தன்னால் வருவதை ஏற்றுக்கொள்..
உன் கால் பதிவுகள் அழியாது..
வான்வெளி வரை தொட்டுச் செல்
உன் பரம்பரை முடிவேது ?
விழித்தவன் தூங்கக்கூடாது
எழுந்தபின் விழுதல் ஆகாது…
வாராத பொழுது வருகிற பொழுது வாரிக்கொள்…
தாராத ஒன்றை தருகிற நேரம்
வா பறந்து மண் மேல் இருந்து
விண் போல் உயர்ந்து!
எதிர்த்து நில் எதிரியே இல்லை…
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை..
நிமிடம் ஏன் ?நொடிகளே போதும்
நினைப்பதே வெற்றிதானே எழுந்து வா!
ஒன்றே உறவென எண்ணிக்கொள்..
இன்றே நிஜமென ஏற்றுக்கொள்…
அன்பால் இணைத்தது விலகாது..
அதுவே நிலை அதை ஒப்புக்கொள்..
நினைத்ததை நடத்தி முன்னேறு
நிலைக்கட்டும் நமது வரலாறு…
ஏதான போதும் விடிகிற பொழுது மாறுமோ?
எல்லோர்க்கும் இங்கே இனி வரும் காலம்
ஆனந்தம் தான்
ஆரம்பம் இது நிரந்தரம்தான்!
திரும்பி வா …
உன் திசை எது தெரிந்தது மாறிப் போகாதே..
வருவதை நீ எதிர்கொண்டு பார்த்திடு கோழை ஆகாதே…
உன்னிலே ரத்தம் அது நித்தம் கொதிக்கட்டும்…
எண்ணிய எண்ணம் அது என்றும் ஜெயிக்கட்டும்…
தப்பேதும் இல்லை நீ அப்பனுக்குப் பிள்ளை…
எதிர்த்து நில் …எதிரியே இல்லை..
நம்பிக்கை கொள் தடைகளே இல்லை…
என்ற பாடல் ஹெட்செட்டில் செவியோரமாய் ஒலிக்க… கண் மூடி அந்த பாடலில் ஆழ்ந்து இருந்தாள் மகிழ்விழி. இரண்டரை வருடங்களாக இந்த பாடல் ஒன்றே அவளை உயிர்ப்புடனும் உயிருடனும் வைத்திருக்கிறது.
முகத்தில் பழைய குறுகுறுப்பு சென்று ஆழ்ந்த அமைதி குடி கொண்டிருந்தது. வெளியில் பார்ப்பவர்களுக்கு மகியின் முகத்தில் அமைதி இருப்பது போன்றே தோன்றும். ஆனால் அவள் உள்ளத்தில் எரிந்து கொண்டிருக்கும் எரிமலையை எவரும் அறிந்திலர். அவ் எரிமலை எந்நேரமும் வெடித்து ஆழிப்பேரலையாக உருமாறி உருத்தெரியாமல் அழிக்க எந்நொடியும் தயாராக இருக்கிறது என்பதை மகிழ்விழி மட்டுமே அறிவாள்.
பேருந்தின் ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து கண் மூடி காதோரமாய் ஒலித்த பாடல் வரிகளில் மூழ்கி இருந்தாள் மகிழ்விழி. பேருந்தின் கண்ணாடி வழியே காலை நேர இளமஞ்சள் நிற சூரிய ஒளி , மகிழ்விழி கண்ணில் இருந்து வழிந்து கன்னத்தை தொட்டிருந்த கண்ணீர் துளி இரண்டின் மேல் பட்டு இரண்டு வைரங்களாய் ஜொலித்தது மகியின் கண்ணீர்த்துளி.
மாசு மரு இல்லாத மகிழ்விழியின் முகத்தில் மின்னும் வைரமாய் ஜொலித்த கண்ணீர்த்துளிகளை கண்ட தூரிகை, “அக்கா…..அக்கா…” என மகியின் தோள் பற்றி எழுப்பினாள்.
“என்ன ஆச்சு தூரி? ” என கண்ணை திறவாமலே பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில் சாய்ந்தபடியே கேட்டாள் மகி.
இந்த இரண்டரை வருடங்களாக இந்நிகழ்ச்சி தூரிகைக்கு பழகிவிட்டிருக்க… வழக்கம் போல தனது கைக்குட்டையை எடுத்து தனது தமக்கையின் கன்னத்தில் மின்னிக்கொண்டிருந்த இருவைரக்கற்களை பத்ரமாக ஒற்றி எடுத்தாள் தூரிகை.
தூரிகையின் அந்த அன்பு தொடுதலில் மெதுவாக தன் கண்களை மலர்த்தினாள் மகிழ்விழி.
விழி திறந்த தமக்கையை கண்ட தங்கை, “காலேஜ் ஸ்டாப் வந்துருச்சுக்கா… ” என மெலிதாக புன்னகைத்தாள் தூரிகை.
“ஓஓ… சரி டா… ” என காற்றில் சற்று அசைந்து இருந்த தனது குழல் கற்றைகளை காதோரத்தில் அடக்கி உடைகளை சரி செய்தபடி பேருந்தில் இருந்து இறங்க தயாரானாள் மகி.
நினைவுகளின் தாக்கத்தில் மூழ்கி இருந்த மகிழ்விழி எழுந்து நின்று சற்று தடுமாற….அவளது கரத்தை அழுத்தமாக பற்றி பேருந்தில் இருந்து இறங்க உதவி புரிந்தாள் தூரிகை.
தூரிகையும் மகிழ்விழியும் பேருந்தை விட்டு இறங்கியதும் அவர்களுக்காக காத்திருந்த உதியன் வந்து மகியின் மற்றொரு கரத்தை பற்றியும் பற்றாமலும் அவளின் மற்றொரு பக்கத்தில் ஆதரவாக அவர்களுடன் இணைந்து நடந்தான்.
கடந்த இரண்டரை வருடங்களாக தன்னை சிப்பிக்குள் முத்து போல தன்னை பாதுகாத்து வரும் இருவரையும் வழக்கம் போல் நெகிழ்ச்சியுடன் பார்த்தாள் மகிழ்விழி.
அதை உணர்ந்த உதியன், “நீ எங்கள பாத்து கண்ணு வச்சது போதும்… இன்னக்கி உள்ள செமினாருக்கு ப்ரிப்பேர் பண்ணிட்டியா? ” என மகியின் முகத்தை பார்க்காமலே பேசினான். எங்கே தனது தோழியின் முகத்தை பார்த்தால் தான் அழுது விடுவோமோ என்ற பயத்தில் காலை வேளையில் அவளது முகத்தை பார்ப்பதை தவிர்த்து வந்தான் உதியன்.
“ம்ம்… அதெல்லாம் ரெடி பண்ணிட்டேன் உதி… ” மகி.
“சரி க்கா…நான் க்ளாஸ்க்கு போறேன்…லன்ச் டைம் ல பாக்கலாம்…” என மகியிடம் கூறிவிட்டு உதியனிடம் “அக்கா பத்ரம் ” என்ற செய்தியை கண்களால் உதியனுக்கு உரைத்து விட்டு தனது வகுப்பிற்கு கிளம்பினாள் தூரிகை.
தூரிகையின் கண்கள் சொன்ன செய்திக்கு தன் கண்களாலயே, “சரி.. ” என பதிலளித்து விட்டு மகியுடன் தங்களது வகுப்பை நோக்கி நடந்தான் உதியன்.
தீரனின் அந்த துரோகச்செயலை நேரில் கண்ட தூரிகை, அந்த ஊரை வெறுத்து மகிழ்விழியுடன் புறப்பட்டு வந்து விட்டாள்.
அன்றைய சம்பவத்தில் இறுகிய இதயத்துடன் ஊரை விட்டு வந்தவள் தான் மகிழ்விழி. இரண்டரை வருடங்கள் கடந்து விட்டது, உதியனும் அவர்களுடன் வந்து. இப்பொழுது மகியும் உதியனும் படித்த கல்லூரியிலேயே தானும் கல்லூரி படிப்பிற்காக சேர்ந்திருந்தாள் தூரிகை.
மகியும் உதியனும் அதே கல்லூரியில் முதுகலை பட்ட படிப்பின் இறுதியாண்டிற்கு வந்திருந்தனர். கல்லூரிக்கு அருகே உதியன் தனியாக அறை எடுத்து மகியுடனே தங்கிவிட்டான் .உதியனை காண செண்பகமும் ராசேந்திரனும் எப்பொழுதாவது இங்கு வந்து சென்றபடி இருந்தனர்.
அன்று நடந்த சம்பவத்தினால் அனைவரும் முற்றிலுமாக தீரனை வெறுத்து இருந்தனர். தீரனை வெறுக்க மிக முக்கியமான காரணம் மகிழ்விழி . உயிர்த்த சித்திரமாய் மணம் வீசிக்கொண்டிருந்தவள் அனைவரின் முன்னே தீரன் செய்த கொடுமையால் நடமாடும் பிணமாய் உருமாறி இருந்தாள் மகி.
மூச்சு விடாமல் பேசிக்கொண்டிருக்கும் தனது தோழி, ஒவ்வொரு வார்த்தையையும் எண்ணி பேசுவது கண்டு வேதனையில் உழன்றான் உதியன். கலங்கிய கண்களை கட்டுப்படுத்த முடியாமல், “அம்மு….நீ க்ளாஸ்க்கு போ….நான் கொஞ்ச நேரத்துல வர்றேன்…” என மகியிடம் கூறிவிட்டு தனியிடம் தேடி சென்றான் உதியன்.
உதியன் தன்னை விட்டு அகன்றதும் வகுப்பிற்கு இன்னும் அதிக நேரம் இருப்பதால் தன் வகுப்பிற்கு எதிரே இருந்த மகிழ மரத்தடியில் அமர்ந்தாள் மகி. கைகள் தன்னிச்சையாக கழுத்தை வருட… அதில் தீரன் கட்டிய மஞ்சள் கயிற்றின் தடம் இன்னும் இருப்பது போல உணர… தாங்க முடியாத வேதனையில் உழன்றாள் மகிழ்விழி.
“ஏன்டா இப்பிடி பண்ணுன? என் மேல உனக்கு அவ்ளோ வெறுப்பா? நீயா நெருங்கி வந்த…. நீயாவே வெறுத்து போயிட்டேயேடா….. இத்தன வருஷமா என்னைய தேடி கூட நீ வரலயேடா…” என கண் மூடி கண்ணீர் சிந்தினாள் மகி.
“உன்னால தான் எனக்கு கண்ணீர் வந்துச்சு… இப்ப உன்னாலயே அழுதுட்டே இருக்கேன்டா….இப்பிடி என்னைய மொத்தமா மாத்திட்டு நீ நிம்மதியா இருக்க ல….” என மனதின் வேதனை தாங்க முடியாமல் விழிகளை இறுக்க மூடியபடி மரத்தின் மீது சாய்ந்தாள் மகி.
அநாதரவாக மரத்தடியில் கண் மூடி சாய்ந்த மகியை ஆதரவாக தோளோடு இறுக்கி அணைத்தான் மகியை தேடிவந்த உதியன்.
“உன் கூட நான் இருக்கேன்டி….நீ இப்படி அழுகுறது என்னால தாங்க முடியல அம்மு….” என உதியனும் உடைந்து அழுதான்.
“உதி… என்னால மறக்க முடியலயேடா…..” என உதியனின் நெஞ்சிற்குள் புதைந்து தேம்ப ஆரம்பித்தாள் மகி.
தன் சேயை பாதுகாக்கும் தாயென மகியை அணைத்து தேற்றினான் உதியன். இருவரும் கண் கலங்கி கண்ணீர் சிந்தி கொண்டிருக்கையில் அவர்கள் மீது சிறிய கற்கள் வந்து விழுந்தது. அதில் அதிர்ந்து இருவரும் பிரிந்து யாரென பார்க்க, அவர்கள் முன்னே அவர்களை முறைத்தபடி நின்றிருந்தாள் தூரிகை.
“காலேஜ் ல வந்து ரெண்டு பேரும் என்ன இங்க படம் ஓட்டிட்டு இருக்கீங்க? க்ளாஸ்க்கு போற ஐடியா இல்லையா உங்களுக்கு? ” என குரலில் கடுமையை வரவழைத்து பேசினாள் தூரிகை.
தூரிகையின் குரலில் இருந்த கோபம் முகத்தில் இல்லாமல் இருக்க, அவளின் அந்த குழந்தைத்தனமான முகத்தை கண்டு மகிக்கும் உதியனுக்கும் சிரிப்பு வர….இருவரும் லேசாக சிரித்தனர் .
“ஏய்….என்ன? நான் கோபப்படுறேன்….ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க? ” என தன் கண்களை உருட்டினாள் தூரிகை.
தூரிகையின் செய்கையில் மீண்டும் இருவருக்கும் சிரிப்பு வர….சற்று பெரிதாகவே இருவரும் சிரித்தனர்.
“சூப்பர்…இப்பிடியே சிரிச்சுட்டே ரெண்டு பேரும் க்ளாஸ்க்கு போங்க…..ஓடுங்க… ” தூரிகை.
“இருந்தாலும் ரொம்பத்தான் டி மிரட்டுற…” என தூரிகையின் கன்னத்தில் தன் கைகளால் இடித்தாள் மகி.
” இப்ப க்ளாஸ்க்கு போறீங்களா ?இல்லை…அடி போடனுமா? ” என மிரட்டுகிறேன் என்ற பெயரில் சிரிப்பு மூட்டினாள் தூரிகை.
“தங்கக்கட்டி…” என தூரிகையை கட்டி அணைத்து கன்னத்தில் ஒரு முத்தமிட்டு விட்டு தனது வகுப்பை நோக்கி நடந்தாள் மகி.
“அய்ய….எச்சி….” என உள்ளச்சிரிப்புடன் தன் முகத்தை அஷ்ட்ட கோணலாக்கி முத்தமிட்ட தன் கன்னத்தை அழுந்த துடைத்தாள் தூரிகை.
“சரித்தான் போடி….” என கத்தியபடி நடந்தாள் மகி.
தூரிகையின் முகத்தை பார்த்த உதியன், “நான் குடுத்தாலும் அது எச்சியா தூரி? ” என முகத்தில் எவ்வித உணர்வும் காட்டாமல் வினவினான்.
“எதேய்… ” என அதிர்ந்து கண்களை விரித்து உதியனை பார்த்தாள் தூரிகை.
தனக்கு நடந்த கோர சம்பவத்தில் இருந்து சிறிது சிறிதாக வெளிவந்திருந்த தூரிகையின் மனதை மெல்லியதாக தன் பக்கம் அசைக்க தொடங்கி இருந்தான் உதியன்.
“ஒன்னுல்ல… நீ க்ளாஸ்க்கு போகலயா? ” என பேச்சை மாற்றினான் உதியன்.
“போகனும் தான்….நீங்க ரெண்டு பேரும் தான் இங்க அழுது ஒரு கண்ணீர் ஆறயே உற்பத்தி பண்ணி வச்சு இருந்தீங்களே… அதான் அதுல நீச்சலடிக்க வந்தேன்….” தூரிகை.
” அது….என்னால தாங்க முடியல…அதான்….” உதியன்.
“அதுக்காக நீங்களும் சேந்து அழுவீங்களா? உங்களுக்கு அறிவில்ல? அக்காவ பாத்துப்பீங்க னு பாத்தா, அவங்க கூட சேந்து நீங்களும் அழுகுறீங்க? ” தூரிகை.
“சரி விடு….இனி இது மாதிரி நடக்காது….” என தணிந்த குரலில் கூறினான் உதியன்.
“சரி….க்ளாஸ்க்கு போங்க… ” என அதட்டினாள் தூரிகை.
“போறேன்…வர வர ரொம்ப தான்டி என்னைய மிரட்டுற…” என்று கூறி விட்டு வகுப்பை நோக்கி ஓடி மறைந்தான் உதியன்.
“எதேய்…டி யா? குரங்கு பயலே…..லன்ச் ல மாட்டுவ ல….அப்ப இருக்கு உனக்கு….” என முனுமுனுத்துக்கொண்டு தன் வகுப்பை நோக்கி திரும்பி நடந்தாள் தூரிகை.
“எங்க எல்லாரையும் இப்பிடி அழுக வச்சுட்டு நீ என்ன தான் அண்ணா பண்ணுற? அப்பிடி என்ன தான் உனக்கு அக்கா மேல கோபம்? ” என நினைத்து பெருமூச்சு விட்டாள் தூரிகை.
அங்கு தீரனோ, முடியும் தாடியும் காடு போல் வளர்ந்திருக்க…. கண்ணீர் குளமென பெருகி இருக்க….அடிக்கும் வெயிலில் வயல் வரப்பில் மல்லாக்க படுத்துக்கொண்டு, “மகி மா….” என உயிரை உருக்கும் குரலில் அழைத்த படி மூடியிருந்த தனது வலக்கரத்தை மெதுவாக பிரித்தான். அதில் மகியின் கழுத்தில் கட்டிய மஞ்சள் கயிறு உயிர்ப்புடன் இருந்தது.
சம்மந்தப்பட்ட இருவரும் உயிர்ப்பில்லாமல் அல்லாடிக்கொண்டிருக்க இருவரையும் சம்மந்தப்படுத்திய அந்த மஞ்சள் கயிறு மட்டும் இருவரின் காதலால் உயிர்ப்புடன் தீரனின் கையில் மினுமினுத்தது.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.