கரும்புத் தோகைகளின் சலசலப்பு ஒரு புறமும் மாமரங்களின் குளுமையான காற்று மறுபுறமும் சிலுசிலுவென்று வீச இனிமையான அச்சூழலை ரசித்து அனுபவிக்காமல் அச்சூழலுக்கு எதிர்பதமாக அனல் பறக்க சிறுவர்களுடன் தங்களின் வயதை மறந்து கிட்டிப்புள் விளையாடிக் கொண்டிருந்தனர் தூரிகையும் மனோரஞ்சனும்.
“டேய் அண்ணா… கரக்ட்டா அடி… இல்ல… மண்டை வீங்கிரும்… ” தூரிகை.
“நீ சத்த பயமுறுத்தாம இரு பிசாசே… ” என மனோ குறி பார்த்து கிட்டியை நோக்கி புள்ளால் அடிக்க… அது சரியாக அடிக்காமல் சற்று தள்ளி விழுந்தது.
மனோ சரியாக அடிக்காமல் அவுட் ஆக… தூரிகையின் எதிர் அணியில் உள்ள சிறுவர்கள் காது கிழியுமாறு கத்திக்கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்த… தூரிகை மனோவை முறைத்தபடி நின்றாள்.
“சரி விடு தூரி… நெக்ஸ்ட் கேம் ல பாத்துக்கலாம்… ” என தூரியை சமாதானப்படுத்தினான் மனோரஞ்சன்.
“போடாங்க்….. ” தூரிகை.
“ஹேய்… ஹேய்… நோ பேட் வேர்ட்ஸ்… மீ யுவர் அண்ணா… அண்ணன்… ” என இரு கைகளையும் சரண்டர் என உயர்த்தியபடி சிரித்தான் மனோ.
“உன் தேஞ்ச மொசரக்கட்டைக்கு இப்ப அது ஒன்னு தான் கொறைச்சல்… உன்னைய…. ” என அருகில் கிடந்த தென்னங்கீற்று மட்டையை எடுத்துக் கொண்டு துரத்த ஆரம்பித்தாள் தூரிகை.
“ஐயோ… கொலைகாரி… ” எனக் கத்தியபடி தூரிகையின் கைகளில் சிக்காதவாறு ஓடினான் மனோ.
“டேய்… ஓடாத… சிக்குன… செத்த… ” என மனோவை துரத்தியவள் எதார்த்தமாக ஒரு திசையில் பார்த்தவள் ஓங்கிய கையை காற்றில் அப்படியே அசையாமல் நிறுத்தி விட்டு ,”மனோ ண்ணா…. ” என தொண்டை கிழிய கத்தினாள் தூரிகை.
தன்னை துரத்திய தூரிகையின் குரலில் இருந்த பேதத்தை உணர்ந்த மனோ, நின்று தூரிகையை திரும்பி பார்த்தான். அவள் வேறு திசையில் பார்த்தவாறு அசையாமல் அப்படியே நிற்கவும், “என்னவா இருக்கும்? ” என யோசித்தபடி அவள் அருகில் சென்றான்.
“அங்கு அப்படி என்ன தெரிகிறது? ” என கிண்டலாக கேட்டான் மனோ.
“மஞ்சு…. அந்தப்பக்கம் நடந்து போறா… ” என அசையாமல் அங்கயே வெறித்தபடி கை காட்டினாள் தூரிகை.
“ஏன்? அவ ஊருல அவ எங்கயும் நடந்து போக கூடாதா? இதென்ன கொடுமையா இருக்கு? ” மனோ.
அதைக்கேட்ட தூரிகை திரும்பி மனோவை ஒரு பார்வை பார்த்தவள் பட்டென அவன் கன்னத்தில் ஒரு அறை விட்டாள்.
“அந்தப்பக்கம் ஒரு பெரிய கிணற தவிர வேற எதுவும் இல்லை டா வெங்காயம் …” தூரிகை.
” அத ஏன் பிசாசே இவ்ளோ மெதுவா சொல்ற? ” என பதறி மின்னல் வேகத்தில் அந்த பக்கம் முள் செடி , கல் எதையும் உணராமல் ஓடினான் மனோ.
“ஐயோ… ” என தன் நெற்றியில் அறைந்து கொண்டு மனோவின் பின்னே ஓடினாள் தூரிகை.
“அழகி…. அழகி… ” என உரக்க கத்தியபடி வேகமாக ஓடினான் மனோ. தொலைவில் மஞ்சுவின் பிம்பம் தென்படவும் தன் வேகத்தை சற்று அதிகப்படுத்தியவாறு ஓடினான்.
அவன் பின்னே, “டேய் அண்ணா…. அண்ணா டேய்…. ” எனக் கத்தியபடி அவன் பின்னே ஓடி வந்து கொண்டிருந்தாள் தூரிகை.
அப்பொழுது அந்த பக்கம் ஆடுகளுக்கு இலை தழைகளை ஒடித்துக் கொண்டிருந்த உதியன், தூரிகையின் அலறலைக் கேட்டு, “இதென்ன? நம்ம ஆளு இப்பிடி தலை தெறிக்க ஓடிட்டு இருக்கா? ” என கையில் இருந்த இலை தழைகளை கீழே போட்டு விட்டு தூரிகையின் பின்னே ஓடினான் உதியன்.
“ஏய்… அழகி… நில்லுடி… அழகி.. ” எனக் கத்தியபடி மனோ மஞ்சுவை சமீபமாக நெருங்க… மனோவின் குரல் கேட்டு திரும்பி பார்த்த மஞ்சு, நிற்காமல் தொடர்ந்து வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
“அய்யோ… இவ வேற நிக்க மாட்டேன்ங்குறாளே… ” என நொந்தபடி தொடர்ந்து ஓடினான் மனோ.
அவன் பின்னே, ” என் அண்ணா ஒரு கிறுக்கு… இன்னக்கி அவனுக்கு திட்டு இருக்கு… தூரி நீ கலக்கு… ” என துள்ளி குதித்து பாடியபடி மனோவை பின்தொடர்ந்தவள், ” அச்சோ… தூரி… கவிதை… கவிதை… பின்றியேடி… ” என அவளுக்கு அவளே கைகளால் கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தம் கொடுத்தபடி மனோவை பின்தொடர்ந்தாள் தூரிகை.
தூரிகையின் விசித்திர செய்கைகளை அவள் பின்னே ஓடி வந்த உதியன் கவனித்து குழம்பினான். “இவ என்ன பைத்தியமா? ” என புலம்பியபடி மூச்சு வாங்க தூரியை தொடர்ந்து தொடர்ந்தான் உதியன்.
முன்னே சென்ற மஞ்சு, தூரி கூறிய பெரிய கிணற்றருகே வந்தவள் அதன் சுவற்றில் ஏறி குதிப்பதற்கு தயாராகி கிணற்றின் உள்ளே கால் போட்டு அமர்ந்தாள். அதைப் பார்த்து திகைத்த மனோரஞ்சன் வேகமாக ஓடி வந்து பின்னால் இருந்து அவளை இறுக்கமாக கட்டி பிடித்தவாறு, ” அழகி… இது தப்பு… எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வு ஆகாது அழகி… உன் அப்பா செஞ்ச தப்புக்கு நீ என்ன பண்ணுவ? மொதல்ல இறங்கி வா… உன்னைய நான் சாக விட மாட்டேன்…. நான் உன் கூட நூறு வருஷம் வாழனும் டி….” என பதட்டத்தில் தன் கண்களை இறுக்க மூடியவாறு மூச்சு வாங்க படபடத்தான்.
மனோரஞ்சனின் இதயத்துடிப்பு மஞ்சுவின் முதுகில் ஒலித்து அவளது இதயத்தில் எதிரொலித்தது. அவனின் இதயம் தனக்காக துடிப்பதை சிறிது ரசித்த மஞ்சுவின் முகத்தில் அழகிய புன்னகை ஒன்று உருவானது. அதை மறைத்தபடி, குரலில் கடுமையை வரவழைத்து பேசினாள் மஞ்சு.
“யோவ்… எடுய்யா கைய… ” மஞ்சு.
“இல்ல… உன்னைய நான் விட மாட்டேன்… விட்டா நீ உள்ள குதிச்சுருவ… ” என்றபடி மஞ்சுவை விடாமல் இறுக்க அணைத்தான் மனோ.
அவனின் அவ் இறுகிய அணைப்பில் கரைந்தாலும் இறுகிய குரலில், “யோவ் மஞ்சமாக்கான்… கொஞ்சம் உள்ள பாருய்யா… ” என அதட்டினாள் மஞ்சு.
” இல்ல… எனக்கு தண்ணில கண்டம் னு தும்பைச்செடி ஜோசியர் சொல்லி இருக்காரு… ” என கண்களை திறவாமல் கூறினான் மனோ.
” போலீஸ் னு கூட பாக்க மாட்டேன் அசிங்க அசிங்கமா கேட்டுருவேன்… மொதல்ல என் மேல இருந்து கைய எடுத்துட்டு கிணத்துக்குள்ள பாருய்யா… ” என சிடுசிடுத்தாள் மஞ்சு.
“நான் என்ன சொல்றேன்? நீ என்ன உலர்ற? ” என வாய்க்குள் முனுமுனுத்தவாறு அவள் கூறுவதை கேட்காமல் அவள் மீதிருந்த தன் பிடிப்பை விடாமல் கண்களை மட்டும் திறந்து கிணற்றின் உள்ளே எட்டிப் பார்த்தான் மனோ.
உள்ளே எட்டிப் பார்த்தவனின் கைகள் தானாகவே மஞ்சுவின் மீதிருந்து விலகி ,” ஸாரி ஈஈஈஈஈ….. ” என மொத்தப் பற்களையும் காட்டினான் மனோ.
” ஸாரியா? என்ன? போலீஸே ஈவ்டீசிங் பண்றீங்களா? மூஞ்சியும் முழியையும் பாரு… அவிச்சு வச்ச காக்க முட்டை மாதிரி… உன்னையலாம் எவன்ய்யா போலீஸா போட்டான்? இவரு பெரிய ஹீரோ…. என்னைய காப்பாத்த வர்றாரு… மொதல்ல நான் எதுக்குய்யா சாவ போகனும்? ” மஞ்சு.
மணல் சரிந்து முக்கால்வாசி மூடிய நிலையில் உள்ள கிணற்றின் உட்புறம் தரையை தொட்டவாறு காலை தொங்கப்போட்டு அமர்ந்திருந்த மஞ்சுவை அசடு வழிய பார்த்தான் மனோ.
” இல்ல…. உன் அப்பா செஞ்சத நினைச்சு…. மன உளைச்சல்ல…… ஈஈஈஈஈ…. ஸாரி ஈஈஈஈ…. ” மனோ.
“அடிங்க… அந்த ஆளு தப்பு பண்ணுனா எந்த தப்பும் பண்ணாத நான் சாகனுமா? இதென்ன நியாயம்? உனக்கு மண்டையில அறிவு இருக்கா? இல்லையா? ஏய்… உண்மைய சொல்லு… நீ டுபாகூர் போலீஸ் தான? உன் கிட்ட போய் என் அப்பன பத்தி கம்ப்ளைண்ட் பண்ணி இருக்கேனே… ச்சை… ” என தன் முன் நெற்றியில் அறைந்து கொண்டாள் மஞ்சு.
“அய்யோ… இவ என்ன நம்மள இவ்ளோ டேமேஜ் பண்றா…. ஒரே அசிங்கமா இருக்கே குமாரு…. பின்னாடி வந்த பிசாசுக்கு மட்டும் இந்த விசயம் தெரிஞ்சுச்சு… நம்ம இமேஜ் ஃபுல் டேமேஜ்…” என மனதினுள் புலம்பியவாறு தன் பின்னே திரும்பி பார்த்தான் மனோரஞ்சன்.
அங்கு மஞ்சு இவனை கழுவி ஊத்தியதை அனைத்தையும் ஒன்று விடாமல் கேட்டவாறு அருகில் உள்ள புளிய மரத்தடியில் உதியனும் தூரிகையும் வாயில் புளியங்காயை வைத்து சப்பியபடி நின்று கொண்டிருந்தனர்.
மனோ பார்ப்பதை உணர்ந்த இருவரும் பீறிட்டு வந்த சிரிப்பை உள்ளடக்கி கொண்டனர்.
“டேய் உதி… உனக்கும் புடிக்குமா? எனக்கும் புடிக்கும்…. ” என புளியங்காயை நன்றாக சப்பு கொட்டி சாப்பிட்டாள் தூரிகை.
தங்களை மனோ பார்ப்பதை பார்த்த தூரிகை, “உனக்கும் வேணுமா ண்ணா? புளியங்காய்? ” என நக்கலாக கேட்டாள் தூரிகை.
“அடிக் கழுதை…. எல்லாம் உன்னால தான்… ” என தூரிகையை நோக்கி கல்லெறிந்தான் மனோ.
“இங்க பாரு மச்சான்… அண்ணனாவே இருந்தாலும் என் பொண்டாட்டிய அடிக்க உனக்கு ரைட்ஸ் இல்ல… அப்புறம் நல்லா இருக்காது பாத்துக்கோ… வேணும் னா வேணும் னு கேளு… வேண்டாம் னா வேண்டாம் னு சொல்லு… அத விட்டுட்டு இதென்ன வன்முறையில இறங்குறது? சின்ன புள்ள தனமா இல்ல? ” என புளியங்காயை சப்புக்கொட்டி சுவைத்தபடி கூறினான் உதியன்.
“மவனே… உனக்கு மொதல்ல பாயாசத்த ரெடி பண்ணனும்டா… இங்க கிணறு இருக்கு னு நீதான சொன்ன பிசாசே? ” மனோ.
“ஆமா…. கிணறு இருக்கு தான டா அண்ணா ?” தூரிகை.
” ஹர்ர்ர்ர்ர்…… பிசாசு… பிசாசு… அது தூந்து போன கிணறு னு ஏன் சொல்ல ல? ” என நவதூவரங்களிலும் புகை வர பொறுமினான் மனோ.
” நீ எங்கடா சொல்ல விட்ட? அது சொல்லுறதுக்குள்ளயும் தான் ஸார் பறந்து வந்துட்டீங்களே…. அழகி… ஏய் அழகி… ” என மனோவைப் போல் மிமிக்ரி செய்தாள் தூரிகை.
” உன்னைய…..” என தூரியின் தலையில் நங்கு நங்கு என கொட்டிவிட்டு உதியனின் கழுத்தை தோளோடு இறுக்கி அணைத்தவாறு அங்கிருந்து அவனை நகர்த்தி சென்றான் மனோ.
“யோவ் மச்சான்… கழுத்த நெரிக்காத…. தூரி…. பத்ரமா ரெண்டு பேரும் வீட்டுக்கு வந்துருங்க… ” என மனோவின் கரத்தில் சிக்கிய தனது தொண்டையை செருமியவாறு கூறினான் உதியன்.
“நீ வா மச்சான்…. உனக்கு தனியா படையல் போடுறேன்… ” என்றவாறு உதியனை இழுத்து சென்றான் மனோரஞ்சன்.
இருவரும் அங்கிருந்து சென்றதும் மஞ்சுவை நோக்கி புன்னகையுடன் நடந்தாள் தூரிகை. அவளருகே சென்று கிணற்று சுவர் மீது மஞ்சு போலவே அமர்ந்து அவளது தோளில் செல்லமாக இடித்தாள் தூரிகை.
தூரிகை இடித்த இடியில் பட்டென்று சிரித்தாள் மஞ்சு. அவளது சிரிப்பை ஆசையாக பார்த்தாள் தூரிகை.
” என் அண்ணன புடிச்சு இருக்கா உங்களுக்கு? ” என விழிகளில் ஆசை மின்ன கேட்டாள் தூரிகை.
அவள் விழிகளில் தெரிந்த ஆசையை கண்ட மஞ்சு, அகலமாக புன்னகைத்தாள் .
“ஹேய்… இந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? மனோவ ரொம்ப புடிச்சுருச்சு போல? ” என்றபடி மஞ்சுவின் தோளில் இடித்து விளையாண்டாள் தூரிகை.
“ம்ம்ம்… இத்துனூட்டு… ” மஞ்சு.
“ஆகான்…. அப்ப உனக்கு ஓகே யா எனக்கு அண்ணியா வர? ” தூரிகை.
“ம்ம்…. ” என வெட்கத்துடன் தலையசைத்தாள் மஞ்சு.
“ஹூர்ரே…… ஆனா ஒரு விஷயம்… இந்த மேட்டர் நமக்குள்ளயே இருக்கட்டும்… அவன கொஞ்சம் அலைய விடலாம்… டீல்? ” தூரிகை.
“பக்கா டீல்… ” என சிரித்தாள் மஞ்சு.
“சரி அத விடுங்க அண்ணி… என்ன ஆச்சு? திடீருனு இங்க வந்து இருக்கீங்க? ” தூரிகை.
“அண்ணி லாம் வேண்டாம்… சும்மா பேரு சொல்லியே கூப்பிடு… ” மஞ்சு.
“இப்ப அதுவா முக்கியம்? நீங்க ஓகே தான? ” தூரிகை.
“இது என்ன வாழ்க்கை தூரி? ” மஞ்சு.
” ஏன்? இந்த வாழ்க்கைக்கு என்ன கொறைச்சல்? ” என அழகாக புன்னகைத்தாள் தூரிகை.
” பொண்ணுங்க எப்போதும் எந்த நேரத்துல என்ன நடக்கும் னு யாரையும் நம்பாம பயந்துட்டே இருக்கனுமா? பெத்தவனே… ச்சை… நம்மள மனுஷியாவே பாக்க மாட்டாங்களா? வியாபார பொருளா தான் பாப்பாங்களா? நம்மள நம்ம இயல்போடவே இருக்க விட மாட்டாங்களா? யாரையுமே நம்ப முடியலயே… இந்த உடம்பு தான் அவங்க கண்ணுக்கு தெரியுமா? இந்த உடம்பையும் தாண்டி நமக்குனு ஒரு மனசு இருக்கே…. அத ஏன் யாரும் பாக்க மாட்டேன்ங்குறாங்க? ” மஞ்சு.
” நாம ஏன் பயந்துட்டே இருக்கனும்? நம்மள தப்பா நெருங்குறவன் நம்மள பாத்து பயப்படுற மாதிரி நாம நடந்துக்கிட்டாளே போதும். இந்த மாதிரி கேடு கெட்டவனுங்களால நம்ம உடம்ப மட்டும் தான் தொட முடியும். நம்ம மனச… இவனுங்களால நெருங்க கூட முடியாது. இவ்ளோ ஏன்? என்னைய எடுத்துக்கங்க… ஒரு நாயி என்னைய கொதறிட்டு போனுச்சு. அத்தோட நான் மறைஞ்சு போயிடலயே. என்னோட வாழ்க்கைய நான் முன்ன விட சிறப்பா வாழ்ந்துட்டு தான் இருக்கேன், ரொம்ப சந்தோஷமா. தடுக்கி விழுந்துட்டா நாம திரும்ப எந்திரிக்கிறது இல்லையா? விழுந்த இடத்துலயே ஏன் நாம விழுந்தோம் னு தேவை இல்லாததெல்லாம் யோசிச்சுட்டா இருக்கோம்? ஒட்டுன மண்ண தொடச்சு போட்டுட்டு போய்ட்டே இருக்கோம்ல. அதே போல தான் நம்ம வாழ்க்கையும். எவனாவது நம்ம வாழ்க்கைய நாம எதிர்பாரா நேரத்துல அழிக்கிறப்ப… அத தாண்டி நாம முன்னேறிட்டே இருக்கனும் .பேசுறவன் ஆயிரம் பேசுவான். ஆகச்சிறந்த பழிவாங்கல் எது தெரியுமா? நம்மள தரம் தாழ்த்தி பாக்குறவன் முன்னாடி அவன் அண்ணாந்து பாக்குற அளவுக்கு சிறப்பா வாழ்ந்து காட்டுறது தான். நீங்க கேட்ட கேள்விக்குலாம் என்னைக்கும் பதில் கிடைக்க போறது இல்ல. ஸோ….. ” என புன்னகையுடன் இழுத்தாள் தூரிகை.
” நாம நம்ம வாழ்க்கைய நம்ம மனசாட்சிக்கு சரியா வாழனும்….” என தூரிகை விட்டதை மஞ்சு முடித்து வைத்தாள்.
“அதே போல அவனுங்க மிரட்டலுக்கு அடிபணியாம பயப்படாம எதிர்த்து நாம ஒரு பார்வை பாத்தாலே போதும். பொண்ணுங்களுக்கு எதிரான வன்முறையில பாதி கொறைஞ்சுரும். ” தூரிகை.
“அதுவும் சரிதான்….” என்றபடி கிணற்று சுவரில் இருந்து வெளியே குதித்தாள் மஞ்சு.
“இப்ப உங்க மனசு தெளிவாகிருச்சா? வீட்டுக்கு போகலாமா? ” என சிரிப்புடன் மஞ்சுவை தொடர்ந்து கிணற்றில் இருந்து வெளி வந்தாள் தூரிகை.
“எப்பிடி நீ இவ்ளோ போல்டா இருக்க? ” என மெல்ல நடந்தபடி கேட்டாள் மஞ்சு.
“இதோடா…உங்கள விடவா? அதான் இன்னக்கி பாத்தேனே… ” எனக் கூறி கண்டித்தாள் தூரிகை.
“ஹா ஹா ஹா… இல்ல…நான் உன் அளவுக்கு தெளிவு இல்ல….ஏதோ ஒரு குருட்டு தைரியம். அவ்ளோதான்… ” மஞ்சு.
” எல்லாம் என் மகி அக்காவால வந்தது. நானும் ஆரம்பத்துல ஹாஸ்பிடல்ல இருந்தப்ப கோழை மாதிரி பேசுனவ தான். அதுக்கு அப்புறம் அக்காதான் எனக்கு எல்லாம் புரிய வச்சாங்க. ” தூரிகை.
“நம்ம பக்கத்துலயே நமக்கு குழி தோண்ட சாத்தான் இருந்தாலும் அதுல இருந்து காப்பாத்த ஒரு தேவதையும் நம்ம பக்கத்துலயே இருக்காங்கல்ல? ” மஞ்சு.
” ஆமா… ” என புன்னகையுடன் ஆமோதித்தாள் தூரிகை.
இருவரும் இணைந்து பேசியபடியே தீரன் வீட்டிற்கு வந்தவர்கள், வெளியே தலையில் கை வைத்தபடி உதியனும் மனோவும் அமர்ந்திருக்க… அவர்களைப் பார்த்து புரியாமல் என்னவென்று விசாரித்தனர் பெண்கள் இருவரும்.
“நீங்களே உள்ள நடக்குற கூத்த பாருங்க…” என உள்புறம் நோக்கி கை காட்டினான் உதியன்.
“அப்பிடி என்ன டா நடக்குது? ” என வினவியவாறு மஞ்சுவுடன் உள்ளே சென்றாள் தூரிகை.
வீட்டின் உள்ளே நடுவீட்டில் சேலையில் கட்டிய தொட்டிலில் சுகமாக மகி உறங்கி கொண்டிருக்க…. கருமமே கண்ணாக அத்தொட்டிலை ஆட்டிக் கொண்டிருந்தான் தீரன்.
(காதல் தீ பரவும்… )
-செல்லம்மாள்பாரதி
No comments yet.