காதல் -53

Chellammal Bharathi | 11 Jan 2026 | Share

           சுற்றிலும் தென்னை மரங்களின் இளந்தென்றல் வீச…. வீசிய காற்றின் வழியே வந்த பச்சைக் காய்கறிகளின் வாசத்தை ஆழ நுகர்ந்தவாறு தனது பேண்ட் பாக்கெட்டில் கை விட்டுக்கொண்டு தென்னந்தோப்பிடையே அக்கிராமத்தின் இயற்கையை ரசித்து நடந்து கொண்டிருந்தான் மனோரஞ்சன். 

          சுற்றிலும் வீசிய மணத்தின் விளைவால் மனதில் புது உற்சாகம் தோன்ற…. அழகான புன்னகை ஒன்று மனோவின் இதழில் மிக அழகாக குடியேறியது. இதழ் நிறைந்த புன்னகையுடன் நடந்து கொண்டிருந்த மனோரஞ்சனின் செவிகளில் ஜல் ஜல் என்ற கொலுசொலி கேட்க…. சட்டென திரும்பி பார்த்தான். 

            சுற்றிலும் யாரும் இல்லாது இயற்கை அன்னையே எங்கும் நிறைந்து இருப்பதைக் கண்டு, “அப்புறம் சத்தம் எங்க இருந்து வந்து இருக்கும்? ” என யோசித்தவாறு தொடர்ந்து நடக்க ஆரம்பித்தான் மனோரஞ்சன். 

            சிறிது தொலைவு நடந்ததும் மீண்டும் அச்சத்தம் கேட்க…நின்று நிதானமாக கேட்டான் மனோரஞ்சன். மெல்லிய கொலுசொலி ஒன்று தன்னை நெருங்கி வர….அக்கொலுசொலிக்கான உருவத்தை காண ஆவலுடன் நின்றிருந்தான் மனோ. 

           அதிகாலையில் சற்று பனி மூட்டமாக இருக்க….அப்பனிமூட்டத்தின் இடையே காலை நேர புத்துணர்ச்சியுடன் பெயருக்கு ஏற்றவாறு மஞ்சள் அழகியாக மஞ்சள் நிற தாவணியில் கொலுசொலி சிணுங்க ,தகிக்கும் சூரியனின் ஜொலிஜொலிப்பை முகத்தில் கொண்டு தண்நிலவின் குளுமையை விழிகளில் கொண்டு அழகாக மனோவை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் மஞ்சளழகி. 

           மஞ்சுவின் அபரிமிதமான கிராமத்து அழகை கண்டு வியந்து நின்றான் மனோரஞ்சன். அவளின் மஞ்சள் குளித்த முகமும்… தலை குளித்து ஈரம் சொட்ட சொட்ட முதுகில் பறந்து விரிந்த கூந்தலும்… காதை ஒட்டிய சிறிய முத்து போன்ற ஒற்றை தோடும்… அதே அளவு சிறியதான புருவத்தின் மத்தியில் கச்சிதமாக பொருந்தி இருக்கும் ஒற்றைக் கல் பொட்டும்… சூரிய ஒளி பட்டு மின்னும் ஒற்றை மூக்குத்தியும் மஞ்சளழகியை பேரழகியாக எடுத்துக் காட்டியது. 

              “ப்பா…..என்ன அழகுடா சாமி….கொல்லுறாளே…..” என நெஞ்சை நீவி விட்டபடி தன்னை நோக்கி ஒயிலாக நடந்து வரும் மஞ்சுவை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் மனோரஞ்சன். 

           அருகில் வர வர….மஞ்சுவைக் கண்டு மனோவின் நெஞ்சின் உள்ளே ஏதோ செய்ய…. துள்ளிக் குதிக்கும் தன் நெஞ்சத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறி தடம் மாறி நின்றிருந்தான் மனோ. 

           மனோவின் அருகே நெருங்கி வந்தவள், “உங்கள பாக்க தான் இவ்ளோ சீக்கிரமா வந்தேன்… பாத்தா நீங்களே எதிர்ல வர்றீங்க… ” என வேகமாக நடந்து வந்ததில் லேசாக மூச்சு வாங்கியபடி இதழ் சுழித்து அழகாக புன்னகைத்தாள் மஞ்சு. 

          அதுவரை மஞ்சுவின் அழகில் மயங்கி நின்றிருந்த மனோ, மஞ்சு கூறிய செய்தியைக் கேட்டு இதயத்தில் மெல்லிய இனிமையான அதிர்வு தோன்ற, “என்ன? என்னைய பாக்கவா? ” என இன்பமாக அதிர்ந்தான். 

           “ம்ம்….ஆமா… ஏன் உங்கள பாக்க நான் வரக் கூடாதா? ” என கிராமத்து கொஞ்சும் தமிழில் கிள்ளையாக பேசினாள் மஞ்சு. 

             அவள் பேசும் அழகில் மயங்கி ,”ஏன்?  தாராளமா வரலாமே…. ” என விரிந்த புன்னகையாய் பதிலளித்தான் மனோரஞ்சன். 

             “ம்ம்…. அது… ” என ஒற்றை விரல் காட்டி பொய்யாக மிரட்டிவிட்டு, “வாங்க… நடந்துட்டே பேசலாம்…. ” என்றபடி தாவணி முந்தானையை ஒற்றை விரலில் சுற்றியபடி நடக்க ஆரம்பித்தாள் மஞ்சு. 

           அவள் மிரட்டிய அழகில் சொக்கி போய் மந்திரித்து விட்ட கோழியாய் அவள் பின்னே நடந்தான் மனோரஞ்சன். 

           “உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கனுமே…. ” என மெதுவாக இதழ் அசைத்தாள் மஞ்சு. 

            “கேளுங்க…. ” என சுற்றிலும் என்ன நடக்கிறது என உணராமல் அவள் மீதிருந்த பார்வையை அகற்றாமல் கூறினான் மனோ. 

             “நீங்க தப்பா நினைக்க கூடாது? ” மஞ்சு. 

              “நீங்க என் கிட்ட என்ன கேட்டாலும் நான் தப்பா நினைக்க மாட்டேன்…. சும்மா கேளுங்க…. ” மனோ. 

              “அது…. நீங்க போலீஸா? ” மஞ்சு. 

             மஞ்சுவின் கேள்வியை கேட்ட மனோ, நடப்பதை நிறுத்தி விட்டு, “உங்களுக்கு எப்பிடித் தெரியும்? ” என்றான். 

            “ப்ச்…. கேட்டதுக்கு பதில் சொல்லுங்க… ” என அழகாக சிணுங்கினாள் மஞ்சு. 

            “டேய் மனோ… என்னடா இவ இப்பிடி பேசுறா? ” என மனதினுள் புளகாங்கிதம் அடைந்து, “ம்ம்…. ஆமா… போலீஸ் தான்…. இது உங்களுக்கு எப்பிடித் தெரியும்? ” என்றான் மனோரஞ்சன். 

            “போலீஸ் ல நீங்க என்னவா இருக்கீங்க? ”  மஞ்சு. 

              “இப்போதைக்கு டி. எஸ். பி யா தான் இருக்கேன்…. ” மனோரஞ்சன். 

              ” எனக்கு ஒரு உதவி பண்ணனுமே நீங்க…. ” மஞ்சு. 

              “என்ன னு சொல்லுங்க… உங்களுக்கு இல்லாத உதவியா? ” மனோ. 

              “ஒருத்தன் மேல கம்ப்ளைண்ட் குடுக்கனும்…. ” மஞ்சு. 

               “யாரு அவன்? உங்கள அவன் தொல்லை பண்றானா? நான் உங்க ப்ரண்ட் தான் னு சொல்லுங்க… நாம ப்ரண்ட்ஸ் தான  அழகி ?” மனோ. 

               “ஆமா…. ரொம்ப தொல்லை பண்றான்…. என்னைய பாத்தா ஓவரா வழியுறான்…. ” மஞ்சு. 

                “யாரு அந்த பொறுக்கி னு சொல்லுங்க…. தூக்கி உள்ள வச்சுர்றேன்… ” என பெருமையாக மஞ்சுவை பார்த்தபடி கூறினான் மனோரஞ்சன். 

               “அந்த பொறுக்கியே நீதான்டா பொறுக்கி….. கிராமத்து பொண்ணுனா அவ்ளோ இளக்காரமா டா பன்னி? ஓவரா வழியுற? உன்னைய….. ” என அதுவரை இருந்த சாந்த முகம் மாறி கோவமாக கத்தியபடி மனோரஞ்சனின் சட்டைக்காலரை பிடித்து அவனது கழுத்தை நெரித்தாள் மஞ்சு. 

            அதை எதிர்பார்க்காத மனோ, மஞ்சுவின் தாக்குதலில் பயந்து கண்களை இறுக்க மூடியபடி , “ஐயோ… கொலை…. கொலை…. என்னைய காப்பாத்த யாரும் இல்லையா? ” என படு பயங்கரமாக கத்தினான். 

             “அண்ணே…. அண்ணே…. என்ன ஆச்சு? ஏன் கத்துறீங்க? ” என்ற தூரிகையின் குரல் திடீரென அருகில் கேட்க…. இறுக்கமாக மூடிய கண்களை திறந்து பார்த்தான் மனோரஞ்சன். 

            பயத்துடன் விழிகளை திறந்தவன், எதிரே தன் குண்டு விழிகளை உருட்டியபடி நிற்கும் தூரிகையை கண்டு தன்னை சுற்றி ஆராய்ந்தான் மனோரஞ்சன். படுக்கையில் தான் இருப்பதை கண்டு, “ச்சே….எல்லாம் கனவா? ” என சிரிப்புடன் தலையில் அடித்துக் கொண்டான் மனோரஞ்சன். 

           தன்னாலே சிரிக்கும் மனோரஞ்சனை கேவலமாக பார்த்தாள் தூரிகை. அவளது பார்வையைக் கண்டு அசடு வழிய, “என்ன தூரி? ” என்றான் மனோரஞ்சன். 

           “இல்ல…. காலங்காத்தால ஐயோ அம்மா னு கத்தி என்னைய பயமுறுத்தி …வந்து என்ன னு எழுப்பி பாத்தா பைத்தியம் மாதிரி தனியா சிரிக்கிறீங்க? ஊருக்கு வந்ததுல இருந்து ஆள் ஒரு மார்க்கமா தான் இருக்கீங்க…. ” என கூறியபடி மனோவின் அறையை விட்டு வெளியே வந்தாள் தூரிகை. 

          ” ச்சே…. நம்மள அசிங்கமா நினைச்சு இருப்பாளோ? இருக்கட்டும்…… எல்லாம் இந்த அழகியால தான்…. ” என தூரிகை சென்றதும் மெத்தையை விட்டு எழுந்து அறையின் ஒரு மூலையில் அநாதையாக விழுந்து கிடந்த டி ஷர்ட்டை எடுத்து அணிந்தபடி அறையை விட்டு வெளியே வந்தான் மனோரஞ்சன். 

             சமையல் அறையில் இருந்து ஒரு தோசையை கையில் எடுத்து வாயில் திணித்து கொண்டே வெளி வந்த தூரிகை,  அறையில் இருந்து வெளியே வந்த மனோரஞ்சனை முறைத்தபடி, ” ம்மா…..தோசை சூப்பர்… எதுக்கும் தோசை மாவுல கொஞ்சம் உப்பு போடுங்க…. ” என உள்ளே தோசை ஊற்றிக்கொண்டிருக்கும் கருப்பாயிக்கு குரல் கொடுத்தாள். 

              அதைக்கேட்ட மனோரஞ்சன், “பல்லு விளக்குனியா? இல்லையா? ” என நக்கலாக கேட்டான். 

               “நாங்க பல்லு விளக்கிட்டோம் மிஸ்டர் பைத்தியம்….நீங்க போய் பர்ஸ்ட் குளிங்க…..ஷப்பா… கப்பு தாங்கல… ” என மூக்கை மூடியபடி கூறிவிட்டு வெளியே ஓடினாள் தூரிகை. 

              “எதேய்…..வாயி வாயி… உன்னையலாம் மகி எப்பிடித்தான் சமாளிக்கிறாளோ? ஆமா….எங்க இந்த தீரன் பய… மகி சத்தத்தையே காணோம்….எங்கப்பா ரெண்டு பேரும்? ” என நான்காவது தோசையை உள்ளே தள்ளிக் கொண்டிருக்கும் சிதம்பரத்தைப் பார்த்துக் கேட்டான் மனோரஞ்சன். 

             வாய்க்குள் ஒரு தோசையை வாகாக உள்ளே தள்ளியபடி, “எனக்குத் தெரியாது… ” என்னும் விதத்தில் இடக்கையை விரித்துவிட்டு தோசையை விழுங்குவதில் குறியானார் சிதம்பரம். 

            “அவங்க ரெண்டு பேரும் எங்க னு தெரியல தம்பி…. காலையில நான் எந்திரிச்சு பாக்குறப்பவே அவங்க ரெண்டு பேரையும் ஆளக் காணோம்….வேணுனா இந்த உதி பயக்கிட்ட கேட்டுப் பாரு… அவனுக்குத் தெரியாம மகி எங்கயும் போகாது… ” என உள்ளிருந்து குரல் கொடுத்தார் கருப்பாயி. 

             “ஏன்ப்பா வாய தொறந்து கூட பதில் சொல்ல முடியாத அளவுக்கு பிஸியா ப்பா நீங்க? ம்ம்… ம்ம்…. புதுசா கல்லியாண ஆன ஜோடிய காணோம் னு தேடுறீங்களா யாராச்சும்? என்ன குடும்பம் ய்யா இது? ” என சத்தமாகவே புலம்பினான் மனோரஞ்சன். 

           “என் மவனையும் மருமவளையும் பத்தி எனக்கு நல்லா தெரியும்…. எடுத்த காரியத்தை முடிக்காம ரெண்டு பேரும் விட மாட்டாங்க…. நீ புலம்பாம குளிச்சுட்டு வந்து தோசைய சாப்பிடு…. சாம்பார்…. சூப்பர்….. ” என நன்றாக சுவைத்து சாப்பிட்டபடி கூறினார் சிதம்பரம். 

             “சரி சாப்பிட்டு அப்புறமா அவன தேடுவோம்…. ஸ்மெல் ஹெவியா வருது…. ” என்றபடி குளிக்க சென்றான் மனோரஞ்சன். 

             மனோரஞ்சன் குளித்துவிட்டு வருகையில் அவனுக்கு முன்னே உதியன் அமர்ந்து தோசையை வேக வேகமாக உள்ளே இறக்கி கொண்டிருந்தான். 

            சுவாரசியமாக சாப்பிட்டுக் கொண்டிருந்த உதி, மனோ வருவதைக் கண்டு, “என்ன மச்சான்… நீங்க ரொம்ப தைரியசாலியோ? வெளில உங்க புகழ் வேகமா பரவுது…. ” என்றான். 

           ” என்னடா உலர்ற? ” என்றபடி கருப்பாயி தந்த தோசை தட்டுடன் உதியனின் அருகில் அமர்ந்தான் மனோரஞ்சன். 

           தீரன் மகி திருமணத்தில் மனோரஞ்சனும் உதியனும் மிகவும் நெருங்கி இருந்தார்கள். இருவரும் வாடா போடா என்னும் அளவிற்கு பழக ஆரம்பித்து இருந்தனர். 

           “ஆமா… நீங்க ரொம்ப தைரியசாலியாம்…. உங்கள மாதிரி தெளிவான ஆள இந்த உலகத்துல பாக்கவே முடியாதாம்…. ” உதியன். 

          “அப்பிடியா? இதெல்லாம் யார்ரா சொன்னது? ” மனோரஞ்சன். 

           “வேற யாரு உன் தங்கச்சி தான்… நான் உள்ள வர்றப்ப என்னைய நிறுத்தி காலையில நீங்க பண்ணுன வீர தீர சாகசத்த சொல்லிட்டு தான் உள்ள அனுப்புனா…. இந்நேரம் ஊரு ஃபுல்லா சொல்லி வந்து இருப்பா… ” என வாய்க்குள் தோசையை அடக்கியவாறு நக்கல் சிரிப்புடன் கூறினான் உதியன். 

            அதைக்கேட்ட மனோரஞ்சன், வாய்க்கு கொண்டு சென்ற தோசையை அப்பிடியே நிறுத்திவிட்டு அதிர்ச்சியுடன் உதியனை திரும்பி பார்த்தான். 

            “என்னடா சொல்ற? ” மனோரஞ்சன். 

             “ஹா ஹா ஹா ஹா ஹா….. டி. எஸ். பி ஸார் செம தைரியம் தான்…. ” எனக் கத்தியபடி சாப்பாடு தட்டுடன் எழுந்து வெளியே சிரித்துக்கொண்டே ஓடினான் உதியன். 

              “டேய்…. ஓடாத நில்லுடா…. ” என்றபடி அருகில் இருந்த தண்ணீர் சொம்பை உதியனை நோக்கி எறிந்தான் மனோரஞ்சன். 

              தன்னை நோக்கி வந்த தண்ணீர் சொம்பை லாவகமாக காலால் தட்டி விட்டு, “தங்கச்சி வாய அடக்கி வைக்க முடியல… என் கிட்ட வர்றான்… போய்யா யோவ்… நீ தைரியமான போலீஸ்க்காரனா இருந்தா உன் தங்கச்சிய இதே மாதிரி அடி பாப்போம்…. ” என வாசலில் நின்று கத்திவிட்டு தனது பைக்கை எடுத்துக்கொண்டு சிட்டாக பறந்தான் உதியன். 

             உதியனின் பின்னே ஓடி வந்தவன், “ஓடு ஓடு… மொதல்ல அந்த கழுதைக்கு இருக்கு…. அப்புறம் இருக்கு உனக்கு…. ” என வீராவேசமாக கூறிவிட்டு உள்ளே வந்து சாப்பாட்டு தட்டை கழுவி விட்டு, “ம்மா… இந்த தூரி எங்க போனா ம்மா? ” எனக் கருப்பாயிடம் கேட்டான் மனோரஞ்சன். 

             “இங்க தான் ஏதாவது தோப்பு வயலுக்குள்ள சின்ன பசங்கள கூட்டி வச்சு விளையாடிட்டு வர்றேன் னு போனா…. அப்பிடியே சும்மா நடந்து போய் பாரு… பக்கத்துல தான் இருப்பா…” என சிரிப்புடன் கூறினார் கருப்பாயி. 

          “ம்ம் சரிம்மா….அதுக்குள்ள தீரன் வந்தா வீட்லயே இருக்க சொல்லுங்க…” என்றபடி தனது கூலிங் கிளாஸை அணிந்து கொண்டு வேஷ்டி டி ஷர்ட்டுடன் புறப்பட்டான் மனோரஞ்சன். 

            “தம்பி பாத்து…. ஊர நல்லா சுத்தி பாத்துக்க…. பின்னாடி பயன்படும்… ” என மனோரஞ்சனின் பின்னே நின்று குரல் கொடுத்தார் சிதம்பரம். 

              “ம்ம்… சரிப்பா… ” என வேஷ்ட்டியை மடித்துக்கொண்டு செருப்பை அணிந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான் மனோரஞ்சன். 

            

              சுற்றிலும் கொட்டிக்கிடக்கும் இயற்கையின் செழிப்பை ரசித்தபடி சுற்றிலும் ஆராய்ந்தவாறே மெதுவாக நடந்தான் மனோரஞ்சன். 

            அப்பொழுது லேசாக கொலுசொலி கேட்க… அதிர்ந்து நின்றான் மனோரஞ்சன். நடப்பதை நிறுத்தி விட்டு காதை தீட்டிக்கொண்டு கேட்ட மனோரஞ்சனின் செவிகளில் கொலுசு சத்தம் நன்றாக ஒலிக்க… திகைத்து நின்றான். 

             “என்னடா இது? கனவுல மாதிரியே இப்பவும் கொலுசு சத்தம் கேக்குதே…. எதுக்கும் திரும்பி பாக்காம நடப்போம்… ” என தனக்குள் கூறியபடி நிற்காமல் நடந்தான் மனோரஞ்சன். 

             சிறிது நேரத்தில் கொலுசொலி அருகில் கேட்க…. ஒரு வித எதிர்பார்ப்புடன் நின்று திரும்பி பார்த்தான் மனோரஞ்சன். தொலைவில் மஞ்சள் தாவணி அசைந்தாட மஞ்சளழகி வந்து கொண்டிருப்பது தெரிந்து வியந்து நின்றான் மனோரஞ்சன். 

           மனோவை நெருங்கி வந்த மஞ்சு, “உங்கள பாக்கலாம் னு வந்தேன்… நல்லவேளை வழியிலேயே உங்கள பாத்துட்டேன்…” என அழகாக புன்னகைத்தாள் மஞ்சு. 

            அதைக்கண்ட மனோ, “டேய் மனோ….என்னடா இது? கனவு அப்பிடியே நடக்குது…” என திகைப்புடன் மஞ்சுவின் முகத்தையே பார்த்தவாறு நின்றான். 

             மனோ தன் முகத்தையே பார்ப்பதைக் கண்டு, “என்ன? என் முகத்தையே பாக்குறீங்க? ” என்றவாறு அவனின் முகத்திற்கு எதிராக தன் கையை ஆட்டினாள் மஞ்சு. 

            அதில் தெளிவுற்ற மனோ, ” ம்ம்… சொல்லுங்க… ” என தன் கூலிங் கிளாஸை கழட்டி சட்டையில் மாட்டினான் மனோரஞ்சன். 

            “வாங்க… அப்பிடியே நடந்துட்டே பேசலாம்… ” என நடக்க ஆரம்பித்தாள் மஞ்சு. 

            “ஐயோ… டையலாக் எல்லாம் அப்பிடியே மேட்ச் ஆகுதே… முருகா…. நீதான் பாத்துக்கனும்… ” என வேண்டியவாறு மஞ்சுவுடன் இணைந்து நடந்தான் மனோரஞ்சன். 

            “அது…. நீங்க போலீஸா? ” என தயங்கி தயங்கி கேட்டாள் மஞ்சு. 

            அக்கேள்வியைக் கேட்டு உள்ளே அதிர்ந்தாலும் வெளியே, “ஆமா… ஏன் ஏதாவது பிரச்சனையா? ” என தயங்கினாலும் தெளிவாக கேட்டான் மனோரஞ்சன். 

            ” ம்ம்… ஆமா…. ” எனத் தன் தாவணி முந்தானையை ஒற்றை விரலில் சுற்றியபடி தயக்கமாக உரைத்தாள் மஞ்சு. 

             அவளது பதிலில் உள்ளே பயம் மெல்லியதாக எட்டிப்பார்த்தாலும், “யாராவது உங்கள தொல்லை பண்றாங்களா? பயப்படாம சொல்லுங்க… ” என மஞ்சுவை ஊக்கப்படுத்தினான் மனோரஞ்சன். 

           “ம்ம்… ஆமா…. ஒருத்தன பத்தி கம்ளைண்ட் பண்ணனும்…. ” மஞ்சு. 

           “ஆத்தி…. அடுத்து நம்ம சட்டைய தான் புடிக்க போறா…. ” என பயந்தபடி, “இங்க பாருங்க…நான்… நான் ரொம்ப டீசன்ட் கெய் தான்… நான் பொண்ணுங்க கிட்ட  வழிய லாம் மாட்டேன்… என் அம்மா அப்பிடிலாம் வளக்கல சரியா…. ஸோ… நீங்க… தாராளமா…. தாராளமா மீன்ஸ் எந்த பயமும் இல்லாம வெளிப்படையா சொல்லலாம்…. ” என தன் டி ஷர்ட்டின் காலரை தடவியபடி கூறினான் மனோரஞ்சன். 

           “நீங்க ஏன் இப்பிடி பேசுறீங்க? ” என குழப்பத்துடன் வினவினாள் மஞ்சு. 

            “இல்ல… ஒரு ஷேப்டி க்குத்தான்… ஆங்….அதாவது….உங்களுக்கு எந்த தயக்கமும் இருக்க கூடாது ல….அது….அதுனால தான் சொன்னேன்…. நீங்க உங்க பிரச்சனைய சொல்லுங்க …” மனோரஞ்சன். 

            “அது….ப்ளீஸ்…ஹெல்ப் பண்ணுங்க…. ” எனக் கெஞ்சியபடி தனது பிரச்சனையை கண்ணீருடன் மனோரஞ்சனிடம் கூறி முடித்தாள் மஞ்சு. 

           அனைத்தையும் கேட்ட மனோ, “இது….இதெல்லாம் உண்மையா? ” என அதிர்வுடன் கேட்டான் மனோரஞ்சன். 

           “ம்ம்…ஆமா… ” எனக் கண்ணீருடன் தலையாட்டினாள் மஞ்சு. 

           ” ஓ மை காட்… இது தெரியாம தீரா…..நோ…. ” என தன் நெற்றியை தேய்த்தவாறு தனக்குள்ளே பேசிக்கொண்டு தனது மொபைலை தேடினான் மனோரஞ்சன். 

            மனோவின் முகபாவத்தைக் கண்டு, “என்ன ஆச்சு ஸார்? ” என்றாள் மஞ்சு. 

            தனது மொபைல் அறையில் இருப்பதை உணர்ந்து, ” ஜஸ்ட்… நத்திங்….நீங்க….நீங்க….கிளம்புங்க… நான் பாத்துக்கிறேன்… டோன்ட் வொர்ரி…..” என அவசர அவசரமாக மஞ்சுவிடம் கூறிவிட்டு தீரனின் வீட்டை நோக்கி விரைவாக  ஓட ஆரம்பித்தான் மனோரஞ்சன். 

                                       (காதல் தீ பரவும்…) 

                               -செல்லம்மாள்பாரதி 

              

    No comments yet.