சின்னஞ்சிறு குருவிகளின் கீச் கீச் சத்தமும்…. அடர்ந்த மரங்களின் சில்லென்ற காற்றும்… ஜன்னல் வழியே பட்டுத்தெரித்த மாலை நேர ஆதவனின் ஒளிக்கீற்றும் மகிழ்விழியை சொர்க்க உலகில் பயணிக்க வைத்தது.
இயற்கையை ரசிக்கும் மகியை தீரன் புன்னகையுடன் ரசித்தபடி இருந்தான். “எவ்ளோ நல்ல ஜோடி ரெண்டு பேரும்…. ” என அவர்கள் இருவரையும் பார்த்து ரசித்தான் மனோரஞ்சன்.
பேருந்து சிங்கம்புணரி ஊருக்குள் நுழைந்து மெதுவாக பேருந்து நிறுத்தத்தில் நிற்க…. மகி, தீரன் மற்றும் மனோரஞ்சன் ஆகிய மூவரும் பேருந்தை விட்டு இறங்கினர்.
சுற்றிலும் பச்சைபசேலென்று இருக்க… குளுமையான காற்று வீசி அம்மூவரின் மனதில் உள்ள வெம்மையை சற்று குளிற வைத்தது. முதன் முறையாக தீரனின் ஊருக்கு வரும் மனோ, சுற்றிலும் உள்ள வயல்வெளியை சுற்றி சுற்றி பார்த்து ரசித்தவாறே நடந்தான்.
தன்னவளின் மேல் உள்ள பார்வையை சற்றும் விலக்காமல் புதுவித உணர்வுடனே நடந்து வந்தான் தீரன்.
“போன தடவ… உதி கூட இப்பிடி ஒரு லூச மீட் பண்ண போறேன் னு தெரியாமலே பாட்டு பாடிட்டு ஜாலியா வந்தேன்…. இப்ப கல்லியாணம் பண்ணிட்டே வர்றேன்…. ” என நடந்தபடி கூறி மெதுவாக புன்னகைத்தாள் மகி.
“ஏன்டி? கட்டுன புருஷன் உனக்கு லாசா? ” தீரன்.
” லூச லூசு னு தான சொல்லுவாங்க? என்ன மனோ? “என மனோரஞ்சனை துணைக்கு அழைத்தாள் மகி.
” ஆமா… ஆமா… நீ சொன்னா சரியா தான் இருக்கும் மகிழ்…. ” என்றவாறு மகியின் கரத்தைப் பற்றினான் மனோரஞ்சன்.
“டேய்… அவ கைய விடுடா… அவளுக்கு இப்ப கல்லியாணம் ஆகிருச்சு டா… உன் க்ரஷ் ப்ரஷ் எல்லாம் இனி மூட்டை கட்டி தூக்கி போட்டுரு…. ” என மிகுந்த பொறாமையுடன் மனோவின் கையை தட்டிவிட்டான் தீரன்.
“ஏன்? அதெல்லாம் முடியாது…. என் க்ரஷ் கைய நான் புடிப்பேன்…. ” என தீரனுடன் சண்டைக்கு நின்றான் மனோரஞ்சன்.
“இங்கயும் வந்து உங்க சக்காளத்தனுக சண்டைய விடலயா? நீங்க இங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க… அங்க என் ப்ரண்ட்ட பாருங்க… ” என சிரிப்புடன் கூறியபடி பைக்கில் வந்து இறங்கினான் உதியன்.
” அதுக்குள்ளயும் ஊருக்கு வந்துட்டீங்களா நீங்க? ” எனக் கேட்டபடி தீரன் மகியை திரும்பி பார்க்க ….அவளோ கரும்பு ஒன்றை ஒடித்து கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தாள்.
“ஏன்டி… இங்க பேசிட்டு இருக்குறப்ப நீ பாட்டுக்கும் அடுத்தவங்க வயல்ல கரும்ப ஒடிச்சு தின்னுட்டு வர்ற? வயல்லயே புடிச்சு கட்டி வச்சா என்ன பண்ணுவ? ” என சிரித்தான் உதியன்.
“மகிழ்… எனக்கு கொஞ்சம்…. ” என்றவாறு மகியிடம் ஓடினான் மனோரஞ்சன்.
“தீரன் பொண்டாட்டிய புடிச்சு கட்டி வைக்க இந்த ஊருல எவனுக்குடா தில்லு இருக்கு? ” என உதியனைக் கண்டு புருவத்தை உயர்த்தியவாறு மனோரஞ்சனுக்கு ஒரு கரும்பு சென்று மீண்டும் ஒடித்து வந்தாள் மகி.
“இந்த வாய்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை…. ” என முனுமுனுத்தவாறு உதியனின் தோளில் கைப்போட்டவாறு முன்னே நடந்தான் தீரன்.
“என்ன உதி? நான் சொன்னத செக் பண்ணியா? ” என மனோரஞ்சனையும் மகியையும் பின்னே விட்டு உதியுடன் முன்னே நடந்தவாறு கேட்டான் தீரன்.
“ம்ம்…. பண்ணிட்டேன் ண்ணே…. கன்பார்ம் தான்…. ஆனா என்ன காரணம் னு தெரியல…. ஆள புடிச்சா தான் காரணம் தெரியும்… ” என தன் பைக்கை தள்ளியபடி தீரனிடம் பேசியவாறு நடந்தான் உதியன்.
“அதெல்லாம் புடிச்சுறலாம்… நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா? ” தீரன்.
” நீங்க சொன்ன மாதிரி முதல் அடிய வச்சுட்டேன் ண்ணே….. ஆமா…. மகிக்கிட்ட எல்லாம் சொல்லிட்டீங்களா? ” உதியன்.
“ஆள் யாருனு மட்டும் சொல்ல ல… நம்ம ப்ளான் லாம் சொல்லிட்டேன்…. இப்போதைக்கு ஆள் யாருனு நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் தெரியும்…. மனோக்கு ஆள தெரியும்… அவன் ஃபோட்டோல பாத்து இருக்கான்…. ” தீரன்.
” ஏன் ண்ணே? அவக்கிட்ட சொல்ல வேண்டியது தான? ” உதியன்.
” இப்ப சொன்னா அவ உணர்ச்சிவசப்பட்டுருவா உதி…. அதான் கூட நான் இருக்கேன் ல… நான் பாத்துக்கிறேன் உதி…. உன் ப்ரண்ட்ட பத்தி கவலைப்படாத…. ” என உதியனின் தோளில் தட்டி புன்னகைத்தான் தீரன்.
“இல்லண்ணே…. என்னதான் பேசுனாலும் செஞ்சாலும் இன்னும் அவ குழந்தை மாதிரி ண்ணே…. அவள எதுக்காகவும் கஷ்ட்டபடுத்திறாதீங்க… ப்ளீஸ்…. ” உதியன்.
” ஹா ஹா ஹா ஹா…. டேய் உதியா….. அவ என் பொண்டாட்டி டா…. ” தீரன்.
“அண்ணனும் தம்பியும் லவ்வர்ஸ் மாதிரி அப்பிடி என்ன குசு குசு னு பேசிட்டு வர்றீங்க? ” என அவர்களின் இடையில் புகுந்தாள் மகி.
“ஒன்னுல்ல சும்மா தான்…. பஸ்ல நான் சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்கா மகி? ” தீரன்.
” அதெல்லாம் நல்லா ஞாபகம் இருக்கு…. யூ டோன்ட் வொர்ரி டா புருஷா…. ” மகி.
“இந்த குட்டிபிசாச தான் நான் பாத்துக்கனுமா உதி? இவ என்னைய அடிச்சு அழுக வைக்காம இருந்தா சரித்தான்…..” தீரன்.
“என்னது? தீரன அடிப்பியா மகிழ் நீ? ” எனக் கரும்பை சுவைத்தவாறு கேட்டான் மனோரஞ்சன்.
“அப்ப அப்ப…. லைட்டா…. ” என விரல் நகத்தை கடித்தவாறு கால் கட்டைவிரலால் நிலத்தில் கோலமிட்டாள் மகி.
” அப்பிடியா தீரா? ” என ஆச்சரியமாக மனோ தீரனிடம் கேட்க… மகியின் செயலில் சத்தமிட்டு சிரித்தான் உதியன் .
” கரும்பு தான திங்கிற? திங்கிற வேலைய மட்டும் பாரு…. இதோ வீடு வந்துருச்சு… வந்து தொலைங்க எல்லாரும்….. ” எனக் கூறியபடி வேகமாக முன்னே நடந்தான் தீரன்.
” டேய்…. டி. எஸ். பி டா நானு…. ஒரு மரியாதை இருக்கா? ” எனக் கரும்பை மென்றவாறு வீட்டை நோக்கி நடந்தான் மனோரஞ்சன்.
தீரனின் வீட்டு வாயிலில் அனைவரும் ஆரத்தி தட்டுடன் இவர்களுக்காக காத்திருக்க…. புன்னகைமாறா முகத்துடன் நால்வரும் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.
கருப்பாயி மற்றும் செண்பத்துடன் தனது தாய் பல்லவியும் நின்றிருப்பதைக் கண்டு, “ஹேய்… பல்லூ…. நீயும் வர்ற னு சொல்லவே இல்ல…. இதுல அழுது வேற வடிஞ்ச… ” என தன் தாயை கிண்டல் செய்தாலும் தனது தாயை கண்ட மகிழ்ச்சி மகியின் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது.
” நீ குடும்பம் நடத்துற அழக நான் பாக்க வேண்டாமா? ” என எப்பொழுதும் போல் கழுத்தை நொடித்தாலும் தன் மகளை பார்த்து ஆனந்தப்பட்டார் பல்லவி.
“தாயும் மகளும் பேசுனா பேசிட்டே இருப்பீங்க… மொதல்ல ஆரத்தி எடுத்து உள்ள வர சொல்லுங்க… ” என அளவில்லா பூரிப்புடன் கூறினார் இந்திரன்.
” என் மதனி இருக்குற அழகுக்கு நிறைய கண்ணு படும்… எல்லாரும் நகருங்க அங்குட்டு…. ” என அகல புன்னகையுடன் ஆரத்தி தட்டுடன் ஒரு பெண் முன்னே வந்து நின்றாள்.
அதுவரை கண்டிறாத அப்பெண்ணை புரியாமல் புன்னகையுடன் மகி பார்க்க….. “என்ன மதனி பாக்குறீங்க? நான் உங்க வீட்டுக்காரருக்கு தங்கச்சி முறை…. போன தடவ நீங்க ஊருக்கு வந்தப்ப நான் காலேஜ் ல இருந்தேன்… அதான் உங்கள பாக்க முடியல…. ” என சிரிப்புடனே தீரனுக்கும் மகிக்கும் ஆரத்தி எடுத்து குங்குமம் வைத்து வரவேற்றாள் அப்பெண்.
அதைக்கேட்ட மகி, கேள்வியுடன் தீரனைப் பார்க்க…. அதற்கு தீரன் தீவிரமான பார்வையுடன் தலையசைத்து மகியின் கேள்விக்கு “ஆமாம்… ” என பதலளித்தான்.
அதற்கு இதழ் நிறைந்த புன்னகையுடன், “நான் பாத்துக்கிறேன்…” என்ற செய்தியை அவனின் கரம் பற்றி அவனுள் கடத்தி தன்னவனுடன் வலது காலை எடுத்து வைத்து வீட்டினுள் நுழைந்தாள் மகி.
பிறகு புதுமண தம்பதிகளுக்கான சடங்குகள் நடக்க…. அனைத்திலும் அப்பெண்ணை தன் அருகிலேயே வைத்துக் கொண்டாள் மகி. பிறகு மெதுவாக அவளிடம் பேச்சுக் கொடுக்க ஆரம்பித்தாள் மகி.
“உன் பேரு என்ன மா? ” மகி.
“மஞ்சளழகி….மதனி….மஞ்சு னு கூப்பிடுவாங்க… ” என புன்னகையுடனே கூறினாள் மஞ்சளழகி.
“மஞ்சளழகி….வாவ்….செம நேம்….இல்லையா மகி? ஆனா எனக்கு மஞ்சு இல்ல….அழகி…. எப்பிடி? ” என அதுவரை அப்பெண்ணையே வட்டமிட்டுக்கொண்டிருந்த மனோரஞ்சன் அவர்கள் பேசுவதை கேட்டு அவர்கள் அருகே வந்தான்.
அதைக்கேட்டு மஞ்சு, மனோரஞ்சனை முறைக்க….,”ப்பா…பார்வையில என்ன பவர்ய்யா….” என்றான் மனோரஞ்சன்.
“மனோ….நீ வழியுறது தெளிவா தெரியுது…..கொஞ்சம் அப்பிடி போறியா? இல்ல என் புருஷன கூப்பிடவா? ” என இதழ்களில் சிரிப்புடன் விழிகளில், “அங்குட்டு போய் தொலையேன்டா ….” என்ற செய்தியுடன் கூறினாள் மகி.
மகியின் விழி செய்தியை வாசித்தவன், தீரன் பேருந்தில் கூறியதும் நினைவில் வர… “நீ சொல்லுறதுனால போறேன்… உன் புருஷனுக்கு பயந்து ஒன்னும் போகல…..ஹேய் யெல்லோ ப்யூட்டி…ஐ கேட்ச் யூ லேட்டர்….” என மஞ்சுவிடம் லிட்டர் கணக்கில் விழிந்துவிட்டே நகர்ந்தான் மனோரஞ்சன்.
மனோ செல்வதை பார்த்தவாறே, “யாரு மதனி இது? சோளக்கொல்லை பொம்மைக்கு சொக்கா போட்ட மாதிரி….” எனக் கேட்டாள் மஞ்சு.
அதைக்கேட்டு சிரித்தபடி, “அது என் ப்ரண்ட் தான்…..அவன விடு நாம பேசுவோம்….” என மஞ்சுவிடம் சிரித்து சிரித்து நிறைய பேசினாள் மகி.
இருவரும் சிரிப்புடன் பேசுவதைக் கண்ட தூரிகை, பொறாமையில் வெந்தாள். சரியாக தூரியை கவனித்த உதியன், “என்ன தூரி? கருகுற வாசனை வருது? ” என நக்கலுடன் கேட்டான் .
” எவ அவ? இன்னக்கி புதுசா மினுக்கிட்டு வந்து என் அக்கா கிட்ட சிரிச்சு சிரிச்சு பேசுறா? அவள…. அப்பிடியே அம்மில வைச்சு அரைச்சுப்புடுவேன்…ஒழுங்கா அவள போ சொல்லு… என் அக்காவ யாருக்கும் தர மாட்டேன் நான்….” என பொறாமையின் மொத்த உருவமாக உருவெடுத்து நின்றாள் தூரிகை.
தூரிகை கூறியது கேட்டு அடங்கமாட்டாமல் சிரித்தபடி, “என்னடி… இப்பிடி பேசுற? இதுல என்ன இருக்கு? ” என்றான் உதியன்.
“இங்க பாரு….ஒழுங்கா அவள போக சொல்லு…. என் அக்கா எனக்கு மட்டும் தான்…” தூரிகை.
“என்னமோ என் புருஷன் எனக்கு மட்டும் தான்ங்கிற மாதிரி சொல்லுற? ” என சிரித்தான் உதியன்.
“ஏன் புருஷன் பொண்டாட்டிக்குள்ள மட்டும் தான் பொறாமை வருமா? அக்கா தங்கச்சிக்குள்ளயும் வரும்….என் அக்காவ எவளாச்சும் உரிமை கொண்டாடிட்டு வரட்டும்…விளக்கமாறு பிஞ்சுரும்…” என அதீத கோபத்துடன் கூறினாள் தூரிகை.
“அடி ஆத்தி…. கொஞ்சம் நான் சொல்லுறத கேளு… ” என தூரிகையிடம் அந்த பெண் யாரென்றும் மகி ஏன் அவளிடம் சிரித்து நெருங்கி பேசுகிறாள் என்பதையும் உதி கூற…. அதை அனைத்தையும் கேட்ட தூரி ,”ஓஓஓ…. அப்ப பேசட்டும்… பேசட்டும்… இருந்தாலும் இத பாத்தா எனக்கு பொறுமை பொங்கி பொங்கி வருது…..நான் அந்த பக்கம் போறேன்… ” என நகர்ந்தாள் தூரிகை.
“நானும் வீட்டுக்கு கிளம்புறேன் தூரி…. நாளைக்கி பல சிறப்பான வேலைலாம் இருக்கு… ” என தூரியிடம் கூறிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டான் உதியன்.
நேரம் துளித்துளியாக நகர… மஞ்சு மகியிடம் விடைபெற்று அவளது வீட்டிற்கு புறப்பட்டாள். சிறிது நேரத்திற்குள்ளேயே மஞ்சுவிடம் நெருங்கி பழகி இருந்தாள். மஞ்சு கிளம்பியதற்கு பிறகு தான் சுற்றுப்புறத்தை ஆராய்ந்த மகி, இரவும் நிலவும் மலரட்டுமே என்பதற்கிணங்க… இரவு மலர்ந்து நிலவும் அழகாக மலர்ந்து இருந்தது.
சிறிது நேரத்தில் மகியை குளிக்க அனுப்பி அவளை மீண்டும் அலங்காரம் செய்து தீரனின் அறைக்குள் அனுப்பினர் உறவுப் பெண்கள். எவ்வித தயக்கமும் பதட்டமும் இன்றி தீரனின் அறைக்குள் நுழைந்த மகி, கையில் இருந்த பாலை அங்கிருந்த மேசையில் வைத்துவிட்டு மெத்தையில் தொப்பென்று அமர்ந்தாள்.
தன்னவளின் நடவடிக்கையை புன்னகையுடன் பார்த்திருந்தவன், ” என்ன ஆச்சு மகி? ” என்றான் தீரன்.
“அது ஒன்னுல்லை தீரா… இந்த அம்மா என்னமோ நிறைய சொன்னாங்க… அதான் என்னென்ன னு யோசிச்சிட்டு இருக்கேன்…. ” என தாடையில் ஒற்றை விரலால் தாளமிட்டபடி கூறினாள் மகி.
” ஏன்டி… உனக்கு இதெல்லாம் பாத்து பயமா இல்லையா? ” என சேலையில் மிளிரும் தன்னவளின் அழகை ரசித்தபடி கேட்டான் தீரன்.
” ஏன் தீரா? உனக்கு பயமா இருக்கா? பயப்படாத… நான் இருக்கேன்…..” எனக் கூறியபடி அசதியில் கொட்டாவி விட்டபடி கூறினாள் மகி.
“எதேய்… இவ பொண்ணா? பேயா? பர்ஸ்ட் நைட்ட நினைச்சு எந்த பதட்டமும் இல்லாம இருக்கா…. எதுக்கும் கால் இருக்கா னு செக் பண்ணிருவோம்…. ” என கீழே குனிய ஏதோ தடுத்து மகியின் காலடியில் பொத்தென்று விழுந்தான் தீரன்.
குனிந்த தீரனை தள்ளிவிட்ட மகி சிரிப்புடன், “என்ன தீரா… என் காலுல லாம் விழுகுற… உன்னைய கண் கலங்காம நான் பாத்துக்கிறேன் டா…. ” என்றாள் மகி.
“அடிக்கழுதை…. ” என்றவாறு எழுந்து மகியின் அருகில் அமர்ந்தபடி, “சரி… மஞ்சு என்ன சொன்னா? ” என்றான் தீரன்.
“அதுவா…. ” என மஞ்சுவிடம் பேசிய கதைகள் எல்லாம் வரிசையாக கூறி கொண்டே வர…. ஒரு கட்டத்தில் நிறுத்தி….. இரு கைகளையும் தீரனை நோக்கி தூக்கியபடி, “மாமா…. தூக்கம்… ” என தூக்க கலக்கத்தில் பாதி கண்ணை மூடியபடி கூறினாள் மகி.
“இதுக்கு மட்டும் மாமா வருமே…. மத்த நேரத்துல லாம் தீரா… ” என புன்னகையுடன் தன்னவளை மழலையாக தூக்கி மெத்தையை சரி செய்து படுக்க வைத்து தன்னவளை தன் நெஞ்சில் அணைத்தவாறு தானும் உறக்கத்தில் ஆழ்ந்தான் தீரன்.
தீரனின் நெஞ்சில் சாய்ந்த அடுத்த நொடியே ஆழ்ந்த நித்திரைக்குள் சென்ற மகி , அதிகாலையில் கண் விழித்தாள். எழுந்து வெளி வந்த மகி, இன்னும் யாரும் எழாததை கண்டு விரைவாக அறைக்கு திரும்பி வந்து தீரனை எழுப்பினாள்.
“தீரா…. நேரம் ஆச்சு… நாம கிளம்பனும்…. எந்திரி…. ” என தீரனை அசைத்தாள் மகி.
தன்னவளின் இரகசிய குரலில் எழுந்து மகியின் கன்னத்தில் தன் முத்திரையை பதித்து விட்டு புன்னகையுடன் வெளியே கிளம்ப ஆயத்தமானான் தீரன். தன்னவனின் முத்தத்தில் சிவந்து பின் சுதாரித்து தானும் விரைவாக குளித்து கிளம்பினாள் மகி.
இருள் விலகாத அக்காலைப் பொழுதில் தீரனின் பல்சரில் இருவரும் வீட்டில் யாரிடமும் கூறாமல் வெளியே புறப்படனர். தீரனின் பல்சர் அங்குமிங்கும் சுற்றி பிறகு சரியான ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மஞ்சளழகி வீட்டின் முன் நின்றது.
“தாலிய அவன் கண்ணுல படுற மாதிரி வெளிய எடுத்து போடு மகி…. ” எனக் கூறியபடி மஞ்சுவின் வீட்டு வாசலில் மகியுடன் வந்து நின்றான் தீரன்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.