காதல் தீ -60

Chellammal Bharathi | 14 Jan 2026 | Share

          ” மாமா… தூக்கம்…” என்றபடி நிம்மதியாக தீரனின் தோளில் சாய்ந்து கண் அயர்ந்தாள் மகி.

           “எதேய்… அடியேய்….” என தீரன் கதறினாலும் தன்னவளின் உறக்கத்தை கெடுக்காமல் அழகாக அவளை தன் கரங்களில் ஏந்திக் கொண்டான்.

          அரை தூக்கத்தில் இருந்த மகியும் இறுக்கமாக தீரனின் கழுத்தை கட்டிக் கொண்டு அவனது கழுத்து வளைவில் முகம் புதைத்து கொண்டாள் மகி.

          ” அய்யோ…. கொல்லுறாளே…. நானும் மனுஷன் தான்டி…. ” என புலம்பியபடி தங்களது அறைக்கு தூக்கி சென்று மெத்தையில் படுக்க வைத்து அவளது உடையை சரி செய்தான் தீரன்.

          அதில் சிறிது அசைந்தவள் பின்பு சுகமாக தனது உறக்கத்தை தொடர்ந்தாள் மகி. உறங்கும் தன் உயிரை தள்ளி நின்று பார்த்தவன் பிறகு அவளை தன் நெஞ்சில் சாய்த்தவாறு தானும் சற்று கண் மூடினான் தீரன். ஆழ்ந்த உறக்கத்தினுள் செல்ல இருந்த தீரனை, மகியின் சிறிய அசைவு தட்டி எழுப்பியது.

          மகி அசைவதைக் கண்ட தீரன், ” என்னடி? ” என குழந்தையை தட்டிக் கொடுப்பது போல் அவள் முதுகில் தட்டிக் கொடுத்தபடி கேட்டான் .

         “மாமா… தொட்டில தூங்கனும்… ” மகி.

         “தொட்டிக்கு நான் எங்கடி போவேன் இப்ப? ” தீரன்.

          “எனக்குத் தெரியாது… நான் இப்ப தொட்டியில தூங்கனும்… ” என கண்களை திறவாமலயே எழுந்து அமர்ந்தபடி சிணுங்கினாள் மகி.

          சற்று யோசித்த தீரன், “இப்ப என்ன உனக்கு? தொட்டி தான வேணும்? இரு வர்றேன்… ” என எழுந்து சென்றான் தீரன்.

          அமர்ந்து இருந்தபடியே கண்கள் மூடியபடி தூக்கத்தை தொடர்ந்தாள் மகி. அறையை விட்டு வெளியே சென்ற தீரன், தன் தாயை எழுப்பி அவரிடம் இருந்த சேலை இரண்டை வாங்கியவன் சிறு மழலைக்கு கட்டுவது போல் நடு வீட்டில் சேலையில் தொட்டி கட்டினான் தீரன். பிறகு உட்கார்ந்து இருந்தபடியே தூங்கி விழுகும் தன்னவளை கைகளில் ஏந்தி வந்து தொட்டியில் படுக்க வைத்து தாலாட்டினான் தீரன்.

            தீரனின் செயல்கள் அனைத்தையும் வாயில் கை வைத்தபடி வேடிக்கைப் பார்த்த கருப்பாயி ஆச்சரியம் தாளாமல் அப்படியே அமர்ந்து தொடர்ந்து வேடிக்கை பார்த்தபடி இருந்தார்.

          அப்பொழுது தங்களுள் சலசலத்தபடி உள்ளே வந்த உதியனும் மனோவும் தீரனின் செயலைப் பார்த்து வாய் விட்டு சிரித்தனர் .

          அவர்களை அமைதியாக திரும்பி பார்த்த தீரன், ” என் பொண்டாட்டி இப்பதான் நிம்மதியா தூங்கிட்டு இருக்கா….இங்க நின்னுட்டு ஏதாவது சத்தம் போட்டீங்க… உங்க கை காலுலாம் இடம் மாறி போயிரும்… ” என அமைதியான குரலில் கர்ஜிக்க…. ,”இவன் செஞ்சாலும் செய்வான்… கிராதகன்…. ” என முனுமுனுத்தவாறு வெளியே வந்து அமர்ந்தனர் இருவரும்.

          சிறிது நேரத்தில் சிதம்பரமும் பொன்ராசுவும் உள்ளே வர… அவர்களையும் தீரன் மிரட்ட… அம் மிரட்டலில் பயந்து அவர்களும் சத்தமில்லாமல் சென்று கருப்பாயியுடன் அமர்ந்து வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தனர் .

         அப்பொழுது மஞ்சுவும் தூரிகையும் வந்து சேர… ” என்னடா ரெண்டு பேரும் இப்பிடி வெளில உக்காந்து இருக்கீங்க? ” என்றாள் தூரிகை.

         “இப்பிடி உக்காந்து இருக்குறது தான் லேட்டஸ்ட் பேஷன்… ” மனோ.

         “ஹைய்யோ… காமெடி..  சிரிங்க மஞ்சு… ” தூரிகை.

          “பேசாம போறியா…” மனோ.

          “நான் போறேன்… நீங்க ஏன் வீட்டுக்குள்ள போகாம இங்க உக்காந்து இருக்கீங்க? ” தூரிகை.

          “உள்ள ஒரு நாடகம் நடக்குது… இப்ப தான் நாங்க பர்ஸ்ட் ஷோ பாத்துட்டு வந்தோம்… அதான் இப்பிடியே காத்தாட உக்காந்து பேசிட்டு இருக்கோம்.. ” உதியன்.

           “பார்ரா… அப்பிடி என்ன நாடகம்? ” தூரிகை.

            ” “நீங்களே உள்ள நடக்குற கூத்த பாருங்க…” என உள்புறம் நோக்கி கை காட்டினான் உதியன்.

          “அப்பிடி என்ன டா நடக்குது? ” என வினவியவாறு மஞ்சுவுடன் உள்ளே சென்றாள் தூரிகை.

           போற போக்கில் மஞ்சு, மனோவை முறைத்து விட்டு செல்ல… அதை கவனித்த மனோ, “டேய் மச்சான்… உன் தங்கச்சிய எப்பிடிடா கரெக்ட் பண்றது? ” என்றான்.

           ” அடி செருப்பால….  யார் கிட்ட வந்து என்ன கேக்குற ? அண்ணன் டா நானு… ” உதியன்.

            “ரைட்டு விடு…  நான் அவளுக்கு ஏதாவது கிப்ட் வாங்கி குடுத்து என் லவ்வ அவ கிட்ட ஓப்பன் பண்றேன்… போடா டேய்… ” என்றபடி தீரனின் பல்சரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான் மனோரஞ்சன்.

             “கிப்ட்… ஐயோ… இத எப்பிடி மறந்தேன்… என்னைய கொல்லப் போறாளே ஒருத்தி… ” என அவசர அவசரமாக தன் வீட்டை நோக்கி பைக்கில் பறந்தான் உதியன்.

           உள்ளே சென்ற தூரிகையும் மஞ்சுவும் தீரனின் செயலைக் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு சிரித்தனர்.

           ” அடியேய் அக்கா… எந்திரிடி…  நடுவீட்டுல இப்பிடி தூங்குற? ” என சிரிப்புடன் தொட்டிலை நெருங்கி மகியை தட்டி எழுப்பினாள் தூரிகை.

           அதைப் பார்த்த தீரன், “தூரிஇஇஇ… ” என பல்லைக் கடித்தான் .

           “நீ சும்மா இரு மாமா… பொழுது சாஞ்சதுக்கு அப்புறம் தூங்க கூடாது னு பெரியவங்க சொல்லுவாங்க… மகி… அக்கா… ” என மகியை எழுப்பினாள் தூரிகை.

           “அதெல்லாம் என் பொண்டாட்டி தூங்குவா… நீ மொதல்ல தள்ளு… ” தீரன்.

           ” முடியாது… ” தூரிகை.

           இவர்களின் சண்டையின் சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்தாள் மகி.

          ” என்ன இங்க சத்தம்? ” என கண்களை கசக்கியபடி தொட்டியில் இருந்து எழுந்த மகி , சுற்றிலும் பார்த்து விட்டு, “ஏன் எல்லாரும் மொத்தமா இங்க கூடி இருக்கீங்க? நம்ம வீட்ல ஏதாவது விஷேசமா? ” என்றாள்.

        ” ஆமா…. உனக்கும் உன் புருஷனுக்கும் கல்லியாணம்…. ” எனக் கூறியபடி கிப்ட் வாங்க என போன மனோ வெறுங்கையுடன் திரும்பி வந்தான்.

        ” அப்பிடியா மனோ?  ஏன் என் கிட்ட சொல்லல? சாப்பாடு வெஜ்ஜா? நான்வெஜ்ஜா? ஐஸ் கிரீம் உண்டு தான?  ஆங் அப்பிடியே பால் பாயசம் சரியா? ” மகி.

        அப்பொழுது, “அம்மு….. லவ் யூ டி பிசாசே… ” எனக் கத்தியபடி முன்பு ஒரு நாள் மகியை சமாதானம் செய்ய அவளுக்கு வாங்கிய பெரிய கிப்ட் பார்சலை கொண்டு வந்து கொடுத்தபடி மகியை இறுக்க அணைத்தான் உதியன்.

        ” நானும் லவ் யூ… ” என உதியன், மகி இருவரையும் இணைத்து அணைத்துக்கொண்டாள் தூரிகை.

        “நானும் நானும் லவ் யூ… ” என்றபடி மூவரையும் இணைத்து அணைத்துக்கொண்டாள் மஞ்சு.

        “அப்ப,  நானும் லவ் யூ… ” என அவர்களை அணைக்க வந்த மனோவை முறைப்புடன் தடுத்து நிறுத்தினான் தீரன்.

         ” உன்னைய மட்டும் என் பொண்டாட்டிய நெருங்க விட மாட்டேன் டா…. ” தீரன்.

         “போடா…. சைக்கோ… டேய் உதி… அப்பிடி என்ன கிப்ட் அது? ” மனோ.

         ” ஆமா ஆமா…. மொதல்ல மூணு பேரும் என் பொண்டாட்டிய விடுங்க… ” தீரன்.

        ” ஒரு பக்கம் புகையுதே…. ” என தீரனைப் பார்த்து சிரித்தாள் தூரிகை.

        ” ஒரு பக்கம் கருகுதே… ” என மனோவைப் பார்த்து சிரித்தான் உதியன்.

         ” ரெண்டு பேரும் இப்ப வாங்க போறீங்க…. மொதல்ல உங்க ரெண்டு பேருக்கும் சீக்கிரம் கல்லியாணம் பண்ணி வைக்கனும்…. அப்ப தான்டா என் பக்கம் வராம இருப்பீங்க ரெண்டு பேரும்… ” என பொறுமினான் தீரன்.

        “உங்க பஞ்சாயத்த அப்புறம் வச்சுக்கங்க… அண்ணி… மொதல்ல உள்ள என்ன இருக்கு னு பாருங்க… ” என ஆர்வமானாள் மஞ்சு.

         மஞ்சுவின் ஆர்வத்தைக் கண்ட மனோ, ” என்னைய கட்டிக்கிறேன் னு ஒத்த வார்த்தை சொன்னா நாங்களும் இத விட பெருசா கிப்ட் கொடுப்போம்ல… ” என பருத்திவீரன் கார்த்தி போஸில் நின்றபடி கூறினான் .

           எதையும் காதில் வாங்காமல் மகியும் மஞ்சுவும் கிப்டை பிரித்தனர்.  உள்ளே இருந்த பெரிய அழகிய கரடி பொம்மையைப் பார்த்து விட்டு, ” அய்…. செம்மையா இருக்கு அண்ணி…” என்றாள் மஞ்சு.

           அவ்வழகிய டெடியையும் உதியனையும் சேர்த்து அணைத்து, “லவ் யூ உதி… இது எப்ப வாங்குன? ” என்றாள் மகி.

            ” அன்னக்கி….ரெண்டு பேருக்கும் சண்டை வந்து நீ விடியக்காலையில காணாம போனல… அப்ப உன்னைய சமாதானம் பண்ணனும் னு வாங்கி வச்சது… ” உதியன்.

            ” ரொம்ப அழகா இருக்கு டா… ” என உதியனைப் பார்த்து சிரித்தாள் மகி.

             அதற்கு பதிலாக பாசத்துடன் அவள் தலையை வருடியவாறு புன்னகைத்தான் உதியன்.

              ” இது ஆவுறது இல்ல…. அப்பா… ஒரு நல்ல நாளா சீக்கிரம் பாருங்க…. உதியனுக்கும் தூரிக்கும் கல்லியாணம் பண்ண… ” தீரன்.

             ” டேய்… டேய்…. மச்சான் நானு டா… எனக்கும் கல்லியாண வயசு வந்துருச்சு டா… ” என உதியனிடம் கெஞ்சினான் மனோ.

            ” கடவுளே…. உன் இம்சை தாங்க முடியல… யம்மா மஞ்சு… இவனுக்கு என்ன மா பதில் சொல்ற?  பையன் ரொம்ப நல்ல பையன்… உனக்கு இவன புடிச்சு இருக்கா? ” தீரன்.

            அதைக் கேட்ட மஞ்சு சிரிப்புடன் தலை குனிந்தாள். மஞ்சு சிரிப்பதை பார்த்த மனோ, “ஹுர்ரே… நானும் ஜோடி சேந்துட்டேன் டா… ” எனக் கத்தியபடி மஞ்சுவின் அருகில் வந்து நின்றான்.

             ” ஓவரா ஆடாதடா…. தம்பி பொன்ராசு…. உனக்கு இதுல சம்மதமா? ” தீரன்.

             ” நீங்க சொன்னா நான் எத ண்ணே மறுக்க போறேன். நீங்க தான் அப்பா ஸ்தானத்துல இருந்து எங்கள பாத்துக்கனும். ஆனா,  இன்னும் ஒரு வருஷம் கழிச்சு கல்லியாணம் வச்சுக்கலாமே.  என் மாப்ளை போலீஸ் ங்கிறப்போ அவரு மச்சானா…. நானும் என் அந்தஸ்த்து ல கொஞ்சம் உசந்துக்கனும் ல ண்ணே… ” பொன்ராசு.

            ” பொன்ராசு சொல்றதும் சரி தான்…. உதியனும் மகியும் இன்னும் படிப்ப முடிக்கல.  உதியனுக்கும் ஒரு வேலை வேணும் ல…. ஒரு வருஷம் கழிச்சே ரெண்டு ஜோடிக்கும் கல்லியாணம் வச்சுக்கலாம். ” சிதம்பரம்.

            ” அப்புறம் என்ன?  எல்லாரும் அவங்க அவங்க ஜோடிய பாருங்க…. நான் என் ஜோடிய பாக்குறேன்…. கிளம்புங்க கிளம்புங்க… காத்து வரட்டும்… ” என மகியை தங்களது அறையை நோக்கி தள்ளிக் கொண்டு சென்றான் தீரன்.

            உள்ளே சென்ற அடுத்த நொடி, “போடா…. நான் என் டெடி கூட விளையாடனும்… ” எனக் கத்தியபடி வெளியே வந்து டெடியை எடுத்து கொஞ்ச ஆரம்பித்தாள் மகி.

            ” இவளோட குடும்பம் நடத்தி…. கடவுளே… ” என தலையில் அடித்துக் கொண்டான் தீரன்.

              தீரனின் நிலையைக் கண்ட அனைவரும் கலகலவென நகைக்க… அவ்வீடே ஆனந்தமாக மாறியது.

           
ஒரு வருடம் கழித்து….

            அழகிய பொன் காலைப் பொழுதில் உறங்கும் தன் கணவனை தலையணையால் அடித்து எழுப்பிக் கொண்டிருந்தாள் மகிழ்விழி.

           ” இப்ப எதுக்கு டி என்னைய அடிக்கிற?” என மெத்தையில் உருண்டவாறு புலம்பினான் தீரன் .

           ” எந்திரிடா எரும… இன்னைக்கி என்ன நாளு னு தெரியும் தான?  சீக்கிரம் எந்திரிச்சு கிளம்பாம என்ன தூங்கிட்டு இருக்க? ” என  தன் ஆறு மாத வயிற்றை தள்ளியபடி மீண்டும் தலையணையால் தீரனை அடித்தாள் மகி.

          “ஏய்… மெதுவா டி…. புள்ளைக்கு ஏதாவது ஆகிற போகுது. இப்ப என்ன நான் எந்திரிச்சு கிளம்பனும்… அதான?  போய் ஜூஸ் குடி… அஞ்சு நிமிஷத்துல உன் புருஷன் கிளம்பிருவான். ” என மகியின் கன்னத்தில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டபடி எழுந்து குளிக்க சென்றான் தீரன்.

          ” இந்த கொஞ்சலுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை… ” என நொடித்தவாறு அடுத்த அறையை நோக்கி சென்றாள் மகி.

           “டேய் மனோ…. எந்திரிடா….உனக்குத் தான்டா இன்னக்கி கல்லியாணம்… டேய் விளங்காதவனே…. எந்திரிடா… ” என இன்னும் சற்று நேரத்தில் மஞ்சுவுடன் திருமணத்தை வைத்துக் கொண்டு உறங்கி கொண்டிருக்கும் மனோவை அடித்து எழுப்பினாள் மகி.
 
            ” இவனுக்கு இதெல்லாம் உறைக்காது க்கா… ” என முழு அலங்காரத்தில் வந்த தூரி, மனோவை கட்டிலில் இருந்து கீழே உருட்டி விட்டாள்.

                ” அய்யோ…. பள்ளத்துல விழுந்துட்டேன்… என்னைய யாராச்சும் காப்பாத்துங்க… காப்பாத்துங்க…. “என கீழே விழுந்தும் உறக்கத்தில் புலம்பியபடி இருந்த மனோவின் தலையில் ஒரு  வாளி தண்ணீரை ஊற்றினார் கருப்பாயி.

         “கல்லியாணத்த வச்சுக்கிட்டு என்ன டா தூக்கம்? அங்க கோவில்ல இருந்து உன் அப்பா அம்மா ஃபோன் மேல ஃபோனா போடுறாங்க… உதியும் மஞ்சுவும் மொத ஆளா அங்க வந்துட்டாங்களாம்… கழுத நீ இன்னும் தூங்கிட்டு இருக்க… ” என மூச்சு விடாமல் கருப்பாயி கத்த… ” இப்ப என்ன ஆச்சு னு இப்பிடி கத்துற கருப்பாயி? எனக்குத் தான கல்லியாணம்? நிம்மதியா தூங்க விடுறியா?  ” என முனுமுனுத்தவாறு  எழுந்தான் மனோ.

           “அப்ப உனக்கு கல்லியாணம் வேண்டாம்? நீ தூங்கு… நான் கல்லியாணத்த நிறுத்திர்றேன்… ” என அறையின் வாயிலில் நின்றபடி கூறினாள் மஞ்சு.

           “அய்யோ… அழகி… இங்க பாரு நான் குளிச்சுட்டேன்… மாமா இப்ப ரெடி ஆகிருவேன்… அதுக்காக இப்பிடிலாம் னு பேசக்கூடாது… சரியா? ஆமா… கோயில்ல இருக்காம இங்க எதுக்கு வந்த? ” என திருட்டு முழி முழித்துக்கொண்டு கூறினான் மனோரஞ்சன்.

           அதைக் கேட்ட நால்வரும் ” த்தூ… ” என நான்கு பெண்களும் இணைந்து மனோவை காரித்துப்பினர்.

           ” ஹி ஹி ஹி ஹி… இதோ இப்ப கிளம்பிட்டேன்…. ” என குளியல் அறை நோக்கி ஓடினான் மனோ.

           ” மகி… நாங்க மூணு பேரும் கிளம்புறோம்… நீயும் தீரனும் மனோவ கூட்டிட்டு சீக்கிரம் கோயிலுக்கு வந்துருங்க… ” என மகியிடம் கூறிவிட்டு தூரி மற்றும் மஞ்சுவுடன் திருமணம் நடைபெற இருக்கும் கோவிலுக்கு புறப்பட்டார் கருப்பாயி.

           ” ஹய்யோ… இனி இவன கிளப்பனுமா? இருந்தாலும் உன் அப்பன் ஓவரா தான் பண்றான் பாப்பா… ” என வயிற்றில் உள்ள தன் குழந்தையிடம் பேசியவாறு தங்களது அறைக்குள் நுழைந்தாள் மகி.

           அப்பொழுதுதான் குளித்துவிட்டு வந்த தீரன் தலையை துவட்டாமல் கண்ணாடி முன் நின்று மீசையை முறுக்கி விட்டுக்கொண்டிருந்தான்.

          அவன் அணிவதற்கான சட்டையை எடுத்து அவனுக்கு மாட்டிவிட்டபடி, “ரொம்ப முறுக்காதடா… மீசை கையோட வந்துற போகுது… ” என்றாள் மகி.

          ” உனக்கு பொறாமைடி… ” தீரன்.

          “ஆமா ஆமா… ” என தீரனின் தாடையை இடித்தாள் மகி.

          ” என் அழகு நிலவே… என் பேரழகு பெட்டகமே…. என் தித்திக்கும் காதல் தீயே…. ” என மகியின் கன்னத்தை பிடித்து செல்லம் கொஞ்சினான் தீரன்.

           ” என்ன?  தித்திக்கும்… காதல் தீயா? ” என சிரித்தாள் மகி.

            ” ஆமாண்டி….  ரொம்ப தான்டி தித்திக்குது…. ” என கிறக்கமாக தீரன் மகியின் இதழை நெருங்க… அந்நேரம் சரியாக, “ஹூக்கும்… ” என செருமியபடி அறையின் வெளியே வந்து நின்றான் மனோ.

            ” மகி… நீ வா… உன்னைய இவன் கடிச்சு தின்னாலும் தின்னுருவான்… ” என மகியை இழுத்தபடி வெளியே சென்றான் மனோ.

            “சரியான கரடி…. ” என மனோவை திட்டியபடி அவர்களுடன் கோவிலுக்கு சென்றான் தீரன்.

             சிங்கம்புணரி ஊர்க் கோவிலில் திருவிழாமயமாக இருக்க…. இரு திருமண ஜோடிகளும் காதல் கொண்டு ரகசியமாக தங்கள் இணையை ரசித்தபடி இருந்தனர்.

              ஊர் பெரியவர்கள் உறவினர்களின் முன்னிலையில் கெட்டிமேளம் கொட்ட…. உதியனும் மனோவும் தங்களது இணைகளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு அழகாக திருமண பந்தத்திற்குள் நுழைந்தனர் .

            உதியன் தன் கழுத்தில் மாங்கல்யத்தை அணிவித்த நொடி, ஆனந்த கண்ணீருடன் மகியைப் பார்க்க…. அதே போல மஞ்சுவும் மகியைப் பார்த்தாள்.

           அவர்கள் இருவருக்கும் கண் சிமிட்டி புன்னகையை பரிசளித்தவாறு தீரனின் கையணைப்பில் நின்றிருந்தாள் மகி.

          “இந்த சந்தோஷம் எல்லாமே உன்னால தான்டி….. ” என காதலுடன் தன் மனைவியின் நெற்றியில் முத்தமிட்டான் தீரன்.

          தீரனின் ஒற்றை முத்தத்தில் வழக்கம் போல வெட்கி சிவந்து அவனது நெஞ்சிலேயே தஞ்சம் அடைந்தாள் தீரனின் மகிழ்விழி.

                          (காதல் தீ பரவும்…)
                            -செல்லம்மாள்பாரதி

            

    No comments yet.