விடியற்காலையில் நிலாவின் டார்லிங் புன்னகையுடன் பூஞ்சோலை கிராம விளையாட்டு மைதானத்தை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. அங்கு ஒரு சுவாரஸ்யமான போட்டி ஒன்று நடக்க போவதை ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தது நிலாவின் டார்லிங்.
அதிசயமாக கிரிக்கெட் மட்டையை கையில் தூக்கி பிடித்து சரி பார்த்துக் கொண்டிருந்தான் இளா. அவன் அருகே சேதுவும் கையை காலை ஆட்டி வார்ம் அப் செய்து கொண்டிருந்தான். இவர்கள் இருவரும் இவ்வாறு ஒருபுறம் இருக்க… அவர்களுக்கு சற்று தூரத்தில் கிரிக்கெட் பந்தை தூக்கிப் போட்டு பிடித்துக் கொண்டிருந்தாள். அவள் அருகே பந்து வீசி தன்னை தயார் செய்து கொண்டிருந்தான் அபி. இவர்கள் நால்வரையும் ஒரு சேர மரத்தடியில் அமர்ந்து இசையும் கவினும் கவனித்துக் கொண்டிருந்தனர். அதிலும் இசை, இளாவை தன் பார்வையால் எரித்துக் கொண்டிருக்க.. அதை ஓரக் கண்ணால் கவனித்தபடி இசையின் மீது உள்ள பயத்தில் கிரிக்கெட் மட்டையை இறுக்க பிடித்து பந்தை அடிப்பது போல் அசைத்துக் கொண்டிருந்தான் இளா.
இவர்கள் இருவரையும் தீவிரமாக கவனித்தபடி தனது வார்ம் அப் வேலையை ஈடுபாட்டுடன் செய்து கொண்டிருந்தான் சேது. அவன் அவ்வாறு ஈடுபாட்டுடன் செய்வது நிலாவிற்கு சிரிப்பை வரவழைக்க… சிரிப்பை வெளியில் காட்டாமல் இருக்க எப்பொழுதும் போல் முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சேதுவை சுற்றியே தன் பார்வை வட்டத்தை வைத்திருந்தாள் நிலா.
அவள் என்னதான் எப்பொழுதும் போல் தன் முகத்தை இறுக்கமாக வைத்திருந்தாலும் அவளின் குண்டு விழிகளில் சிரிப்பு அப்பட்டமாக தெரிய… தன் தமக்கையின் சிரிப்பை ஆசையுடன் தன் விழிகளில் தெளிவாக படம் பிடித்துக் கொண்டான் அபி.
அபி அழகாக பந்து வீசி பயிற்சி செய்து கொண்டிருப்பதை ஒரு வித வியப்புடன் கன்னத்தில் கை வைத்து அபியையே விடாமல் தன் விழிகளில் தேக்கி கொண்டிருந்தான் கவின். இவ்வாறு ஒவ்வொருவரின் பார்வையும் ஒருவரை ஒருவர் பிணைந்து இருந்தாலும் தங்களின் செயலில் கவனமாக இருந்தனர்.
ஆனால் அவர்கள் அறியாதது, ஊரில் உள்ள பாதி கிரிக்கெட் ரசிகர்களை தாங்கள் அறியாமலே தங்களின் பக்கம் ஈர்த்து இருப்பதை.
நிலா, அபி, இளா மற்றும் சேது ஆகிய நால்வரும் சத்தமில்லாமல் ஒரு கிரிக்கெட் போட்டிக்கு தயார் ஆகி கொண்டிருக்க… விசயம் அறிந்த அக்கிராம கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகத்துடன் அவர்களை சுற்றி நின்று கவனித்துக் கொண்டிருந்தனர். பின்னர் எவ்வளவு நாள் தான் அவர்கள் நிலாவின் ஆட்டத்தையே ரசித்துக் கொண்டிருப்பது? அவளின் காதல் கணவனின் ஆட்டத்தை ரசிக்க ஆவல் கொண்டிருந்தனர்.
இளா பெரிய ப்ளேயர் என ஊர் முழுவதும் பரவி இருந்தது. பாவம் அவன் என்ன ப்ளேயர் என்று அறியவில்லை. அவர்களைப் போலவே அப்போட்டியை காண நிலாவின் டார்லிங்கும் ஆவலுடன் காத்திருந்தது.
அதே நேரம் இளா, இசையை ஏக்கத்துடன் பார்க்க… அப்பொழுது இசையும் இளாவை கோபத்துடன் முறைத்துக் கொண்டிருக்க.. இருவரின் பார்வையும் ஒரே நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது. அங்கு கண்ணுக்கு தெரியாமல் கண்ணின் வழியே ஒரு தீப்பொறி உருவானது.
இருவரின் எண்ணமும் நேற்றைய இரவை நோக்கி பயணித்தது. நேற்று மாலையில் இளா பேசிய அனைத்தையும் அலைபேசியின் வழியே இசையை கேட்க செய்திருந்தாள் நிலா. அதை அறிந்த இளாவின் நாக்கு பயத்தில் தந்தியடித்தது.
“என்ன சேரா இப்பிடி பயப்படுற?” என இளாவைப் பார்த்து குறும்புடன் கேட்டாள் நிலா.
“ஏன்டி குட்டிச்சாத்தான் கிட்ட என்னைய கோத்து விட்ட? அய்யோ… என்னய கொல்லப் போறாளே…” என தலையில் கை வைத்தான் இளா.
“அந்த குட்டிச்சாத்தான் யாராம் நிலா?” என அலைபேசியின் வழியே இசையின் குரல் கொடூரமான தொனியில் கேட்க… அன்பின் பயத்தில் அரண்டான் இளா.
“வேற யாரு மச்சி? நீதான்…” என இளாவைப் பார்த்து பழிப்பு காட்டியவாறே கூறினாள் நிலா.
நிலா பழிப்பு காட்டிய அழகில் மயங்கி அவளின் இதழை கொய்ய ஆவல் எழ… தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொண்டான் இளா.
இளாவின் பார்வை மாற்றத்தை உணர்ந்தவள், “மச்சி… உன் அண்ண பார்வையே சரி இல்ல…” என பதமாக இசையிடம் போட்டுக் கொடுத்தாள் நிலா.
“அடியேய் குள்ளக் கத்திரிக்கா… உனக்கு தாலி கட்டுனத தவிற நா வேற என்னடி பண்ணேன்?” என காதலுடன் அலுத்துக் கொண்டான் இளா.
“டேய்.. டேய்… நா லைன் ல தான்டா இருக்கேன்… என்னைய நடுவுல வச்சுட்டு நீங்க லவ் பண்ணிட்டு இருக்கீங்க? ” என அலைபேசியின் வழியே கத்தினாள் இசை.
“சொல்லு மச்சி…” என இளாவின் பார்வையில் கறைந்தபடி இசையிடம் பேசினாள் நிலா.
“இந்தாடி… நீ இப்ப அந்த பொய்க்கோழி பொண்டாட்டி இல்ல.. இந்த இசையரசி தோஸ்து நீ…” இசை.
“எப்போதும் மொதல்ல நா உன் தோஸ்து தான் மச்சி. அப்புறம் தான் யார இருந்தாலும்…” என இளாவை சிரிப்புடன் பார்த்தவாறே நிலா கூற… நிலாவின் அச்சிரிப்பில் மயங்கியவன் இரு கரம் நீட்டி அணைப்பிற்கு அழைப்பு விடுக்க… பாந்தமாய் வந்து பதி அவனின் பருந்து போன்ற விரிந்த கை பரப்புக்குள் புகுந்து கொண்டாள் நிலா.
“நெசமாவா நிலா?” இசை.
“நெசமா தான்டி…” என கணவனின் கை அணைப்பினில் இருந்தபடி கூறினாள் நிலா.
“அப்புறம் ஏன்டி அந்த பொய்கோழிய போய் ஒட்டிட்டு நிக்கிற?” என்ற இசையின் கேள்வியில் திடுக்கிட்டு தன் கையில் இருந்த ஃபோனை பார்க்க… சத்தமாக சிரித்தான் இளா.
“உன் ஃபோன ஏன்டி பாக்குற? என் புருஷன் ஃபோன பாருடி…” என இசை கோபத்துடன் பல்லைக் கடிக்க… அப்பொழுதுதான் தங்களுக்கு சற்று தொலைவில் அபியுடன் நின்றவாறு இருவரையும் விதவிதமாக ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருக்கும் சேதுவை கவனித்தாள் நிலா.
“நா இவ்ளோ சொல்லியும் அந்த பொய்கோழி கூட ஒட்டி நின்னுட்டு இருக்க?” இசை.
அதில் இளாவிடம் இருந்து நிலா விலகி நிற்க… “அன்னக்கி நீ தான சொன்ன வேற தங்கச்சி இருந்தா தூக்கி போட்டு மிதிப்பேன் னு… இப்ப அத செய்டி…” என இசை நிலாவிற்கு ஆணையிட்டாள்.
அதைக் கேட்ட நிலாவும் இளாவை அடிக்க தயாராக…”நோ… நோ… இதெல்லாம் ரொம்ப தப்பு…” என அலறினான் இளா.
“என்ன? என்ன தப்பு? ஏற்கனவே ஒரு தங்கச்சி இருக்குறத மறைச்சு என் இசைய ஏமாத்தி இருக்கீங்க நீங்க… அதுக்கு கண்டிப்பா தண்டனை உண்டு..” நிலா.
“அப்பிடிச் சொல்லுடி என் தங்கம்… டேய் பொய்கோழி… என்னால அங்க நேருல வர முடியல. வந்து இருந்தேனா தெரிஞ்சு இருக்கும்… நிலா…போடு டி அவன…” இசை.
அதைக் கேட்ட நிலா, இளாவை அடிக்க வர… அப்பொழுது சரியாக குறுக்கே வந்து நின்றான் சேது.
“நீ உன் ப்ரண்ட்க்காக அடிக்க வந்தா… நா என் ப்ரண்ட்க்காக தடுக்க வருவேன்…” என இளாவின் முன்னே நின்றான் சேது.
“டேய் என்னடா?” என இசை அதட்ட… “தைரியம் இருந்தா இப்ப வர சொல்லு டா மாப்ள…” என இசையை வெறுப்பேற்றினான் இளா.
“டேய் மச்சான்… உன் திருவாய மூடிட்டு சும்மா இரு… நிலா அடியில இருந்து உன்னைய காப்பாத்த தான் நா குறுக்க வந்தேன். அதுக்காக என்னயவே அவக்கிட்ட அடி வாங்க வச்சுறாத ராசா உனக்கு புண்ணியமா போகும்…” என இளாவின் காதை கடித்தான் சேது.
“என்னடா அங்க முனுமுனுப்பு? சண்டைக்கு நாங்க ரெடி டா பொய்க்கோழி…” இசை.
“சண்டை வேணா… மேட்ச் வச்சுக்கலாமா?” என அவர்களின் குறுக்கே வந்தான் அபி.
“அட இது நல்லா இருக்கே… மேட்ச் ல ஒரு வேளை நாங்க ஜெயிச்சா இசை பழையபடி என் கிட்ட பேசனும்…” இளா.
“அப்ப நாங்க ஜெயிச்சா?” நிலா.
“நீங்க என்ன தண்டனை குடுத்தாலும் நா ஏத்துக்கிறேன்…” இளா.
“என்னால இப்போதைக்கு விளையாட முடியாது னு தான இந்த ப்ளான் போடுற பொய்க்கோழி?” இசை.
“அதான் நா இருக்கேனே இசை… உனக்கு பதிலா நா விளையாடுறேன்…” அபி.
“பிறகென்ன? நிலாவும் அபியும் ஒரு டீம்.. நானும் சேதுவும் ஒரு டீம்…” இளா.
“என்ன இசை உனக்கு ஓகே யா?” என ஆர்வமுடன் வினவினாள் நிலா.
“டபுள் ஓ.கே மச்சி…” என குதூகலமாக பதிலளித்தாள் இசை.
“சரி… நாளைக்கி காலையில மேட்ச்… சொன்னது ஞாபகம் இருக்கட்டும்..” இளா.
“அதெல்லாம் ஞாபகம் இருக்கு..”என நிலாவும் இசையும் ஒரே குரலில் கூறினர்.
“அப்புறம் என்ன? ஒரு சூறாவளிய அடக்கி வச்சாச்சு… நா வீட்டுக்கு கெளம்புறேன்…” என சேது புறப்பட… “மேட்ச் முடியிற வரைக்கும் எந்த பயலும் வீட்டு பக்கம் எட்டி பாக்க கூடாது… ப்ரண்ட் னு போய் நின்னான் ல.. அவன் கூடவே போத்திட்டு படுக்க சொல்லுடி நிலா…” என ஊடலுடன் கத்தினாள் இசை.
“அரசி… உன் மச்சான் பாவம் டி…” என பாவமாக கூறினான் சேது.
“மச்சானாவது மண்ணாங்கட்டியாவது… மேட்ச் முடியிற வரைக்கும் கப் சிப் னு இருக்கனும்…” என ஆணையிட்டவாறு அலைபேசியை துண்டித்தாள் இசை.
“எல்லாம் உன்னால தான்டா… கிராதகா… ” என இளாவை அடிப்பது போல் அணைத்துக் கொண்டான் சேது.
“இந்தாங்க போர்வை தலைகாணி… உங்க ரெண்டு பேரையும் திண்ணையில படுக்க சொன்னுச்சு அக்கா…” என போர்வையையும் தலையணையையும் கொண்டு வந்து கொடுத்தான் அபி.
“எங்கடா அவ?” இளா.
“அக்கா எப்பவோ உள்ள போயிருச்சு… ஆங் அப்புறம் மேட்ச் முடியிற வரைக்கும் கப் சிப் னு இருக்கனும் னு சொல்ல சொன்னா..” அபி.
“வேற என்ன சொன்னா உன் அக்கா…” என அந்த அக்கா என்பதில் அழுத்தம் குடுத்து கேட்டான் இளா.
“கொஞ்ச நேரத்துல சாப்பாடு ரெடி ஆகிரும்… ரெண்டு பேரும் சாப்பிட்டு போத்திட்டு படுக்க சொன்னா…” என அபி உள்ள சென்று விட… “டேய் அது போத்திட்டு இல்ல டா…” என இளாவும் சேதுவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரே குரலில் சோகமாக கூறினர்.
இருவர் கூறியதையும் உள்ளிருந்து கேட்டு சிரிப்புடன் நகர்ந்தாள் நிலா. நாளைய நிகழ்வை ஆவலுடன் எதிர்பார்க்க தொடங்கினாள் சேரனின் நிலா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.