ஆட்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் நிசப்தமான அவ்வீட்டில் சின்ராசுவின் அகங்காரமான சிரிப்பே ஓங்கி ஒலித்தது. அதைத் தொடர்ந்து யாரோ கதவைத் தட்டும் அரவம் கேட்க ஒவ்வொருவரும் ஒரு ஒரு மன நிலைக்கு சென்றனர்.
கதவைத் தட்டும் ஓசையைத் தொடர்ந்து சின்ராசுவின் இகழ் நகைப்பின் அளவும் அதிகரித்தது. அதைப் பார்த்த தூரிகை, “இவன…. ” என்றவாறு தன் பலம் கொண்ட மட்டும் ஓங்கி அவனின் மூக்கில் குத்திவிட்டு போய் கதவைத் திறந்தாள்.
வெளியே ஒரு வித எதிர்பார்ப்புடன் சிதம்பரம் நின்றிருந்தார். அவரைப் பார்த்ததும், “ஹப்பாடா… ” என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டு அவரை உள்ளே அழைத்தாள் தூரிகை.
“நீங்க தானா… நாங்க வேற யாரோ னு பயந்துட்டோம்… ” என்றவாறு மீண்டும் கதவை உள் புறமாக தாளிட்டு விட்டு சிதம்பரத்துடன் உள்ளே வந்தாள் தூரிகை.
உள்ளே நுழைந்த சிதம்பரத்தைக் கண்டு முகத்தை சுழித்தான் சின்ராசு. “என்ன? என்னைய பாத்ததும் முகம் பேயறைஞ்ச மாதிரி மாறுது…. வேற யாரையும் எதிர்பாத்தியா சின்ராசு? ” என நக்கலாக கேட்டார் சிதம்பரம்.
” தெரிஞ்ச விசயம் தானப்பா…..அவன் தான் பெரிய எத்தன் னு நினைச்சு இருப்பான் போல… அவனுக்குத் தெரியல, நான் அந்த எத்தனுக்கெல்லாம் எத்தன்னு… ” என சின்ராசுவைப் பார்த்து நக்கலாக சிரித்தான் தீரன்.
தான் நினைத்த விசயம் நடக்காமல் வேறு நடந்து கொண்டிருப்பதைக் கண்டு சின்ராசுவின் முகத்தில் லேசாக குழப்பமும் பயமும் தோன்ற ஆரம்பித்தது.
“என்ன சொன்ன? இனித்தான் ஆரம்பமா? ஹா ஹா… உனக்கு இந்த வில்லன் கேரக்டர் லாம் செட் ஆகல… ” என வாய் விட்டு நகைத்தான் மனோரஞ்சன்.
“போச்சுடா… திரும்ப இவனுக நமக்குத் தெரியாம ஏதோ பண்ணி இருக்கானுக… ” என இதழை சுளித்தாள் மகி.
அதைக்கண்ட தீரனின் மனம் வேறு புறம் தாவினாலும் தன் மனதை கட்டுப்படுத்தியவாறு லேசாக சிரித்தான் தீரன்.
“இப்பிடி சிரிச்சு சிரிச்சு எங்கள ஏமாத்தாதீங்க மாமா…. அக்காவுக்கே தெரியாம அப்பிடி என்ன பண்ணீங்க? “தூரிகை.
” அட… அவன் எதுவும் பண்ணல… நான் தான் பண்ணேன்… ” என பெருமை பொங்கும் குரலில் கூறினார் சிதம்பரம்.
” நீ என்ன நினைச்ச சின்ராசு? நீதான் எல்லாத்துக்கும் காரணம் னு தெரிஞ்சும் என் பொண்டாட்டிய பாதுகாப்பு இல்லாம கூட்டி வருவேன் னு நினைச்சியா? நீ தான்னு தெரிஞ்ச அடுத்த செகண்ட்டே உன் வண்டவாளம் எல்லாத்தையும் தோண்டி எடுத்துட்டேன்… நீ நின்னாலும் நடந்தாலும் நீ தும்முனாலும் கூட அது என் கவனத்துக்கு வந்துரும்…. நீ நேத்து நைட் எங்க போன… என்ன பண்ண னு எங்களுக்கு தெளிவா தெரியும்… நீ ரெடி பண்ணி வச்சு இருந்த ஆளுங்க எல்லாம் இப்ப மனோ புண்ணியத்துல கம்பி எண்ணிட்டு இருக்காங்க… ” என தீரன் கூறவும் முதல் முறையாக லேசாக நடுங்கினான் சின்ராசு.
“உங்க வேலை என்ன ஆச்சு ப்பா? ” என தன் தந்தையைப் பார்த்து வினவினான் தீரன்.
” எட்டு பேருடா மவனே… எல்லாரையும் நாய் புடிக்கிற வண்டியில ஏத்தி போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வச்சுட்டுத் தான் வர்றேன்… யம்மா… மஞ்சு… குடிக்க கொஞ்சம் தண்ணி குடும்மா… ” என தீரனுக்கு வேண்டிய தகவலை கூறி விட்டு நிதானமாக மஞ்சுவிடம் தண்ணீர் கேட்டார் சிதம்பரம்.
“யக்கோவ்… உன் மாமனாருக்கு குசும்ப பாத்தியா… இங்க எதுக்கு வந்து இருக்கோம்… இவரு சகவாசமா மஞ்சுக்கிட்டயே தண்ணி கேக்குறாரு… விட்டா மஞ்சுவ சமைச்சு தர சொல்லி விருந்தே சாப்பிடுவாரு போல… ” என மகியின் தோளை இடித்தபடி அவளிடம் ரகசியம் பேசினாள் தூரிகை.
“ஆமான்டி…. உன் உத்தம மாமன் நமக்கு தெரியாம ஒரு அன்டர்க்ரவுண்ட் வேலையே பாத்து இருக்காரு தூரி… விடியக்காலையில பல்லுல பச்சத் தண்ணி கூட குடிக்காம நான் கட்டிக்கிடவன நம்பி வந்தேன்…..உச்சிப்பொழுது ஆகியிருச்சு இந்த கடங்காரனும் காரணத்த சொல்ல மாட்டேன்ங்குறான்… எனக்கு பசி உயிர் போகுது… பேசாம நாம சமையக்கட்ட போய் ஒரு உருட்டு உருட்டிருவோமா? ” என தூரியின் காதில் கிசுகிசுத்தாள் மகி.
“நீ திங்கலயா க்கா? காலையில நம்ம அத்தை தோசை சும்மா மணக்க மணக்க ஊத்தி குடுத்துச்சு… தோராயமா ஒரு இருபது வெட்டி இருப்பேன்… ஸோ எனக்கு பசிக்கல க்கா….” என தன் வாயை மறைத்தவாறு மகியின் காதை கடித்தாள் தூரி.
அதைக் கேட்ட மகி, தூரியின் காலில் ஓங்கி ஒரு மிதி மிதித்தாள். அதை சற்றும் எதிர்பாராத தூரி, “அய்யோ அம்மா… ” என வாய்விட்டு கத்தினாள்.
தூரியின் கத்தலைக் கேட்ட அனைவரும் அவளை பார்த்து என்ன என்று மாற்றி மாற்றி வினவ… என்ன கூறி சமாளிப்பது என்று தூரி திரு திரு வென முழித்தாள்.
“இந்த திருட்டு முழிய பாத்தா…. ஏதோ சரி இல்லையே… ” என தூரியை நெருங்கி வந்த உதி, அவளையே மேலும் கீழும் பார்த்தான்.
” இங்க எதுக்கு வந்து இருக்கோம்… அத விட்டுட்டு எல்லாரும் ஏன் என்னையவே பாக்குறீங்க? சீக்கிரம் வந்த வேலைய முடிச்சுட்டு கிளம்புங்க… வளர்ற புள்ளைங்களுக்கு பசிக்குமா இல்லையா? ” என அதட்டல் மொழியாக தூரி கூற… அப்பொழுது தான் மகி காலையில் இருந்து எதுவும் உண்ணவில்லை என்ற நினைவு தீரனுக்கு வந்தது.
“தம்பி பொன்ராசு… பொண்ணுங்க எல்லாரையும் கூட்டிட்டு என் வீட்டுக்கு கிளம்பு… ” என பொன்ராசுவிடம் கூறினான் தீரன்.
” முடியாது…. ” மஞ்சு.
“வாய்ப்பு இல்லை மாமா… ” தூரிகை.
“என் புருஷன் இல்லாம இங்க இருந்து ஒரு அடி கூட நகர மாட்டேன் நானு… ” மகி.
தீரன் கூறிய அடுத்த நொடியே மூவரிடம் இருந்தும் அழுத்தமான குரலில் விதவிதமாக மறுப்பு வரவும் சற்று தொய்ந்து தான் போனான் தீரன்.
“நான் சொல்லுறத கொஞ்சம் கேளுங்களேன் மூணு பேரும்… ” தீரன்.
” அட விடு தீரா… இருந்துட்டு போகட்டும்… ” என மஞ்சுவின் முன்னே தன் வீர தீர பராக்கிரமங்களை காட்ட மனதினுள் ரகசியமாக திட்டமிட்டான் மனோ.
“இப்ப எலி எதுக்கு ட்ரெஸ் இல்லாம ஓடுது? ” என வீட்டு முகட்டை அண்ணாந்து பார்த்தவாறு கூறினான் உதியன்.
“கொய்யால… உனக்கு மொதல்ல பாயாசத்த ரெடி பண்ணனும்டா… ” என உதியனுக்கு மட்டும் கேட்கும் குரலில் கூறி விட்டு தீரனின் முகத்தை பாவமாக பார்த்தான் மனோ.
இருவரின் விளையாட்டை கண்ட தீரன், தன் நெற்றியில் ஓங்கி அறைந்தவாறு சின்ராசுவின் புறம் திரும்பினான் .
“இப்ப நீ காரணத்த சொல்லுறியா? இல்ல இப்பவே ஜெயிலுக்கு களி திங்க போறியா? இதுக்கு மேல எனக்கு பொறுமை லாம் இல்லை….ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்….இதுக்கு மேல உன் மயித்த கூட உன்னால அசைக்க முடியாது…ஏன்னா நான் வச்ச ஆப்பு அப்புடி… ” தீரன்.
தனது கடைசி அஸ்திரமும் புஸ்வாணமாகி போய் தீரனை நினைத்து உள்ளூர நடுநடுங்கி அமைதியாக இருந்தான் சின்ராசு.
சின்ராசுவின் அமைதியைப் பார்த்த தீரன், “மச்சான் டேய்… உன் ட்யூட்டிய பாருடா …இவன் வாய தொறக்க மாட்டான்…” என மனோவிடம் கூறினான்.
ஒரு முறை மஞ்சுவையும் சின்ராசுவையும் ஆழ பார்த்த மனோ, உதியனின் அலைபேசியில் இருந்து சிறிது தள்ளி சென்று பேசியவன், தீரனைப் பார்த்து தன் கட்டை விரலை உயர்த்தி காட்டினான்.
அதைப் பார்த்த தீரன், “மஞ்சு… உங்க அப்பாக்கிட்ட ஏதாவது பேசனும் னா இப்பவே பேசிக்கங்க… ” என்றான்.
அதற்காகவே காத்திருந்தது போல் சற்று முன்னே வந்து நின்று ,தன் தந்தையை உற்று நோக்கினாள் மஞ்சு.
“உன் கிட்ட ஒரே ஒரு கேள்வி கேக்கனும்…. நீ அதுக்கு பதில் சொன்னாலும் சரி… சொல்ல ல னாலும் சரி… ” என தீவிரத்துடன் கூறினாள் மஞ்சு.
அனைவரும் மஞ்சு என்ன கேட்க போகிறாள் என அவளையே பார்க்க… சின்ராசுவும் எதுவும் கூறாமல் இமைக்காமல் மஞ்சுவையே பார்த்தான்.
“நீ என்ன புடலங்கா காரணத்துக்காக வேணும்னாலும் இத பண்ணி இருந்துட்டு போ… எனக்கு அது தேவை இல்லை….. ஒருவேளை….. ஒரு…வேளை…. அந்த வீடியோல…. இந்த ரெண்டு பொண்ணுங்களுக்கு பதிலா…. நான் இருந்து இருந்தேனா… இதே போல தான் ஃபோன் ல வச்சு… அத அடுத்தவன் ஃபோனுக்குலாம் அனுப்பி வைப்பியா? ” என கண் கலங்க இதயம் வாய் வழியே வெளிவரும் வலியுடன் கேட்டாள் மஞ்சு.
“இல்லை…. என் பொண்ணு இவளுகள மாதிரி எந்த தப்பும் பண்ண மாட்டா…. ” என உருகிய குரலில் கூறினான் சின்ராசு.
“அப்பிடி என்ன தான் தப்பு பண்ணிட்டாங்க? உலக மகா தப்பு? கொலையா பண்ணிட்டாங்க? ” என மகி வாயை திறப்பதற்கு முன்பே வேகமாக கேட்டாள் மஞ்சு.
“ஆமா…. ஆமா…. கொலை தான்… கொலை தான் பண்ணிட்டாங்க… ” என கத்திக் கொண்டு தரையில் மடங்கி அமர்ந்து கண்ணீர் சிந்தினான் சின்ராசு.
சின்ராசு கூறியதைக் கேட்ட அனைவரும் அதிர்ச்சியுடன் அவனைப் பார்க்க… ” என் தோஸ்த்து…. எனக்கு னு இருந்த ஒரே ஒரு உசுரு…. கலியமூர்த்தி…. அவன் உசுர வாங்கிட்டாளுக இந்த தேவடியா சிறுக்கி ரெண்டு பேரும்… ” என மகியையும் தூரியையும் கைகாட்டி அழுதபடி கத்தினான் சின்ராசு.
“நாங்களா? டேய் அறிவு கெட்ட முட்டாளே…. அந்த கலியமூர்த்தி ய நான் பாத்தது கூட இல்ல டா… ” மகி.
“அவனால நான் குத்துயுரும் கொலையுருமா கிடந்தது ஞாபகம் இல்லையோ? செஞ்ச தப்புக்கு பயந்து மருந்த குடிச்சு செத்துப் போனதுக்கு என் அக்கா என்ன பண்ணுவா? அவனுக்கு பொறந்த பாவத்துக்கு வேணுனா அந்த பழிய நான் ஏத்துக்கலாம்… அக்கா ஏன் ஏத்துக்கனும்? அவங்க எப்பிடி காரணம் ஆவாங்க?” என கோபத்தில் வெயிலில் காயும் எள்ளென வெடித்தாள் தூரிகை.
” நீ ஏன் தூரி இந்த பழிய ஏத்துக்கனும்? அவன் செஞ்ச தப்புக்கு கடவுள் தண்டனை குடுத்து இருக்காரு அவ்ளோதான்… இவன் உலறுறதெல்லாம் நீ பெருசா எடுத்துக்காத தூரி…. ” மகி.
” யாரு உலருறது? உன்னால தான்டி அவன் செத்துப்போனான்… உன்னால தான்… இந்த புள்ள ஹாஸ்பிடல்ல இருந்தப்ப இவள வச்சு போலீஸ் ல கம்ளைண்ட் பண்ணிருவியோனு பயந்து மருந்த குடிச்சு அநாதையா செத்துப் போனான் என் மூர்த்தி… அவன முறையா கூட அடக்கம் பண்ண முடியல… காட்டு விலங்கு தூக்கிட்டு போயிருச்சு… அதுனால தான்… அவன் சாவுக்கு காரணமான உங்க யாரையும் சும்மா விடமாட்டேன் னு அவன் ஆவி மேல சத்தியம் பண்ணேன்… அவன் சாகுறப்ப எவ்ளோ துடிச்சு இருப்பான்… அதே துடிப்ப நீங்க உசுரோடவே துடிக்கனும் னு தான் அந்த குருவோட ஃபோன் ல இருந்து அவனுக்கே தெரியாம அந்த வீடியோவ எடுத்தேன்… எதுக்கும் இருக்கட்டுமே னு தான் இவளையும் வீடியோ எடுத்தேன்… அப்ப தான் தீரன கொலை பண்ண வந்தவங்கள கண்டுபுடிச்சேன்… அவங்கள வச்சு என் காரியத்தை கொஞ்சங்கொஞ்சமா சாதிச்சுக்கிட்டேன்… அன்னைக்கி நீ தனியா அழுதியே தீரா, அப்ப எனக்கு எப்பிடி இருந்துச்சு தெரியுமா? ஏதோ பெருசா சாதிச்ச மாதிரி இருந்துச்சு… இவ அன்னைக்கி பஞ்சாயத்துல அழுத அழுகை… அப்பிடியே எனக்கு உள்ளுக்குள்ள ஜிவ்வுனு இருந்துச்சு… அதுக்கு அப்புறம் நான் நினைச்ச மாதிரி ரெண்டு பேரும் பிரிஞ்சீங்க… அப்ப தான் இந்த குரு பய உங்கள தேடுறது தெரிஞ்சது….அவன் உங்கள பாத்தா தீரன் எல்லாத்தையும் கண்டுபுடிச்சுருவான் னு தான் கடம்பன அனுப்புனேன்….ஆனா அவனும் மாட்டி இப்பிடி என்னையவும் மாட்ட வைப்பான்னு எதிர்பாக்கல….நீங்க ரெண்டு பேரும் இப்பிடி ஜோடியா வந்து என் முன்னாடியே திமிரா நிப்பீங்கனும் எதிர்பாக்கல….நேத்து ராத்திரி கடம்பன் என் ஃபோன எடுக்கலனதும் தீரன் எப்பிடியும் என்னைய தேடி வருவான் னு தெரிஞ்சு போச்சு…அதான் உங்க ரெண்டு பேரையும் அறுத்துப் போட ஆளுங்க கிட்ட சொல்லி வச்சு இருந்தேன்…ஆனா அதையும் இப்பிடி முடிச்சு வைப்பீங்க னு நினைக்கல….இப்ப சொல்லு மஞ்சுமா…இவளுக ரெண்டு பேரையும் என்ன பண்ணலாம்? ” என ஆக்ரோஷமாய் கேட்டான் சின்ராசு.
“கொன்னுறலாம்….” என சிறிதும் தயக்கமின்றி அடுத்த நொடியே வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல மஞ்சுவிடம் இருந்து பதில் சீறி வந்தது.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.