முகம் முழுக்க அந்திவான சிவப்புடன் சிறிது யோசனையுடன் உள்ளே நுழைந்த மகியை சிரிப்புடன் கூடிய ஆராய்ச்சி பார்வை பார்த்தாள் தூரிகை.
“என்ன க்கா யோசனை பலமா இருக்கு? ” தூரிகை.
“யார் அவன்? ” என விழிகளில் தீவிரத்துடன் கேட்டாள் மகி.
எதுவும் கூறாமல் அமைதியாக தலை குனிந்தாள் தூரிகை. மேலும் பேச மகி வாய் திறந்த நொடி இந்திரனும் பல்லவியும் கோவிலுக்கு சென்று வீட்டிற்குள் வருவதை கண்டு எதுவும் பேசாமல் வாயை மூடிக் கொண்டாள்.
“இன்னும் குளிக்காம என்ன பண்ணிட்டு இருக்க மகி? ” என பல்லவி அதட்டியபிறகு தான் இன்னும் குளிக்கவே இல்லை என உறைத்தது.
“அய்யோ…. இப்பிடியேவா அவன் முன்னாடி… ” என மானசீகமாக தலையில் அடித்துக் கொண்டு பல்லவிக்கு பதில் கூறாமல் குளிக்க சென்றாள் மகி.
அமைதியாக செல்லும் மகளை கண்ட இந்திரன், ” இப்ப எதுக்கு அவள அதட்டுற? அவளே இப்பதான் பழைய விசயத்துல இருந்து கொஞ்சம் வெளிய வந்து இருக்கா… நீ ஏன் இப்பிடி பண்ற? “.என தன் மனைவியை அதட்டினார்.
“இது என்ன வம்பா இருக்கு? குளிக்கலயா னு தான கேட்டேன்? ” பல்லவி.
“விடுங்கப்பா…. அக்கா வேற ஒரு யோசனையில இருக்காங்க…. ” என்றவாறு இருவருக்கும் காபி கொண்டு வந்து கொடுத்தாள் தூரிகை.
“ஏன் என்ன ஆச்சு? ஆமா… நீ ஏன் அழுத மாதிரி இருக்க ?நேத்து நீ மயங்கி விழுந்துட்ட னு பல்லவி சொன்னா… என்ன ஆச்சு தூரி? உடம்பு எதுவும் சரியில்லையா? ” என அக்கறையாக வினவினார் இந்திரன்.
சட்டென முகம் மாற, “அதெல்லாம் ஒன்னுமில்லை ப்பா… ” என நைசாக சமையலறை பக்கம் நழுவினாள் தூரிகை.
“என்னங்க இது? ரெண்டு பேருமே ஏதோ ஒரு மாதிரி இருக்காங்க? ” என தன் கணவனிடம் புலம்பிவிட்டு தூரியை தொடர்ந்து சமையலறைக்குள் நுழைந்தார் பல்லவி.
பல்லவி உள்ளே வருவதை கண்ட தூரிகை, “நீங்க ஏன்மா வர்றீங்க? நாங்க ரெண்டு பேரும் வீட்ல தான இருக்கோம்… நானும் அக்காவும் சமையல பாத்துக்குறோம்… நீங்க ரெஸ்ட் எடுங்க… ” என வழக்கமான தான் கூறுவதை கூறினாள்.
“அட இதுல என்ன இருக்கு? ” என பல்லவியும் வழக்கம் போல கூறிவிட்டு சமையலை தொடர்ந்தார்.
சிறிது நேரத்தில் குளித்து விட்டு சமையலறை பக்கம் எட்டிப் பார்த்த மகி, “தூரி…. பசிக்குது… என்ன டிபன்? ” என்றாள்.
“வாங்க மகாராணி…. அவ ஒத்த ஆளா எல்லாத்தையும் பாக்குறா… நீங்க இப்பதான் ஆடி அசைஞ்சு வர்றீங்களோ? ” என தன் மகளை முறைத்தார் பல்லவி.
“இப்ப என்ன பண்ணனும்ங்கிற? உனக்கு உன் சின்ன மக தான் நல்லவ… நான் பொறுப்பில்லாதவ தான்… போதுமா? நீ தோசைய குடு தூரி… ” என பல்லவியின் முகத்தை பார்க்காமல் தோசையை வாங்கி கொண்டு அங்கிருந்து நழுவ பார்த்தாள் மகி.
“ஏய்… நில்லுடி…. ரெண்டு பேரும் என் கிட்ட என்ன மறைக்கிறீங்க? ” பல்லவி.
“நாங்க என்ன மறைக்கிறோம்? இல்லாத மூளைய கசக்கி ஓவரா யோசிக்காத பல்லவி…. ” என தட்டில் தோசையை நிரப்பியவாறு நகர்ந்தாள் மகி.
“என்னங்க… நீங்களே என்னனு கேளுங்க… நாம வெளில போனப்ப என்னமோ நடந்து இருக்கு… ” என பல்லவி இந்திரனிடம் முறையிட்டார்.
“என்ன பவி உனக்கு இப்ப? புள்ளைங்கள அதுக இஷ்ட்டத்துக்கு இருக்க விடேன்…. ” இந்திரன்.
“எனக்கு என்னவா? ஒருத்தி என்னடானா வழக்கத்துக்கு மாறா வாய்க்கு வாய் அடிக்கிறா… இன்னொருத்தி என்னடானா பேசவே மாட்டேன்ங்குறா…. என்ன ஆச்சு னு இப்ப சொல்ல போறீங்களா இல்லையா? ” பல்லவி.
அப்பொழுதுதான் இந்திரனும் அந்த வித்தியாசத்தை உணர்ந்தார். ஊரில் இருந்து வந்ததில் இருந்து மகி பேசுவது குறைந்து இருந்தது. தூரிகை சரளமாக பேச ஆரம்பித்து இருந்தாள். ஆனால் இன்று அனைத்தும் தலைகீழ்.
தன் தாய் கூறிய உடன் தான் மகியும் தனக்குள் நிகழ்ந்த மாற்றத்தை ஆராய்ந்தாள். “அவன் வந்ததும் என் மனசு பழைய மாதிரி ஆகிருச்சே… அப்ப அவனால தான் நான் இயல்பா இருக்க முடியுமா? என்ன இது… நான் ஏன் இப்படி ஆகுறேன்…. ” என சுய ஆராய்ச்சியில் ஈடுபட்டு இருந்த மகியை தூரிகையின் மெல்லிய குரல் கலைத்தது.
“அக்கா… நீயே சொல்லு… ” என மகியின் அருகில் வந்து தோளை தொட்டாள் தூரிகை.
“அய்யோ… இவ வேற… இப்ப நான் எப்பிடி சொல்லுறது? ” என உதடு கடித்து யோசனையுடன் பல்லவியையும் இந்திரனையும் பார்த்தாள் மகிழ்விழி.
தன் மகளின் இந்த புது வித தயக்கத்தை ஆர்வமுடன் பார்த்தவாறு இருந்தனர் இந்திரனும் பல்லவியும்.
“அது…. அப்பா…. அவங்க வீட்டுக்கு வந்தாங்க… ” என மெல்லிய குரலில் கூறினாள் மகி.
தனது தமக்கையின் குரலிலேயே அவளின் உள்ளத்தை அறிந்த தூரிகை, தனது பயத்தை மறந்து குறும்புடன், “எவங்க க்கா? ” என்றாள்.
“ஏன் உனக்கு தெரியாதா? நீயும் தான கூட இருந்த? ” என தூரிகையிடம் பாய்ந்தாள் மகி.
மகியின் முகத்திலும் தயக்கத்திலும் எதையோ கண்டுணர்ந்த பல்லவி, “யாரு? மனோ தம்பியா ?” என்றார்.
“அது யாரு மனோ தம்பி? ” என புரியாத பார்வை பார்த்தாள் மகிழ்விழி.
“என்னடி தெரியாத மாதிரி கேக்குற? அன்னைக்கி கூட காலேஜ் ல உன்னைய பாத்தாரே? ” பல்லவி.
“ஓஓ… மனோரஞ்சனா? அவர் எதுக்கு இங்க வரனும்? ” என சிறிது சினத்துடன் கேட்டாள் மகி.
“அப்புறம் யாரு தான் வந்தது? ” என தன் சந்தேகத்தை உறுதிபடுத்திக்கொள்ள அழுத்தமாக வினவினார் இந்திரன்.
“தீரன் தான்… ” என இதழுக்குள் சென்று விட்ட குரலில் கூறினாள் மகி.
தன் மகளின் வாயில் இருந்து வந்த பெயரில் அப்பட்டமாக அதிர்ந்த பல்லவி ,திரும்பி தன் கணவனை நோக்கினார். இந்திரனின் முகத்தில் அதிர்ச்சி இருந்தாலும் ,”இது நான் எதிர்பார்த்தது தான்… ” என்ற செய்தி அவர் முகத்தில் அதிகமாக தெரிந்தது.
“எதுக்கு இங்க வந்தானாம்? இன்னும் ஏதாவது பழிவாங்கனுமா என்ன? ” என ஆத்திரத்துடன் வினவினார் பல்லவி
“அம்மா…. ப்ளீஸ்… ” என மகியும் தூரிகையும் இணைந்து ஒன்றாக குரல் கொடுத்தனர்.
” இப்ப நான் என்ன தப்பா சொல்லிட்டேன் னு ரெண்டு பேரும் இப்பிடி ஒன்னா அவனுக்கு வக்காலத்து வாங்குறீங்க? ” பல்லவி.
“விசயம் என்ன னு தெரியாம நீ பாட்டுக்கும் வார்த்தைய விடுற? ” என தன்னவனை தாய் திட்டியது பொறுக்காமல் தன்னை அறியாமலே தீரனுக்கு ஆதரவாக பேசினாள் மகி.
“அப்ப நடந்த எல்லாத்தையும் மறந்துட்டியா மகி? ” பல்லவி.
“இங்க பாரு ம்மா…. ஒரு விஷயத்தை நல்லா ஞாபகம் வச்சுக்கோ… அன்னைக்கி நடந்த சம்பவத்துல முழுசா பாதிக்கப்பட்டது நான்… எனக்கு அவன என்ன செய்யனும் னு தெரியும்… நீ நினைக்கிற மாதிரி அவன் ஒன்னும் எனக்காக வரல… தூரிக்காக வந்து இருக்கான்… ” மகி.
அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த இந்திரன், “அவர் எதுக்காக நம்ம பொண்ண தேடி வரனும்? ” என்றார்.
“எனக்கு தலையும் புரியல வாலும் புரியல…. இங்க பாரு ஒன்ன மட்டும் அவங்க கிட்ட தெளிவா சொல்லிரு…. நீ எங்க மூத்த பொண்ணுனா…. தூரி என் ரெண்டாவது பொண்ணு…. அவ விசயத்துல முடிவு எடுக்குற உரிமை எங்களுக்குத்தான்… எங்களுக்கு மட்டும் தான்…. அதே போல அவங்க என் மூத்த பொண்ணுக்கு பண்ணுன துரோகத்த என்னைக்கும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாது…. ” பல்லவி.
பல்லவி கூறியதை கேட்ட தூரிகை, உணர்ச்சி வேகத்தில் “ம்மா…. ” என ஆசையாக ஓடி வந்து அணைத்துக்கொண்டாள்.
“ச்சீ… அசடு… அழாதடி… ” என தூரிகையின் கண்ணீரை துடைத்து தன் நெஞ்சோடு பத்ரமாக அணைத்துக்கொண்டார் பல்லவி.
“கருமம்… கருமம்… இதெல்லாம் பாக்கனும் னு என் தலை எழுத்து… ” என நெகிழ்வுடன் தலையில் அடித்துக் கொண்டு சிரித்தாள் மகி.
“விடுடா…. உனக்கு அப்பா இருக்கேன்… ” என சிரித்தார் இந்திரன்.
“அப்பா னா அப்பா தான்… வெவ்வெவ்வ…. “என தன் தாயை பார்த்து ஒழுங்கு காட்டினாள் மகி.
அவர்களின் அந்த விளையாட்டுத்தனத்தில் தனது சுயபச்சாதாபத்தில் இருந்து வெளிவந்த தூரிகை தெளிவுடன் புன்னகை புரிந்தாள்.
“சரி… சரி… பேச்ச மாத்தாத…. அந்த பையன் எதுக்கு தூரிய தேடி வந்தாங்களாம்? ” பல்லவி.
தன் தாய் கேட்ட கேள்வியில் சற்று தயங்கிய மகி, பின்னர் கடகடவென்று காலையில் தீரன் வந்ததில் இருந்து தான் அவனிடம் இறுதியில் மயங்கி நின்றதை தவிர்த்து மற்ற அனைத்தையும் கூறினாள்.
“சரி…. திரும்ப பேச வர்றப்ப மொத்தமா பேசிக்கலாம்… இப்ப பேசி நேரத்தை வீணாக்க வேண்டாம்…. வாங்க எல்லாரும் சாப்பிடுங்க…. ” பல்லவி.
“ஆமா ஆமா…. பசிக்குது… மொத்தல்ல வயித்து பாட்ட கவனிப்போம்….” என கூறி கொண்டே தட்டை எடுத்து சாப்பிட ஆரம்பித்தாள் மகி. தன்னவன் தன்னிடம் வந்த மகிழ்ச்சி மகியை பழையபடி மாற்றியிருந்தது. ஆனால் அதை அவள் உணராமல் அந்த இனிமையான உணர்வு அளித்த மாய வலையில் சிக்கி இருந்தாள் மகி.
மகியின் மாற்றத்தை தெள்ள தெளிவாக இந்திரன் அறிந்து கொண்டார். உடனே தீரனிடம் பேசிவிட எண்ணி, “மகி… இன்னக்கி உங்களுக்கு லீவ் தான? தூரிய கூட்டிட்டு வெளில போய்ட்டு வாங்களேன்… அவளுக்கும் ஒரு மாறுதலா இருக்கும்… ” என சாப்பிட்டுக்கொண்டே மெதுவாக ஆரம்பித்தார் .
சட்டென திரும்பி தூரியின் முகத்தை பார்த்த மகி, “அதுவும் சரிதான்…. அப்பிடியே அந்த உதி தடியனையும் பாத்துட்டு வரனும்… தூரி… சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பு…நாம ஊரு சுத்த போகலாம்… ” என்றாள்.
“மதிய சாப்பாட்டுக்கு உதியனையும் அழைச்சுட்டு வா… ” என பொறுப்பான தாயாக கூறினார் பல்லவி.
உதியனின் பெயரை எடுத்தவுடன் நேற்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டது நினைவிற்கு வர… மெல்ல முகம் சிவந்தாள் தூரி. கூடவே தனக்கு நடந்த கொடுமை நினைவிற்கு வந்து தன்னிலை உணர்த்த… உடனே முகம் கலங்கினாள் தூரிகை.
தூரிகையின் முக பாவனைகளை கவனித்துக்கொண்டிருந்த மகி, ஒரு முடிவுக்கு வந்து “தூரி… சீக்கிரம் கிளம்பு…. ” என அவசரமாக தூரியை கிளப்பி அவளை வெளியே அழைத்துச்சென்றாள் மகி.
வீட்டை விட்டு வெளியே வருகையில் எதார்த்தமாக மகி எதிர்புறம் பார்க்க…. அங்கு ஒருவன் தன் முட்டைக்கண்ணால் தங்களை நோட்டமிடுவதை கண்டுகொண்டாள் மகி.
“பொறுக்கி… முன்ன பின்ன பொண்ணுங்கள பாக்காத மாதிரி பாக்க வேண்டியது… ஆனா இவன நாம எங்கேயோ பாத்து இருக்கோமே… ” என யோசித்தவாறு தூரியுடன் ஆட்டோவில் ஏறி பிரபல ஷாப்பிங் மாலிற்கு சென்றாள் மகி.
ஏற்கனவே உதியனை அங்கு வர சொல்லி இருந்ததால் உதியன் அவர்களுக்கு முன்னாடியே வந்து அவர்களுக்காக காத்திருந்தான்.
ஆட்டோவில் இருந்து இறங்கியதும் வாயிலில் தங்களுக்காக காத்திருந்த உதியனை கண்ட மகி, “வாங்க ஸார்…. எனக்குத் தெரியாம நிறைய வேலை பாத்து இருக்கீங்க போல…. ” என விழிகளை உருட்டினாள்.
“ஆமா ஆமா… மேடம் கூட பள பள னு மின்னுறீங்க…. எல்லாம் காலையில வந்த ஆளோட மகிமையா ?” என பதிலுக்கு வினவினான் உதியன்.
“தீரன் வந்தது இவனுக்கு எப்பிடி தெரியும்? ” என அதிர்ந்து தூரியிடம் திரும்பி, “நீ சொன்னியா? ” என்ற கேள்வியுடன் மகி அவளை பார்க்க… “நான் எதுவும் சொல்ல ல… ” என்ற விதத்தில் அவசர அவசரமாக தலையாட்டினாள் தூரிகை.
அதில் குழம்பிய மகி, “யார சொல்லுற? ” என்றாள்.
” அதான் ரெண்டரை வருஷமா வராதவரு காலையில உங்க வீட்டுக்கு வந்தாரே… அவர பத்தி தான் சொல்லுறேன்… ” என அசராமல் பதிலளித்தபடி உள் நோக்கி நடந்தான் உதியன்.
“எதேய்…. உனக்கு எப்பிடி டா தெரியும்? ” என தூரியை ஒரு கையால் இழுத்தவாறு அவன் பின்னே ஓடினாள் மகி.
“அனைத்தும் யாம் அறிவோம் பக்தையே….” என அங்கிருந்த ஒரு ஃபுட் கோர்டில் நுழைந்து அமர்ந்து அருள்பாலிப்பது போல் கைகளை உயர்த்தினான் உதியன்.
“அடேய்…. சாவடி வாங்க போற…. ஒழுங்கா என்ன னு சொல்லு… ” என மிரட்டியபடி அவன் எதிரே அமர்ந்தாள் மகி. அவளருகே நன்றாக வேடிக்கை பார்த்தபடி அமர்ந்தாள் தூரிகை.
“அவங்களுக்கு உங்க வீட்டு அட்ரஸ் குடுத்ததே நான் தான…..” என அசராமல் மகியின் தலையில் கல்லை தூக்கிப் போட்டான் உதியன்.
“என்னடா சொல்லுற? ” என மகி அதிர்ந்து விழிக்க….உதியனை தீயாய் முறைத்துக்கொண்டிருந்தாள் தூரிகை.
“ஹேய்… இப்ப எதுக்கு ரெண்டு பேரும் இவ்ளோ டென்ஷன் ஆகிறீங்க? ” உதியன்.
“எனக்குத் தெரியாம என்னடா நடக்குது? ஆளாளுக்கு மறைமுகமா என்னென்னமோ பண்றீங்க? “மகி.
“சரி….இரு…இன்னொரு முக்கியமான ஆளயும் கூப்பிட்டுர்றேன்…அவங்களும் வரட்டும்…அவங்க வந்து உன் சந்தேகத்த தீர்த்து வைப்பாங்க …..” என நமட்டு சிரிப்புடன் கூறி விட்டு தன் ஃபோனை எடுத்து யாருக்கோ மெஸேஜ் செய்தான் உதியன்.
“வந்துட்டே இருக்காராம்….” என உதியன் கூறிய ஐந்தாவது நிமிடம் ஆளுமையான கம்பீர நடையுடன் அவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான் தீரன்.
“இப்ப இவன எதுக்குடா இங்க வர சொன்ன? ” என உதியனின் காதை கடித்தாலும் மனதிற்குள் தன்னவனை ரசிக்கத் தவறவில்லை மகி.
“என்ன சொல்லுறாடா உன் ப்ரண்ட்? “என்றபடி உதியனின் அருகில் அமர்த்தலாக அமர்ந்தான் தீரன்.
” ஏதாவது சாப்பிட்டுட்டே பேசலாமா? ” என தூரியை பார்த்தவாறு கூறினான் உதியன்.
“அதுவும் சரிதான்…..என்னென்ன வேணும் னு சொல்லுங்க… ” தீரன்.
“இத்தனை வருஷமா வராதவங்க வந்து இருக்காங்க… வந்த விருந்தாளிய நாம தான கவனிக்கனும்… முதல்ல அவங்களுக்கு என்ன வேணும் னு கேளு உதி…” என குத்தலுடன் மறுமொழி அளித்தாள் மகி.
அதில் சிறிது முகம் வாடினாலும் சட்டென தெளிந்து, “உங்க விருப்பம்.. ” என சாதாரணமாக புன்னகை புரிந்தான் தீரன்.
உதியன் அனைவருக்கும் மொத்தமாக ஐஸ் கிரீம் ஆர்டர் செய்ய… அதை சுவைக்கும் மகியின் இதழ்களையே பார்வையால் ஆசையுடன் வருடினான் தீரன். அதை உணர்ந்து முகம் சிவந்த மகி, சுற்றும் முற்றும் பார்ப்பது போல் தன் முகத்தை மற்றவருக்கு காட்டாமல் மறைத்துக்கொண்டாள்.
சரியாக மகியின் பார்வையில் மீண்டும் அவன விழ… “இவன தான நாம வீட்டு பக்கத்துலயும் பாத்தோம்… இப்ப இங்கயும் வந்து நம்மள பாத்துட்டே இருக்கான்… ” என ஆராய்ந்தவாறு, “டேய் உதி… யார்ரா அவன்? வீட்ல இருந்து நான் கிளம்புறப்பவும் அவன பாத்தேன்… இப்ப இங்கேயும் நம்மள பாத்துட்டு இருக்கான்… ஆனா இவன நான் எங்கேயோ பாத்து இருக்கேன்…. உனக்கு தெரியுதா னு பாரு… ” என்றாள்.
மகி காட்டிய திசையில் மற்ற மூவரும் பார்க்க… அங்கிருந்தவனை கண்ட தூரி, பயத்தில் முகம் வெளிறி ஐஸ்கிரீமை தவற விட்டாள்.
அதைப்பார்த்த மகி, “தூரி… அன்னைக்கும் நீ இவன பாத்து தான் பயந்தியா? யார் இவன்? ” என்றபடி உதியனை பார்க்க… அவன் முகம் கற்பாறையென இறுகி இருந்தது. உதியனை கண்டு திகைத்தபடி தீரனை நோக்க… தீரன், தகிக்கும் சூரியனாய் அனலாய்… பெயருக்கேற்றவாறு அனழேந்தி தீரனாக காட்சியளித்தான்.
ஒன்றும் புரியாமல் மூவரின் முகத்தையும் திரும்பி திரும்பி பார்க்க, அவளை கண்ட உதியன், “உனக்கு இவன ஞாபகம் இல்லையா? ” என்றான்.
“அப்ப நமக்கும் இவன தெரியுமா? ” என தன் நினைவடுக்கில் அம்முகத்தை தேடி விடையை கண்டறிந்த மகி, “அவனா? ” என அதிர்வுடன் வினவினாள்.
“ஆமா…” என இறுகிப்போனக்குரலில் கூறினான் உதியன்.
அதைக்கேட்ட மகி, இதழ்களில் இளநகையை தவழ விட்டாள். அவளின் சிரிப்பை மற்ற மூவரும் ஆச்சரியமாக பார்க்க…..” என்ன பாக்குறீங்க? இதுக்குத்தான் இந்த ஸார் இங்க வந்து இருக்காங்களா? ” என நக்கலாக தீரனைப் பார்த்து வினவினாள் மகி.
மூவரும் அமைதியாக அவளையே பார்த்திருக்க…” என் தங்கச்சி மேல கைய வச்சுட்டு தைரியமா என் முன்னாடி நடுமாடுறான் ல அவன்…அன்னைக்கே அவன நல்லா கவனிச்சு இருக்கனும்….விட்டாச்சு….தூரியோட அக்காவ பத்தி அவனுக்கு இன்னும் தெரியல…தெரிய வச்சுருவோம்…..” எனக் கூறியபடி திரும்ப அவனை தன் தீப்பார்வையால் சுட்டெரித்தாள் மகி.
மகியின் பார்வையை தாங்க முடியாமல் சட்டென அங்கிருந்து கிளம்பினான் அவன். அவன் அங்கிருந்து புறப்படுவதை கண்ட மகி, “டேய்…..குரு…உனக்கு எமன் நான் தான்டா…பொண்ணுங்க மேல கைவைக்கிற…கைவைக்க நினைக்கிற ஒவ்வொரு ஆம்பளைக்கும் நீ ஒரு பாடமா இருப்படா…..” என மனதினுள் சங்கல்பம் செய்து கொண்டாள்.
குரு யாருனு நினைவு இருக்கா தங்கம்ஸ்?
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.