சில நாட்களாக தன் கட்டுப்பாட்டில் பொம்மையாக இருந்த சிறுமி மிகப் பெரிய ரௌடிகள் நெருங்க பயப்படும் துரையின் முன்னே மிகவும் சாதாரணமாக எவ்வித பயமும் இன்றி அவன் முன்னே கை நீட்டியபடி நிற்பதை வியப்பு கலந்த பயத்துடன் பார்த்திருந்தான் பாலய்யா.
தற்பொழுது அந்த சிறுமியையும் துரையையும் பார்க்கையில் அவள் தான் தங்கள் இருவரையும் கடத்தி வைத்திருப்பதாக பாலய்யாவின் மனதில் தோன்றியது. அதை விட அவள் இளஞ்சேரனின் தங்கை என கூறவும் மூச்சு விடவும் மறந்து நின்றான் பாலய்யா.
“என்ன துரை? ரொம்ப அமைதியா இருக்க?” என சிரிப்புடன் துரையை விடாமல் பார்த்தாள் இதழ்கனி.
“நீ இப்ப என்ன சொன்ன?” துரை.
“அதுவா? ஹாய் துரை… ஐ ஆம் இதழ்கனி… சிஸ்டர் ஆப் இளஞ்சேரன் ஐ பி எஸ்.. நைஸ் டூ மீட் யூ… ” என்றவாறு வலுக்கட்டாயமாக துரையின் கரம் பற்றி கை குலுக்கினாள் இதழ்கனி.
அதைக் கண்ட பாலய்யாவிற்கு உலகமே சுழல்வது போல் தலை சுற்றியது.
அதிர்ந்து நின்ற துரையைப் பார்த்த இதழ்கனி, “என்ன பேரச் சொன்னதும் உள்ளுக்குள்ள அதிருதா?” என கண்ணடித்து சிரித்தாள்.
“ஏய்…” எனக் கோவத்துடன் அவளை துரை அடிக்க முற்பட.. அதை எளிதாக தடுத்தபடி, “உன்னோட டைம் முடிஞ்சுருச்சு துரை.. இனிமே டைம் என்னோடது..” என திமிராக கூறினாள் இதழ்கனி.
“என்னடி டைம்? இது என்னோட கோட்டை.. இங்க நா வச்சது தான் சட்டம்.. தப்பிச்சு போனவ அப்பிடியே போய் இருக்கனும். அத விட்டுட்டு திரும்ப வந்து ரொம்ப தப்பு பண்ணிட்ட இதழ்கனி…” என விரல் நீட்டி எச்சரித்தான் துரை.
“அட போடா… பர்ஸ்ட் ஒரு விசயத்த நல்லா மண்டையில ஏத்திக்கோ. நீங்க யாரும் என்னைய கடத்தல. நானா இஷ்ட்டப்பட்டு தான் உங்க கூட வந்தேன். நானா வந்த எனக்கு எப்ப எப்பிடி இங்க இருந்து போகனும் னு எனக்கு தெரியும். ஆனா சத்தியமா எதிர்பாக்கல டா நீங்க என்னைய இங்க கொண்டு வருவீங்க னு.. நானே இங்க வரனும் னு தான் ஆசைப் பட்டேன்..” இதழ்கனி.
அவள் கூறியது துரைக்கு மிகுந்த அவமானமாக இருக்க..”ஏய்… ரொம்ப பேசுற நீ.. இப்ப இந்த நிமிஷம் உன்னைய கொன்னு போட்டாலும் கேக்க நாதி இல்ல.. உன்னைய கொன்னு பொதச்சுட்டு போய்ட்டே இருப்பேன்..” எனக் கத்தினான் துரை.
“தாராளமா கொன்னுக்கோ.. எல்லாத்துக்கும் தயாரா தான் வந்து இருக்கேன். என்னைய கொன்ன அடுத்த செகண்ட்டே உன் மினிஸ்டர் ஜெயிலுக்குள்ள இருப்பாரு.. நீ சமாதிக்குள்ள இருப்ப… நா சொல்றத நம்பலனா என்னைய கொன்னு டெஸ்ட் பண்ணி பாரு..” இதழ்கனி.
அதைக் கேட்டு துரை சற்று தயங்கி யோசிக்க… “என்ன தொர யோசிக்கிற இவ இந்த பேச்சு பேசுறா.. இவள கொன்னுட்டு தான் அடுத்த வேலை பாக்கனும்… ” என பாலய்யா முன்னே வந்தான்.
“வேண்டாம் பாலய்யா… இவ சொல்றது உண்மை தான். இவக் கிட்ட இருந்து இன்னும் நாம அந்த ஆதாரத்த எடுக்கல.. இவள விட அது தான் நமக்கு ரொம்ப முக்கியம்…” துரை.
“செம துரை.. நீ பொழச்சுக்குவ…” என சிரிப்புடன் இருக்கையில் அமர்ந்தாள் இதழ்கனி.
“இவளோட கை கால் எல்லாம் கட்டிப் போடு…” துரை.
“அந்த கஷ்ட்டம் எல்லாம் உனக்கு வேணாம்.. என் அண்ணா வர்ற வரைக்கும் நா இங்க இருந்து எங்கயும் போக மாட்டேன். ஏன்னா இந்த இடம் எனக்கு ரொம்ப புடிச்சு இருக்கு..” இதழ்கனி.
“ஓ.. அந்த போலீஸ்க்காரன் உன்னைய காப்பாத்த வருவான் னு நினைக்கிறியா? அது கண்டிப்பா நடக்காது..” துரை.
“இன்னும் என் அண்ணன பத்தி உனக்கு தெரியல..” இதழ்கனி.
“உங்க ரெண்டு பேருக்கும் தான் இந்த துரைய பத்தி சரியா தெரியல.. ஒரே நாளுல உன் குடும்ப மொத்தத்தையும் சிதைச்சுக் காட்டுறேன்…”என அங்கிருந்து வெளியேறினான் துரை.
துரையின் குரலில் இருந்த உறுதியில் இதழ்கனியின் உள்ளம் சற்று நடுக்கமுற அதை வெளிக்காட்டாமல் நக்கலாக சிரித்து வைத்தாள்.
அங்கிருந்து வெளியேறிய துரை தனது காரை நோக்கி சென்றான். அப்பொழுது அவனது அலைபேசி ஒலிக்க.. அதை எடுத்து காதில் வைத்தான்.
“ஹலோ….” துரை.
“….”
“வந்துட்டியா? சரி.. உள்ள வா…” துரை.
“….”
“இல்ல.. யாரும் இல்ல.. நீ உள்ள வரலாம்… ” என கூறியபடி அலைபேசியை துண்டித்தான் துரை.
சற்று நேரத்தில் இள வயதில் ஒருவன் துரை பங்களாவின் கேட்டை திறந்து உள்ளே நுழைந்தான். மெதுவாக நடந்து வந்தவன் அந்த பங்களாவின் பிரமாண்டத்தில் மிரண்டு விழித்தபடி பங்களாவினுள் நுழைந்தான்.
அங்கு ஹாலில் துரை அமர்ந்த இருப்பதைக் கண்டு மிகவும் தயங்கியபடியே வந்தான். துரையின் அருகில் முரளி முகத்தில் போட்ட கட்டுடன் நிற்பதைக் கண்டு அவன் தயங்கி நிற்க…”இவன் நம்ம ஆளு தான்.. நீ தாராளமா வரலாம்… ” என துரை அவனிற்கு தைரியம் அளிக்க.. தயக்க நடையுடன் துரையின் முன்னே வந்து நின்றான் அப்புதியவன்.
“வா சேகரா… நா சொன்ன வேலய சரியா முடிச்சுருவியா?” என தன் முன் தயக்கத்துடன் வந்து நின்றவனிடம் வினவினான் துரை.
“முடிச்சுருவேன் ஸார்..” என அமைதியாகவே பதில் அளித்தான் சேகரன்.
“சரி.. இவன் பேரு முரளி… இவன் உன்னைய சேக்க வேண்டிய இடத்துல சேத்துருவான்… வேலய முடிச்சிட்டு வந்து என்னைய பாரு.. வேலய முடிக்கலனா நீயே போய் செத்துரு.. இல்லனா என் கையில சித்திரவதை பட்டு தான் சாவ..” என அமைதியான குரலில் துரை மிரட்ட.. முரளி தான் நடுங்கி போனான்.
“இல்ல ஸார்.. அதுக்கு எந்த அவசியமும் வராது.. நா வேலய முடிச்சுருவேன்.. ” என எவ்வித பதட்டமும் இன்றி சாந்தமான குரலில் கூறினான் சேகரன்.
அவனது பதிலில் திருப்தி அடைந்த துரை, “முரளி… இவன் சேகரன்… இவன நம்ம பக்கத்து ஊரு கிரிக்கெட் டீம்ல சேத்து விட்டுரு.. மிச்சத இவன் பாத்துப்பான்..” என ஆணையிட… முரளிக்கு புரிந்து போனது சேகரன் என்பவன் குட்டச்சியை கொல்ல வந்திருப்பவன் என.
“ஆனா ஸார்… இவன பாத்தா….கொலை பண்ண வந்தவன் மாதிரி தெரியலயே.. நாம வேற ஆள செட் பண்ணலாமா?” என தயக்கத்துடன் துரையிடம் கேட்டவன் சேகரனை அவநம்பிக்கையுடன் பார்த்தான் முரளி.
“நா சொல்றத மட்டும் செஞ்சா போதும்.. எனக்கு ஆலோசனை சொல்ல உனக்கு தகுதி இல்ல முரளி… சொன்னத செய்..” என முரளியை முறைத்தான் துரை.
“சரிங்க ஸார்..” என சேகரனை அழைத்துக் கொண்டு கிளம்பினான் முரளி.
“என் கிட்டயே உன் வேலய காட்றியா போலீஸ்க்காரா… உன் குடும்பத்த காப்பாத்த முடியாம நீயே இந்த கேஸ விட்டுருவ..” என தனக்குள் கூறியபடி யாரோ ஒரு ரௌடியை ஃபோனில் அழைத்து, “அந்த இசைய கொன்ரு.. அவ வயித்துல இருக்குற புள்ள கூட பொழக்க கூடாது.. ” என ஆணையிட்டு விட்டு நிம்மதியாக சாய்ந்து அமர்ந்தான் துரை.
“பாக்கலாம் டா.. இப்ப எப்பிடி என் கிட்ட இருந்து தப்பிக்கிற னு..” என அவ்விடமே அதிர சிரித்தான் துரை.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.