மெல்லிய காற்று வீசும் சத்தமும் பெரும் சூறாவளி வீசும் சத்தமாய் கேட்க, அனைவரும் திகைத்து மஞ்சுவையே பார்த்திருந்தனர். பூவும் புயலாகும் என்பதற்கு உதரானமாய் மஞ்சு ஆக்ரோசமாய் மகியின் புறம் கை நீட்டி இருந்தாள். மஞ்சுவின் அம்முடிவை கேட்ட சின்ராசு, முதலில் திகைத்தலும் பின்பு மிகுந்த கோபடைந்தான்.
“ உன்னைய பெத்த தண்டத்துக்கா இந்த வேலைய பாக்குற?” சின்ராசு.
“ நீ ஒரு பொண்ண பெத்து இருக்கோம் னு நெனைச்சு இருந்தா இந்த மாதிரி கேடு கெட்ட வேலைய பாத்து இருக்க மாட்ட …. “ என சின்ராசு வின் கோவத்திற்கு சற்றும் பயம் இல்லாமல் திமிராகவே பதிலுரைத்தாள் மஞ்சு.
“ மஞ்சு … அப்பாவ என்ன பேச்சு பேசுற? அவரு என்ன தான் தப்பு பண்ணி இருந்தாலும் நம்ம அப்பா மஞ்சு அவரு …. “ என அவர்களின் இடையில் புகுந்தான் பொன்ராசு.
“ என்னது அப்பாவா? அதுவும் இவரா? இத சொல்ல உனக்கு நாக்கு கூசல ?” மஞ்சு.
“ அதுக்காக அவர கொன்னா எல்லாம் சரியா போயிருமா? “ சின்ராசு .
“ இதுக்கு மேல யாராவது வாய தொறந்தீங்க…. “ என ஆக்ரோசமாய் கத்தினாள் மகி.
“ அக்கா … நீ கொஞ்சம் அமைதியா இரேன் … “ என தன் தமக்கையின் கோவத்தைக் கண்டு முன்னே வந்தாள் தூரிகை .
“ இதுக்கு மேல என்ன டி அமைதியா இருக்கனும்? இவன … எவ்ளோ அடிச்சாலும் காரணத்தையே சொல்ல மாட்டேங்குறானே…. இதுக்கு மேல இவன் கிட்ட எதுக்கு காரணம் கேக்கனும்? இவன இப்பிடியே கொன்னு போட்டுட்டு போய்றலாம்… “ மகி.
“ அம்மு … கொஞ்சம் நாங்க சொல்லுறதையும் கேளேன் … “ உதி.
“ என்ன… நீ என்ன டா சொல்ல போற? நீயும் அதையே தான சொல்ல போற? “ என கையில் அரிவாளுடன் சிறிதும் கோவம் தணியாமல் முகத்தில் வழிந்த குருதியுடன் கேட்டாள் மகி .
“ மாமா… நீங்களாச்சும் அக்காவ அமைதியா இருக்க சொல்லுகளேன் … “ என தீரனிடம் முறையிட்டாள் தூரிகை .
சின்ராசுவை தவிர மற்ற அனைவரும் மகியை நினைத்து பயந்து அவளையே பார்த்திருக்க… தீரன் மட்டும் நிதானமாக மகியை ஏறிட்டான்.
தீரனின் பார்வையை உணர்ந்த மகி, தன் காலுக்கு கீழே கிடந்த சின்ராசுவின் நெஞ்சில் ஓங்கி ஒரு மிதி மிதித்தவாறு, “எனக்கு நீ வாக்கு குடுத்து இருக்க தீரா …என்னைய தடுக்க மாட்ட னு… ” என்றாள் மகி.
“நான் உன்னைய தடுக்கல பாப்பா… நீ கொஞ்சம் நிதானம் ஆகு… நீ நிதானமா யோசிச்சாலே போதும்…. முதல்ல அந்த அரிவாள கீழ போடு…அங்க மனோவ பாரு… சந்திரமுகி அரண்மனைக்குள்ள போன வடிவேலு மாதிரி அப்பிடியே ஆடாம அசையாம திகைச்சுப் போய் உன்னைய பாத்துட்டு இருக்கான்… ” தீரன்.
தீரன் கூறியதை தொடர்ந்து உதி, மனோரஞ்சனைப் பார்க்க… அங்கு தீரன் கூறியது போல் நின்றிருந்தவனைக் கண்டு உதியால் சிரிப்பை அடக்க இயலவில்லை. அவனையும் மீறி லேசாக சிரித்துவிட அதைப் பார்த்த தூரிகை, உதியனை எக்கச்சக்கமாக முறைத்து தள்ளினாள்.
மனோவைப் பார்த்த மகி, சிறிது சாந்தமாகி சின்ராசுவின் நெஞ்சில் இருந்து காலை எடுத்தாள். அவள் காலை எடுத்ததும் விருட்டென்று எழுந்த சின்ராசு மஞ்சுவை இழுத்து அறைந்தான்.
“பெத்த அப்பன ஒருத்தி கொல்ல பாக்குறா… நீ அவக்கிட்ட என்னைய கொல்ல அருவாள கேக்குற… எவ்ளோ திமிருடி உனக்கு? ” என மீண்டும் மீண்டும் அறைந்தான் சின்ராசு.
மஞ்சுவை அடிப்பதைக் கண்டு சற்று நிதானமான மகி, மீண்டும் வெகுண்டெழுந்தாள்.
“நீயெல்லாம் மனுஷனே இல்ல.. ” என்றவாறு மஞ்சுவிடம் இருந்து சின்ராசுவை பிரித்து எடுத்து அவனை அறைய மகி கை ஓங்க… அவளின் கரம் கீழிறங்குவதற்குள் மஞ்சுவின் கரம் பலமாக இறங்கியது சின்ராசுவின் கன்னத்தில்.
” ஒரு பொம்பள புள்ளையோட உடம்ப வீடியோ எடுத்து அத வச்சு மிரட்டுற அசிங்கம் புடிச்சவன் நீ… நீயெல்லாம் என்னைய தொடுற….. பொண்ணுங்க உடம்ப கீழ்த்தரமான புத்தியோட பாக்குறவன் எவனும் உயிரோட வாழ தகுதியே இல்ல….அது பெத்த அப்பனா இருந்தாலும் சரி….கூட பொறந்த பொறப்பா இருந்தாலும் சரி…. ” என பொன்ராசுவை திரும்பி ஒரு பார்வை பார்த்தாள் மஞ்சு.
மஞ்சுவின் பேச்சைக் கேட்ட பொன்ராசு, அமைதியாக தள்ளி சற்று ஓரமாக சென்று நின்று கொண்டான்.
” என்ன? எல்லாரும் ட்ராமா பண்றீங்களா? நான் தான் எல்லாம் செஞ்சேன்… எல்லாத்துக்கும் காரணம் நான் தான்…. திரும்ப திரும்ப இத தைரியமாவே கத்தி சொல்லுவேன்… உங்களால என் மயிரக் கூட புடுங்க முடியாது டா…. போங்கடா *** பசங்ளா…. ” என உடம்பில் இருந்து குருதி வழிய வழிய கத்தினான் சின்ராசு.
தன் தந்தையின் பேச்சைக் கேட்ட பொன்ராசு, “தூ…. உனக்காக அண்ணன் கிட்ட கெஞ்சுனேன் பாரு என் புத்திய செருப்பால அடிக்கனும்…. இவ்ளோ கீழ்த்தரமான செயல பண்ணிட்டு துளி கூட வெக்கமே இல்லாம நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்கிற…. அண்ணே… இவன….ஊருல ஒருத்தன் இது மாதிரி பொண்ணுங்கள மிரட்டுனா அவன நடுரோட்டுல விட்டு கல்லால அடிச்சு கொல்லனும் னு பேசுனா மட்டும் போதாது.. அந்த மாதிரி ஒரு தெரு நாய் நம்ம வீட்ல இருந்தாலும் அவன சொன்ன மாதிரியே செய்யனும்…. இவன என்ன வேணும் னாலும் செய்ங்க… இதுக்கு மேல நானும் என் தங்கச்சியும் இந்த ஊருல இருக்க முடியாது…. நாங்க ஊர விட்டு கிளம்புறோம் ண்ணே…. அண்ணி…. இந்த நாயி பண்ணுன தப்புக்கு இவனோட ரத்தம் ங்கிற னால உங்க காலுல விழுந்து நான் மன்னிப்பு கேக்குறேன் அண்ணி… என்னைய மன்னிச்சுருங்க அண்ணி… ” என கை கூப்பியவாறு மகியின் காலில் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான்.
பொன்ராசுவின் நீண்ட உரையை கேட்டு அனைவரும் உருகி நிற்க… தன் காலில் விழுந்த பொன்ராசுவைக் கண்டு பதறி அவனை தோள் பிடித்து மேலே எழுப்பினாள் மகி.
“என்ன இது? நீங்க போய் என் காலுல விழுகுறீங்க? ” மகி.
” பொண்ணுங்க சக்தி யோட வடிவம் அண்ணி…. நீங்க எல்லாரும் தெய்வத்துக்கு சமமானவங்க… கருவறையில இருக்குற அந்த அம்மன விட வீட்ல இருக்குற பொண்ணுங்களான நீங்க வலிமையானவங்க அண்ணி…. அந்த அம்மன் காலுல விழுகுறதும் உங்க காலுல விழுகுறதும் ஒன்னு தான் அண்ணி… அந்த அம்மன் கேட்டா தான் வரம் கொடுப்பா… ஆனா வீட்டு பொண்ணுங்க கேக்காமலே எங்களுக்கு எல்லாம் தருவீங்க…. உங்க காலுல விழுகுறது லாம் தப்பே இல்ல அண்ணி… ” என கை கூப்பி நின்றான் பொன்ராசு.
” சரியான பள்ளிக்கூடமோ… ஒழுங்கான பேருந்து வசதியோ இல்லாத இந்த குக்கிராமத்துல…. பொண்ணுங்கனா தன் காலுக்கு கீழ தான்னு அவள காலுக்கு கீழப் போட்டு ஏறி மிதிக்கிற இந்த ஆணாதிக்கம் நிறைஞ்ச சமூகத்துல இப்பிடி ஒரு எண்ணம் வச்சு இருக்குற உங்கள நான் தான் கை எடுத்து கும்பிடனும்… நீங்க போய் என்னைய கும்பிடுறீங்களே…. ” என தன்னை நோக்கி கை கூப்பிய பொன்ராசுவின் கரத்தை இறக்கி விட்டு அவனை கை எடுத்து கும்பிட்டாள் மகி.
“அய்யோ… அண்ணி சும்மா இருங்க…. தூரிமா…. நீயும் என்னைய மன்னிச்சுரு மா… ” என தூரிகையை நோக்கி கை கூப்பியவாறு அவளது காலிலும் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தான் பொன்ராசு.
” அய்யையோ…. அண்ணே… எந்திரி… எந்திரி முதல்ல… என்ன நீ ஆனா ஊனா காலுல விழுகுற… ” என துள்ளிக் குதித்து உதியின் பின்புறம் நின்றாள் தூரிகை.
” அண்ணே… எந்திரி… நாம ஊர விட்டு கிளம்பலாம்… இவனோட புள்ளைங்கனு நாம இங்க இருக்க கூடாது… ” என பொன்ராசுவின் கை பிடித்து எழுப்பி நிறுத்தினாள் மஞ்சு.
“நீங்க ஏன் ஊர விட்டு போகனும்? ” உதி.
அதுவரை உயிர்கொண்ட சிலையாக நின்றிருந்த மனோரஞ்சன், “அதான… நீ ஏன் போகனும் மஞ்சு? ” என வாயை திறந்து பேசினான்.
” ஆத்தாடி… மனோ ங்கிற சிலைக்கு உயிர் வந்துருச்சு… ” என வாய் பொத்தி சிரித்தாள் தூரிகை.
அவர்கள் அனைவரும் தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்க.. அதை கவனித்தபடியே யார் கவனத்தையும் கவராமல் சின்ராசு மெதுவாக பின் வாயிலை நோக்கி நடந்தான்.
அதை சரியாக கவனித்த தீரன், சின்ராசுவின் பின் மண்டையில் தன் கரத்தால் ஓங்கி அடித்தான். மண்வெட்டியும் கலப்பையும் பிடித்து பழகிய தீரனின் கரம் சின்ராசுவின் பின் மண்டையில் கடப்பாரையின் அழுத்தத்துடன் இறங்க… அடி வாங்கிய வேகத்தில் மயங்கி சரிந்தான் சின்ராசு.
“ப்பா…. என்னா அடி… ” என தீரனின் அடியைப் பார்த்த மனோரஞ்சன் வியந்து நின்றான்.
“நீலாம் என்ன போலீஸூ? நான் தான் சொன்னேன் ல… நீ ஒரு சிரிப்பு போலீஸ் னு… ” என தன் இதழ்களை மடித்து வாய்க்குள் அடக்கியபடி சிரிப்புடன் கூறினான் உதியன்.
மஞ்சுவின் முன் தன்னை கிண்டல் செய்வது பொறுக்காமல், “ஏன்டா? ஏன் இப்பிடி? நானே இந்த புள்ளைய கரக்ட் பண்ணலாம் னு மனசுக்குள்ள ஒரு கோட்டையே கட்டி வச்சு இருக்கேன் டா மச்சான்… ப்ளீஸ் டா… ” என உதியனின் காதுக்குள் மெதுவாக முனுமுனுப்பதாக எண்ணி சத்தமாகவே கூறினான் மனோரஞ்சன்.
“ஹப்பாடா….இனி என் பக்கம் வர மாட்ட… ” என சின்ராசுவை தூக்கி நாற்காலியில் அமர வைத்து அவனின் மயக்கத்தை தெளிவித்தபடி கூறினான் தீரன்.
” உன் அண்ணே என்னடா சம்மந்தமே இல்லாம உலறுறான்… ” என மீண்டும் உதியனின் காதில் ரகசியமாக பேசுவதாக எண்ணி மீண்டும் சத்தமாக கூறினான் மனோரஞ்சன்.
“யாரு? என் அண்ணனா? அது சரி.. ” என அதற்கு மேல் எதுவும் கூறாமல் வாயை மூடிக் கொண்டான் உதியன்.
மனோரஞ்சனின் பேச்சைக் கேட்ட பொன்ராசுவும் மஞ்சளழகியும் ஒரு சேர அவனை முறைத்தவாறு நின்றனர்.
” பையன் என் ப்ரண்ட் தான் பொன்ராசு….நல்ல பையன் தான்…இப்பிடி கொஞ்சம் அப்ப அப்ப பைத்தியம் புடிச்சுரும்….வேற கொறை ஒன்னும் இல்லை…” எனக் கூறியவாறு சின்ராசு கண் விழிப்பதற்காக காத்திருந்தான் தீரன்.
பொன்ராசுவும் மஞ்சளழகியும் தன்னை முறைப்பதையும் தீரன் கூறுவதையும் கேட்ட மனோரஞ்சன் ,குழப்பத்துடன், “டேய்… நான் உன் கிட்ட ரகசியமா தான பேசுனேன்… அப்புறம் எதுக்கு இதுக ரெண்டும் என்னைய முறைக்குதுங்க ?” என உதியனிடம் கேட்டான்.
” ஏன்னா… நீங்க பேசுன எல்லாத்தையும் நாங்க கேட்டுட்டோம்… ” என மகியும் தூரிகையும் ஒரு சேர கூறினர்.
“ஆத்தீ…. ” என்றவாறு தன் வாயையை இரு கரம் கொண்டு இறுக்கமாக மூடிக்கொண்டான் மனோரஞ்சன்.
அப்பொழுது சரியாக சின்ராசு மயக்கம் தெளிந்து கண் விழிக்க…. அவன் முன்னே நின்றவாறு ,”எதுக்காக இதெல்லாம் பண்ணுன? என்னைய எதுக்காக நீ பழி வாங்கனும்? ” எனக் கேட்டான் தீரன்.
அதற்கு பதில் கூறாமல் இகழ்ச்சியாக ஒரு சிரிப்பு சிரித்தான் சின்ராசு . அதைக் கண்டு கோபமடைந்த மஞ்சு, “இதுக்கு மேல எதுக்கு ண்ணே கேக்குறீங்க… அவனோட ஃபோன் என் கிட்ட தான் இருக்கு… ஒன்னு இவன கொன்னுருங்க… இல்ல… போலீஸ் ல புடிச்சு குடுத்துருங்க… இவன் கிட்ட பேசுறது வேஸ்ட்… ” என முகத்தை சுழித்தாள்.
“நீங்க எப்பிடி கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்… உங்களால முடிஞ்சத புடுங்கிக்கங்க டா… ” என கூறிய பதிலையே திரும்பவும் கூறினான் சின்ராசு.
” ஓஓ… அப்பிடியா? எங்களால என்ன புடுங்க முடியுது னு பாக்கலாமா? ” எனக் கூறியபடி சின்ராசுவின் அருகில் அவனது தோள் மீது கை போட்டு அமர்ந்தான் தீரன்.
எதுவும் செய்யாமல் தீரன் தன்னை நெருங்கி தன் அருகில் அமரவும் உள்ளூர நடுங்கினான் சின்ராசு. அவனின் நடுக்கத்தை உணர்ந்த தீரன், கலகலவென நகைத்தான்.
“இப்ப எதுக்கு சிரிக்கிற? ” என எரிச்சலாக மொழிந்தான் சின்ராசு.
“என்ன பயமா இருக்கா? ” என மீண்டும் நகைத்தான் தீரன்.
“அ… அதெல்லாம் ஒன்னும் இல்லை….” சின்ராசு.
“இவன என்ன பண்ணலாம் தீரா? ” என சின்ராசுவை முறைத்தபடி கேட்டாள் மகி.
” ஹா ஹா…உங்களால என்னைய எதுவும் பண்ண முடியாது….பாவம் பண்ணுனது நீங்க….நீங்க லாம் அழிஞ்சு போவீங்க…..” என வேகமாக கூறினான் சின்ராசு.
“ஏய்….என்ன உலறுற? அப்பிடி நாங்க என்ன பாவம் பண்ணுனோம்… ” தூரிகை .
“எல்லாத்துக்கும் காரணம் இவளும் தீரனும் தான்….இவள… இவள வாழவே விடக் கூடாது னு நினைச்சேன்…. இத்தோட எல்லாம் முடிஞ்சுருச்சு னு நினைக்காத தீரா…. இனித்தான் எல்லாமே ஆரம்பிக்குது… என்னைய கொன்னாலும் நீ வாழவே முடியாது டி…. நீ ஆசைப்பட்டவன் கூட கல்லியாணம் ஆகிருச்சு னு ரொம்ப சந்தோஷப் படுறியா டி வேசி மவளே…. இந்த தாலி ரொம்ப நாளைக்கி உன் கழுத்துல நிலைக்காது டி…. ” என ஹிஸ்டீரியா வந்தது போல் கத்தினான் சின்ராசு.
சின்ராசு கூறி முடித்த அடுத்த நொடி வாயிற்கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அச்சத்தத்தை கேட்ட அனைவரும் திகைத்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள….அச்சத்தத்தை கேட்டு தைரியமாக சத்தமாகவே சிரித்தான் சின்ராசு.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.