சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே..
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே..
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்..
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ…
செந்தமிழ் தேன் மொழியாள்..
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் …
பைங்கனி இதழில் பழரசம் தருவாள்
பருகிட தலை குனிவாள்…
காற்றினில் பிறந்தவளோ புதிதாய்
கற்பனை வடித்தவளோ…
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்திப் பூச்சரமோ…
அவள் செந்தமிழ் தேன் மொழியாள்..
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் …
என்ற பாடல் சத்தமாக ஒலிக்க… அந்த பாடலில் பலரின் மனதை சிக்க வைத்துக்கொண்டு சீரான வேகத்தில் நகரத்தை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தது அந்த பேருந்து.
அந்த பாடலில் தனது மனதை தொலைத்த நபரில் ஒருவனாக தீரனும் பாடலை ரசித்தபடி அந்த பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தான் தன்னவளின் இருப்பிடத்தை நோக்கி.
தீரனின் மனம் பாடல் வரிகளிலேயே நிலைக்க….தன்னாலே மகியின் மலர்ந்த முகம் கண் முன்னே வந்தது. அவனது கரங்களில் வழக்கம் போல் அந்த மஞ்சள் கயிறு.
“என்னைய வெறுத்து இருப்பியாடி? நான் அப்பிடி பண்ணுறவனா? நான் ஒரு அடி முட்டாள்…..பிரச்சனைய தள்ளி போடுறேன் னு நினைச்சு அதை முடிக்காம பெருசாக்கி வச்சுட்டேன்…..உன் கிட்ட உக்காந்து பேசி இருக்கலாம்…நீயே பிரச்சனைக்கு தீர்வு சொல்லி இருப்ப… சே… எல்லாம் காலம் கடந்த யோசனை… ” என தன் கரங்களில் வைத்திருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தவாறு மனதில் பேசிக்கொண்டிருந்தான் தீரன்.
எங்கோ பயணித்த காற்று ஜன்னல் வழியே வந்து தீரனின் தலையை அழகாக கோதி தீரனுக்கு ஆறுதல் அளித்தது. அதில் சிலிர்த்த தீரனின் மனம் லேசாக சாந்தமடைய… மெல்லிய புன்னைகையை சிந்தினான் தீரன்.
தன் கரங்களில் இருந்த மஞ்சள் கயிற்றை பார்த்தவன் மனதில் அது மகியாக உருவெடுக்க… வெட்க புன்னகையுடன் தாடையை தடவி தலையை அழுந்த கோதிக்கொண்டான் தீரன்.
காடு போல் வளர்ந்திருந்த தனது முடியையும் தாடியையும் சீராக திருத்தி தனது நேரான தோற்றம் ஜன்னல் கண்ணாடியில் தெரிய… அதை பார்த்தவன் இந்த தனது தோற்றத்தை பார்த்து அம்மா அதிர்ந்து பரவசமானது நினைவிற்கு வந்தது.
முதல் நாள் அப்பா சிதம்பரம் தனக்கு அறிவுறுத்தியதும் மகியை பார்க்க வேண்டும் என மனம் பேயாட்டம் போட… அடுத்த நாளே புறப்பட்டு இருந்தான்.
புறப்படும் முன் தனது சாமியார் வேடத்தை கலைத்து பழைய அனழேந்தி தீரனாக இரண்டரை வருடங்களாக தன் முகம் பாராது தன்னிடம் பேசாதிருந்த தனது தாயிடம் ஆசிர்வாதம் வாங்க அவரது காலில் விழுந்தான் தீரன். இதுவரை பைத்தியக்காரனாக திரிந்த தனது மகன் தற்பொழுது முகத்தில் பொலிவுடன் தன் காலில் விழுந்திருப்பவனை கண்டதும் ஒரு நொடி விக்கித்து நின்றார்.
அடுத்த நொடியே மகியின் நினைவில் மகனின் பால் இளகிய மனதை இரும்பாக்கி கொண்டு எதுவும் கூறாமல் வேறுபுறம் நகர்ந்தார் கருப்பாயி. அதை உணர்ந்த தீரன், “ம்மா… இந்த கோபம் எல்லாம் உன் மருமக வர்ற வரைக்கும் தான்… உன் மருமகள கூட்டி வந்ததுக்கு அப்புறம் என் கிட்ட வந்த உன்னைய வெளுத்துப்புடுவேன்…. ” என சிரித்தவாறு கூறி விட்டு தனது பையை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.
மகனின் கூற்றில் திகைப்படைந்த கருப்பாயி, கண் கலங்க தன் கணவனிடம் கண்களாலயே, “அப்பிடியா? ” என வினவ… சிதம்பரமும் கண்களாலயே, “ஆமா… ” என முகம் கொள்ளா பூரிப்புடன் பதிலளித்தார்.
தனது தாய் தந்தையரின் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை மனதில் நிறைத்துக்கொண்டு மன உற்சாகத்துடன் தன்னவளின் இருப்பிடத்தை நோக்கி பேருந்தில் ஏறி பயணப்பட்டான் தீரன்.
அந்த நினைவில் மனம் உல்லாசமாக கூக்குரலிட…., “என்னைய நீ செருப்பால அடிச்சாலும் பரவாயில்லை ராங்கிக்காரி… நீ எனக்குத்தான்…..அத்தோட நம்ம ரெண்டு பேரும் சேந்தா தான் அந்த பெரிய பிரச்சனைய முடிக்க முடியும்… நான் வந்துட்டே இருக்கேன்டி…. நீ இப்ப என்ன பண்ணிட்டு இருக்க? ” என தன்னவளின் யோசனையில் இருக்கையின் ஓரத்தில் கண் மூடி சாய்ந்தான் தீரன்.
தீரனின் நெஞ்சில் நிறைந்து நினைவில் கலந்தவளோ, அங்கு ஒரு அப்பாவியின் முதுகில் தபேலா வாசித்துக்கொண்டிருந்தாள் .
அந்த அப்பாவியோ சிரிப்புடன் மகியின் அத்தனை அடியையும் பொறுமையுடன் வாங்கிக்கொண்டிருந்தான். அதை கவனித்த தூரிகை பொறுக்க முடியாமல், “இவ்ளோ அடி வாங்கியும் சிரிக்கிறத பாருக்கா… இன்னும் நாலு அடி சேத்து போடுக்கா… ” என மகியின் உக்கிரத்தை அதிகமாக்கினாள்.
அதைக்கேட்ட மகியிடம் அடி வாங்கிக் கொண்டிருந்த அந்த அப்பாவியான உதியன், “என் ப்ரண்ட் என்னைய அடிக்கிறா… அத நான் சந்தோஷமா வாங்கிக்கிறேன்… உனக்கு என்னடி? ” என தூரிகையை பார்த்துக் கேட்டான்.
“திமிரு…திமிரு…வாயிலே ரெண்டு போடுக்கா… ” தூரிகை.
“ஏன்டா இப்பிடி பண்ணுன? ” என உதியனை அடித்துக்கொண்டே கேட்டாள் மகி.
“நான் என்ன பண்ணுனேன்? ” என சிரிப்பு மாறாமல் கேட்டான் உதியன்.
” நீ எதுவும் பண்ணல? நீ செய்யாம தான் அந்த மனோரஞ்சன் நேத்து வந்து என்னைய பாத்தானா? ” என அடிப்பதை நிறுத்தாமல் கேட்டாள் மகி.
“இவன் வேணும்னே தான்க்கா இப்பிடி பண்ணி இருக்கான்….. இந்தா… இந்த கல்ல தூக்கி இவன் தலையில போடு…. ” என ஒரு பெரிய கல்லை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்து மகியிடம் கொடுக்க… அதை எவ்வித மறுப்பும் சொல்லாமல் கையில் வாங்கினாள் மகி.
அதுவரை அமைதியாக சிரிப்புடன் அத்தனை அடியையும் வாங்கிக்கொண்டிருந்தவன் ,”கொலைகார பாவிகளா… ஆளை விடுங்கடி பிசாசுகளா… ” எனக் கத்திக்கொண்டு மகியின் கைகளில் இருந்து நழுவி ஓடினான் உதியன்.
கல்லூரி வளாகத்தில் அம்மூவரின் சேட்டையை பல கண்கள் ரசிப்புடனும் சில கண்கள் வியப்புடனும் பார்த்தவாறு தங்கள் வேலையை கவனித்துக்கொண்டிருந்தன. அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் தங்களின் விளையாட்டை செவ்வனே செய்து கொண்டிருந்தனர் அம்மூவரும்.
“டேய் நாயே… ஒழுங்கா நில்லுடா… ” என கத்தியவாறு உதியனை மகி துரத்த… “ஏய் குரங்கு… அக்காவ ஓட வைக்காம ஒழுங்கா நில்லு… ” என கத்தியவாறு தூரிகையும் உதியனை துரத்த… இருவர் கையிலும் சிக்காமல் தப்பித்து கல்லூரி வளாகத்தில் ஓடிக்கொண்டிருந்தான் உதியன்.
(அவங்க ஓடிப்புடிச்சு விளையாடட்டும்… நாம வாங்க மகியோட இந்த கோபத்துக்கான காரணத்த பாத்துட்டு வருவோம்…
)
நேற்று, மனோரஞ்சன் வந்து தன்னை சந்தித்து சென்றதும் தான் என்ன உணர்கிறோம் என தெரியாமலேயே அப்படியே நின்றிருந்தாள் மகி. அசையாமல் நின்றிருந்த மகியின் அருகில் வந்து உதியன் என்னவென்று விசாரிக்க.. அமைதியாக கேண்டீன் பக்கம் நகர்ந்தாள் மகி.
“யாருடி அவன்? செம ஹேண்டசமா இருக்கான்…. ” என நேரம் காலம் தெரியாமல் உதியன் வாயை விட… அடுத்த நொடி உதியனின் வாய் மீது ஒரு குத்து விழுந்தது.
“ஸ்ஆஆஆ…. எதுக்குடி இப்ப என்னைய அடிச்ச? அவன் யாரு னு தான கேட்டேன்… “உதியன்.
“என்னோட மாப்பிள்ளையாம்…. ” என எங்கோ வெறித்தபடி பதிலளித்தாள் மகி.
“மாப்பிள்ளையா? ” என புரிந்தும் புரியாதது போல் கேட்டான் உதியன்.
“எனக்கு வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க போல…. ஆனா என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம மறுபடியும் இப்பிடி ஆரம்பிக்கிறாங்க… ஒருதடவை பட்டது போதாதா? ” என்ற மகிக்கு தலை வலிப்பது போல் இருக்க… தலையை தாங்கியவாறு அமர்ந்தாள் மகி.
” ஓஓஓ… உன் கிட்ட எதுவும் கேக்கலயா? இது கல்லியாணம் பண்ணிக்கிற வயசு தான? அவன புடிச்சு இருந்தா பண்ணிக்கோ… இதுல ஃபீல் பண்ண என்ன இருக்கு? ” உதியன்.
“என்ன இருக்கா? நடந்ததெல்லாம் மறந்துட்டியா உதி? நான்… நான்…. எனக்கு….. அவன்…. ” என உணர்ச்சி வேகத்தில் பேச்சு வராமல் திணறினாள் மகி.
“ஹேய்…. ஈஸி…ஈஸி…ரிலாக்ஸ் அம்மு…. இப்ப ஏன் இவ்ளோ எமோஷனல் ஆகுற? தீரன பத்தி நினைக்கிறியா? அது ஜஸ்ட் ஒரு கயிறு…. அவ்ளோதான்…. அவனா வந்தான்… கட்டுனான்… அவனே எடுத்துட்டு போயிட்டான்…. அதுல எந்த காதலோ பாசமோ இல்ல… அன்பு இல்லாத அந்த மஞ்சள் கயிறு தாலி ஒன்னும் இல்லை… நீ அதை நினைச்சுட்டு அங்கயே ஏன் தேங்கி நிக்கிற? எனக்கு புரியல… ” உதியன்.
“அவன் காதலிக்கலனா என்ன உதி? என் மனசுல கணவனுக்கான இடத்துல அவன தான வச்சேன்… இந்த சினிமால… கதையில வர்ற மாதிரி நான் அவன் பின்னாடி சுத்தியோ… அவன் என் பின்னாடி சுத்தியோ… உருகி மானே தேனே பொன் மானே னு லாம் காதல் வரல….என் உணர்வோட கலந்து என் கண்ணீர் வழியா ல வந்து இருக்கு…. எனக்கு அது லேட்டா வேணுனா புரிஞ்சு இருக்கலாம்…. ஆனா உச்சி மண்டையில ஆணி அடிச்ச மாதிரி ரொம்ப நல்லா புரிஞ்சுருச்சு…. இப்ப அதான் என் பிரச்சனையே…. ” என கண் கலங்கினாள் மகி.
“ஏய்…. அறிவுகெட்டவளே…. அழாதடி… அப்ப தீரன தான் கல்லியாணம் பண்ணிப்பியா? ” உதியன்.
“கல்லியாணமா? அவனையா? அவன் செஞ்ச காரியம் இன்னும் என் மனசுல ரணமா இருக்கு…. ” மகி.
“அவனையும் கல்லியாணம் பண்ண கூடாது… வேற யாரையும் கல்லியாணம் பண்ண மாட்ட…. அப்புறம் என்ன தான் பண்ண போற? இப்பிடியே தனியா இருக்க போறியா? ” என கோபம் சுறுசுறுவென ஏற அதை அடக்கியபடி கேட்டான் உதியன்.
“ஆமா…. ” என தீர்க்கமாக பதிலளித்தாள் மகி.
“அப்பிடியே அறைஞ்சேனா பல்லு கழன்டுரும்…. இதெல்லாம் பேச்சு வார்த்தைக்கு வேணுனா நல்லா இருக்கும்… உன் அப்பா அம்மா வ நினைச்சு பாத்தியா? ” உதியன்.
“அவங்கள நினைச்சு பாத்ததுனால தான நான் இந்த நிலைமையில இருக்கேன்…. ” என கசந்த புன்னகையை கசிய விட்டாள் மகி.
” இதற்கு மேல் இதை பற்றி பேச வேண்டாம்… ” என எண்ணிய உதி, அத்துடன் அந்த பேச்சை விடுத்து மகிக்கு சூடாக காபி வாங்கி கொடுத்தான். மகிக்கும் அப்பொழுது உள்ள நிலையில் அது தேவையாய் இருக்க….பேசாமல் வாங்கி அருந்தினாள்.
மகி அருந்தி முடியும் வரை அமைதியாய் பார்த்துவிட்டு, “அப்பா அம்மா கிட்ட பேசுறப்ப பொறுமையா பேசு….சரியா? உன்னைய விட அவங்க தான் நொந்து போய் இருக்காங்க….” என்றான் உதியன்.
“ம்ம்… ” என வாய்க்குள் முனங்கிவிட்டு சோர்வாக வகுப்பை நோக்கி நடந்தாள் மகிழ்விழி.
அன்று கல்லூரி முடிந்து வீட்டிற்குள் நுழைந்ததும் நேரடியாக தன் தாயின் முன்னே சென்று நின்றாள் மகி.
நடந்ததது எதுவும் தெரியாத தூரிகையும் என்னவென்று தனது தமக்கையை பார்த்தாள்.
“ஏன் இப்படி பண்ணீங்க? ” என வெறுமையுடன் தன் தாயிடம் கேட்டாள் மகி.
“என்ன ஆச்சு? ” என்றபடி அவர்களிடம் வந்தார் இந்திரன் .
“யார கேட்டு எனக்கு மாப்பிள்ளை பாக்குறீங்க? ” மகி.
” என் மகளுக்கு மாப்பிள்ளை பாக்க யார கேக்கனும்? ” பல்லவி.
“என்னைய கேக்கனும்… ” மகி.
“ஏன்மா இப்பிடி மாத்தி மாத்தி பேசுற? ” என குழப்பத்துடன் கேட்டார் இந்திரன்.
“நான் எங்க மாத்தி மாத்தி பேசுறேன்? என் கிட்ட ஒரு வார்த்தை கூட கேக்காம மறுபடியும் உங்க வேலைய ஆரம்பிச்சு இருக்கீங்க… ஏற்கனவே நீங்க இப்படி பண்ணுனதுனால தான் நான் இப்பிடி இருக்கேன்…. உங்களுக்கு அறிவே கிடையாதா? ” என உணர்ச்சி வேகத்தில் தன் தந்தையை பார்த்து மகி கேட்க …அதைக்கேட்ட பல்லவி அடுத்த நொடியே தன் மகளை முதன் முறையாக கன்னத்தில் அறைந்து இருந்தார்.
பல்லவி மகியை அடித்ததை நம்ப முடியாமல் அதிர்ச்சியுடன் மற்ற மூவரும் பல்லவியை பார்க்க… “ஏய் என்னடி உங்க அப்பாவையே மரியாதை இல்லாம பேசுற… உதியன் கிட்ட மாப்பிள்ளை பாக்க சம்மதம் சொல்லிட்டு இப்ப வந்து தாம் தூம் னு குதிச்சுட்டு இருக்க? ” என கோபத்தில் வெடித்தார் பல்லவி.
“நான் எப்ப சம்மதம் சொன்னேன்? ” என மகி குழப்பத்தில் மூழ்க….,”அக்கா… இந்த உதி குரங்கு தான் ஏதோ கோல்மால் பண்ணி இருக்கு….பேசாம அமைதியா வந்துருங்க… இல்ல…அம்மா இன்னொரு அறை விட்டாலும் விட்டுருவாங்க…” என தூரிகை, மகியின் காதை கடிக்க….தங்கை சொன்னது போல் அமைதியாக அறைக்குள் நுழைந்து தாளிட்டுக்கொண்டாள் மகி.
அடுத்த நாள் கல்லூரியில் வைத்து உதியனை அடித்து துவைத்து விட்டாள் மகி. பல்லவி தன்னை அடித்த ஒரு அடியை நூறாக உதியனுக்கு திருப்பிக்கொடுத்தாள் மகி.
(இதுக்குத்தான் உதியன இப்ப வெளுத்து வாங்கிட்டு இருக்கா மகி… வாங்க நாமளும் சேந்து நாலு அடி போடலாம்… )
“டேய் அரைவேக்காடு… இப்ப நீ நிக்க போறியா இல்லையா? “என கத்தினாள் மகி.
அதற்கு மேல் ஓட முடியாமல் மூச்சு வாங்க ஓரிடத்தில் நின்றான் உதியன். நின்ற உதியனை சட்டென ஓடி வந்து கட்டிபிடித்து கொண்டு, “அக்கா… வேகமா ஓடி வா… ” என மகியை நோக்கி குரல் கொடுத்தாள் தூரிகை.
தூரிகை அணைத்ததும் தன் நிலை மறந்து அவள் கையணைப்பில் மயங்கி நின்றான் உதியன். தூரிகையின் வாசத்தால் மயங்கி நின்ற உதியனின் தலை முடியை கொத்தாக பிடித்து இழுத்து, “ஏன்டா நாயே இப்பிடி பண்ணுன? ” என உதியனின் தலையை ஆட்டியபடி கேட்டாள் மகி.
“என்னைய வேற என்ன பண்ண சொல்லுற? அப்பா அம்மா ஒரு பக்கம்… நீ ஒரு பக்கம்… என்னால உங்கள இப்பிடி பாக்க முடியல.. அதான் அப்பா அம்மா கிட்ட உனக்கு மாப்பிள்ளை பாக்க சொன்னேன்… என் ப்ரண்ட் நல்லா இருக்கனும் னு நினைக்க கூடாதா? ” உதியன்.
உதியன் அவ்வாறு சொன்னதும் அவனது தலைமுடியை விட்டவள், “இத நேத்தே என் கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே? வீணா அம்மா கிட்ட என்னைய அடிவாங்க வச்சுட்டியே… ” என்றவாறு அருகில் உள்ள மரத்தடியில் அமர்ந்தாள் மகி. அவளுடன் சேர்ந்து தூரிகையும் உதியனை முறைத்தவாறு அமர்ந்தாள்.
இவர்கள் இருவரின் முறைப்பை கண்ட உதியன், “ஹேய்.. சரி விடுங்க… பாத்துக்கலாம்… ” என்றான்.
சில நாட்களாக சிறிது சிறிதாக பழையபடி மாறிக்கொண்டிருந்த மகி, “என்னத்த பாத்துக்க போற? எனக்கு இப்ப கல்லியாணம் வேண்டாம்… நீதான் நிறுத்துற… இல்ல… உன் மூச்ச நான் நிறுத்திருவேன்… ” என உதியனை மிரட்டினாள்.
“ஆமா… அக்காக்கு புடிக்காதது எதுவும் நடக்க கூடாது…. இல்ல… அக்கா செய்ய போற நல்ல காரியத்துல நானும் பங்கெடுத்துக்க வேண்டியதா இருக்கும்… ” என மகியுடன் தூரிகையும் இணைந்து மிரட்டினாள்.
“அடி ஆத்தி… ப்ரண்டும் சரி இல்லை… பொண்டாட்டியும் சரி இல்லை….டேய் உதியா… நீ ரொம்ப பாவம் டா…. ” என தனக்குள் முனுமுனுத்துக்கொண்டான் உதியன்.
அது சரியாக கேட்காததால், “அக்கா… இந்த குரங்கு என்னமோ நம்மள திட்டுது… ” என தூரிகை மகியிடம் கூற… உதியன் முனுமுனுத்ததை தெளிவாக கேட்ட மகியோ… தன்னை மீறி எழுந்த புன்னகையை இதழுக்குள் அடக்கியபடி, “டேய்… வீணா போனவனே… ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா…. இல்ல… ” என “நீ முனுமுனுத்தத தூரிக்கிட்ட போட்டு குடுத்துருவேன்…” என தூரிகையை கண்களால் பார்த்தவாறு உதியனை மிரட்டினாள் மகி.
மகியின் கண்களில் ஒளிர்ந்த மிரட்டலை கண்டு கொண்ட உதி, “வாங்கிட்டு வாரேன்… ” என்றவாறு மூவருக்கும் ஐஸ் கிரீம் வாங்கி வந்தான்.
மகியும் தூரிகையும் தங்களது ஐஸ் கிரீமை வேகமாக உண்டுவிட்டு அடுத்து உதியின் ஐஸ் கிரீமை பறிக்க ரகசியமாக தங்களுள் திட்டமிட்டார்கள். அதை கண்டு கொண்ட உதியன் அவர்களிடம் சிக்காமல் தன்னுடைய ஐஸ் கிரீமை காப்பாற்றிகொள்ள வெளியே ஓட….அவனை துரத்தியபடி இருவரும் சிரித்துக்கொண்டே ஓடினார்கள்.
ஒருவழியாக தூரிகையும் மகிழ்விழியும் உதியனின் ஐஸ் கிரீமை அடித்து பறித்து தங்களுள் சண்டையில்லாமல் சிரிப்புடன் பங்கிட்டு சாப்பிட்டார்கள். அதை முறைப்புடன் பார்த்தான் உதியன்.
” முறைக்காதடா… போய் இன்னொரு ஐஸ் கிரீம் வாங்கிட்டு வா பாப்போம்… ” என மகி உதியனிடம் கூற… “எதேய்… ” என்றவாறு இருவரையும் துரத்த ஆரம்பித்தான் உதியன்.
கல்லூரியின் வெளியே மூவரும் சிரிப்புடன் விளையாடுவதை ஒரு ஜோடிக்கண்கள் குரூரத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது. ஆபத்து தங்களை நெருங்கிவிட்டதை அறியாமல் சந்தோஷமாக ஒருவரை ஒருவர் சீண்டி விளையாடியபடி இருந்தனர் மூவரும்.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.