பரபரப்பாக பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கையில் தனது ஃபோனில் வந்த செய்தியை கேட்டு யாரையும் எதையும் கண்டுகொள்ளாமல் தீரன் சென்றதும் திகைத்து நின்றார் சிதம்பரம்.
“தீரா… டேய்… தீரா… எங்க போற” எனக் கத்திக்கொண்டே பல்சரில் பறக்கும் தனது மகன் தீரனை அழைத்தார் சிதம்பரம்.
எதையும் கேட்காமல் தீரன் அங்கிருந்து புறப்பட்டு சென்றதும் அந்த கொலைகாரன் பேச ஆரம்பித்தான்.
“பாத்தீங்களா ஐயா… தான் மேல தப்பு இல்லனா ஏன் இப்படி பாதியில ஓடனும்? ” என அங்கிருக்கும் பெரியவர்களை உசுப்பேற்றி விட்டான் தீரனை கொல்ல வந்தவன்.
“யப்பா… சிதம்பரம்… என்னப்பா உன் பையன் இப்பிடி ஓடுறான்? ” என ஒரு பெரியவர் சிதம்பரத்தை பார்த்து கேட்டார்.
“ஊர் பெரியவங்க மன்னிச்சுக்கங்க… காரணம் இல்லாம என் பையன் இப்பிடி செய்ய மாட்டான்… உங்களுக்கே இது தெரியும்.. ” சிதம்பரம்.
“என்னதான் அவசரமா இருந்தாலும் எதுவும் சொல்லாமலா ஓடுறது? நாங்க என்ன னு நினைக்கிறது? ஊர் பஞ்சாயத்த கூட்டுனது எங்கள இப்பிடி கூப்பிட்டு அசிங்கப்படுத்தவா? ” ஊர் பெரியவர்.
“அதான? எங்களுக்கு என்ன வேலை வெட்டி எதுவும் இல்லை னு நினைச்சுட்டானா உன் மவன்? “என்றார் மற்றொரு பெரியவர்.
“நீங்க நினைக்கிற மாதிரி எதுவும் இருக்காது… ” என சமாளித்தார் சிதம்பரம்.
“வேற எப்பிடி நாங்க நினைக்கிறது? தீரன் தான் பஞ்சாயத்த கூட்டுனான்… இப்ப அவனே போய்ட்டான்… என்ன தான் நினைச்சுட்டு இருக்கான் உன் மவன்? ” ஊர் பெரியவர்.
“இப்ப வந்துருவான்… ” சிதம்பரம்.
“யப்பா… பெரிய மனுஷன் நீயுமா இப்பிடி பொறுப்பில்லாம பேசுற? உன் மவன் பண்ணுனது சரியா னு நீயே சொல்லு….இப்ப வந்துருவான் ங்கிற… என்ன பதில் இதெல்லாம்? ” ஊர் பெரியவர்.
“கண்டிப்பா ஏதாவது முக்கியமான விசயமா தான் போய் இருப்பான்… இல்லனா இப்பிடி பாதியில போக மாட்டான்… உங்க முன்னாடி தான வளந்தான் தீரன்… உங்களுக்கு அவன பத்தி தெரியும் தான? ” சிதம்பரம்.
“இங்க வெறும் வாய் பேச்சுக்கு எந்த வேலையும் இல்ல சிதம்பரம்… ஏதாவது சொல்லிட்டு போய் இருக்கனும்… அவன் பாட்டுக்கும் போறான்…. ” ஊர் பெரியவர்.
“ஐயா… என்னைய கொஞ்சம் நினைச்சு பாருங்கய்யா…வீட்ல எனக்காக பொண்டாட்டி புள்ளங்கலாம் காத்துட்டு இருப்பாங்க… ” என ஊர் பெரியவர்களின் இடையில் புகுந்தான் கொலைகாரன்.
“அதான… எந்த ஆதாரமும் இல்லாம இவன எப்பிடி நாம புடிச்சு வைக்கிறது? இங்க கூடி இருக்குற அத்தனை பேருக்கும் ஜோலி இருக்கு… ” ஊர பெரியவர்.
ஊர் பெரியவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாமல் திணறி தவித்தார் சிதம்பரம்.
“சும்மா எல்லாரோட நேரத்தையும் விரயம் பண்ணிட்டு இருக்கான் உன் மவன்…கண்டிச்சு வை அவன… ” என சிதம்பரத்தை எச்சரித்தார் ஊர் பெரியவர் ஒருவர்.
“தம்பி… நீ போகலாம் ப்பா… இத்தோட இந்த பஞ்சாயத்து கூட்டம் கலையுது… ” என தீரனை கொல்ல வந்த கொலைகாரனை விடுவித்து பஞ்சாயத்தை கலைத்தனர் சிங்கம்புணரி கிராம பெரியவர்கள்.
நடந்ததை ஃபோனில் தன் மகன் தீரனிடம் கூறி முடித்தார் சிதம்பரம்.
“எதுக்குடா இப்பிடி பண்ணுன? ஊர் முன்னாடி என்னைய கை கட்டி நிக்க வச்சுட்டியேடா தீரா… ” என வருத்தப்பட்டார் சிதம்பரம்.
“அப்பா… நான் வேணும்னு இப்பிடி பண்ணலப்பா… நம்ம ஊருல புதுசு புதுசா நிறைய நடக்குதுப்பா… ” என தூரிகைக்கு நடந்த விபத்தை தன் தந்தையிடம் கூறினான் தீரன்.
“தீரா…. நம்ம ஊருல இப்பிடி பொம்பள புள்ளைங்களுக்கு பாதுகாப்பு இல்லாம இருந்தது இல்லையே தீரா… யார் இத செஞ்சு இருக்க கூடும்? ” சிதம்பரம்.
“அதான்ப்பா எங்களுக்கும் தெரியல… ” தீரன்.
“எங்களுக்கும்னா? மகியும் உதியனும் அங்க தான் இருக்காங்களா? ” சிதம்பரம்.
“ஆமா ப்பா… மகிக்கு இப்ப தான் ட்ரீட்மெண்ட் முடிஞ்சது… உதி தான் ரொம்ப உடைஞ்சு போய்ட்டான்… ” தீரன்.
“இப்ப அந்த பொண்ணு எப்பிடி இருக்கா? அவங்க வீட்டுல சொல்லிட்டீங்களா? ” சிதம்பரம்.
“டாக்டர் எந்த பிரச்சினையும் இல்லை னு சொல்லி இருக்காங்க… அந்த பொண்ணுக்கு அம்மா இல்லையாம் ப்பா… அப்பா மட்டும் தான்…. பேரு கூட… ஏதோ கலியமூர்த்தியாம்… வயல் நடுவுல அவங்க வீடு… ” தீரன்.
“என்ன… கலியமூர்த்தியா? டேய்… அவன் சரியான குடிகாரன்டா… குடிச்சுட்டு வந்து பொண்டாட்டி மேல சந்தேகப்பட்டு சண்டை போட்டதுல தான் அந்த பொண்ணு இறந்து போச்சு… உனக்கு அவர தெரியாதா? ” சிதம்பரம்.
“என்ன ப்பா சொல்லுறீங்க? இது எனக்கு தெரியாதே…. பசங்கள விட்டு விசாரிக்க சொல்லி இருக்கேன்… ” தீரன்.
“சரி… நானும் போய் என்னனு பாக்குறேன்… நீ மகியையும் உதியையும் வீட்டுக்கு அனுப்பி வை…. நைட் நீ அங்கயே தங்கிக்கோ… அந்த பொண்ண பத்ரமா பாத்துக்கடா…. கொஞ்ச நேரத்துல நானும் வர்றேன் அங்க… ” சிதம்பரம்.
“சரி ப்பா… ” என ஃபோனை அணைத்துவிட்டு தனது தந்தை கூறியவற்றை மகியிடமும் உதியனிடமும் கூறினான் தீரன்.
“ச்சே… முதல்ல தூரியோட அப்பாவ தேடனும்…. அவ அப்பாவ பத்தி எதுவும் சொல்ல லயே தூரி… ” மகி.
“அதெல்லாம் மெதுவா பாத்துக்கலாம்…. நான் இங்கயே இருக்கேன்… நீங்க ரெண்டு பேரும் வீட்டுக்கு கிளம்புங்க…. போய் ரெஸ்ட் எடுத்துட்டு காலையில வாங்க… ” தீரன்.
“இல்ல… நாங்களும் இங்கயே இருக்கோம்…. ” உதியன்.
“சொல்லுறத கேளு உதி…. சின்ன பசங்க நீங்க… காலையில இருந்து சாப்பிடாம அலைஞ்சுட்டு இருக்கீங்க… உங்க வீட்ல உங்கள காணோம் னு தேடிட்டு இருப்பாங்க… நைட் மட்டும் தான? நான் பாத்துக்கிறேன்…. நீங்க வீட்டுக்கு போய்ட்டு காலையில வாங்க… ” தீரன்.
“சரி ண்ணே…. “என மனதே இல்லாமல் தீரன் கூறியதற்கு தலையாட்டினான் உதியன்.
“மகி…. நான் சொன்னது நினைவு இருக்கட்டும்…. அவங்க கொல்ல வந்தது என்னைய மட்டும் தான்…. சரியா? ஊரு விட்டு ஊரு வந்து இருக்க….வீணா பிரச்சனையில மாட்டிக்காத…. ” என மகிக்கு மீண்டும் அறிவுறித்தினான் தீரன்.
“சரி… ” என தீரனுக்கு தலையாட்டியவாறே மனதினுள் அவன் கூற்றுக்கு எதிராக திட்டத்தை தீட்டிக்கொண்டாள் மகி.
இருவரும் ஹாஸ்பிடலில் இருந்து புறப்பட்டு மௌனமாகவே வீட்டிற்கு வந்தனர். இருவருக்குமே எதுவும் பேச தோன்ற வில்லை தூரிகையின் நிலையை எண்ணி. இருவருக்குள்ளும் ஒரு எரிமலை வெடிக்க ஆயத்தமாகி கொண்டிருந்தது.
இரவு ஆரம்பித்த பிறகு மகியும் உதியனும் வீட்டிற்குள் நுழைவதை கண்ட பல்லவி, ஓடி வந்து மகியை அறைந்தார்.
“காலையில சொல்லாம கொள்ளாம வீட்ட விட்டு வெளியில போய்ட்டு இப்ப தான் வர்ற… என்ன நினைச்சுட்டு இருக்க உன் மனசுல? ” என மகியின் மீது கோவப்பட்டார் பல்லவி.
பல்லவியின் கோவ குரலைக்கேட்டு மற்ற அனைவரும் நடு கூடத்திற்கு வர… இந்திரன் தான் முதலில் மகியின் காயத்தை கவனித்தார்.
“மகி… என்ன ஆச்சு உனக்கு? எப்பிடி காயம் வந்துச்சு? ” என பதறினார் இந்திரன்.
இந்திரன் பதறிய பிறகுதான் அனைவரும் மகியை நன்றாக கவனிக்க…. மகியின் வாடிய முகமும்… அவளின் காயங்களும்… வீங்கிய கன்னமும் அவர்களை மேலும் பதற செய்தது.
“காலையில தான் தீரன யாரோ கொல்ல பாத்தாங்கனு பிரச்சனை போனுச்சு…. இப்ப மகியும் இப்பிடி வந்து நிக்கிறா…என்ன ஆச்சு னு வாய தொறந்து சொல்லு மகி…. டேய்… உதி, நீயாச்சும் என்ன நடந்துச்சுனு சொல்லேன்…. ” செண்பகம்.
“முதல்ல ஆளாளுக்கு பதறாம புள்ளைங்கள உக்கார விடுங்க… ” என இருவரையும் அமர வைத்தார் ராசேந்திரன்.
“இப்ப சொல்லுங்க…. காலையில இருந்து எங்க போனீங்க? மகிக்கு எப்பிடி அடிபட்டுச்சு? ” ராசேந்திரன்.
மகி அமைதியாக தனது தந்தையின் தோளில் சாய்ந்து கொள்ள…. உதியன் நடந்த அத்தனையும் விரிவாக கூறினான்.
“ஐயோ… ஐயோ…. என் மகள கொல்ல பாத்து இருக்காங்களே… ” என அழுக ஆரம்பித்தார் பல்லவி.
“ப்ச்… அழுகாதம்மா…அங்க தூரிய நினைச்சு பாத்தியா நீ? ” மகி.
“மகிய யாரு கொல்ல பாத்து இருப்பா? ஒரே நாளுல மூணு பேருக்கு இப்பிடி ஆகி இருக்கு…. நாளைக்கி காலையில போய் அந்த பொண்ண பாத்துட்டு வரனும்…பாவம் தாயில்லாத பொண்ணு…..” செண்பகம்.
நடந்ததை உதியன் கூறியதில் இருந்து பெரியவர்களுக்கு பயமாகவும் பதட்டமாகவும் இருக்க… “மகி…நான் சொல்லுறத கொஞ்சம் கேளு …நாம நம்ம வீட்டுக்கு போயிறலாம் மகி…. ” என மெதுவாக பல்லவி கூறினார்.
“ஏன்ம்மா? ” மகி.
“எனக்கு பயமா இருக்கு மகி… போயிறலாம் மகி…..” பல்லவி.
“எனக்கும் அதான் சரி னு தோனுது… “செண்பகம்.
” என்னைய பயந்து ஓட சொல்லுறீங்களா? என்னைய ஒருத்தன் கொல்ல பாத்து இருக்கான்… என் தங்கச்சிய சிதைச்சு போட்டு இருக்கான்… நான் ஓடி போய் ஒளிஞ்சுக்கனுமா? ” மகி.
” நீங்க ஏன் பேசாம இருக்கீங்க? நீங்க கொஞ்சம் எடுத்து சொல்லுங்களேன்… ” என பல்லவி தன் கணவரிடம் கூறினார்.
” என் பொண்ண நான் எப்போதும் தைரியமா எதிர்த்து நிக்கனும் னு தான் சொல்லி குடுத்து வளத்து இருக்கேன்… என்ன பண்ணனும்னு அவளுக்கு தெரியும்… அவளோட முடிவு தான் என் முடிவு…. ” இந்திரன்.
“இவரு ஒரு விவஸ்த்தை கெட்ட மனுஷன்… உதி… உன் ப்ரண்ட்க்கு நீயாச்சும் எடுத்து சொல்லுடா…. ” பல்லவி.
“இல்ல ம்மா…. மகி என்ன செய்யனும் னு அவளுக்கு நல்லா தெரியும்….பிரச்சனைய பாத்து ஒதுங்கி போறவளா ம்மா மகி? ” உதியன்.
“ம்மா… நீ பயப்படாத… என்ன செய்யனும் னு எனக்கு தெரியும்…. எனக்கு எதுவும் ஆகாது…. நீயும் அப்பாவும் வேணும்னா வீட்டுக்கு கிளம்புங்க…. நாளைக்கி எனக்கு பெரிய வேலை இருக்கு…. நான் நல்லா ரெஸ்ட் எடுக்கனும்… ” மகி.
“உன்னைய இங்க விட்டுட்டு நாங்க அங்க போய் என்ன பண்ண போறோம் ?” பல்லவி.
“அம்மு… நம்ம லீவ் முடிய மூணு நாள் தான் இருக்கு…. அதுக்குள்ள இங்க உள்ள பிரச்சனைய முடிக்க முடியுமா? ” உதியன்.
” முடிக்கனும்…. சரி… எனக்கு தூக்கம் வருது… எல்லாருக்கும் குட் நைட்… ” என்று கூறி விட்டு தனது அறைக்குள் நுழைந்தாள் மகி.
“அதான் நம்ம புள்ளைங்களே தைரியமா இருக்குதுங்களே… நீங்க பயப்படாம போய் தூங்குங்க… காலையில ஹாஸ்பிடல் போய் அந்த பொண்ண போய் பாக்கனும்… ” ராசேந்திரன்.
“நீங்க என்ன வேணும்னாலும் சொல்லுங்க…. எனக்கு ரொம்ப பயமா இருக்கு… ” பல்லவி.
“ஒன்னும் ஆகாது…. பேசாம வா தூங்க… ” என பல்லவியை உறங்க அழைத்து சென்றார் இந்திரன்.
செண்பகமும் ராசேந்திரனும் குழப்பத்துடனே உறங்க செல்ல… மகியை தவிர மற்ற அனைவர் மனதிலும் நாளைய விடியலை நினைத்து பயமா இருக்க… அங்கு தனது அறையில் தீவிர சிந்தனையில் ஆழ்ந்து இருந்தாள் மகி.
மகியின் அறையினுள் உணவு அடங்கிய தட்டுடன் நுழைந்தான் உதியன்.
தீவிர யோசனையில் மூழ்கி இருந்த மகியின் கூந்தலை ஒதுக்கி விட்டு உணவை பிசைந்து தனது தோழிக்கு ஊட்டிவிட்டான் உதியன். எதுவும் கூறாமல் அமைதியாக உணவை வாங்கி கொண்டாள் மகி. சிறிது நேரத்தில் தன்னுணர்வு அடைந்த மகி, உதியனிடம் இருந்த உணவு தட்டில் உணவை எடுத்து உதியனுக்கு ஊட்டி விட்டாள் மகி.
உதியனும் எதுவும் கூறாமல் அமைதியாக உணவை வாங்கி கொண்டான். அங்கு மௌனமாக ஒரு அன்பு பரிமாற்றம் நிகழ்ந்தது. இருவருக்கும் உணவு எடுத்து வந்த செண்பகம், இருவரும் மாறி மாறி உணவு ஊட்டிக்கொள்வதை கண்டு மனநிறைவுடன் சத்தம் இடாமல் திரும்பி சென்றார்.
உணவு உண்டு முடித்து விட்டு, “எதையும் யோசிக்காம தூங்கு அம்மு… ” என மகிக்கு போர்வையை இழுத்து போர்த்தி விட்டான் உதியன்.
திரும்பி செல்லப்போன உதியனின் கையை பிடித்து நிறுத்தி, “உதி…. நான் நாளைக்கி என்ன செஞ்சாலும் என் கூட நிப்பியா? ” எனக் கேட்டாள் மகி.
” உன் மனசுக்கு சரி னு படுறத செய்….உன் பின்னாடி நான் நிப்பேன்… உனக்காக உன் ப்ரண்டா நான் உன் கூடவே இருப்பேன்…. ” என மகியின் கரத்தை அழுத்தினான் உதியன்.
“எனக்கு இது போதும்…. நீ போய் தூங்கு…. ” மகி.
“சரி அம்மு… ” என மகியின் அறையை கடந்தான் உதியன்.
“உதி… லவ் யூ… ” என செல்லும் தன் நண்பனை பார்த்து கூறினாள் மகி.
அறைக்கதவை மூடப்போன உதி, “லவ் யூ டூ அம்மு… தூங்கு… ” என்று கூறி விட்டு சென்றான்.
அதே நேரம் ஹாஸ்பிடலில் தூரிகை மெதுவாக கண் திறந்தாள். அவள் கண் திறந்த விசயம் அறிந்த தீரன் ,தூரிகையை சென்று பார்க்க….கஷ்ட்டப்பட்டு தீரனின் காதில் தூரிகை ஏதோ கூற கூற…தீரனின் முகம் உலைக்களமாக மாறியது…
மறுநாள் காலையில் பஞ்சாயத்தை கூட்டி நின்ற மகியை கண்டு செந்தணலென உருமாறி நின்றான் தீரன்.
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.