“இப்ப என்ன பண்ணலாம்?” என இளாவுடன் தீவிரமாக பேசியபடி நடந்து வந்து கொண்டிருந்த நிலா தன் பின்னே திரும்பி பார்க்க சற்று தூரத்தில் அபியின் தோள் மீது கவின் அமர்ந்து அபியும் கவினும் ஏதோ சுவாரசியமாக பேசிக் கொண்டு நடந்து வருவதைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டாள்.
“என்ன பண்ணலாம்?” என நிலாவிடம் திருப்பி கேட்டான் இளா.
“யோவ்… நா உன் கிட்ட கேட்டேன்…” என்ற நிலாவின் பொறுமை காற்றில் பறந்தது.
“என்னடி புருஷனுக்கு மரியாதை கொறையுது?” என சிரித்தான் இளா.
கணவனுடன் காதல் மொழி பேசிக் கொண்டு வந்த நிலா தன் எதிரே வந்த ஆபத்தை கவனிக்கவில்லை. காதில் ஃபோனுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் நிலாவின் கழுத்தை நோக்கி கூரிய கத்தி ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது.
“இதுவே உனக்குலாம் மரியாதை தான்.. இப்ப நா என்ன பண்ணனும் னு சொல்லுங்க புருஷா…” என இதழ் விரித்து அழகாக புன்னகைத்தாள் நிலா.
“நா என்ன சொன்னாலும் ஏன் எதுக்கு னு கேக்காம அப்பிடியே செய்வியா நிலா?” என குறும்புடன் கேட்டான் இளா.
“கணவனே கண் கண்ட தெய்வம் னு வாழுற பத்தினி நானு… நீ என்ன சொன்னாலும் அப்பிடியே செய்வேன்..” என விரிந்த புன்னகையுடனே கூறினாள் நிலா.
பேச்சு சுவாரசயத்தில் தனக்கு மிக அருகில் ஒருவன் கத்தியை ஓங்கி கொண்டு வருவதை சற்றும் கவனிக்காமல் கணவனுடனான உரையாடலிலே முழு கவனம் செலுத்தி இருந்தாள் நிலா.
“சரி… அப்ப டெஸ்ட் பண்ணி பாத்துறலாம்… அப்பிடியே டக்குனு கீழ உக்காரு நிலா…” என சிரிப்புடனே இளா கூற… மறு பேச்சு ஏதுமின்றி நடந்து வந்து கொண்டிருந்த மண் சாலையில் அப்படியே நிலா கீழே அமர… அவள் அமர்ந்த நொடியே நிலாவின் பக்கவாட்டில் இருந்து கத்தியை ஓங்கியபடி ஒருவன் தடுமாறி அவளின் எதிரே கீழே விழுந்தான்.
தன் முன்னே கத்தியுடன் கீழே விழுந்தவனை விழி விரிய பார்த்து தன் கணவனிடம், ” இங்க என்ன சேரா நடக்குது?” என வியப்புடன் கேட்டாள் நிலா.
“ஹா ஹா ஹா… அங்க நடக்குறது எப்பிடி பொண்டாட்டி எனக்குத் தெரியும்? என்ன நடக்குது னு நீதான் சொல்லனும்?” என ஃபோனில் சத்தமாக சிரித்தான் இளா.
நிலாவை ஒருவன் தாங்க வந்து அவன் முயற்சி பலிக்காமல் கீழே விழுந்ததை கவனித்த அபி, “அக்கா…” என பதட்டத்துடன் நிலாவை நோக்கி ஓடி வந்தான்.
அபியின் கத்தலில் அவனை திரும்பி பார்த்த நிலாவின் காதில், “அபிய அங்கயே நிக்க சொல்லு நிலா..” என ஃபோனில் இளா கட்டளையிடுவதை கேட்டவள், அபியை கை காட்டி நிறுத்தி,”அங்கயே நில்லு அபி…” எனக் கத்தினாள் நிலா.
எதுவும் புரியாமல் அபி அவ்விடத்திலேயே நிற்க… நிலா அப்பொழுதுதான் சுற்றுப்புறத்தை கவனித்தாள். ஆள் நடமாட்டம் இல்லாத சுற்றிலும் வீடுகள் இல்லாத மரம் செடி அடர்ந்த புதர்கள் நிறைந்த வழியில் தாங்கள் நிற்பதை உணர்ந்து கொண்டாள்.
“என்ன நிலா? சுத்திலும் ஆராய்ச்சி பண்ணி முடிச்சுட்டியா? “என சிரித்தான் இளா.
“யா…” என தன்னவன் தன் அருகில் தான் உள்ளான் என்பதை அறிந்து பயம் ஏதுமின்றி கத்தியுடன் கீழே விழுந்தவனை பார்த்தாள் நிலா.
தன் குறி தப்பியதில் எழுந்து மீண்டும் வேகமுடன் நிலாவை குத்த வந்தான்.
“நிலா… லெப்ட்…” என ஃபோனில் இளா கூற… நிலாவும் பயம் ஏதுமின்றி தன் இடப்புறமாக சற்று விலக… மீண்டும் நிலாவை குத்த முடியாமல் அவளின் பின் சென்று விழுந்தான்.
அதில் சற்று கோபமடைந்தவன் எழுந்து நிலாவின் நெஞ்சை குறி வைத்து வேகமாக வந்தான்.
“பின்னாடி வளை டி…” என நிதானமாக இளா கூற.. பொறுப்பான மனைவியாக நிலா நின்றவாறு பின்புறமாக வளைய.. மீண்டும் குறி தவறி ஓடி வந்த வேகத்திற்கு தடுமாறி விழுந்தான்.
அதில் உற்சாகமடைந்த நிலா,”ஹேய்… சேரா… செமயா இருக்கு இந்த விளையாட்டு… நா சின்ன வயசுல இது மாதிரி லாம் விளையாண்டதே இல்ல…இன்னொரு தடவ விளையாடலாமா? ப்ளீஸ்… ” என குழந்தையாக துள்ளி குதித்தாள்.
நிலாவின் கூற்றில் இளா உற்சாகம் கொள்ள… நிலாவை குத்த வந்து கீழே விழுந்து கிடந்தவன் தான் விழி பிதுங்கி அவளைப் பார்த்தான். அவன் தன்னைப் பார்ப்பதைக் கண்ட நிலா, “ஸார்.. ப்ளீஸ் ப்ளீஸ்… இன்னொரு டைம் விளையாடலாமா?” எனக் கேட்டாள். நிலா அவ்வாறு கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே நெஞ்சை பிடித்துக் கொண்டான்.
சற்று தூரத்தில் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த அபி அதுவரை இருந்த பயம் நீங்கி சிரிக்க… கவின் எப்பொழுதும் போல் கை தட்டி சிரித்தான்.
கீழே இருந்தபடி மூவரையும் பார்த்தவன் வாயில் கை வைத்து ஒரு விசில் ஒன்று அடிக்க…அச்சத்தம் கேட்டதும் புதர்களின் மறைவில் இருந்து மேலும் சில பேர் ஆயுதங்களுடன் அபி, நிலா மற்றும் கவினை சூழ்ந்து கொள்ள தற்பொழுது நக்கலாக சிரித்தான் கீழே விழுந்து கிடந்தவன்.
அவர்களைப் பார்த்த அபி, “அக்கா…” என்றான்.
“நா இருக்கேன் அபி…” என அச்சம் ஏதுமின்றி கூறினாள் நிலா.
“நாங்க இருக்கோம் னு சொல்லுடி…” என ஃபோனில் சிரித்தான் இளா.
“முடியாது… போடா…” என அச்சூழ்நிலையிலும் சாதாரணமாக கணவனுடன் வாயாடினாள் நிலா.
அதைப் பார்த்த அபி, “அய்யோ இந்த அக்கா மாமா லவ்ஸ்க்கு ஒரு அளவே இல்லாம போய்ட்டு இருக்கே… சுத்தி ஆறேழு தடியனுங்க பெரிய பெரிய வெப்பன்ஸோட நிக்கிறானுங்க… இப்பவும் இவங்க ரெண்டு பேருக்கும் லவ்ஸ் கேக்குது… டேய் கவினு.. உன் அப்பாவ இப்ப நா ரொம்ப மிஸ் பண்றேன் டா…” என கவினிடம் புலம்பினான்.
“அத்தம்மா தா இதுக்காளே…” என இரு கைகளையும் விரித்து அழகாக கூறினான் கவின்.
“உன் அத்தம்மா பண்றத பாத்தா தான்டா பயமாவே இருக்கு… ” அபி.
இருவரும் பேசிக் கொண்டிருக்க தாக்க வந்தவன்களில் ஒருவன் சட்டென கவினின் முடியை கொத்தாக பிடித்து தூக்கி அபியிடம் இருந்து பிரித்தான். எதிர்பாராத நேரத்தில் கவினை தவற விட்ட அபி, “அக்கா… கவின்…” எனக் கத்தினான். ஆனால் கவினோ சிறிதும் பயம் இல்லாமல் அடியாளின் கையில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்தான்.
கவின் அபியிடம் இல்லாமல் அடியாள் ஒருவனிடம் இருப்பதைக் கண்டு, “பப்லு… அட்டாக்…” எனக் கூற அதற்காகவே காத்திருந்தது போல… அடியாளின் கரத்தில் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த கவின் சட்டென அவனது கழுத்திற்கு தாவி அவனது தலையைப் பிடித்து ஆட்டுக்கல்லில் மாவு அரைப்பது போல் ஆட்டினான் கவின். அதில் அந்த அடியாளிற்கு தலை சுற்றல் வந்து விட… தலை சுற்றி கவினைப் பிடித்து வலுக்கட்டாயமாக கீழே தள்ளினான்.
அதில் கவினை தன்னிடம் பத்திரமாக பதுக்கி கொண்டான் அபி. “சின்னப் பயலுக்கிட்டப் போய் அடி வாங்குற…” என நக்கலாக கூறினாள் நிலா. அதில் மிகுந்த கோபமடைந்த அந்த அடியாளும் நிலாவை ஆரம்பத்தில் தாக்க வந்தவனும் சேர்ந்து நிலாவை தாக்க வர… “டேய்.. குத்த வர்றானுக.. இப்ப நா என்ன பண்ணனும்?” என இளாவிடம் ஃபோனில் கத்தினாள் நிலா.
“நீதான வாய் குடுத்த நீயே சமாளி…” என நக்கலடித்தான் இளா.
“போடாங்க்… புண்ணாக்க நம்புனாலும் புருஷன நம்பக் கூடாது…” என சிறிய ஊடலுடன் தன்னை தாக்க வந்த இருவரிடம் இருந்தும் தட்டுத் தடுமாறி தப்பித்தாள் நிலா.
“என்னடி இது பழமொழி?” இளா.
அவர்கள் இருவருடனும் மற்ற அனைவரும் இணைந்து நிலாவை தாக்க வர… ஒவ்வொருத்தனிடமிருந்தும் தடுமாறி தடுமாறி லாவகமாக தப்பித்துக் கொண்டே, “இது பழமொழி இல்ல… டக்குனு எனக்கா தோனுச்சு சொன்னேன்…” என மூச்சு வாங்கியபடி கூறினாள் நிலா.
நிலாவிற்கு உதவி செய்ய அபி முன்னே வர முயல… “அபிய கவின விட்டு நகர வேண்டாம் னு சொல்லுடி… ” என இளா ஃபோனில் கூறுவதற்கு ஒரு நொடி முன்பே, “பப்லுவ விட்டு நீ இங்க வராத அபி…” என கவின் அபி மீது ஒரு கண் வைத்து இருந்த நிலா கத்தினாள்.
இருவரும் ஒரே நேரத்தில் ஒரே விசயத்தை கூறியதில் இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். நிலா மூச்சு வாங்க தாக்குதலை ஒரு கையால் தடுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்த இளா, “கஷ்ட்டமா இருக்கா நிலா?” என்றான்.
“லைட்டா… நீ தான் என்னைய அடக்கியே வாசிக்க சொல்லிட்டியே சேரா… இல்லனா இப்பிடியா நா ஒதுங்கிட்டு இருப்பேன்… ” என இளாவுடன் பேசிக் கொண்டிருந்தாலும் அடியாட்கள் தாக்க வரும் ஒவ்வொரு தாக்குதலில் இருந்தும் திறமையாக தப்பித்துக் கொண்டிருந்தாள் நிலா.
“சரி… நிலா… திருப்பி அடி… நா இருக்கேன்… ” என இளா ஃபோனில் கூறுவதைக் கேட்ட நிலா, ” இப்ப என்ன சொன்ன சேரா? மறுபடியும் சொல்லு…” என இன்ப அதிர்ச்சியுடன் வினவினாள்.
“நையப் புடை டி பொண்டாட்டி…” என சிரிப்புடன் கூறிவிட்டு அலைபேசியை துண்டித்தான் இளா.
அழைப்பு துண்டிக்கப்பட்ட தன் அலைபேசியை கீழ் உதடு வளைய புன்னகைத்தவள், ” ஸார்… ஸார்… ஒரு நிமிஷம்…” என அனைவரையும் கை காட்டி நிறுத்த சொல்ல… அவர்களும் எவ்வளவு தாக்க முயன்றும் அவளை தாக்க முடியாமல் போவதை கண்டு குழம்பி இருந்தவர்கள் நிலா நிறுத்த சொன்னதும் தாங்கள் தாக்குவதை நிறுத்திவிட்டு நிலாவை பார்த்தனர்.
அலைபேசியை தன் சுடிதார் பாக்கெட்டில் வைத்து விட்டு… மூச்சை ஆழ இழுத்து விட்டுக் கொண்டு கை கால்களை ஆட்டி கழுத்தை இடுப்பை வளைத்து சோம்பல் முறித்து விட்டு, “இப்ப வாங்க…” என கைகள் அசைத்து அடியாட்களை தாக்க வர சொல்லி அவர்களைப் தனது அக்மார்க் மில்லி மீட்டர் புன்னகையை சிந்தினாள் நிலா.
(சேரநிலா மிளிர்வாள்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.