காதல் தீ -46

Chellammal Bharathi | 02 Jan 2026 | Share

           காடவன் தங்கி இருந்த இல்லத்திற்கு  முன் வந்து நின்று அனைவரும் தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்க…. மகி அனைவரையும் விட்டு விட்டு முன்னே சென்று கதவை நெருங்கி நின்றாள். 

             மனோரஞ்சன், மகியுடன் வந்து தனது சொந்த வீட்டை திறப்பது போல் பூட்டி இருந்த வீட்டை திறந்து, மகியை உள்ளே வருமாறு கூறி அவளது கை பற்றினான் .

            அதுவரை மனோரஞ்சனை சந்தேக விழி கொண்டு பார்த்து இருந்த தீரன், மகியின் மற்றொரு கரத்தை பற்றி அவளை நிறுத்தினான். 

           மனோரஞ்சன் தீரனை கேள்வியாக பார்க்க, ” நீ யாருனு இப்பத்தான்டா எனக்குத் தெரியுது …துரோகி…” என விழிகளில் உஷ்ணத்துடன் மனோரஞ்சனைப் பார்த்து கூறினான் தீரன். 

            “துரோகியா? ” உதியன். 

            “என்ன உலர்ற தீரா? ” என நிற்கும் இடத்தை உணர்ந்து பல்லை கடித்தாள் மகி. 

             தூரிகை, வியப்பு கலந்த குழப்பத்துடன் தீரனையும் மனோரஞ்சனையும் மாற்றி மாற்றி பார்த்தப்படி நிற்க….ஆனால் அதிர வேண்டிய மனோரஞ்சனோ சற்றும் அசராமல், “நீ வா மகி… ” என மீண்டும் மகியின் கை பற்றி உள்ளே அழைத்தான். 

           அதைப்பார்த்த தீரன், “துரோகி…” எனக் கூறியவாறு மனோரஞ்சனின் நெஞ்சில் கை வைத்து அவனை பின்னே தள்ளினான். 

           “டேய்….உங்க சண்டைய அப்புறம் வச்சுக்கங்களேன்… ” என சூழ்நிலை கருதி மென்மையான குரலில் வன்மையாக மொழிந்தாள் மகி. 

          ” அன்னக்கி என் கிட்ட என்ன டா சொன்ன? இன்னக்கி பண்றது என்னடா? ” என மனோரஞ்சனைப் பார்த்து தீரன் சீற….அதற்கு மனோரஞ்சன் ,சிரித்தபடி தலையை ஸ்டைலாக கோதி கொண்டான். 

           அதைப்பார்த்த மற்ற மூவரும் ஒன்றும் புரியாமல் என்ன செய்வது என குழம்பி நின்றனர். 

            ” அண்ணே…. இந்த இடத்துல என்ன நடக்குது னு சொல்லுறீங்களா? ” என மெதுவாக தீரனிடம் உதியன் கேட்க…, “டேய் தம்பி…இவன் சரியான ப்ராடு டா…நம்மளலாம் ஏமாத்திட்டு இருக்கான்…” என கோவத்துடன் மனோரஞ்சனின் சட்டைக்காலரை இறுக்கப் பற்றினான் தீரன். 

             அதைக்கண்டு இன்னும் குழம்பிய உதியன், “அடியேய் மகி…நீயாச்சும் இங்க என்ன நடக்குது னு எனக்கு சொல்லுறியா? ” எனக்கேட்டபடி மகி நின்றிருந்த இடத்தை உதியன் பார்க்க….அங்கு மகி நின்றிருந்த இடம் காலியாக இருந்தது. 

             “யோவ் பெரிய எருமைங்களா…மகிய காணோம்…அவ உள்ள போய்ட்டா போல… உங்கள….” என இருவரையும் திட்டிக்கொண்டே தூரிகையை இழுத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்தான் உதியன். 

             அவர்கள் இருவரையும் பின் தொடர்ந்து தீரன், மனோரஞ்சனை முறைத்தபடி உள்ளே நுழைய…. மாறாக தீரனைப் பார்த்து சிரித்தபடி அவனின் தோள் பற்றி உள்ளே நுழைந்தான் மனோரஞ்சன். 

             இவர்களுக்கு முன்னே மகி பதுங்கி பதுங்கி ஒவ்வொரு அறையாக எட்டிப்பார்த்தபடி பேச்சுக்குரல் கேட்கும் இடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தாள். 

            ஒருவழியாக பேச்சுக்குரல் கேட்ட இடத்தை வந்தடைந்த மகி, சுவர் ஓரம் ஒளிந்தபடி மெதுவாக உள்ளே எட்டிப் பார்க்க… அங்கு மணல் திருட்டில் சம்பந்தப்பட்ட மற்ற மூவரும் அவர்களுடன் அன்று தன்னையும் தீரனையும் கொல்ல வந்த இருவரும் இருப்பதை கண்டு வியப்புற்று நின்றாள். 

             உதியனும் தூரிகையும் மகியின் அருகே வந்து அவளுடன் ஒளிந்திருந்து உள்ளே எட்டிப் பார்த்து மகியைப் போலவே உதியனும் ஆச்சரியமடைந்தான்.

            “என்ன மகி? எல்லாரும் ஒன்னு கூடி இருக்கானுக? ” என ரகசிய குரலில் உதியன் வினவ…”இவங்கலாம் யாரு? ” என அதே ரகசிய குரலில் வினவினாள் தூரிகை. 

             “அன்னக்கி மணல் திருடுனவனுங்களும் மகியையும் அண்ணனையும் கொல்ல வந்தவனுங்களும் இருக்கானுக… ” என அந்நேரத்திலும் பொறுமையாக தூரிகைக்கு விளக்கமளித்தான் உதியன். 

             அவர்கள் பின்னே வந்த தீரனும் மனோரஞ்சனும் இவர்களைப்போல் ஒளிந்து நில்லாமல், அதிரடியாக அவ்வறைக்குள் நுழைந்தனர். 

            அவர்கள் அனைவரும் தீரனை கண்டு அதிர்ச்சி அடைந்து மனோரஞ்சனை கண்டு யாரென தெரியாமல் விக்கித்து நின்றனர். 

            அவர்களின் உணர்வுகளை படித்த மனோரஞ்சன், ஸ்டைலாக ஒரு நாற்காலியை தனது காலால் இழுத்து, “உக்காரு மச்சான்…. ” என தீரனை உட்கார சொன்னான் மனோரஞ்சன். 

           அதைக்கேட்டு தீரனும் புன்னகையுடனே அந்நாற்காலியில் கால் மேல் கால் போட்டு சிங்கத்தின் கம்பீரத்துடன் அமர்ந்தான் தீரன். தீரன் உட்கார்ந்த தோரணையிலேயே அவ் ஐவரின் மனதிலும் லேசாக கிலி பிறக்க… இருந்தாலும் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ஒருவன் தான் குடித்துக்கொண்டிருந்த பியர் பாட்டிலை கண்ணிமைக்கும் நேரத்தில் உடைத்து தீரனை குத்த வந்தான். 

           உள்ளே நடப்பதை வெளியில் தாங்கள் ஒளிந்து இருந்த இடத்தில் இருந்து பார்த்து கொண்டிருந்த மூவரில் தூரிகை மயங்கி உதியனின் தோள் மீது சாய…. தீரன் மற்றும் மனோரஞ்சனின் இணக்கத்தை கண்டு விழி விரித்து இருந்த மகி, தீரனை காக்க அறையின் உள்ளே நுழைந்தாள். 

            மின்னல் வேகத்தில் அறையின் உள்ளே நுழைந்து மகி செயல்படுவதற்கு ஒரு நொடி முன்பே தீரனை குத்த வந்த பியர் பாட்டில் டமால் என்ற சத்தத்துடன் சில்லு சில்லாய் சிதறியது. 

            உள்ளே நுழைந்த வேகத்தில் அடுத்த நொடியே வலிமையான கரத்தினுள் தனது இடுப்பு சிக்கி ,சுழன்று பத்திரமாக மேடையில் அமர்ந்துருப்பதை சில நொடி தாமதமாக தான் உணர்ந்தாள் மகி. 

            வெளியே தூரிகையின் மயக்கத்தை தெளிவித்து விட்டு உள்ளே பார்த்த உதியனின் விழிகளில், நாற்காலியில் தோரணையுடன் அமர்ந்திருக்கும் தீரனையும் ,அவன் மடி மீது ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் மகி மற்றும் அவர்களின் பின்னே கையில் துப்பாக்கியுடன் நின்றிருக்கும் மனோரஞ்சனும்…அவன் காலடியில் மண்டை உடைந்து ஒருவன் விழுந்து கிடப்பதும் தெள்ள தெளிவாக தெரிந்தது. 

            தான் காண்பது கனவா? நனவா? என புரியாமல் கண்களை கசக்கி விட்டு மீண்டும் பார்க்க… அதே காட்சி விழிகளில் விழுந்து அது நிஜம் தான் என உதியனுக்கு உணர்த்தியது. மயக்கம் தெளிந்து அக்காட்சியை கண்ட தூரிகை, மீண்டும் மயங்கி சரிந்தாள். 

             அதைக்கண்ட உதியன், “இவ ஒருத்தி… “என தலையில் அடித்துக் கொண்டு மீண்டும் அவளின் மயக்கத்தை தெளிவிக்க தண்ணீரை தேடி சென்றான் உதியன். 

             அறையின் உள்ளே சில நொடிகளுக்கு பிறகே தான் தீரனின் மடியில் அமர்ந்து இருப்பதையும், தீரனை குத்த வந்தவனை மனோரஞ்சன் அடித்து வீழ்த்தி விட்டான் என்பதை உணர்ந்தாள் மகி. 

           சற்று முன் என்ன நடந்தது என தன் மனக்கண்ணில் மெதுவாக குறும்படம் ஓட்டிப்பார்க்க…. தீரனை குத்த வருவதைக் கண்டு மகி முன்னே ஓட… அவளது இடுப்பைப் பற்றி சுழற்றி தன் மடியில் அமர வைத்தான் தீரன். அதே நேரத்தில் மனோரஞ்சன், மின்னல் வேகத்தில் தனது கைதுப்பாக்கியை எடுத்து குத்த வந்த பாட்டிலை சுட… அது குத்த வந்தவனின் தலையிலேயே சில்லு சில்லாய் சிதறி அவன் மண்டையை உடைத்து இருந்தது. 

           இவை அனைத்தும் மகியின் மனக்கண்ணில் ஓட…. சட்டென திரும்பி மனோரஞ்சனை ஆச்சரியமாக பார்த்தாள் மகிழ்விழி. 

          மகி வியப்புடன் மனோரஞ்சனை பார்ப்பதை கண்ட தீரன், “அவன்….  ஸ்டேட் லெவல் சாம்பியன் ….. துப்பாக்கி சுடுறதுல….” என மகியின் காதோரம் மீசை முடி உரச கூறினான். 

           அவ்வுரசலில் சுய நினைவு வந்த மகி, சட்டென எழுந்து, “இதெப்படி உனக்கு தெரியும்? அப்போ உனக்கு மனோவ ஏற்கனவே தெரியுமா? அப்புறம் வெளில துரோகி……அப்பிடி இப்பிடி னு சொன்ன…. ” என குழப்பமாக இருவரையும் பார்த்தவாறு கேட்டாள். 

            தீரன் பதில் சொல்ல வருவதற்குள் அடுத்தவன் தீரனை தாக்க வர…..அவன் முயற்சி அடுத்த நொடியே மனோரஞ்சனால் தகர்க்கப்பட்டது. மனோரஞ்சனால் தாக்கப்பட்ட இருவரும் எழுந்திரிக்க முடியாமல் தரையில் வீழ்ந்து கிடப்பதை பார்த்த மற்ற மூவரும் விழிகளில் உயிர் பயம் தெரிய மனோரஞ்சனை எமனை பார்ப்பது போல் பார்த்தனர். 

           “ஏற்கனவே உங்க கூட்டாளியான காடவன் எங்க கிட்ட மாட்டிக்கிட்டான்…..இப்ப இவனுங்க ரெண்டு பேரும் உங்களுக்கு உதவ மாட்டானுக…..ஸோ….” என கீழே விழுந்து கிடந்த இருவரையும் காலால் உதைத்தபடி தன் துப்பாக்கியை ஸ்டைலாக சுத்தியபடி மீதமுள்ள மூவரை நோக்கி முன்னேறினான் மனோரஞ்சன். 

           தங்களை நோக்கி வந்த மனோரஞ்சனை திடீரென அம்மூவரில் ஒருவன் தாக்க….அவ் எதிர்பாரா தாக்குதலில் மனோரஞ்சனின் உதடு கிழிந்து இரத்தம் கசிய….. அத்தாக்குதலில் இருந்து புன்னகையுடன் மீண்டபடி, “உன் கடைசி ஆசை என்ன னு இந்த செகண்ட்டே சொல்லிரு… ” என துப்பாக்கியை பாக்கெட்டில் வைத்துவிட்டு சட்டை காலரை மடித்துவிட்டபடி கேட்டான் மனோரஞ்சன். 

          ” ஏன்? அடுத்த செகண்ட் நீ செத்துருவியா? ” என மனோரஞ்சனை அடித்த திமிரிலும் அவன் துப்பாக்கியை உள்ளே வைத்த தைரியத்திலும் அடித்தவன் கேட்க…..அடுத்த நொடி கேட்டவனின் நெஞ்சில் எட்டி உதைத்து இருந்தது இரண்டு கால்கள். 

          உதைபட்ட வேகத்தில் தாறுமாறாய் சென்று அவன் விழ….விழுந்த அடுத்த நொடியே அவன் வாயை அடித்து உடைத்து இருந்தான் தீரன். அதுவரை தீரனை அவ்வளவு ஆக்ரோஷமாக பார்த்திராத மகி அரண்டு விழிக்க….தீரனோ வெறி கொண்ட வேங்கையாய் மற்ற இருவரையும் அடித்து துவைத்து எடுத்தான். தீரனுடன் மனோரஞ்சனும் இணைய…..பல நாட்களாக பசித்திருந்த சிங்கம் இரண்டு , தன்னிடம் சிக்கிய இரையை கடித்து குதறுவது போல் அங்கிருந்த ஐவரையும் வெளுத்து எடுத்தனர். 

            கரும்பு மிஷினில் மாட்டிய கரும்பாய் தீரனிடமும் மனோரஞ்சனிடமும் மாட்டிக்கொண்டு இரத்தத்தை சிந்தியபடி சக்கையாய் விழுந்தனர் அந்த ஐவரும். அக்காட்சியை விழிகளில் மிரட்சியுடன் மகி பார்த்தவாறு இருக்க….மயக்கம் தெளிந்து நடந்து வந்த தூரிகையோ மீண்டும் மயங்கி சரிந்தாள் அக்காட்சியை கண்டு. 

            ஒருவழியாக நிதானத்திற்கு வந்த மனோரஞ்சன் , ” டேய் மச்சான்…. போதும்… இதுக்கு மேல அடிச்சா இவனுக செத்துருவானுக…. போதும்…. ” என தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்த தீரனை பிடித்து நிறுத்த….. அப்பொழுதும் அடங்காமல் அவனிடம் இருந்து திமிறியபடி ஒருவனை மிதித்தபடி இருந்தான் தீரன். 

           “மச்சான் போதும்….நிறுத்து…” என தீரனை கட்டுப்படுத்த முடியாமல் மனோரஞ்சன் திணறியபடி, “மகிழ்….என்ன பாத்துட்டு இருக்க….இவன கண்ட்ரோல் பண்ணு…..” என மகியைப் பார்த்து கூற….”ஆங்….” என்றபடி அப்பொழுதுதான் கனவில் இருந்து விழித்தது போல் விழித்தாள் மகி. 

           மெதுவாக தீரனின் அருகே வந்து, “தீரா….” என அவனின் கைப்பற்றினாள் மகி. 

           அதுவரை மனோரஞ்சனின் குரலுக்கு செவி சாய்க்காத தீரன், மகியின் மென்மையான குரலுக்கு நிதானத்திற்கு வந்து, “என்ன? ” என கடுமையாக வினவினான் தீரன். 

            “போதும்….நிறுத்திக்கோ…..” என தீரனின் கை பற்றியபடியே கூறினாள் மகி. 

             “நிறுத்த சொல்லுறியா? இவனுக….உன்னைய கொல்ல வந்து இருக்கானுக டி…..உன்னைய கேவலப்படுத்த நினைச்சு இருக்கானுக….இவனுகள சும்மா விட சொல்லுறியா டி? ” என ஆக்ரோஷமாக கத்தினான் தீரன். 

             “இதுக்கு மேல அடிச்சா செத்துருவானுக….” என தீரனுக்கு இணையாக கத்தினாள் மகி. 

              “சாகட்டும்ங்கிறேன்….செத்து ஒழியட்டும்…இவனுங்கலாம் பூமிக்கு பாரமா ஏன் இருக்கனும் ?” என்றபடி ஒருவனின் வாயில் ஓங்கி ஒரு உதை விட்டான் தீரன். 

              ” அந்த தம்பி யாருனு தெரியனுமா இல்லையா? அதுக்காகவாது இவனுங்கள அடிக்கிறத நிறுத்து…..” மகி. 

              அதைக்கேட்ட தீரன், மகுடிக்கு கட்டுப்பட்ட நாகமாய் சீற்றத்துடன் மூச்சு விட்டபடி அடிப்பதை நிறுத்தி விட்டு நாற்காலியில் வந்து அமர்ந்தான் . ஐவரையும் இழுத்து வந்து ஒரு இடத்தில் போட்டு அனைவரின் கை கால்களையும் கட்டினான் மனோரஞ்சன். அப்பொழுது தூரிகையின் மயக்கத்தை தெளிவித்து விட்டு உள்ளே மெதுவாக உள்ளே நுழைந்தனர் உதியனும் தூரிகையும். 

            “மொதல்ல தண்ணிய குடிடா….” என தீரனுக்கு மனோரஞ்சன் தண்ணீர் போத்தலை நீட்ட….அமைதியாக அதை வாங்கி அருந்தினான் தீரன். 

              அதைப்பார்த்த உதியன், “எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும் சாமி…. ” என்றான். 

             “இவ்ளோ நேரம் நீ எங்கடா போன? ” மகி. 

             “உன் அருமை தங்கச்சி மயங்கி மயங்கி சரிஞ்சா…..அதான் லேட்… இல்லனா நானும் வந்து இவனுங்கள ரெண்டு போட்டு இருப்பேன்….” உதியன். 

              “தூரி…. இப்ப நீ ஓகேயா? ” என தூரியை தன் பக்கத்தில் நிறுத்திக்கொண்டாள் மகி. 

             “உங்க நல விசாரிப்ப அப்புறம் வச்சுக்கங்க… எனக்கு இப்ப ஒரு உண்மை தெரிஞ்சு ஆகனும்…. ” உதியன். 

             “என்னடா? ” மகி. 

             “பாத்தாலே முட்டிக்கிட்டு நின்னாங்க….. துரோகினாங்க…. சட்டைய புடிச்சு சண்டைலாம் போட்டாங்க… இப்ப… மச்சான்ங்கிறாங்க…. இவுகள அடிச்சா அவுக உதைக்கிறாக…. அவுகள ஏதாவது சொன்னா இவுக துப்பாக்கிய தூக்குறாங்க….. என்ன? இல்ல என்னங்கிறேன்? ” உதியன். 

             ” என்னன்னா? ” மனோரஞ்சன்.

             “உங்க ரெண்டு பேருக்குள்ள அப்பிடி என்ன லவ்வாங்கி னு கேக்குறேன்? ” உதியன். 

              மகிக்கும் தூரிகைக்கும் அதே கேள்வி இருக்க…இருவரும் கேள்வியாக தீரனையும் மனோரஞ்சனையும் பார்த்தனர். 

              “இப்ப என்ன உங்களுக்கு தெரியனும்? ” தீரன். 

              ” இதுக்கு மேல எதுக்கு தீரா மறைக்கனும்? சொல்லிரு….” மனோரஞ்சன். 

              மகி, உதியன் மற்றும் தூரிகை மூவரும் ஆவலுடன் தீரனின் முகத்தை பார்க்க, “மனோ என்னோட பெஸ்ட் ப்ரண்ட்…” என தலையை கோதியபடி கூறினான் தீரன். 

              “ப்ரண்ட்டா? அப்ப…மகிய பொண்ணு கேட்டு வந்தது ?” உதியன். 

               ” அது…நாங்க போட்ட ட்ராமா…” மனோரஞ்சன். 

               “ட்ராமாவா? ” மகி. 

               “இவரு யாரு? துப்பாக்கி லாம் வச்சு இருக்காரு? ” உதியன். 

                ” மனோரஞ்சன்… டெபுட்டி சூப்பிரண்ட் ஆப் போலீஸ்…. ” தீரன். 

                ” டி. எஸ். பி யா? ” மகி. 

                “க்ளோஸ் ப்ரண்ட்….போலீஸ்….ட்ராமா….என்னடா நடக்குது இங்க?  மகி…..எனக்கு மயக்கமா வருதுடி…..” என தலை சுற்றி தூரிகையின் மேல் விழுந்தான் உதியன். 

                                   (காதல் தீ பரவும்…. )

                            -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.