காதல் தீ -15

Chellammal Bharathi | 27 Nov 2025 | Share

           அருகில் ஊர் பஞ்சாயத்து மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க ,அதை எதைப்பற்றியும் கவலைப்படாமல் தீவிரமாக ஊர் சிறுவர்கள் புடை சூழ, தூரிகா கோலி குண்டு விளையாடிக்கொண்டிருந்தாள். அவளின் அந்த விளையாட்டுத்தனத்தை கண் சிமிட்டாமல் ரசித்தபடி இருந்தான் உதியன். அவன் விழிகளில் தெரிந்த ரசிப்புத்தன்மையை கண்ட மகி, தானும் விளையாட செல்வதாக தூரிகாவிடம் ஓடினாள் மகி. 

            மகி அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே அவர்களுடன் ஐக்கியமாகி விளையாட ஆரம்பித்ததை கண்டு சிரித்த உதியன், தன் கவனத்தை பஞ்சாயத்து பக்கம் திருப்பினான். 

               “ஹே….ஹாய் குட்டீஸ்… என்னையவும் உங்க கூட சேத்துப்பிங்களா? “என அழகாக தலை சரித்து வினவினாள் மகி. 

               “எல்லாம் எங்க அக்கா சொன்னா தான் நாங்க சேத்துப்போம்… “என ஒரு சிறுவன் கூற… உடனே முகத்தை சோகமாக வைத்துக்கொண்டாள் மகி. 

           மகியின் சோகமான முகத்தை கை கட்டி ஒற்றை புருவம் உயர்த்தி ஆராய்ச்சியாக பார்த்தாள் தூரிகை. 

             “நீங்க அந்த செங்குரங்கோட பாத்தேனே…அந்த செங்குரங்குதான் இங்க அனுப்புனுச்சா? “தூரிகை. 

            “அடிப்பாவி… என் ப்ரண்ட் உனக்கு செங்குரங்கா? சின்ன புள்ள னு நினைச்சா… உன்னைய…..”என தூரிகையுடன் சண்டைக்கு நின்றாள் மகி. 

            “அவன் என் கிட்ட எப்பிடிலாம் வம்பு இழுத்தான் தெரியுமா? “முகத்தை சுருக்கினாள் தூரிகை. 

             “சரி… சரி….விடு…அவன் ஒரு அரை கிருக்கு……அவனுக்காக என்னைய விளையாட்டுல சேத்துக்காம விட்டுறாத… ப்ளீஸ் பாப்பா…. என்னையும் சேத்துக்கோயேன்…. “மகி. 

             “ஹா ஹா ஹா… நீங்க காலேஜ் படிச்சாலும் சின்ன குழந்தை மாதிரி பண்றீங்க… உங்கள எனக்கு புடிச்சு இருக்கு…..உங்கள விளையாட சேத்துக்கிட்டா எங்களுக்கு அப்பளப்பொறி வாங்கித் தருவீங்களா? ” தூரிகை. 

            “ஸ்நாக்ஸ் க்கு நானே என் ப்ரண்ட் கிட்ட தான் பிச்சை எடுப்பேன்… இதுல உங்களுக்கு எல்லாம் நான் எங்க போறது? “என பாவமாக கேட்டாள் மகி. 

             “எங்களுக்கும் சேத்து உங்க ப்ரண்ட் கிட்ட பிச்சை எடுங்க… சரியா போயிரும்…. “என இதழ் விரித்தாள் தூரிகை. 

             “ஓஓஓஓ… எடுக்கலாமே…. “என உற்சாகமாக தலையாட்டினாள் மகி. 

            “அப்ப வாங்க… எங்க கும்பல்ல நீங்களும் சேந்துக்கங்க…. “என அங்குள்ள ஒவ்வொரு சிறுவரையும் மகிக்கு அறிமுகப்படுத்தினாள் தூரிகை. 

            “கேக்க மறந்துட்டேன் பாருங்க… உங்க பேரு என்ன? “தூரிகை. 

           “என் பேரு மகிழ்விழி… மகி னு எல்லாரும் கூப்பிடுவாங்க… இந்த வாங்க போங்க லாம் வேண்டாம்…. அதான் எல்லாரும் ப்ரண்ட்ஸ் ஆகிட்டோம் ல… “மகி. 

           “ஓகே மகிக்கா….வாங்க விளையாடலாம்…. இவங்க பஞ்சாயத்து முடிக்கிற வரைக்கும் தான் நமக்கு டைம்… பஞ்சாயத்து முடிஞ்சுட்டா அவங்க அவங்க அப்பா வந்து விரட்டி விட்டுருவாங்க… “என மகியையும் விளையாட்டில் சேர்த்துக்கொண்டு அனைவரும் உற்சாகமாக விளையாட ஆரம்பித்தனர். 

            “ஏன் நீங்களாம் பஞ்சாயத்த கவனிக்காம இங்க விளையாடிட்டு இருக்கீங்க? உங்களுக்கு பிடிக்கலயா? “என விளையாடியபடியே பேச்சுக்கொடுத்தாள் மகி. 

             “ஆமா….புடிக்கல தான்…..ஆளாளுக்கு எங்க தீரன் அண்ணன திட்டிட்டு இருக்காங்க….”என கோபத்துடன் கூறினான் ஒரு சிறுவன்.

            “ஓஓ….உங்களுக்கு உங்க தீரன் அண்ணன ரொம்ப பிடிக்குமா? “மகி. 

            “பிடிக்குமாவா? அண்ணே தான் எங்களுக்கு உசுரு…”

           “அண்ணே எவ்ளோ நல்லவரு தெரியுமா? “

          “இந்த ஊருக்கு எவ்ளோ நல்லது செஞ்சு இருக்கு தெரியுமா? “

          “அண்ணே தான் எங்க எல்லாருக்கும் ஹீரோ… ” என ஒவ்வொரு சிறுவர் சிறுமியரும் மாற்றி மாற்றி தீரனை பற்றி புகழ்ந்து கூற… மகி புன்னகைத்துக்கொண்டாள். 

            “எங்க அண்ணே எப்பவும் அத பத்தி யோசிக்கவே யோசிக்காது….இந்த ஊரு பசங்களுக்கு படிப்பு சம்பந்தமா ஏதாவது தேவைனா முத ஆளா அண்ணே தான் முன்னாடி நிக்கும்… படிப்பு விவசாயம் னா அதுக்கு உசுரு… எப்ப பாரு வயலுக்குள்ள தான் கிடக்கும்… அவ்ளோ நல்ல மனுஷன இந்த பெருசுங்க நிக்க வச்சு கேள்வி கேட்டுட்டு இருக்குதுக.. அங்க இருந்தோம்னா இந்த கோலி குண்டாலயே அடிச்சுருவோம்… அதான் நாங்க கோலி குண்ட எடுத்துட்டு தனியா வந்துட்டோம்… “தூரிகை. 

              “ஓஓஓ… அவ்ளோ நல்லவரா உங்க அண்ணே… “மகி. 

               “நீங்க இந்த ஊருக்கு புதுசு ல… அதான் அண்ணன பத்தி உங்களுக்கு தெரியல… இந்த ஊருல எந்த பயலுக கிட்ட வேணும்னாலும் கேட்டுப்பாருங்க… தீரன் அண்ணே னா உசுர கூட குடுப்பானுக… “தூரிகை. 

            “ஓஓஓ….”என்றவாறு பஞ்சாயத்தின் புறம் மகி திரும்பி பார்க்க, அங்கு அப்பொழுது  தீரன் எழுந்து நின்று எதையோ கோபமாக பேச… அவனை சுற்றி உள்ள இளைஞர்களும் கோபத்துடன் எதையோ கத்துவதை பார்த்தாள். அப்படியே பார்வையை மணல் திருடிய அந்நால்வரின் புறம் திருப்பினாள் மகி. அந்நால்வரும் மரத்தின் நிழலில் திமிராக பஞ்சாயத்து கூட்டத்தை ஒரு வித இளக்காரத்துடன் பார்த்தபடி கை கால் கட்டுடன் நின்றிருந்தனர். 

             பஞ்சாயத்தையும் அந்நால்வரையும் மாறி மாறி பார்த்தவள் மனதினுள் ஒரு முடிவு எடுத்து கொண்டு வெளியே புன்னகைத்தாள் மகி. 

            “என்ன க்கா? தனியா சிரிக்கிறீங்க? “என ஒரு சிறுமி மகியை பார்த்து கேட்க, அவள் புறம் திரும்பி நன்றாக புன்னகைத்தவள், “உங்க தீரன் அண்ணன உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்… அப்பிடித்தான? “என வினவினாள் மகி. 

            “ஆமா… அண்ணனுக்காக நாங்க எத வேணுனாலும் செய்வோம்….எங்க அண்ணன நிக்க வச்சு கேள்வி கேக்குற அந்த பெருசுகள இதோ இந்த உண்டிகோல வச்சு அடிக்க தோனுது… எங்க அண்ணே பாவம்….ஊருக்கு நல்லது செஞ்சுட்டு குத்தவாளி மாதிரி இப்பிடி கை கட்டி நிக்குது… “என அச்சிறுமி உறுதியாக கூறினாள். 

           “அந்த பெரியவங்கள அடிக்க வேண்டாம்….இவனுங்கள அடிக்கலாம்….”என மணல் திருடிய  அந்நால்வரை நோக்கி கை காட்டினாள் மகி. 

           “அவங்கள ஏன் நாம அடிக்கனும்? அண்ணன திட்டுறது இந்த ஊரு பெருசுக தான க்கா… ” என ஒரு சிறுவன் கேள்வி எழுப்பினான். 

          “இப்ப உங்க அண்ணன எதுக்கு இவங்க எல்லாரும் திட்டுறாங்க? ” மகி. 

          “ஊருல ஆத்து மணல திருடுவானுகள அண்ணே தனியா போய் அடிச்சு இழுத்துட்டு வந்துருச்சு… அண்ணே எப்பிடி அவனுங்கள அடிக்கலாம் னு எல்லாரும் திட்டுறாங்க… ” என ஒரு சிறுமி பதில் கூறினாள். 

           “ஆனா… உங்க அண்ணே எதுக்கு அவங்க எல்லாரையும் எதித்து நின்னு பேசிட்டு இருக்காங்க…. “மகி. 

           “தப்பு செஞ்சவங்களுக்கு தண்டனை குடுக்கனும் னு…. “என்றாள் மற்றொரு சிறுமி. 

           “குட்… உங்க அண்ணன் குடுக்க நினைக்கிற தண்டனைய நாம குடுத்தா என்ன? “மகி. 

            “நாம எப்பிடி குடுக்குறது? நாங்களாம் சின்ன பசங்க க்கா… அவனுங்கள பாருங்க, நல்லா தின்னுட்டு தடிமாட்டு கணக்கா இருக்கானுக… “என்றான் ஒரு சிறுவன். 

            “நீங்க சின்ன பசங்க தான்… ஆனா உங்க மூளைய யூஸ் பண்ணுனா இதெல்லாம் சாதாரணம் டா குட்டீஸ்… உங்க அண்ணனுக்காக இத கூட செய்ய மாட்டீங்களா? “மகி. 

           “இப்ப என்ன தான்க்கா செய்ய சொல்லுற? எங்களுக்கு ஒன்னும் புரியல… “தூரிகை. 

             “அடியேய்… என் செல்ல தங்கச்சி…. உங்க அண்ணே இவ்ளோ நேரம் எதுக்கு ஊர் பெரியவங்க கூட பேசி மல்லு கட்டிட்டு இருக்காங்க? தப்பு பண்ணுனவங்களுக்கு தண்டனை கிடைக்கனும் னு தான? அந்த தண்டனைய நாம குடுத்தா, உங்க அண்ணனும் சந்தோஷப்படுவாங்க… அண்ட்…. ஊர் பெரியவங்களாலயும் உங்க அண்ணன எதுவும் சொல்ல முடியாது… அத்தோட நீங்க சின்ன பசங்க, அவங்க ஒவ்வொருத்தோட வீட்டு பசங்க ங்கிறதுனால உங்களுக்கு தண்டனை குடுக்க யாராலையும் முடியாது… லைட்டா திட்டு விழுகும்….அவ்ளோதான்… உங்க தீரன் அண்ணனுக்காக அந்த திட்ட கூட வாங்க மாட்டீங்களா என்ன? ” என கண்களில் ஒளி மின்ன கூறினாள் மகி. 

             “அக்கா… திட்டு என்ன? அடியே வாங்கிப்போம்… “என்றான் ஒரு சிறுவன். 

              “ஐடியா நல்லா இருக்கு… ஆனா ப்ளான் என்ன? “தூரிகை. 

               “ப்ளான் தான? “என சிரிப்புடன் தனது திட்டத்தை அனைவரிடமும் விளக்கினாள் மகி. 

              “அக்கா… செம… “

              “சூப்பர் க்கா…. “

               “இன்னக்கி அவனுங்கள செய்யிறோம்… “

               “நான் போய் மத்த பசங்களையும் கூட்டிட்டு வர்றேன்….”என ஒவ்வொருத்தராய் கருத்து கூறி விட்டு ஆளுக்கொரு திசையில் பறந்தனர். 

             “இப்ப நாம என்ன க்கா பண்றது? “என தூரிகை மகியிடம் வினவினாள். 

            “அமைதியா நடக்குறத வேடிக்கை பாக்குறோம்…..ஊருக்காரங்க இங்க வந்ததும், நமக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ங்கிற மாதிரி நல்ல புள்ளைங்களா கூட்டத்தோட கூட்டமா கலந்துறனும்…..அவ்ளோதான்….இத நாம செஞ்ச தனியா மாட்டுவோம்….அதான் பசங்கள செய்ய விடுறேன்…. “மகி. 

            “அக்கா….செமயா ப்ளான் போடுற க்கா…..எப்பிடிக்கா இப்பிடிலாம் யோசிக்கிற? “தூரிகை. 

           “ஹா ஹா ஹா… இதெல்லாம் எனக்கு ரொம்ப சாதாரணம்….சரி சரி….பசங்க ரெடி ஆகிட்டாங்க….பஞ்சாயத்துல உள்ளவங்க யாராவது இங்க பாக்குறாங்களா னு பாரு… “மகி. 

              பஞ்சாயத்து கூட்டத்தை நன்றாக உற்று கவனித்தவள், “இல்லக்கா….எல்லார் கவனமும் தீரன் அண்ணே மேல தான் இருக்கு….”என்றாள் தூரிகை. 

              “சூப்பர்….நீ இங்கேயே இரு…வர்றேன்… “என அந்நால்வரை நோக்கி சென்றாள் மகி. 

               “ஹலோ… “என்றபடி அந்நால்வரின் முன்னே நின்றாள் மகி. 

             அந்நால்வரும் மகியை முறைத்து பார்க்க, “ஹே… என்னைய எதுக்கு முறைக்கிறீங்க? ஓகே… எனக்கு பேச ரொம்ப டைம் லாம் இல்ல… பேச வேண்டியத பேசிர்றேன்… ஆமா… உங்களுக்கு ஆத்து மணல திருடுறது தப்பு னு தெரியாதா? அது எவ்ளோ பெரிய க்ரைம் தெரியுமா? உங்கள மாதிரி ஆளுங்க ஆத்து மணல திருட திருட தான் ஆறே காணாம போய்ட்டு இருக்கு… உங்களுக்கு அட்வைஸ் பண்றது வேஸ்ட் னு நினைக்கிறேன்… நீங்க பண்ணுன தப்புக்கு இந்த ஊரு தண்டனை குடுக்குமானு எனக்குத்தெரியல…. அதனால நான் உங்களுக்கு தண்டனை குடுக்க போறேன்… ஒழுங்கா உங்க தப்ப ஒத்துக்கிட்டு ஊரு முன்னாடி மன்னிப்பு கேட்டுட்டு ஓடிப்போயிருங்க… அதான் உங்களுக்கு நல்லது… கரக்ட்டா இன்னும் பத்து செகண்ட் ல உங்களுக்கு தண்டனை ஆரம்பிச்சுரும்… ரெடியா இருங்க… “எனக்கூறி விட்டு அவர்களின் பதிலுக்கு காத்திராமல் தூரிகையிடம் வந்து சேர்ந்தாள் மகி. 

                மகி பேசிச்செல்வதை, “இந்த பொண்ணு என்ன லூசா? “என்ற ரீதியில் அந்நால்வரும் பார்த்து வைத்தனர். 

            அடுத்த சில நொடிகளில் ஒரு விசில் சத்தம் கேட்க…. விசில் சத்தம் கேட்ட அடுத்த நொடியில் பல வித கோலி குண்டுகள் அந்நால்வரை தாக்க…. வலியில் அந்நால்வரும் அலறி கத்த ஆரம்பித்தனர். 

               அந்நால்வரை சுற்றி தூரத்தில் நின்றபடி தங்களது கவண்களில் கோலி குண்டை வைத்து அவர்களை அடித்தனர் சிறுவர்கள். கல் மழையென தங்களை கோலி குண்டு தாக்க, சத்தம் போட்டு கத்த ஆரம்பித்தனர் அந்நால்வரும். 

              அவர்களின் கத்தலை கேட்டு பஞ்சாயத்தில் இருந்தவர் அனைவரும் ஓடி வர, அவர்களுக்கு முன்னே உதியன் ஓடி வர… உதியனுடன் மகியும் தூரிகையும் இணைந்து அந்நால்வரை பார்ப்பது போல் நின்று கொண்டனர். உதியனின் பின்னே ஓடி வந்த தீரனை கண்ட மகி, இதழுக்குள் புன்னகைத்துக்கொண்டாள். 

              ஊர் மொத்தமும் அங்கு கூடி இருக்க, அந்நால்வரும் வலி தாங்க முடியாமல்… “எங்கள மன்னிச்சுருங்க… தப்புத்தான்… இனிமே நாங்க மணல திருட மாட்டோம்….அடிக்கிறத நிறுத்த சொல்லுங்க… “எனக்கத்தினர். 

              அதைக்கேட்ட மகி, தலையை சொறிவது போல் கையை மேலே தூக்கி அச்சிறுவர்களுக்கு சைகை காட்ட, உடனே கோலி குண்டால் அடிப்பதை நிறுத்தினர் அச்சிறுவர்கள். 

                       யாருக்கும் தெரியாமல் மகி செய்த சைகையை உதியனும் தீரனும் கண்டு அவளை முறைத்தனர். அதைக்கண்ட மகி, “போங்கடா டேய்… இந்த முறைப்பெல்லாம் என்னைய ஒன்னும் பண்ணாது… “என்ற ரீதியில் நின்றாள். 

             அந்நால்வரே குற்றத்தை ஒப்புக் கொண்டு ஊர் முன்னே மன்னிப்புக்கேட்டதனால், ஊர் பெரியவர்களால் தீரனை எதுவும் கூற முடியவில்லை. அடித்த அச்சிறுவர்களை சிறு அதட்டலுடன் விட்டு விட்டனர். ஒரு வழியாக பஞ்சாயத்து முடிந்து அனைவரும் கலைந்து சென்றனர்.அந்நால்வரும் மகியை வெறியுடன் பார்த்தவாறே செல்ல ,அவர்களின் பார்வையை வழிமறித்தவாறு உதியன் மகிக்கு முன்னே வந்து நின்று அந்நால்வரையும் பார்வையாலே மிரட்டினான். தீரனும் தன் பங்கிற்கு உதியனின் தோள் மீது கை போட்டு அந்நால்வரையும் வெறுப்பேற்ற….அந்நால்வரும் இவர்கள் மூவரையும் முறைத்தபடியே சென்றனர். 

            கூட்டம் ஒருவாறு கலைந்ததும்…உதியன் மகியை நோக்கி, “ஏன்டி அறிவில்ல? இப்பிடி வம்ப விலை கொடுத்து வாங்கிட்டு நிக்கிற? “என்றான். 

             உதியன் மகியை அதட்டிய அதட்டலில் தூரிகை பயந்து மகியுடன் ஒட்டி நிற்க, திட்டு வாங்கிய மகியோ… காதில் விரல் விட்டு ஆட்டிக்கொண்டே, “ஸ்ஸ்ஆஆ….என்னனு தெரியல மச்சான்..நீ  ஏதோ பேசுற னு தெரியுது…ஆனா என்ன பேசுற னு தான் கேக்கல…நான் என்ன பண்றது? “என்றாள். 

               “அப்பிடியே செவுள் மேலயே ஒன்னு விட்டேனா தெரியும்… “உதியன். 

               “அடப்போடா….நீ மிரட்டுறது பயமாவே இல்ல… சிரிப்புத்தான் வருது… அட தூரிமா… இவன் ஒரு காமெடி பீஸூ… இவன் கத்துறதுக்குலாம் பயப்புடாத…நீ வா நாம வீட்டுக்கு போலாம்…செண்பகம் செமயா சமைச்சு வச்சு இருக்கும்….”எனக்கூறியவாறு தூரிகையின் கையை பிடித்து கொண்டு புறப்பட்டாள் மகி. 

             “நீ ஏன் இப்படி பண்ணுன? “என தன் ஒற்றைக்கேள்வியில் மகியை நிற்க வைத்தான் தீரன். 

            நின்று திரும்பி தீரனை நேருக்கு நேராக பார்த்தவள், ” செயல்கள் அற்ற வார்த்தைகள் மதிப்பற்றவை….சொல்லுறத விட செஞ்சு காட்டனும்… “என சே குவேரா வின் சிந்தனையை தீரனுக்கு பதிலளித்து விட்டு திரும்பிய மகி, தன் எதிரில் நின்றவர்களை பார்த்து அதிர்ச்சியில் விழி பிதுங்கி நின்றாள். 

            “நீ வித்தியாசமானவ தான்டி ராங்கிக்காரி… “என மனதினுள் சொல்லிக்கொண்டு மகியை பார்த்தவன், அவளின் திகைத்த நிலையை கண்டு, “அட யார்ரா இவளையே இப்பிடி திகைக்க வைச்சது? “என மகியின் எதிரே நின்றிருந்தவர்களை பார்த்தான் தீரன். 

           மகியின் முன்னே நின்றவர்களை கண்ட உதியன், “இவங்க…இங்க எப்பிடி? “என குழம்பி நின்றான். 

                                (காதல் தீ பரவும்….)

                       -செல்லம்மாள்பாரதி 

             

              

    No comments yet.