“அம்மு… மனசுக்கு ஏதோ ஒரு மாதிரி இருக்கு டி… ” என அன்றைய விடியலில் உதியன் கூறிய முதல் வார்த்தை இதுதான்.
“என்னடா? பிரச்சனை உன் மனசுக்கா? இல்ல வயித்துக்கா? ” எனக் கூறி கண்டித்தாள் மகி.
“எந்த நேரத்துல காமெடி பண்ணனும் னு ஒரு விவஸ்த்தை இல்லையா? நான் சொல்லுறத கேளு அம்மு… ” உதியன்.
“என்னடா ? கேட்டுட்டுத்தான இருக்கேன்? ” மகி.
“நீ பஞ்சாயத்துக்கு வந்தே ஆகனுமா? ” உதியன்.
“ஏன்டா இப்பிடி கேக்குற? ” மகி.
“இல்ல… எனக்கு என்னமோ மாதிரி இருக்கு… நீ வர வேண்டாம்… வீட்லயே இரேன்… ” உதி.
“ப்ச்… உதி விளையாடாத.. ” மகி.
“நிஜமாத்தான்டி சொல்லுறேன்… ” உதி.
“இப்ப என்ன உனக்கு பிரச்சனை? “மகி.
“எனக்கு என்னமோ பெருசா நடக்க போற மாதிரி தோனுது… நீ அதுனால வர வேண்டாம்… ” உதி.
“நான் வந்து ஆகனும் உதி… அதெல்லாம் எதுவும் ஆகாது… நீ மனச போட்டு குழப்பிக்காத… ” மகி.
“ம்ம்… சரி.. ” என்ற உதி, சிறிது நேரத்திலேயே திரும்ப, ” அம்மு.. நீ பஞ்சாயத்துக்கு வந்தே ஆகனுமா? ” என நூறாவது முறையாக மகியிடம் உதியன் கேட்க…. அமைதியாக புன்னகைத்தாள் மகி.
“புரிஞ்சுக்கோ உதி… இன்னக்கி தூரி பக்கத்துல நான் இருந்தே ஆகனும்…அது எவ்ளோ முக்கியம் னு உனக்கு தெரியும் தான? அத்தோட நேத்து எனக்கு நடந்த அவசர கல்லியாணத்த பத்தி பேசுவாங்கல்ல…அப்ப நான் அவசியம் ல? ” மகி.
“என்னவோ போ….எனக்கு ஒரு மாதிரி இருக்கு…” என்றவாறு தூரிகையை அழைத்துக்கொண்டு வர மருத்துவமனைக்கு கிளம்பினான் உதியன்.
உதியன் வெளியே கிளம்பியதும் கண்ணாடி முன் நின்று பொட்டிட்டு கிளம்பியவள், கண்ணாடியில் தெரிந்த தன் பிம்பத்தில் தனது நெஞ்சோடு உறவாடிக்கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை கண்டவள் ,அதை கையில் எடுத்தாள் மகி.
“நீ ஏன் தீரா இப்பிடி பண்ணுன? என் அனுமதி இல்லாம அநாகரீகமா தாலி கட்டுனதுனால இத கழட்டி உன் மூஞ்சில விட்டு வீசனும் னு என் அறிவு சொல்லுது…. ஆனா என் மனசுக்கு உன்னைய புடிச்சு இருக்கு….. இதுவே வேற ஒருத்தன் இப்பிடி பண்ணி இருந்தா கழட்டி வீசி இருப்பேனோ என்னவோ? பொண்ணுங்க மனசு ரொம்ப மென்மையானது னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க… தப்பா இத நீ செஞ்சு இருந்தாலும் என் மனசு உன்னைய ஏத்துக்குதே… அன்னைக்கி நீ அடிபட்டு ரத்தம் வடிய கிடக்குற னு தெரிஞ்சதும் என் உயிரே என் கிட்ட இல்ல….பல வருஷமா வராம இருந்த கண்ணீர வர வச்சு எனக்கு என் காதல அன்னைக்கே நீ உணர்த்திட்ட டா….என்ன? அது எனக்கு நேத்து தான் புரிஞ்சு இருக்கு…..யார் மேல நமக்கு அதிக உரிமை இருக்கோ அவங்க மேல தான் அதிக கோபம் வருமாம்… நாம ரெண்டு பேரும் முட்டிக்கிட்டு நின்னது அப்பிடித்தான் போல….உனக்குள்ளயும் காதல் இருக்கு தீரா….நான் என் காதல உணர்ந்துட்டேன்…நீயும் சீக்கிரமே உணர்வ…உணர வைப்பா இந்த மகிழ்விழிஅனழேந்திதீரன் …” என கண்ணாடியில் தனது பிம்பத்தை பார்த்து புன்னகைத்தாள் மகிழ்விழி.
அதே நேரம் ,” நீ என்னைய லவ் பண்ணுறியா? இன்னக்கி பஞ்சாயத்துல வச்சு உன் திமிருக்கு ஒரு முடிவு கட்டுறேன்டி… ” என கண்ணாடி முன் நின்று தனது மீசையை முறுக்கி விட்டவாறு நினைத்தான் தீரன்.
“ஆனாலும்… அவ பக்கத்துல இருந்தா மனசுக்கு இதமா தான் இருக்கு… அவள வம்பு இழுத்துட்டே இருக்கனும் னு தோனுது… அவள கோப படுத்தி கோபத்துல அவ முகம் சிவக்குறத ரசிக்கத்தோனுதே…..அன்னக்கி… ” என நினைத்து தன் உதடுகளை வருடிக்கொண்டான் தீரன்.
“ம்கூம்… இது சரிபட்டு வராது… அவ திமிர நான் அடக்கியே ஆகனும்… இப்பிடிலாம் அவள ரசிச்சா அப்புறம் அவளுக்கு புருஷனா வாழ வேண்டியது தான்… ” என தனக்குள் பேசிக்கொண்டு தனது பல்சரில் பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு விரைந்தான் தீரன்.
அங்கு தீரனுக்கு முன்பே தீரனின் பெற்றோரும் மகிழ்விழி மற்றும் உதியனின் பெற்றோரும் மகிழ்விழியை சூழ்ந்தபடி நின்றிருந்தனர். தீரன் வந்ததும் அவனை மகி பார்க்க… அதே நேரம் தீரனும் மகியை பார்க்க… மகியின் கண்களில் இருந்து தீரனால் வெளிவர முடியவில்லை. தீரனுக்கு நெஞ்சத்தில் ஏதோ அவஸ்த்தையாய் இருக்க… அவன் சிக்கி தவிப்பதை கண்ட மகி, லேசாக புன்னகைத்தாள் .
மகியின் புன்னகையை கண்ட தீரன், “அவள பாத்து நாம மயங்கிட்டோம் னு நம்மள பாத்து நக்கலா சிரிக்கிறா… இருடி… இன்னக்கி இந்த சிரிப்ப குழி தோண்டி புதைக்கிறேன்… ” என மகியின் புன்னகையை தவறாக புரிந்து கொண்டு மனதினுள் கருவியவாறு பஞ்சாயத்து பெரியவர்களை கவனித்தான்.
அதே நேரம் தூரிகையுடன் உதியன் வந்து சேர்ந்தான். யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் மகியின் அருகே சென்று, “அக்கா… ” என்றவாறு மகியின் கையைப்பிடித்து அவளோடு ஒட்டியபடி நின்றாள் தூரிகை .
தூரிகையின் உடல் நடுங்குவதை தன் கரம் பற்றிய அவளது கரம் மூலம் உணர்ந்த மகி, தூரிகையின் கரம் மீது தன் மற்றொரு கரத்தை வைத்து, “ஒன்னுல்ல தூரி… நான் உன் கூட தான் இருக்கேன்… பயப்படாம இரு… ” என ஆறுதல் அளித்தாள் மகி.
அனைவரின் நடுவே கை கால் கட்டப்பட்டு குரு கிடக்க… “யம்மா பொண்ணே…இங்க இப்பிடி முன்ன வா…உனக்காகத்தான் இங்க பஞ்சாயத்து கூடி இருக்கு….” என ஊர் பெரியவர் தூரிகையை முன்னே அழைத்தார்.
அதைக்கேட்ட தூரி, பயத்துடனே மகியின் கரத்தை விடாமல் மெதுவாக முன்னே வந்தாள்.
“இவன் தான் உன்னைய கெடுத்தானா? ” என குருவை காட்டி ஊர் பெரியவர் ஒருவர் தூரிகையிடம் கேட்டார்.
“ம்ம்… ஆமா….” என மெல்லிய குரலில் கூறினாள் தூரிகை. நேற்று தீரன் மருத்துவமனையில் வைத்து வீடியோ எடுத்ததை பற்றி கூற வேண்டாம் எனக்கூறியதால் அதை மறைத்து விட்டாள் தூரிகை.
தூரிகை கூறியதற்கு மறுப்பாக வாயில் கட்டிய கட்டுடன் குரு தலையை அசைக்க… அதைப்பார்த்த உதியன், “பண்றதெல்லாம் பண்ணிட்டு என்னடா மண்டைய ஆட்டுற? ” என குருவை ஓங்கி ஒரு மிதி மிதித்தான்.
“யப்பா…உதியா…சத்த பொறு…தண்டனை குடுக்கத்தான் நாங்க இருக்கோம் ல….” எனக்கூறிவிட்டு தங்களுள் ஆலோசனை நடத்தினர் ஊர் பெரியவர்கள்.
அப்பொழுது தீரன், ஊர் பெரியவர்களின் காதில் ஏதோ கூறினான். தீரன் கூறியதை கேட்ட ஊர் பெரியவர்கள், “ஆமா…. தீரன் சொல்லுறதும் சரியா தான் இருக்கு… அப்பிடியே செஞ்சுறலாம்… ” எனக்கூறியபடி, “தீரா… நீ அவங்கள வர சொல்லு… ” என்றனர்.
உடனே தீரன் யாருக்கோ ஃபோனில் தகவல் தெரிவிக்க, சிறிது நேரத்தில் ஒரு மருத்துவமனை வண்டி வந்து குருவை குண்டு கட்டாக தூக்கி சென்றார்கள். அதை யாவரும் புரியாத பார்வை பார்க்க…தீரன் திருப்தியாக புன்னகைத்தான்.
“இந்த ஃபயரு அப்பிடி என்ன தான் செய்யிறான் னு ஒன்னும் தெரியலயே…” என சிந்தித்தவாறு தீரனை குறுகுறுவென பார்த்தாள் மகி.
மகியின் பார்வையை உணர்ந்த தீரன், திரும்பி அவளைப்பார்த்து, “என்ன? ” என்னும் விதத்தில் தன் புருவத்தை உயர்த்த… அதில் மகியின் உடல் புல்லரிக்க சட்டென தலைகுனிந்தாள் மகி.
“தீரா… உனக்கு நேத்து கல்லியாணம் ஆகிருச்சு னு கேள்விப்பட்டோம்… எப்ப ஊருக்கு கல்லியாண சாப்பாடு போட போற? ” ஊர் பெரியவர்.
“நேத்து அவசரகதியில கல்லியாணம் நடந்துருச்சு….நல்ல நாள் பாத்து முறையா ரெண்டு பேருக்கும் கல்லியாணம் பண்ணலாம் னு பெத்தவங்க நாங்க முடிவு பண்ணி இருக்கோம்…” சிதம்பரம்.
“அப்பிடியா? ரொம்ப சந்தோஷம்…சீக்கிரம் பண்ணுங்க….” ஊர் பெரியவர்.
“உங்க எல்லார் முன்னாடியும் நான் ஒன்னு சொல்லனும்…” என தீரன் முன்னே வந்தான்.
“சொல்லு தீரா… என்ன விசயம்? உங்க ரெண்டு பேரையும் யாரோ அன்னைக்கி கொலை பண்ண வந்ததா சொன்னியே…அந்த விசயமா? ” ஊர் பெரியவர்.
“இல்ல….அவன நானே தேடி கண்டுபிடிச்சுருவேன்…. இது என் கல்லியாண விசயம்… ” தீரன்.
தீரன், திருமணம் விசயம் என்றதும் உதியன் அவனை சந்தேகத்துடன் பார்க்க…உதியனை தவிர மகி உள்ளிட்ட மற்ற அனைவரும் தீரனை மகிழ்ச்சி கலந்த ஆவலுடன் பார்த்தனர்.
“சொல்லுப்பா…” ஊர் பெரியவர்.
“எனக்கு அந்த பொண்ண புடிக்கல.. ” என மெதுவாக அனைவரின் தலையில் கல்லைத்தூக்கி போட்டான் தீரன்.
அதில் அதிர்ச்சியடைந்த மகி, “ஏன்? ” என தீரனின் முன்னே வந்து அவனது கண்களை நேருக்கு நேராக ஊடுருவினாள்.
“பிடிக்காததுக்கு எந்த காரணமும் தேவை இல்லை…” தீரன்.
“எனக்கு காரணம் வேணும்….” என கலங்கிய தன் கண்களை கட்டுப்படுத்தியவாறு கேட்டாள் மகி.
“ஏன்னா…நீ ஒரு ராங்கிக்காரி….திமிரு புடிச்சவ….” தீரன்.
“ஓஓஓ… நேத்து என் கழுத்துல தாலி கட்டுறப்ப இதெல்லாம் தெரியலயா? நானா கேட்டேன்? “மகி.
“அது…உன்னோட திமிர அடக்க… மாட்டுக்கு மூக்கனாங்கயிறு எதுக்கு கட்டுறாங்க? அது துள்ளி குதிக்கிறத கட்டுப்படுத்த தான்…அதே போல தான் உனக்கு இத கட்டுனேன்…என்னைய பொறுத்த வரைக்கும் இதுக்கு எந்த அர்த்தமும் இல்லை….” தீரன்.
“என்ன பேசிட்டு இருக்க தீரா? பைத்தியமா உனக்கு? ” என ஊர் பெரியவர் ஒருவர் கூச்சலிட்டார்.
“நான் தெளிவா தான் இருக்கேன்….எனக்கு இவ வேண்டாம்….இவ கூட என்னால வாழ முடியாது…” என தீர்மானமாக உரைத்தான் தீரன்.
தீரன் பேசியவற்றை கேட்ட இந்திரனும் உதியனும் கோபமுடன் தீரனை நோக்கி வர….அவர்களை தன் கைகளால் தடுத்து நிறுத்தினாள் மகி. அங்குள்ள சூழ்நிலையால் தூரிகை நடுங்கி உதியனின் கரத்தை இறுக்கப்பற்றிக்கொண்டாள்.
மனவலி தாங்காமல் அனைவரின் முன்பு மண்டியிட்டு கதறி அழுதாள் மகி.
மகி அழுவதை பார்த்த சிதம்பரம், ” ச்சீ….நீ என் பையனே இல்லடா….மகிய விட உனக்கு நல்ல பொண்ணே கிடைக்காதுடா….இப்பிடி பெண் பாவத்த வாங்கிக்காத….” என்றார்.
“வலுக்கட்டாயமா அவளுக்கு தாலி கட்டிட்டு இப்ப என்னடா இப்பிடி பேசுற? நீ என் வயித்துல தான் வந்து பொறந்தியா? ” கருப்பாயி.
“அவள பழிவாங்கத்தான் அப்பிடி பண்ணுனேன்….” தீரன்.
“போதும்… ” என பெருங்குரலெடுத்து கத்தினாள் மகி.
அனைவரும் கலக்கத்துடன் மகிழ்விழியை பார்க்க….,”மகி… எதுவா இருந்தாலும் கொஞ்சம் யோசிச்சு பேசு மகி… இது உன்னோட வாழ்க்கை… ” என கண்ணீருடன் இடையிட்டார் பல்லவி.
“நான் யோசிச்சு பேசனுமா? வலுக்கட்டாயமா ஒருத்தன் எனக்கு தாலி கட்டி இருக்கான்… அவன ஏன் னு கேக்க துப்பில்லை… சரி… அவன் நீங்க பேசி முடிவு பண்ணுன மாப்பிள்ளை… அதே உங்க நம்பிக்கையான உலகத்துல இல்லாத உத்தம மாப்பிள்ளை என் கூட வாழ விருப்பம் இல்லை னு சொல்லுறான்… என்னமோ என் கூட பல வருஷமா வாழ்ந்து சலிச்சவன் மாதிரி…. கேட்டா… என்னைய பழிவாங்கவாம்… பழிவாங்க ஒரு பொண்ணோட வாழ்க்கையில விளையாடுறவன் லாம் உங்களுக்கு உத்தம மாப்பிள்ளை… அப்பிடித்தான? அவன கேள்வி கேட்க முடியல… நான் பாத்து பேசனுமா? இனி இந்த மகிழ்விழி யாருக்கும் கட்டுப்பட மாட்டா… “என கலியுக சீற்றங்கொண்ட கண்ணகியாய் கலங்கிய கண்களுடன் முகத்தில் அனல் பறக்க நின்றாள் மகி.
“அதான? நான் என்ன உன் கூட வாழ்ந்தேனா என்ன? ஒழுங்கா நீ உன் வழிய பாத்துட்டு போ… நான் என் வழிய பாத்துக்கிறேன்… ” தீரன் .
இடையில் பேச வந்த சிதம்பரத்தை தன் கண்களாலயே தடுத்து நிறுத்தினாள் மகி.
“என் வாழ்க்கைக்காக யாரும் இவன் கிட்ட பிச்சை கேக்க வேண்டாம்…..நான் போறேன் ….எல்லாரும் என்னைய மன்னிச்சுருங்க….” என அனைவரையும் பார்த்து கை கூப்பிவிட்டு ,”வாங்க ப்பா… நாம போகலாம்….” என தன் தந்தையின் கையைப்பற்றினாள் மகி.
“அம்மு….” என கண் கலங்கி அதற்கு மேல் பேச்சு வராமல் திக்கி நின்றான் உதியன்.
“வேண்டாம் உதி…நான் உன் கிட்ட நேத்து சொன்னதெல்லாம் மறந்துரு….நானும் அத மறந்துட்டேன்…”என தன் கண்ணீரை கட்டுப்படுத்த முடியாமல் உதியனை பார்க்காமல் வேறுபுறம் பார்த்தாள் மகிழ்விழி.
“ஒரு நிமிஷம்…உங்க ரெண்டு பேரோட ட்ராமாவ வேற எங்காவது போய் வச்சுக்கங்க….உன் கிட்ட இருந்து எனக்கு ஒன்னு வேணும்…அத தந்துட்டு நீ தாராளமா போகலாம்…” என்றபடி மகியிடம் நெருங்கினான் தீரன்.
“அவ மனச கொன்னுட்ட…இன்னும் அவ கிட்ட இருந்து உனக்கு என்ன வேணும்? ” என கோபமாக தீரனை முதன் முறையாக எதிர்த்து நின்றான் உதியன்.
“பார்ரா….இந்த தீரன எதிர்க்குற அளவுக்கு உனக்கு தைரியம் வந்துருச்சா? ” என உதியனை தள்ளிவிட்டு மகியிடம் நெருங்கினான் தீரன்.
உதியனின் கேள்வியை கண்களில் தேக்கி தீரனை நிமிர்ந்து பார்த்தாள் மகி.
மகிழ்விழியின் கண்களை நோக்கியபடி ஊரார் அனைவரின் முன்னே அவளது கழுத்தில் தான் கட்டிய மஞ்சள் கயிற்றை தன் கைகளால் அறுத்து எடுத்தான் தீரன்.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.