மகிழ்விழியும் உதியனும் மருத்துவமனையை விட்டு சென்ற பிறகு தீரன் அங்கு உள்ள ஒரு இருக்கையில் அமர்ந்து ஆழ்ந்து யோசித்தான்.
“மகி இந்த ஊருக்கு வந்து நாலஞ்சு நாளு தான் ஆகுது… அவளுக்கு இந்த ஊருல எதிரி யார் இருக்க முடியும்? அதுவும் அவள கொலை பண்ற அளவுக்கு? அவ எந்த பிரச்சனையில சம்பந்தப்பட்டு இருக்கா? அவ சம்பந்தப்பட்ட ஒரே பிரச்சனை அந்த ஆத்து மணல அள்ளுன பிரச்சினை தான்….அவனுக தான் இந்த வேலைய பாத்து இருப்பானுகளோ? ” என யோசித்துக்கொண்டு இருக்கையில் நர்ஸ் வந்து தீரனை அழைத்தார்.
“ஸார்….நீங்க அட்மிட் பண்ணுன பேஷன்ட் கண் முழிச்சுட்டாங்க….” நர்ஸ்.
நர்ஸ் கூறியதும் துள்ளி எழுந்த தீரன், “தேங்க்யூ சிஸ்டர்… ” எனக் கூறி விட்டு தூரிகையின் அறையை நோக்கி கிட்ட தட்ட ஓடினான்.
அறைக்கதவை வேகமாக தள்ளியவன் வெளியில் நின்றபடியே தூரிகையை பார்த்தான் தீரன்.
கண் விழித்த தூரிகை, தீரனை கண்டதும்…”அண்ணே…” என மெல்லிய குரலில் அழைத்தாள்.
“பாப்பா….” என அதற்கு மேல் பேசத்தெரியாமல் தூரிகையின் தலையை பாசத்துடன் வருடி விட்டான் தீரன்.
தீரனின் பாச வருடலில் கண்ணீர் சிந்தினாள் தூரிகை. தூரிகையின் கண்ணீரைக் கண்டவன், “அழாத மா… நீ அழக்கூடாது…உன்னைய இப்படி அழ வச்சவன தான் நீ அழ வைக்கனும்… யாரு னு அண்ணே கிட்ட சொல்லு மா… அந்த **** நாய நான் கவனிச்சுக்கிறேன்…” என நெகிழ்ச்சியுடன் ஆரம்பித்து கோபத்தில் முடித்தான் தீரன்.
. “வேண்டாம்… ” என பொருள்படுமாறு தலையை ஆட்டினாள் தூரிகை.
“பயப்படாம சொல்லுமா… ” தீரன்.
தன் கண்ணை மூடி சத்தமில்லாமல் கண்ணீர் சிந்தி அழுத தூரிகை, மெதுவாக தீரனின் காதில் நடந்தது அனைத்தையும் கூறினாள்.
தூரிகை கூறுவதை கேட்க கேட்க தீரனின் நெஞ்சில் ஒரு புயலே உருவானது. அதன் விளைவாக அவனது முகம் உலைக்களமாக மாறி செந்தனல் வீசியது.
தீரனின் முகத்தை பார்த்த தூரிகை, “அண்ணே…..”என பயத்தில் மிரண்டாள்.
தூரிகையின் குரலில் இருந்த நடுக்கத்தை உணர்ந்த தீரன், “நீ பயப்படாத… நீ எதை பத்தியும் கவலைப்படாம நல்லா ரெஸ்ட் எடு… ” என குரல் இறுக கூறியவன் தூரிகையின் கூந்தலை கோதி விட்டான்.
“அண்ணே… என்னைய யாருண்ணே முதல்ல பாத்தது? ” என உள்ளத்து வேதனையை உள்ளடக்கியப்படி கேட்டாள் தூரிகை.
“மகி… ” தீரன்.
“அக்காவா? ” தூரிகை.
“நீ ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காத… என்ன நடந்துச்சுனு நான் சொல்லுறேன்… ” என்று தூரிகையை ஹாஸ்பிடலில் சேர்த்த கதையை கூறினான் தீரன்.
“உதி தான் ரொம்ப பாவம்…. பித்து பிடிச்சவன் மாதிரி இருந்தான்… ” தீரன்.
தீரன் கூறிய செய்தியில் தன்னை முதன் முதலாக உதியன் கண்டு பேசியதையும் தான் அவனை சேற்றில் தள்ளி விட்டதும் நினைவில் வர… கூடவே தனது தற்போது நிலையும் ஒருங்கே நினைவு வர… உள்ளம் நொறுங்கி போனாள் தூரிகை.
தூரிகை ஏதோ சிந்தனையில் மூழ்கி பிறகு கண்ணீர் சிந்துவதை கண்ட தீரன், “இப்போ இவளுக்கு கண்டிப்பா மகி ஹெல்ப் வேணும்… ” என முடிவு செய்து மகியின் ஃபோன் நம்பர் தெரியாததால் உதியனின் ஃபோனிற்கு கூப்பிட்டான்.
உதியனிடம் விசயத்தை கூறி… மகியை உடனே அழைத்து வருமாறு கூறிவிட்டு ஃபோனை அணைத்தான் தீரன். தூரிகை கூறிய அனைத்தும் தீரனின் நெஞ்சில் முட்டி மோதி கொண்டிருக்க தீரனின் கோபம் எந்நேரமும் வெடித்து சிதற தயாராக இருந்தது.
சிறிது நேரத்தில் மகியை அழைத்துக் கொண்டு உதியன் பரபரப்புடன் வர… அவர்களை தொலைவில் கண்டுவிட்டு இருவரையும் ஹாஸ்பிடலின் வெளியே தனியே அழைத்துச் சென்றான் தீரன்.
“அண்ணே… தூரி நல்லா இருக்காளா? பேசுனாளா? ” என பரபரப்புடன் கேள்விக்கு மேல் கேள்வியாக தீரனைப் பார்த்து கேட்டான் உதியன்.
ஆனால் தீரனின் முகத்தை பார்த்த மகி ,”யாரு ? ” என்ற ஒற்றை கேள்வியை உறுதியாக கேட்டாள்.
எஃகு போன்ற குரலில் தூரிகை கூறியவற்றை வலியுடன் மகியிடமும் உதியனிடமும் தீரன் கூற….அதை கேட்ட இருவரும் அடித்து வைத்த சிலையென நின்றனர்.
“உதி….உனக்கு ஆள அடையாளம் தெரியும் தான? ” என தீரனை பார்த்தவாறு உதியனை கேள்வி கேட்டாள் மகி.
கையில் பைக் சாவியை எடுத்து, “போகலாம் மகி… ” என ஆறா பெருக்கெடுத்து ஓடும் சினத்துடன் கூறினான் உதியன்.
“நீ எங்க போற மகி? ” என நிதானமாக கேட்டான் தீரன்.
“எனக்கு அவன் பேரு மட்டும் தான் தெரியுது… ஆள அடையாளம் தெரியாதுல… உதி அடையாளம் காட்டுனா மட்டும் போதும்… அவன என்ன பண்ணனும் னு எனக்குத் தெரியும்… ” என பொங்கி வரும் சினத்தை ஒன்றாக திரட்டியபடி பொறுமையாக பதில் கூறினாள் மகி.
“நீ அங்க போறத விட.. இங்க உனக்கு முக்கியமான வேலை இருக்கு…உன் தங்கச்சிய கூட இருந்து நீதான் கவனிச்சுக்கனும்….அவன நானும் உதியும் பாத்துக்கிறோம்.. ” தீரன்.
“அவன உருத்தெரியாம அழிச்சுட்டு தூரியோட உண்மையான அக்காவா அவள வந்து பாக்குறேன்… ” மகி.
” ஓவரா உணர்ச்சிவசப்படாம நான் சொல்லுறத செய்டி… உன்னோட பங்கு இங்க தான் அவசியம்… அவள மனசளவுல பலமா மாத்த உன்னால தான் முடியும்…..” என கோபத்துடன் மகியின் மூச்சுக்காற்று உரசும் நெருக்கத்தில் நின்று அவளின் விழிகளுக்குள் ஊடுருவியபடி ஆணையிட்டான் தீரன் .
தீரனின் விழியில் உள்ள ஆளுமையில் தன்னை அறியாமலே, “சரி…” என்றாள் மகி.
தான் ஒரு முடிவு எடுத்தால் அதிலிருந்து யாருக்காகவும் எதற்காகவும் தன்னை மாற்றிக்கொள்ளாதவள் தீரன் கூறிய வார்த்தையில் அடங்கி சரியென தலையாட்டும் மகியை புதிதாக பார்த்தான் உதியன்.
உதியனின் ஆச்சரியப்பார்வையை ஓரக்கண்ணால் கவனித்த தீரன், மகியின் கன்னத்தை தட்டி விட்டு ,”வா உதி…” என உதியனை அழைத்துக்கொண்டு வேட்டைக்கு புறப்படும் சிங்கமென தீரா பசியென பொங்கிய சினத்துடன் சென்றான் தீரன் .
தீரனும் உதயனும் செல்வதை பெருமூச்சுடன் பார்த்தவள்…தூரிகையை பார்க்க சென்றாள் மகி .
தூரிகை இருந்த அறைக் கதவைத் திறந்து மெதுவாக உள்ளே சென்று, “தூரிமா…” என்றாள் மகி.
மகியின் குரலைக்கேட்ட தூரிகை, “அக்கா…” என கண்ணீர் சிந்தினாள் தூரிகை.
“ஏன்டா தங்கம் அழுகுற? ” மகி.
“உடம்பெல்லாம் வலிக்குது க்கா… தாங்க முடியல க்கா…..” தூரிகை.
“என் தங்கமே… ” என கண்ணீருடன் தூரிகையை அள்ளி நெஞ்சோடு அணைத்துக்கொண்டாள் மகி.
” சரி ஆகிரும் டா… அக்கா இருக்கேன்ல…. ” என ஆதரவாக தூரிகையின் முதுகை தட்டிக்கொடுத்தாள் மகி.
“நான் கெட்டுப்போயிட்டேனா அக்கா? ” தூரிகை.
“அப்பிடி யாருடா சொன்னது? என் தங்கச்சி வைரம் டா… வைரத்த தப்பா தொடுறவங்கள அறுத்து குத்தி கிழிச்சிரும்… நினைச்சு பாக்க முடியாத அளவுக்கு வைரம் உறுதியானது தூரி… அது என்னைக்கும் எப்போதும் எதுக்காகவும் உடைஞ்சு போகாது மா… ” மகி.
“இந்த ஊரு என்னைய தப்பா பேசுமே க்கா… அது கூட பரவாயில்லைக்கா… அடுத்தவங்க பாக்குற இரக்க பார்வைய தாங்கிக்க முடியாதுக்கா…. பயமா இருக்கு க்கா… ” தூரிகை.
“இது உன்னோட வாழ்க்கை தூரிமா… அடுத்தவங்களோட எந்த விமர்சனத்தையும் நீ மண்டையில ஏத்திக்கனும் னு அவசியமே இல்லை…உன் வாழ்க்கைய நீதான் வாழப்போற….அடுத்தவங்க இல்லை… உனக்கு பசிச்சா நீதான சாப்பிடுற? வாழுறப்ப மட்டும் ஏன் அடுத்தவங்க கருத்த பாக்குற? ” மகி.
“சரி க்கா…” என அரைமனதுடன் தலையாட்டினாள் தூரிகை.
“எதை பத்தியும் யோசிக்காம தூங்கு….அக்கா உன் கூடவே இருப்பேன்…” என தூரிகையின் கரத்தை ஆதரவாக அழுத்தினாள் மகி.
மருந்தின் வீரியத்திலும் உடல் வலியிலும் சிறிது நேரத்தில் கண்ணுறங்கினாள் தூரிகை. மறுநாள் தூரிகை கண் விழிக்கையில் ,அவள் அருகே செண்பகமும் பல்லவியும் அமர்ந்து இருந்தனர்.
அவர்களை கண்ட தூரிகை, “அம்மா…அக்கா எங்க? ” என்றாள்.
“அவ வீட்டுக்கு போய் குளிச்சுட்டு வர்றேன் னு போய் இருக்கா டா….” என்றார் செண்பகம்.
“அவ இந்நேரம் என்ன ஏழரைய கூட்டி இருக்காளோ தெரியலயே….” என மெல்லியதாக முனங்கினார் பல்லவி.
அதே நேரம், மகி ஊர் பஞ்சாயத்தை கூட்டி இருந்தாள். நீதி கேட்டு வந்த கண்ணகியாக வானுக்கும் மண்ணுக்கும் ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிற்கும் ஆழிப்பேரலையாக நின்றிருந்தாள் மகிழ்விழி.
“யம்மா….வெளியூர்க்காரப் பொண்ணு….உனக்கு என்ன பிரச்சனை மா? ” என்றார் ஒரு பெரியவர்.
“ஊர் விட்டு ஊர் வந்து இருக்குற உனக்கு என்ன பிரச்சனை? ”
“என்ன னு கேக்குறோம் ல… பதில் சொல்லாம திமிரா நிக்கிற…”
“இந்த காலத்து பசங்களுக்குலாம் எல்லாம் விளையாட்டா போச்சு…” என பெரியவர்கள் அனைவரும் மகியை கேள்வி மேல் கேள்வியாக கேட்க எதற்கும் பதிலளிக்காமல் இரும்பென நின்றிருந்தாள் மகி.
“இந்த ஊருல வாழுற நீங்க எல்லாம் மனுஷங்க தான? ” என நிதானமாக கேட்டாள் மகி.
மெல்லிய உறுதியான குரலில் சீறிப்பாய்ந்திடும் அம்பென மகியின் கேள்வி அங்கு உள்ள பெரியவர்களின் நெஞ்சில் ஆழமாக தைத்தது.
மகி பஞ்சாயத்தை கூட்டி இருக்கும் விசயத்தை அறிந்த இந்திரன், சிதம்பரம் மற்றும் ராசேந்திரன் என அனைவரும் அங்கு வந்து சேர்ந்தனர்.
மகி கேள்வி கேட்ட அந்த நொடி இரவில் வெளியில் சென்ற தீரனும் உதயனும் பஞ்சாயத்திற்கு வந்தனர்.”அவ்ளோ சொல்லியும் இப்பிடி பண்ணிட்டாளே….” என கோபத்துடன் மகியை உறுத்து விழித்தபடி தனது கையில் படிந்து இருந்த குருதியை யாருக்கும் தெரியாமல் மறைத்தான் தீரன்.
தீரனின் தீப்போன்ற பார்வையோ…ஊர் பெரியவர்களின் கோபமான கேள்விகளோ மகியை துளி கூட அசைக்கவில்லை.
“அங்க ஒரு பொண்ணு பெத்த அப்பனாலயே செத்து பொழச்சு இருக்கா….நீங்க எல்லாம் மனுஷங்க தானா ? இதெல்லாம் மனுஷங்க வாழுற ஊரா? தூ…” என மொத்த ஊரையும் பார்த்து காரித்துப்பினாள் மகி.
(காதல் தீ பரவும்….)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.