைந்து தனக்கு தெரிந்தவாறு சகோதரனுக்கும் தன் சரி பாதி ஆனவனுக்கும் சேர்த்து சமைக்க தொடங்கினாள் நிலா. அலமேலு அயர்ச்சியில் உறங்க சென்றிருக்க… வள்ளி குற்ற உணர்வுடன் நிலாவையே பார்த்திருந்தாள். கதிர்வேல், நிலாவை சந்திக்க வெட்கி சாய்வு நாற்காலியில் கண் மூடி அமர்ந்து நடப்பதை அனைத்தையும் அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அபி, நிலாவின் சமையலுக்கு உதவி செய்தபடியே, “ஏன்க்கா மாமாவ வெளியில படுக்க சொல்ற? மாமா பாவம் தான?” என்றான்.
“அதெல்லாம் ஒரு பேச்சுக்கு தான்டா… அப்புறம் எப்போதும் போல உன் மாமா என் ரூம் ல தான் இருப்பாரு…” என சிரித்தாள் நிலா.
“அது எப்பிடி க்கா?” என நிலாவை ஆச்சரியமாக பார்த்தான் அபி.
“எது டா?” நிலா.
“முன்ன லாம் நீ இப்பிடி சிரிச்சும் பாத்தது இல்ல… இப்பிடி நீ பேசியும் பாத்ததும் இல்ல. மாமா வந்து உன்னய மாத்திட்டாரா?” அபி.
“யாரு சொன்னா நா முன்னாடி இப்பிடி பேசி சிரிச்சது இல்ல னு? இசை கிட்ட கேட்டு பாரு… நா எப்பவும் ஒரே மாதிரி தான் இருக்கேன். நீ தான் உன்னோட பார்வைய மாத்தி இருக்க… அதான் உனக்கு எல்லாம் புதுசா தெரியுது… நா எப்போதும் உன் அக்கா தான் டா…” என செல்லமாக அபியின் மண்டையில் கொட்டினாள் நிலா.
“சரி… ஒத்துக்கிறேன்… ஆனா உன் முகத்துல தெரியுற இந்த ஒளிவட்டத்துக்கு என் மாமா தான காரணம்?” அபி.
“இல்லவே இல்ல… நீ தான் காரணம். ஒவ்வொரு அக்காவுக்கும் தன்னோட தம்பி தங்கச்சி தான் மொத கொழந்த.. அப்பிடி பாத்தா நீ என்னோட மொத கொழந்த… என்னோட கொழந்த என்னைய புரிஞ்சு எனக்காக என்னோட நிக்குது ங்கிற கர்வம் தான் இப்பிடி என் மொகத்துல ஒளிவட்டமா தெரியுது…” எனக் கூறி அழகாக தோளை குலுக்கி கண் சிமிட்டினாள் நிலா.
“அய்யோ அக்கா…” என நிலாவை ஓடிச் சென்று அணைத்து கலங்கிய தன் விழிகளை தமக்கையின் கழுத்தில் மறைத்துக் கொண்டான் அபி.
“உங்க சென்டிமென்ட் அ கொஞ்சம் தள்ளி வச்சுட்டு எங்களுக்கு கொஞ்சம் சோறு போடுறீங்களா?” என்றவாறு இளா வந்து அங்கு நின்றான். அவனுடன் நிலா அபியை அணைத்து நிற்பதை பொறாமையுடன் பார்த்தவாறு வந்து நின்றான் சேது.
திரும்பி சேதுவை பார்த்த அபி, “என்ன சேது அண்ணே… எங்கயோ கருகுற ஸ்மெல் வருது…” என நிலாவின் அணைப்பில் இருந்து விலகாமல் சேதுவை மேலும் வெறுப்பேற்றினான்.
“ம்ம்… உன் மூக்குல தான் டா… மொதல்ல என் தங்கச்சிய விட்டு தள்ளி நில்லுடா பரதேசி…” சேது.
“ஏன்? ஏன்? என் அக்கா… நா கட்டிப்புடிப்பேன்.. இப்பிடி முத்தமும் குடுப்பேன்… வேணுனா நீயும் உன் தங்கச்சிக்கு குடு…” என நிலாவின் நெற்றியில் முத்தமிட்டான் அபி.
இவர்கள் இருவரும் நிலாவை வைத்து உரிமைச் சண்டை நடத்திக் கொண்டிருக்க… நிலாவோ சத்தமில்லாமல் கண்களால் இளாவிற்கு காதல் பாடம் எடுத்துக் கொண்டிருந்தாள். எப்பொழுதும் போல் அதை சரியாக கவனித்த சேது, “இவனுங்க ஒருத்தனுக.. சுத்தி யாரு என்ன நடக்குது னு பாக்காம ரொமான்ஸ் பண்ணிட்டு இருக்க வேண்டியது…” என தலையில் அடித்துக் கொண்டு, “யம்மா தங்கச்சி… கொஞ்சம் சோறு போடுமா… பசிக்குது…” என தட்டை கையில் ஏந்தியபடி கத்தினான்.
அதில் புன்னகையுடன் அபியை சற்று விலக்கிவிட்டு செய்து இருந்த சாப்பாட்டை மொத்தமாக ஒரு பெரிய தட்டில் எடுத்துக் கொண்டு வெளியில் திண்ணைக்கு வந்தாள் நிலா. அவள் பின்னே, “தங்கச்சி… சோறு… சோறு… சோறு…” என பின்பாட்டு பாடியபடி ஒரு கையில் இளாவையும் இழுத்துக் கொண்டு சென்றான் சேது.
திண்ணையில் நன்றாக சம்மணமிட்டு அமர்ந்தவள் சோற்றை பிசைந்து உருட்டி சேதுவின் வாயின் அருகே நீட்டினாள் நிலா. அதை எதிர்பாராத சேது, நெஞ்சு முழுதும் நேசம் நிறைய கண்ணீர் ததும்பும் கண்களுடன் வாயை திறந்து தங்கையின் கையால் உணவை பெற்றுக் கொண்டான். புன்னகையுடன் சேதுவின் கண்ணீரை துடைத்தபடி அடுத்த உணவு கவளத்தை அபியிடம் நீட்டினாள் நிலா.
அபியும் ஆசையாக பெற்றுக் கொண்டான். மூன்றாவது உருண்டை உருட்டி இளாவிற்கும் உணவூட்ட காதலுடன் அவள் விரல்களையும் சேர்த்து உண்டான் இளா. சற்று முன் அபியை அணைத்து நிற்பதை கண்டு முகிழ்ந்து இருந்த ஏக்கமும் ஏமாற்றமும் நிலா கையால் உணவுண்டதில் சேதுவிற்கு காணாமல் போனது. மூவருக்கும் முழு மனதுடன் நிலா உணவூட்டி மகிழ… அப்பொழுது, “எனக்கும்” என்ற குரல் கேட்டு அனைவரும் திரும்பி பார்த்தனர். அங்கு, நடந்து வந்ததில் சற்று மூச்சு வாங்க கவினை கையில் பிடித்தபடி நின்று கொண்டிருந்தாள் இசை.
“ஹேய்… இந்த ராத்திரி நேரத்துல தனியா அங்க இருந்து நடந்து வந்து இருக்க?” என பதறியபடி இசையின் கை பிடித்தான் இளா.
“ம்ஹூம்…” என கழுத்தை நொடித்தவாறு நிலாவின் அருகில் கால் நீட்டி அமர்ந்தாள் இசை.
“அத்தம்மா… எனக்கும்…எனக்கும்…” என உற்சாகத்துடன் நிலாவின் மடியில் உரிமையாக அமர்ந்தான் கவின்.
“என் பப்லுக்கு இல்லாததா..” என சிரிப்புடன் கவினுக்கும் இசைக்கும் ஊட்டி விட்டாள் நிலா.
“இதே மாதிரி தான் எப்போதும் எனக்கு இசை ஊட்டி விடுவா…” என கடந்த நாட்களின் நினைவில் புன்னகையுடனே அனைவருக்கும் ஊட்டி விட்டாள் நிலா.
“என் தங்கத்துக்கு நான் தான் ஊட்டி விடுவேன் எப்போதும்…” என இளாவையும் சேதுவையும் சிறிதும் கண்டுகொள்ளாமல் நிலாவிற்கு உணவூட்டினாள் இசை.
அப்பொழுது அனைவருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வந்து வைத்துவிட்டு அவர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுவதை ஆசையாக பார்த்து விட்டு யாரும் அறியாமல் அனைவருக்கும் சேர்த்து தன் கைகளால் நெட்டி முறித்துவிட்டு உள்ளே சென்றாள் வள்ளி. அதை கவனித்த இளா சிறு சிரிப்புடன் இசையின் பாதங்களை மெதுவாக அமுக்கி விட்டான்.
இசை, சுகமாக காலை இளாவிடம் குடுத்துவிட்டு நிலாவிடம் உணவு வாங்கி சாப்பிட்டாள். சேதுவோ தங்கை பாசத்தில் மெய் மறந்து நிலாவையே ரசித்து இருந்தான்.
நேற்றைய இரவு பொழுதின் இனிய நினைவுகளில் மூழ்கிய இளாவும் இசையும் வீசும் வெம்மையான காற்றில் இன்றைய நிகழ்விற்கு வந்தனர்.
முதலில் சேதுவும் இளாவும் பேட்டிங் செய்ய வந்தனர். இளாவிற்கு நிலா ஐந்து பந்துகளும் அபி ஐந்து பந்துகளும் போட வேண்டும். அதே போல் சேதுவிற்கு நிலா ஐந்து பந்துகளும் அபி ஐந்து பந்துகளும் வீச வேண்டும். யாராவது ஒருவருடைய விக்கெட்டை எடுத்து விட்டாலும் ஆட்டம் முடிந்தது. இவ்வாறு விதிமுறைகளை வகுத்துக் கொண்டு விளையாட தயாராகினர்.
சுற்றி நின்று உற்சாக குரல் எழுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் சிறார்களுக்கு நடுவே இளா பேட்டிங் செய்ய வர… அவனுக்கு தனது முதல் பந்தை வீச வந்தாள் நிலா. அவள் வீசிய முதல் பந்தில் ஒரு சிக்ஸை பறக்க விட்டு இசையைப் பார்த்து சிரித்தான் இளா.
அதில் வெறுப்படைந்த இசை, “கமான் மச்சி… அந்த பொய்க்கோழிய அவுட் பண்ணு…” என நிலாவை ஊக்குவித்தாள்.
நிலா வீசிய அடுத்த பந்தில் மூன்று ரன்கள் ஓடி சேர்த்தனர் இளாவும் சேதுவும். இவ்வாறு நிலாவும் அபியும் சேர்ந்து இளாவிற்கு வீசிய பத்து பந்துகளில் இளா இருபத்திரண்டு ரன்கள் சேகரித்து இருந்தான் இளா. அடுத்ததாக சேது பேட்டிங் செய்ய வந்தான். அவனுக்கு முதலில் அபி பந்து வீச… அபி வீசிய ஐந்து பந்துகளில் தட்டு தடுமாறி ஏழு ரன்களை எடுத்தான் சேது. அடுத்து சேதுவிற்கு பந்து வீசுவதற்காக நிலா வந்தாள். அவள் சேதுவிற்கு வீசிய முதல் பந்தில் தூக்கி அடித்தான் சேது. அப்பந்து அவன் தலைக்கு மேலே உயரமாக செல்ல… அபியும் நிலாவும் கேட்ச் பிடிக்க தயாராகி பந்து கீழே வர மேல் நோக்கி பார்த்திருக்க… பந்து நேராக சேதுவின் உச்சந்தலையில் வந்து எகிற.. பேட்டை கீழே போட்டுவிட்டு தன் கையிலேயே பந்தை பிடித்தான் சேது.
பந்தை பிடித்தது மட்டுமில்லாமல் பந்தை பிடித்த மகிழ்ச்சியில், “அவுட்… அவுட்… ” என சந்தோஷமாக கத்தினான் சேது.
“டேய் முண்டம்… அவுட் ஆனது நீதான்டா…” என மறு முனையில் இருந்த இளா கத்தினான்.
இளா கத்துவது எதுவும் காதில் வாங்காமல், “அவுட்… அவுட்…” என அவன் அவுட் ஆனதை அவனே கொண்டாடிக் கொண்டிருந்தான் சேது.
“டேய் முட்டா பீசு அண்ணா… நீ தான் ஆவுட் ஆகிட்ட…” என தலையில் அடித்துக் கொண்டான் அபி.
அதில் சற்று நிதானித்த சேது, “ங்கே…” என விழித்தபடி இசையை பார்த்தான். அவள் மரத்தடியில் இருந்தவாறு, “த்தூ…” என கேவலமாக பார்த்தாள்.
“ப்ச்…அரசியல் வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா… “என துடைத்துக் கொண்டு , “அப்புறம் என்ன நீங்க பேட்டிங் பண்ணுங்க… நாங்க எடுத்த ரன்ன எடுக்குறீங்களா னு பாத்துருவோம்…” என அபியின் தோள்களை தட்டினான் சேது.
“குப்புற விழுந்தாலும் மீசையில மண் ஓட்டாத மாதிரி நிக்கிற பாத்தியா… வேற லெவல் டா அண்ணா நீயி…” என சிரித்தான் அபி.
“போடா போடா… பேட்டிங் க்கு…” என அபியிடம் பேட்டை அளித்து விட்டு இளாவிடம் பந்து வீச சொல்லி அவனருகில் வந்தான் சேது.
“பாத்துடா தங்கச்சி பாசத்துல வழுக்கி விழுந்துறப் போற…” என சேதுவின் செயலுக்கான அர்த்தத்தை நன்கு அறிந்த இளா தன் நண்பனிடம் பேசினான்.
“கண்டுபுடிச்சுட்டியா மச்சான்? ஹி ஹி ஹி ஹி… என் தங்கச்சியோ அவ வீசுற பந்தோ… அடிக்க மாட்டேன் டா…” என தன் தலை முடியை கோதியபடி பீல்டிங் செய்ய சென்றான் சேது.
தன் நண்பனின் தங்கை பாசத்தை கண்டு சிரித்தவன் தன் உடன்பிறவா தங்கையை நோக்கினான் இளா. அங்கு இவனையே முறைத்தபடி அமர்ந்து இருந்தாள் இசை.
இளாவும் சேதுவும் இணைத்து இருபத்தொன்பது ரன்கள் எடுத்து இருக்க… நிலாவும் அபியும் இணைந்து இருபது பந்துகளில் முப்பது ரன்கள் எடுத்தால் வெற்றி என்பதுடன் பேட்டிங் செய்ய நின்றான் அபி. மறுமுனையில் தீவிரமான முகத்துடன் தன் பேட்டை வைத்துக் கொண்டு நின்றிருந்தாள் நிலா. க்ரவுண்டிற்குள் காலடி எடுத்து வைத்துவிட்டால் அவள் கண்ணிற்கு பந்து மட்டுமே புலப்படும். சுற்றுபுறமோ சொந்தமோ எதுவும் தெரியாது. அவ்வாறே நிலா நின்றிருக்க… தனது முதல் பந்தை வீசினான் இளா. அதை அழகாக பவுண்டரி க்கு தள்ளி இருந்தான் அபி.
பத்து பந்துகளில் பன்னிரண்டு ரன்கள் எடுத்து இருந்தான் அபி. அடுத்த பேட்டிங்க்கு நிலா முன்னே வந்து நின்றாள். நிலாவிற்கு பந்து வீச இளா முன்னே வர… சிரித்துக் கொண்டாள் நிலா. இளா வீசிய முதல் பந்திலேயே போல்ட் ஆகி அவுட் ஆனாள் நிலா.
நிலா அவுட் ஆனதை நம்ப முடியாமல் சேதுவும் அபியும் அதிர்ச்சியுடன் நிலாவை பார்க்க… அவளோ புன்னகையுடன் பேட்டின் நுனியால் தன் இதயத்தை தொட்டு இளாவை நோக்கி காட்டி இடுப்பு வரை குனிந்து தலை வணங்கி நின்றாள் நிலா. இளாவோ நின்ற இடத்திலேயே முழந்தாளிட்டு அமர்ந்து தன் தலையை மண்ணில் முட்டி நிலாவின் பாதம் வணங்கினான்.
தன் தோழியை நன்கு அறிந்த இசை, புன்னகையுடன் நிலாவைப் பார்த்தாள். இருவரின் செயலையும் மேட்சை வேடிக்கை பார்த்த சிறார் முதல் இளைஞர்கள் வரை விசிலடித்து அவர்களின் காதலுக்கு அட்சதை தூவினர்.
“டேய் அண்ணா… இப்ப இங்க என்னடா நடக்குது?” அபி.
“வேற என்ன? எப்போதும் போல உன் அக்கா மாமாவோட ரொமான்ஸ் தான்…” என சிரித்தான் சேது.
“உன் தங்கச்சி பாசத்த விடவாடா அண்ணா இது பெருசு?” என சேதுவை பாசத்துடன் அணைத்துக் கொண்டான் அபி.
போட்டி முடிவின்படி இளாவும் சேதுவும் வெல்ல… தோற்ற உணர்வே இல்லாமல் பெருமையுடன் மகனின் உதவியுடன் எழுந்து அவர்களை நோக்கி வந்தாள் இசை. அன்ன நடையிட்டு இளாவிடம் வந்தவள், “டேய் அண்ணே எந்திரிடா…” என்றாள்.
“இசை…” என பாசத்துடன் அவளை அணைத்துக் கொண்டான் இளா.
அதை நெகிழ்வுடன் நிலா பார்க்க… அவளை தன் தோளில் பாசத்துடன் சாய்த்துக் கொண்டான் சேது. எந்த பக்கம் போவது என முழித்துக் கொண்டிருந்த கவினை தூக்கி சந்தோஷத்துடன் முத்தம் கொஞ்சினான் அபி.
மைதானத்தில் கூடி இருந்த அனைவரும் இவர்களின் பாச பிணைப்பைக் கண்டு பல்வித உணர்வுகளுடன் கடந்து சென்றனர். விளைவு இரண்டு நாள் கழித்து தெரிய வந்தது.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.