உச்சி பொழுது நெருங்கி கொண்டிருக்கும் வேளையில் ஆற்று நீரின் சலசலப்பு சத்தத்தை கேட்டவாறு யாருமற்ற பாதையில் அமைதியாக நடந்து கொண்டிருந்தாள் மகிழ்விழி.
சிறிது இடைவெளி விட்டு அவளை பின் தொடர்ந்து வந்தான் ஒருவன். தன்னை ஒருவன் பின் தொடர்வதை அறியாமல் தன் போக்கில் நடந்தபடி இருந்தாள் மகி.
யாருமற்ற இடம் வந்ததும் இருவருக்கும் இடையேயான இடைவெளியை வேகமாக குறைத்து கையில் மெல்லிய நைலான் கயிறுடன் மகியை நெருங்கினான் அவன்.
பின்னிருந்து கயிற்றை மகியின் கழுத்தை நோக்கி போடும் நொடியில், கண்ணிமைக்கும் நேரத்தில் குனிந்து அக்கயிற்றில் இருந்து தப்பித்துக்கொண்டாள் மகி. அவனிடம் இருந்து குனிந்து தப்பிக்கும் நொடியில் கையில் மணலை அள்ளியவள் நிமிர்ந்து அவன் எதிர்பார்க்காத நொடியில் அவன் கண்களில் மண்ணை தூவினாள் மகி.
இதை எதிர்பார்க்காத அவன், கண்ணில் மண்ணுடன் போராடி கையில் இருந்த கயிற்றையும் கத்தியையும் கீழே போட்டு விட்டு கண்ணை மூடி தேய்த்தான். அவன் கண்ணை மூடி தேய்க்கும் பொழுதில் நொடியும் வீணாக்காமல் அவன் இரு கைகளையும் அவன் முதுகில் கொண்டு வந்து கயிற்றால் கட்ட முயற்சித்தாள் மகி.
ஆனால், அதற்குள் சுதாரித்த அவன் மகியின் பிடியில் இருந்து தப்பித்தான். இருவரும் நேர் எதிரே நின்றபடி ஒருவரை மற்றொருவர் எடை போட்டனர்.
“இவள் எப்படி என்னைய கண்டுபுடிச்சா? “என்ற யோசனையில் அவனும்… “இந்த ஊருக்குள்ள நம்மள கொல்லுற அளவுக்கு நாம யாருக்கு என்ன பண்ணுனோம்? “என்ற யோசனையில் மகியும் ஒருவரை மற்றொருவர் தாக்க ஆயத்தமாக எதிர் எதிரே நின்றிருந்தனர்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவன் பாய்ந்து வந்து மகியின் கழுத்தை நெரிக்க… அதில் மூச்சு திணறிய மகி, தனது இரு கரங்களால் தன் முழு பலத்தையும் திரட்டி அவனது கையில் ஆழ கீறினாள். அதில் இரத்தம் கசிந்து எரிச்சல் ஏற்பட, அதையும் பொறுத்துக்கொண்டு மேலும் உக்கிரமாக மகியின் கழுத்தை நெரித்தான் அவன்.
மூச்சு திணறி அரை மயக்கத்திற்கு சென்ற மகி, தன் உயிர் பலத்தை ஒன்று திரட்டி அவனது கழுத்து நாடியில் தன் நகத்தால் ஆழ கீற அதில் சிறிது சிறிதாக இரத்தம் வர ஆரம்பிக்க, பதறி மகியின் கழுத்தை விட்டான் அவன்.
கழுத்தை விட்ட நொடியில் தொடர்ந்து இறுமி தன்னை நிலைப்படுத்திக்கொண்டாள் மகி. தன்னை கொல்ல வரும் அவனை, உக்கிரமாக தாக்க தொடங்கினாள் மகி. ஆபத்து என வருகையில் ஓடி ஒளியாமல் அந்த ஆபத்தை எதிர்த்து நின்றாள் மகி. உயிருக்கு ஆபத்து என தெரிந்தும் தன்னை எதிர்க்கும் பெண்ணை வியப்பு கலந்த பயத்துடன் மகியை தாக்கினான் அவன்.
அவன் அடித்த அடியில் உடலில் காயம் ஏற்பட்டாலும் மன தைரியத்துடன் தொடர்ந்து அவன் உயிர் நாடியில் உதைத்தாள் மகி. அதில் நிலை குலைந்த அவனின் தொண்டையை கடித்தாள் மகி. அதில் இரத்தம் வர, மகியின் வாய் முழுதும் இரத்தம் இருக்க அதை சிறிதும் பொருட்படுத்தாது சிறிது சிறிதாக மயக்கத்திற்கு சென்று கொண்டிருந்த அவனை அருகிலிருந்த மரத்தில் கட்டினாள் மகி.
அருகில் இருந்த கல்லில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க, அமர்ந்த மகியின் நினைவு சிறிது நேரத்திற்கு முன் சென்றது. காலையில் வீட்டில் இருந்து புறப்படுகையிலேயே தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்த மகியால் அது யாரென கண்டறிய முடியாமல் போனது. ஆற்றுக்கு வந்து சிறுவர்களுடன் விளையாடுகையில் அதை முற்றிலும் மறந்திருந்தாள். சிறுவர்களிடம் இருந்து விடைபெற்று வருகையில் மீண்டும் தன்னை யாரோ பின் தொடர்வதை உணர்ந்தவள், வேண்டும் என்றே குறைவாக தண்ணீர் இருக்கும் ஆற்று நீரில் இறங்கி நடக்க ஆரம்பித்தாள் மகி.
தண்ணீரில் தன்னை பின்னே மற்றொரு காலடி சத்தமும் கேட்க, ஒருவன் பின் தொடர்வதை உறுதி செய்தாள் மகி. அதனால் எச்சரிக்கை அடைந்தவள் தாக்குதலை எதிர் கொள்ளும் மன நிலையோடு நடந்ததால் மகியால் அவனை எதிர் கொள்ள முடிந்தது .
அவனோடு போராடியதால் உடலளவில் சோர்வுற்று அமர்ந்து இருந்தாள் மகி. அவளை தேடியபடி வீட்டில் இருந்து புறப்பட்ட உதியன், வாயில் வடியும் இரத்தத்துடன் முடிக்கற்றைகள் காற்றில் பறக்க… கண்களில் ஒரு வித வெறியுடன்.. யாருமற்ற காட்டு பகுதியில் காளியென அமர்ந்து இருப்பதை தொலைவில் கண்டவன் பதறி அடித்து பைக்கை நிறுத்தாமல் அப்படியே கீழே போட்டு விட்டு தன் தோழியிடம் ஓடி வந்தான்.
“அம்மு… அம்மு… இங்க பாரு டி… என்ன ஆச்சு உனக்கு? “என உதியன், மகியை உலுக்க… எதுவும் கூறாமல் அப்படியே அமர்ந்து இருந்தாள் மகி.
மகியின் அருகில் ஒருவன் மயக்கத்துடன் மரத்தில் கட்டி வைக்கப்பட்டிருப்பதை கண்டவன், “யாருடி இவன்? இவன யாரு அடிச்சது? உன்னைய யாரு அடிச்சது? என்ன ஆச்சு அம்மு… வாய தொற டி.. “என கண்ணீருடன் மகியின் கன்னத்தில் தட்டினான் உதியன்.
“இவன் யாரு? ” என சிறிதும் பயம் ,பதற்றம் ,கண்ணீர் எதுவும் இல்லாமல் திடக்குரலில் கேட்டாள் மகி.
. “எனக்கு எப்படி டி தெரியும்? முதல்ல உனக்கு என்ன ஆச்சு ? அய்யோ… கன்னமெல்லாம் இரத்தம் கட்டி போய் இருக்கே…. “என கண்ணீர் சிந்தினான் உதியன்.
“இவன் உன் ஊரு இல்லையா? “மகி.
“இல்லடி.. இவன நான் இதுவரைக்கும் ஊருக்குள்ள பாத்தது இல்லையே…. ” உதியன்.
“இவன் என்னைய கொல்ல வந்தான்…. “என அமைதியாக மகி கூற… அதைக்கேட்ட உதியன் திடுக்கிட்டான்.
“இந்த ஊருக்குள்ள உன்னைய கொல்லுற அளவுக்கு யாருக்குடி வன்மம் இருக்க போகுது? “என குழம்பினான் உதியன்.
“தெரியல… “மகி.
“சரி… இரு… முதல்ல முகத்த கழுவு… உன் வாயில ஏன் இவ்ளோ இரத்தம்… வா.. வீட்டுக்கு போகலாம்… எந்திரி…. “என தன் கண்ணீரை துடைத்தபடி எழுந்து நின்றான் உதியன்.
“அவன் என் கழுத்த நெரிச்சான்… நான் அவன் கழுத்த கடிச்சுட்டேன்… அதான் என் வாயில இரத்தம்… “என மகி ஒரு மோன நிலையிலேயே பதிலளித்தாள்.
“என்ன? உன் கழுத்த நெரிச்சானா? “என கோபத்துடன் மயங்கி கிடந்த அவனை மிதி மிதி என மிதித்து எடுத்தான் உதியன்.
ஆத்திரம் தீரும் வரை அவனை உதைத்தவன்…மகியின் நிலையை கருத்தில் கொண்டு, அவளை மெதுவாக எழுப்பி அருகில் இருந்த ஆற்று தண்ணீரில் மகியின் முகம் ,வாய் என இரத்தம் படிந்த அனைத்து இடத்தையும் உதியனே கழுவி சுத்தப்படுத்தினான்.
மகி, ஒரு பொம்மையாக உதியனின் கைகளில் செயல்பட்டாள். உதியன் ஆட்டுவிக்கும் பொம்மையாக ஏதோ யோசனையிலேயே இருந்தாள் மகி.
மகியை சுத்தப்படுத்தியவன், ஃபோனில் யாரையோ அழைத்து விவரத்தை கூறினான் உதியன்.
“அம்மு… வாடி… ஹாஸ்பிடல் போய்ட்டு அப்பிடியே வீட்டுக்கு போகலாம்… “உதியன்.
உதியன் கூறுவது எதுவும் காதில் வாங்காமல், தனி உலகில் சிந்தித்துக் கொண்டிருந்தாள் மகிழ்விழி. தான் கூறியதற்கு எந்த பதிலும் கூறாமல்… தான் கூறியதை உணராமல் நின்றிருந்த தன் தோழியை பிடித்து உலுக்கினான் உதியன்.
உதியனின் உலுக்கலில் சுய நினைவிற்கு வந்த மகி, “என்ன? “என்றாள்.
“வா அம்மு… ஹாஸ்பிடல் போகலாம்… ” உதியன்.
“ம்ம்… ” என உதியனுடன் திரும்பியவள், திடீரென ஏதோ நினைவு வந்து உதியனின் கரத்தை உதறிவிட்டு தன்னை கொல்ல வந்தவனை நெருங்கினாள் மகி.
“இப்ப எதுக்கு அம்மு அவன் கிட்ட போற? நான் பசங்கள வர சொல்லி இருக்கேன்… அவனுங்க போலீஸ் ல இவன ஒப்படைச்சுருவானுக… நீ வா.. ஹாஸ்பிடல் போகலாம்… “உதியன்.
உதியன் கூறுவதை காதில் வாங்காமல், தன்னை கொல்ல வந்தவனின் உடைகளில் தேட தொடங்கினாள் மகி.
மகி எதையோ தேடுவதை கண்டவன், “இப்ப எதை டி அவன் கிட்ட தேடிட்டு இருக்க? “என்றான் உதியன்.
அந்த கொலைகாரனிடம் எதையோ தேடியவள், இறுதியில் அவனது பேண்ட் பாக்கெட்டில் அவள் தேடியதை கண்டறிந்து வெளியில் எடுத்தாள் மகி.
மகி தேடி எடுத்த பொருளை கண்ட உதியன், ” இப்ப எதுக்கு அவனோட ஃபோன எடுக்குற? நீ வா பர்ஸ்ட் ஹாஸ்பிடல் போகலாம்… உன் கழுத்து கன்னம் எல்லாம் இரத்தம் கட்டி போயிருச்சு… ” என்றான்.
உதியன் கூறுவது காதில் விழுந்தாலும் அதை கண்டு கொள்ளாமல் ,தன்னை கொல்ல வந்தவனின் ஃபோனில் கால் ஹிஸ்ட்ரியை பார்த்துக்கொண்டே உதியனின் பைக்கில் ஏறி, “போகலாம்… “என்றாள் மகி.
” எப்பிடியோ… ஹாஸ்பிடல் வந்தா சரி… “என நினைத்தவாறு உதியன் பைக்கை ஸ்டார்ட் செய்த நொடி, மகி கையில் வைத்திருந்த அந்த கொலைகாரனின் ஃபோன் ரிங் ஆகியது .
அதை கவனித்த உதியன், பைக்கை ஆஃப் பண்ணிவிட்டு, மகியை திரும்பி பார்த்தான் . சிறிது நொடி ரிங் ஆகும் ஃபோனை பார்த்தவள், தயங்காமல் ஃபோனை ஆன் பண்ணி காதில் வைத்துவிட்டு அமைதியாக இருந்தாள் மகி.
ஃபோனின் மறுமுனை, எவ்வித தயக்கமும் இன்றி “டேய் மச்சான்… நான் அந்த தீரன முடிச்சுட்டேன்… நீ அவள முடிச்சுட்டனா வேகமா அவன் வயலுக்கு வா…. அவன ரெண்டு பேருமா சேந்து கொத்து கறி போடலாம்… அந்த கழுதைய இன்னும் ஒரு அறு அறுத்துட்டு வா… திமிரு பிடிச்ச கழுத… இந்த தீரன் நாயி மயங்கி கிடக்கு… வேகமா வா மச்சான்…. ” என கடகடவென பேசிவிட்டு ஃபோனை அணைத்தது.
மறுமுனையில் பேசியதை கேட்ட மகி, முகம் இருள… “உதி… தீரனுக்கு ஆபத்து… வேகமா அவன் வயலுக்கு போ… சீக்கிரம்… “என உதியனை அவசரப்படுத்தினாள்.
மகியின் குரலில் இருந்த பதற்றத்தை உணர்ந்த உதியன், ஏதும் விசாரிக்காமல், தன் தோழியை கொல்ல வந்தது போல் தன் அண்ணனுக்கும் ஆபத்து வந்திருக்கிறது என உணர்ந்தவன் மிக வேகமாக தீரனின் வயலை நோக்கி வண்டியை செலுத்தினான்.
விரைவாக தீரனின் வயலுக்கு வந்து சேர்ந்தவர்கள், தொலைவில் வயலின் நடுவே தீரன் மயங்கி கிடப்பதையும்….அவனின் அருகில் ஒருவன் மரத்தடியில் அமர்ந்து இருப்பதையும் கண்டவர்கள், சத்தம் செய்யாமல் மரத்தடியில் அமர்ந்து இருந்த அக்கொலைகாரனை நெருங்கினார்கள் மகியும் உதியனும்.
பின்னிருந்து அக்கொலைகாரனின் தலையில் உதியனும் மகிழ்விழியும் சேர்ந்து கட்டையால் தாக்க…அவன் சட்டென்று எந்த எதிர்ப்பும் இன்றி மயங்கி விழுந்தான் அவன்.
அந்த கொலைகாரன் மயங்கி விழுந்ததும் இருவரும் வேகமாக தீரனிடம் ஓடினார்கள். தலையில் இருந்து வழியும் இரத்தத்துடன் விழுந்து கிடந்த தீரனை கண்டு பதறிய மகி…உள்ளம் உடைப்பெடுக்க….”தீரா….தீரா… எந்திரி… கண்ண முழிச்சு பாரு…”என தீரனின் தலையை தன் மடியில் வைத்துக் கதறி கண்ணீர் சிந்தினான் மகி.
மகியின் கண்ணீரை அடங்காத ஆச்சரியத்துடன் கண்ட உதியன், “அம்மு…நீ அழுகுறடி….உனக்கு கண்ணீர் வருது டி…நீ அழுதுட்ட அம்மு…..” என தன் தோழியை மகிழ்வுடன் கட்டி அணைத்தான்.
உதியன் கூறியது மகியின் நெஞ்சை அறைய… தன் கண்ணீரை தொட்டு பார்த்தவள், “தீரனுக்கு என்ன ஆச்சு னு தெரியலயே உதி….தீரா..எந்திரிடா….”என மடியில் கிடந்த தீரனை உலுக்கினாள் மகி.
“அம்மு…நீ அழுகுறடி….உனக்கு கண்ணீர் வருது டி…”என மீண்டும் கூறி சந்தோஷத்தில் மகியை இறுக்க அணைத்தான் உதியன்.
தன்னை அணைத்த உதியனை உதறி விட்டு கோபத்துடன் உதியனை அறைந்தபடி, “இங்க தீரனுக்கு என்ன ஆச்சு னு பதறிட்டு இருக்கேன்…..நீ என்ன பேசிட்டு இருக்க ?ஆம்புலன்ஸ் க்கு கூப்பிடு… “என்றாள் மகி.
மகி தள்ளிய தள்ளலில் கீழே விழுந்தவன் ,புன்னகையுடன்.. “அண்ணனுக்கு எதுவும் ஆகல… அவன் நல்லா தான் இருக்கான் அம்மு… “என்றான் உதியன்.
“என்ன உலறுற? இங்க பாரு… தீரன் தலையில எவ்ளோ இரத்தம் னு… “என விழி கலங்க உதியனை ஏறிட்டாள் மகி.
“நிஜமா தான்டி… அண்ணன் நல்லா இருக்கான்….நடிச்சது போதும்…எந்திரிங்க அண்ணா…”என மகியின் மடியில் தலைவைத்து படுத்து இருந்த தீரனை பார்த்து பேசினான் உதியன்.
உதியன் பேசிய அடுத்த நொடி, மகியின் மடியில் கிடந்த தீரன், மெதுவாக ஒற்றை கண்ணை திறந்து பார்த்தான்……
(காதல் தீ பரவும்…)
-செல்லம்மாள்பாரதி
No comments yet.