காதல் தீ -30

Chellammal Bharathi | 08 Dec 2025 | Share

              தீரனின் மீது அடங்கா கோபத்துடன் இருந்த மகிக்கு தீரன் தன்னை நெருங்கி வந்து செய்யும் காரியம் துளி கூட மூளையில் பதியாமல் தன்னை நெருங்கி நிற்கும் தீரனின் விழிகளை பார்த்தவாறு நின்றிருந்தாள் மகிழ்விழி. 

              தன்னுடன் வாய்க்கு வாய் எதிர்த்து பேசியபடி இருக்கும் மகியை அடக்கும் ஒரே நோக்கத்துடன் பஞ்சாயத்தில் அனைவரின் முன்பு அவள் கையில் கட்டிய மஞ்சள் கயிற்றை தங்களது பெற்றவர்கள் முன்பு மகியின் கண்களை நேருக்கு நேராக சந்தித்தபடி அவளின் கழுத்தில் கட்டி மூன்று முடிச்சிட்டான் தீரன். 

               அதைக்கண்ட அனைவரும் விக்கித்து நிற்க ,தனது நெஞ்சில் ஊஞ்சலாடிய மஞ்சளின் ஈரம்  இதயத்தில் சில்லென்று பரவ… அந்த உணர்வில் ஒரு வழியாக மகிக்கு சுரணை வந்து மஞ்சள் கயிற்றையும் தீரனின் முகத்தையும் மாறி மாறி பார்த்தாள். 

             “என்ன பாக்குற? இப்ப நீ என் பொண்டாட்டி….என்னைய கேக்காம நீ எங்கயும் போக கூடாது…” என மகியை பார்த்து கூறினான் தீரன். 

              “இவனுக்கு நிஜமாலும் என்னைய புடிச்சு இருக்கா? ” என விழியால் தீரனை விழுங்கியபடி மனதினுள் யோசித்தாள் மகி. 

               “என்ன தீரா இப்பிடி பண்ணிட்ட? ” சிதம்பரம். 

                ராசேந்திரனும் இந்திரனும் நடந்த சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து விலகாமல் அப்படியே உறைந்து நின்றனர். 

                “மகி… நீ ஓகே தான? ” என்ற உதியனின் குரல் கனவில் கேட்பது போல் இருந்தது மகிக்கு. 

               “அம்மு….” என உதியன் தன் தோழியின் தோளில் தட்ட…அதில் கனவில் இருந்து திடுக்கிட்டு விழிப்பது போல் விழித்து உதியனை சந்தித்த மகியின் கண்கள் கலங்கி இருந்தது. 

              “அம்மு….என்ன ஆச்சு டா? உனக்கு இதுல சம்மதம் தான ? ” என உள்ளம் கலங்கியவாறு மகியை அணைத்தான் உதியன். 

             அதைப்பார்த்த தீரன், “ஏய்…இப்ப அவ என் பொண்டாட்டி…இனி அவள இப்பிடி கட்டிப்புடிக்கிறத லாம் நிறுத்திக்க…” என உதியனிடம் கூறியவாறு மகியையும் உதியையும் பிரித்தான் தீரன். 

              தீரன் அவ்வாறு கூறியதும் சண்டைக்கோழியாய் சிலிர்த்து தீரனை பேச வரும் மகியை கைப்பிடித்து தடுத்தான் உதியன். மகி திரும்பி அவன் கண்ணை பார்க்க…அதில் வேண்டாம் என்னும் செய்தியுடன் கதி கலங்கி நின்றிருந்தான் உதியன். 

                சூழ்நிலையை இலகுவாக்க….”அம்மாடி…மகி…வா…வந்து விளக்கேத்து…” என்றவாறு மகியை அழைத்து சாமி அறையின் முன் நிறுத்தினார் கருப்பாயி. 

                தன் ஒரே மகளின் திருமணத்தை பற்றி பெரிதாக கனவு கண்டிருந்த இந்திரன், அது எதுவும் நடைபெறாமல் மிக அவசரமாக நடந்ததை எண்ணி ஒரு கண் கலங்க ….மகளின் திருமணம் தன் கண் முன்னே நல்லவனோடு நடந்து முடிந்த திருப்தியில் மறு கண் கலங்க ….ஆக, இரு கண்ணும் கலங்கி நின்றார். 

                தன்னை விளக்கு ஏற்ற சொன்னதும் திரும்பி தன் தந்தையை மகி நோக்க…..இந்திரன்  கண்களாலயே தனது திருப்தியை வெளிப்படுத்தினார்.

               தன் தந்தைக்கு இதில் மகிழ்ச்சி தான் என்றுணர்ந்த மகி, அவர் மனதை நோகடிக்க விரும்பாமல் “இந்த திருமணத்தை என் மனது ஏற்று கொள்ள வேண்டும் இறைவா…” என வேண்டியவாறு பூஜை அறையில் விளைக்கை ஏற்றினாள் மகிழ்விழி. 

                அந்நேரம் உதியனின் ஃபோன் ஒலிக்க…அதை எடுத்து பேசியவன், “தூரி மகியை பாக்கனுமாம்…ஹாஸ்பிட்டல்ல இருந்து அம்மா சொல்லுறாங்க….” என்றான். 

                ” இன்னும் செண்பகத்துக்கும் மகி அம்மாவுக்கும் விசயம் தெரியாதே… அவங்கள எப்பிடி சமாளிக்கிறது? ” என யோசித்தபடி, “சரி…கிளம்புங்க… “என்றார் சிதம்பரம். 

                வழக்கம் போல உதியனின் வண்டியில் ஏறப்போன மகியை தடுத்து, “இனி என் கூட தான் வரனும்….” என அதிகாரமாய் கூறினான் தீரன். 

                 இதுவரை தன்னுடன் இருந்த தன் தோழியை முழுவதுமாக தன்னிடம் இருந்து பிரிப்பது போல் தோன்ற….கண் கலங்கினான் உதியன். “அவ மேல இனி எல்லா உரிமையும் அண்ணனுக்குத்தான இருக்கு….அண்ண அவரோட உரிமைய எடுத்துக்குறாரு….அவ்ளோதான்….” என தன் மனதை தேற்றியவாறு ஹாஸ்பிடலை நோக்கி தன் வண்டியை செலுத்தினான் உதியன். 

                “ஒரு கயிறு கட்டுனதும் ஆடு மாடு  மாதிரி கட்டுனவன் பின்னாடி போகனுமா என்ன? பொண்ணுங்க மட்டும் குடும்பம்….அப்பா….அம்மா….இவங்க யார் மனசும் நோக கூடாதுனு தான் மனச நோகடிச்சுக்கனும்? என்ன தான் பெண்ணுரிமை பெண் சுதந்திரம் னு பேசுனாலும் இன்னும் ஒரு சில விஷயங்கள்ல இன்னும் எந்த உரிமையும் எந்த சுதந்திரமும் கிடைக்கலயே? ஆம்பளங்க என்ன தப்பு செஞ்சாலும் அது தப்பாவே இந்த சமுதாயத்துக்கு தெரிய மாட்டேன்ங்குதே ஏன்? ஒருத்தன் என் கழுத்துல என் அனுமதி இல்லாம அநாகரீகமா தாலி கட்டி இருக்கான்…..அவன யாரும் தப்பு சொல்லவே இல்லையே ஏன்? தப்பு செஞ்ச அவன தட்டி கேக்காம என்னைய அத ஏத்துக்க சொல்லி அப்பா ஏன் என்கிட்ட கெஞ்சனும் ?இதே தாலிய நான் கழட்டி இவன் மூஞ்சில விட்டு வீசுனா எல்லாரும் என்னைய தான குத்தம் சொல்லுவாங்க ?மனசுக்கு முக்கியத்துவம் குடுக்காம ஒரு கயிறுக்கு ஏன் முக்கியத்துவம் குடுக்குறாங்க எல்லாரும்? பொண்ணுங்க எல்லாரும் ஆம்பளங்களோட கைப்பாவையா என்ன? இதே போல தனக்கு பிடிச்சவன் கழுத்துல இந்த மஞ்ச கயிறை ஒரு பொண்ணு கட்டுனா இப்ப அமைதியா இருக்குறவங்க இதை ஏத்துப்பாங்களா? தனக்கு பிடிச்சவன தேர்ந்தெடுக்குற உரிமை கூட இல்லையே….” என தன் உள்ளச்சுழலில் மூழ்கியவாறு அமைதியாக தீரனின் வண்டியில் அவன் பின்னே ஏறி அமர்ந்தாள் மகி. 

                ஹாஸ்பிடல் வரும் வரை அமைதியாக தன்னுள்ளே மூழ்கியவாறு இருந்த மகிழ்விழியை, “ஹப்பாடா… ” என்ற நிம்மதி மூச்சுடன் பார்த்தான் தீரன். 

              “வாய்க்கு வாய் பேசுற இவ வாய ஒரு வழியா அடைச்சாச்சு….” என நிம்மதி புன்னகை சிந்தியவாறு மருத்துவமனையின் முன்னே வண்டியை நிறுத்தினான் தீரன். 

               வண்டி குலுங்கி நின்றதில் தன்னுணர்வு அடைந்த மகி, விருட்டென இறங்கி மருத்துவமனைக்குள் நுழைந்தாள். 

             தன்னை திரும்பி கூட பார்க்காமல் செல்பவளை கண்ட தீரன், “சரித்தான் போடி….உன் வாய அடக்குன எனக்கு… உன் திமிர எப்பிடி அடக்கனும் னு தெரியும்…நாளைக்கி இருக்குடி உனக்கு….”என மனதினுள் புகைந்தவாறு மருத்துவமனையினுள் நுழைந்தான் .

             இவர்களுக்கு முன்னே மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்த உதியன், செண்பகத்திடம் பேசிக்கொண்டிருந்தான். 

                “உதி…தூரியோட அப்பா கிடைச்சாரா? ” செண்பகம். 

                “அவனெல்லாம் அப்பானு சொல்லாத….” என்றவாறு தூரிக்கு நடந்ததை விலாவாரியாக கூறினான் உதியன். 

                “ச்சீ…மனுஷனே இல்ல அவன்லாம்….அந்த கழிசடைய கண்டுபுடிச்சீங்களா? ” செண்பகம். 

              “அதெல்லாம் நைட்டே அவன முடிச்சாச்சு….. ” உதியன். 

              “என்ன டா பண்ணீங்க? ” செண்பகம். 

               “நேத்து எங்க கிட்ட தூரி சொன்னதும் அவன தேடி நானும் தீரன் அண்ணனும் போனோம்…..போனா, காட்டுக்குள்ள நல்லா மூக்கு முட்ட குடிச்சுட்டு இருந்தான்….கலியமூர்த்தியும் அவன் கூட தான் இருந்தான். தூரிய இப்பிடி பண்ணுனவன ரெண்டு பேருமா அடிச்சு….அவன் கால நல்லா விரிச்சு வச்சு அவன் இடுப்புக்கு கீழ ரெண்டு பேருமா ஓங்கி மிதிச்சு…..அவன் உடம்பு முழுக்க கத்தியால கொத்துக்கறி போட்டு குத்துயுரும் கொலையுருமா விட்டு காட்டுக்குள்ள தூக்கி வீசிட்டு வந்துட்டோம்….ரத்த வாடைக்கு இந்நேரம் நரி பிச்சு தின்னு இருக்கும் அவன…”உதியன். 

              “அவனுக்குலாம் இன்னும் வேணும்….அப்ப அந்த இன்னொருத்தன்? ” செண்பகம். 

             பஞ்சாயத்தில் நடந்த அத்தனையும் விரிவாக கூறினான் உதியன். 

               “அப்ப நாளைக்கி பஞ்சாயத்து கூடுமா? அந்த கலியமூர்த்தி? ” செண்பகம். 

               “ஆமா ம்மா….இதுல மகி தீரன் அண்ணே பிரச்சனை வேற…. எங்கள அங்க பாத்ததும் கலியமூர்த்தி தப்பிச்சு ஓடிட்டான் ம்மா…” உதியன். 

              “அவங்களுக்கு என்ன டா பிரச்சினை? கையில தான கயிறு கட்டி இருக்கான் தீரன்? கழுத்துல ஒன்னும் கட்டலயே? இது ஒன்னும் அவ்ளோ பெரிய பிரச்சினை இல்லையே? விடுடா பாத்துக்கலாம்…ரெண்டு பேர்கிட்டையும் நான் பேசுறேன்….” என உதியனிடம் பேசிய செண்பகம் உள்ளே வந்து கொண்டிருந்த மகியின் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த மஞ்சள் கயிற்றை பார்த்து விட்டு திகைப்புடன், “இதை என் கிட்ட சொல்லவே இல்லையே டா நீ? “என உதியனை பார்த்து கேட்டார். 

                  “அதான் சொன்னேன் ல ம்மா…” என தன் உள்ளத்து வேதனையை தாயிடம் கூறாமல் மறைத்தான் உதியன். 

                  அப்பொழுதுதான் தூரியின் அறையில் இருந்து வெளிவந்த பல்லவி எதிரே தன் மகள் மஞ்சள் கயிறு மினுமினுக்க வருவதை பார்த்து, “என்னடி இது? ” என வேகத்துடன் மகியை நெருங்கினார்.

  

                “ம்மா….ம்மா….அவள தூரிக்கிட்ட போக விடுங்க…நான் சொல்லுறேன் என்ன நடந்துச்சுனு….” என பல்லவியை இழுத்து செண்பகத்திடமும் பல்லவியிடமும் தீரனின் வீட்டில் நடந்ததை கூற ஆரம்பித்தான் உதியன். 

                 மருத்துவமனைக்குள் நுழைந்த மகி, உதியனையோ அவனிடம் பேசிக்கொண்டிருந்த செண்பகத்தையோ… தன்னை நோக்கி கோபத்துடன் வந்த தனது தாயையோ கருத்தில் கொள்ளாமல் நேராக தூரிகை இருக்கும் அறைக்குள் அவளைப்பார்க்க நுழைந்தாள் மகி. 

                மகியைக் கண்டதும், “அக்கா….” என வேதனையுடன் அழைத்தாள் தூரிகை. 

                 “என்னடா தூரிமா? அக்காவ பாக்கனும் னு சொன்னியாமே? என்ன வேணும் டா? ” மகி. 

                 “சும்மா தான்க்கா… உன்னைய பாக்கனும்னு தோனிச்சு…இது என்னக்கா? தாலி? இது எப்பக்கா? ” தூரிகை. 

                 “இது ஒன்னும் இல்லைடா….சும்மா….இதெல்லாம் கண்டுக்காத…” என புன்னகைக்க முயன்றாள் மகி. 

                “நீ என்ன னு சொல்லு க்கா….யாரு என் மாமா? ” தூரிகை. 

                 “அது….”என்றவாறு மென்மையாக நடந்தவற்றை தூரிகையிடம் கூறினாள் மகி. 

                 “ஓஓஓ….ஸாரி க்கா….என்னால நீங்க எல்லாரும் பாதிக்கப்பட்டுடீங்க …அதுலயும் முக்கியமா நீயும் தீரன் அண்ணனும்….” என வருத்தப்பட்டாள் தூரிகை. 

                “ஹேய்…அதெல்லாம் ஒன்னும் இல்லை….அக்ஸூவலி எங்க அப்பா அம்மா வும் எங்களுக்கு கல்லியாணம் பண்ண ஏற்கனவே பேசி வச்சு இருக்காங்க….ஸோ இதுல நீ எந்த வகையிலயும் சம்பந்தபடல….சரியா? ” என தன் உள்ளக்குமுறுலை மறைத்து தூரிகைக்கு ஆதரவாக புன்னகைத்தாள் மகி. 

              அப்படியும் தூரிகையின் முகம் தெளிவடையாமல் இருக்க….”ஒரு நிமிஷம் இரு….இதோ வர்றேன்…” என்றபடி அறையை விட்டு வெளியே சென்று வேறு ஒரு அறையினுள் நுழைந்து சில நிமிடங்களில் கையில் கைக்குழந்தையுடன் வெளியே வந்தாள் மகி. 

              வெளியில் பல்லவியுடன் பேசிக்கொண்டிருக்கையில் கையில் குழந்தையுடன் மகியை கண்ட தீரனின் மனம், “இதே போல என் குழந்தையோட இவ இருந்தா எப்பிடி இருக்கும்? ” என யோசித்து சில நொடிகளில் தடுமாறி தன்னை தெளிவாக்கி கொண்டான் தீரன் .

                அதை அறியாது தன் போக்கில் தூரிகை இருந்த அறைக்குள் நுழைந்தாள் மகி. 

                 “இங்க பாத்தியா தூரி? இந்த பாப்பா எவ்ளோ அழகா இருக்கு னு….” என குழந்தையின் மூலமாக தூரிகையின் மனதை திசை திருப்ப முயற்சி செய்து  அதில் வெற்றியும் பெற்றாள் மகி. 

              “ஆமா க்கா….ரொம்ப அழகா இருக்கு இந்த குட்டி ஏஞ்சல்…” என சிரித்தாள் தூரிகை. 

             “ஆமா…ஆமா…” என பஞ்சுபொதி போன்ற அப்பிஞ்சின் கையை தூரியின் கன்னத்தில் வைத்தாள் மகி. 

             அதில் சிலிர்த்த தூரி, “பேசாம குழந்தையாவே இருந்து இருக்கலாம் க்கா…இப்பிடி கஷ்ட்டப்பட்டு இருக்க வேண்டியதில்லை…” என்றாள். 

               “அப்பிடிலாம் ஒன்னும் இல்ல தூரிமா….சரி….சொல்ல மறந்துட்டேன்….நாளைக்கி பஞ்சாயத்துல உன்னைய அந்த பொறுக்கிய அடையாளம் காட்ட சொல்லுவாங்க….தைரியமா யாருக்கும் பயப்படாம சொல்லனும் சரியா? ” மகி. 

            “அக்கா…பயமா இருக்கு…எல்லாரும் என்னைய தப்பா…இரக்கத்தோட பாப்பாங்களே….அத்தோட….அவன்…அவன பாக்கவே பயமா இருக்கு க்கா…” தூரிகை. 

              “யாரு என்ன சொன்னாலும்…என்ன நடந்தாலும் மனச தளற விடக்கூடாது தூரி…உன்னோட இந்த நிலைக்கு காரணமானவனுக்கு தண்டனை வேண்டாமா? சொல்லுறவங்க சொல்லிட்டு போகட்டும்….உன்னோட வாழ்க்கைய நீதான் வாழப்போற தூரி…நாளைக்கி நான் உன் கூட தான் இருப்பேன்….உதி, தீரன் எல்லாரும் உன் கூட தான் இருப்போம்…அப்புறம் உனக்கு என்ன பயம்? ” மகி. 

              “நீ என் கூட இருப்பியா க்கா? ” தூரிகை. 

               “உன் கூட….உன்னைய பாதுகாத்து…உனக்கு துணையா நான் இருப்பேன் டா தூரி…” என கைக்குழந்தையுடன் தூரிகைக்கு சத்தியம் செய்தாள் மகி. 

              நாளை அவளது பெண்மையும் மனமும் சுக்கு நூறாய் உடைந்து சிதறப்போவது அறியாமல் தூரிகைக்கு ஆறுதல் கூறினாள் மகி. 

                                    (காதல் தீ பரவும்….)

                          -செல்லம்மாள்பாரதி 

              

              

    No comments yet.