“காலையில வெளில போன பசங்கள இன்னும் காணோமே…. “பல்லவி.
” வருவாங்க… அவங்க என்ன சின்ன பசங்களா? எங்காவது தொலைஞ்சு போக….வந்துருவாங்க பவி… ” இந்திரன்.
“இப்பிடி கடைசி வரைக்கும் உங்க பொண்ணுக்கே சப்போர்ட் பண்ணிட்டு இருங்க… கொஞ்சமாச்சும் பயம் இருக்கா உங்களுக்கு? ” பல்லவி.
“என் பொண்ணு மேல எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு… ” இந்திரன்.
“நீங்க ரெண்டு பேரும் இப்பிடித்தான் எப்போதும் சண்டை போட்டுட்டு இருப்பீங்களா சம்பந்தி? ” என சிரித்தவாறு சிதம்பரம் கேட்டார்.
“இவக்கிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிப் பாருங்க சம்பந்தி… மண்டைய பிச்சுட்டு ஓடிருவீங்க ….நானா இருக்குறதுனால சண்டையோட நிறுத்திர்றேன்… வேற யாராவதா இருந்தா நடக்குறதே வேற… ” என சிரித்தார் இந்திரன்.
“நான் என்ன அவ்ளோ பெரிய கொடுமைக்காரியா? ” என புசுபுசுவென மூச்சு விட்டுக்கொண்டு அடுத்த சண்டைக்கு தயாரானார் பல்லவி.
” பாருங்க…உண்மை அவ வாயில இருந்தே வந்துருச்சு…” இந்திரன்.
” சும்மா இருங்க அண்ணே…நானும் வந்ததுல இருந்து பாக்குறேன்….அண்ணிய கிண்டல் பண்ணிட்டே இருக்கீங்க? ” கருப்பாயி.
” அதானே… ” செண்பகம்.
“மகளிர் அணி ஒன்னு சேந்துருச்சு ப்பா….” என சத்தமாக சிரித்தார் ராசேந்திரன்.
“சரி நாமளே எவ்ளோ நேரம் பேசிட்டு இருக்குறது? மகியையும் உதியையும் இன்னும் காணோமே…” கருப்பாயி.
அந்நேரம் ஊர்க்காரன் ஒருவன், “செண்பகம் ம்மா….செண்பகம் ம்மா… ” என வாசலில் நின்று சத்தமிட்டான்.
“செண்பகம்…யாரோ வந்து இருக்காங்க… போய் என்ன னு பாரு…” என ராசேந்திரன், தன் மனைவியை வெளியே அனுப்பினார்.
“இதோ போறேன் ங்க….” என்றவாறு வெளியே வந்த செண்பகம், “என்னப்பா? யார் வேணும்? ” என்று வாசலில் நின்ற ஊர்க்காரனிடம் வினவினார்.
“அம்மா….சிதம்பரம் ஐயா இங்க இருக்காங்களா? காலையில சிதம்பரம் ஐயாவும் கருப்பாயி அம்மாவும் இங்க வந்ததா சொன்னாங்க….” ஊர்க்காரன்.
” ஆமா… ரெண்டு பேரும் உள்ள தான் இருக்காங்க… ” என்று கூறி விட்டு உள்ளே சென்று விசயத்தை கூறினார் செண்பகம்.
அதைக்கேட்டு வெளியில் வந்த சிதம்பரம், “என்னடா விசயம்? ” என்றார்.
” ஐயா…உங்கள உடனே ஊர் பஞ்சாயத்துக்கு வர சொன்னாங்க ….ஊர் பஞ்சாயத்து கூடி இருக்குங்க… ” ஊர்க்காரன்.
“என்னடா விசயம்? யார் கூட்டுனது?” சிதம்பரம்.
“பஞ்சாயத்து கூட்டுனது தீரன் அண்ணே தானுங்க ஐயா.. ” ஊர்க்காரன்.
” இவனுக்கு வேற வேலை இல்லை….எப்ப பாரு யாரையாவது அடிச்சு பஞ்சாயத்த கூட்டிட்டு இருக்கான்….” என்றவாறு வெளியில் வந்து செருப்பை மாட்டினார் சிதம்பரம்.
“ஐயா… தீரன் அண்ணன தான் யாரோ அடிச்சு கொல்ல பாத்து இருக்காங்க…அதுக்குத்தான் தீரன் அண்ணே பஞ்சாயத்து கூட்டி இருக்காங்க.. ” எனத் தயங்கி தயங்கி ஊர்க்காரன் கூறினான்.
அதில் அதிர்ந்த சிதம்பரம் ,”என்னடா சொல்லுற? ” எனக் கோபத்துடன் கேட்டார்.
அதுவரை அமைதியாக அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கருப்பாயி, “என்ன…என் புள்ளைய கொல்ல பாத்தானுங்களா? ” என அழத்தொடங்கினார்.
” அக்கா…அழாதீங்க… வாங்க….எல்லாரும் போய் என்ன னு பாக்கலாம்… ” செண்பகம்.
வீட்டை பூட்டி விட்டு இந்திரன், பல்லவி, ராசேந்திரன், செண்பகம், சிதம்பரம், கருப்பாயி என அனைவரும் புறப்பட்டு பஞ்சாயத்து நடக்கும் இடத்திற்கு சென்றனர்.
ஊர் நடுவே ஊரே கூடி இருக்க… நடுவில் தலையில் வழிந்த இரத்தத்துடன் தீரன் நின்றிருக்க…அவன் காலடியில் தீரனை கொல்ல வந்தவன் மயக்கம் தெளிந்து கை கால் வாய் கட்டப்பட்டு விழிகளை மட்டும் உருட்டியடி தரையில் விழுந்து கிடந்தான்.
அவனை உறுத்து விழித்தபடி புலியின் உறுமலுடன் கோபத்துடன் நின்றிருந்தான் தீரன்.
“தம்பி…தீரா… என்னப்பா ஆச்சு உனக்கு? ” எனக் கதறியபடி அங்கு கருப்பாயி வந்து சேர்ந்தார்.
“ம்மா… எனக்கு ஒன்னும் இல்லை… நான் நல்லா தான் இருக்கேன்… ” என தன் தாயை ஆசுவாசப்படுத்தினான் தீரன்.
“அய்யோ… இது என்ன தலையில இரத்தம்? ” கருப்பாயி.
” ப்ச்… விடும்மா… சித்தி… அம்மாவ அங்குட்டு கூட்டிட்டு போங்க… ” என செண்பகத்திடம் தன் தாயை ஒப்படைத்தான் தீரன்.
“என்னப்பா ஆச்சு? ” என மெதுவாக தீரனின் காதில் விசாரித்தார் சிதம்பரம்.
யாருக்கும் தெரியாமல் நடந்த அத்தனையும் மெதுவாக தன் தந்தையிடம் மட்டும் கூறினான் தீரன்.
“என்னடா சொல்லுற? அப்ப மகிக்கு என்ன ஆச்சு? ”
“மகிக்கு லைட்டா காயம்… உதி அவள ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் இருக்கான்… இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவான்… ” தீரன்.
” பெருசா காயம் எதுவும் இல்லை ல… மகிய கொல்ல வந்தவன் எங்க? ” சிதம்பரம்.
” பெரிசா எதுவும் இல்லை ப்பா… அவன உதியனோட ப்ரண்ட்ஸ் தூக்கிட்டு வருவாங்க னு உதி சொன்னான்… ” தீரன்.
“சரி… மகிக்கு அடி பட்ட விஷயம் அவளோட அப்பா அம்மா க்கு சொல்லுறது இல்லையா? ” சிதம்பரம்.
“இல்ல…இப்போதைக்கு வேண்டாம்….ஹாஸ்பிடல்ல இருந்து அவங்க ரெண்டு பேரும் வரட்டும்… ஊரு விட்டு ஊரு வந்து இருக்காங்க… வீணா எதுவும் பிரச்சனை ஆகிற கூடாது… ” தீரன்.
” பஞ்சாயத்து ஆரம்பிக்க போகுது….இன்னும் மகிய கொல்ல பாத்தவன கொண்டு வரலயே…..” சிதம்பரம்.
” ஆரம்பிக்கட்டும்…
பாத்துக்கலாம்…”தீரன்.
அப்பொழுது தீரனின் ஃபோன் ஒலிக்க….அதை எடுத்து பேசி அணைத்தவன், ஃபோனில் வந்த செய்தியில் டென்ஷனாக நெற்றியில் கீறினான்.
” என்ன ஆச்சு தீரா? ஏதாவது பிரச்சனையா? ” சிதம்பரம்.
“மகிய கொல்ல வந்தவன உதி கட்டி போட்டதா சொன்ன இடத்துல அவன காணோமாம்….ஆள் எஸ்கேப்… வேற யாரோ அவனுக்கு ஹெல்ப் பண்ணி அவன காப்பாத்தி கூட்டிட்டு போய் இருக்காங்க…” தீரன்.
” இப்ப என்ன பண்ண போற தீரா? ஊர் பெரியவங்க ஏற்கனவே உன் மேல கோபத்துல இருக்காங்க…” சிதம்பரம்.
தாடையை தடவியவாறு சிறிது நேரம் யோசித்த தீரன், ” அவனுங்க கொல்ல வந்தது என்னைய மட்டும் தான்…மகிய இல்ல….மகிய பத்துன விசயத்த மறைக்கிறோம்…..இப்ப பிரச்சினை எனக்கு மட்டும் தான்…சரியா? ” தீரன்.
“இது சரி வருமாடா? ” சிதம்பரம்.
“இதான் சரி…..உண்மைய சொல்லுறேன் னு மகி எதுவும் கிளம்பாம இருந்தா சரி….பெரியவங்கலாம் வந்துட்டாங்க…..நான் சொன்னது எல்லாம் ஞாபகம் இருக்கட்டும்… மகி உங்க பொறுப்பு ப்பா…” தீரன்.
” என் மருமகள பாத்துக்க எனக்கு தெரியும்….போடா….” என்றவாறு சற்று தள்ளி சென்று நின்றார் சிதம்பரம்.
பஞ்சாயத்தின் பரபரப்பில் தன் தந்தையின் வார்த்தையை சரியாக கவனிக்காமல் விட்டு விட்டான் தீரன். அதுவரை தீரனின் காலடியில் விழுந்து கிடந்த அந்த கொலைகாரன் இருவர் பேசியதையும் தெளிவாக கேட்டு புன்னகைத்துக்கொண்டான்.
ஊர் பெரியவர்கள் அனைவரும் வந்து சேர….பஞ்சாயத்து ஆரம்பமானது.
” என்ன தீரா? எப்ப பாரு நீ பஞ்சாயத்த கூட்டிட்டு இருக்க? ” என்றார் ஒரு பெரியவர்.
” இவன் எப்போதும் சண்டைக்கு அலையிறவன் தான? ” என மற்றொரு பெரியவர் கூற… ஊர் இளைஞர்கள் கூச்சலிட தொடங்கினர்.
“இங்க பாருங்க… என்னைய பத்துன கணிப்ப அப்புறமா கணிச்சுக்கலாம்… இவன் என்னைய கொல்ல வந்தான்… இவன என்ன னு விசாரிங்க… ஊருக்கு கட்டுப்பட்டு தான் ஊர் பஞ்சாயத்த கூட்டி இருக்கேன்… இல்லனா போலீஸ கூப்பிட்டு இருப்பேன்… ” தீரன்.
“சரி… சரி… விசாரிப்போம்… அவன் வாய்க்கட்ட அவித்து விடுங்கப்பா… ” என்றார் ஒரு பெரியவர்.
அவனின் வாய்க்கட்டு அவிழ்க்கப்பட்டு அவனுக்கு குடிக்க தண்ணீர் கொடுக்கப்பட்டது.
” இப்ப சொல்லுப்பா… நீ தீரன கொல்ல வந்ததா அவன் சொல்லுறான்… அதுக்கு நீ என்ன சொல்லுற? ” ஊர் பெரியவர்.
“நான் சொல்லுறது எல்லாம் இங்க எடுபடுமா ஐயா? ” என பாவமாக கூறினான் தீரனை கொல்ல வந்தவன்.
” எதுவா இருந்தாலும் தைரியமா சொல்லுப்பா…. நாங்கலாம் இருக்கோம்ல….. ” ஊர் பெரியவர்.
“ஐயா…. பெரியவங்க நீங்கலாம் இருக்கீங்க னு தைரியத்துல தான் உண்மைய சொல்லுறேன் ….நான் பக்கத்து ஊர்க்காரனுங்க…. சுத்து வட்டாரத்துல தீரன் தான் விவசாயத்துல பெரிய ஆளுனு கேள்வி பட்டேன்…. அதுனால இந்த தடவ நெல் விதை என்ன விதைக்கலாம் னு அவன் கிட்ட விசாரிக்க வயலுக்கு போனேனுங்க ….தம்பி என்ன நினைச்சுச்சு னு தெரியல… என்னைய அடிச்சு கட்டி இங்க தூக்கிட்டு வந்துருச்சுங்க… எனக்கு புள்ள குட்டி இருக்குங்க…. கொலை பண்ணுன என் புள்ளைய என்ன ஆகும் னு எனக்கும் தெரியும் ங்க…. நான் எப்படி ங்க கொலை பண்ணுவேன்… என் முகத்த பாத்தா கொலைகாரன் மாதிரியா தெரியுது… ” என அந்த கொலைகாரன் பேச பேச சிதம்பரம் அதிர்ந்து நின்றார்.
ஆனால், தீரன் எதையும் கண்டுகொள்ளாமல் அந்த கொலைகாரனின் முகத்தையே உற்று நோக்கினான்.
” இந்த தீரன பத்தி தான் நமக்கு நல்லா தெரியுமே… அடி தடி சண்டைக்குனா முன்னாடி நிப்பான்…. ” ஊர் பெரியவர் ஒருவர்.
“அப்ப என் தலையில உள்ள காயத்துக்கு என்ன பதில்? நானா போய் வேணும்னே எங்காவது முட்டிக்கிட்டேன் னு சொல்லுறீங்களா? முதல்ல இவன் மேல பொய்யா நான் ஏன் பழி போடனும்? எனக்கு வேலை வெட்டி இல்லை? ” தீரன்.
” இப்ப இதுக்கு பதில் சொல்லு… ” என அந்த கொலைகாரனை நோக்கி ஒரு பெரியவர் கேட்டார்.
அவன் வாய் திறக்கும் தருவாயில் மீண்டும் தீரனுக்கு ஃபோன் வர…அதை எடுத்து காதில் வைத்தவன், மறுமுனையில் கூறிய செய்தியில் உடல் விரைப்புற யாரையும் கருத்தில் கொள்ளாமல் விறுவிறுவென தன் பல்சரில் பறந்தான்.
புயல் வேகத்தில் ஹாஸ்பிடலில் வண்டியை நிறுத்தியவன் அவசர அவசரமாக உள்ளே நுழைந்தான் தீரன். அங்கு இரத்த கறையுடன் தலையில் கை வைத்து பிரமை பிடித்து உதியன் அமர்ந்து இருக்க… அவன் பக்கத்தில் நின்றிருந்த மகி, தீரனை கண்டதும்…..” தீரா…” என கதறியபடி ஓடி வந்து தீரனை அணைத்துக்கொண்டாள்.
கலங்கிய விழிகளுடன் ஓடி வந்து தன்னை அணைத்துக்கொண்டவளை ஆதரவாக அணைத்தபடி, “என்ன ஆச்சுடி? ” எனக் கேட்டான் தீரன்.
தீரனின் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவாறு நடந்ததை மகி ஒவ்வொன்றாக கூற…அதை முழுவதுமாக கேட்ட தீரன்…”இந்த ஊருல என்ன தான் நடக்குது? ” என அடிக்குரலில் சீறினான் தீரன்.
தீரன் வந்ததையோ…மகி அவனை ஓடிச்சென்று அணைத்ததையோ உணராத உதியன், இரத்தம் படிந்த நிலையில் சிலையென அமர்ந்து இருந்தான்.
(காதல் தீ பரவும்…..)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.