இரவின் இருளில் மூழ்கி இருந்த அறையில் ஜன்னல் வழியே வந்த நிலவின் வெளிச்சத்தில் மெத்தையில் சாய்ந்தவாறு அன்று நடந்தவற்றை மெதுவாக மனதினுள் அசை போட்டுக்கொண்டிருந்தாள் மகி.
வலக்கையை மடக்கி தன் நெற்றியின் மீது வைத்து இடக்கை விரல்களை மடக்கி விரித்தபடி அன்று முழுவதும் தீரனின் விழி மொழிகளை மனக்கண்ணில் திரும்ப பார்த்தபடி இருந்த மகிக்கு இறுதியாக தீரனும் உதயனும் கண்களாலயே பேசிக்கொண்டது நினைவில் வர….மெத்தையில் இருந்து சட்டென்று எழுந்து அமர்ந்தாள்.
” இவனுக ரெண்டு பேரும் நம்ம கிட்ட ஏதோ பெருசா மறைக்கிறானுக போலயே….ரெண்டு களவாணிப்பயலுக மூஞ்சியே சரி இல்லையே…..எப்படி கண்டு புடிக்கிறது? ஏற்கனவே இந்த ஃபீலா மண்டையன் அன்னைக்கி பஞ்சாயத்துல நடந்ததுக்கு ஒரு காரணம் இருக்குனு பூடகமா ஏதோ சொல்லுறான்…..இதுல இது வேற… ஆஆஆ….மகி, மண்டை குடையுதே டி… இப்ப எப்பிடி கண்டுபுடிக்கிறது? யோசி டி….யோசி… ” என்றவாறு மெத்தையை விட்டு எழுந்து நின்றாள் மகி.
அப்பொழுது தான் அருகில் தூரி தூங்காமல் அவளது மெத்தையில் எழுந்து அமர்ந்து தனது ஃபோனையே உற்று பார்த்தவாறு இருப்பது மகியின் விழிகளில் விழுந்தது.
“இவ எதுக்கு இந்த நேரத்துல ஃபோன பாத்துட்டு உக்காந்துட்டு இருக்கா? ஒருவேளை இந்த உதி பய எதுவும் மெஸேஜ் அனுப்பி இருப்பானோ? இருந்தாலும் இருக்கும்… அதான் ரெண்டும் கண்ணுலயே பயங்கர லவ்ஸ் விடுதுகளே… ” என நினைத்தவாறு மகி, தூரியை பார்க்கவும் தூரி மயங்கி விழவும் சரியாக இருந்தது.
“தூரி… தூரி… என்ன ஆச்சு? “என பதறியவாறு தூரியை அள்ளி தன் மடியில் சாய்த்துக்கொண்டாள் மகி.
தூரியின் கன்னத்தில் தட்டியபடி அவளது ஃபோனை எடுத்து பார்த்த மகி, உச்சக்கட்ட கோபத்தில் ஃபோனை சுக்கு நூறாக உடைத்தெறிந்தாள்.
“நீ நாளைக்கி நைட் என் கூட தங்கலனா இந்த வீடியோவ நெட் ல போட்டுருவேன்….” என தூரிகைக்கு வீடியோவுடன் மெஸேஜ் அனுப்பி இருந்தான் குரு.
“இந்த நாய….” என பல்லை நறநறவென கடித்தப்படி தூரியை மயக்கத்தில் இருந்து தெளிவித்தாள் மகி.
மயக்கம் தெளிந்ததும், “அக்கா… அவன்… அவன்….. ” என மகியை அணைத்துக்கொண்டு அழுதாள் தூரிகை.
“எதுக்கெடுத்தாலும் இப்பிடி அழுக கூடாது னு ஏற்கனவே சொல்லி இருக்கேன் ல…. மொதல்ல அழுகுறத நிறுத்து…..நீ அழுதா வந்த பிரச்சினை தீந்துருமா என்ன? அழாத னு சொல்லுறேன் ல…. ” என மகி தூரியை லேசாக அதட்ட… கொஞ்சம் கொஞ்சமாக தன் அழுகையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாள் தூரிகை.
“முதல்ல எந்திரி… வா… வந்து இங்க உக்காரு….” என மெதுவாக தூரிகையை தூக்கி விட்டு மெத்தையில் மெதுவாக அமர வைத்தாள் மகி.
“இந்தா…. தண்ணிய குடி முதல்ல…. ” என மகி தண்ணீரை தூரியிடம் அளிக்க… கலங்கியவாறே தண்ணீரை சிறிது அருந்திவிட்டு மீண்டும் மகியிடம் கொடுத்தாள் தூரிகை.
தூரிகையின் அருகில் அமர்ந்தவாறு, “இப்ப என்ன பண்ணலாம் னு இருக்க? ” என மெதுவாக வினவினாள் மகி.
“தெரியலயே க்கா… ” தூரிகை.
“தெரியலயா? அப்ப அவன் சொன்ன மாதிரி செய்யப் போறியா நீ? ” என தூரிகையை முறைத்தாள் மகி.
“என்ன க்கா நீங்களே இப்பிடி கேக்குறீங்க? ” என கண்ணீர் சிந்தினாள் தூரிகை.
“நீ இப்பிடி அழுதுட்டு இருந்தா என்னைய வேற என்ன கேக்க சொல்லுற? அவன் லாம் ஒரு மனுஷன் னு…. அவன நினைச்சு பயந்து அழுதுட்டு இருக்க… தப்பு செஞ்சா மட்டும் தான் நாம பயப்படனும்… அதுவும் நம்ம மனசாட்சிக்கு மட்டும் தான்… வேற யாருக்கும் வேற எதுக்கும் நாம எப்பவும் பயப்படவே கூடாது…. இந்த மாதிரி சப்ப மேட்டருக்குலாம் பயந்து மயக்கம் போட்டு அழுதுட்டு இருக்க? உன்னைய நான் என்ன தான் பண்றது? ” மகி.
“என்னக்கா இவ்ளோ சாதாரணமா ஈஸியா சொல்லுற? அந்த நேரத்துல நான் பட்ட அவமானமும் அருவெறுப்பும் வலியும் வேதனையும் எனக்குத்தானக்கா தெரியும்… நீ பாதிக்கபடாதவ… ஈஸியா வாய் வார்த்தை ல சொல்லுற…. ” தூரிகை.
“ஓஓஓ…. மேடம் அப்பிடி வர்றீங்க? சரி… இப்ப நீ என்ன பண்ண போற? “மகி.
“அதான் எனக்கு தெரியல…. அவனுக்கு பயப்படாம எதிர்த்து நிக்கனும் னு மனசு சொல்லுது.. ஆனா இந்த மூளை அவன் அந்த வீடியோவ நெட் ல விட்டுட்டா என் மானம் போயிருமே னு நினைச்சு பயப்படுது…. நான் என்ன பண்றது? எனக்கு பாதுகாப்பு கொடுக்குற அப்பாவே என்னைய இப்படி அடுத்தவனுக்கு வித்து…. ச்சீ….. ” என குமுறி அழ ஆரம்பித்தாள் தூரிகை.
தூரிகை அழுவதை எதுவும் பேசாமல் அமைதியாக கை கட்டி வேடிக்கை பார்த்தாள் மகிழ்விழி. அழுது அழுது தன்னை தானே சமநிலை படுத்திக்கொண்டு கேள்வியாக மகியை நோக்கினாள் தூரிகை.
தூரிகையின் விழிகளில் தெரிந்த கேள்வியை கண்டு, “என்ன பாக்குற? ஏன் அமைதியா இருக்கேன் னு பாக்குறியா?எனக்கு ஒரு குட்டி சந்தேகம் தூரி.. மானம் னா என்ன? ” என நிதானமாக வினவினாள் மகி.
மகியின் கேள்வியை கேட்ட தூரிகை, அவளை புரியாத பார்வை பார்த்தாள்.
“இப்ப எதுக்கு இந்த கேள்விய கேக்குறேன் னு பாக்குறியா? அது ஆனா ஊனா மானம் போயிரும் மானம் போயிரும் னு சொல்லுறீங்க? அது என்ன பொருளா? அது உணர்வு மா…. உணர்வு எப்பிடி இல்லாம போகும் ? உன்னோட மானம் உன் உணர்வோட கலந்தது…. அத எப்பிடி அடுத்தவனால அழிக்க முடியும்? லுக்… அந்த ஜந்துவலாம் அப்பா னு சொல்லி அப்பா ங்கிற உறவுக்கு உள்ள மரியாதைய கெடுக்காத… உனக்கு அப்பா அம்மா அக்கா னு குடும்பம் இருக்கு …நெக்ஸ்ட்….அந்த வீடியோ…அவன் வீடியோவ நெட் ல போட்டா போடட்டுமே….அதனால என்ன ஆகும்? அத நல்ல குடும்பத்துல பொறந்த எவனும் பாக்க மாட்டான்…..அப்பிடி போட நாங்க விட்டுருவோமா? நாங்கலாம் எதுக்கு இருக்கோம்? தைரியம் இருந்தா போடட்டுமே….” என நிதானமாக ஆரம்பித்து கடைசி வரியை ரௌத்திர வெறியுடன் கூறி முடித்தாள் மகி.
மகியின் ரௌத்திரத்தை கண்டு ஒரு நொடி உள்ளம் நடுங்க… அடுத்த நொடி கடலளவு தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் உணர்ந்தாள் தூரிகை.
“சரி க்கா… நான் என்ன பண்றது க்கா? ” தூரிகை.
“அத நீதான் சொல்லனும்? ” என அழகாக புன்னகைத்தாள் மகி.
“அக்கா… புரியல… ” தூரிகை.
“என்ன பண்ணனும் னு நீதான் தூரி சொல்லனும்.. நாங்க என்ன பண்ணனும் னு சொன்னா அத செய்வோம்…. ஆனா அத நீதான் சொல்லனும்… ” என உறுதியாக கூறினாள் மகி.
“ஏன்க்கா? எனக்கு என்ன தெரியும்? “தூரிகை.
“உனக்கு தான் தூரி தெரியனும்…. எல்லாரும் எல்லா நேரமும் உன் கூட இருக்க மாட்டாங்க…. எல்லாத்தையும் நீ ஒருத்தியா தான் ஃபேஸ் பண்ணனும்… இது உன்னோட பிரச்சனை தூரி…. தைரியமா ஒரு அடி முன்னாடி வா…. உனக்கு முன்னாடி உள்ள பிரச்சனை சிதற ஆரம்பிக்கும்…. நீ இன்னொரு அடிய கலங்காம முன்னாடி எடுத்து வச்சா…. பிரச்சனை எல்லாம் தூள் தூளா சிதறி போகும்….. ” மகி.
“நான் ஏதாவது பண்ணி அது தப்பா… இன்னும் பெரிய பிரச்சனை ஆகிருச்சுனா? ” தூரிகை.
“தப்பு சரி ங்கிறது அடுத்த விசயம்…. இந்த மாதிரி ஓநாய்க்கு எதிரா துணிச்சலா ஒரு பார்வை பாக்குறதே பெரிய வெற்றி தூரி…. இவன மாதிரி ***** பயலுக்குலாம் ஒடுங்கி உக்காந்துறக் கூடாது மா…. ஒரு பொண்ண இந்த மாதிரி அநாகரீகமா வீடியோ எடுத்து அத வச்சு மிரட்டுற அவனுக்கே இவ்ளோ தெனாவெட்டு இருக்குறப்ப ….அவன எதிர்த்து நிக்கிற நமக்கு எவ்ளோ திமிரும் தைரியமும் இருக்கனும்? ” மகி.
“அக்கா…. உன் பேச்ச கேக்குறப்ப நல்லா தான் இருக்கு…. ஆனா அத செய்ய…. ஒரு மாதிரி…. நடுக்கமா இருக்கே… ” தூரிகை.
“விடிய விடிய கதை கேட்டு சீதைக்கு ராமன் சித்தப்பனாம்…. ஷப்பா… முடியலடி மகி… இவள வழிக்கு கொண்டு வர்றதுக்குள்ள நீ கிழவி ஆகிருவ…. கமான் மகி… யூ கேன் டூ இட்…. ” என மனதினுள் நினைத்து கொண்டு, “அதான்…. அதே தான்… அந்த பயத்த உடைச்சு… அந்த நடுக்கத்த எதிர்த்து தான் நீ முதல்ல முன்னாடி வரனும்…. இந்த பயத்த உடைச்சு உன்னைய நீ ஜெயிச்சுட்ட னா குரு மாதிரி ஜந்துவலாம் ஈஸியா நசுக்கு நசுக்கு னு நசுக்கி தூக்கி தூர போட்டுறலாம்…. ” என்றாள் மகி.
மகி பேசுவதை கேட்ட தூரிகை ,சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு பிறகு கண் மூடி ஆழ மூச்செடுத்துக்கொண்டு கண்ணை திறந்து தன் தமக்கையை பார்த்தாள் .
தூரிகையை கண் சிமிட்டாமல் பார்த்துக்கொண்டிருந்த மகி, “என்ன? ” என தன் புருவத்தை உயர்த்தினாள்.
“சரி க்கா….. நீங்க என்ன பண்ணனும் னு காலையில சொல்லுறேன்… ” என திடமாக கூறினாள் தூரிகை.
“இந்த வீடியோ…. ?” மகி.
“போட்டா போடட்டும்…..அதனால என்ன நடந்தாலும் நான் ஃபேஸ் பண்றேன்…. ” என மகியின் விழிகளை நேருக்கு நேராக சந்தித்து கூறினாள் தூரிகை.
“இப்ப தான் டி நீ என் தங்கச்சி….உம்ம்ம்மா… ஆனா அவன போட நான் விட மாட்டேன் தூரி… இட்ஸ் மை பிராமிஸ்…. ” என தூரிகையை கட்டியணைத்தாள் மகி.
அதைக்கேட்டு லேசாக புன்னகைத்தாள் தூரிகை. “சரி… தூங்கு நேரம் ஆகிருச்சு…. காலையில பல வேலை இருக்கு… ” என தூரியை அவளது மெத்தையில் படுக்க வைத்து அவளுக்கு போர்வையை போர்த்தி விட்டு தனது ஃபோனை எடுத்து தீரனுக்கு அழைப்பு விடுத்தாள் மகி.
அதைப்பாரத்த தூரிகை, “யாருக்கு க்கா இந்த நேரத்துல ஃபோன் பண்ணுற? ” என்றாள்.
“ம்ம்… உன் மாமனுக்குத்தான்… வீணா போனவன்… ஃபோன எடுக்க மாட்டேன் ங்குறான்… ” மகி.
தீரன் அழைப்பை எடுக்காததில் கோபமடைந்த மகி, உதியனுக்கு அழைப்பு விடுத்தாள்.
“இந்த உதி பயலும் ஃபோன எடுக்க மாட்டேன் ங்குறானே…. ரெண்டு எருமையும் நல்லா தூங்குது போல…. இவனுங்கள….” என கோபத்துடன் தன் காலை தரையில் உதைத்தாள் மகி.
“விடுக்கா…. நீ வந்து தூங்கு…. எதுவா இருந்தாலும் காலையில பாத்துக்கலாம்… நானே தைரியமா தெளிவா இருக்கேன்…. நீ ஏன் இப்ப இவ்ளோ டென்ஷனா இருக்க? ” தூரிகை.
“அதான? அந்த குரு லாம் ஒரு ஆளு னு…. நான் இப்பிடி டென்ஷன் ஆகுற அளவுக்குலாம் அவன் வொர்த் இல்ல… ” என்றபடி படுத்தாள் மகி.
“ரெண்டு திருட்டு எருமைகளும் நல்லா தின்னுட்டு தூங்குதுக போல…. இவனுகளுக்கு மொதல்ல மந்திருச்சு விடனும்…. நாளைக்கி முத வேலையா இந்த ரெண்டு வருஷத்துல என்ன நடந்துச்சுனு அந்த ஃபீலா மண்டையன் கிட்ட கேக்கனும்…. டேய் குரு…. நாளைக்கி தான்டா உனக்கு கடைசி நாளு…. ” என நினைத்தவாறு கண்களை மூடினாள் மகி.
அதே நேரத்தில் மகி திட்டிய மூவரும் ஒரே இடத்தில் வெவ்வேறு நிலையில் இருந்தனர்.
ஆர்பரிக்கும் சினத்துடன் குருவின் கைகளை அவன் முதுகுக்கு பின்னே இறுக்கி பிடித்தபடி உதியன் நின்றிருக்க… கடைவாயில் குருதி ஒழுக அரை மயக்க நிலையில் குரு இருக்க….. அடங்கா பசி கொண்ட சிங்கம் வேட்டையாடும் வெறியுடன் குருவிற்கு எமனாக….அவன் முன்னே நின்றிருந்தான் தீரன் எனும் அனழேந்தி தீரன்…..
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.