காதல் தீ -16

Chellammal Bharathi | 27 Nov 2025 | Share

         பஞ்சாயத்து முடிந்து அனைவரும் அவரவர் இல்லம் நோக்கி சென்று கொண்டிருக்க, மகியும் தீரனுக்கு பதிலடி தந்து விட்டு தூரிகையை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு புறப்பட்டாள். 

             வீட்டிற்கு புறப்பட்ட மகியின் முன்னே சிலர் வந்து நிற்க… அவர்களை பார்த்தவள் திகைத்து நின்றாள். மகி திகைத்து நிற்பதை பார்த்த தீரன், “யார்ரா அது? இவளையே நிக்க வச்சது? “என நினைத்தவாறு அவர்களை பார்த்தான். 

             மகியின் முன்னே வந்து நின்றவர்களை பார்த்த உதியன், சிரிப்பை வாய்க்குள் திணித்துக்கொண்டான். 

       “இன்னக்கி நீ செத்தடி… என் கிட்ட வாய் பேசுன ல… இப்ப இவங்க கிட்ட பேசுடி… இப்ப பேசு… “உதியன். 

          அதைக்கேட்ட மகி, உதியனை திரும்பி பார்த்து முறைத்தாள். மகி முறைத்த முறைப்பில் உதியனின் வாய் தன்னாலே மூடிக்கொண்டது. உதியன் வாய் மூடி பயந்து நிற்பதை பார்த்த தீரன் வாய் விட்டு நகைத்தான். 

           “அண்ணே… சிரிக்காதீங்க…. இந்த பிசாசு கடிச்சு வச்சாலும் வச்சுரும்.. “உதியன். 

            “அய்யோ… இது வேறயா? நீ எத்தன தடவ கடி வாங்கி இருக்கடா தம்பி? “தீரன். 

             “அதெல்லாம் ஒரு கணக்கு வழக்கு இல்லை அண்ணே… பல இடத்துல வாங்கி இருக்கேன்… “என சோகமாக மூக்கை உறிஞ்சினான் உதியன். 

             உதியன் கூறிய விதத்தில் வாய் விட்டு நகைத்தான் தீரன். அவனுடன் இணைந்து உதியனும் சிரிக்க… அவர்கள் இருவரையும் பார்த்து முறைத்தபடி நின்றாள் மகி. 

          “ஜோடியா சேந்து சிரிக்கிறீங்களோ.. இருங்கடா… இன்னக்கி இந்த மகி உங்கள என்ன பண்றேன் னு பாருங்க டா… “என மனதினுள் கருவிக்கொண்டு, தன் எதிரில் நின்றவர்களை பார்த்தாள் மகி. 

             மகியின் எதிரே தங்களது உண்டிகோலை வைத்துக்கொண்டு இடுப்பில் கை வைத்து முறைத்தப்படி நின்றிருந்தனர் சிங்கம்புணரி கிராம சிறுவர் ஆர்மி. 

              “என்ன அக்கா? வேலை முடிஞ்சதும் நம்மள கவனிக்காம போறீங்களே? “என்றான் ஒரு சிறுவன். 

              “ஐயோ… இவனுங்களுக்கு வேற அப்பளப்பொறி வாங்கிக் குடுக்கனுமே ….இந்த பன்னாடைய வேற திட்டிட்டேன்… அது ஓவரா ஸீன வேற போடுமே…. எஸ்கேப் ஆகிறலாம் னு பாத்தா, அதுக்குள்ளயும் இந்த ஃபயரு வந்து கெடுத்துட்டான் கடங்காரன்… இப்ப என்ன பண்ணலாம்? “என சிந்தித்தபடி நின்றாள் மகி. 

              “என்னக்கா ஓவரா யோசிக்கிற? வாங்கி குடுப்பியா? மாட்டியா? “என்றாள் ஒரு சிறுமி. 

              “என்ன தூரி? அசையாம நிக்கிற? ஒழுங்கா அப்பளப்பொறி வாங்கித் தர சொல்லு…. “என மற்றோரு சிறுவன் தூரிகையை மிரட்டினான்.

              “மவளே மாட்டுடனடி….இப்ப என் கிட்ட தான வந்து ஆகனும்….வாடி வா… இப்ப எப்பிடி காது கேக்குது னு நான் பாக்குறேன்… “என எங்கோ பார்த்தபடி மகியின் காதில் தெளிவாக முனுமுனுத்தான் உதியன். 

             “அய்யோ…நேரம் பார்த்து இந்த நன்னாறி பய கால வாறி விடுறானே… ஃபயரு முன்னாடி நாம அசிங்க பட்டுற கூடாதுடி மகி…கமான் மகி….ஏதாவது ப்ளான் பண்ணு… “என மனதினுள் மின்னல் வேகத்தில் யோசனை செய்தபடி, “அட… அப்பளப்பொறிக்கு இந்த அக்கப்போரா? இன்னக்கி இல்லனா என்ன? நாளைக்கி வாங்கித்தாரேன் பசங்களா… “என மகி கூறிய அடுத்த நொடி, “எதேய்….”என சிறுவர் ஆர்மி கூக்குரலிட்டது. 

            “கோரஸ் லாம் பலமா இருக்கே…. மகி… ஒத்த எலும்பு கூட தேறாது போலயே… “என நக்கலாக கூறினான் உதியன். 

           “சே… என்னடா இப்பிடி கிண்டல் பண்ற… அவங்க யாரு… வீராதி வீரி.. சூராதி சூரி… இப்ப எப்பிடி நம்ம எல்லாருக்கும் அப்பளப்பொறி வாங்கி குடுக்குறாங்க னு பாரேன்… அப்பிடித்தான மகி? “என மெதுவாக தங்களையும் அப்பளப்பொறி லிஸ்டில் இணைத்துக்கொண்டான் தீரன். 

            “வாவ்… அண்ணே… நீ வேற லெவல் ண்ணே… “என்றவாறு உதியனும் தீரனும் ஹைபை குடுத்து சிரித்துக்கொண்டனர். 

            “மகி….நிலைமை ரொம்ப மோசமா போய்ட்டு இருக்கு… அர்ஜன்ட்டா நீ களத்துல இறங்கி ஆகனும்… யோசி.. யோசிடி… “என நினைத்தவாறு தீரனையும் உதியனையும் பார்த்தவள் மனதில் பளிச் என மின்னல் வெட்ட, அவளின் முகம் பிரகாசமாக ஜொலித்தது. 

            அனைத்தையும் அமைதியாக வேடிக்கை பார்த்த தூரிகை, “அக்கா… வாங்கி தர முடியாதா க்கா? “என பாவமாக கேட்டாள். 

              “அட… என் குட்டி தங்கச்சி… அப்பளப்பொறி தான? வாங்க… எல்லாரும் வாங்க…. உங்களுக்கு போதும் போதும் ங்கிற அளவுக்கு வாங்கித் தாரேன்… “என உற்சாகத்துடன் கூறினாள் மகி. 

           மகியின் முகத்தை பார்த்த உதியின் மண்டைக்குள் அபாய மணி ஒலிக்க… “அண்ணே… பிசாசு ஏதோ ப்ளான் பண்ணிருச்சு… பேசாம வாங்க… கௌரவமா இப்பவே எஸ்கேப் ஆகிருவோம்… “என தீரனின் காதில் ரகசியம் பேசினான். 

          “இவளுக்கு போய் இப்பிடி பயப்படுறியேடா…. வா… பாத்துக்கலாம்… “தீரன். 

           “உங்க தலைவிதிய யாரால மாத்த முடியும்? “உதியன். 

            “அங்க என்ன முனுமுனுப்பு? “மகி. 

             “ஒன்னுல்ல… அப்பளபொறி பார்ட்டில நாங்க எவ்ளோ அப்பளபொறி சாப்பிடுறது னு பேசிட்டு இருந்தோம்… “தீரன். 

            “எவ்ளோ வேணும்னாலும் வாங்கி சாப்பிடுங்க… கடையில உள்ள மொத்தத்தையும் வாங்கி சாப்பிடுங்க… “என கண்களில் விஷமத்துடன் இதழ்களில் புன்னகையுடன் கூறினாள் மகி. 

            “அய்யோ…. இவ முழியே சரி இல்லையே…. முனியய்யா…. என்னைய காப்பாத்து… “என மனதினுள் தெய்வத்திடம் மனு ஒன்றை போட்டுக்கொண்டே சிறுவர்களுடன் கடையை நோக்கி நடந்தான் உதியன். 

             சிறுவர்களுடன் தூரிகையும் துள்ளிக்குதித்துக் கொண்டு கடைக்கு சென்றாள். அவள் சிறுமியை போல் துள்ளிக்குதிப்பதை பார்த்த உதியனின் விழிகளில் எக்கசக்க சிவப்பு இதயம் எட்டி பார்த்தது. 

            அதை ஓரக்கண்ணால் கவனித்த மகி, “என் செருப்பு பிய்ய போகுது…. “என்றாள். 

           “கண்டுபிடிச்சுட்டாளோ… “என நினைத்தவாறு மகியை பார்த்து அசடு வழிந்தான் உதியன். இதை கவனிக்காத தீரனோ, “செருப்பு புதுசா தான இருக்கு? இது எப்பிடி இப்ப பிய்யும் ?இப்போதைக்கு இந்த செருப்பு பிய்யாது… “என்றான். 

              தீரன் கூறியதை கேட்ட மகியும் உதியனும் ஒரே நேரத்தில் தங்களது தலையில் அடித்துக் கொண்டனர். 

              “இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு இதுங்க ரெண்டும் ஒன்னா தலையில அடிச்சுக்குதுக? இந்த செருப்பு இப்போதைக்கு பிய்யாதே? “என யோசித்தவாறு அதை உதியனிடம் கேட்க வாய் திறந்தான் தீரன். 

               “அய்…. அப்பளப்பொறி… அப்பளப்பொறி… “என சிறுவர் இட்ட சந்தோஷ கூச்சலில் கேட்க வந்ததை தள்ளிப்போட்டான் தீரன். 

          “அண்ணே… வாங்க… அப்புறம் நம்மளுக்கு கிடைக்காது… “என முந்திக்கொண்டு தங்கள் இருவருக்கும் அப்பளபொறியை அள்ளிக்கொண்டு வந்தான் உதியன். 

             சிறுவர்கள் அனைவரும் போதும் போதும் எனும் அளவு அப்பளபொறியை வெளுத்து வாங்கினர். உதியனும் தீரனும் கூட சிறு மழலையென அப்பளபொறியை சுவைத்தனர். தூரிகை குழந்தையாகவே மாறிவிட்டாள். 

            அனைவரையும் ஒரு புன்னகையுடன் பார்த்தவள், “எல்லாருக்கும் போதுமா? இப்ப திருப்தி தான? “என்றாள் மகி. 

            “பரம திருப்தி க்கா….இதே போல இன்னும் ஏதாவது வேலை இருந்தா சொல்லுக்கா செய்யிறோம்…. “என சிறுவர்கள் அனைவரும் மகியிடம் கூறி விட்டு விளையாட சிட்டென பறந்து சென்று மறைந்தனர். 

           ஓடிச்செல்லும் அவர்களை சிரிப்புடன் பார்த்தவள், “மொத்தம் எவ்ளோ ஆச்சு அண்ணா? “என கடைக்காரரிடம் வினவினாள். 

          “முன்னூறு ரூபா பாப்பா… என் வாழ்க்கையில இவ்ளோ க்கு அப்பளபொறிய வாங்கி யாரும் சாப்பிட்டதே இல்ல… இதான் மொத தடவ… அதனால உனக்காக அம்பது ரூபா டிஸ்கவுண்ட்… 250 குடுத்தா போதும் பாப்பா… “என்றார் கடைக்காரர். 

          “அண்ணே… 300 க்கு சாப்பிட்டு இருக்கோம்…. வேற லெவல் சாதனை ண்ணே… இப்ப இவ எப்பிடி பணத்த குடுக்குறாரு பாப்போம்….”என சிரித்தவாறு தீரனிடம் கூறினான் உதியன். 

             தீரனும், அடுத்து மகி என்ன செய்ய போகிறாள் என ஆவலாக பார்த்தபடி இருந்தான். 

             “250 தான அண்ணே? எனக்காக என் மச்சான் குடுப்பாங்க….மச்சான்.. ஒரு 250 எடுத்து கடைக்கார அண்ணே கிட்ட குடுங்க… “என உதியன் மற்றும் தீரன் அமர்ந்து இருந்த திசையை பார்த்து கூறினாள் மகி. 

             “என்ன? வாய்ப்பு இல்லை போடி…. என் காது கேக்காது…. “என முகத்தை திருப்பிக்கொண்டான் உதியன். 

              “அய்யே… உன் கிட்ட யாரு கேட்டது? நான் என் மச்சான் கிட்ட கேட்டேன்…. நீங்க குடுங்க மச்சான்… “மகி. 

               “இவ யார்ர சொல்லுறா? ” என திகைத்தவாறு உதியன் சுற்றும் முற்றும் திரும்பி பார்த்தான். சுற்றிலும் யாரும் இல்லாது போகவே, “யாரடி சொல்லுற? “என்றான் உதியன். 

           உதியனுடன் இணைந்து திருதிருவென்று முழித்த தீரனின் அருகில் சென்று நின்றவள், “மச்சான்… 250 எடுங்க… “என்றாள் மகி. 

             “என்னடி சொல்லுற? “என நெஞ்சில் கை வைத்து மகியை அதிர்ச்சியுடன் பார்த்தான் உதியன். 

            “உங்க அப்பா தான் அவர மாமா னு கூப்பிட சொல்லி இருக்காங்க… அப்பிடினா நீங்க எனக்கு மச்சான் தான? குடுங்க தீரன் மச்சான்…. “மகி. 

               மகி கூறிய கூற்றில் உறைந்து இருந்த தீரன், தன்னை அறியாமலே பணத்தை எடுத்து மகியின் கைகளில் குடுத்தான். அதை சிரிப்புடன் வாங்கியவள் கடைக்காரரிடம் குடுத்தாள் மகி. 

             “ஷாக்குலயே சாவுடா மவனே…. “என உள்ளுக்குள் நகைத்துக்கொண்டு, “வரட்டா மச்சான்ஸ்…. “என இருவரையும் பார்த்து கை காட்டியபடி தூரிகையை இழுத்துக்கொண்டு வீட்டிற்கு ஓடினாள் மகி. 

             மகி ஓடுவதையும் தீரனின் பேய் அடித்த முகத்தையும் மாறி மாறி பார்த்த உதியன் தலையில் கை வைத்தபடி தரையில் அமர்ந்தான் உதியன். 

         மகி சென்றதை கூட அறியாமல் மந்திரித்து விட்டது போல் அமர்ந்து இருந்தான் தீரன். 

            “ஒரு அப்பளப்பொறிக்காக ஆலமரம் மாதிரி இருந்த மனுஷனையே சாச்சுப்புட்டாளே…. இனி இவருக்கு வேப்பிலை அடிச்சா தான் போலயே…. கடவுளே… இவள அடக்க எனக்கு ஹெல்ப்புக்கு யாரையாவது அனுப்பி வைங்களேன்… “என மனதினுள் புலம்பிக்கொண்டிருந்தான் உதியன். 

           உதியனின் புலம்பல் கடவுளுக்கு கேட்டு விட்டது போல…. மகிழ்விழிக்காக உதியனின் வீட்டில் கையில் பிரம்புடன் ஒருவர் காத்திருந்தார். இதை அறியாத மகி, உதியனையும் தீரனையும் பழிவாங்கி விட்டதாக எண்ணி மகிழ்ந்தபடி விசிலடித்தபடி தூரிகையுடன் வீட்டிற்குள் நுழைந்தாள்… 

             அவளுடன் கூடவே விதியும் சிரித்தபடி நுழைந்தது…. 

                               (காதல் தீ பரவும்…) 

                           -செல்லம்மாள்பாரதி 

    No comments yet.