இளங்காற்று இனிமையாக வீச… அந்த இனிமையின் தாக்கத்தில் தீரனின் முகம் சற்று சாந்தமடைந்து இதமாக கண்மூடினான். மூடிய விழிகளுக்குள் நேற்று மகி, “யோவ் பால்பாண்டி… “.என்றவாறு பெட்டியுடன் வந்து நின்றது தெளிவாக தெரிந்தது. தன்னவளின் நினைவில் புன்னகையுடனே நடந்தவற்றை விழிகளுக்குள் அசைப்போடத் தொடங்கினான் தீரன்.
பெட்டிகளுடன் மகி வந்து நின்றதும் இந்திரனும் பல்லவியும் அதிர்ச்சி அடைந்து நின்றனர்.
“எங்க மகி போற? ” இந்திரன்.
“என் வீட்டுக்குப் ப்பா… ” என அசராமல் பதிலளித்தாள் மகி.
“உனக்கென்ன பைத்தியமாடி? இவ்ளோ நடந்ததுக்கு அப்புறமும் அவன் கூட போறேன்ங்கிற…. இப்ப பேசி உன் மனச மாத்தி இருக்கலாம்… ஆனா திரும்பவும் பழிவாங்குறேன்னு உன்னைய எவனுக்காவது வித்துட்டா என்னடி பண்ணுவ? ” பல்லவி.
அதைக்கேட்ட தீரன் குற்ற உணர்வுடன் தலைகுனிந்து நின்றான். தீரன் தலைகுனிவுடன் நிற்பதை பார்த்த மகி, “யோவ்… இப்ப நீ எதுக்கு தலை குனிஞ்சு நிக்கிற? நியாயமா பாத்தா… நீ தலைநிமிந்து திமிரா நிக்கனும் நீ… அதை விட்டுட்டு…. இங்க பாரும்மா…. என்னைய வித்தா எவனும் வாங்க மாட்டான்…. அஞ்சு பைசாக்கு தேற மாட்டேன் நான்… அது உனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… அப்புறம் ஏன் இப்பிடி லூசு மாதிரி கேள்வி கேக்குற? ” என தீரனை அதட்டி தன் தாயிடம் நக்கலாக வினவினாள்.
மகி பேசியதைக் கேட்ட உதியன் பட்டென்று சிரித்து விட…. அதைப்பார்த்த அனைவரும் அவனை முறைத்தனர்.
“என்ன நடந்துச்சுனு தெரியாம இப்பிடி அவக்கிட்ட மொக்க வாங்காதீங்க ம்மா…. அப்பா… நீங்களாச்சும் கொஞ்சம் பொறுமையா கேளுங்க….தூரிக்கு எப்பிடி காயம் பட்டுச்சு தெரியுமா? ” உதியன்.
“அதைத்தான்டா நான் மொதல்ல இருந்து கேட்டுட்டு இருக்கேன்…. எவனாச்சும் சொல்லுங்கடா…. ” பல்லவி.
“அது வந்தும்மா…. ” என உதியன் ஆரம்பிக்க, ” நீ இரு…நான் சொல்லுறேன்….குருவ உங்களுக்கு ஞாபகம் இருக்கா ம்மா? ” என ஆரம்பித்து தனக்கு மெஸேஜ் வந்ததில் இருந்து தனியாக காபி ஷாப் சென்றது வரை கூறினாள் தூரிகை.
தூரிகை கூறியதை கேட்ட இந்திரன், “அவள தனியா போக விட்டுட்டு நீ என்ன பண்ணுன மகி? ” என மகியிடம் கேட்டார்.
“ம்ம்… மேங்கோ ஜூஸ் சாப்பிட்டேன்…. அட ஏன்ப்பா…. ” என தாங்கள் அனைவரும் காடவன் வீடு சென்றது வரை கூறினாள் மகி.
“இவ்ளோ நடந்து இருக்கா? ” என அதிர்வுடன் நிற்க முடியாமல் அமர்ந்தார் பல்லவி.
“இது மட்டும் இல்லை ம்மா…. இதுக்கு அப்புறம் தான் ஸீனே இருக்கு… ” என அதற்கு பிறகு நடந்த அத்தனையும் கூறி முடித்தான் உதியன்.
நடந்த அத்தனையும் கேட்ட இந்திரனும் பல்லவியும் பேச வார்த்தை வராமல் கண்ணில் கண்ணீருடன் தீரனைப் பார்த்து, “எங்கள மன்னிச்சுரு தீரா…” என கை கூப்பினர்.
அதைக்கண்டு பதறி, “என்ன இது? பெரியவங்க நீங்க…நீங்க போய்…” என இருவரின் கையையும் கீழே இறக்கினான் தீரன்.
“இல்ல…நாங்க தான் சின்னவங்க மாதிரி பேசிட்டோம்… சின்னவங்க நீங்க ,பெரியவங்க செய்ற மாதிரி பெரிய வேலையெல்லாம் செஞ்சு இருக்கீங்க… ” இந்திரன்.
“அப்பிடிலாம் ஒன்னும் இல்ல மாமா… ” தீரன்.
” உங்க பாச பாயாசத்த லாம் கொஞ்சம் ஓரமா வச்சுட்டு என் பிரச்சனைக்கு வர்றீங்களா? ” என அவர்களின் இடையில் புகுந்தாள் மகி.
“ஏன்டி கழுதை…நீ மட்டும் நல்லா மூக்கு முட்ட தின்ன ல…மாப்பிள்ளைக்கு ஏதாவது குடுத்தியா? ” பல்லவி.
“தோடா….யாருமா இது? நம்ம பல்லூ வா? நம்ப முடியாத மாற்றம்….டேய் உதி…உன் தத்து அம்மா செமயா நடிக்கிறாங்கடா….” மகி.
” உள்ள வா உனக்கு தோசைக்கரண்டியால வாயிலே நாலு போடுறேன்… இருங்க தம்பி சாப்பாடு எடுத்து வைக்கிறேன்… சாப்பிட்டுட்டே பேசலாம்….அப்புறம்….நான் பேசனத எதுவும் மனசுல வச்சுக்காதீங்க… ” என தீரனிடம் கூறியவாறு சாப்பாடு எடுத்து வைக்க உள்ளே சென்றார் பல்லவி.
“அய்யோ அத்தை… சாப்பாடு லாம் வேண்டாம்… நான் இப்பவே ஊருக்கு கிளம்பனும்….” தீரன்.
“இப்பவே வா? ” இந்திரன்.
“ஆமா மாமா….அந்த நாய புடிச்சு உதைச்சா தான் என் மனசு ஆறும்….நேரம் ஆக ஆக அவன் இன்னும் ஏதாவது வில்லங்கமா செஞ்சுற போறான்…அதான் உடனே கிளம்பனும் னு சொல்றேன்….” தீரன்.
“நீங்க மட்டுமா? ” என மகியை ஓரக்கண்ணால் பார்த்தவாறு கேட்டார் பல்லவி.
“இல்ல அத்தை….கூட உதியும் வர்றான்… ” தீரன்.
“நானும் கிளம்புறேன்… ” மகி.
“கூட இந்த தூரியும் போறா….” என்றபடி தனது பையை எடுத்து வந்தாள் தூரிகை.
“என்ன ரெண்டு பேரும் விளையாடுறீங்களா? உங்க மனசுல என்ன பெரிய ஜேம்ஸ் பாண்ட் னு நினைப்பா? ” என தன் மகள்களைப் பார்த்து வினவினார் பல்லவி.
“அம்மா… ப்ளீஸ்…..இது எங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட பிரச்சனை… நாங்க போகாம எப்பிடி? அப்பா…. நீங்களே சொல்லுங்க…. ” என தன் தந்தையை துணைக்கு அழைத்தாள் மகி.
ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ள மாட்டாள் தன் மகள் என்பதை நன்கு அறிந்த இந்திரன், “சரி…. பத்ரமா போய்ட்டு வாங்க… “என சம்மதம் வழங்கினார்.
“என்னங்க சொல்லுறீங்க? ” பல்லவி.
“மாமா… இதுக்கு நீங்க ஒத்துக்கிட்டாலும் நான் ஒத்துக்க மாட்டேன்… ” தீரன்.
“ஏன்? ஏன்? ஏன் ஒத்துக்க முடியாது? பஸ் டிக்கெட் கூட நாங்களே போட்டுக்குறோம்…. ” என கழுத்தை நொடித்தாள் மகி.
“ஏன் மாமா நாங்க வரக்கூடாது? “தூரிகை.
“நீ கூட ஓகே மா…. ஆனா உங்க அக்கா வர முடியாது… ” தீரன்.
“அதான் ஏன்ங்கிறேன்? அதென்ன தூரி மட்டும் வரலாம்… நான் வரக்கூடாது? ” மகி.
“அது தூரி ஊரு…. அவ வரலாம்… உனக்கும் அந்த ஊருக்கும் என்ன சம்பந்தம் இருக்கு? உதிய தவிர… ” தீரன்.
“ப்பூ…. இவ்ளோ தான் பிரச்சனையா? இப்பவே என்னைய கல்லியாணம் பண்ணி உன் பொண்டாட்டியா என்னைய கூட்டிட்டு போ…. உன் பொண்டாட்டியா நான் வரலாமே? ” மகி.
அதுவரை மகியுடன் விளையாட்டாய் சீண்டிக்கொண்டிருந்த தீரன் மகியின் பதிலைக் கேட்டு திகைத்தான். தீரன் மட்டுமல்ல அங்கிருந்த அனைவரும் திகைத்து நின்றனர்.
” என்ன? எல்லாரும் அப்பிடி பாக்குறீங்க? நானும் தீரனும் சந்தோஷமா இருக்க கூடாது ங்கிறது தான அவனோட எண்ணம்? அவன் கண் முன்னாடி தீரனும் நானும் புருஷன் பொண்டாட்டியா போய் நின்னா என்ன பண்ணுவான் அவன்? ” மகி.
“மகி… இது விளையாட்டு இல்ல… வாழ்க்கை…. ” இந்திரன்.
” ப்ச்… விளையாடாத மகி… ” உதியன்.
“என்னக்கா இதெல்லாம்? ” தூரிகை.
“பைத்தியம் மாதிரி உலறாத மகி… ” பல்லவி.
” அப்போ… அவனுக்காகத் தான் என்னைய கல்லியாணம் பண்ண நினைக்கிறியா பாப்பா? ” தீரன்.
“எல்லாரும் பேசி முடிச்சுட்டீங்களா? அன்னைக்கி நான் அவர விட்டுட்டு ஊருக்கு போயிரக் கூடாது னு என் கழுத்துல அவசர அவசரமா தாலி கட்டுனாரு…. அது சரி…. இன்னக்கி என்னைய விட்டுட்டு அவரு ஊருக்கு போயிறக்கூடாது னு என்னைய கல்லியாணம் பண்ணிக்க சொல்லுறேன்… இது தப்பா? அந்த பொறம்போக்கு நாயிக்காக மட்டும் இல்ல…. என் ப்ளாக் பியூட்டி க்காகவும் தான்…. அத விட அதிகமா எனக்காக…. ” மகி.
மகியின் கூற்றில் இருந்த காதலை உணர்ந்த அனைவரும் தீரனின் பதிலுக்காக அவனது முகத்தைப் பார்த்தனர்.
“இப்ப என்ன மகி பண்ண சொல்லுற? என் அப்பா அம்மா வர்றது இல்லையா? நல்ல நாள்ல பாக்கனும்… எவ்ளோ இருக்கு? கல்லியாணம் னா சும்மாவா? ” தீரன்.
“அப்ப உனக்கு ஓகேவா? ” மகி.
“கரும்பு தின்ன யாராவது கூலி கேப்பாங்களா என்ன? ” தீரன்.
“அப்ப சூப்பர்…. இப்பவே ஃபோன் பண்ணி அத்தை… மாமா …செண்பகம் அம்மா ராசேந்திரன் அப்பா எல்லாரையும் வர சொல்லு…. காலையில கல்லியாணம் பண்ணிட்டு ஊருக்கு கிளம்புவோம்…. ” மகி.
“என்னடி இப்பிடி பண்ற? நல்ல நாள்லாம் பாக்க வேண்டாமா? ” தீரன்.
” நல்ல எண்ணத்தோட நாம செய்யிற எல்லா நாளும் நல்ல நாளு தான் மாப்ளை….எல்லாம் நம்ம மனசுல நம்ம எண்ணத்துல இருக்கு…. நீங்க ஊருக்கு ஃபோன போடுங்க… விடியக்காலை முகூர்த்தத்துலயே கோயில்ல வச்சு கல்லியாணத்த நடத்திறலாம்…. ” இந்திரன்.
“என்னங்க நீங்களும் இப்பிடி பேசுறீங்க? ” பல்லவி.
“எனக்கு என் பொண்ணோட சந்தோஷத்த விட எதுவும் முக்கியம் இல்லை…. அவளோட ஆசைய… கனவ… நிறைவேத்தி வைக்கிறது ஒரு அப்பனா என்னோட கடமை அது…. ” இந்திரன்.
“அப்பானா அப்பா தான்…. ” என புன்னகையுடன் இந்திரனை அணைத்துக் கொண்டாள் மகி.
இந்திரனை பெருமையுடன் பார்த்த தூரிகை, “நானும்… நானும்…. ” என்றவாறு இருவரையும் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
தனது இரு மகள்களையும் கனிவுடன் பார்த்து அன்புடன் அரவணைத்தவாறு ,” என்ன மாப்ளை பாத்துட்டே இருக்கீங்க…. ஊருக்கு ஃபோன போடுங்க… நேரம் இல்லை…. ” எனக் கூற… தனது தந்தைக்கு அழைப்பு விடுத்தான் தீரன்.
“ஹலோ…. தீரா… பிரச்சனை முடிஞ்சதா? ” சிதம்பரம்.
“ஆஆ… அதெல்லாம் பாதி முடிஞ்சது ப்பா… உங்க கிட்டயும் அம்மாக்கிட்டயும் ஒரு விஷயம் பேசனும்…. ” என தயங்கி தயங்கி கூறினான் தீரன்.
“என்ன புதுசா தயங்கி தயங்கி பேசுற? வீட்ல தான் இருக்கேன் தீரா… சொல்லு…. ” சிதம்பரம்.
“அது… அப்பா… நாளைக்கி எனக்கு கல்லியாணம்…. நீங்களும் அம்மாவும் கிளம்பி வாங்க…. ” தீரன்.
” என்னப்பா சொல்லுற? சரியா காதுல விழுகல… ” சிதம்பரம்.
” எனக்கு கல்லியாணம் ப்பா… இங்க வாங்க ப்பா… ” தீரன்.
” ஊரு உலகத்துல எனக்கு கல்லியாணம் பண்ணி வைங்க னு பெத்தவங்க கிட்ட வந்து நிக்கிற பசங்களத்தான்டா பாத்து இருக்கேன்…. இப்பிடி பெத்தவன் கிட்டயே எனக்கு கல்லியாணம் வாங்க னு அழைக்கிற மொத புள்ள நீயா தான்டா இருப்ப…. இது உலக சாதனை டா மவனே……” சிதம்பரம்.
“அப்பா….. விளையாடாதீங்க… “.தீரன்.
“யாரு? நானா? நீயா? ” சிதம்பரம்.
“கொஞ்சம் பொறுமையா நான் சொல்லுறத கேளுங்கப்பா… ” என ஆரம்பித்து நடந்த அத்தனையும் சுருக்கமாக கூறினான் தீரன்.
அனைத்தையும் கேட்டு முடித்த சிதம்பரம், “ஏன்டா விளங்காதவனே…. எனக்கு கல்லியாணம் வந்துருங்க னு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா நானும் அம்மாவும் ஓடி வரப்போறோம்…. இவ்ளோ பிரச்சனைய வச்சுக்கிட்டு என்னடா வெட்டி பேச்சு? முதல்ல ஃபோன வை…. நாங்க எல்லாரும் கிளம்பி வர்றோம்…. ” என ஃபோனை வைத்தார் சிதம்பரம்.
தனது தந்தை கூறியதை கேட்ட தீரன், ஃபோனையே அதிர்ச்சியுடன் பார்த்தான்.
அதைப்பார்த்த இந்திரன், “என்ன மாப்ளை… எல்லாம் ஓகே தான? ” என்றார்.
“ஆஆ… ஓகே தான் மாமா….” என தலையசைத்தான் தீரன்.
“இருந்தாலும் நானும் ஒரு வார்த்தை சம்பந்தி கிட்ட பேசிர்றேன்…..” என்றவாறு தனது ஃபோனை எடுத்துக் கொண்டு தனியே சென்றார் இந்திரன்.
அதற்கு பிறகு நேரம் நிற்காமல் நகர….திருமணத்திற்கான ஏற்பாடும் கடகடவென நடக்க… திருமண நாளிற்கான விடியலும் அழகாய் விடிந்தது.
இருள் விலகாத அதிகாலைப் பொழுதில் ஒரு சிறிய சித்தி விநாயகர் ஆலயத்தின் சந்நதியின் முன்னே பட்டு வேட்டி சட்டை…. நெற்றியில் சிறிய சந்தன கீற்றுமாய்…. தகிக்கும் சூரியனின் தேஜஸிற்கு போட்டியாக முகம் மின்ன கழுத்தில் மாலையுடன் நின்றிருந்தான் தீரன்.
தீரனின் அருகே மாப்பிள்ளை தோழனாய் மலர்ந்த புன்னகையுடன் தோரணையாக நின்றான் மனோரஞ்சன். செண்பகம், ராசேந்திரன், சிதம்பரம், கருப்பாயி, இந்திரன், பல்லவி மற்றும் தீரனின் நெருங்கிய தோழர்கள் சிலர் என நெருங்கிய வட்டாரங்கள் திருமணத்திற்கு வந்திருந்தனர்.
சிறிது நேரத்தில் முழு அலங்காரத்தில் உதியன் மற்றும் தூரிகை சூழ தங்கத்தேரென அசைந்தாடி வந்தாள் மகிழ்விழி. தன்னவளின் முழு அலங்காரத்தில் விழி சிமிட்டாமல் தன்னவளை பார்த்து ரசிக்க….மகியோ தன்னவனின் கம்பீர அழகில் தன்னை தொலைத்திருந்தாள்.
அழகாக அசைந்தாடி சந்நதியின் முன்னே தீரனுக்கு எதிரே வந்து நின்றாள் மகி. ஐயர் வந்து சாமி பாதத்தில் வைத்து எடுத்து வந்து மாங்கல்யத்தை நீட்ட….அனைவரும் முன்னே வந்து ஆசிர்வாதம் செய்து தீரனிடம் அளிக்க…. ஆசையுடன் வாங்கி கையில் ஏந்தி … காதலுடன் தன்னவளைப் பார்த்தான் தீரன்.
வெட்கத்தில் சிவந்து மின்னிய கன்னங்களுடன் காதல் போதை ஏறிய விழிகளுடன் நேருக்கு நேராக தீரனைப்பார்க்க…. தன்னவளின் விழிகளைப் பார்த்து மௌனமாக காதல் மொழி பேசியவாறே தன்னவளின் கழுத்தில் மூன்று முடிச்சிட்டான் தீரன்.
இந்திரனும் பல்லவியும் ஆனந்தக்கண்ணீர் வடிக்க…. தன் வயதையும் மறந்து சந்தோஷத்தில் கருப்பாயி துள்ளிக் குதிக்க…. அனைவரும் மிக மகிழ்ச்சியாக மனநிறைவுடன் புதுமண தம்பதிகளை ஆசிர்வாதம் செய்தனர்.
அனைவருக்கும் மேலாக ஆனந்தத்தில் மிதந்தபடி தன்னவனின் கரத்தை விடாமல் பற்றியபடியே உலா வந்தாள் மகி. திருமணம் முடிந்த உடன் அங்கிருந்து நேராக மகி வீட்டிற்கு சென்று காலை உணவை முடித்துக் கொண்டு இந்திரன் மற்றும் பல்லவியை தவிர மற்ற அனைவரும் சிங்கம்புணரிக்கு புறப்பட்டனர்.
தீரன், மகி மற்றும் மனோரஞ்சன் ஆகிய மூவர் மட்டும் பேருந்தில் செல்வதாகவும் மற்றவர்கள் அனைவருக்கும் தனியாக மனோரஞ்சன் கார் ஏற்பாடு செய்து தங்களுக்கு முன்னே ஊருக்கு அனுப்பி வைத்தான்.
இறுதியாக மகியும் தீரனும் ஊருக்கு புறப்படும் முன் இந்திரனிடமும் பல்லவியிடமும் ஆசிர்வாதம் வாங்கினர். மகியை பிரிவதை எண்ணி பல்லவி கண்ணீர் சிந்த….இந்திரனும் கண் கலங்கி நின்றிருந்தார்.
“சரி ம்மா…. போயிட்டு வர்றேன்… டாட்டா ம்மா… டாட்டா ப்பா….இப்படி அழுமூஞ்சியா இல்லாம சிரிச்ச மூஞ்சியா இருந்தா திரும்ப விருந்துக்கு வர்றப்ப நல்ல அழுகுன வாழப்பழமா வாங்கிட்டு வருவேன்… சரியா? ” என சிரிப்புடன் தன் பெற்றோரைப் பார்த்து கூறினாள் மகி.
தன் மகளின் குறும்பில் சிரித்த இருவரும்…மனமகிழ்ச்சியுடனே வழியனுப்பி வைத்தனர் இருவரும்.
அங்கிருந்து பேருந்தில் ஏறும் வரை, “இருந்தாலும் அத்தை மாமாக்கிட்ட அப்பிடி பேசி இருக்க கூடாது டி… ” என நூறு முறைக்கு மேல் மகியிடம் கூறிவிட்டான் தீரன்.
மூவரும் பேருந்தில் ஏறி சிங்கம்புணரியை நோக்கி பயணித்து பாதி தூரத்தை கடந்து இருந்தனர். நினைவுகளின் ஊர்வலத்தில் இருந்து வெளிவந்த தீரன், பேருந்து பயணிக்கும் சுற்றுப்புறத்தை ஆராய்ந்த தீரன், தன் தந்தையின் தோளில் சுகமாய் மஞ்சம் கொண்டிருந்த மகியை மெதுவாக எழுப்பினான்.
மெதுவாக அசைந்தாடி விழித்தவள், “ஊரு வந்துருச்சா? ” என கண்ணை கசக்கினாள் மகி.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும் டி… ஊருக்குள்ள போறத்துக்கு முன்னாடி உன் கிட்ட சில விஷயம் பேசனும்….” தீரன்.
“ம்ம்…சொல்லுடா….” என எழுந்து நன்றாக இருக்கையில் அமர்ந்தாள் மகி.
“ஒரு நிமிஷம்…” என்றபடி பின் இருக்கையில் தூங்கி வழிந்து கொண்டிருந்த மனோரஞ்சனையும் எழுப்பினான் தீரன்.
“என்ன தீரா? ஊரு வந்துருச்சா? ” என சோம்பல் நெறித்தவாறே கேட்டான் மனோரஞ்சன்.
“இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துரும்…அதுக்கு முன்னாடி நான் சொல்லுறத கொஞ்சம் கவனமா கேளுங்க… ” என இருவரையும் பார்த்தான் தீரன்.
“நாம ஊருக்குள்ள நுழைஞ்சதும் நம்ம ப்ளான் ஸ்டார்ட் ஆகிரும்…..மகி, நீ என்ன பண்ணனும் னா…..” என தான் விரித்திருக்கும் வலையை பற்றி விரிவாக மகியிடமும் மனோவிடமும் கூறினான் தீரன்.
பொறுமையாக அனைத்தையும் கேட்ட மனோரஞ்சன் ,”சூப்பர் டா தீரா….மகிழ், எல்லாம் உன் கையில தான் இருக்கு….” என்றான்.
” பாக்கத்தான போற… இந்த மகியோட ஆட்டத்த….” என நிமிர்வாக புன்னகைத்தாள் மகி.
பேருந்து மெதுவாக சிங்கம்புணரி கிராமத்திற்குள் நுழைந்தது.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.