காதல் தீ -36

Chellammal Bharathi | 23 Dec 2025 | Share

             ” செம குளு குளு னு இருக்கு ல க்கா… ” தூரிகை. 

             “ம்ம்… ஆமா…. சூப்பரா இருக்கு…. ” மகி. 

             “ஓசி ல வாங்கித் தின்னா அப்பிடித்தான் இருக்கும்…. ” உதி. 

             “போடா வெளக்கெண்ணை… ” மகி. 

             “ஸ்ஸ் ஆஆ… என்ன டேஸ்ட்… என்ன டேஸ்ட்… ” என உதியனை மிரட்டி வாங்கிய ஐஸ் கிரீமை தூரிகை சுவைத்தபடி உதியனை வெறுப்பேற்றிக்கொண்டு கல்லூரியை விட்டு பேருந்திற்காக வெளியே வந்தபடி இருந்தனர் மூவரும். 

             “அச்சோ…. ” என சற்று உரக்க கத்தினாள் மகி. 

              மகி கத்திய கத்தலில் மற்ற இருவரும் சற்று பயந்து, “என்ன… என்ன ஆச்சு? ” என பதறினர். 

             “ஐஸ் கிரீம் காலி ஆகிருச்சே…. ” என சோக கீதம் வாசித்தாள் மகி. 

            “எனக்கும் தான்க்கா… ” என மகிக்கு இணையாக சோக கீதம் வாசித்தாள் தூரிகை. 

            “பைத்தியங்க… ” என அவ்விருவரையும் பார்த்து தலையில் அடித்தபடி தனது ஐஸ் கிரீமை நிதானமாக சாப்பிட்டபடி நடந்தான் உதியன். 

             ” தூரி… இங்க வா…. ” என தன் தங்கையை அழைத்து ரகசியமாக அவளின் காதில் ஏதோ கூறினாள் மகி. அதை பவ்வியமாக கேட்ட தூரி, “சரி க்கா… சரி க்கா… ” என தலையாட்டினாள். 

            இருவரின் செய்கையை ஓரக்கண்ணால் கவனித்த உதியன், எதையும் கண்டுகொள்ளாமல் நிதானமாக பேருந்து நிலையத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்தான். அப்பொழுது உதியனின் வலது புறம் தூரிகை வர… இடது புறம் மகி வர… உதியன் சுதாரிப்பதற்குள் தூரிகையும் மகிழ்விழியும் இணைந்து உதியனின் கையில் இருக்கும் அவனது ஐஸ் கிரீமை கண்ணிமைப்பதற்குள் தட்டி பறித்தனர். 

           “ஏய்… பிசாசுகளா…. அது என்னோட ஐஸ் கிரீம்… எச்சி.. ” என உதியன் பதற… ” பரவாயில்லை…. அதான் டேஸ்ட்டா இருக்கும்… ” என மகியும் தூரியும் ஒன்றாக ஒரே குரலில் கூறி விட்டு உதியனின் ஐஸ் கிரீமை கபளீகரம் செய்தனர். 

          “சை… இதுக கிட்ட ஒரு ஐஸ் கிரீம நிம்மதியா திங்க முடியுதா? ” என வெளியே கடுகடுத்தாலும் உள்ளே நிம்மதியாக புன்னகைத்தான் உதியன். 

           பழைய ரணங்களில் இருந்து சிறிது சிறிதாக மீண்டு வந்த இருவரையும் பார்த்து ஆனந்தமாக கண் கலங்கினான் உதியன். 

          உதியன் கண் கலங்குவதை பார்த்த மகி, “என்ன இங்க பார்வை? ஆங்? ” என தலையை ஆட்டி கொஞ்சும் மிரட்டலாக வினவினாள். 

         அந்த கொஞ்சலில் தன் தோழியை நினைத்து நிம்மதியாக உணர்ந்தாலும்…. வெளியே, “ரெண்டும் ராட்சசிக… ” என முறைத்தான் உதியன். 

           ” முறைக்காதடா… போய் இன்னொரு ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா பாப்போம்… ” என மகி உதியனிடம் கூற… “எதேய்… ” என அதிர்ந்தான் அவன். 

         “அக்கா….எனக்கும்….” தூரிகை.

         “உனக்கும் தான் தங்கம்…. அதான் நம்ம அடிமை இருக்கானே.. அடிமை இருக்க பயமேன்… ” மகி. 

         “கொய்யால…. அக்காளும் தங்கச்சிக்கும் கொழுப்பு கூடி போயிருச்சு… இரு கொழுப்ப கரைக்கிறேன்… ” என்றவாறு இருவரையும் துரத்த ஆரம்பித்தான் உதியன். 

                கல்லூரியின் வெளியே மூவரும் சிரிப்புடன் விளையாடுவதை ஒரு ஜோடிக்கண்கள் சாலையின் எதிர்புறம் இருந்து குரூரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தன. ஆபத்து தங்களை நெருங்கிவிட்டதை அறியாமல் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடியபடி இருந்தனர் மூவரும். 

            தனக்கு நேர்ந்த கோர விபத்தை மறந்து அதில் இருந்து மெது மெதுவாக வெளியில் வந்து பழைய குறும்புடன் கூடிய  துறுதுறுப்புடன் உதியன் மற்றும் மகியுடன் மகிழ்ந்து சிரித்து கொண்டிருந்த தூரிகை, உள்ளுணர்வு உந்த சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தாள். 

             திடீரென தூரிகை சுற்றும் முற்றும் பரபரப்பாக பார்ப்பதை கண்ட மகி, “என்ன தூரி? யார தேடுற? ” என்றாள்.

             “இல்ல… ஒன்னுல்ல க்கா… ” என்ற தூரிகையின் மனதில் லேசாக இனம்புரியா அச்ச உணர்வு படர்ந்தது.

            தூரிகையின் அச்ச உணர்வு அவளது கண்ணில் அப்பட்டமாக தெரிய…. அவளின் இந்த வித்தியாசமான செய்கையை அமைதியாக கவனித்த உதியன், “ஏதாவது பிரச்சனையா? ” என தீவிரமான குரலில் வினவினான். 

           “அதெல்லாம் ஒன்னும் இல்லை… அக்கா வாங்க…. வீட்டுக்கு போகலாம்…” என மகியின் கையை பிடித்த தூரிகையின் பார்வை சுற்றுப்புறத்தில் எதையோ தேடியவண்ணம் இருந்தது. 

           தூரிகையின் தடுமாற்றத்தை கண்ட மற்ற இருவரும் எதுவும் கூறாமல் தூரிகையுடன் மீண்டும் பேருந்து நிலையத்தை நோக்கி நடந்தனர். சுற்றிலும் ஆராய்ச்சி பார்வையை பதித்தபடி நடந்த தூரிகையின் விழிகளில் ஒருவன் சிக்கினான். 

              சாலையின் மறுபுறத்தில் தொலைவில் அவனை கண்டதும் தூரிகையிற்கு சர்வ நாடியும் ஒடுங்கியது. அச்சத்தில் வியர்த்து உடல் நடுக்கம் எடுக்க ஆரம்பித்தது. 

            தூரிகை தன்னை பார்ப்பதை கண்ட அவனும் விழிகளில் சிவப்பு படற… இரையை கண்ட ஓநாய் என எச்சில் ஊறிய நாவினை சுழற்றியபடி வெறியுடன் தூரிகையை பார்த்தான். 

             தொலைவில் இருந்தாலும் அவனின் அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் நடுங்கி சாலையின் நடுவே மயங்கி சரிந்தாள் தூரிகை. 

              எதையோ பார்த்து தூரிகை திடீரென மயங்கி சரியவும் அதனால் உள்ளம் அதிர்ந்தாலும் அவளை கீழே விடாமல் தன் கரங்களில் அழகாக ஏந்தி கொண்டான் உதியன். 

             ” கண்ணம்மா…. கண்ணம்மா…. என்ன ஆச்சு டா?  கண்ண தொறந்து என்னைய பாரு டா…. ” என தூரிகையை கையில் ஏந்தியபடி பதறினான் உதியன். 

               “கண்ணம்மாவா? அது யாருடா? ” என்ற அதி முக்கிய கேள்வி மனதில் எழுந்தாலும் மயங்கும் முன் தூரிகையின் பார்வை பதிந்த திசையை ஊகித்து அங்கு தன் கூரிய விழிகளை பாய்ச்சினாள் மகி. 

           தன்னை கண்டு பயத்தில் நடுங்கி மயங்கி விழுந்த தூரிகையை கண்ட அவன்,  குரூர புன்னகையை சிந்தியவாறு திருப்தியாக அங்கிருந்து நகர்ந்தான். மகி அவன் இருக்கும் திசையில் பார்க்கும் பொழுது புறப்பட்டு செல்லும் அவனின் பின்புறமே அவளுக்கு தெரிந்தது. 

           “யார் இவன்? ” என தன் நினைவடுக்கில் அவ்வுருவத்தை தேடுகையில் மகியின் மனக்கண் முன்னே தீரனே வந்து நின்றான். தன் நினைவின் தேடுதலின் முடிவில் தீரனின் உருவம் வந்ததும் அதிர்ந்து நிற்பது மகிழ்விழியின் முறையாயிற்று. 

           “தீரனா? அவன் எப்பிடி இங்க? தீரன பாத்து தூரி ஏன் மயங்கி விழனும்? ” என யோசித்தவாறு நின்ற இடத்திலேயே அசையாமல் நின்றாள் மகி. 

             உதவிக்கு வராமல் திகைத்து நின்றிருந்த மகியை கண்ட உதியன், ” கண்ணம்மா மயங்கி கிடக்குறா…. நீ என்னடி வேடிக்கை பாத்துட்டு நிக்கிற? உனக்குலாம் மனசாட்சியே இல்லையா? பொண்ணா நீ? அய்யா… என்ன ஆச்சு னு தெரியலயே…. ” என தன்னவள் மீது கொண்ட நேசத்தால் அவள் மயங்கியதும் பதட்டத்தில் தன் தோழியை கடுமையாக சாடினான். 

              உதியன் சாடியதில் சற்று சுய உணர்வு பெற்ற மகி, “இரு…தண்ணி தெளிப்போம்… ” என பொறுமையாக தூரிகையின் முகத்தில் தன்னிடம் உள்ள தண்ணீரை தெளித்தாள். 

             அதற்குள் சுற்றி உள்ள மக்கள் உதவிக்கு வர…. தூரிகையை பத்திரமாக மரத்தடிக்கு தன் கையிலேயே ஏந்தி வந்தான் உதியன். 

           தூரிகையை ஏந்தி செல்லும் உதியனை கண்ட மகிழ்விழிக்கு தீரனின் நினைவு நெஞ்சில் வலி ஏற்படுத்த கண்ணீர் சிந்தினாள். 

          சில்லென்று தண்ணீர் முகத்தில் படவும் சிறிது நேரத்தில் கண் விழித்தாள் தூரிகை. தன்னவள் கண் விழித்ததும், “திடீருனு என்ன ஆச்சு டி பேயே…. இப்பிடியா மனுஷன பாடாபடுத்துவ ? ” என தூரிகையின் மீது எரிந்து விழுந்தான் உதியன். 

             மலங்க மலங்க விழித்த தூரிகை, தான் உதியனின் கரங்களில் இருப்பதை உணர்ந்தவள் ,அவனது கரங்களிலேயே சுருண்டு உதியனின் நெஞ்சிற்குள் புதைந்து கொண்டாள். 

              அதில் இன்பமாக அதிர்ந்தாலும் தந்தையின் பாதுகாப்புடன் தன்னவளை அணைத்துக்கொண்டான் உதியன். நெஞ்சில் முகம் புதைத்து இருந்த தூரிகையின் உடல் சற்று முன் பார்த்தவனின் நினைவில் தூக்கி போட… அதை உணர்ந்த உதியன், “ஹே… ஈஸி…. அதான் நான் இருக்கேன் ல…. ஒன்னுல்ல… நீ பத்ரமா இருக்க…. ” என தூரிகையை குழந்தையாக பாவித்து ஆறுதல் அளித்தான்.

              “பயமா இருக்கு… ” என குரல் நடுங்க கூறினாள் தூரிகை. 

               ” உன் கூட நான் இருக்குறப்ப உனக்கு எதுவும் ஆக விட மாட்டேன்…. இங்க… என்னைய பாரு கண்ணம்மா… ” என தன் நெஞ்சில் இருந்த தன்னவளின் முகத்தை கைகளால் நிமிர்த்தி தன் முகத்தை காண வைத்தான் உதியன். 

               கலங்கிய கண்களுடன் உதியனை  ஏறிட்டு பார்த்த தூரிகை, உதியனின் கண்களில் ததும்பி வழிந்த தனக்கான காதலை கண்டவள் மெய் மறந்து உதியன் கூறிய அனைத்திற்கும் சம்மதமென தலையை ஆட்டினாள். 

              அவர்களை தொந்தரவு செய்யாமல் ஒரு ஆட்டோவை வரவழைத்து அதில் கைத்தாங்கலாக தூரிகையை அமர வைத்தவள் ,உதியனிடம் திரும்பி “நீ ரூம் க்கு போ…. நான் பாத்துக்கிறேன்… ” என தீரனின் நினைவால் கலங்கிய தன் கண்களை மறைத்தவாறு கூறினாள் மகி. 

              கலங்கிய கண்களுடன் தன் தோழியை கண்ட உதியன், “அம்மு… நான் திட்டுதுனால அழறியாடா? ஸாரி… ஸாரி அம்மு…. நான்…. ஏதோ ஞாபகத்துல பேசிட்டேன்…. ” என பதறினான். 

           “ஹேய்… அதெல்லாம் ஒன்னும் இல்லை… நாம அப்புறமா பேசலாம்…. அவள நான் முதல்ல வீட்டுக்கு கூட்டிட்டு போறேன்… அவள என்ன னு பாக்கனும்…. ” மகி. 

            “அதுவும் சரிதான்…. கண்ணம்மாவ பாரு… வீட்டுக்கு போய்ட்டு ஃபோன் பண்ணு… சரியா? ” உதியன். 

            “உங்க கண்ணம்மாவ நாங்க பத்ரமா பாத்துக்குறோம் ஸார்…. நீங்க கிளம்பும்புங்க….. நாளைக்கி காலேஜ் லீவ் தான? வீட்டுக்கு வந்துரு…. ” மகி. 

            “சரி சரி… ஓவரா பேசாம கிளம்புடி…. ” என விளையாட்டாக மகியிடம் பேசியவன்… தூரிகையை பார்த்து, “பத்ரம்… ” எனக்கூறிவிட்டு அவர்களை ஆட்டோவில் அனுப்பி வைத்தான் உதியன். 

             தூரிகையும் பயத்தில் இருந்து சற்று தெளிந்தவளாக உதியனை கண்டு தலையை அசைத்தவாறு மகியுடன் ஆட்டோவில் புறப்பட்டாள். 

            இருவரும் கண்ணில் இருந்து மறைந்ததும் பரபரப்பாக சாலையின் எதிர்புறத்தில் பாய்ந்தான் உதியன். 

            ஆட்டோவில் பயணித்து ஒருவழியாக மகியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் இருவரும். மகியும் தூரிகையும் ஆட்டோவில் வந்து இறங்குவதை கண்ட பல்லவி, “என்ன ரெண்டு பேரும் ஆட்டோ ல வர்றீங்க? தூரி…. உனக்கு என்ன ஆச்சு? உன் முகம் ஏன் இப்படி இருக்கு? ” என வரிசையாக கேள்விகளை அடுக்கினார். 

            “ம்மா…. ம்மா…. கொஞ்சம் மூச்சு விடேன்….. எங்கள உள்ள வர விடு முதல்ல… ” என பல்லவியை விலக்கியவாறு மெதுவாக தூரிகையை உள்ளே அழைத்து சென்று அமர வைத்தாள் மகி. 

           தூரிகையின் வெளுத்த முகத்தை பார்த்த பல்லவி, உள்ளே ஓடிச்சென்று பழச்சாறு எடுத்து வந்து தூரிகைக்கு குடுத்தார். 

          “உடம்பு சரியில்லையா ?” என தூரிகையின் அருகில் அமர்ந்தவாறு அவளின் தலையை கோதிவிட்டார் பல்லவி. 

           “என்ன னு தெரியல….திடீருனு மயங்கி விழுந்துட்டா….நாளைக்கி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் செக் பண்ணனும் இவளுக்கு….” மகி. 

           “ஒழுங்கா சாப்பிடனும்…” பல்லவி. 

            “நீ உடனே ஆரம்பிக்காத ம்மா….தூரி….நீ உள்ள போய் ரெஸ்ட் எடு டா….நாம நாளைக்கி ஹாஸ்பிடல் போகலாம்….” என்ற மகியின் குரலில் மறுக்க முடியாமல் பேசாமல் உள்ளே சென்றாள் தூரிகை. 

             அடுத்த நாள் கல்லூரி விடுமுறை நாள் என்பதால் விடிந்த பிறகும் ஆழ்ந்த உறக்கத்தில் ஆழ்ந்து இருந்தாள் மகிழ்விழி. அவள் அசந்து உறங்குவதை கண்ட பல்லவியும் இந்திரனும் தூரிகையிடம் கூறி விட்டு கோவிலுக்கு புறப்பட்டு சென்றனர். 

               மெதுவாக எழுந்த தூரிகை குளித்து விட்டு நிதானமாக சமையல் அறையில் நுழைந்து காபி கலக்க ஆரம்பித்தாள். 

                 சமையலறையில் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்த தூரிகையை வாயிலில் அழைப்பு மணி தொந்தரவு செய்ய, யாரென்று பார்க்க வெளியே வந்து கதவை திறந்தாள் தூரிகை. 

            வெளியே நின்றவனை கண்டு தூரிகை ,”யார் நீங்க? ” எனக் கேட்க  வாயிலில் நின்றவன்  எதற்கும் அசராமல் உரிமையாக உள்ளே நுழைந்து நடு ஹாலில் அமர்ந்தான். 

            அதைக்கண்ட தூரிகை, விறுவிறுவென மகியின் அறைக்குள் நுழைந்து, “அக்கா…. அக்கா… யாரோ வீட்டுக்கு வந்து இருக்காங்க…எந்திரிக்கா….” என மகியை அடித்து எழுப்பினாள்.

           “யாரு தூரி? அம்மா எங்க? ” என தூக்க கலக்கத்தில் மெதுவாக கண் விழித்தாள் மகி. 

            “அப்பாவும் அம்மாவும் கோயிலுக்கு போய்ட்டு வர்றேன் னு போய் இருக்காங்க… நீ முதல்ல எந்திரிச்சு வா…..” என மகியின் கை பிடித்து எழுப்பினாள் தூரிகை. 

            “இருடி வர்றேன்…..” என கலைந்திருந்த தன் உடையை சரிபடுத்தியவாறு அறையை விட்டு வெளியே ஹாலிற்கு வந்தாள் மகி. 

            நடு ஹாலில் ஷோபா வில் அமர்ந்திருந்தவனை கண்டதும், “கனவு எதுவும் காணுறமா ?” என நினைத்தவாறு கண்ணை கசக்கி விட்டு மீண்டும் பார்த்தாள் மகிழ்விழி. 

            “கண்ணை எத்தனை தடவ தேச்சுட்டு பாத்தாலும் நான் தான்… கனவில்ல…இது நிஜந்தான்  ராங்கிக்காரி… ” எனக்கூறி புன்னகைத்தான் அனழேந்தி தீரன். 

                                (காதல் தீ பரவும்….)

                              -செல்லம்மாள்பாரதி 

               

    No comments yet.