நிலா -36

Chellammal Bharathi | 28 Dec 2025 | Share

       கணவனிடம் சவால் விட்டு நிறைவான மனநிலையுடன் வீட்டிற்குள் நுழைந்த நிலாவை வீட்டின் பேரமைதியே வரவேற்றது. எப்பொழுதும் வெளியில் சென்று விட்டு வீட்டிற்குள் நுழைந்தால் போர்கொடி தூக்கி கொண்டு இருக்கும் வீடு இன்று எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பதைப் பார்த்து ஏதோ சரி இல்லாதது போல் தோன்றியது நிலாவிற்கு.

      தனக்கு முன்னே வீட்டுக்கு வந்த அபி எதையோ கண்டு திகைப்புடன் நிற்பதை பார்த்த நிலா, “என்ன அபி… வீட்ல யாரையும் காணோம். இந்நேரம் ஏதாவது ஒன்னு நடந்து இருக்கனுமே…” என அபியின் தோளை தொட்டாள். 

     “என்ன அபி? பேசாத நானே இவ்ளோ பேசுறேன்… உனக்கு என்ன ஆச்சு?” என அபியை லேசாக அசைத்தாள் நிலா. 

      நிலாவிற்கு பதில் அளிக்காமல் தரையை நோக்கி விரல் காட்டினான் அபி. அங்கு நிலாவின் அனைத்து பொருட்களும் பையில் எடுத்து வெளியில் வைக்கப்பட்டிருந்தது. 

     “இப்ப எதுக்கு என்னோட பேக் எல்லாம் வெளில இருக்கு? யார் எடுத்து வச்சது?” என வீட்டினுள் பார்த்தவாறு நிலா கேட்க… “நாந்தான் வச்சேன்… அதுக்கு என்ன இப்ப?” என்ற திண்ணக்க குரலுடன் நிலாவின் முன்னே வந்தார் அலமேலு. 

        அவரைக் கண்டதும் அதுவரை இருந்த இலகுவான மனநிலை போய் இறுக்கமான மனநிலை உருவாக.. அதே இறுக்கமான முகத்துடன் அலமேலுவை ஏறிட்டாள் நிலா. 

        “என்ன? எதுக்கு னு பாக்குறியா? இனிமே உனக்கு இந்த வீட்ல இடம் இல்ல… அதுக்குத் தான் நடு வீட்ல எடுத்து வச்சு இருக்கேன்… இது எல்லாம் வாசலுக்கு போறதுக்குள்ள நீயா எடுத்துக்கும் மரியாதையா வெளில போய்ரு…” அலமேலு. 

        அதைக் கேட்டு அதிர்ந்த அபி, ” ஏன்?  எதுக்கு அக்கா வீட்ட விட்டு போகனும் அப்பத்தா?” என்றான். 

       “இந்த தரித்திரியத்த தான் கல்லியாணம் பண்ணி துரத்தி விட்டாச்சு ல.. அப்பொறம் எதுக்கு இங்க வந்து இருக்கா? ஆன பொம்பளயா இருந்தா புருஷன் கூட ல வந்து இருக்கனும். இவ திமிருத்தனத்துக்கும் ஆங்காரத்துக்கும் எந்த ஆம்பள வச்சு வாழுவான்? அதான் எண்ணி ஒரே வாரத்துல விரட்டி விட்டுட்டான். புருஷன் விரட்டி விட்டதும் ஜம்முனு வந்து இங்க உக்காந்துட்டா… இதுல நடு சாமத்துல இவ படுக்குற அறைக்குள்ள இருந்து பேச்சு சத்தம் லாம் வருது.. எவன் எப்பிடி வர்றான் போறான்னே தெரியல… ஒழுங்கு மரியாதையா மூட்ட முடிச்ச கட்டிட்டு கிளம்புடி..” அலமேலு. 

      “என்ன அப்பத்தா பேசுற நீ? சும்மா அக்காவ தப்பு தப்பா பேசாத.. நீ பேசுறது எனக்கே செம கோபம் வருது..” அபி. 

      “வயசுல பெரியவங்கள எதுத்து பேசுற பழக்கம் யார் கிட்ட இருந்து கத்துக்கிட்ட அபி? வாய அடக்கி பேசு…” என அதுவரை நடப்பதை உள்ளிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த வள்ளி வெளியே வந்தாள். 

       “வேற யார் கிட்ட இருந்து? அவனுக்கு முன்னாடி பொறந்து தொலச்சாளே… அவக்கிட்ட இருந்து தான் கத்துக்கிட்டு இருப்பான். இப்பலாம்  அவ பின்னாடியே தான சுத்துறான்..” என கழுத்தை நொடித்துக் கொண்டார் அலமேலு. 

        “ப்ச்.. என்னக்கா நீ இவ்ளோ பேசுறாங்க நீ அமைதியா இருக்க?” என ஆற்றாமையுடன் நிலாவைப் பார்த்தான் அபி. 

       அவர்கள் பேசுவதை தலையில் ஏற்றிக் கொள்ளாமல் விழிகளால் கதிர்வேலுவை இரு கூராக்கி கொண்டிருந்தாள் நிலா. அவரோ அங்கு நடப்பதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். 

       “அவ எப்பிடி பேசுவா? தப்பு செஞ்சவளால எப்பிடி வாயத் தொறக்க முடியும்? புருஷன் விரட்டி விட்டதும் பழையபடி இங்க வந்து ஆட்டம் போட ஆரம்பிச்சுட்டா… நடு சாமத்துல இவ கிட்ட வந்து கொஞ்சுறவன் யாருனு மொதல்ல கேளுடா பேராண்டி.. அக்கா அக்கா னு பின்னாடியே சுத்துறல.. கேளு உன் அக்கா லட்சணத்த.. ” அலமேலு. 

        “அப்பத்தா.. ரொம்ப அநியாயமா பேசுற.. அவளும் உன் பேத்தி தான அவள போய் சந்தேகப்படுற? அத்தோட அவ நைட் யார் கிட்ட பேசுறா ங்கிறத தெரியாம பேசாத.. நீ நெனக்கிற மாதிரி ஒன்னும் இல்லை… அவரு… ” என அபி கூற வருகையில்.. “அபி போதும்.. நிறுத்திக்கோ..” என தன் விழிகளை கதிர்வேலிடம் இருந்து மாற்றிக் கொள்ளாமல் அபியை கை நீட்டி தடுத்தாள் நிலா. 

        “என்னய ஏன் க்கா பேச கூடாது னு சொல்ற.. இங்க அம்மாவும் அப்பத்தாவும் உன்னய பத்தி தப்பு தப்பா பேசிட்டு இருக்காங்க.. அவங்கள எதுவும் சொல்லாம என்னய பேச கூடாது னு சொல்ற…” அபி. 

      “பேசட்டும் விடு அபி… எவ்ளோ நாள் பேசிற போறாங்க? பேசுறவங்கள விட பேசாம அமைதியா இருக்குறவங்க தான் ரொம்ப தப்பானவங்க…” என கதிர்வேலை பார்த்தாள் நிலா. 

       நிலாவின் பார்வை தந்தையின் மீது இருந்து திரும்பாததை கண்ட அபி, ” ஏன் ப்பா இப்பவும் அமைதியா இருக்கீங்க? அக்காவ பத்தி உனக்கு தெரியும் தான? இவ்ளோ நேரம் பேசுறத கேட்டுட்டு அமைதியா இருக்கீங்க?” என கதிர்வேலிடம் வினவினான். 

        “ஏன்னா அவ ரூம்ல நைட் ஆம்பள பேசுற  சத்தத்த நானே கேட்டு இருக்கேன் அபி…” என குற்றம் சாட்டும் பார்வையுடன் நிலாவை பார்த்தார் கதிர்வேல். 

         “ஐயோ அப்பா… நீங்களும் தப்பா நெனச்சுட்டு இருக்கீங்க.. அது வேற யாரும் இல்ல.. அது நம்ம… ” என அபி உண்மையை கூற வருகையில் மீண்டும் கை நீட்டி அபியை தடுத்தாள் நிலா. 

        “வேண்டாம் அபி.. நீ எதையும் சொல்ல வேண்டிய தேவை இல்லை. இது வரைக்கும் என்னய பீடை.. தரித்திரம் புடிச்சவ னு தான் பேசி இருக்காங்க… என்னய பெத்தவங்க தான ஒரு நாள் உண்மைய புரிஞ்சுப்பாங்க னு காத்துட்டு  இருந்தேன். நீ என்னய புரிஞ்சுக்கிட்ட… இதோ நிக்கிறாங்களே உன்னோட அம்மா… அவங்களும் என்னய அப்ப அப்ப புரிஞ்சுக்கிட்டாங்க… அப்புறம் இதோ.. உன்னோட அப்பா.. அவரு என்னய முழுசா புரிஞ்சுக்கிட்டாரு நினைச்சேன்… அப்பிடித்தான் நம்புனேன்… ஆனா எப்ப என்னோட கேரக்ட்டர சந்தேகப்பட்டு ஆணித்தரமா நம்புனாங்களோ அப்பவே எல்லாம் முடிஞ்சு போச்சு… இதுக்கு அப்புறம் இவங்க கிட்ட நா என்னய நிரூப்பிக்க வேண்டிய அவசியமே இல்ல… நா போறேன் அபி…” என செந்தனலாய் மாறிய முகத்துடன் கூறினாள் நிலா. 

       “எங்க போற க்கா? நீ என்னோட பொறுப்பு னு மாமா சொல்லி இருக்காரு.. நீ எங்கயும் போக கூடாது… உன்னய நா எங்கயும் விட மாட்டேன்…” என கலங்கிய கண்களுடன் நிலாவின் கை பிடித்தான் அபி. 

       “புரிஞ்சுக்க அபி… என்னால இனி இங்க இருக்க முடியாது. இப்பிடிலாம் இவங்க என்னய பேசுறதுக்கு பதிலா நா பொறந்து என் ஜாதகத்த எழுதுனப்பவே என்னய கொன்னு இருக்கலாம்..” என இகழ்வாக புன்னகைத்தாள் நிலா. 

       “என்ன பேச்சு பேசுற க்கா? இனி இப்பிடிலாம் பேசாத… சரி.. நீ எங்க போனாலும் நானும் உன் கூட வருவேன்.. உன்னய என்னால தடுக்க முடியாது.. அதே போல என்னய உன்னால தடுக்க முடியாது… ” என உறுதியுடன் கூறினான் அபி. 

       “நீ எதுக்கு அவ கூட போற அபி? இது உன்னோட வீடு.. உனக்கு இங்க முழு உரிமை இருக்கு..” கதிர்வேல். 

       “தயவுசெஞ்சு நீங்கலாம் என் கிட்ட பேசாதீங்க… அதான் உங்களுக்கு மரியாதை… ” என கதிர்வேலை முறைத்தான் அபி. 

       “அப்பா கிட்ட என்னடா குரல உசத்தி பேசுற?” வள்ளி. 

       “அவ பண்ணுன தப்புக்கு அவ வீட்ட விட்டு போறா.. அத்தோட இது அவ வீடும் இல்ல… இதுல நீ எதுக்கு குதிக்கிற பேராண்டி?” அலமேலு. 

      “எல்லாத்துக்கும் காரணம் நீதான் அப்பத்தா.. வயசான ஆளு னு கூட பாக்க மாட்டேன்.. மண்டையில ஏதாச்சும் தூக்கி போட்ருவேன்.. ” அபி. 

       “நானும் அப்பயில இருந்து பாத்துட்டு இருக்கேன் வாய் ரொம்ப நீளுது அபி உனக்கு… ” எனக் கத்தியபடி அபியை ஓங்கி அறைந்தாள் வள்ளி. 

       “நியாயமா நாந்தான் உன்னய அறைஞ்சு இருக்கனும்… நீ பெத்த பொண்ணயே வாய் கூசமா தப்பா பேசுற?  உன் நெஞ்சுல இத்தி கூட அவ மேல நல்ல எண்ணமே இல்லயா ம்மா?” என இயலாமையுடன் பேசினான் அபி. 

      “அப்பிடி அவ என்ன தப்பா பேசிட்டா?” கதிர்வேல்.

       “நீங்க எல்லாரும் பேசுறது எல்லாமே தப்புத் தான்.. எல்லாமே தப்பு தான்… நீங்க எல்லாரும் எந்த உரிமையில அவள நிக்க வச்சு அசிங்கப்படுத்திட்டு இருக்கீங்க? நீங்க அவள பெத்தீங்க… அவ்ளோ தான்… அவ கிட்ட ஒரு ரெண்டு நிமிஷமாச்சும் பாசமா பேசி இருக்கீங்களா? அவ ஏன் இவ்ளோ அழுத்தமா மாறுனா? எல்லாம் உங்களால தான்… உங்களால மட்டும் தான்.. இப்பிடி நீங்க நிலாவ பேசுறது மட்டும் மாமாக்கு தெரிஞ்சது.. அவரு என்னய மாதிரி பேசிட்டு இருக்க மாட்டாரு…” என விரல் நீட்டி எச்சரித்தான் அபி. 

      “என்னடா பெரிய மனுசனாட்டம் ரொம்ப துள்ளுற? அந்த ஆளே இவ சரி இல்ல னு தான துரத்தி விட்டு இருக்காரு.. அவருக்கு தெரியும் இவளோட லட்சணம்… ” அலமேலு. 

        அதுவரை அபி பேசியதை கேட்டு தன்னிரக்கத்தால் முகிழ்ந்த கண்ணீரை நெஞ்சுக்குள் போட்டு அடக்கியபடி கேட்டுக் கொண்டிருந்த நிலா, அலமேலு பேசியதும் சத்தமாக சிரித்தாள் நிலா. அதில் அதிக அளவு விரக்தி தான் நிறைந்து இருந்தது. அதை கவனித்த அபி, “அக்கா… ப்ளீஸ்.. தளராத க்கா…” என்றான். 

      “போடா லூசு… நா சோந்து போறிட்டேனா நா செத்துட்டேன் னு அர்த்தம்… ” என அபியைப் பார்த்து அழுத்தமாக புன்னகைத்தவள் பின் திரும்பி, ” வருத்தப்படாத அபி.. ஒரு நாள் இவங்க மூணு பேரும் இவ என் பொண்ணு னு வந்து என் கிட்ட நிக்க தான் போறாங்க..  அந்த நாள நா சீக்கிரம் வர வைப்பேன்… ஆனா அப்ப இன்பநிலா டாட்டர் ஆப் கதிர்வேலா இருக்க மாட்டேன்… அந்த அடையாளத்தையே மொத்தமா அழிச்சு முழுசா சேரநிலாவா சேரனோட நிலாவா மட்டும் தான் இருப்பேன்.. அப்ப இவங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது…” என அனைவரையும் அழுத்தம் திருத்தமாக பார்த்தவள் தனது பையை எடுத்துக் கொண்டு திரும்பினாள் நிலா. 

        திரும்பிய நிலாவின் விழிகளில், கண்களில் கலங்கிய நிலையிலும் கர்வமாக தன்னவளைப் பார்த்தபடி நிலைவாயிலில் சாய்ந்து நின்று கொண்டிருக்கும் இளஞ்சேரன் தெரிந்தான். 

                              (சேரநிலா மிளிர்வாள்…)

                          -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.