காதல் தீ -27

Chellammal Bharathi | 07 Dec 2025 | Share

               அடர்ந்த மரங்களின் குளுமையான காற்று வீசிக்கொண்டிருக்க… அதற்கு நேர் மாறாக அந்த மரங்களின் அடியில் அமர்ந்து இருந்தவர்களின் நெஞ்சில் அனல் வீசிக்கொண்டிருந்தது. 

              வீசிய காற்றில் பறந்த மகியின் துப்பட்டா கூரிய வாளாக தோன்ற… அதை கட்டுக்குள் கொண்டு வந்து கைக்குள் வைத்தபடி நிற்கும் மகிழ்விழி போர் வீராங்கனையாக அங்குள்ள சிறுவர்களுக்கு தோன்ற… அதை தனது சகாக்களிடம் ரகசியமாக பேசிக் கொண்டிருந்தனர். 

             மகியின் நலம் விரும்பிகளான சிதம்பரம், ராசேந்திரன் மற்றும் இந்திரன் பதட்டத்துடன் மகிழ்விழியை பார்த்தபடி இருந்தனர். உதியனை மட்டும் அந்த இடத்தில் காணவில்லை. 

            மகியின் அருகில் நின்று தீரன் பார்த்த பார்வையில் பல நூறு எரிமலைகள் வெடிக்க… இது எதை பற்றியும் கவலைப்படாமல்… செந்தனலில் பூத்த மலரென அனலை அங்குள்ள காற்றில் மணம் வீச செய்து கொண்டிருந்தாள் மகிழ்விழி. 

                “ஏய்… யாரும்மா நீ மொதல்ல? வெளியூர் பொண்ணா இருந்துட்டு …வந்து எங்க ஊர் பஞ்சாயத்துல கண்டதையும் பேசிட்டு இருக்க? ” ஊர் பெரியவர். 

                “யாரா இருந்தா என்ன? நடக்குற அநியாயத்த யாரு வேணும்னாலும் கேக்கலாம்? ” மகி. 

                “மகி… போதும்.. இத்தோட நிறுத்திக்கோ…. ” என மகியின் காதருகே அடிக்குரலில் சீறினான் தீரன். 

                “ஆரம்பிச்சத பாதில நிறுத்துற பழக்கம் எனக்கு இல்லை…. அப்பிடி உங்களுக்கு பயமா இருந்துச்சுனா நீங்க ஒதுங்கிக்கங்க… இந்த ஊரு தான இவங்களும்…. இந்த ஊருல என்ன நடக்குது னு இவங்களும் தெரிஞ்சுக்கட்டும்… ” என  தீரனுக்கு சூடாக திருப்பி கொடுத்தாள் மகி. 

                “அடியேய்…. ” என கோப மிகுதியில் தீரன் மகியின் காதருகே பல்லை கடித்து துப்புகையில் ஊர் பெரியவர் ஒருவர் குறுக்கிட்டார். 

                 “யப்பா தீரா….நீ என்னப்பா புதுசா இங்க நிக்கிற? உனக்குத்தான் நிறைய வேலை இருக்குமே….எங்களுக்குத்தான் வேலை வெட்டி இல்லாம யார் கூப்பிட்டாலும் பஞ்சாயத்துல வந்து உக்காந்துர்றோம்….  என்று தீரனை மறைமுகமாக சாடினார் ஒரு பெரியவர். 

                 “இங்க பாருங்க தாத்தா…. பஞ்சாயத்த கூட்டிட்டு சொல்லாம போனது என் தப்பு தான்… இல்ல னு சொல்ல ல… ஆனா நான் எதுக்கு அப்பிடி போனேன் னு தெரியாம வார்த்தைய விடுறது ரொம்ப தப்பு….” தீரன். 

                  “ஓஓஓ…..நான் பாத்து வளந்த பய நீ … எனக்கே நீ சரி தப்பு சொல்லி தர்றியா? ” பெரியவர். 

                  “ஏன் பெரியவங்க தப்பு பண்ணவே மாட்டாங்களா? ” என தீரன் அவருடன் மல்லுக்கு நின்றான்.

                  “கொஞ்சம் சும்மா இருக்கீங்களா? அங்க ஒரு பொண்ணு செத்து பொழச்சு இருக்கா… அது ஞாபகம் இருக்கா இல்லையா உங்களுக்கு? ” என தீரனை பார்த்து அவ்விடமே அதிர கத்தினாள் மகி. 

                    “நீ என்னமோ ஒரு பொண்ணு சீரழிஞ்சு போச்சு னு சொல்லுற… இவன் என்னடானா அவன கொல்ல வந்தான் ஒருத்தன் னு வந்து நிக்கிறான்… என்ன பிரச்சனை உங்களுக்கு? ” பெரியவர். 

                 “இந்த ஊருல கலியமூர்த்திய யாருக்கு தெரியும்? ” என அடக்கப்பட்ட சினத்துடன் வினவினாள் மகி. 

                 “இந்தா பொண்ணே….கலியமூர்த்தி எங்க ஊர்க்காரன் தான்…அது எங்களுக்கு தெரியும்…..எங்கள கேள்வி கேட்க நீ யாரு? உனக்கு இந்த ஊருல என்ன பிரச்சனையோ அத மட்டும் என்ன னு சொல்லு… அத விட்டுட்டு தேவை இல்லாம பேசிட்டு நிக்காத… ” ஊர் பெரியவர். 

                “நேத்து இந்த ஊரு பொண்ணு தூரிகை, இந்த ஊரு நாய் ஒருத்தனால சாக இருந்தா…..அவளோட  உடம்ப  அந்த நாயி கண்டபடி நக்கிட்டு …அவள சாகுற நிலையில விட்டுட்டு தலைமறைவாகிருச்சு அந்த மிருகம்… இப்ப அந்த பொண்ணு உயிரு மட்டும் பொழச்சு மோசமான நிலையில ஹாஸ்பிட்டல்ல இருக்கா… ” என அங்குள்ள ஒவ்வொரு ஆண்மகனின் குரல்வளையை கடித்து குதறும் நோக்கில் உச்ச கட்ட வெறுப்பில் சீறினாள் மகி. 

              மகிழ்விழி கூறியதில் அதிர்ந்த ஊர் மக்கள், “இது எப்பிடி உனக்கு தெரியும்? ” எனக் கேட்டார் ஊர் மக்களில் ஒருவர். 

                 “நான் எதார்த்தமா தூரியோட வீட்டுக்கு போனப்ப தான் அவள அந்த நிலைமையில பாத்தேன்…..நானும் உதியனும் தான் ஹாஸ்பிட்டல்ல சேத்தோம்… ஹாஸ்பிட்டல்ல தூரிய அட்மிட் பண்ணிட்டு தான் தீரனுக்கு ஃபோன் பண்ணி விசயத்தை சொன்னேன்…. தீரன் அதனால தான் பஞ்சாயத்த பாதில விட்டுட்டு அங்க வந்தாங்க… ” என புயலுக்கு முன் உள்ள அமைதியின் குரலில் கூறினாள் மகி. 

                  “யப்பா… தீரா… இந்த பொண்ணு சொல்லுறது உண்மையா? ” என தீரனை நோக்கி கேட்டார் ஒரு பெரியவர். 

                   “ம்ம்… ஆமா… ” என தலையாட்டினான் தீரன். “இன்னும் இவ என்னென்ன சொல்ல போறாளோ…அதுக்குள்ள இவ வாய எப்பிடியாச்சும் அடைக்கனுமே… ” என தவிப்புடன் மகியை பார்த்தான் தீரன். 

                  இம்மியளவு கூட தீரனை நோக்காமல் ஊர் பெரியவர்களை பார்த்து, “இதனால தான் கேட்டேன்… இது மனுஷங்க வாழுற ஊரு தானா னு… இப்ப என் கேள்விக்கு பதில் சொல்லுங்க… தூரிக்கு நடந்த அநியாயத்துக்கு பதில் என்ன? “என நிமிர்வுடன் கேட்டாள் மகி. 

                “இதுக்கு காரணம் யாருனு கெட்டுப்போன அந்த பொண்ணுக்கிட்ட கேட்டு அவன போலீஸ் ல புடிச்சு குடுத்துற வேண்டியது தான்… ” என்றார் ஒரு பெரியவர். 

                 “கெட்டுப்போனவளா? தூரிய அப்பிடி யாராவது சொன்னீங்க… பேசுற நாக்க இழுத்து வச்சு அறுத்துருவேன்…. இந்த விஷயம் உங்க பேத்திக்கு நடந்து இருந்தா உங்க பேத்திய இப்பிடித்தான் சொல்லுவீங்களா? ” என மகிழ்விழி சீறும் முன் தீரன் கர்ஜித்தான். 

                தீரன் கூறியதை கேட்ட மகி, பெருமிதமாக அவனை ஒரு பார்வை பார்த்து விட்டு, ” ஒரு பொண்ண எத வச்சு கெட்டுப்போனவ னு சொல்லுறீங்க? ” என அடிக்குரலில் கேட்டாள் மகி. 

                  “கல்லியாணத்துக்கு முன்னாடியே தன்னோட கற்ப இழந்து நிக்கிறாளே… அப்ப அவ கெட்டுப்போனவ தான? என் பேத்தியா இருந்தாலும் அவ கெட்டுப்போனவ தான்… இந்த சமுதாயம் அவள அப்பிடித்தான் சொல்லும்… ” பெரியவர். 

                “கெட்டுப்போறதுக்கு கற்பு என்ன பொருளா? நீங்களெல்லாம் எப்ப தான் திருந்த போறீங்க? நல்லவேளை… சினிமால மாதிரி அந்த மிருகத்துக்கே கல்லியாணம் பண்ணி வைக்கனும் னு சொல்லாம அவன போலீஸ் ல புடிச்சு குடுக்கனும் னு சொல்லுறீங்களே…அது வரைக்கும் ரொம்ப சந்தோஷம்… ” என தன் ஆதங்கத்தை கொட்டினான் தீரன். 

                   தீரனின் ஆதங்கத்தை கண்டவள், அவனின் தோளை தட்டி ஆசுவாசப்படுத்தினாள் மகி. நிதானமாக நிமிர்ந்து ஊர் பெரியவர்களை பார்த்து தன் கேள்விக்கணையை வீசினாள் மகி. 

                “சபாஷ்…. உங்க பேத்தியா இருந்தாலும் அவ கெட்டுப்போனவ தான் னு சொன்னீங்களே…சூப்பர்….கற்ப இழந்தவ னு சொல்லுறீங்களே… அவ கற்ப இழக்கல….அவ கற்போட தான் இருக்கா…கற்பு ங்கிறது என்ன னு தெரியுமா? அது உடம்புல இல்ல….மனசுல இருக்கு….அது பொண்ணுக்கு மட்டும் இல்ல…ஆம்பளயான உங்களுக்கும் தான் இருக்கு…..தான் மனைவிய தவிர வேற பொண்ணுங்களோட கண்ண விட்டுட்டு அவள பாக்குற…பாக்க நினைக்கிற எல்லா ஆம்பளயும் கற்பு இழந்தவன் தான்… உங்க பாஷையில சொல்லனும்னா கெட்டுப்போனவன்…இப்ப சொல்லுங்க….இங்க எத்தனை ஆம்பளங்க கற்போட இருக்கீங்க? ஐ மீன்….கெட்டுப்போகாம இருக்கீங்க? உங்க மனசாட்சிய தொட்டு நேர்மையா பதில் சொல்லுங்க பாப்போம்….” மகி. 

               

                “ஏய்…..தேவை இல்லாம பேசாத….அப்புறம் உயிரோட உன் ஊரு போய் சேர முடியாது…..” என கூட்டத்தில் ஒருவன் துள்ளினான். 

                 “பேசுறவன் எவனா இருந்தாலும் என் முன்னாடி வந்து பேசி நீ சொன்னத செய்….நேத்து தான் என்னைய கொல்ல வந்த ஒருத்தன தூக்கி போட்டு மிதிச்சேன்… உன்னையவும் மிதிக்க நான் ரெடி…” மகி. 

                 “அய்யோ… தேவை இல்லாம பேசுறாளே….” என அவஸ்த்தையுடன், “மகி… ” என மெல்லிய குரலில் அவளின் கரத்தை அழுத்தினான் தீரன். 

                  “உன்னைய கொல்ல வந்தானா? யாரு? தீரனும் நேத்து அவன கொல்ல வந்ததா சொன்னான்…..நம்ம ஊரு பொண்ணுக்கு இப்பிடி ஆகி இருக்கு….இதுவரைக்கும் இது மாதிரி எதுவும் நடந்தது இல்லையே நம்ம ஊருல…” என சரியாக கேட்டார் ஒரு பெரியவர். 

                  “ஆமா…தீரன கொல்ல வந்த அதே நேரத்துல என்னையவும் ஒருத்தன் கொல்ல வந்தான்…..அவன் கிட்ட போராடுனதுல என் ட்ரஸ் கிழிஞ்சுருச்சு…அப்படியே ஊருக்குள்ள வர முடியாதுனு தான் ட்ரெஸ் மாத்த தூரி வீட்டுக்கு போனோம்….அப்ப தான் தூரிய காப்பாத்த முடிஞ்சது….” என தீரன் எதை கூறக்கூடாது என கூறினானோ… அதை சரியாக தெளிவாக கூறினாள் மகி. 

                  “போச்சு… மொத்தமா சொதப்பிட்டா…. “என கடுகடுப்புடன் மகியை முறைத்தான் தீரன். 

                 “தீரா… இந்த பொண்ணு சொல்லுறது உண்மையா? ” என்றார் ஒரு பெரியவர். 

                 “வெள்ளம் தலைக்கு மேலே போயாச்சு… இனி நடக்குறது நடக்கட்டும்….”என நினைத்தவாறு, “ஆமா ஐயா…எங்க ரெண்டு பேரையும் நேத்து கொலை பண்ண முயற்சி நடந்துச்சு… மகிய கொல்ல வந்தவன் ஓடிட்டான்… என்னைய கொல்ல வந்தவன தான் புடிச்சு பஞ்சாயத்துக்கு உங்க முன்னாடி இழுத்துட்டு வந்தேன்… நீங்க அவன தப்பிக்க விட்டுட்டீங்க……” என்றான் தீரன். 

                 “உங்க ரெண்டு பேரையும் ஏன் கொல்ல பாக்கனும்? அப்பிடி உங்களுக்கு யாரு எதிரி? அதுவும் இந்த வெளியூர்க்கார பொண்ணுக்கு? ” என ஒருவர் யோசனையாக இழுத்தார். 

                  “வேற என்னவா இருக்கும்….இந்த தீரன் கிட்ட அடிவாங்குன எவனாச்சும் கொல்ல பாத்து இருப்பான்….இவன பழிவாங்கனும் னு நினைச்சு இவன் கூட பல்ல இளிச்சுட்டு சுத்திக்கும் திரியுற இவளயும் கொல்ல பாத்து இருப்பான்…” என கூறியபடி  பஞ்சாயத்தில் ஒருவன் புதிதாக முளைத்தான். 

                 அவன் கூறியதை கேட்ட மகியும் தீரனும் அதிர்ந்து நின்றனர். தங்கள் இருவரையும் இணைத்து தவறாக பேசவும் ஒரு நிமிடம் வாயடைத்து நின்றனர். 

                அதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட அவன், “ரெண்டு பேரும் ஜோடியா  வயல் பக்கம் ரகசியமா மினுக்கிட்டு சுத்திட்டு திரியுறத தான் நிறைய பேர் பாத்து இருக்கோமே….இவ பெரிய ஒழுக்கம் மாதிரி ஒழுக்கத்த பத்தி இவ க்ளாஸ் எடுக்குறா….” என்றான். 

              இதுவரை தன்னை யாரும் இப்பிடி தரக்குறைவாக பேசி கேட்டிராதவள் அதிர்ந்து நின்றாள் மகி. அவளின் நிலையை அறிந்த தீரன், “ஆதாரம் இல்லாம ஒரு பொண்ண பத்தி தப்பா பேசக்கூடாது னு உன் அம்மா உனக்கு சொல்லி குடுக்கலயா? ” என்றான். 

               “என் அம்மா எனக்கு நல்லா தான் சொல்லி குடுத்து வளத்து இருக்கா…இவ அம்மா இவள ஒழுங்கா வளக்கலயோ? அதான் ஊரு முன்னாடி ஒருத்தன் கூடவும்…ஊருக்கு வெளிய வயக்காட்டுல இன்னொருத்தன் கூடவும் சுத்திட்டு திரியுறாளோ? ” என்றான் அப்புதியவன். 

                “இந்தாப்பா….இப்பிடிலாம் பேசாத….ஆனாலும் தீரா… இந்த பொண்ணு உன் கூட சுத்துறத நானே பாத்து இருக்கேன்…ஊருக்குள்ள அந்த உதி பய கூட உரசிட்டு சுத்துறா….சரி.. அவன் கூட படிக்கிற பையன்..தோஸ்த்து னு வச்சுப்போம்….உன் கூட சுத்துறாளே அதுக்கு பேரு என்ன? நீங்க ரெண்டு பேரும் என்ன கல்லியாணமா பண்ணிக்க போறீங்க? உன் கூட சுத்த? ” என்றார் ஒரு பெரியவர். 

                “ஆமா….கட்டிக்க போற பொண்ணு தான் னு சொல்லு தீரா…” என மனதினுள் தவித்தார் சிதம்பரம். “நிலமை கைமீறிப்போனால் உண்மையை உடைத்து கூறி விட வேண்டியது தான்…..” என நினைத்தவாறு தவிப்புடன் மகியையும் தீரனையும் பார்த்தார் சிதம்பரம். 

                “நான் கட்டிக்க போற பொண்ணு தான்… ” என்ற வார்த்தை தீரனின் நுனி நாக்கு வரை வந்ததை ,”இது சினிமா இல்ல.. இப்பிடி சொன்னா அவளோட வாழ்க்கையும் சேத்து பாழா போயிரும்… “என்றெண்ணி அந்த வார்த்தையை மென்று உள்ளே விழுங்கி ,”ஒரு பொண்ண நீங்களே இப்பிடி தப்பா பேசலாமா? ” என அப்பெரியவரை பார்த்து கேட்டான் தீரன். 

                   “தன்னோட நடத்தைய தீர்மானிக்க இவங்க யாரு? மொதல்ல இவன் யாரு புதுசா? என்னைய கேவலப்படுத்த இவன் ஏன் இப்படி முன்னாடி நிக்கிறான்? ” என தனது சுய சிந்தனையில் மூழ்கி அப்புதியவனை அமைதியாக கூர்ந்து கவனித்தாள் மகிழ்விழி. 

               “நெருப்பில்லாம புகையாது தீரா…உன்னைய பத்தி எங்களுக்கு தெரியும்… நீ இந்த ஊருப்பையன்….ஆனா இந்த பொண்ணு வெளியூர்…அதுவும் டவுன்…அங்க இந்த மாதிரி கட்டுப்பாடு எதுவும் இல்லை…எப்பிடி வளந்தா னு நமக்கா தெரியும்? நம்ம ஊரு பொண்ணுங்க இது மாதிரி ஆம்பளங்க முன்னாடி வந்து நின்னு பேசி நம்மள அவமானப்படுத்துவாங்களா ? இப்பிடி வளந்த பொண்ணு உன்னைய மயக்கி கைக்குள்ள போட்டுக்க கூட இப்பிடி உன் இழைஞ்சுட்டு திரியலாம்… யாரு கண்டா? உன்னைய கட்டிக்க போற பொண்ணா இருந்தா அந்த உரிமையில உன் கூட சுத்துறா னு சொல்லலாம்…..” என அப்புதியவன் மகியின் ஒழுக்கத்தை தாக்கி பேச….அதில் கோபமடைந்த தீரன் கையை முறுக்கி கொண்டு வந்தான்

           அதே நேரத்தில், “ஆமா டா….மகி தீரன கட்டிக்கப்போறவ தான்… என் மருமக அவ.. ” என சிதம்பரம் கூற வாய் திறந்த நொடி …அவரின் மனதின் உள்ள சொற்களை இடி முழக்கம் போல் முழங்கியது ஒரு குரல்…..

                 அதன் விளைவு இனி மகிழ்விழி சிங்கபுணரியை விட்டு செல்லக்கூடாது என அவளுக்கு ஊர் தடைப்போட்டது.

                                 (காதல் தீ பரவும்…..)

                         -செல்லம்மாள்பாரதி 

          

    No comments yet.