நிலா -30

Chellammal Bharathi | 18 Dec 2025 | Share

        “இப்ப வாங்க…” என கைகளை அசைத்து  தங்களை அடிக்க வர கூறி விட்டு சிரிப்புடன் நிற்கும் நிலாவை வித்தியாசமாக பார்த்தனர். 

       “டேய்… இவ என்னடா புரூஸ்லி மாதிரி நின்னுட்டு நம்மள அடிக்க தைரியமா வர சொல்றா?” 

       “ஒருவேளை நம்மள திருப்பி அடிப்பாளோ…” 

       “பாக்கவே குள்ளக்கத்திரிக்கா மாதிரி இருக்கா. இவ நம்ம எல்லாரையும் அடிச்சுருவாளா?”

       “இப்ப இவ தான் நாம அடிச்ச அத்தன அடியில இருந்தும் தப்பிச்சு எந்த சேதாரமும் இல்லாம நிக்கிறா. இவ சாதாரணமானவள தெரியல…”

        “அதான் நாம இத்தன பேரு இருக்கோம் ல…”

          என அவர்களுள்ளே பேசிக் கொண்டு நிற்பவர்களைப் பார்த்து, “என்ன ஸார் இன்னும் யாரும் அடிக்க வரல?”  என நக்கலான குரலில் கேட்டாள் நிலா. 

        “இவ வாய மொதல்ல அடிச்சு உடைக்கனும்…” என ஆக்ரோசமாய் கூறியபடி ஒருவன் நிலாவை அடிக்க கைகளை ஓங்க… அடுத்த நொடியே ரெண்டு அடி தள்ளிப் போய் விழுந்தான். 

         “அய்யோ.. நா அடிக்கவே இல்லையே…” என நினைத்தபடி தன் பின்னால் திரும்பிப் பார்த்தாள் நிலா. 

         நிலாவின் பின்னால் டீசர்ட் பேண்ட் அணிந்து வாயில் ஒரு குச்சி மிட்டாயை சப்பியபடி கூலிங் கிளாஸ் அணிந்து தன் இரு கைகளையும் விரித்து தோள்களை குலுக்கி நிலாவிற்கு அலகு காட்டியபடி நின்றிருந்தான் இளஞ்சேரன். 

         “என்னைய தான அடிக்க சொன்ன?” என இளாவிடம் வாய் சண்டையில் ஈடுபட்டவாறே அவனது கூலிங் க்ளாஸில் தன் பின்னால் ஒருவன் அடிக்க வருவதை பார்த்து பின்னால் திரும்பாமலே அவனது கைகளைப் பிடித்து ஒரு சுற்று சுற்றி அவனது வயிற்றில் ஒரு குத்து குத்தினாள் நிலா. அதில் இளா அடித்து விழுந்தவனை விட சற்று பின்னால் சென்று விழுந்தான். 

         அவன் கீழே விழுந்ததும் விசில் சத்தம் காதை கிழிக்க… இளாவும் நிலாவும் ஒரு சேர சத்தம் வந்த திசையை திரும்பி பார்க்க… அங்கு அபியின் தோள் மீது இருபுறமும் கால் போட்டு அமர்ந்தவாறு வாயின் உள்ளே இரு ஆள்காட்டி விரல்களையும் விட்டு மீண்டும் சத்தமாக விசில் அடித்தான் கவின். 

         அதைப் பார்த்த நிலா, “எப்பூடி?” என புருவத்தை உயர்த்த.. அப்பொழுது நிலாவின் வலது புறம் இருந்து ஒருவன் தாக்க வர… சட்டென ஒரு கையால் நிலாவை இழுத்து தன் நெஞ்சில் சாய்த்து கொண்டு மறு கையால் தாக்க வந்தவனின் கழுத்தைப் பிடித்து ஒரு அடி மேலே தூக்கினான் இளா. 

        ஒரு கையால் அடிக்க வந்தவனின் கழுத்தைப் பற்றி மேலே தூக்கியபடி தன் நெஞ்சிற்குள் பூக்குவியலாய் புதைந்து இருக்கும் நிலாவைப் பார்த்து, “கவனம் பத்தலயே மிர்ஸஸ் சேரன்…” என சிரித்தான் இளா. 

       அதைக் கேட்டதும் காதலுடன் கணவனின் நெஞ்சில் தன் இதழ்களை மென்மையாக ஒற்றி அவனது நெஞ்சை ஈரப் படுத்தி விட்டு ஊடலுடன் கோபமாக முகத்தை வைத்துக் கொண்டு அவனை விட்டு விலகினாள் நிலா. 

       தன் நெஞ்சில் வந்து மோதிய மனைவியின் இதழ்களின் காதலில் இதயத்தில் ஏற்பட்ட இன்பமான மெல்லிய அதிர்வில் தன் பிடியில் விழி பிதுங்கி துடித்துக் கொண்டிருப்பவனை தொப்பென்று கீழே போட்டான் இளா. 

        கீழே விழுந்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என அங்கிருந்து அவன் ஓடி விட… அதைக் கண்டு மேலும் இரண்டு பேர் ஒரே நேரத்தில் இளாவையும் நிலாவையும் தாக்க வர… தன்னிடம் இருந்து விலகி நின்ற நிலாவின் கைப் பிடித்து இழுத்து தன் பின்னே விட.. அவளும் இளாவின் கைப்பிடித்து தன் முன்னே நகர்ந்து இளாவின் பின்னே வந்தவனின் கைப் பிடித்து முறுக்கி அவனது முதுகுப்புறம் வளைத்து முதுகில் ஓங்கி ஒரு உதை உதைத்தாள். அதே நேரத்தில் நிலாவின் பின்னே தாக்க வந்தவனின் கைப் பிடித்து முறுக்கி அவனது கழுத்தில் முன் பக்கமாக சுற்றி திருப்பி கழுத்தை நெரித்தபடி அவனது முதுகில் எட்டி உதைத்தான் இளா. 

         இருவரும் ஒரே நேரத்தில் தங்களை தாக்க வந்தவர்களை அடித்து கீழே தள்ளிவிட்டு திரும்பி தங்கள் துணையை ஒருவரை ஒருவர் பார்த்து கண்ணடித்து, “வெல்டன் பேபி…” என இருவரும் தங்களது இரு கரங்களையும் சிறகென விரித்து ஒருவரை மற்றொருவர் அணைப்புக்கு அழைப்பு விடுத்தனர். 

        இருவரும் ஒரே நேரத்தில் ஒரே மாதிரி செய்ததில் புன்னகைத்து தங்கள் துணையின் அணைப்பில் இறுக நினைத்து இருவருமே முன்னோக்கி நகர… அதற்குள் மேலும் இரு அடியாட்கள் நிலாவையும் இளாவையும் தாக்க வர… அதைக் கண்ட இருவரும் விரித்த கைகளை கீழே இறக்காமல் அப்படியே முன்னோக்கி வந்து இளாவின் நீட்டிய இடக் கரத்தின் கீழே குனிந்து தனது வலக் கரத்தினால் அவனது நெஞ்சில் காதலுடன் வருடியவாறு தன் முன்னே வந்தவனின் கழுத்தில் ஒரு வெட்டு வெட்டி கீழே சாய்த்து  அவனது கழுத்தில் தன் காலை வைத்து அழுத்தினாள் நிலா. 

         நிலா முன்னே நகர்ந்த அதே நேரத்தில் தன் இரு கரங்களையும் நீட்டியபடி முன்னோக்கி நகர்ந்த இளா, தன் இடக் கரத்தால் நிலாவின் தலையை பாசத்துடன் வருடி விட்டு தன் எதிரே தாக்க வந்தவனின் நெஞ்சில் ஓங்கி மிதித்து கீழே தள்ளி அவனது வயிற்றில் கால் வைத்து அழுத்தினான் இளா. 

        இருவரும் ஒரே நேரத்தில் தங்களை தாக்க வந்தவர்களின் அடித்து கீழே தள்ளி அவர்களின் உடல் மீது தங்கள் ஒரு காலை பதித்தவாறு திரும்பி தங்களின் துணையைப் பார்த்தனர். 

         “லவ் யூ பேபி…” என உணர்ச்சி மேலிட இருந்த நிலையில் இருந்து மாறாமல் இளாவைப் பார்த்து கூறி விட்டு அவனை நோக்கி ஒரு பறக்கும் முத்தத்தை பறக்க விட்டாள் நிலா. 

        தன்னவளிடம் இருந்து வந்த காதல் சொற்களை கேட்ட இளா புளாங்கிதம் கொண்டு, “லவ் யூ பொண்டாட்டி…” என அவளுக்கு பதில் கூறியபடி அவளிடம் இருந்து பறந்து வந்த காதல் பரிசை எட்டிப் பிடித்து பத்திரமாக தன் இதயத்திற்குள் பூட்டி வைத்துக் கொண்டான். 

        “எனக்கு இல்லயா?” என உதட்டைப் பிதுக்கி சோகமாக நிலா கேட்க… “இந்தா பக்கத்துல வந்து தர்றேன் பொண்டாட்டி…” என ஆசையுடன் கூறியபடி தன் காலுக்கு கீழே கிடந்தவனை தரையோடு எட்டி உதைத்து தள்ளி விட்டு நிலாவை நோக்கி இளா வர… அதே போல நிலாவும் தன் காலுக்கு கீழே விழுந்து கிடந்தவனை எட்டி ஒரு உதை உதைத்து தள்ளி விட்டு இளாவை நோக்கி சிரிப்புடன் வந்தாள் நிலா. 

          இருவரும் அருகருகே நெருங்கி நிற்க… இரு குட்டி கருந்திராட்சை பழமென கருவிழி உருள… விழி நிறைய காதலுடன் நிலா, இளாவைப் பார்க்க… அவள் விழிகளில் தெரியும் மொத்த காதலுக்கும் தானே உரிமையாளன் என பெருமிதம் பொங்க… நிலாவின் முகத்தை தன் இரு கரங்களில் அழகாக ஏந்திக் கொண்டான் இளா. 

       நிலாவும் வெட்கப் புன்னகையுடன் தன் இமைகளை கீழே தாழ்த்திக் கொள்ள… இளா அளவிள்ளா காதலுடன் நிலாவின் நுதலை நோக்கி தன் இதழ்களை நகர்த்தி செல்ல… தன்னவனின் இதழ் தன் மேனியில் உரசும் அந்த நொடிக்காக நிலா காத்திருக்க… அவர்களது மோன நிலையை கெடுப்பதற்காகவே ஒருவன் கத்தியை ஓங்கியபடி அவர்களை தாக்க நெருங்கி வந்தான். 

          அதை சிறிதும் உணராமல் தங்கள் காதல் உலகில் இருவரும் மூழ்கி இருக்க… அடியாள் ஓங்கிய கத்தி இருவரின் இடையே நெருங்கும் மயிரிழை நொடிதனில் தன்னவளின் முகத்தை கரத்தில் ஏந்தியவாறு நிலாவை விட்டு தன் பார்வையை அகற்றாமல் அவளுடன் இணைந்து சற்று நகர்ந்து தாக்க வந்தவனின் காலை லேசாக தட்டி விட்டான் இளா. 

        தாக்க வந்தவன் பொத்தென்று கீழே விழ… இளாவும் நிலாவும் தங்கள் காதல் உலகில் இருந்து வெளி வந்து சற்று நிதானித்து அவனை அடிக்க வருவதற்குள்  வேறோரு கரம் அவனை புரட்டிப் போட்டு எடுத்தது. அதைக் கண்டு நிலா புன்னகைக்க… இளா சற்று சத்தமாக சிரித்தான். 

        “ஏன்டா எழவெடுத்தப் பேயே… கொஞ்சம் விட்டு இருந்தா அவங்க கிஸ் அடிச்சு இருப்பாங்கல்ல… நானும் செலவே இல்லாம லைவ் டைட்டானிக் படம் பாத்து இருப்பேனே… வீணாப் போனவனே…” என இசை அவனை அடித்து நொறுக்கினாள். 

        அதைக் கேட்ட இளா பெருங்குரலெடுத்து சிரித்தான். கர்ப்பமாக  இருப்பதனால் இசைக்கு சற்று மூச்சு வாங்க… “நீ இரு அரசி… நா கவனிச்சுக்கிறேன்…” என தன் மனைவியின் காரியத்தை தான் எடுத்துக் கொண்டான் சேது.

         “அய்யோ… நா புளிப்பு முட்டாய் லாம் எடுத்துட்டு வந்தேனேடா… எல்லாம் வேஸ்ட்டா போச்சு…” என புலம்பித் தள்ளினாள் இசை. 

      நிலா மற்றும் இளாவின் அடியையே தாங்கி கொள்ள முடியாமல் பரிதவித்துக் கொண்டிருந்த அடியாட்கள் அவர்களுடன் சேதுவும் இணைந்து கொள்ள… அனைவரும் அங்கிருந்து ஓடிச் சென்றனர். 

      அவர்கள் ஓடுவதை பார்த்துக் கொண்டே, ” ஏன் தங்கச்சி எப்போதும் முறுக்கு தான எடுத்துட்டு வருவ? இப்ப என்ன புளிப்பு மிட்டாய்?” என்றான் இளா. 

        “இந்த சந்தேகம் ரொம்ப அவசியம்…” நிலா. 

       “அவசியம் தான்.. போன தடவ புளிப்பு மிட்டாய மிஸ் பண்ணிட்டோம் னு நம்ம பாத்தி பாப்பா வருத்தப்பட்டுச்சு.. அதான் இந்த தடவ தூக்கிட்டு வந்துட்டேன்… ” என சிரித்தாள் இசை. 

      “சரி… புளிப்பு முட்டாய குடுடி…” என இசையிடம் சேது கை நீட்ட… அவளோ சிரிப்புடன் அபி, கவினை நோக்கி கை காட்டினாள். அங்கு அபியும் கவினும் போட்டிப் போட்டு இசை கொண்டு வந்த புளிப்பு மிட்டாயை வாய்க்குள் அமுக்கிக் கொண்டிருந்தனர். 

       “அய்யையோ… டேய் எனக்கும் குடுத்துட்டு தின்னுங்கடா…” எனக் கதறியபடி ஓடினான் சேது. 

       “டேய்… எனக்கும்…” என சேதுவை விட வேகமாக ஓடினான் இளா. 

         அதைக் கண்டு இசையும் நிலாவும் தங்களின் கரத்தை கோர்த்துக் கொண்டு சிரித்தனர். 

        “வீட்டுக்கு போன நீங்க இங்க எப்பிடி வந்தீங்க?” என இசையிடம் கேட்டாள் நிலா. 

        “நீ மட்டும் தான் எங்க கிட்ட நடிப்பியா? நாங்களும் நடிப்போம்…” என நிலாவைப் பார்த்து சிரிப்புடன் கண்ணடித்தாள் இசை. 

        “நா க்ரவுண்ட்ல நடிச்சேன் னு உனக்கு எப்படித் தெரிஞ்சுச்சு இசை?” என ஆச்சரியத்தில் விழி விரித்தாள் நிலா. 

   

        “நா உன்னோட ப்ரண்ட் நிலா… உன் சுண்டு விரல அசைச்சாக் கூட எதுக்கு அசைக்கிற னு எனக்குத் தெரியும்…அதவிட இவனுங்கள யாரு அனுப்புனது னு எனக்குத் தெரியும்…” என தன் இரு கண்களையும் நிலாவைப் பார்த்து சிமிட்டினாள் இசை. 

                                (சேரநிலா மிளிர்வாள்…)

                           -செல்லம்மாள்பாரதி 

        

    No comments yet.