அந்த அறையில் இருந்த அனைவரும் பயத்துடன் அறை வாயிலில் நின்றிருந்த காடவனை நோக்க… அவன் எவ்வித பயமும் இன்றி குரோதத்துடன் தூரிகையின் கழுத்தில் கத்தி வைத்தபடி நின்றிருந்தான்.
“ஏய்… அவள விடுடா… ” மகி.
” நியாயமா உன் கழுத்துல தான்டி கத்தி வச்சு இருக்கனும்…. உன் நல்ல நேரம் நீ தப்பிச்சுட்ட… எல்லா பிரச்சனையும் உன்னால தான்… அன்னைக்கி பெரிய இவ மாதிரி கல்லால அடிச்சு எங்கள அவமானப்படுத்துனல…. இப்ப அனுபவி… ” காடவன்.
“இப்ப உனக்கு என்ன வேணும்? ” தீரன்.
” உங்க ரெண்டு பேரோட உசுரு… ” காடவன்.
“இது அநியாயம் காடவா… ” உதியன்.
“எது? எது அநியாயம் ?என்னமோ நாங்க மட்டும் தான் ஆத்து மணல திருடுன மாதிரி இந்த தீரன் பய எங்கள புடிச்சு பஞ்சாயத்த கூட்டுனான்… இந்த அம்மா பெரிய வீராதி வீரி மாதிரி எங்களுக்கு கல்லால அடிச்சு தண்டனை குடுக்குறாங்க? இல்ல நான் தெரியாம தான் கேக்குறேன்…. நாங்க தான் அந்த ஆத்துல மொத மொதலா திருடுனோமா? அந்த ஊருல நல்லவனுங்க மாதிரி பேசி நடிச்சுக்கும் எத்தன திருடனுங்க இருக்காங்க னு உங்களுக்கு தெரியுமா? ” காடவன்.
“இப்ப எதுக்கு என்ன பண்ண சொல்லுற? ” என கேட்டபடி நிதானமாக காடவனை நெருங்கினான் மனோரஞ்சன்.
“ஏய் கிட்ட வராத …” காடவன்.
“வந்தா என்ன பண்ணுவ? ” என நிறுத்தாமல் காடவனை நெருங்கினான் மனோரஞ்சன்.
“இவளக் கொன்னுருவேன்…” என மிரட்டியவாறு தூரிகையின் கழுத்தில் அழுத்தமாக கத்தியை பதிக்க… தூரிகை வலியில் முனங்கினாள்.
மெதுவாக முன்னே நகர்ந்த மனோரஞ்சன் லேசாக விசிலடிக்க… அதைக்கேட்ட காடவன், “ஏய் யாருக்கு சிக்னல் குடுக்குற? ” என மீண்டும் தூரிகையின் கழுத்தில் நன்றாக கத்தியை அழுத்த ..குருதி லேசாக கசிய தொடங்கியது.
வலியில் கண்ணீர் சிந்தியபடி, “அக்கா….” என மகியை பார்த்தவாறு அரற்றினாள் தூரிகை.
தூரிகையின் வலியை உணர்ந்த மகி, என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசைந்தபடி தூரிகையை பார்த்தாள்.காடவனுக்கு பின்னே தெரியும் நிழல்களை கண்ட மகி, சட்டென தூரிகையிடம் கண்ணை காட்டி தன் காலை லேசாக தூக்கி காட்டினாள்.
மகியின் சைகையை புரிந்து கொண்ட தூரிகை ,உடனே காடவனின் காலில் ஓங்கி மிதிக்க….அதை எதிர்பாராத காடவன் வலியில் பதறி தூரிகை மீதிருந்த பிடியை லேசாக தளர்த்தினான். அதைப் பயன்படுத்தி தூரிகையை தன்னிடம் இழுத்துக் கொண்டாள் மகி.
அதை காடவன் உணருவதற்கு முன்பே சில நபர்களால் காடவனின் கை கட்டப்பட்டது. அவர்களிடம் இருந்து திமிறியபடி யாரென பார்க்க… காடவனை பிடித்தபடி இரண்டு போலீஸ்காரர்களும் அவர்களின் பின்னே மேலும் இரு போலீஸ்காரர்களும் நின்றிருந்தனர்.
“இப்போ காட்டுடா உன் வீரத்தை…” என்றபடி காடவனின் முகத்தில் ஒரு குத்து விட்டான் மனோரஞ்சன்.
“ஏய்….” என கோபத்தில் பல்லைக் கடித்தான் காடவன்.
“சரி….இனியாச்சும் சொல்லு…யார் அவன் ?” தீரன்.
“யாரு? ” என திமிராக தீரனை ஏறிட்டான் காடவன்.
“ஓஓஓ…நாங்க யார பத்தி கேக்குறோம் னு ஐயாவுக்கு தெரியாது? ம்ம்…?” என காடவனை பார்த்து நக்கலாக கேட்டபடி, “கான்ஸ்டபிள்ஸ்…..இந்த அஞ்சு பேரையும் ஸ்டேஷனுக்கு அள்ளிட்டு போய் கவனிக்க வேண்டிய விதத்துல கவனிங்க… நான் கொஞ்ச நேரத்துல வந்துர்றேன்…” என அங்கு நின்றிருந்த போலீஸ்காரர்களுக்கு ஆணையிட்டான் மனோரஞ்சன்.
“எஸ்.. ஸார்… ” என சல்யூட் அடித்து விட்டு அந்த ஐவரையும் ஜீப்பில் ஏற்றி கொண்டு புறப்பட்டனர் மனோரஞ்சன் குறிப்பிட்ட போலீஸார்.
தீரனும் உதியனும் காடவனை நாற்காலியில் அமர வைத்து கைகளை கட்டி போட்டு அவனை முறைத்து பார்த்தவாறு நின்றனர்.
“ஏய்….அவங்கள எங்க கூட்டிட்டு போற? எதுக்குடா என்னைய கட்டி போடுறீங்க? ” என கை கட்டிலிருந்து திமிறியபடி கத்தினான் காடவன்.
” அவங்க பத்ரமா இருக்காங்க….. இப்ப நாம பேசலாமா? ” என காடவனைப் பார்த்து கேட்டான் மனோரஞ்சன்.
தூரிகையின் காயத்தை துணி வைத்து துடைத்து அவளுக்கு நீர் அருந்த குடுத்துக்கொண்டிருந்த மகி, காடவனின் அழுத்தமான பேச்சைக் கேட்டு, “ஒழுங்கா அவன் யாருனு சொல்லிரு காடவா…..இல்ல… உனக்கு வம்சமே இருக்காது…” என சாரைப்பாம்பாக சீற….அச்சீற்றத்தில் இருந்த விடத்தில் கலங்கித்தான் போனான் காடவன்.
“மகி… நீ கொஞ்சம் அமைதியா இருக்கியா? ” உதியன்.
“இதுக்கு மேல என்னடா அமைதியா இருக்கனும்? என்னையும் இவளையும் அசிங்கப்படுத்த நினைச்சு இருக்கான்…தூரி கழுத்துல கத்தி வச்சு இருக்கான்… இங்க பாரு அவளோட இரத்தத்த… இதுக்கு மேல நாம ஏன் அமைதியா இருக்கனும்? டேய் காடவா… இப்ப நீ மட்டும் அவன் யாருனு சொல்ல ல…. உன் பரம்பரை ல ஒரு உசுரு கூட இருக்காது…. ” என உதியிடம் ஆரம்பித்து மதுரையை எரித்த கண்ணகியின் சாயலில் காடவனை அழுத்தமாக மிரட்டினாள் மகி.
“எங்கள கொஞ்சம் விசாரிக்க விடுறியா டி? அதான் நாங்க மூணு பேரும் இருக்கோம் ல… நீ தூரி கூட இரு….” என மகியை பார்த்து கெஞ்சலாய் கூறினான் தீரன்.
“இல்ல தீரா…அவன்…..” என மகி மறுத்து கூற வர… “சொல்லுறத கேக்க போறியா இல்லையா டி? ” என தீரன் காட்டுக்கத்தலாய் கத்தி மகியை தடுத்தான்.
“அமைதியா சொன்னா கேக்க போறேன்….அதுக்கு ஏன் செவுள் கிழியுற அளவுக்கு கத்துறான்? காட்டுக்குரங்கு…” என முனுமுனுத்தவாறு தூரியின் அருகே சென்று அமர்ந்தாள் மகி.
அவள் முனுமுனுத்தது கேட்டாலும் கேட்காதது போல் காடவனிடம் திரும்பினான் தீரன்.
“பாத்துக்க…..உன் மேல எல்லாரும் எவ்ளோ வெறில இருக்கோம் னு… ஒழுங்கா அவன் யாருனு சொல்லிரு… ” என காடவனை பார்த்து கூறினான் தீரன்.
“அதான் அவன் யாருனு எனக்கு தெரியாது னு சொல்றேன் ல… எனக்கு மட்டும் இல்ல, எங்க யாருக்குமே தெரியாது… ” காடவன்.
“யாரு காதுல டா பூ சுத்துற? அவன் யாருனு தெரியாம தான் அவன் சொல்லுற எல்லாத்தையும் செஞ்சீங்களா? ” என்றபடி அவன் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை அறைந்தான் மனோரஞ்சன்.
“அண்ணா… காலையில காபி ஷாப்ல அவன் கிட்ட இவன் பேசுனான்… இவன் ஃபோன செக் பண்ணுங்க…” என கீச் குரலில் மனோரஞ்சனிடம் கூறினாள் தூரிகை .
அதைக்கேட்ட உதியன், அவன் பாக்கெட்டை சோதித்து அதிலிருந்து காடவன் காலையில் பேசிய எண்களை ஆராய்ந்தான். அன்றைய கால் ஹிஸ்ட்ரியில் நாலைந்து எண்கள் இருக்க… ” ஃபோன் வந்துச்சா? இவன் ஃபோன் பண்ணுனானா தூரி ?” என தூரிகையிடம் கேட்டான் உதியன்.
“ஃபோன் வந்துச்சு… ” தூரிகை.
“இந்த நம்பரா அவனோடது? ” என காடவனின் எதிரே காட்டி உதியன் கேட்க… குருதி வழிந்த வாயுடன் அரை மயக்கத்தில், “ஆமா…” என்றவாறு தலையசைத்தான் காடவன்.
அந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பார்க்க….சுவிட்ச் ஆப் என வரவும் காடவனை முறைத்தான் உதியன்.
உதியன் முறைப்பதை பார்த்து நக்கலாக சிரித்த காடவன், “என்ன? சுவிட்ச் ஆப் னு வருதா? ” என்றான்.
“என்ன நக்கல் பண்றியா? ” எனக் கோபத்துடன் காடவனை தீரன் எட்டி உதைக்க ….நாற்காலியுடன் தரையில் பொத்தென்று விழுந்தான் காடவன்.
“கொஞ்சம் பொறுமை தீரா…. ” என்றபடி மனோரஞ்சன் நாற்காலியுடன் காடவனை நிமிர்த்தி அமர வைத்தான். ஆனால் அப்பொழுதும் நக்கல் சிரிப்புடன், “நான் தான் சொல்லுறேன் ல… அவன் யாருனு எங்களுக்கு தெரியாது… ” என்றான் காடவன்.
” யாருனு தெரியாம தான் அவன் சொல்லுற எல்லாத்தையும் செஞ்சியா டா நாயே? ” மனோரஞ்சன்.
“இது அவன் நம்பர் தான? ” உதியன்.
“இது அவன் நம்பர் தான்… ஆனா அவனா கூப்பிடுறப்ப தான் பேச முடியும்…. ” காடவன்.
“ஓஓ… அந்தளவுக்கு சீக்ரெட் மிஷினா? தூ…. பொறம்போக்கு…. அவன் யாருனு தெரியாது… ஆனா அவன் சொல்லுறத எதுக்குடா செஞ்சீங்க? ” தீரன்.
“எதிரிக்கு எதிரி நண்பன் ல… அதான்…. அன்னைக்கி பஞ்சாயத்துல எங்கள அவமானப்படுத்துனதுக்கு உங்க ரெண்டு பேரையும் கொலை பண்ண முயற்சி பண்ணி தோத்ததுக்கு அப்புறம் அன்னைக்கி ராத்திரி உங்கள பழி தீக்க நாங்க அஞ்சு பேரும் பேசிட்டு இருந்தப்ப உடம்பு முழுக்க முக்காட போட்டுட்டு ஒருத்தன் வந்தான்…. அந்த தீரனையும் அந்த பொண்ணையும் பழி தீக்க சரியான நேரம் வந்து இருக்கு… நான் சொல்லுறத செய்ங்க னு சொன்னான்… ” என சற்று நிறுத்தி மூச்சு வாங்கினான் காடவன்.
“நீ யாரு? னு கேட்டதுக்கு உங்கள மாதிரி நானும் அந்த தீரனால பாதிக்கப்பட்டவன் தான்னு சொன்னான்… சரி… உன் முகத்த காட்டு னு சொன்னதுக்கு அதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாதது… நான் சொல்லுறபடி செஞ்சா அந்த தீரனையும் அந்த பொண்ணையும் துடி துடிக்க வைக்காலாம் னு சொன்னான்… எங்களுக்கு உங்க ரெண்டு பேரையும் பழிவாங்குறது தான் முக்கியமா தெரிஞ்சதால அவன பத்தி அதுக்கு மேல விசாரிக்கல….” காடவன்.
“அன்னைக்கி என் கிட்ட வந்து பேசுனது யாரு? அவன் சொல்லி தான் அதையும் செஞ்சீங்களா? ” என இரண்டரை வருடமாய் கனன்று எரிந்த வலிக்கு காரணமாய் இருந்த சம்பவத்தைப் பற்றி கேட்டான் தீரன்.
“என்ன? ” என தீரன் கேட்ட கேள்விக்கு அர்த்தம் புரியாமல் மகியும் உதியனும் தீரனைப் பார்க்க….தீரனோ கூர்மையாக காடவனைப் பார்த்தவாறு இருந்தான்.
“ஆமா…. அவன் சொல்லி தான் செஞ்சோம்…. அன்னைக்கி உன்னைய மிரட்டுனது எங்க ஆளுங்கள்ல ஒருத்தன் தான்….அவன் சொல்லி தான் அன்னக்கி ராத்திரி இந்த புள்ள கழுத்துல கட்டுன தாலிய பஞ்சாயத்துல வச்சு அறுக்கலனா இந்த புள்ளையோட வீடியோவ கேபிள் டிவி சேனல் ல போட்டுருவோம் னு மிரட்டி ஊரு முன்னாடி தீரன் கையாலயே கட்டுன தாலிய அறுக்க வச்சோம்…. ” எனக் காடவன் கூறி முடிக்கும் முன்பே உதியன் அவனை கீழே தள்ளி உதைத்து எடுத்தான்.
“உதியா… கொஞ்சம் அமைதியா இரு… ” என உதியனை மனோரஞ்சன் பிடித்து இழுக்க… அந்த நாள் நினைவின் தாக்கத்தில் தீரன் கலங்கி அமர்ந்து இருக்க…. நடந்ததை கேட்டு விழியில் நீர் வழிய சிமிட்டாமல் தீரனையே பார்த்தவாறு இருந்தாள் மகிழ்விழி.
ஒருவழியாக உதியனை காடவனிடம் இருந்து மனோரஞ்சன் பிரித்து வந்த பிறகும் காடவனின் கதறல்கள் நிற்கவில்லை. யாரென மனோரஞ்சனும் உதியனும் திரும்பி காடவனை பார்க்க…. அங்கு காடவனை தன் பலம் கொண்ட மட்டும் அழுகையுடன் தாக்கியபடி இருந்தாள் தூரிகை.
“ஏன்டா? ஏன்டா இப்பிடி பண்ணீங்க? என் மாமா கையாலயே அவரு கட்டுன தாலிய அக்கா கழுத்துல இருந்து அறுக்க வச்சுட்டீங்களே டா… நீ லாம் நல்லாவே இருக்க மாட்ட….நாசமா போயிருவடா…. அந்த செகண்ட் என் அக்காக்கு வலிச்சத விட தீரா மாமாவுக்குத்தானடா வலிச்சு இருக்கும்…. அது தெரியாம இத்தனை வருஷம் அவரு மேல கோவமா இருக்க வச்சுட்டீங்களேடா பாவிகளா…. ” என தேம்பி தேம்பி அழுதபடி காடவனை அடித்தபடி இருந்தாள் தூரிகை.
தூரிகையின் மொழிகள் கேட்டு உதியனுக்கும் கண்ணீர் வர…மனோரஞ்சனும் லேசாக கண் கலங்கினான்.
தூரிகை புலம்பியது அனைத்தும் காதில் விழ…. விழிநீர் வழியும் விழிகளுடன் தீரனை விழிகளாலயே தழுவினாள் மகி. ஆனால் தீரனோ தன்னை தேற்றிக்கொண்டு, “தூரி….தள்ளி போ….இன்னும் இவன் கிட்ட நிறைய கேக்கனும்….” என அமைதியாக கூறினான்.
அவன் கூறியதை வேத வாக்காக ஏற்றுக்கொண்டு, “சரி மாமா…” என விழிகளை துடைத்தபடி மகியிடம் வந்து தமக்கையின் மனநிலையை உணர்ந்து அவளை அணைத்துக்கொண்டாள் தூரிகை. அங்கு தங்கை அவள் தமக்கைக்கு தாயாகி தேற்றினாள்.
“மனோ….இந்த நம்பர உன் டிபார்ட்மெண்ட் ல குடுத்து யார் பேருல இருக்கு னு பாக்க சொல்லு…” என காடவனின் ஃபோனை மனோரஞ்சனிடம் அளித்தான் தீரன்.
“சரி தீரா… ” என்றபடி தனது ஃபோனில் இருந்து தனது டிபார்ட்மெண்டை தொடர்பு கொண்டு அந்த எண்ணை பற்றிய தகவல்களை எடுத்து தர சொல்லி கூறிவிட்டு காடவனின் ஃபோனை அருகில் இருந்த மேசையில் வைத்தான் மனோரஞ்சன்.
மீண்டும் காடவனை தூக்கி அமரவைத்து விசாரிக்க ஆரம்பித்தான் தீரன்.
“ம்ம்….அதுக்கு அப்புறம் சொல்லு… ” தீரன்.
“அன்னைக்கி நாங்க நினைச்சது மாதிரி நடந்துச்சு….ஊரு முன்னால இந்த புள்ள துடிச்சத பாத்து அவ்ளோ சந்தோஷப்பட்டோம்….பஞ்சாயத்து முடிஞ்சதுக்கு அப்புறம் தனியா நீ வாய் விட்டு கத்தி அழுததையும் பாத்து ரொம்பவே சந்தோஷப்பட்டோம்…..அந்த சம்பவத்துக்கு அப்புறம் அவன் மேல நம்பிக்கை வந்துருச்சு….அதுக்கு அப்புறம் அவன் என்ன சொன்னாலும் ஏன் எதுக்குனு கேக்காம செஞ்சோம்… இத்தனை வருஷமா யாருக்கும் தெரியாம தினம் தினம் தனியா நீ கத்தி அழுகுறத பாத்து பாத்து ரசிச்சோம்…உன்னைய கொன்னு இருந்தா கூட இவ்ளோ சந்தோஷம் வந்து இருக்காது….அதே போல இந்த புள்ளையையும் அழுக வைக்க நினைச்சு தான் இங்க வந்தோம்….அதுக்கான துருப்புச்சீட்டு தான் அந்த நோஞ்சான் புள்ள….” என அதற்கு மேல் கூற முடியாமல் மயங்கினான் காடவன்.
அதுவரை தூரிகையின் அணைப்பில் இருந்தவாறு காடவன் கூறுவதை கேட்டபடி இருந்த மகி, அதற்கு மேல் தாளாமல், “தீரா….” என ஓடி வந்து தீரனை அணைத்துக்கொண்டாள்.
“அழுதியாடா? எனக்காகவாடா? அழுதியா தீரா? தீரா நீ அழுதியா? எனக்காகவா தீரா? ” என சிறு குழந்தையென தேம்பி தேம்பி தீரனின் நெஞ்சில் புதைந்து அழுதாள் மகி.
“லவ் யூ பாப்பா…..உன்னைய ஏன் எதுக்கு புடிச்சுச்சு னு தெரியலடி….ஆனா அன்னைக்கி மனசார தான்டி தாலி கட்டுனேன்….நான் தப்பா……” என தீரன் கூறுவதை அதற்கு மேல் அவனை கூறவிடாமல் அவன் வாய் மீது தன் கை வைத்து தடுத்து,” வேண்டாம் தீரா….நீ உன்னைய நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை டா….லவ் யூ டா….நானும் உன்னைய நிறையவே லவ் பண்றேன்டா… யார் கிட்டையும் அடங்காதவ உன் கிட்ட தான்டா அடங்கி போறேன்….லவ் யூ சோ மச் டா ஃபயரு….” என தீரனை முத்தங்களால் அர்ச்சித்தாள் மகி.
தன் தோழியின் மனமகிழ்ச்சியை கண்டு ரசித்தபடி நின்றிருந்தான் உதியன்.
“யப்பா… லவ் பேர்ட்ஸ்… கொஞ்சம் எங்களையும் பாருங்க….நாங்களும் இங்க தான் இருக்கோம்… இருந்தாலும் என் க்ரஷ நீ இவ்ளோ நேரம் ஹக் பண்ணக்கூடாது…தள்ளு மொதல்ல… ” என மனோரஞ்சன் அவர்களை விலக்க வர… அந்நேரம் சரியாக டிபார்ட்மெண்டில் இருந்து அவனுக்கு ஃபோன் வர…அதை எடுத்தபடி தனியாக பேச சென்றான் மனோரஞ்சன்.
மனோரஞ்சன் செல்கையில் அவனது கரம் பட்டு காடவனின் ஃபோன் கீழே விழுந்தது. அது தூரிகையின் கவனத்தை கவர…அதை எடுத்து ஃபோனின் உள்ளே நுழைந்து அதில் காடவன் பேசிய அவனின் எண்ணை எதார்த்தமாக பார்த்தாள்.
அந்த எண்ணை பார்த்ததும் அதிர்ந்து… “அக்கா… ” எனக் கத்தினாள் தூரிகை.
“என்ன ஆச்சு தூரி? ” என மகி, தீரன் மற்றும் உதியன் மூவரும் தூரிகையை பார்க்க….”இது….இந்த நம்பர்… என் அப்பாவோடதுக்கா… ” என கரம் நடுங்க கூறினாள் தூரிகை.
அதேநேரம் ஃபோனில் பேசிவிட்டு, “அந்த நம்பர பத்துன டீட்டைல்ஸ் மெயிலுக்கு அனுப்புறேன் னு சொல்லி இருக்காங்க தீரா…. அந்த நம்பர் கலியமூர்த்தி ங்கிற பேருல இருக்காம் டா… “எனக் கூறியபடி உள்ளே நுழைந்தான் மனோரஞ்சன்.
(காதல் தீ பரவும்…. )
-செல்லம்மாள்பாரதி
No comments yet.