“கொன்னுறலாம்… ” என்ற அழுத்தமான மஞ்சுவின் குரலைக் கேட்ட சின்ராசு தன் மகளை பெருமை பொங்க பார்க்க… மற்ற அனைவரும் அவளை ஆச்சரியத்துடன் பார்க்க… பொன்ராசு ஒரு படி மேலே வந்து மஞ்சுவை ஒரு அறை அறைந்தான்.
அதற்கு சிறிதும் சஞ்சலப்படாமல், மகி வைத்திருந்த அரிவாளை கையில் ஏந்தி, “கொன்னுறலாம்… அவங்கள இல்ல உன்னைய…. ” என சின்ராசுவின் கழுத்தை நோக்கி வீச… அதை உணர்ந்த தீரன், சட்டென சின்ராசுவை பின்னாடி இழுத்தான். அரை நொடிக்கும் குறைவான நொடியில் மயிரிழையில் உயிர் தப்பினான் சின்ராசு.
“என்ன பண்ற மஞ்சு? ” என உயிர் பிழைத்த நிம்மதியில் கோபமாக கேட்டான் சின்ராசு.
“அதான் சொன்னேனே… கொன்னுறலாம் னு… நீ லாம் பூமில வாழுறதே வேஸ்ட்… எப்பிடி எப்பிடி… அந்த மகா மனுஷன் உன் ப்ரண்ட்… அவன் கேடு கெட்ட புத்தியால அவனா செத்தான்… அந்த கடவுளே அவன் உடம்ப கூட மிச்சம் வைக்காம தண்டனை குடுத்துருச்சு… அதுக்கு பாதிக்கப்பட்ட இவங்க என்ன பண்ணுவாங்க? அவன் என்ன நல்ல விசயத்தையா செஞ்சான்? சொல்லவே நாக்கு கூசுது… இங்க பாரு… இந்த பொண்ணுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் இருக்கு? ” என தூரிகையை இழுத்து சின்ராசுவின் முன் நிறுத்தி கேட்டாள் மஞ்சு.
“அந்த கேடு கெட்டவனோட கூட்டாளியான நீயும் தரங்கெட்ட கேடு கெட்டவன் தான்… உனக்கும் அவனுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை….அவன் செஞ்ச காரியத்த புனிதமா பாக்குற நீ, நாளைக்கே என்னைய வேற ஒரு பொறுக்கிக்கு விக்க மாட்ட னு என்ன நிச்சயம்? பெத்த அப்பன் செய்யிற காரியமா அவன் செஞ்சான் ? அதுக்கு இவரு பழி வாங்குறாராம்… தூ…. அசிங்கமா இல்லை? நீயெல்லாம் எதுக்கு இருக்குற? செத்து போ… ” என முகம் சிவக்க கோபத்தில் கொப்பளித்தாள் மஞ்சு.
“நண்பன் க்கு உள்ள மரியாதையே நீ அசிங்கப் படுத்திட்ட ப்பா… ஒரு நல்ல நண்பனா… மனுஷனா என்ன பண்ணி இருக்கனும்? உன் நண்பனோட பொண்ண உன் பொண்ணா நினைச்சு பாத்து இருக்கனும்…. நீ நல்ல நண்பனும் இல்ல.. மனுஷனும் இல்ல….” பொன்ராசு.
இருவரும் பேசியதைக் கேட்ட சின்ராசு அமைதியாக தலை குனிந்து மனோவிடம் வந்து நின்றான். அவனின் அந்த மாற்றத்தை அமைதியாக அனைவரும் வேடிக்கைப் பார்த்தனர்.
“அப்புறம் என்ன? போலீஸ் கிட்ட ஒப்படைச்சாச்சு… இனி மனோ பாத்துப்பான்… மஞ்சு, ராசு… உங்களுக்கு இதுல வருத்தம் எதுவும் இல்லையே? ” சிதம்பரம்.
” அதெல்லாம் ஒன்னும் இல்லை பெரியப்பா… என் தங்கச்சிய நான் பாத்துப்பேன்… என் நிலத்துல உழைச்சு… அவளுக்கு நான் இருக்கேன்… ” என பொன்ராசு தன் தங்கையை தோளில் சாய்த்துக் கொண்டான்.
“சரி வாங்க… இதுக்கு மேல நீங்க இங்க இருக்க வேண்டாம்.. என் கூட கிளம்புங்க… ” என்றவாறு மஞ்சுவையும் பொன்ராசுவையும் அழைத்துக் கொண்டு கிளம்பினார் சிதம்பரம்.
சிதம்பரம் கிளம்பிய சிறிது நேரத்தில் மனோவின் ஆட்கள் மப்டியில் வந்து சேர்ந்தனர். அவர்களிடம் சின்ராசுவை ஒப்படைத்த மனோ, அவர்களுக்கு சில கட்டளைகளை விதித்தான். அவர்கள் சின்ராசுவை அழைத்துக் கொண்டு புறப்பட்ட நொடி, “ஒரு நிமிஷம்… ” என நிறுத்தினாள் மகி.
என்னவென்று அனைவரும் மகியைப் பார்க்க… ,”எல்லாம் பண்ணிட்டு தலைய குனிஞ்சுட்டு போலீஸ் கிட்ட போய்ட்டா உன் உசுரு தப்பிச்சுரும் னு நினைச்சு தான திருந்துன மாதிரி இப்ப அமைதியா போற? ” என ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிதானமாக சின்ராசுவின் விழிகளை ஆழப் பார்த்துக் கொண்டே கேட்டாள் மகி.
திடுக்கிடலின் சாயல் சின்ராசுவின் விழிகளில் தெரிய… அதைக் கண்டு அழகாக புன்னகைத்தாள் மகி.
“என்ன உண்மை அதுதானோ? ” மகி.
மகியின் கேள்வியை கேட்ட அனைவரும் வியப்புடன் அவளைப் பார்க்க… எவரின் பார்வைக்கும் பதிலளிக்காமல், “எப்பிடி கண்டுபுடிச்சேன்னு பாக்குறியா? ” என்றாள்.
“அது ஒன்னும் இல்லை… நீ பண்ணுன பாவத்துக்கு உண்மையா நீ திருந்தி இருந்தா உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்து இருக்கனும்… ஆனா உன் கண்ணுல அதுக்கான அறிகுறியே தெரியலயே…. அதுக்கு பதிலா…..” என வார்த்தையை முடிக்காமல் சிரித்தாள் மகி.
“அப்பிடிலாம் ஒன்னும் இல்ல….நான் நிஜமா திருந்திட்டேன்… ” சின்ராசு.
அதைக் கேட்டு சத்தமாக சிரித்தவள், “நாங்க சந்தோஷமா இருக்க கூடாது னு தான இவ்வளவும் பண்ணுன? நாங்க சந்தோஷமா இருக்குறத பாத்துட்டு போ…” என்ற மகியை அனைவரும் கேள்வியுடன் பார்க்க… மகியோ தூரிகையை உதியனின் அருகில் நிறுத்தி.. ” ரெண்டு பேரும் ஆழமா காதலிக்கிறாங்க… சீக்கிரமே ஜெயில்ல உனக்கு கல்லியாண பத்திரிகை அனுப்பி வைக்கிறோம்… சரியா? அப்புறம்…… ” என இழுத்தபடி தீரனை பெருமை பொங்க காதலுடன் பார்த்தாள்.
தன்னவளின் காதல் பார்வையை எதிர் கொண்ட தீரன், வெட்கத்தில் மகியின் விழிகளை பார்க்காமல் அங்கும் இங்கும் விழிகளை அலைமோத விட்டான். தீரனை காதலுடன் பார்த்தவாறு அவனை நெருங்கினாள் மகி. தன்னவளிடம் இருந்து வெளிப்பட்ட தனக்கான காதல் பார்வையில் சூழ்நிலை இருக்கும் இருப்பிடத்தை மறந்து மயங்கி நின்றான் தீரன்.
” இத பாத்துட்டு ஜெயில்ல வயிறெரிஞ்சே சாவு… ” என சின்ராசுவை பார்த்து கூறியவள் யாரும் எதிர்பாரா நேரத்தில் தீரனின் முரட்டு இதழை மென்மையாக தன் இதழ் கொண்டு தீண்டினாள் மகி.
மகியின் இச்செயலை எதிர்பாராத தீரன் இன்ப அதிர்ச்சியில் திகைத்து விழித்தான். மென்மையாக தீரனின் இதழ்களை தீண்டியவள் அதை விட மென்மையாக விடுவித்து, “நல்லா பாத்துக்க…. இத விட அதிகமான சந்தோஷத்தோட தான் வாழப் போறோம் நாங்க…உன்னால ஒரு மயிரையும் புடுங்க முடியாது… போடா… பழிவாங்க வந்துட்டான் பெருசா… ” என்றாள் மகி.
மகியின் செயலை, “ஆஆ.. “என வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்த தூரிகையின் இடுப்பில் அழுத்தமாக கிள்ளினான் உதியன். அதில் துள்ளி நகர்ந்த தூரி, உதியனைப் பார்த்து அழுத்தமாக முறைத்தாள்.
“என்னடி மகி மாதிரி நீயும் ட்ரை பண்றியா? “என விஷமத்துடன் கேட்டான் உதியன்.
“உன்னைய… “என அடிக்க கை ஓங்கியவள் உதியனின் நெஞ்சிற்குள் காதலுடன் தன்னை புதைத்துக் கொண்டாள் தூரிகை.
தூரிகையை அளப்பரிய காதலுடன் அணைத்தவன், இகழ்ச்சியாக சின்ராசுவைப் பார்த்தான் உதியன். அப்பார்வை சின்ராசுவின் அகங்காரத்திற்கு ஆயிரம் பதிலடி கொடுத்தது.
“டேய் டேய்… இங்க ஒருத்தன் இருக்கேன் டா… “என பாவமாக குரல் கொடுத்தான் மனோ.
“டேய் மச்சான் நீ இன்னுமா இங்க இருக்க? “உதியன்.
“எல்லாம் என் நேரம் டா…. அங்க ஒருத்தன் இன்னும் கனவுல இருந்து வெளில வரல… நீங்க நடத்துங்கடா… யோவ் சின்ராசு… ஒழுங்கா வந்துரு… இல்ல , உனக்கு நெஞ்சு வலிய வரவச்சுருவானுக… ” என சின்ராசுவை தள்ளிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றான் மனோ .
“டேய் மாமா…. “என மகி தீரனை உலுக்க….காதல் கனவில் இருந்து வெளிவந்தான் தீரன்.
” வீட்டுக்குப் போலாமா? எனக்கு ரொம்ப பசிக்குது….” மகி.
” எனக்கும் தான்டி ரொம்ப பசிக்குது… ” என தன் இதழ்களை விரல்களால் தீண்டியவாறு மகியை பார்வையால் தீண்ட… கணவனின் உரிமை பார்வையில் செங்கொழுந்தாகி வெட்க புன்னகையுடன் அங்கிருந்து வெளியே சென்றாள் மகி .
“டேய் ரெண்டு பேரும் சீக்கிரம் வெளில வாங்க டா… சீக்கிரமே கல்லியாணத்துக்கு தேதி குறிக்கிறேன்…” என உதியனை நோக்கி மகிழ்ச்சியுடன் கூறிவிட்டு தன்னவளை பின்தொடர்ந்து வெளியே சென்றான் தீரன்.
” உனக்கு ஓகே தான பேபி? ” என தூரியின் காதில் கிசுகிசுத்தான் உதியன்.
அக்கேள்வியில் நிமிர்ந்து உதியனை நோக்கியவள், அவனின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டு தன் சம்மதத்தை தெரிவித்து வெட்கத்துடன் வெளியே சென்றாள் தூரிகை.
நிம்மதி கலந்த புன்னகையுடன் அவளை பின் தொடர்ந்து வீட்டை விட்டு வெளியே வந்தான் உதியன். அதற்குள் அக்கம் பக்கம் அரசல் புரசலாக விசயம் தெரிந்து லேசான கூட்டம் கூடி இருந்தது. தங்களுக்குள் சலசலத்துக் கொண்டு இருக்க… சின்ராசுவை வண்டியில் ஏற்றி அவர்களுடன் புறப்பட்டான் மனோரஞ்சன்.
அவர்களின் பின்னே தீரனும் உதயனும் தங்களது பைக்கை எடுக்க போக… மகியும் தூரிகையும் பைக்கில் ஏறாமல் இருவரையும் முறைத்தபடி நின்றனர்.
இருவரையும் பார்த்த உதியன், ” ஹேய்… வாலுங்களா… வந்து ஏறுங்க… வீட்டுக்கு போக… ” என்றான்.
அதைக் கேட்ட மகியும் தூரிகையும் ஒருவரை ஒருவர் புன்னகையுடன் பார்த்து விட்டு தோள் மீது கிடந்த தங்களது துப்பட்டாவை மார்பின் குறுக்கே போட்டு இடுப்பின் ஓரத்தில் கட்டினர்.
உதியனும் தீரனும் அவர்களை வித்தியாசமாக பார்க்க… சிரிப்புடன் மகி தீரனை நெருங்க…உதியனை நெருங்கினாள் தூரிகை
“தள்ளுடா வெண்ண… ” என உதியனை பின்னால் அமர சொல்லிவிட்டு பைக்கை ஸ்டார்ட் செய்தாள் தூரிகை.
அதைப் பார்த்த தீரன், மகி எதுவும் கூறாமலே பின்னால் நகர்ந்து கொள்ள இதழ் பிரியா புன்னகையுடன் தீரனின் பல்சரை ஸ்டார்ட் செய்தாள் மகி.
மகியும் தூரிகையும் நிமிர்வுடன் நேர்த்தியாக பைக் ஓட்ட… அவர்களின் பின்னே ஒரு வித பயத்துடன் அமர்ந்து வந்தனர் உதியனும் தீரனும்.
“தூரி… உன் கிட்ட லைசென்ஸ் இருக்காடி? ” என பயத்துடன் உதியன் கேட்க… “பேசாம வர்றியா? இல்ல… புளிய மரத்துல வண்டிய விடவா? ” என வண்டியை வேண்டும் என்றே தூரிகை ஒரு ஆட்டு ஆட்ட… அத்துடன் வாயை இறுக்க மூடிக் கொண்டான் உதியன்.
உதியனின் நிலையைக் கண்ட தீரன், தன்னாலயே வாயை மூடி அமைதியாக வந்தான். இருவரையும் பார்த்த மகி, சிரித்தபடி தூரிகைக்கு இணையாக பல்சரை செலுத்தி ஒரு கையால் அவளுக்கு ஹைபை குடுத்தாள். தூரிகையும் சிரித்தபடி மகிக்கு ஹைபை கொடுக்க… உதியனின் வயிற்றில் தான் புளி கரைத்தது.
ஊரார் பார்க்க தங்களவனை பைக்கில் பின்னே வைத்து ஊர்வலம் வந்த மகளிர் இருவரும் வெகு நாட்களுக்கு பிறகு மன மகிழ்ச்சியுடன் தீரனின் இல்லத்தை அடைந்தனர்.
பைக்கில் இருந்து தூரிகை கீழிறங்கிய அடுத்த நொடி, “யம்மா தாயே… ஆள விடு… ” என தூரிகையை நோக்கி கை எடுத்து கும்பிட்டு விட்டு பைக்கில் அங்கிருந்து பறந்தான் உதியன்.
அதைப் பார்த்து வாய் விட்டு நகைத்தனர் தூரியும் மகியும். தப்பித்தோம் பிழைத்தோம் என தீரனும் வீட்டிற்குள் சென்று மறைய… பெண்களின் நகைப்பின் அளவு கூடியது.
நடந்த அத்தனையும் சிதம்பரத்தின் வாயிலாக அறிந்த கருப்பாயி, சிரித்தபடி உள்ளே சென்ற மகியையும் தூரியையும் திருஷ்டி கழித்து கொண்டாடினார். சிறிது நேரத்தில் மனோவும் வந்து சேர… அனைவரும் இணைந்து மதிய உணவை முடித்து விட்டு மஞ்சுவும் கருப்பாயியும் ஓய்வெடுக்க செல்ல… பொன்ராசுவை அழைத்துக்கொண்டு வயலுக்கு புறப்பட்டார் சிதம்பரம். தூரிகையும் மனோவும் தூரிகையின் விளையாட்டு தோழர்களுடன் விளையாட வெளியே செல்ல… தனித்து விடப்பட்டனர் புதுமண காதல் தம்பதிகள்.
தனிமையின் இனிமையில் தன் மனைவியை மோகப் பார்வையில் தீரன் தீண்ட… இனிமையாக சிலிர்த்துப் போனாள் பெண்மயில். அனைவரின் முன் தன் காதலால் திண்டாட வைத்த தீரனின் ஒற்றைப் பார்வையை தனிமையில் எதிர்கொள்ள முடியாமல் வீட்டின் பின்புறம் நோக்கி மெதுவாக நகர்ந்தாள் மகி.
வீட்டின் பின்புறத்தில் உள்ள தோட்டத்தில் வீசிய இனிமையான காற்றில் உடல் சிலிர்க்க நின்றவளின் பின்புறமாக தீரன் நெருங்கி நிற்க… ஏகாந்த வெளியில் தன்னவனின் நெருக்கத்தில் பச்சை மண்ணாக நின்றாள் மகி.
தன்னவளின் காதல் மயக்கத்தை கண்ட தீரன், மோக மயக்கத்தில் மகியின் தோள் மீது தாடை பதித்தான் தீரன். தீரனின் சூடான மூச்சுக் காற்று மகியின் காதோர கம்மலை ஊஞ்சலாட்ட…. கணவனின் மோக வெப்பத்தில் சுகமாக குளிர்காய்ந்தாள் மகி.
தன்னவளின் தோள் பற்றி தன் புறம் மெதுவாக திருப்பி … மகியின் விழியை பார்க்க….அவளோ காதல் மயக்கத்தில் கண்களை மூடி இருந்தாள். மெதுவாக இமைகளுக்கும் வலிக்காமல் சூடான தன் இதழ்களை மகியின் மூடிய விழிகளில் பதித்தான் தீரன்.
தீரனின் இதழ் உரசிய வெப்பத்திலும் அது உணர்த்திய செய்தியிலும் மெதுவாக விழிகளை திறந்தவள், மிக மெதுவாக இதழ் பிரித்து…,” மாமா…” என கிறங்கினாள் மகி.
“என்னடி….” என மகியின் கிறங்கிய குரலில் அதிகமாக கிறங்கியபடி தன்னிச்சையாக மகியின் மெல்லிடையை வளைத்து தன் புறம் அழுத்தியவாறு தன்னவளின் கழுத்தில் அழுத்தமாக இதழ்களை பதித்தான் தீரன்.
” மாமா…..தூக்கம்…. ” என்றபடி தன்னவனின் தோளில் நிம்மதியாக தோள் சாய்ந்து கண் மூடினாள் தீரனின் மகிழ்விழி.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.