“சீக்கிரம் தேடு பாலய்யா… ஒரு சின்ன விசயத்தையும் விடாத…” என பாலய்யாவிடம் கூறியபடி அந்த அறை முழுவதும் கவனமாக தேடினான்.
“நீயும் வாராம் வாரம் தான் தேடுற.. ஒன்னும் கிடைக்க மாட்டேன் ங்குதே..” என்றபடி அந்த அறையின் ஒவ்வொரு மூலையிலும் எதையோ தேடிக் கொண்டிருந்தான் பாலய்யா.
“இந்த காரியத்துல நமக்கு பொறுமை ரொம்ப முக்கியம்.. பேச்சு வாக்குல எதையும் விட்டுறாத தேடு…” என அத்துடன் பேச்சை முடித்துக் கொண்டு தீவிரமாக தேடினான் துரை.
அந்த சிறு பெண் மயங்கி கிடக்க… அவளை சற்று நகர்த்தி ஒழுங்காக படுக்க வைத்து விட்டு அவள் மயங்கி கிடந்த இடத்தை நன்றாக ஆராய்ந்தான் துரை. இருவரின் தேடலுக்கும் சொந்தமானது அவர்களின் கண்களை ஏமாற்றி விட்டு அவர்கள் கண் எதிரே ஒளிந்து இருந்தது.
எவ்வளவு தேடியும் அவர்களுக்கு தேவையானது கிடைக்காமல் போக…”ஏய் இதழ்கனி… உனக்கு நெனவு வர்றப்ப ஏதாவது எழுதி வச்சு இருப்ப னு நானும் தேடு தேடு னு தேடுறேன். ஒன்னுமே கிடைக்க மாட்டேன் ங்குது. எனக்குத் தெரியும்.. நீ ஏதாவது ஒன்னு இங்க வச்சு இருப்ப.. சீக்கிரமே கண்டு புடிக்கிறேன்…” என மயக்கத்தில் இருந்தவளை ஆத்திரம் தாளாமல் ஓங்கி ஒரு அறை அறைந்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியில் வந்தான் துரை.
“விடு தொர.. நீ இல்லாத நாளுல நா ஏதாவது கிடைக்குதா னு பாக்குறேன்..” என அவன் பின்னே வந்த பாலய்யா கூறினான்.
“நீ எவ்வளவு தேடுனாலும் அவ உன் கண்ணுல சிக்குற மாதிரி வச்சு இருக்க மாட்டா..” துரை.
“என்ன தொர.. பாக்க ரொம்ப சின்ன புள்ளயா இருக்கா. இவள போய் பெரிய ஆள் மாதிரி பேசுற..” பாலய்யா.
“பெரிய ஆள் தான் பாலய்யா… இவளப் பத்தி உனக்கு இன்னும் தெரியல. இவள மட்டும் வெளில விட்டோம்… நாம மொத்தமா உள்ள போயிற வேண்டியது தான்.. இவக் கிட்ட நம்மள பத்துன விசயம் அவ்ளோ இருக்கு. பாக்க சின்னப் புள்ள மாதிரி தான் தெரிவா.. ஆனா மூளை… கிலோ கணக்குல கொட்டிக் கெடக்கு இவளுக்கு..” துரை.
“அப்பொறம் ஏன் இவள இன்னும் உயிரோட விட்டு வச்சு இருக்க? மொத்தமா முடிச்சுற வேண்டியது தான?” பாலய்யா.
“இவள உயிரோட வச்சு இருக்க ஒரு முக்கியமான காரணம் இருக்கு.. அது தலைவருக்கு மட்டும் தான் தெரியும்…” துரை.
“என்னவோ போ.. சொல்ல மறந்துட்டேன் தொர.. நீ கடத்த சொன்ன பசங்க லாம் ரெடியா இருக்காங்க. எப்ப நம்ம வேலைய ஆரம்பிக்கிறது?” பாலய்யா.
“நாளக்கழிச்சு வேலய முடிச்சுரு…” துரை.
“இவளுக்கு மட்டும் நெனவு திரும்பி நார்மல் ஆனா னா நாம கொல்ல வேண்டியது இல்ல… அவளே தூக்கு போட்டுக்கும் செத்துருவா..” என வாய் விட்டு நகைத்தான் பாலய்யா.
“அவ அப்பிடி ஆகனும் னு தான இவ்ளோ மெனக்கெடுறது… இவ அந்த போலீஸ்காரனுக்கும் ஒரு பாடமா இருப்பா.. பெரிய இவன் மாதிரி நம்ம தலைவர இவள வச்சு நெருங்குனான் ல.. அதான் இவ இந்த நிலைமையில இருக்கா…” என மெல்லியதாக புன்னகைத்தான் துரை.
“அவனுக்கு இவள விட பெரிய தண்டனையா குடுக்கனும் தொர..” பாலய்யா.
“அதுக்குத் தான் ஒரு ப்ளான் போட்டு இருக்கேன்… அவனுக்கு பதிலா அவன் உயிரா நெனக்கிற அவனோட பொண்டாட்டிய கொன்னுறலாம் னு இருக்கேன்..” துரை.
“அய்யோ தொர… அந்த போலீஸ்க்காரன கூட நெருங்கிறலாம்.. அவன் பொண்டாட்டி குட்டச்சி இருக்காலே… யப்பா.. அவ பொண்ணே இல்ல.. அவ ஒரு பிசாசு.. அவள நேருக்கு நேரா நின்னு பாக்குறதே பெரிய விசயம்.. அவள தொடுறது ரொம்ப ரொம்ப கஷ்ட்டம்… இதுல அவள நீ கொல்லப் போறேன் னு சொல்ற… அந்த எமதர்மனே இறங்கி வந்தா தான் உண்டு..” பாலய்யா.
“ஹா.. ஹா.. ஹா… அவளுக்கு எமனே நாந்தான் பாலய்யா… பாப்போம்.. அந்த போலீஸ்க்காரன் பொண்டாட்டி எப்பிடி என் கிட்ட இருந்து தப்பிக்கிறா னு…” எனக் கூறியபடி தான் கீழே இறங்கி வந்த படிக்கட்டில் மேலே ஏற ஆரம்பித்தான் துரை.
“அவ மயக்கமா தான இருக்கா… நா வீட்டுக்கு போய்ட்டு வரவா?” என மேலே ஏறிக் கொண்டிருக்கும் துரையைப் பார்த்துக் கேட்டான் பாலய்யா.
“பொண்டாட்டி னதும் உனக்கு உன் பொண்டாட்டி ஞாபகம் வந்துருச்சா? சரி.. போய்ட்டு அவ மயக்கம் தெளியுறதுக்குள்ள சீக்கிரம் திரும்ப வந்துறனும்…” எனக் கட்டளையிட்டான் துரை.
“அதெல்லாம் சீக்கிரம் வந்துருவேன் தொர..” என தான் உள்ளே வந்த வழியை நோக்கி தன் மனைவியை சந்திக்கும் ஆவலில் வேகமாக ஓடினான் பாலய்யா.
துரையும் மேலே சென்று பழையபடி அறையில் அனைத்தையும் சரியாக வைத்து விட்டு அறையை திறந்து கொண்டு வெளியே சென்றான். வெளியே அவனுக்காக முரளி காத்து கொண்டிருக்க.. அவனது முகத்தைப் பார்த்தவன், “என்ன முரளி? ஏதோ நினைச்சது நடக்காம போன மாதிரி மூஞ்சிய இப்படி வச்சி இருக்க? என்ன விசயம்?” எனக் கேட்டபடி அங்கிருந்த இருக்கையில் ராஜாவின் தோரணையில் அமர்ந்தான் துரை.
“ஆமா ஸார்… நா நினைச்சது நடக்கல..” என வருத்தத்துடன் கூறினான் முரளி.
“அப்பிடி என்ன நடக்கல? டோர்னமென்ட் க்கு எல்லா வேலையும் ஒழுங்கா போய்ட்டு இருக்கு தான?” துரை.
“அதெல்லாம் மின்னல் வேகத்துல நடக்குது.. நோட்டீஸ் அடிச்சு.. குட்டச்சி அதுல கலந்துக்கிறத உறுதி பண்ணிட்டேன் ஸார்.. ” முரளி.
“பரவாயில்லையே… சரி அப்புறம் என்ன?” என மெச்சுதல் பார்வையுடன் முரளியிடம் வினவினான் துரை.
“அவள அடிக்க ஆள் அனுப்புனேன்.. ஆனா அவ எல்லாரையும் அடிச்சுட்டா..” முரளி.
“யாரு?” துரை.
“அவ தான்… அந்த குட்டச்சி… என்னைய ஜெயிலுக்கு அனுப்பிட்டு அவ சந்தோஷமா இருக்குறா… அவள பாத்ததும் வெறி ஏறிருச்சு… அதான் அவள அடிக்க ஆள் அனுப்புனேன்… ஆனா அவ தப்பிச்சுட்டா…” முரளி.
“குட்டச்சினா அந்த போலீஸ்க்காரன் பொண்டாட்டி தான?” துரை.
“ம்ம்.. ஆமா…” என முரளி கூறியதும் அவனது கன்னத்தில் துரையின் கரம் இடியென இறங்கியது.
கன்னத்தில் வாங்கிய அடியுடன், “இப்ப எதுக்கு ஸார் என்னய அடிச்சீங்க?” என்றான் முரளி.
“யாரக் கேட்டு அவள அடிக்க ஆள் அனுப்புன?” எனக் கோவமாக கேட்டபடி கோவத்தில் கண் மண் தெரியாமல் அடித்து முரளியின் முகத்தை உடைத்தான் துரை.
வாய் மற்றும் மூக்கில் இருந்து இரத்தம் வழிய… பாவமாக துரையை ஏறிட்டான் முரளி.
“அதான் நா அவள க்ரவுண்ட்ல வச்சு முடிக்கலாம் னு சொல்லி இருந்தேன் ல.. அதுக்குள்ளயும் உனக்கு என்ன அவ்ளோ அவசரம்? அவ இந்நேரம் உஷார் ஆகி இருப்பா.. உன்னய… அப்பிடியே அடிச்சுக் கொல்லனும் போல வருது…” எனக் கோவத்தில் பல்லைக் கடித்தான் துரை.
“சும்மா கோவத்துல கத்தாதீங்க ஸார்.. அவளுக்கு எதிரா இங்க ஒரு பயலும் பந்து வீச மாட்டான்… இதுல அவள கொல்ற மாதிரி பந்து வீச எவன் வருவான்?” என வழியும் இரத்தத்துடன் பேசினான் முரளி.
“நா கேக்க சொன்னேன் ல.. அது என்ன ஆச்சு?” துரை.
“ஒரு பயலும் வரல… கேட்டா…. உண்மையா விளையாடுறவன் எவனும் இந்த மாதிரி செய்ய மாட்டான். போட்டி விளையாடுறதுல மட்டும் தான் இருக்கும் அதுக்காக எதிர்ல விளையாடுறவங்கல கொல்லுற அளவுக்கு எந்த விளையாட்டு வீரனும் செய்ய மாட்டான்… னு எல்லாரும் சொல்லி வச்ச மாதிரி ஒரே பதில தான் சொல்றானுங்க…” முரளி.
“ஓஓஓ… சரி… இந்த விசயத்த நா பாத்துக்கிறேன்… அதுக்காக அவள நீ நெருங்க கூடாது… இல்ல… அவளுக்கு முன்னாடி உன்னய கொன்ருவேன்..” என முரளியை மிரட்டிவிட்டு அவசரமாக அங்கிருந்து தனது காரை எடுத்துக் கிளம்பினான் துரை.
மனைவியை சந்திக்க சென்ற பாலய்யா வர தாமதமாக.. மயக்க மருந்து வீரியத்தில் இருந்து மெல்ல மெல்ல விடுபட்டு மெதுவாக கண்களை திறந்தாள் இதழ்கனி.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.