பொன் வண்ண மாலை நேர மஞ்சள் வெயில் ஜன்னல் வழியே எட்டிப்பார்க்க…. வீசும் காற்றில் அசைந்தாடும் சின்ன சின்ன கார்குழல்கள் காதோரம் உரசும் உரசலில் மிகச்சிறிய சிணுங்களுடன் ….மின்னும் மஞ்சள் வெயிலிற்கு போட்டியாக மகிழ்விழி முகம் ஜொலிப்பை சிந்தியவாறு ஏக ராணியாக தீரனின் தோளில் சாய்ந்து கண் அயர்ந்து இருந்தாள் மகி.
உறக்கத்தில் தீரனின் தோளில் இருந்து மகியின் முகம் விழப்பார்க்க ….அவளுக்கு முன் அவளது நாயகன் கொலு வீற்றிருக்கும் நெஞ்சுப்பகுதியில் இருந்து புத்தம் புது ஈர மஞ்சள் கயிறு கொண்ட பொன் தாலி முன்னே எட்டிப்பார்த்து தீரனைக்கண்டு கண் சிமிட்டியது.
தன் மன சாம்ராஷ்யத்தின் மகாராணியை மீண்டும் தன் தோளில் சாய்த்தவாறு அவள் கழுத்தில் காலையில் தான் கட்டி அழகாய் மினுமினுத்துக் கொண்டிருக்கும் மாங்கல்யத்தைப் பார்த்து காதலாக புன்னகைத்தான் தீரன்.
யார் இவளோ…
கண்தேடியதோ…
காத்திருந்த
என் காதலியோ…
கண்களுக்குள்
தென்றல் இதோ…
பார்த்ததுமே
மின்சாரம் இதோ…
என் செல்லக் குட்டியே..
என் கண்ணின் மணியே…
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அழைக்க
ஒரு முத்தம் கொடுக்க
என் நெஞ்சம் தவிக்க….
கண்களில் மௌனம்
வார்த்தையின் தாபம்
தேவையா கண்ணே இந்த கோபம்
மூச்சினில் வேகம்
பேச்சினில் பாரம்
தாங்குமா கண்ணே நானும் பாவம்
என் காதலி…
நீயும் தீண்டாமல் தீண்டிவிட்டாய்
நானும் lockdown ஆனேனே
நீ அழுதா
அந்த மேகங்கள் கீழே வரும்
உன் கண்கள் துடைக்கும்
என் செல்லக் குட்டியே…
என் கண்ணின் மணியே…
நீ காட்டும் கோபம் காதல் என்று
உன்னை கட்டி அழைக்க
ஒரு முத்தம் கொடுக்க
என் நெஞ்சம் தவிக்க, oh…
என்ற பாடல் சிங்கம்புணரியை நோக்கி செல்லும் அப்பேருந்தில் ஒலிக்க….தன்னவளின் நினைவில் அப்பாடலில் மூழ்கி ஒரு கையால் தன்னவளை அணைத்துக்கொண்டே பேருந்தின் இருக்கையின் பின்னே கண் மூடி சாய்ந்தான் தீரன்.
மூடிய விழிகளுக்குள் நேற்று மாலையில் இருந்து நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் ஊர்கோலம் போக… அந்த நினைவுகளினூடே தானும் பயணிக்க ஆரம்பித்தான் தீரன்.
காடவன் ஃபோட்டோவில் காட்டிய நபரைக்கண்டு ஆச்சரியமடைந்த தீரன், “விளையாடாத காடவா…. ஒழுங்கா உண்மைய சொல்லு… ” என நிலை தடுமாறாமல் உண்மையை அறிய வேண்டி நிதானமாக கேட்டான்.
“டேய்…. ஒழுங்கா உண்மைய சொல்லு….இல்ல… ” என்றவாறு காடவனை அடிக்க சென்றான் உதியன்.
காடவனை அடிக்க சென்ற உதியனை தடுத்தவாறு, “அவன் சொல்லுவான் உதி… ” என காடவனை உறுத்து விழித்தவாறு கூறினான் தீரன்.
“நான் ஒன்னும் பொய் சொல்லல… நான் அவன் முகத்தை பாத்தது இல்ல… அது உண்மை தான்…. ஆனா…நா அவன் உருவத்தை பாத்தது வச்சு சொல்லுறேன்… அத்தோட ஒரு தடவ அவன் கைய எதார்த்தமா பாத்ததப்ப இதே மாதிரி அவன் கையிலயும் பச்சை குத்தி இருந்தான்…. அவன் குரல வச்சு பாத்தா அவனுக்கும் இந்த கலியமூர்த்தி வயசு தான் இருக்கும்… என் பொண்ணு மேல சத்தியமா சொல்லுறேன், நான் பொய் சொல்ல ல தீரா…. ” எனக் கண்ணீர் சிந்தினான் காடவன்.
“ஓஓஓ… உனக்கு பொண்ணு வேற இருக்கா? உன் பொண்ண இப்பிடி நீ மிரட்டுவியாடா? ” மகி.
மகி கேட்ட கேள்விக்கு அமைதியாக தலை குனிந்தான் காடவன். அதைப்பார்த்த மகி, வெகுண்டெழுந்து கத்த ஆரம்பித்தாள்.
” ஏன்டா… உனக்கு வந்தா இரத்தம்…. என் அப்பாக்கு வந்தா அது டொமேட்டோ ஜாஸாடா புண்ணாக்கு? அதான் இப்பலாம் பெத்த பொண்ண கூட விட்டு வைக்கிறது இல்லையே…தன்னை பெத்தவ… தான் பெத்தவ… கூட பொறந்தவ…. இப்பிடி யாரையும் விட்டு வைக்கிறது இல்லையே…. கட்டுனவளாவே இருந்தாலும் அவக்கிட்ட சம்மதம் கேக்கனும் டா…. அப்பிடி என்னடா உங்களுக்குலாம் சதை வெறி? உங்களுக்கு இருக்குறது தான எங்களுக்கும் இருக்கு…. அதே கண்ணு அதே மூக்கு அதே வாய்….பிறப்புறுப்பு மட்டும் தான் வித்தியாசம்…. என்ன எங்களுக்கு நெஞ்சு கொஞ்சம் பெருசா இருக்கு…. அதுல தானடா நீலாம் பால் குடிச்ச….. நீ உயிர் வாழ பால் குடிச்ச அதே இடத்த என்ன மயிறுக்கு டா காம வெறி புடிச்சு பாக்குறீங்க? உன் பொண்டாட்டிய பாரு டா….. அடுத்த பொண்ண என்ன டேஷ்க்கு பாக்குறீங்க? உங்களுக்கு உள்ள அதே உறுப்பு உள்ள எங்க உடம்ப வீடியோ எடுத்து மிரட்டுறீங்களே , அதுல அப்பிடி என்ன சாதிக்கிறீங்க நீங்க? அசிங்கமா இல்ல உனக்கு? ****பயலுகளா….தூ…. ” என ஆத்திரம் தாளாமல் காரி உமிழ்ந்தாள் மகி.
மகியின் ஆவேசத்தைக் கண்டு மற்ற மூவரும் திகைத்து நிற்க…. “அக்கா….காம் டவுன்… ” என மகியை தன் புறம் திருப்பி அவள் முதுகை தட்டிக்கொடுத்து ஆசுவாசப்படுத்தினாள் தூரிகை.
கோபம் மட்டுப்படாமல் தூரிகையின் கரத்தை வெடுக்கென தட்டிவிட்டு வெளியே சென்றாள் மகி. அவள் பின்னே தூரிகையும் செல்ல…. திகைப்பில் இருந்து விழித்தனர் தீரன், உதி மற்றும் மனோ ஆகிய மூவரும்.
“ஃபோட்டோல இருக்குறது யாரு மச்சான்? ” மனோ.
“எங்க ஊரு தான்… ஆனா இவரு ஏன் இப்படி லாம் பண்ணனும் னு எனக்கு ஒன்னும் புரியல…. அவருக்கும் எனக்குமே எந்த பிரச்சனையும் இல்லை… அப்புறம் எப்பிடி மகிக்கு பிரச்சனை இருக்க முடியும்? இவர மகி பாத்து இருக்க கூட மாட்டா…. அதான் எனக்கு ஒரே குழப்பமா இருக்கு…. நீ என்ன நினைக்கிற உதி? மகி இவர ஊருல பாத்து இருக்காளா ? ” தீரன்.
” வந்த அன்னைக்கு பாத்து இருக்கா அண்ணே…. அன்னக்கி நைட் கூட வளைகாப்பு நடக்க இருந்த வீட்டுக்கு ரெண்டு பேரும் வந்தோம் ல … அங்க வச்சு தான் இவர அவ பாத்து இருக்கா… ஆனா…. அது ரெண்டு நிமிஷம் கூட இல்லையே…. எனக்குத் தெரிஞ்சு அவருக்கிட்ட இவ பேச கூட இல்ல…. அப்புறம் எப்பிடி? ” என தலையை சொறிந்தான் உதியன்.
“சரி விடு உதி… ஊருக்கு போனா தெரிஞ்சுற போகுது…. நாளைக்கி காலையில நான் ஊருக்கு கிளம்புறேன்….காடவன உன் கஸ்டடில வச்சுக்க மனோ… ” என அங்கிருந்து புறப்பட தயாரானான் தீரன்.
“நானும் வருவேன்…” என மனோவும் உதியும் இணைந்து குரல் கொடுக்க… அதைக்கேட்டு தீரன் பட்டென்று சிரித்தான்.
“சரி…வாங்க….நீயும் ஊருக்கு வந்து வருஷக்கணக்கா ஆகிருச்சுல உதி? ” என குற்ற உணர்வுடன் புன்னகைத்தான் தீரன்.
“நீங்க ஏன் இப்ப ஃபீல் பண்றீங்க? அதான் பிரச்சனை முடிய போகுதே… விடுங்க… ” என தீரனை கைப்பிடித்து வெளியே மகியிடம் அழைத்து வந்தான் உதியன்.
மனோரஞ்சன் தனது டிபார்ட்மெண்டை தொடர்பு கொண்டு காடவனை ஜீப்பில் அள்ளிக் கொண்டு சென்றான். உதியன், தீரன், மகி மற்றும் தூரிகை ஆகிய நால்வர் மட்டுமே மீதம் இருந்தனர்.
” மகி, தூரி… வாங்க உங்க ரெண்டு பேரையும் வீட்ல விட்டுர்றேன்… ” என மனோரஞ்சனின் காரை நோக்கி சென்றான் தீரன்.
“எங்கள விட்டுட்டு நீங்க எங்க போக ப்ளான் போடுறீங்க? ” என இருவரையும் பார்த்து கேட்டாள் தூரிகை.
” நாங்களா? நாங்க எங்க போக போறோம்? வீட்டுக்குத்தான் போவோம்…. ” எனக் கூறி விட்டு பல்லைக் கடித்தபடி தீரனைப் பார்த்தான் உதியன்.
“இவனை வச்சுட்டு…. ” என உதியனை முறைத்தபடி மகியைப் பார்த்து லேசாக சிரித்தான் தீரன்.
“எங்க போக போறீங்க? ” என தீரனை முறைத்தபடி கேட்டாள் மகி.
“அது…. ஊருக்கு… ” தீரன்.
” ஊருக்கா? ” தூரிகை.
“இங்க பாருங்க… ஆல்ரெடி ரொம்ப லேட் ஆகிருச்சு… இந்நேரம் உங்கள வீட்ல தேடிட்டு இருப்பாங்க… எதுவா இருந்தாலும் வீட்ல போய் பேசிக்கலாம்… வந்து கார்ல ஏறுங்க…. ” என மகியை நினைத்து உள்ளே பயத்துடன் வெளியே இறுக்கமாக கூறிவிட்டு காரில் ஏறி ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்தான் தீரன்.
“சரி… அந்த ஃபோட்டோல இருந்தது யாரு உதி? ” என மெதுவாக உதியிடம் விசாரிக்க ஆரம்பித்தாள் மகி.
அதை காரில் இருந்து கண்ட தீரன், “உதி….. ” என சத்தமாக அழைத்தான். தீரனின் குரலைக்கேட்டு மகிக்கு பதில் கூறாமல் ஓடிச்சென்று காரில் ஏறி அமர்ந்தான் உதியன்.
“உதி….. ” என தீரனைப் போல மிமிக்ரி செய்து காரில் இருந்தபடி தன்னை பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவனைப் பார்த்து, “வெவ்வெவ்வ… ” என அலகு காட்டிவிட்டு தூரியுடன் காரில் ஏறி அமர்ந்தாள் மகி.
மகியின் செயலைப் பார்த்து உதியன் வாய் பொத்தி சிரிக்க…. தன்னவளின் சிறு குழந்தை செய்கையில் தன்னை மீறி எழுந்த புன்னகையை அடக்கி கொண்டு, “அடங்க மாட்டேன்ங்குறாளே…. ” என தனக்குள் முனுமுனுத்தபடி சிரிக்கும் உதியனைக் கண்டு பகிங்கிரமாக முறைத்தான் தீரன்.
தீரன் தன்னை முறைப்பதைக் கண்டு, ” ஒன்னுல்லை அண்ணே… சும்மா… சும்மா… ” என தன் சிரிப்பை நிறுத்திக் கொண்டான் உதியன்.
உதியனை முறைத்தவாறு தீரன் அப்படியே மகியை திரும்பி பார்க்க…. தீரனின் முறைப்பை எதிர்கொண்ட மகி, “என் மூஞ்சில என்ன ரோடா தெரியுது? வண்டிய எடுடா….. மூஞ்சியவே முழுங்குற மாதிரி பாக்க வேண்டியது… பால்பாண்டி…. ” என பால்பாண்டி என்பதை மட்டும் தன் வாய்க்குள் முனுமுனுத்துக் கொண்டாள்.
“எல்லாரையும் பார்வையாலே அடக்குறேன்டி…. உன் பார்வையில மட்டும் தான் டி அடங்கி போறேன்…. என தன்னுள்ளே நினைத்தபடி காரை எடுத்தான் தீரன்.
ஒருவழியாக அனைவரும் மகியின் வீட்டை அடைய அங்கு அவர்களை எதிர்பார்த்தபடி இந்திரனும் பல்லவியும் வாயிலிலேயே காத்திருந்தனர்.
காரில் இருந்து முதலில் தூரிகையும் மகிழ்விழியும் இறங்க…. “ரெண்டு பேரும் எங்க போனீங்க? காலேஜ் முடிஞ்சு எவ்ளோ நேரம் ஆச்சு? ஃபோனும் ரீச் ஆகல… ஆமா….அதென்ன காருல வந்து இருக்கீங்க? யாரோட கார் இது? ” என கேள்வி மேல் கேள்வியாக கேட்டார் பல்லவி.
“யம்மா… யம்மா… என் தெய்வமே… முதல்ல நான் உள்ள வந்துர்றேன்…. என்னைய விட தூரி தான் ரொம்ப டையர்ட்டா இருக்கா…. ” எனக் கூறியபடி உள்ளே நுழைந்தாள் மகி.
மகி கூறியதும் தூரிகையை பார்த்த பல்லவி, அவள் கழுத்தில் இருந்த காயத்தைக் கண்டு பதறி, “ஏய்… என்னடி இது? இந்த காயம் எப்பிடி வந்துச்சு? யார் கிட்ட போய் வம்பு இழுத்து வச்ச மகி? கண்டிப்பா நீ ஏதோ பண்ணி இருக்க…. இல்லனா அமைதியான தூரி மேல எப்பிடி காயம் வரும்? அதுவும் கழுத்துல… யார அடிச்ச மகி? ” என படபடவென பட்டாசாக வெடித்தாள் பல்லவி.
“ஆத்தி…. என்ன வாய் டா இது? ” என பல்லவியை திகைப்புடன் பார்த்தவாறு காரில் இருந்து இறங்கி உதியுடன் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் தீரன்.
அப்பொழுதுதான் தீரனைக்கண்ட பல்லவி, “ஏய்… நீ எதுக்கு இங்க வந்த? நீதான் தூரிய காயப்படுத்துனியா? டேய் உதி…. என்னடா இதெல்லாம்? என்ன நடக்குது இங்க? என்ன தைரியம் இருந்தா அன்னைக்கி வீட்ல யாரும் இல்லாதப்ப வந்து இருப்ப? இப்ப என் பொண்ணோட காருல வந்து இறங்குற? முதல்ல எதுக்கு இங்க வந்த? என் பொண்ண இன்னும் நீ அவமானப்படுத்த என்ன மிச்சம் இருக்கு? ” என மூச்சு விடாமல் பேசினாள் பல்லவி.
பல்லவியின் பேச்சைக்கேட்ட தீரன், “யாத்தீ…. இவங்க வாயில வடை இல்ல …ஏரோப்ளேனே ஓட்டுவாங்க போல…. காதுக்குள்ள கொய்யினு இருக்கே…. எதுக்கும் இ.என்.டி ஸ்பெஷலிஸ்ட்ட பாத்துர்றது நல்லது…. ” என உதியின் காதுக்குள் கூறினான் . அதைக்கேட்டு சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டான் உதியன்.
ஒருவழியாக சிரிப்பை கட்டுப்படுத்தியவாறு, “கொஞ்சம் இருங்க அண்ணா….. இதுக்கு மகியோட ரிப்ளைய மட்டும் பாருங்க…. மூக்கு மேல விரல வைப்பீங்க….. ” என அதே போல தீரனின் காதுக்குள் கூறினான் உதியன்.
“பவி…. முதல்ல அவங்கள உள்ள கூப்புடு….. உள்ள வச்சு எதுவா இருந்தாலும் பேசிக்கலாம்…..”.என தீரனை முறைத்தவாறு கூறிவிட்டு உள்ளே சென்றார் இந்திரன்.
அதற்கு தீரனையும் உதியனையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தார் பல்லவி.
“டேய்…என்னடா? என் மாமன் உள்ள வந்து பேசிக்கலாம் னு சொல்ற ஸ்டைலே பயமா இருக்கே…. அதுக்கு என் மாமியார் பார்வையாலே பஸ்பமாக்கிட்டு போறாங்க….உள்ள போனா உசுருக்கு கேரண்டி இருக்குமாடா? ” என தீரன் உதியனைப் பார்த்து கேட்டான்.
“மகி இருக்க பயமேன்? தைரியமா வலது கால எடுத்து வச்சு உள்ள வாங்க….” என சிரிப்புடன் கூறிவிட்டு உள்ளே சென்றான் உதியன்.
“அடேய்….தம்பி பயலே….என்னைய விட்டுட்டு போகாதடா….” எனக் கத்தியபடி வீட்டிற்குள் நுழைந்த தீரன் உள்ளே மகி செய்து கொண்டிருந்த செயலைப் பார்த்து உதியன் கூறியது போல் மூக்கு மேல் விரலை வைக்கச் சென்றான். பிறகு சுதாரித்து திரும்பி உதியனைப் பார்க்க….சிரிப்பை அடக்க பெரும்பாடு பட்டுக்கொண்டிருந்தான் அவன்.
பல்லவி பார்வையாலே மகியை பஸ்பமாக்கி கொண்டிருக்க…..அவளோ தன் தாயின் பார்வையை பொருட்படுத்தாமல் ஒரு பெரிய ஜக்கில் பழச்சாறு எடுத்து கருமமே கண்ணாக அருந்திக் கொண்டிருந்தாள். சிறிதும் இது எதையும் கண்டுகொள்ளாமல் இந்திரன், தூரிகையின் காயத்திற்கு மருந்திட்டுக் கொண்டிருந்தார்.
“என்ன டிசைன் டா எல்லாரும்? ” என தீரன் மனதினுள் கவுண்டர் கொடுக்க … “உக்காருங்க… ” என்ற இந்திரனின் குரல் கேட்டது.
அதைக்கேட்டு உதியனும் தீரனும் இருக்கையில் அமர…. மகி பழச்சாறை குடித்துவிட்டு சாப்பாட்டு மேசையில் உள்ள பழத்தை எடுத்து சாப்பிட தொடங்கினாள்.
“ஊருல அப்பா அம்மா லாம் எப்படி இருங்காங்க தீரன் ? ” என தூரிக்கு மருந்திட்டு விட்டு தீரனிடம் வினவினார் இந்திரன்.
“ம்ம்… நல்லா இருக்காங்க மாமா… அம்மா தான் எப்போதும் மகி நினைப்பாவே இருக்காங்க… ” தீரன்.
” அவங்க மகி நினைப்பா இருந்து என்ன செய்ய…. இருக்க வேண்டியவங்க மனசுல மகி நினைப்பு இருக்கனும்… ” என கழுத்தை நொடித்தார் பல்லவி.
“பவி… நீ போய் எல்லாருக்கும் காபி எடுத்துட்டு வா… ” என தன் மனைவியை உள்ளே அனுப்ப முயன்றார் இந்திரன்.
“முதல்ல இத்தனை வருஷம் இல்லாம இப்ப எதுக்கு வந்து இருக்கான் னு கேளுங்க…. ” பல்லவி.
“பவி… உள்ள போ முதல்ல… ” இந்திரன்.
“நான் ஏன்ங்க உள்ள போகனும்? நம்ம மகிய அவமானப்படுத்தனும் னு அத்தனை பேர் முன்னாடி நம்ம மகி கழுத்துல கட்டுன தாலிய அறுத்த மகராசன முதல்ல வெளிய அனுப்புங்க…. எதுக்கு உக்கார வச்சு பேசிட்டு இருக்கீங்க? ” பல்லவி.
” அத்தை… ப்ளீஸ்… கொஞ்சம் நான் சொல்லுறத கேளுங்க…. ” தீரன்.
“இன்னும் நீ பேச என்ன இருக்கு? என் புள்ள…. எதுக்காகவும் கலங்க மாட்டா…. எந்த பிரச்சனலயும் நெஞ்ச நிமித்திக்கிட்டு நிக்கிறவ… அன்னைக்கி உங்க ஊரு முன்னாடி கூனி குறுகி நின்னாளே…. அத பாத்து பெத்த வயிறு எப்படி எரிஞ்சுச்சு தெரியுமா? சத்தியமா சொல்லுறேன்…. நீலாம்….. ” என கண்ணீருடன் பல்லவி தீரனை சபிக்க முற்பட…. ” அம்மா….. ” என உதியனும் தூரிகையும் சத்தம் போட்டு பல்லவியை தடுத்தனர்.
பல்லவி பேசியதைக் கேட்ட தீரன், கசங்கிய முகத்துடன் மகியை திரும்பி பார்க்க…. அவள் அமைதியாக எழுந்து அனைவரையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றாள்.
மகி எதுவும் கூறாமல் சென்றது தீரனின் நெஞ்சை பிசைய…. ” தப்பு என் மேல தான் அத்தை…. வீட்டுக்கு வந்ததுக்கு மன்னிச்சுருங்க… நான் கிளம்புறேன்… ஸாரி…. போறேன்…. ” என்றவாறு கிளம்பினான் தீரன்.
“அண்ணே…. நில்லுங்க…. என்ன நடந்துச்சுனு இவங்க தெரியாம பேசுறாங்க….. ப்ளீஸ் ண்ணா…. ” என விழியில் வழியும் கண்ணீருடன் கூறினான் உதியன் .
“மாமா….ப்ளீஸ்…. ” என தூரிகையும் கெஞ்ச…. “இல்ல… பேச வேண்டியவளே அமைதியா உள்ள போய்ட்டா…. நான் யாருக்காக பேச ? வேண்டாம்….. நான் போறேன் ….” எனக் கூறியபடி வெளியே செல்ல திரும்பினான் தீரன்.
“யோவ்….பால்பாண்டி…..
போறதுதான் போற இந்த பெட்டியையும் தூக்கிட்டு போ… என்னால தூக்கிட்டு வர முடியாது…. ” என்றவாறு பெட்டிகளுடன் வந்து நின்றாள் மகி.
திடீரென பேருந்து ப்ரேக் போட…. நினைவுகளின் ஊர்வலத்தில் இருந்து வெளிவந்து குலுங்கி நிமிர்ந்தான் தீரன். பேருந்தில் ஏற்பட்ட குலுக்கலில் தூக்கத்தில் இருந்து கண் விழித்த மகி, “ஊர் வந்துருச்சா மாமா? ” என கண்ணை கசக்கியபடி கேட்டாள்.
“இல்லடி…..இன்னும் கொஞ்ச தூரம் இருக்கு…. ” தீரன்.
“அப்ப இன்னும் கொஞ்சம் தூங்கிக்கிறேன்… ” என அரை தூக்கத்துடன் கூறினாள் மகி.
“தூங்குறியா? என்னைய தூங்க விடாம பண்ணிட்டு நீ தூங்குறியா? “தீரன்.
“யாரு உன்னைய தூங்க வேண்டாம் னு சொன்னது? நீயும் தூங்கு…. ரோ… ரோ… ரோ….” என தீரனின் தோளில் சாய்ந்தவாறு அவனது நெஞ்சில் தட்டிக்கொடுத்தாள் மகி.
“என்ன தான் இருந்தாலும் நீ அப்பிடி பண்ணி இருக்க கூடாது டி….” தீரன்.
” ஆயிரத்தி முந்நூத்தி ஒன்னு….” என அரை தூக்கத்தில் முனுமுனுத்தாள் மகி.
“என்னடி ஆயிரத்தி முந்நூத்தி ஒன்னு?” தீரன்.
” இப்ப நீ எத பத்தி சொன்னியோ அதான்…..என்ன தான் இருந்தாலும் நீ அப்பிடி பண்ணி இருக்க கூடாது டி…..” என மெதுவாக தூக்கத்தினுள் சென்றபடி கூறினாள் மகி.
“அதில்லை மகி….” என தீரன் பேசுவதை இடையிலே தடுத்து, “மாமா தூக்கம்….” என உலறியபடி முழுதாக நித்திராதேவியின் வசமானாள் மகி.
“என் செல்ல ராங்கிக்கார ராட்சசி… ” என செல்லமாக தனது மனைவியின் மூக்கை பிடித்து நிமிண்டினான் தீரன்.
தன் மனைவியின் முகத்தை காதலாக பார்த்து விட்டு ஜன்னலின் வெளியே ரௌத்திரத்துடன் முகத்தை திருப்பி, “இந்த மகிழ்விழிதீரன் வந்துட்டே இருக்காடா உனக்கு எமனா…. ” என நினைத்தவாறு வெளியே மரங்களை வேடிக்கைப் பார்க்க ஆரம்பித்தான் தீரன்.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.