நிலா -33

Chellammal Bharathi | 27 Dec 2025 | Share

      மண்டைக்குள் யாரோ விடாமல் ஓங்கி மணி அடிப்பதை போன்ற உணர்வு… கை கால்களை அசைக்க முடியாமல் யாரோ இறுக்கி பிடித்து இருப்பது போல் தோன்ற தன் உடலை அசைக்க முடியாமல் போக மெல்ல மெல்ல தன் இமைகளை தட்டி விழிகளை திறந்தாள் இதழ்கனி. இமைகளை கஷ்ட்டப்பட்டு பிரித்தவள் முதலில் தன்னை சுற்றிலும் பார்வையை சுழல விட்டாள். தன் அருகிலும் சரி அந்த அறையிலும் யாரும் இல்லாததை அறிந்து அவசர அவசரமாக ஓரிடத்தை விழிகளால் அலசினாள். அங்கு தான் வைத்தது வைத்தபடியே இருக்க… நிம்மதியாக மூச்சு விட்டவள் மெதுவாக தலையை உயர்த்தினாள் இதழ்கனி. 

       மயங்கி தரையில் கீழே விழுந்திருந்தவள் மெத்தையில் இருப்பதை அறிந்து மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினாள். அள்ளி முடிக்காமல் பரட்டையாக விட்டிருந்த கூந்தலை அள்ளி கொண்டை இட்டவள் மெதுவாக கட்டிலில் இருந்து கீழே தன் பாதத்தை வைத்தாள் இதழ்கனி. 

      மெல்ல கால்களை தரையில் ஊன்றியவள் நிற்க முடியாமல் தடுமாறி தரையில் பொத்தென்று விழுந்தாள். தான் விழுந்த சத்தத்தில் தன்னை கண்காணிப்பவன் ஓடி வராமல் போக… அவன் அங்கு இல்லை என்பதை உணர்ந்து கொண்டாள். தன்னை கண்காணிக்க தனக்கு மயக்க ஊசி இட தன்னை சித்திரவதை செய்ய அங்கு யாரும் இல்லை என்பதை அறிந்த இதழ்கனிக்கு ஒரு புது ஆற்றல் உள்ளத்தில் உருவாக.. கடினப்பட்டு கைகளை தரையில் ஊன்றி மெல்ல தவழ்ந்து தவழ்ந்து அந்த அறையை விட்டு வெளியே வந்தாள். 

       வெளியே பானையில் தண்ணீர் இருப்பதை பார்த்து பானையின் அருகே சென்று தண்ணீரை எடுத்து தன் முகத்தை கழுவி தன்னை முழுமையாக மயக்கத்தில் இருந்து விடுவித்துக் கொண்டாள் இதழ்கனி. தனக்கு நேரம் குறைவாக இருப்பதை உணர்ந்து மெல்ல எழுந்து அந்த இடத்தை நன்றாக ஊன்றி கவனித்தவள் அங்கு உள்ள ஓரிடத்தைக் கண்டவள் இதழ் பிரிய நன்றாக புன்னகைத்துக் கொண்டாள் இதழ்கனி. 

         அவள் பார்வை சென்ற இடம் அங்கிருந்து தப்பிக்கும் வழி. அவள் அடைத்து வைக்கப்பட்டு இருந்த அறையை தவிர்த்து மேலும் இரண்டு அறைகள்.. நடுவே ஹால் போன்ற ஓர் சிறிய இடம்.. அதன் ஒரத்தில் மேல் நோக்கிய படிகளை கண்டு அதை தலையை உயர்த்தி பார்த்தவள் மீண்டும் புன்னகைத்துக் கொண்டாள். அங்கு எங்கும் கதவு இருப்பதாக அவள் கண்களுக்கு புலப்படவில்லை. 

       அவள் முதலில் பார்த்து புன்னகைத்த இடத்தை நோக்கி மெதுவாக நடந்தவள் அந்த சுவற்றை தன் கரங்களால் மெல்ல தடவினாள். தடவிய அவளது கைகளுக்குள் எதுவோ பொத்தான் மாதிரி ஒன்று சிக்க.. அதை தன் பலம் கொண்ட மட்டும் அழுத்தினாள் இதழ்கனி. அவள் அழுத்தியதும் அவள் அருகில் நின்றிருந்த இரு தூண்கள் விலகி வழி விட இயற்கை காற்று வந்து அவள் முகத்தில் மோத… அதில் உடல் சிலிர்த்து அடங்கியது. 

        “எத்தனை தடவ இந்த இடத்தோட ப்ளு பிரின்ட்ட நா பாத்து இருப்பேன்.. என்னைய கொண்டு வந்து இங்கயே அடைச்சு வச்சு இருக்கானுக.. லூசு பயலுக..” என தனக்குத் தானே கூறி சிரித்தபடி அப்பொத்தானை மீண்டும் அழுத்த திறந்த அக்கதவு மூடிக் கொண்டது. அக்கதவு மூடிக் கொண்டதும் மனதில் இனம் புரியா உற்சாகம் ஊற்றெடுக்க.. ஏதோ பூங்காவிற்கு வந்தது போல் அப்பொத்தானை அழுத்தி அழுத்தி விளையாடிக் கொண்டிருந்தாள் இதழ்கனி. 

      திறந்து திறந்து மூடும் கதவை தலை சாய்த்து சிரிப்புடன் பார்த்தவள் அக்கதவை திறந்து அவ்விடத்தை விட்டு வெளியே தன் பாதத்தை எடுத்து வைத்து திரும்பி தான் கடத்தி வைத்திருந்த இடத்தை பார்த்தாள். பிறகு ஒரு முடிவுடன் சிறிதும் ஆற்றல் இல்லாத தன் உடலை வலுக்கட்டாயமாக நகர்த்தி அவ்விடத்தை விட்டு வெளியேறினாள் இதழ்கனி. ஒரு சிறிய வராண்டா போல் இருந்த பகுதியில் மெல்ல நடந்தவள் மேலே செல்லும் படிக்கட்டை கண்டவள் மேலேற தெம்பு இல்லாமல் அப்படியே சரிந்து அமர்ந்து விட்டாள். 

      அந்த கொடுமைக்காரனின் முகத்திரையை கிழித்தே ஆக வேண்டும் என்ற வெறி பிறக்க… மெல்ல மேலேறிச் சென்றவள் அந்த இடத்தை விட்டு முற்றிலுமாக வெளியேறி இருந்தாள் இதழ்கனி. அவள் வெளியே வந்து நின்ற இடம் ஒரு பாழடைந்த மாட்டுத் தொழுவமாக இருக்க அங்கிருந்து வெளியே வந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். சுற்றிலும் வயல் வெளிகளாய் இருக்க.. சுத்தமான இயற்கை காற்றை ஆழ மூச்செடுத்து சுவாசித்தவள் நிம்மதியாக புன்னகைத்துக் கொண்டாள் இதழ்கனி. 

       மனைவியை சந்திக்க சென்ற பாலய்யா நேரம் கடந்துவிட்டதை உணர்ந்து அவசர அவசரமாக வயல்வெளிகளுக்கு நடுவே இருந்த மாட்டுத் தொழுவத்தை நெருங்கியவன் தன்னை யாராவது தன்னை கவனிக்கிறார்களா என கவனமாக சுற்றிலும் பார்த்தவன் தன்னை சுற்றி ஒரு ஈ காக்கை கூட இல்லாமல் இருப்பதை அறிந்து நிம்மதி பெருமூச்சு விட்டவன் உள்ளே நுழைந்து இரகசிய கதவை திறந்து வேக நடையுடன் இதழ்கனியை கடத்தி வைத்திருக்கும் ரகசிய இடத்தை அடைந்தான் பாலய்யா. 

       அந்த ரகசிய இடத்தினுள் நுழைந்ததும் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து நின்றான் பாலய்யா. ஏனெனில் அவன் எதிரே மயக்கம் தெளிந்து தெளிவான பார்வையுடன்  தெளிவாக தான் வரும் திசையை நோக்கி இருக்கையில்  சுட சுட தேநீர் பருகியபடி அமர்ந்து இருந்தாள் இதழ்கனி. 

       அவன் அரக்க பறக்க ஓடி வருவதை பொறுமையான விழிகளால் அளவெடுத்தவள், ” என்ன பாலய்யா.. நேரம் என்ன ஆச்சு? நீ எப்ப வர்ற? இதுதான் நீ என்னைய பொறுப்பா பாத்துக்கிற லட்டசணமா?”  என தெளிவான குரலுடன் பாலய்யாவைப் பார்த்து அழுத்தமாக வினவினாள் அப்பத்தொன்பது வயது சிறுமி. 

      “ஏய்… நீ எப்பிடி வெளில வந்த? ” என அவசர அவசரமாக தான் உள்ளே வந்த கதவை இரகசிய பொத்தானை அழுத்தி மூடினான் பாலய்யா. 

       “இப்ப மூடி என்ன பாலய்யா பண்றது? நாந்தான் வெளிய போய் கடையில டீயே வாங்கிட்டு வந்துட்டேனே.. ” என இதழ்களை குறுநகை முகிழ கூறினாள் இதழ்கனி. 

      அவள் கூறிய பதிலில் மொத்தமாக அதிர்ந்த பாலய்யா அவளது கரத்தில் இருந்த டீ டம்ளரைப் பார்த்தவன் அவள் கூறியது உண்மைதான் என உணர்ந்து அவளை அளவுகடந்த அதிர்வுடன் நோக்கினான். 

       “என்ன நம்ப முடியலயா? காத்து நுழைய முடியாத இடத்துல கூட இந்த இதழ்கனி நுழைஞ்சு வெளிய வருவா டா… அது தெரியாம என்னைய இந்த பெரிய இடத்துல அடைச்சு வைக்க பாத்தா? முடியுமா?” என மெல்லியதாக சிரித்தாள் இதழ்கனி. 

       அவள் கூறியதை அதிர்ச்சியில் இருந்து வெளி வராமல் கேட்டவன் மீண்டும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான் பாலய்யா. “இவ எப்பிடி தப்பிச்சு இருப்பா? இங்க இருந்து வெளிய போனவ யார் கிட்டயும் எதையும் சொல்லி இருப்பாளோ? தப்பிச்சு போனவ திரும்ப எதுக்கு இங்க வந்தா?” என அளவில்லா கேள்விகள் பாலய்யாவின் மனதில் முட்டி மோத …அவனது முகத்தை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தவள் அவன் கேள்விகளுக்கான பதிலை கூறத் தொடங்கினாள் இதழ்கனி. 

      “இவ எப்பிடி தப்பிச்சு இருப்பா னு தான நினைக்கிற? ஸாரி… அந்த கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது. வெளிய தப்பிச்சு போனவ திரும்ப எதுக்கு இங்க வந்தா னு குழப்பமா இருக்கா? நா இங்க வந்ததுக்கான காரியம்  இன்னும் முழுசா முடியல… அதான் திரும்ப வந்துட்டேன்… கவலப்படாத வெளிய போய் யாரையும் பாக்கல யார்க்கிட்டயும் நா எதையும் சொல்ல ல… ஏன்னா நா கடத்தப்பட்டது இரகசியமாவே இருக்கனும் னு நா ஆசைப்படுறேன்..” இதழ்கனி. 

        “அய்யோ.. இவ என்ன இவ்ளோ பேசுறா.. இவள எப்பிடியாவது மயக்கமடைய வச்சுரனுமே. இல்லனா தொர வந்து என்னைய கொன்ருவானே..” என பாலய்யா மனதினுள் பயந்த சாத்தானே எதிரே வந்து நின்றான். 

       தன் எதிரே இதழ்கனிக்கு பின்னால் வந்து நின்ற துரையைக் கண்டு பயந்து தன் விழிகளை உருள விட்டான் பாலய்யா. தனக்கு பின்னே அரவம் கேட்டு நிதானமாக திரும்பி பார்த்த இதழ்கனி அங்கு கோப விழிகளுடன் துரை நிற்பதைப் பார்த்து இதழ்களை விரித்து அழகாக புன்னகைத்தாள். 

       இதழ்கனி நிமிர்வுடன் அமர்ந்து இருப்பதையும் அவளருகே டீ டம்ளரைக் கண்டு அவளைப் பற்றி நன்கு அறிந்த துரை அனைத்தையும் ஊகித்தவன், ” இது எப்பிடி பாலய்யா நடந்துச்சு?” என பாலய்யாவை கடித்து குதறும் எண்ணத்துடன் கேட்டான். 

     “தெரியல தொர.. நா கொஞ்சம் கவனக்கொரவா இருந்துட்டேன்..” என தலை குனிந்து நின்றான் பாலய்யா. 

     அதற்கு மேல் அவனிடம் எதுவும் கேட்காமல், ” இவ்ளோ நாள் இல்லாம இன்னக்கி ஏன் தப்பிச்ச?” என நேரடியாக இதழ்கனியை நோக்கி வினவினான் துரை. 

      “நல்ல கேள்வி… இவ்ளோ நாள் இருக்குற இடத்த விட்டு எந்திரிக்க கூட முயற்ச்சி பண்ணாதவ இன்னக்கி ஏன் இந்த இடத்த விட்டு வெளியே போய் டீ வாங்கிட்டு வந்து குடிக்கிறேன்னா… எனக்கு டீ குடிக்கனும் னு ஆசை வந்துருச்சு.. எப்பிடியும் உன் கிட்ட கேட்டா நீ வாங்கி தர மாட்ட.. அதான் நானே நல்ல கடையா தேடிப்  போய் வாங்கிட்டு வந்துட்டேன்… சும்மா சொல்லக் கூடாது… டீ செம டேஸ்ட்… ” என சப்புக்கொட்டியபடி நக்கலாக கூறினாள் இதழ்கனி. 

       அவளின் நக்கலில் கோபமான துரை, “ஏய்…” என அவளை அடிக்க கை ஓங்கியவன் பின் நிதானித்து… ” சரி… டீ குடிக்க போன… ஓகே… எந்த தைரியத்துல இங்க திரும்ப வந்த?” என இதழ்கனியை கூர்மையாகப் பார்த்தவாறு கேட்டான். 

      “இதுவும் ஒரு நல்ல கேள்வி…” என தன் தலையை ஆமோதிப்பாக அசைத்தவள் எழுந்து நின்று துரையின் முன்னே தன் கரத்தை நீட்டினாள் இதழ்கனி. 

       தன் முன்னே நீட்டிய கரத்தை குழப்பத்துடன் பார்த்தவன் நிமிர்ந்து இதழ்கனியை ஏறிட்டான் துரை. 

       அவனது குழப்ப பார்வையை கண்டு நன்றாக சிரித்தவள், “பயப்படாம கைய குடு துரை.. ஒன்னும் பண்ண மாட்டேன்.. எனிவே.. ஐ ஆம் இதழ்கனி… சிஸ்டர் ஆப் இளஞ்சேரன் ஐ பி எஸ்… ” என கர்வமாக கூறி நின்றாள் இதழ்கனி.

                            (சேரநிலா மிளிர்வாள்…)

                          -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.