சிறகுகள் விற்பனைக்கு!

Ival Minmini | 04 Apr 2026 | Share

“நூறு ரூவா… நூறு ரூவா ஒரு ரெக்க நூறு ரூவா….!” என்று நெஞ்சை தட்டிக் கொண்டே கூவினாள் அஞ்சமாள் கிழவி.

அஞ்சமாள், ஐம்பத்தி இரண்டு வயது முதிர்ந்த பெண். தெருவோரத்தில் வாழும் தெருவாசிகளில் இவளும் ஒருத்தி! இவளுக்கு ஒரு பத்து வயது தக்க பேத்தி இருக்கிறாள்.

“வா மா…பாரு மா விலை கம்மிதா ஏய்யா பாருய்யா…கம்மிதா… நூறு ரூபா தான்யா…..” என்று தொண்டை வற்ற கத்தினாள்.

இவள் கத்துவது போதாது என்று தன் பேத்தியின் கையில் ஐந்து மின்னும் வெளிர் ரெக்கைகளைக் குடுத்து அனுப்பி வைப்பாள் தினமும், “விற்றால் சோறு இல்லை என்றால் பட்டினி”. இது தான் அந்த பிஞ்சிக் குழந்தைகளுக்கு அவள் பாட்டி சொல்லும் தாரக மந்திரம்.

ஒரு நாள் கிழவி நடு சாலையில் வைத்து அந்த குழந்தையை அடித்து கத்திக் கொண்டிருந்தாள்.

“அடியே சிருக்கி முண்ட, ஏன்டி இப்படி பண்ண? நான் அந்த ஆளுக்கு என்ன பதில் சொல்லுவேன்…கத்தி கூப்பாடு போட…” அவ்வளவு கூட்டம் செல்ல, வேடிக்கை பார்த்து சென்றதே தவிர யாரும் தடுக்க முன்வரவில்லை.

“எனக்கு தேவ தாண்டி சனியனே… தேவதான்….. உன் ஆத்தாக்காரி எவனுக்கோ உன்ன பெத்துட்டு போய் சேந்துட்டா? உன்ன பெத்தவன்….ஹூஹும் எவன்னே எனக்கு தெரியாது!அப்போவே… அந்தோ போற கூவத்துல உன்ன தூக்கிப் போட்டாம எடுத்துனு வள்த்தேன் பாரு….. அதான் டி நா பண்ண தப்பு….” என்று இன்னம் பல தகாத வார்த்தைகளால் அந்த குழந்தையை திட்டி தீர்த்தாள்.

பக்கத்தில் இருந்த ஒரு முதியவர் “ஏன் மா அந்த குழந்தைய இப்படி….” என்று தீர்த்தாள்.

 “வாய்யா, உத்தம சூடாமனி… உனக்கு என்னயா… பொளப்பா…களப்பா…. கோயில் கோயிலா ஒக்காந்து பிச்ச எடுத்து பொலைப்ப…. நாங்க அப்படியா…சரி இந்த முண்டைக்கு பரிஞ்சிக்கிட்டு வரியே…என்ன பண்ணா தெரியுமா?…சொல்லு தெரியுமா?… வியாபாரத்து வித்துட்டு வான்னு குடுத்த ரெக்க எல்லாத்தையும் கிழ போட்டு மண்ல பெரட்டி கொன்னாந்துருக்காய்யா? அத்தன ரெக்கயும் மண்ணாயீ மண்ணாப்போச்சி..‌ அத இப்ப யார் வாங்குவா….? நீ வாய்ங்கிறியா? ஹூஹும் அது சரி வாய்ங்கற மாறி இருந்த நீயேன் கோயில் கோயிலா ஒக்காந்து பிச்ச எடுக்க போற…” அவரையும் சரமாரியாக பேசினாள்.

“உன்னான்ட போய் வாய் குத்தேன் பாரு என்ன சொல்னும்!” என்று தலையில் அடித்துக் கொண்டு அமைதியானார். திரும்பவும் அவளைத் திட்டி தீர்த்தாள். சில வார்த்தைகள் என்னவென்று கூட புரியாமல் அந்த குழந்தை அழுது கொண்டே நின்றது.

அதே நேரம்… அவ்வழியாக ஒரு கார் கடந்து போக, திடிர் என்று நின்றது! அதிலிருந்து இறங்கினாள் 

அரசி, ஒரு பிரபல பத்திரிக்கையின் கதாசிரியர் ஆவாள். அந்த கொடுமையை யாரும் கண்டு கொள்ளாத நிலையில் அவள் தடுக்க சென்றாள். 

“அம்மா… நிறுத்துங்க எதற்கு அந்த பச்ச குழந்தையப் போட்டு இப்படி அடிக்கிறிங்க?…”

“வாம்மா கலெக்டரம்மா….எந்த ஊரு கலெக்டர் மா நீ….” என்று அந்த கிழவி நக்கலடிக்க…

“இப்ப நீங்க இத நிருத்தல நான் போலிஸ்க்கு கால் பண்ணட்டுமா?” ஒரு முறைப்புடன் கேட்டாள் அரசி.

“ஓ….எங்கோ போற மாரியாத்தா என் மேல வந்து ஏருத்தா… ன்னு கதையால்ல இருக்கு…” 

“இப்ப நிறுத்த போறீங்களா இல்லையா?” 

“சரிமா சரி நான் அடிக்கல திட்டல இவ இன்ன பண்ணா தெரியுமா? அத விடு… என் பணத்த நீ குடுக்குறியா? இல்ல உங்க அப்பா வருவானா?”

“மரியாதையா பேசுங்க…”

“அய்யோடி….வாம்மா…”

“நிறுத்துங்க…எவ்ளோ தரனும் உங்களுக்கு அந்த பொண்ணு?”

“ஏன் நீ தரப்போறியா?”

“கேட்டதுக்கு பதில் சொல்லும்மா?”

“அது சரி….ஒரு ரெக்க எறனூறுவா….அஞ்சி ரெக்க நீயே கணக்குப் போட்டுக்க…ஹூஹும் குடுத்துட்டாளும்….”

உடனே இரண்யிரம் ரூபாயை நீட்டினாள். வாய் மூடிப் பார்த்தாள் கிழவி. அந்த குழந்தையிடம் பேச போனாள் அரசி.

“பாப்பா உன் பேர் என்ன?”

“அவள் அவளின் பாட்டியைப் பார்த்தாள். கிழவி என்ன பேசுகிறாள் என்று கவனிக்காமல் பணத்தையே எண்ணிக் கொண்டிருந்தாள். 

அரசி தொடர்ந்தாள், “என் கூட வந்துடுறியா பாப்பா?, நல்லா படிக்க வைக்கிறேன்…”

பணத்தை எண்ணிக் கொண்டிருந்தவள் திடீரென்று, “எதெ… இவளை நீ கூட்டினுப் போனினா நான் என்ன பண்றது?… எனக்கு நீ சோறு போடுவியா இல்ல உங்க அப்பா வருவானா?…” என்று வாய்க்கு வந்த படியெல்லாம் கிழவி பேசினாள். அதற்கு அரசி “இங்க பாருங்க மரியாதையா பேசுங்க! நீங்க கேட்ட பணத்தை நான் கொடுத்துட்டேன். அதே மாதிரி, நான் உங்ககிட்ட கேட்கல அந்த குழந்தைகிட்ட பேசிட்டு இருக்கேன்”

குழந்தை அமைதியாக இருந்தது. “ஐயே, இந்தாம்மா உன் பணம் எனக்கு ஒன்னும் தேவயில்ல, இவள கூட்ணுப் போயிட்டனா யேன் பொழப்பு என்னாவுரது?” இன்னும் தேவையில்லாமல் பல வார்த்தைகளை விட மேலும் கையில் இருக்கும் பணத் தாள்களை நீட்டினாள் கிழவி. அழுது கண்கள் வழிய, கன்னங்கள் வீங்கி துவண்டு கிடந்த அந்த குழந்தையின் முகம் ஏக்கமாய் அவனை பார்த்தது. 

எங்கே நாம் பணத்தை திரும்பி வாங்கினால் மீண்டும் அந்த குழந்தை அடி வாங்குவாளோ என்று “வேண்டாம்” என்று சொல்லிவிட்டு கிளம்பினாள் அரசி. கிழவி பேசுவதை விடுவதாக தெரியவில்லை, அவள் கிளம்பிய பின்னும் திட்டி தீர்த்தாள். அசிங்கம் தாங்காமல் அரசி, போனால் போதும் என்று சென்றாள். 

இரவு நடு சாமம் இருக்கும்! அரசிக்கு தூக்கம் வருவதாக தெரியவில்லை ஏனோ அந்த குழந்தையின் ஏக்கமான முகம் அவளின் மனதுக்குள் வந்து வந்து போனது. நாள் சென்றது! 

மறுநாள் அரசி உடனடியாக பம்பாய் செல்ல வேண்டி இருந்தது, ஆகையால் விமானத்தில் செல்ல கிளம்பி கொண்டிருந்தாள்.

“மதி… என்ன ஆச்சு நீ இவ்ளோ சோகமா இருக்கே? ஏதாவது பிரச்சனையா? என்று வினாவினார் அரசியின் கணவர் சலீம். அதற்கு ஏதும் பதில் சொல்லாமல் கவனத்தில் அந்த குழந்தையை வைத்துக் கொண்டிருந்தாள். மீண்டும் அவர் “அரசி” என்று சற்று சத்தமாக அழைத்தார். பின்னர் தான் அவளுக்கு நினைவு வந்தது போல் அவரை பார்த்து “என்னப்பா? என்ன ஆச்சு?”என்று கேட்டாள். 

“அது போச்சு போ நான் என்ன பேசுனேன்னே நீ இவ்ளோ நேரம் கவனிக்கலையா? சரி போகட்டும் ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க? ஏதாவது ப்ராப்ளமா?” என்று மறுபடியும் கேட்டார் அதற்கும் அவள் ஏதும் பதில் சொல்லாமல் “ஒன்னும் இல்லப்பா விடுங்க” என்று சொல்லி உரையாடலின் நிறுத்திக் கொண்டாள்.

“சலீம் நான் ஏற்கனவே சொன்னது மாதிரி, பாம்பேல புதுசா ஓப்பன் பண்ற நம்ம ஆபீஸ்க்கு சில சட்ட சிக்கல்கள் இருக்கு, அதுக்காக நான் அவசரமா போக வேண்டியதா இருக்கு.”

“அதான் சொன்னியே மா எனக்கு தான் தெரியுமே,என்ன ஆச்சு?”

“நான் அங்கிருந்து வரத்துக்கு கொஞ்சம் வாரம் ஆகலாம், இல்ல மாசமும் ஆகலாம் அதுவரைக்கும் உன்னை நீ நல்லா பாத்துக்கணும் நல்லா சாப்பிடணும், நல்லா ரெஸ்ட் எடுக்கணும், நான் இல்லைன்னு வேலை வேலைன்னு ஆஃபீஸ்லயே இருக்காத!”

“உத்தரவு மேடம்!”என்று ஒரு புன் சிரிப்போடு பதில் அளித்தார். பதிலுக்கு இவளும் சின்னதாய் சிரித்துவிட்டு கிளம்பினாள். வாரங்கள் கடந்தது, அங்கிருக்கும் பிரச்சினைகள் கொஞ்சம் கொஞ்சமாய் குறைய இவளுக்கு நாம் சீக்கிரமாக ஊருக்கு செல்ல போகிறோம் என்ற புன்னகை வந்தது கூடவே அந்த குழந்தையின் முகமும் வர புன்னகை மாயமானது, மனம் பாரமானது!

முதன்மை கதை ஆசிரியரான திரு. இன்பமணி இவளிடம் வந்து பேசினார். “மதியரசி, வெற்றிகரமாக இப்போது இங்கே ஒரு ஆஃபீஸ் ஓபன் பண்ண போறோம், கேட்கவே எவ்வளவு நல்லா இருக்கு இல்ல? அதுக்கு முக்கிய காரணம் நீ!, உன் பங்கு ரொம்ப பெருசு!!எவ்ளோ சிக்கல்கள்? சட்ட சிக்கல்ல ஆரம்பிச்சு முனிசிபாலிட்டி வரைக்கும் பிரச்சனை, எல்லாத்தையும் சரி பண்ணி இப்போ இந்த நிலைமைக்கு கொண்டு வந்துருக்க உனக்கு தான் ரொம்ப பெரிய நன்றி சொல்லணும்!” என்றார்.

“ஐயோ சார், ரொம்ப பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்க! இதுல என்ன இருக்கு இது எல்லாமே நம்ம கடமைத் தான். அதே மாதிரி சொன்னீங்களே எல்லாத்துக்கும் நான் காரணம்ன்னு அப்படி இல்ல, நம்ம எல்லோரோட உழைப்பும் தான் இப்ப இந்த ஆபீஸ் ஓபன் பண்ணதுக்கு பெரிய காரணம்!” என்றாள் அரசி.

“அதுவும் சரிதான், சலீம் கிட்ட பேசினீங்களா என்ன உங்களை ரொம்ப மிஸ் பண்றேனு, பார்த்து இங்கே வந்துட போறாரு?”

“ஹா ஹா …. அப்படியெல்லாம் இல்ல சார் நான் வரேன்னு தெரிஞ்சா வேணா வருத்தப்படுவாரு!”

“சும்மா சொல்லாதீங்க மதியரசி எனக்கு தெரியும் கண்டிப்பா உங்கள அவரு ரொம்ப மிஸ் பண்ணுவாரு!”

பொன்முறுவலோடு அமைதியானாள் அரசி. 

“சரி உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்னு நினைச்சேன், என்ன ஆச்சு உங்களுக்கு ஏன் ரொம்ப டிஸ்டர்ப்டா இருக்கீங்க ஏதாவது ப்ராப்ளமா?”அரசி ஒரு நிமிடம் யோசித்தாள். 

“ஒன்னும் இல்ல சார் நார்மலா தான் இருக்கேன்”.

“சொல்ல விருப்பம் இல்லைன்னா ஒன்னும் பிரச்சனை இல்ல ஆனா சொல்லணும் அப்படின்னு தோணுச்சுன்னா சொல்லுங்க என்னால முடிஞ்ச உதவிகளை நான் செய்கிறேன்!”

இன்பமணி கேட்கவும் இவளுக்கு கண்கள் கலங்கியது நடந்தவற்றை ஒன்று விடாமல் சொன்னாள்.

“அடக்கொடுமையே என்ன சொல்றதுன்னு எனக்கு புரியல இந்த காலத்திலேயே இப்படி எல்லாம் இருக்காங்களா? பாவம் அந்த குழந்தை!… இதுல நம்மால என்ன செய்ய முடியும் நீங்க நினைக்கிறீங்க?”

“எனக்கு தெரியல சார் உண்மையாவே எனக்கு தெரியல என்னதான் நம்ம வந்து இந்த மாதிரியான விஷயங்கள் நடக்குது நடக்குதுன்னு இந்த உலகத்தில் உள்ள மனிதர்களுக்கு கொண்டு போய் சேர்த்தாலும் நடக்கிறது எல்லாம் நடந்துக்கிட்டு தான் இருக்கு இந்த மாதிரி குழந்தைகள் மத்த பெரியவங்க, இப்படி ஏதேதோ ஒரு வகையில பாதிக்கப்பட்டே தான் இருக்காங்க பெண்கள், ஆண்களை எடுத்துக் கொண்டால் கூட தடுக்கிறதுக்கும், எதிர்க்கிறதுக்கும் ஏதோ ஒரு வழி இருக்கும்! ஆனா இந்த பிஞ்சு குழந்தைங்க எவ்வளவு பாவம். கேட்கவும், நினைக்கவும் கவலையா இருக்கு அதோட பாத்துட்டு வந்த எனக்கு அதிலிருந்து வெளியவே வர முடியல! அந்த குழந்தையின் முகம் என் மனசு விட்டு போகவே இல்லை, இதுல கொடுமை என்னன்னா அந்த குழந்தையை காப்பாத்த யாருமே முன்வரல”

“நாடு அப்படி ஆய் போச்சுமா எல்லாருக்கும் பண தேவை இருக்கு, யாராலயுமே அடுத்தவர்களுக்கு என்ன நடக்குது நம்மளால என்ன பண்ண முடியும்னு யோசிக்கிற அளவுக்கு இந்த காலம் இல்ல ரொம்ப மாறிடுச்சு ஏதோ நம்மள மாதிரி ஒரு சிலர் இருக்கறதுனால தான் சில விஷயங்களை தடுக்க முடியுது,சில பேரை காப்பாற்ற முடியுது. சரி இதெல்லாம் போகட்டும் என்ன பண்ணலாம்னு நினைக்கிற நம்மால் என்ன பண்ண முடியும்? நம்ம செய்தித்தாளில் வேணா போட்டு பாப்போமா? இல்ல போலீஸ்கிட்ட போய் கம்ப்ளைன்ட் பண்ணி பார்க்கலாமா?என்ன பண்ணலாம் நினைக்கிற?”

“நம்ம செய்தித்தாளில் போட்டா மட்டும் என்ன சார் மாறப்போகுது?”

“சோ”

“போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் சார்!”

“அது எப்படிம்மா சாத்தியப்படும் அந்த குழந்தையோட பாட்டின்னு சொல்ற ஒருவேளை அந்த குழந்தை, இல்லை என்னால வர முடியாது நான் அவங்க கூட தான் இருப்பேன்னு சொல்லிட்டா கேஸ் எடுக்க மாட்டாங்க மா?”

“அது எப்படி சார் அப்படியே அந்த குழந்தை வரமாட்டேனே சொன்னாலும் பக்கத்தில் உள்ளவர்கள் இருப்பாங்க இல்ல சாட்சிக்கு”

“ஹா ஹா … மதி, அடிக்கும் போதும் திட்டம் போதும் வந்து காப்பாத்தனும்னு வராதவங்க… அடிச்சாங்கன்னு மட்டும் சொல்ல சாட்சிக்கு எப்படி வருவாங்கன்னு எதிர்பார்க்கிற?”

அமைதியாக இருந்தாள் அரசி.

“எனக்கு புரியுது மதி, உங்களுக்கு கல்யாணம் ஆகி பல வருஷம் ஆகுது, இன்னமும் குழந்தை வரலன்னு நீங்க பீல் பண்றது எனக்கு நல்லாவே தெரியும்! அதுக்காக…” அவர் முடிக்கவில்லை.

“அதுக்காக அப்படியே விட மனசு வரமாட்டேங்குது சார்! எனக்கு குழந்தை இல்ல தான் சார். நான் ஒத்துக்குறேன்! ஒருவேளை குழந்தை இல்லங்குறதுனால தான் இந்த அளவுக்கு எனக்கு கஷ்டமா இருக்குதோ என்னவோ? அன்னைக்கு அந்த அம்மா பேசின பேச்சுக்கு அசிங்கப்பட்டு நான் வந்தது தப்புன்னு இன்னைக்கு வரைக்கும் பீல் பண்ணிட்டு இருக்கேன் ஒருவேளை அந்த அம்மா பேசினதெல்லாம் கவனிக்காம அந்த குழந்தையை அங்கிருந்து கூப்பிட்டு வந்து ஒரு நல்ல இடத்துல விட்டிருந்தா இந்த அளவுக்கு நான் வருத்தப்பட்டு இருக்க மாட்டேன் எனக்கு தோணுது! ரொம்ப கில்டியா ஃபீல் பண்றேன் சார்!”

“தென் யுவர் விஷ்,கோ ஹெட்!!”

ஒரு தெளிவுடன் மதியரசி தமிழ் நாடுக்கு திரும்பினாள். விமானத்திலிருந்து இறங்கியதும் முதல் வேலையாக இந்த குழந்தையை காண சென்றாள்.

போய் பார்த்தால் அங்கு அந்தக் கிழவியும் இல்லை குழந்தையும் இல்லை சுற்றி இருப்பவர்களிடம் கேட்டு விசாரித்தாள்.பின் அவர்கள் வேறு இடத்திற்கு சென்றது தெரிந்தது. என்ன பண்ணுவது என்று புரியாமல் எல்லாரிடமும் கேட்டு கேட்டு இடத்தை கண்டுபிடித்து சென்றாள். 

பல தெருக்களை சுற்றி அலைந்து ஒரு தேனீர்க் கடையின் முன்பு இருக்கையில் அமர்ந்தாள். கண்கள் கலங்கின, உடல்கள் வியர்த்து விருவிருத்து வலித்தன! மனதினுள் “பாப்பா நீ எங்க இருக்க அன்னைக்கு நான் உன்னை விட்டு இருக்க கூடாது என் தப்பு தான்!” என்று பொறுமினாள். 

நேரம் கடந்தது. அவளை. அழைத்து வந்த ஓட்டுநர்,”மேடம் ரொம்ப டைம் ஆயிடுச்சு கிளம்பலாமா?”என்று கேட்க இவளுக்கு கிளம்ப மனம் இல்லாமல் தவித்தாள். வேறு வழி இன்றி எழுந்து மெதுவாக காரை நோக்கி நகர்ந்தாள். அப்போது ஒரு குழந்தையின் குரல் கேட்டது.

“ஆயா ஏந்திரு ஆயா… ஏன் ஆயா எந்திரிக்க மாட்டேங்கிற ஏந்திரு ஆயா…. பசிக்குது ஆயா”என்று புலம்புவது போல் கேட்டது. சற்றும் தாமதிக்காமல் ஒலி வந்த இடத்தை நோக்கி ஓடினால் அரசி,அவள் பின்னரே ஓட்டுநரும் ஓடினார். சென்று பார்த்தல் ஒரு பிய்ந்து போன குடிசை… வாசலில் அன்று அவள் பார்த்த அதே குழந்தை கொஞ்சம் வளர்ந்திருந்தாள். கூடவே அந்த கிழவியும் இருக்க 

“என்ன ஆச்சு பாப்பா” என்று ஓடினாள் அரசி. 

அழுது கொண்டே “ஆயா எந்திரிக்க மாட்டேங்குது…. நிறைய தடவ கூப்பிட்டேன் ஆயா எந்திரிக்க மாட்டேங்குது, ஆயா எந்திரிக்க மாட்டேங்குதுன்னு” சொன்னதையே சொல்லி அழுது கொண்டிருந்தாள் அந்தக் குழந்தை! 

உடனே இவள் மூக்கில் கை வைத்து பார்க்க கிழவி இறந்தது தெரிந்தது. இருந்தும் நாடிப் பிடித்து பார்த்தாள், எந்த ஒரு உணர்வும் இல்லை! இந்த குழந்தை கிடைத்ததற்கு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதா? இல்லை கிழவி இறந்ததற்கு வருத்தப்படுவதா என்று அவளுக்கு புரியவில்லை! பின்பு அவளின் கணவர் சலீமிற்கு அழைப்பு விடுத்து நடந்ததை சொன்னாள். 

உடனே அவர் அங்கு வர காரியங்கள் நடந்தது. கிழவியின் உடலுக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அனைத்தையும் செய்து மின் அடக்கம் செய்து வழி அனுப்பினார்கள். 

பின்னர் குழந்தையிடம் அரசி “என் கூட வரியா பாப்பா?” நல்லா படிக்க வைக்கிறேன்! அமைதியாக பார்த்த அந்த குழந்தை தலையை மட்டும் அசைத்தது. 

“சரி சொல்லு பாப்பா உன் பேர் என்ன?” 

மெதுவாக “நிலா” என்று சொன்னது குழந்தை! ஏதோ இவளுக்கு மனம் நிறைவானது! இவள் அந்த குழந்தையை கூட்டிச் செல்ல, உடனே அவள் கையை விட்டு ஓடிச் சென்று அங்கிருந்த விற்கப்படாத வெளிர் நிற ஒளி பொருந்திய இறக்கைகளில் ஒன்றை எடுத்து வந்து அரசியிடம் நீட்டினாள்! பார்த்தவளுக்கு கண்கள் கலங்கின!

இன்னும் பல சிறகுகள் போலியாய் செய்யப்பட்டு…. இது மாதிரி வளரும் பிஞ்சுக் கைகளினால் விற்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது! இருந்தும் ஏனோ தேவையான உணவோ, இடமோ மற்றும் படிப்போ கிடைக்காமல் நசுக்கப்படுகின்றன அந்த இறகுகள்!இந்த கதை அந்த கருவை மையப்படுத்திய எழுதப்பட்டது!இது அந்தப் பிஞ்சுக் கரங்களுக்கு சமர்ப்பணம்!

                               ******முற்றும்*******

©மின்மினி

    No comments yet.