நிலா -37

Chellammal Bharathi | 29 Dec 2025 | Share

      அபியிடம் திடமான நெஞ்சுடன் பேசிய நிலா தனது பையை கையில் எடுத்தாள். 

     “அக்கா போகாத க்கா…” என நிலாவின் கை பிடித்தான் அபி. 

     “நீ ஏன்டா அவள போகாத னு சொல்ற? அவள தே ஒருத்தனுக்கு தார வாத்து குடுத்தாச்சு ல… அதுக்கு மேல இவளுக்கு இங்க இடம் இல்ல. அப்பிடி அவ ஒழுக்கமானவளா இருந்தா அவ புருஷனே வரட்டும். அவன் வந்து சொல்லட்டும். அதுக்கு அப்புறம் பாக்கலாம்…” என பாக்கை இடித்தபடி அலமேலு கூற… “என் புருஷன பத்தி பேச இங்க யாருக்கும் தகுதி இல்ல. இப்ப என்ன இந்த வீட்ல நா இருக்க கூடாது… அவ்ளோ தான?” என பையை எடுத்துக் கொண்டு திரும்பினாள் நிலா. 

     திரும்பிய நிலாவின் விழிகளில், கண்கள் கலங்கிய நிலையிலும் கர்வமாக தன்னவளைப் பார்த்தபடி நிலைவாயிலில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இளஞ்சேரன் தெரிந்தான். 

      தன்னவனின் விழிகள் கலங்கி இருப்பதை கண்ட நிலா, “சேரா… என்ன ஆச்சு?” என மற்ற அனைத்தையும் மறந்து தன்னவனிடம் ஓடினாள். 

      அவளின் சத்தத்தை கேட்டதும் தான் அங்கு இளா நிற்பதையே உணர்ந்தனர். அபியும் திரும்பி பார்த்து விட்டு, ” மாமா… ” என அழுகையுடன் ஓடிச் சென்று இளாவைக் கட்டிக் கொண்டான். 

      “அதான் நா வந்துட்டேன் ல… நா பாத்துக்கிறேன்… ” என அபியின் முதுகில் தட்டிக் கொடுத்து அவனை தன் கையணைப்பில் வைத்துக் கொண்டான் இளா. 

      “என்ன ஆச்சு சேரா? ஏன் உன் கண்ணெல்லாம் கலங்கி இருக்கு? ” என இளாவின் கண்களை பரிவுடன் கேட்டாள் நிலா. 

      “ஸாரிடி… என்னால தான எல்லாம்? ” என நிலாவை மென்மையாக அணைத்து விடுவித்தான் இளா. 

     “என்ன எல்லாம்? இப்ப எதுக்கு ஸாரி?” என ஒன்றும் புரியாமல் விழித்தாள் நிலா. 

      ” என்னால தான நீ இப்ப இவங்க கிட்ட பேச்சு வாங்கிட்டு இருக்க…” இளா. 

      “அட இதுவா? இதெல்லாம் எனக்கு புதுசா என்ன? அப்புறம் ஸாரி சேரா… என்னால உன் வேலை தொந்தரவு ஆகிருச்சு…” நிலா. 

     “லூசு… உனக்கு அப்புறம் தான் எல்லாமே… நீ இங்கயே இரு. நா பேச வேண்டியத பேசிட்டு வந்துர்றேன். நாம போகலாம்… ” என இளாவின் வார்த்தையைக் கேட்டு நிலா அங்கேயே நிற்க.. அபிதான் திகைத்துப் போனான். 

     மெதுவாக உள்ளே நடந்து வந்தவன் நேராக வள்ளியிடம் சென்று நின்றான் இளா. அவன் அருகில் வந்து நின்றதும் நெஞ்சம் பதட்டம் கொள்ள பயத்துடன் இளாவை ஏறிட்டாள் வள்ளி. 

       “ஏன் அத்த? நைட் வர்றது நாந்தான் ங்கிறது உங்களுக்கு தெரியாது ல?” இளா. 

       “நீங்.. நீங்களா? நீங்க ஏ.. ஏன் யார்… யாருக்கும் தெரியாம அர்த்த ராத்திரியில வர்றீங்க?” என திக்கி திணறி கேட்டாள் வள்ளி. 

       “என் பொண்டாட்டிய பாக்க நா எப்ப வேணுனாலும் என் பொண்டாட்டி வீட்டுக்கு வருவேன். நீங்க யாரும் என் நிலாவ இப்பிடி பேசிறக் கூடாது னு தான உங்க கிட்ட அன்னக்கே நான் வர்றத சொல்லிட்டேன். அப்புறம் இப்ப எதுக்கு இப்பிடி ஒரு பிரச்சனைய கிளப்பி விட்டு இருக்கீங்க?” இளா. 

       “என்னது? நீங்களா மாப்ள? நீங்க வர்றது இவளுக்கு முன்னாடியே தெரியுமா?” என அதிர்ச்சியுடன் வினவினான் கதிர்வேல். 

        “ஒரு சில விஷயங்கள் தெரியாம இருக்கலாம் மாமா. ஆனா வீட்ல நடக்குற எதையுமே தெரியாம இருக்குறது ரொம்ப தப்பு மாமா…” என கதிர்வேலை முறைத்தான் இளா. 

        “என்ன தான் இருந்தாலும் ஒரு ஆம்பள இப்பிடி யாருக்கும் தெரியாம ராத்திரி மட்டும் வர்றது நல்லாவா இருக்கு?”  என தண்டட்டியை ஆட்டிக் கொண்டே வினவினார் அலமேலு. 

        ” யாருக்கும் தெரியாமலா? நா வர்றது இதோ உங்க மருமகளுக்கு தெரியும். என்னோட வேலை அப்பிடி. அதுனால தான் என் பொண்டாட்டி ய இங்க கொண்டு வந்து விட்டேன். இல்லனா இப்பிடிபட்ட கொடூரமானவங்க இருக்குற இடத்துல என் பொண்டாட்டிய விட எனக்கு என்ன ஆசையா என்ன?” இளா. 

         “கொண்டு வந்து விட்டியா? ராத்திரியில அவ மட்டும் தான் வந்தா…” அலமேலு. 

         “நான் அவ பின்னாடியே வந்து அவ வீட்டுக்குள்ள நுழைஞ்சதும் தான் போனேன் னு என் பொண்டாட்டிக்கு தெரியும்…” இளா. 

         உண்மையும் அதுதானே… அன்று இரவு சேதுவின் வண்டியின் பின்னே வந்து அல்லவா விட்டு சென்றான்.

        “எதுக்கு இப்பிடி இல மற காயா செய்யனும்? வெளிப்படையாவே கொண்டு வந்து விட்டுட்டு போகலாமே?” அலமேலு. 

         “அது என்னோட சொந்த விஷயம். அத உங்க கிட்ட சொல்ல வேண்டிய அவசியம் இல்ல…” என அலமேலுவிடம் கூறியவன், ” இப்ப அவ உங்க பொண்ணு இல்ல… என்னோட பொண்டாட்டி… அவள பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. மீறி அவள சீண்டுனா உள்ள தூக்கி போட்ருவேன்…” என வள்ளியையும் கதிர்வேலையும் மிரட்டி விட்டு நிலாவின் கை பிடித்து அழைத்தான் இளா. 

         “மாமா… ஒரு நிமிஷம்…” என இளாவை தடுத்து நிறுத்தினான் அபி. 

         ” எங்கள தடுத்து நிறுத்தாத அபி… எனக்கு இங்க இருக்க புடிக்கல…” என முந்திக் கொண்டு பதில் அளித்தாள் நிலா. 

         “நா உன் கிட்ட பேசல.. என் மாமா கிட்ட பேசுறேன்… மாமா.. நிலா இங்க தான் இருப்பா. நீங்க உங்க வேலய முடிச்சிட்டு எப்ப வேணுனாலும் வந்து அவள கூட்டிட்டு போங்க. ஆனா இப்ப வேணாம். எனக்கு இந்த வீட்ல எவ்ளோ உரிமை இருக்கோ அத விட அதிகமான உரிமை நிலாக்கு இருக்கு. அவளுக்கு மேட்ச் வேற இருக்கு. ப்ளீஸ் மாமா எனக்காக… இந்த பிரச்சனைக்காக அவள கூட்டிட்டு போகாதீங்க…” அபி. 

         “ஆமா மாப்ள… நானும் புரியாம பேசிட்டேன். என்னய மன்னிச்சுருங்க… வள்ளி ஏன் இப்பிடி பண்ணுனா னு தெரியல… நிலா இங்கயே இருக்கட்டும்… நிலா இப்ப வீட்ட விட்டு போனா குற்ற உணர்ச்சியே என்னய கொன்ரும்…என் மனசாட்சி கிட்ட இருந்து என்னைய காப்பாத்துங்க மாப்ள…” என வயது வித்தியாசத்தை கருத்தில் கொள்ளாது இளாவை கை எடுத்து கும்பிட்டான் கதிர்வேல். 

       “அய்யோ என்ன மாமா நீங்க? எனக்கு அப்பா அம்மா இல்ல… என்னோட அப்பா அம்மாவா உங்கள தான் நினைக்கிறேன். அத்த தான் ஏன் இப்பிடி பண்ணுனாங்க னு தெரியல…” என வள்ளியைப் பார்த்தான் இளா. 

      வள்ளி குனிந்த தலை நிமிரவே இல்லை. திருமணமாகி கணவன் இல்லாமல் நிலா மட்டும் வந்து வீட்டில் இருப்பதைக் கண்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் நிலாவை வாழா வெட்டியாக வந்து விட்டாள் என தவறாக பேச… பெற்ற நெஞ்சம் தாங்காமல் இரவு தன் மருமகன் வந்து செல்வது அறிந்தும் அதை ஊரார் அறிந்தால் இன்னும் தவறாக போய் விடுமே என்றெண்ணி அதை வைத்தே கதிர்வேலிடம் கூறி நிலாவை வீட்டை விட்டு அனுப்ப முடிவு செய்தாள் வள்ளி. தன் மகளை எவ்வளவு வேண்டுமானாலும் திட்டுவாள் தான் வள்ளி ஆனால் ஒரு நாளும் அவளது நடத்தையை சந்தேகித்தது கிடையாது. ஏனேனில் வள்ளிக்குத் தான் நிலாவின் குணத்தைப் பற்றி நன்றாக தெரியுமே… எந்த ஆணாவது தன்னிடம் நெருங்கினால் அவனை அடித்து துரத்தி விட்டு தான் அடுத்த வேலை பார்ப்பாள் என்பதை நன்கு அறிந்தவள் வள்ளி. இருந்தும் மகளின் நல்வாழ்விற்காக என்றெண்ணி ஏதோ செய்ய போய் இப்பொழுது முற்றிலும் தவறாக வந்து நிற்கிறது. அதை எண்ணி வள்ளி வருந்தியபடி தலை குனிந்து நிற்க அவளை சிறிதும் கண்டு கொள்ளவில்லை கதிர்வேல். 

       “நீங்க யாரு என்ன சொன்னாலும் என்னால இங்க இருக்க முடியாது…” என நிலா திட்டவட்டமாக கூற… அதைக் கேட்ட இளா, ” அவளுக்கே விருப்பம் இல்ல அபி… நா என்ன பண்றது?” என அபியைப் பார்த்தான்.

       “அதான் மாப்ளக்கு வேலை இருக்கு னு சொன்ன ல நிலா…  அவரு வேலை முடியுற வரைக்கும் இங்கயே இரு மா… ” என நிலாவின் கை பிடித்து கெஞ்சினான் கதிர்வேல். 

       “போற தரித்திரியத்த ஏன்டா கதிரு வெத்தல பாக்கு வச்சு கூப்பிடுறீங்க?” என தெனாவெட்டாக அலமேலு கூற… அதைக் கேட்ட நிலா நிதானமாக செய்த செய்கையில் அபி வாயை பிளந்து நிற்க… இளா புன்னகையுடன் நிற்க… அலமேலு அதற்கு மேல் பேச முடியாமல் வாயடைத்து போனார். 

                             (சேரநிலா மிளிர்வாள்…)

                           -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.