இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இளங்காற்று மித வேகத்துடன் வீச….அக்காற்றை கிழித்துக் கொண்டு தீரனின் பல்சர் பறந்து கொண்டிருந்தது.
வீசிய காற்றில் மகியின் துப்பட்டா படபடக்க….அவளது கூந்தலும் இணைந்து காற்றில் அலைமோத அதை தன் ஒற்றைக் கரத்தால் அடக்கியபடி மறுகையால் தன்னவனின் தோளை பற்றி இருந்தாள் மகி.
மகியின் கரத்தின் அழுத்தத்தை உணர்ந்து, “மெதுவா போகவா டி? ” என வினவினான் தீரன்.
“இல்ல…இதே ஸ்பீட் ல போ….இன்னக்கி அவனா நானா னு பாத்துறனும்…” என உறுதியுடன் மொழிந்தாள் மகி.
“சரி டி… ” என்றவாறு சாலையில் கவனம் செலுத்தினான் தீரன்.
தீரன் மஞ்சுவின் வீட்டின் முன் தன் பல்சரை நிறுத்துகையில் சிறிது சிறிதாக பகலவனின் வெளிச்சம் பரவிக் கொண்டிருந்தது. தன் பல்சரை நிறுத்திவிட்டு சுற்றுப் புறத்தை மெதுவாக ஆராய்ந்தான் தீரன்.
” பரவாயில்லை…..கொஞ்சம் தள்ளி தள்ளி தான் வீடுலாம் இருக்கு….சத்தம் கொஞ்சம் கம்மியா வர்ற மாதிரி பாத்துக்கனும்… ” என்றவாறு மகியின் கரம் பற்றி மஞ்சுவின் வீட்டை நோக்கி நடந்தான் தீரன்.
“எனக்கு ஃபுல் ப்ரீடம் தான? என்னைய எதுக்காகவும் தடுக்க மாட்டியே? “என தீரனின் முகம் பார்த்து வினவினாள் மகி.
” உன்னோட மொத்த ஆத்திரத்தையும் தீத்துக்க….நான் குறுக்க வர மாட்டேன்…. இன்னையோட இதுக்கு ஒரு முடிவு கட்டனும்… ஆனா கொஞ்சம் நிதானமா… ஆங் அப்புறம்…..தாலிய எடுத்து வெளில போடு…பாத்ததும் அவன் வெந்து சாகட்டும்…..” என பல்லை நறநறவென கடித்தான் தீரன்.
“சொல்லிட்டல்ல….நான் பாத்துக்கிறேன்…. ” என்றவாறு வாயிற் கதவைத் தட்டினாள் மகி.
“யாரு இது… இவ்ளோ காலையில…” என சத்தமாக முனுமுனுத்தவாறு குளித்துவிட்டு தலையை துவட்டியவாறு வெளியே வந்தான் பொன்ராசு .
வெளியே நின்ற தீரனையும் மகியையும் பார்த்துவிட்டு வியந்து, “அண்ணே….வாம்மா…அய்யோ….வாங்க அண்ணி… ” என தடுமாறியவாறு கதவை அகல திறந்து இருவரையும் உள்ளே அழைத்தான் பொன்ராசு.
“என்னைய நீங்க பேரு சொல்லியே கூப்பிடலாம்…நான் உங்கள விட சின்ன பொண்ணு தான? ” என புன்னகையுடன் உள்ளே நுழைந்தாள் மகி.
அவள் பின்னே அமைதியாக உள்ளே நுழைந்து அங்கிருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து நிதானமாக வீட்டை சுற்றி ஆராய்ந்தான் தீரன்.
“இல்ல…பரவாயில்லை அண்ணி….என் அண்ணனுக்கு குடுக்குற மரியாதைய உங்களுக்கும் குடுக்கனும்…” என அடக்கமாக புன்னகைத்தான் பொன்ராசு.
“அதுவும் சரி தான்…” என இதழுக்கு வலிக்காமல் புன்னகைத்தவாறு தீரனை நோக்கினாள் மகி.
தீரனோ வீட்டை ஆராய்வதிலே குறியாய் இருந்தான். தீரனும் மகியும் விடியும் முன்னே அதுவும் நேற்று திருமணம் ஆகி அடுத்த நாள் தன் வீட்டில் வந்து இருப்பதை கண்டு குழம்பியவாறு இருவரும் ஏதாவது கூறுவார்கள் என நினைத்து இருவரையும் மாறி மாறி பார்த்தவாறு நின்றான் பொன்ராசு.
” என்ன பொன்ராசு? விடியிறதுக்கு முன்னாடியே உன் வீட்ல வந்து உக்காந்து இருக்கோமே என்னவா இருக்கும் னு யோசிச்சிட்டு நிக்கிறியா? ” என வீட்டை ஆராய்ந்தவாறே கேட்டான் தீரன்.
“ஆமா ண்ணே….கையும் ஓடல….காலும் ஓடல….என்ன அண்ணி? ஏதாவது பிரச்சனையா? இப்பலாம் நான் எந்த தப்பும் செய்யிறது இல்லையே ண்ணே…” என தலையை சொறிந்தவாறு கூறினான் பொன்ராசு.
“நீ எந்த தப்பும் பண்ணல….உங்க அண்ணிக்கு உன் அப்பாவ அறிமுகப் படுத்தலாம் னு கூட்டிட்டு வந்தேன்….அவரு தான் கடின உழைப்பாளி ஆச்சே….விடியக்காலையில வேலைக்கு போறவரு ராத்திரி தான் திரும்பி வர்றாரு….அதான் அவரு வேலைக்கு கிளம்புறதுக்கு முன்னாடியே பாத்துறலாம் னு ரொம்ப சீக்கிரமே வந்துட்டோம்…” தீரன்.
” அப்பிடி என்ன அவசரமா அப்பாவ பாக்கனும் ண்ணே…..எனக்கு ஒன்னும் புரியலயே…” என கைகளை பிசைந்தான் பொன்ராசு.
” உங்க அப்பா வீட்ல இருக்காரா? இருந்தா அவர கொஞ்சம் வர சொல்லுறீங்களா? ” என இரையை தேடும் புலியின் வேட்கையுடன் கேட்டாள் மகி.
“என்ன அண்ணி? ஏதாவது பிரச்சனையா? ” என பதறினான் பொன்ராசு.
பொன்ராசுவின் பதட்டத்தைக் கண்ட தீரன், “அட பிரச்சினை எல்லாம் ஒன்னும் இல்லை டா….அப்பிடி ஏதாவது பிரச்சனையா இருந்தா நான் இப்பிடி உக்காந்து பேசிட்டு இருப்பேன் னு நினைக்கிறியா நீ? ” என சிரித்தான்.
“ஆமா ல்ல…அத மறந்துட்டேன்….இந்த மஞ்சுவும் இந்த நேரத்துல இல்ல….இல்லனா ஒரு டீ போட்டு தர சொல்லுவேன்… ஐயோ…மறந்துட்டேன் பாருங்க….மஞ்சு உங்கள பாக்க வர்றதா தான சொல்லிட்டு வந்தா? வழியில அவள பாத்தீங்களா ண்ணே? ” பொன்ராசு.
” இவ்ளோ காலையில மஞ்சு என்னைய பாக்க கிளம்புனாளா? நாங்க அவள பாக்கலயே? என் கிட்ட ஏதாவது சொல்லனும் னு சொன்னாளா? ” தீரன்.
“நேத்து ராத்திரி அவ உங்க வீட்டுக்கு வந்தத பத்தி என் கிட்ட சொல்லிட்டு இருந்தா….அத கேட்டதும் என்ன னு தெரியல ,அப்பா ரொம்ப கோபமாகி மஞ்சுவுக்கு அவருக்கும் பெரிய சண்டை ஆகிருச்சு….அதுல ஏதோ ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம் ண்ணே….அதான் விடியக்காலையிலயே உங்க கிட்ட பஞ்சாயத்து சொல்ல லாம் னு வந்து இருப்பா ண்ணே…” பொன்ராசு.
பொன்ராசு கூறியதைக் கேட்டதும் மகியும் தீரனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“சரி அப்பா எங்க பொன்ராசு? ” தீரன்.
“அவரு எங்க ண்ணே வீட்ல தங்குறாரு? இரண்டு வருஷமா எங்க போறாரு வர்றாரு ணே தெரியல….நான் ஏதாவது கேட்டாலும் சண்டைக்கு வர்றாரு….நேத்து மஞ்சு கூட சண்டை போட்டுட்டு கோபமா வெளில போனவரு தான் இன்னும் வரல….அடிக்கடி இப்பிடி அவரு போறது சகஜம் ங்கிறதுனால நாங்களும் விட்டுட்டோம்…இப்ப கூட வந்தாலும் வருவாரு…” என பொன்ராசு கூறி முடிக்கையில் பொன்ராசுவின் தந்தை சின்ராசு வீட்டிற்குள் நுழைந்தார்.
“எங்கப்பா போன? உன்னையலாம் திருத்தவே முடியாது…. பாரு அண்ணே உனக்காக வந்து ரொம்ப நேரமா காத்துட்டு இருக்காங்க… இங்க பாரு அண்ணியும் வந்து இருக்காங்க… ” என சின்ராசு உள்ளே நுழைந்ததும் படபடவென பொரிந்தான் பொன்ராசு.
உள்ளே நுழைந்த சின்ராசு, “எதுக்கு வந்த தீரா? ” என தடாலடியாக வினவினார்.
தன் தந்தையின் பேச்சைக் கேட்ட பொன்ராசு, “என்னப்பா இப்பிடி பேசுற? என்ன நீ? இப்பலாம் ஆளே மாறிட்ட நீ? ” எனக் கத்தினான் .
“நீ பேசாம இருடா…” என பொன்ராசுவிற்கு ஒரு படி மேலே போய் அவனை அதட்டினார் சின்ராசு.
“தம்பி நீ பேசாம இருடா….பேச வேண்டியவங்க பேசிப்பாங்க… நீ என் கூட வா… ” என பொன்ராசுவின் தோள் மீது கை போட்டு வீட்டினுள் அழைத்து சென்றான் தீரன்.
“அண்ணே… என்ன ண்ணே நடக்குது? அப்பா ஏதாவது தப்பு பண்ணிட்டாரா அண்ணிக்கிட்ட? அப்பிடி ஏதாவது இருந்தா சொல்லு ண்ணே… ” என பதறினான் பொன்ராசு.
“அதெல்லாம் ஒன்னும் இல்லை… வாடா… ” என வலுக்கட்டாயமாக பொன்ராசுவை உள்ளே அழைத்து சென்றான் தீரன்.
இருவரும் உள்ளே சென்றதும், “ம்ஹூக்கும்… ” என தன் தொண்டையை செருமினாள் மகி.
” அப்ப… எல்லா விசயமும் தெரிஞ்சுருச்சு? ” என அங்கிருந்த நாற்காலியில் திமிராக அமர்ந்தபடி கேட்டார் சின்ராசு.
” ஆமாண்டா சின்ராசு… நீ பண்ணுன எல்லா கேப்மாறித்தனமும் வெட்ட வெளிச்சமா தெரிஞ்சுருச்சு டா சின்ராசு…” என மற்றொரு நாற்காலியில் மகாராணியை மிஞ்சும் கர்வத்துடன் கால் மீது கால் போட்டு அமர்ந்தாள் மகி.
” ஏய் என்னடி? ஓவரா துள்ளுற? உன்னைய விட நான் வயசுல மூத்தவன்… உனக்கு மரியாதை குடுக்குறத பத்தி உங்க வீட்ல சொல்லி குடுத்து வளக்கலயா? ” சின்ராசு.
“ஓஓஓ… நல்லா சொல்லி குடுத்து இருக்காங்களே… உன்னைய மாதிரி தரங்கெட்டவனுக்கு ரொம்ப நல்லா மரியாதை தர சொல்லி குடுத்து இருக்காங்க… ” என்றபடி வெளியில் வாயிலில் விட்டு வந்த செருப்பை எடுத்து வந்து பளார் என சின்ராசுவிற்கு ஒரு அறை விட்டாள் மகி.
“என்ன நெஞ்சழுத்தம் இருந்தா என்னைய அடிப்ப? அதுவும் செருப்பால… “என ஆக்ரோஷத்துடன் எழுந்து மகியை திரும்ப அடிக்க கை ஓங்கினார் சின்ராசு.
ஓங்கிய சின்ராசுவின் கையை லாவகமாக தட்டிவிட்டு திரும்பவும் தனது செருப்பால் அடித்தாள் மகி.
சத்தம் கேட்டு உள்ளே இருந்த பொன்ராசு பதறி அடித்து கூடத்திற்கு வந்து எட்டிப் பார்த்தான் . மகி சின்ராசுவை அடிப்பதை பார்த்து, “அண்ணி… போதும் நிறுத்துங்க… ” எனக் கத்தியபடி மகியின் முன்னே வந்து நின்றான் பொன்ராசு.
” என்ன நினைச்சு என் அப்பாவ அடிக்கிறீங்க? தீரன் அண்ணனுக்காக பாக்குறேன்… இல்ல… உங்க திமிரலாம் உங்க ஊருலயே வச்சுக்கங்க சொல்லிட்டேன்… ” என மகியை விரல் நீட்டி மிரட்டினான் பொன்ராசு.
“அடச்சை நிறுத்து….இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசுன….நடக்குறதே வேற….உன்னைய பெத்தவன்…உன் அப்பன்…இதோ இந்த பெரிய மனுஷன் என்ன பண்ணுனானு உனக்கு தெரியுமா? நான் குளிக்கிறத வீடியோ எடுத்து வச்சு மிரட்டுறான் டா பொறுக்கி பெத்த பயலே….இவனலாம் செருப்பால அடிக்க கூடாது….இவன… ” என சுற்றும் முற்றும் சீற்றத்துடன் பார்த்துவிட்டு வீட்டின் ஒரு மூலையில் கிடந்த அரிவாளை கையில் ஏந்தி உக்கிர தேவியாக நின்றாள் மகி.
” என்ன சொல்லுறீங்க அ.. அ… அண்…அண்ணி…” என நாக்கில் தந்தி அடித்தபடி நின்றான் பொன்ராசு.
” ஏன் நம்ப முடியலயா பொன்ராசு…. உன் அப்பா கிட்ட வேணுனா கேட்டு பாரு… அவன இல்ல னு மட்டும் மறுக்க சொல்லு பாப்போம்… ” என கைகளை கட்டிக்கொண்டு தூணில் சாய்ந்தவாறு கூறினான் தீரன்.
தீரன் கூறியதைக் கேட்டதும், திரும்பி தன் தந்தையை பார்த்தான் பொன்ராசு.
“ஆமா…நான் தான் செஞ்சேன்… இவள மட்டும் இல்ல… அந்த தூரிகையையும் மிரட்டுனது நான் தான்… உங்க ரெண்டு பேரையும் கொல்ல பாத்ததும் நான் தான்… அதுக்கு என்ன இப்ப? ” என நெஞ்சை நிமிர்த்தி தெனாவெட்டாக பதிலளித்தார் சின்ராசு.
“நீயா ப்பா? ஏன்ப்பா இப்பிடி பண்ணுன? ” என அதிர்ந்து வினவினான் பொன்ராசு.
“உன் பையன் கேக்குறான் ல…சொல்லு டா…” என தன் கையில் உள்ள அரிவாளால் சின்ராசுவின் புஜத்தில் ஒரு கோடு கிழித்தாள் மகி.
தன் புஜத்தில் குருதி வழிந்தாலும் வலியை வெளிக்காட்டாது அமைதியாக நின்றார் சின்ராசு.
“தொறடா வாய… ” என சின்ராசுவின் மற்றொரு புஜத்தில் அரிவாளால் ஒரு கோடு போட்டாள் மகி.
இரு தோள்களில் இருந்தும் குருதி வழிய கோபத்தில் மகியின் கழுத்தை நெரித்தார் சின்ராசு.
அதைப் பார்த்த பொன்ராசு, “அப்பா… தப்புக்கு மேல தப்பு பண்ணாத …அண்ணிய விடு… ” எனக் கத்தியபடி சின்ராசுவின் கரத்தை பிடித்து இழுத்தான்.
எதற்கும் சின்ராசு சிறிதும் அசைந்து கொடுக்காமல் மேலும் மகியின் கழுத்தை அழுத்தமாக நெரித்தார். அப்பொழுதும் தீரன் எவ்வித அசைவும் இன்றி அமைதியாக நின்றிருந்தான்.
சின்ராசுவின் தாக்குதலை புன்னகையுடன் எதிர்கொண்ட மகி, அரிவாளை இறுக்கி பிடித்துக் கொண்டு சின்ராசுவின் நெஞ்சில் அழுத்தமாக ஒரு கோடு கிழித்தாள்.
அதில் தடுமாறி மகியின் கழுத்தின் பிடியை விட்டு விட்டு வலியில் ஒரு அடி பின்னே நகர்ந்தார் சின்ராசு.
“என்ன? வலிக்குதா? ” எனக் கேட்டவாறு ஆக்ரோஷத்துடன் சின்ராசுவின் உடலில் அரிவாளால் மேலும் ஒரு கோடு கிழித்தாள் மகி.
அதில் சில துளி இரத்தம் மகியின் முகத்தில் பட்டுத் தெரிக்க… செந்தணலில் மூழ்கி எழுந்த பராசக்தியாக தோன்றினாள் மகி.
“எதுக்கு டா இப்பிடி பண்ணுன? ” என சின்ராசுவை ஓங்கி ஒரு உதை உதைத்து கீழே தள்ளினாள் மகி.
மகியின் ஆக்ரோஷத்தைக் கண்டு பயந்து, “அண்ணே… அண்ணே… அப்பா செஞ்சது தப்பு தான்.. நான் இல்ல னு சொல்ல ல… கொஞ்சம் பொறுமையா அண்ணிய விசாரிக்க சொல்லுங்க ண்ணே… பயமா இருக்கு…” என தீரனிடம் கெஞ்சினான் பொன்ராசு.
“அவள தடுக்க என்னால முடியாது ராசு… அவளோட வலி அந்த ஆக்ரோஷத்த குடுக்குது அவளுக்கு…” எனக் கூறியபடி அமைதியாக மகியை வேடிக்கைப் பார்த்தான் தீரன்.
” என்ன ண்ணே நீயே இப்பிடி சொல்லுற? அண்ணிய கொஞ்சம் அமைதியாக சொல்லு ண்ணே… ” என்று கண் கலங்கியவாறு தீரனின் காலில் விழுந்து கெஞ்சினான் பொன்ராசு.
“இப்ப சொல்லப் போறியா இல்லையா டா? ” என மிதமிஞ்சிய கோபத்தில் சின்ராசுவின் நெஞ்சின் மீது கால் வைத்து அரிவாளை ஓங்கியபடி கேட்டாள் மகி.
அதே நேரம் சரியாக, மஞ்சு, மனோரஞ்சன், உதியன் மற்றும் தூரிகை என நால்வரும் வீட்டின் உள்ளே வந்து நின்றனர்.
வீட்டின் உள்ளே உள்ள நிலையை பார்த்த மஞ்சு, சட்டென வாயிற் கதவை மூடி உள்புறமாக தாளிட்டாள்.
” அண்ணி…அந்த அரிவாள என் கிட்ட குடுங்க…இந்த பாவக்காரன கொன்ன பாவம் உங்களுக்கு வேண்டாம்… நானே கொன்னுர்றேன்….” என மகியிடம் அரிவாளுக்காக கை நீட்டினாள் மஞ்சு.
மஞ்சு கூறியதைக் கேட்டு பொன்ராசு, தீரன் மற்றும் மகி ஆகிய மூவரும் அதிர்ந்து மஞ்சளழகியை நோக்கினர்.
அதுவரை எதற்கும் அசைந்து கொடுக்காமல் இகழ்ச்சியான புன்னகையுடன் மகியை பார்த்தவாறு இருந்த சின்ராசு, இதயத்தில் சிறு சலனம் தோன்ற தன் மகளைப் பார்த்தார்.
(காதல் தீ பரவும்…..)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.